General Tamil

General Tamil Model Question Paper 33

General Tamil Model Question Paper 33

General Tamil Model Question Paper 33: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ எனப் பாடியவர்

A) திருவள்ளுவர்

B) திருமூலர்

C) சீத்தலைச் சாத்தனார்

D) திருத்தக்கத் தேவர்

விடை : B) திருமூலர்

விளக்கம் :

திருமந்திரம்

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே – திருமூலர்

பொருள் : நோய் முதலான காரணங்களால் உடம்பு அழியுமாயின் உயிரும் அழியும். அவ்வாறு அழிந்தால், உறுதி தரும் மெய்யறிவை அடைய இயலாது. ஆகவே உடம்பை வளர்க்கும் வழிமுறைகளை அறிந்து உடம்பை வளர்த்தேன். அதனால் உயிரை அழிவிலிருந்து காத்தேன்.

2. “நான் தனியாக வாழவில்லை ; தமிழோடு வாழ்கிறேன்” எனக் கூறியவர்

A) திரு. வி. கல்யாண சுந்தரனார்

B) தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்

C) உ. வே. சாமிநாத ஐயர்

D) சி. இலக்குவனார்

விடை : A) திரு. வி. கல்யாண சுந்தரனார்

விளக்கம் :

திரு. வி. கல்யாண சுந்தரனார் அவர்கள் மணம் முடித்த ஆறே ஆண்டுகளில் அவர்தம் மனைவியை இழந்தபோது அவரின் நண்பர். “மனைவியை இழந்து தனிமையில் வாழ்வது கடினமாக இல்லையா?” எனக் கேட்டார். அதற்கு திரு. வி. க. அவர்கள் ‘நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்’ எனக் கூறினார்.

3. சிற்றோடை – பிரித்தெழுதுக.

A) சிற்று + ஓடை

B) சிறுமை + ஓடை

C) சிறு + ஓடை

D) சிற் + ஓடை

விடை : B) சிறுமை + ஓடை

விளக்கம் :

சிற்றோடை – சிறுமை + ஓடை

இது ‘பண்புப்பெயர் புணர்ச்சி’ ஆகும். ஈறுபோதல் விதிப்படி ‘மை’ விகுதி கெட்டு சிறு + ஓடை என்றானது.

‘ஈற்றயல் உயிர் கெடல்’ விதிப்படி சிற் + ஓடை என்றானது.

‘தன்னொற்று இரட்டல்’ விதிப்படி சிற்ற் + ஓடை என்றானது.

‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்ற விதிப்படி ‘சிற்றோடை’ என்றானது.

4. கண்டெடுக்கப்பட்டுள்ளன – பிரித்து எழுதுக.

A) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன

B) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன

C) கண்டெடுக்க + பட்டு + உள்ளன

D) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன

விடை : A) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன

விளக்கம் :

கண்டெடுக்கப்பட்டுள்ளன – கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன. இது குற்றியலுகரப் புணர்ச்சி ஆகும்.

கண்டு + எடுக்கப்பட்டு

‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ என்ற விதிப்படி கண்ட் + எடுக்கப்பட்டு என்றானது.

‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்ற விதிப்படி ‘கண்டெடுக்கப்பட்டு’ என்றானது.

கண்டெடுக்கப்பட்டு + உள்ளன.

‘உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’ என்ற விதிப்படி ‘கண்டெடுக்கப்பட்டுள்ளன’ என்றானது.

5. நெடில்தொடர்க் குற்றியலுகரம் எத்தனை எழுத்துகளைப் பெற்று வரும்?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

விடை : A) இரண்டு

விளக்கம் :

நெடில்தொடர்க் குற்றியலுகரம் : தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க் குற்றியலுகரம்’, எனப்படும். இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.

(எ.கா) பாகு, மாசு, பாடு, காது, ஆறு.

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

6. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் Smart Phone

A) கைப்பேசி

B) சிறிய தொலைபேசி

C) திறன் பேசி

D) அழகான பேசி

விடை : C) திறன் பேசி

விளக்கம் :

Smart Phone – திறன் பேசி

Mobile Phone – கைப்பேசி

7. மரவேர் என்பது எவ்வகை புணர்ச்சி?

A) இயல்பு புணர்ச்சி

B) திரிதல் புணர்ச்சி

C) தோன்றல் புணர்ச்சி

D) கெடுதல் புணர்ச்சி

விடை : D) கெடுதல் புணர்ச்சி

விளக்கம் :

மரம் – மரம் + வேர்

இது மகர ஈற்றுப் புணர்ச்சி ஆகும். மகர ஈற்றுப் புணர்ச்சியில் ‘மவ்வீறு ஒற்றழிந்து’ என்ற விதிப்படி மகர ஈறு கெட்டு மர + வேர் என்றாகி ‘மரவேர்’ எனப் புணர்ந்தது.

8. தலைவனை குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி

A) கோ

B) தீ

C) ஐ

D) சோ

விடை : C) ஐ

விளக்கம் :

ஓரெழுத்து ஒருமொழி

கோ – மன்னன், பசு ; தீ – நெருப்பு, இனிமை

ஐ – தலைவன் ; சோ – மதில், நகர்

9. பாடினாள் – வேர்ச்சொல் தருக.

A) பாடி

B) பாடுதல்

C) பாடு

D) படு

விடை : C) பாடு

விளக்கம் :

பாடினாள் :

வேர்ச்சொல் – பாடு ; பாடி – வினையெச்சம் ; பாடுதல் – தொழிற்பெயர் ;

பாடிய – பெயரெச்சம் ; பாடினாள் – வினைமுற்று ; பாடியவள் – வினையாலணையும் பெயர்

10. இலக்கணக்குறிப்பு தருக.

எய்தி

A) பெயரெச்சம்

B) வினையெச்சம்

C) பண்புத்தொகை

D) வினைத்தொகை

விடை : B) வினையெச்சம்

விளக்கம் :

ஒரு வினைச் சொல்லானது முற்றிலும் பொருள் தருவதற்காக ஒரு வினைமுற்றைத் தழுவி வந்தால், அது வினையெச்சம் ஆகும்.

(எ.கா) படித்து முடித்தான், கான விழைகின்றான்

எய்திச் சென்றான், எய்யச் செல்கிறான்.

11. இலக்கணக்குறிப்புத் தருக.

சித்திரைத் திங்கள்

A) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

B) பண்புத்தொகை

C) வினைத்தொகை

D) வேற்றுமைத்தொகை

விடை : A) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

விளக்கம் :

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

சிறப்புப் பெயர் முன்னும், பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ‘ஆகிய’ என்னும் பண்புருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.

(எ.கா) சாரைப் பாம்பு, சித்திரைத் திங்கள், தமிழ்மொழி, பருத்தி நூல்.

12. தழீஇ – என்பதன் இலக்கணக்குறிப்பு எழுதுக.

A) சொல்லிசையளபெடை

B) ஒற்றள்பெடை

C) இன்னிசையளபெடை

D) இசைநிறையளபெடை

விடை : A) சொல்லிசையளபெடை

விளக்கம் :

தழீஇ – ‘தழீ’ என்னும் தொழிற்பெயர்ச்சொல்

‘தழீஇ’ (தழுவி) என வினையெச்சச் சொல்லாக அளபெடுத்ததால் இது சொல்லிசை அளபெடை ஆகும். சொல்லிசை அளபெடை ‘இ’ என்ற எழுத்தில் முடியும்.

(எ.கா) தழீஇ, உரனசைஇ, நசைஇ, நிறை

13. மருதத்திணையின் பறை எது?

A) தொண்டகம்

B) மணமுழா

C) ஏறு கோட்பறை

D) மீன் கோட்பறை

விடை : B) மணமுழா

விளக்கம் :

மறை வகை திணை
தொண்டகம் குறிஞ்சி
ஏறுகோட் பறை முல்லை
மணமுழவு, நெல்லரிக்கிணை மருதம்
மீன்கோட்பறை நெய்தல்
துடி பாலை

14. இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எவ்வகைத் தொடை?

A) மோனைத் தொடை

B) இயைபுத் தொடை

C) எதுகைத் தொடை

D) முரண் தொடை

விடை : C) எதுகைத் தொடை

விளக்கம் :

முதலாம் எழுத்து ஒன்றிவருவது மோனைத்தொடை ஆகும்.

(எ.கா)

ளவில்லாத பெருமையராகிய

ளிவி லாஅடி யார்புகழ் கூறிகேன்

ளவு கூட உரைப்பது அரிதாயினும்

ளவிலாசை துரைப்ப அறைகுவேன்.

இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத் தொடை ஆகும்.

(எ.கா)

ஞ்சின் மெல்லடிப் பாவையர் உள்ளமும்

ஞ்ச மாக்கள்தம் வல்வினை யும்அரண்

ஞ்சே ழுத்தும் உணரா அறிவிலோர்

நெஞ்சும் என்ன இருண்டது நீண்டவான்

இறுதிச்சீர் ஒன்றிவருவது இயைபுத்தொடை ஆகும்.

(எ.கா)

எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவை எண்ணல் வேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

தெளிந்த நல்லறிவு வேண்டும்

செய்யுள் அடிகளில் சொற்கள் முரணாக அமைந்து வருவது முரண்தொடை ஆகும்.

(எ.கா) இப்பந்தர் இப்பெயரிட் டிங்கமைத்தார் யார் என்றார்க்கு

அப்பந்தர் அறிந்தார்கள் ஆண்டஅர செனும் பெயரால்.

15. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.

– இக்குறட்பாவில் பயின்றுள்ள அடி மோனையை எழுது.

A) அறிவுடையார் – அறிவிலார்

B) அறிவுடையார் – அஃதறி

C) அறிவிலார் – அஃதறி

D) அறிவுடையார் – ஆவ

விடை : B) அறிவுடையார் – அஃதறி

விளக்கம் :

அறிவுடையார் – அஃதறி [] அடிமோனை

அறிவுடையார் – அறிவிலார் [] சீமோனை

16. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே”

– இது யாருடைய பாராட்டுரை?

A) பாரதிதாசன்

B) பாரதியார்

C) நாமக்கல் கவிஞர்

D) கவிமணி தேசிக விநாயகம்

விடை : A) பாரதிதாசன்

விளக்கம் :

திருக்குறளைப் பாராட்டி பாரதிதாசன் எழுதிய கவிதை

“வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்த வற்றுள்

பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்

சொல்லா தில்லை பொதுமறை யான திருக்குறளில்

இலாத தில்லை இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே”

17. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?

I. வீட்டிற்கு வந்த உறவினர்களை வரவேற்று உபசரித்தல்

II. அறிவில்லாதவர் கூறும் சொற்களை பொறுத்தல்

III. வீட்டிற்கு வந்த உறவினர்களை வரவேற்று உபசரிக்காமல் இருத்தல்

IV. உடல் நலத்தை பேணாதிருத்தல்

சரியான விடையளி :

A) I மற்றும் II சரியானவை

B) I மற்றும் III சரியானவை

C) III மற்றும் IV சரியானவை

D) II மற்றும் IV சரியானவை

விடை : A) I மற்றும் II சரியானவை

18. பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க.

A) திருமுருகாற்றுப்படையைப் பாடியவர் நக்கீரர்

B) பொருநராற்றுப்படையைப் பாடியவர் கபிலர்

C) சிறுபாணாற்றுப்படையைப் பாடியவர் நல்லூர் நத்தத்தனார்

D) பெரும்பாணாற்றுப்படையைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்

விடை : B) பொருநராற்றுப்படையைப் பாடியவர் கபிலர்

விளக்கம் :

பொருநராற்றுப்படையைப் பாடியவர் முடித்தாமக் கண்ணியார். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் கரிகாலச்சோழன்.

19. பின்வருவனவற்றில் பொருந்தாததைத் தேர்வு செய்க.

A) நாலடியாரில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பகுப்புகள் உள்ளன

B) நாலடியாரை இயற்றியவர் நல்லாதனார்

C) நாலடியாரில் 400 வெண்பாக்கள் உள்ளன

D) “நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி” என்பதில் நாலு என்பது நாலடியாரைக் குறிக்கும்

விடை : B) நாலடியாரை இயற்றியவர் நல்லாதனார்

விளக்கம் :

நாலடியாரை இயற்றியவர்கள் 400 சமணமுனிவர்கள் ஆவர். இந்நூலை பால், இயல் மற்றும் அதிகாரமாக வகுத்தவர் பதுமனார் ஆவார். நல்லாதனார் இயற்றிய நூல் திரிகடுகம்.

20. பொருத்துக :

a) இடர் 1. நிலவு

b) நாவாய் 2. துன்பம்

c) இறை 3. படகு

d) இந்து 4. தலைவன்

குறியீடுகள் :

a) b) c) d)

A) 2 3 4 1

B) 3 2 1 4

C) 1 4 3 2

D) 4 3 2 1

விடை : A) 2 3 4 1

21. கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டம்

A) முதற்காண்டம்

B) ஐந்தாங்காண்டம்

C) ஏழாங்காண்டம்

D) மூன்றாம் காண்டம்

விடை : B) ஐந்தாங்காண்டம்

விளக்கம் :

கம்பராமாயணத்தில் ஆறு காண்டங்கள் உள்ளன.

முதற்காண்டம் – பாலகாண்டம்

இரண்டாவது காண்டம் – அயோத்தியா காண்டம்

மூன்றாவது காண்டம் – ஆரண்ய காண்டம்

நான்காவது காண்டம் – கிட்கிந்தா காண்டம்

ஐந்தாவது காண்டம் – சுந்தரகாண்டம்

ஆறாவது காண்டம் – யுத்தகாண்டம்

22. அகநானூற்றில் மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

A) 100

B) 120

C) 180

D) 130

விடை : C) 180

விளக்கம் :

அகநானூற்றின் பிரிவுகள்

முதல் 120 பாடல்கள் – களிற்றுயானை நிரை

அடுத்த 180 பாடல்கள் – மணிமிடைபவளம்

இறுதி 100 பாடல்கள் – நித்திலக்கோவை

23. நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?

A) பெருந்தேவனார்

B) போதனார்

C) பரணர்

D) பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

விடை : D) பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

விளக்கம் :

நற்றிணையில் உள்ள பாடல்களைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. இந்நூலுக்கான கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

24. பொருத்துக :

a) செறு 1. பனையோலைப் பெட்டி

b) வித்து 2. புதுவருவாய்

c) யாணர் 3. விதை

d) வட்டி 4. வயல்

குறியீடுகள் :

a) b) c) d)

A) 4 3 2 1

B) 2 1 4 3

C) 4 2 1 3

D) 3 2 4 1

விடை : A) 4 3 2 1

விளக்கம் :

நற்றிணை

அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்

மறுகால் உழுத ஈரச் செறுவின்

வித்தொடு சென்ற வட்டி பற்பல

மீனொடு பெயரும் யாணர் ஊர – மிளைகிழான் நல்வேட்டனார்

பொருள் : உழவர் நெற்கதிர்களை அறுவடை செய்த பின்னர், அகன்ற அழகிய வயலை மறுபடியும் உழுதனர். பனையோலைப் பெட்டியில் விதை கொண்டு சென்று ஈரமுற்ற அந்நிலத்தில் விதைத்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள நீர்நிலைகளில் பல்வகை மீன்களைப் பிடித்து அப்பெட்டியில் கொண்டு வருகின்ற புதுவருவாயினை உடைய மருதநிலத் தலைவனே !

செறு – வயல், வித்து – விதை, யாணர் – புதுவருவாய், வட்டி – பனையோலைப் பெட்டி.

25. சிலப்பதிகாரத்திற்கு எவ்வுரையாசிரியரின் உரை நூல் முழுமைக்கும் உள்ளது?

A) இளம்பூரணர்

B) அடியார்க்கு நல்லார்

C) ந. மு. வேங்கடசாமி நாட்டார்

D) அரும்பத உரைக்காரர்

விடை : C) ந. மு. வேங்கடசாமி நாட்டார்

விளக்கம் :

சிலப்பதிகார உரைகள்

அரும்பத உரைக்காரர் – அரும்பதங்களுக்கு மட்டும் உரை.

அடியார்க்கு நல்லார் – இவர் சிலப்பதிகாரம் முழுமைக்கும் உரை எழுதியிருந்தாலும் தற்காலத்தில் அதன் ஒரு பகுதி மட்டுமே கிடைத்துள்ளது.

ந. மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய சிலப்பதிகார உரை நூல் முழுமையாக உள்ளது. மகாகவி சுப்பிரமணிய பாரதியார். இவரின் இல்லத்திற்கு வந்து சிலப்பதிகாரத்திலும் தொல்காப்பியத்திலும் தனக்கிருந்த ஐயங்களைக் கேட்டு விளக்கத்தை அறிந்துகொண்டார்.

இளம்பூரணர் : இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியுள்ளார்.

26. சேக்கிழாரை “பக்திச் சுவை நனிசொட்டச் சொட்ட பாடிய கவிவலவ” எனப் புகழ்ந்துரைத்தவர்

A) மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்

B) கவிஞர். வெ. இராமலிங்கனார்

C) பெ. சுந்தரனார்

D) ந. மு. வேங்கடசாமி நாட்டார்

விடை : A) மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்

27. கூற்று : 1 சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்

கூற்று : 2 பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்டபெயர் திருத்தொண்டர் புராணம்

சரியான விடையளி :

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) கூற்று இரண்டும் தவறு

D) கூற்று இரண்டும் சரி

விடை : D) கூற்று இரண்டும் சரி

28. கூற்று : 1 உமறுப்புலவர் எட்டயபுரம் கடிகை முத்துப்புலவரின் மாணவர்

கூற்று : 2 உமறுப்புலவரின் மற்றொரு நூல் முதுமொழிக் காஞ்சி

சரியான விடையளி :

A) கூற்று இரண்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) கூற்று 1 மட்டும் சரி

D) கூற்று இரண்டும் தவறு

விடை : C) கூற்று 1 மட்டும் சரி

விளக்கம் :

சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப்புலவரின் ஆசிரியர் எட்டையபுரம் கடிகைமுத்துப் புலவர் ஆவார். உமறுப்புலவர் எழுதிய பிறநூல்கள் முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி.

29. “மாதிரத்துறை கேசரிநிகர்முகம்மதுதம்”

பொருள் விளங்குமாறு பிரித்து எழுதுக.

A) பாதிரத் துறைகே சரிநிகர் முகம் மதுதம்

B) மாதி ரத்துறை கேசரிநி கர்முகம் மதுதம்

C) மாதிரத்துறை கேசரிநிகர் முகம்மதுதம்

D) மாதி ரத்துறை கேசரி நிகர்முகம் மதுதம்

விடை : D) மாதி ரத்துறை கேசரி நிகர்முகம் மதுதம்

விளக்கம் :

சீறாப்புராணம்

விலாதத்துக்காண்டம் – புலிவசனித்த படலம்

மாதி ரத்துறை கேசரி நிகர்முகம் மதுதம்

பூத ரப்புயம் அசைதரப் புளகிதத் தோடும்

காது செங்கதிர் வேல்வலக் கரத்திடை கவின

வீதி வாய்வரக் கண்டது பெருவரி வேங்கை – உமறுப்புலவர்

பொருள் : மலைகளில் வாழும் சிங்கத்திற்கு ஒப்பாகிய நபிமுகம்மது, தமது மலை போன்ற தோள்கள் அசையும்படி, கூர்மையான ஒளிவிடும் வேற்படையினை வலக்கையில் அழகுடன் ஏந்தியவாறு, பாதையில் மகிழ்வுடன் நடந்து வருவதை அவ்வரிப் புலி பார்த்தது.

30. குட்டிச் செவியறுத்துக் கூட்டித் தலைகளெல்லாம்

வெட்டிக் களைபறிக்க மேலாய்த்தூர்

– இவ்வரிகளில் ‘குட்டி’ என்னும் சொல் குறிக்கும் பொருள் என்ன?

A) ஆட்டுக்குட்டி

B) பூனைக்குட்டி

C) தலையில் குட்டுதல்

D) பிள்ளைப் பெறல்

விடை : C) தலையில் குட்டுதல்

விளக்கம் :

தமிழ்விடு தூது

பாத்தனாதாக் கொண்ட பிள்ளைப்பாண்டியன் வில்லிஒட்டக்

கூத்தனிவர் கல்லாது கோட்டிகொளும் – சீத்தையரைக்

குட்டிச் செவியறுத்துக் கூட்டித் தலைகளெல்லாம்

வெட்டிக் களைபறிக்க மேலாய்த்தூர்.

பொருள் : போலிப் புலவர்கள் கூட்டம் பெருகாமல் தடுப்பதற்காக குட்டுவதற்கு அதிவீரராம பாண்டியனும் செவியை அறுப்பதற்கு வில்லிப்புத்தூரானும் தலையை வெட்டுவதற்கு ஒட்டக்கூத்தனும் இருந்தமையால், தமிழே நீ கிளைத்துச் செழித்து வளர்ந்தாய்.

31. “பதிதொறு புயல்பொழி தருமணி பணதரு” இப்பாடல் வரியில் – ‘பணை’ என்னும் சொல்லின் பொருள் தருக.

A) முத்து

B) மரம்

C) மூங்கில்

D) காற்று

விடை : C) மூங்கில்

விளக்கம் :

பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு

பருமணி பகராநெற்

கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு

காவிரி வளநாடா

பொருள் : ஊர்தோறும் மேகங்கள் சொரிகுன்ற மணிகளையும், மூங்கில்கள் தந்த பெரிய முத்துகளையும் கொடுத்துக் கொண்டு வருகின்ற நீர், கரையோடு மோதி வழியும் காவிரியின் வளம் பொருந்திய நாட்டையுடையவனே !

32. கூற்று : 1 தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நந்திக்கலம்பகம்

கூற்று : 2 நந்திக்கலம்பகத்தை இயற்றியவர் நந்திவர்மன்

சரியான விடையளி :

A) கூற்று இரண்டும் சரி

B) கூற்று 1 மட்டும் சரி

C) கூற்று 2 மட்டும் சரி

D) கூற்று இரண்டும் தவறு

விடை : B) கூற்று 1 மட்டும் சரி

விளக்கம் :

தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நந்திக்கலப்பகம் ஆகும். பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூலின் ஆசிரியரின் பெயர் அறியப்படவில்லை.

33. ‘கொம்பினை யொத்த மடப்பிடி’ – யார்?

A) சீதை

B) பாஞ்சாலி

C) துச்சலை

D) மந்தாரை

விடை : B) பாஞ்சாலி

விளக்கம் :

பாஞ்சாலி சபதம் – சூழ்ச்சி சருக்கம்

தம்பி விதுரனை மன்னன் அழைத்தான்

தக்க பரிசுகள் கொண்டினி தேகி

எம்பியின் மக்க ளிருந்தர சாளும்

இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால

“கொம்பினை யொத்த மடப்பிடி யோடும்”

கூடியிங் கெய்தி விருந்து களிக்க

நம்பி அழைத்தனை கௌரவர் கோமான்

நல்லதோர் நுந்தை யெனவுரை செய்வாய் – மகாகவி பாரதியார்

பொருள் : மன்னன் திருதராட்டிரன் தம்பி விதுரனை அரண்மனைக்கு அழைத்தான். பாண்டுவின் மக்கள் ஆட்சி செய்யும் இந்திர மாநகருக்குத் தக்க பரிசுகளுடன் சென்று, பாஞ்சாலியோடு பாண்டவரைத் தாம் விருந்துக்கு அழைத்த செய்தியை அவர்களிடம் கூறி, அழைத்து வருமாறு பணித்தான்.

34. இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள் யாது?

A) இறைவனை வணங்குவது

B) இறைவனை நோக்கிச் செல்லும் பயணம்

C) இறையடியார்களை வணங்குவது

D) துறவறம் பூணிவது

விடை : B) இறைவனை நோக்கிச் செல்லும் பயணம்

விளக்கம் :

H. A. கிருஷ்ணனார் இயற்றிய நூல் இரட்சண்ய யாத்திரிகம் ஆகும். இதன் பொருள் “உயிர் தன்னை காக்கவேண்டி இறைவனை நோக்கிச் செல்லும் பயணம்” என்பதாகும்.

35. குலசேகர ஆழ்வார் பிறந்த நாடு எது?

A) பாண்டிய நாடு

B) பல்லவ நாடு

C) சோழ நாடு

D) சேர நாடு

விடை : D) சேர நாடு

விளக்கம் :

சேரர் குலத்தில் திருவஞ்சைக்களத்தில் மன்னர் குலத்தில் பிறந்தவர். இவர் திருவிதாங்கூர், குட்டநாடு (மலபார்), தென்பாண்டி நாடு (நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி) ஆகிய பகுதிகளை ஆட்சி செய்தவர்.

36. “கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு : நானோர் தும்பி !”

என்று தமிழ்க் காதல் கொண்டு வாழ்ந்தவர் யார்?

A) வரதராசனார்

B) பாரதியார்

C) வாணிதாசன்

D) பாரதிதாசன்

விடை : D) பாரதிதாசன்

விளக்கம் :

அழகின் சிரிப்பு

தமிழ்பற்றி ‘அழகின் சிரிப்பு’ என்ற நூலில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ், இசை, கூத்தின்முறை, இயற்றிமிழ் எழில், தமிழர்க்குத் தமிழ் உயிர், சாகாத் தமிழ், கலைகள் தந்த தமிழ், முன்னூலில் அயலார் நஞ்சம், பகைக்கு அஞ்சாத் தமிழ், வெற்றித்தமிழ், படைத்தமிழ் குறித்து பாடல்களை இயற்றியுள்ளார்.

படைத்தமிழ்

இருளினை வறுமைநோயை

இடறுவேன் ; என்னுடல்மேல்

உருள்கின்ற பகைக்குன்றை நான்

ஒருவனே உதிர்ப்பேன் ; நீயோ

கருமான்செய் படையின் வீடு !

நான் அங்கோர் மறவன் ! கன்னற்

பொருள் தரும் தமிழே நீ ஓர்

பூக்காடு ; நானோர் தும்பி ! – பாரதிதாசன்

37. உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்கள் வழிநடைப் பாடலாக பாடக்கூடிய “கத்தியின்றி ரத்தமின்றி யுத்த பொன்று வருகுது” என்ற வழிநடைப் பாடலை இயற்றியவர்

A) மகாகவி பாரதியார்

B) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

C) அ. வரதநஞ்சைப்பிள்ளை

D) புரட்சி கவிஞர் பாரதிதாசனார்

விடை : B) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

விளக்கம் :

வேதாரண்ய உப்புச் சத்தியாகிரகத்தின் போது வழிநடைப் பாடலாக அமைந்த நாமக்கல் கவிஞர் இயற்றிய பாடல்

“கத்தியின்றி ரத்தமின்றி

யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை

நம்பும்யாரும் சேருவீர்” – வெ. இராமலிங்கனார்.

38. கவிதைகளில் குறியீட்டியம் (Symbolism) என்ற கவிதை உத்தியைக் கையாண்டவர் யார்?

A) பாப்லோ நெரூடா

B) ஸ்டெஃபான் மல்லார்மே

C) வால்ட் விட்மன்

D) இரசூல் கம்சதோவ்

விடை : B) ஸ்டெஃபான் மல்லார்மே

விளக்கம் :

உவமேயத்தக் கேட்போர் ஊகித்துக் கொள்ளுமாறு விட்டுவிட்டு உவமையை மட்டும் கூறுவது உள்ளுறை உவமத்தின் அடிப்படை. இதுவே குறியீட்டின் அடிப்படையும் ஆகும்.

19 – ஆம் நூற்றாண்டில் ‘குறியீட்டியம்’ ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது. பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் இக்கோட்பாட்டை விளக்கி வளர்த்தார்கள். ஆனால் தமிழ்மொழியில் தொல்காப்பியர் காலம் முதல் இப்பயன்பாட்டை அறிய முடிகிறது.

39. “உயிர்த்தெழும் காலத்துக்காக” என்றத் தலைப்பில் யாருடைய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளது?

A) சு. வில்வரத்தினம்

B) கா. சிவத்தம்பி

C) இந்திரன்

D) ந. கருணாநிதி

விடை : A) சு. வில்வரத்தினம்

விளக்கம் :

இலங்கையைச் சேர்ந்த கவிஞர் சு. வில்வரத்தினம் ஆவார். இவருடைய கவிதைகள் மொத்தமாக, ‘உயிர்த்தெழும் காலத்துக்காக’ என்ற தலைப்பில் 2001 – இல் தொகுக்கப்பட்டது. கவிதைகள் இயற்றுவதுடன் இனிமையாகப் பாடுவதிலும் இவர் வல்லவர்.

40. காந்தியடிகளால் ‘தென்னாட்டின் ஜான்சிராணி’ என அழைக்கப்பட்டவர் யார்?

A) அஞ்சலையம்மாள்

B) அம்புஜத்தம்மாள்

C) வேலு நாச்சியார்

D) தில்லையாடி வள்ளியம்மை

விடை : A) அஞ்சலையம்மாள்

விளக்கம் :

இந்திய விடுதலைப் போரில் கலந்துகொண்ட பெண்களுள் முக்கியமானவர் கடலூர் அஞ்சலையம்மாள் ஆவார். காந்தியடிகள் ஒருமுறை கடலூருக்கு வந்தபோது, அவரைச் சந்திப்பதற்கு ஆங்கிலேய அர்சு, அஞ்சலையம்மாளுக்கு தடை விதித்தது. எனவே அஞ்சலையம்மாள் பர்தா வேடமணிந்து இவரை ‘தென்னாட்டின் ஜான்சிராணி’ என்று அழைத்தார்.

41. பெண்கள் மறுமணத்தை ஆதரித்தவர் யார்?

A) கவிமணி

B) பாரதி

C) பெரியார்

D) திரு. வி. க.

விடை : C) பெரியார்

விளக்கம் :

பெண்ணடிமைக்கு முக்கிய காரணங்களாக பெரியார் கூறியவை, குழந்தைத் திருமணம், மனக்கொடை, கைம்மை வாழ்வு ஆகியனவாகும். “கணவனை இழந்தோர் மறுமணம் செய்து கொள்ளாமல் கைம்மை முறையைக் கடைப்பிடித்த பெண்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தது” என்று பெரியார் கூறினார்.

42. கோயில்களில் நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பப்பெறும் மரபு யார் காலத்தில் தொடங்கியது?

A) இரண்டாம் குலோத்துங்கன்

B) இராசராசன்

C) விசித்திர சித்தன்

D) இராசேந்திரன்

விடை : A) இரண்டாம் குலோத்துங்கன்

விளக்கம் :

12 – ஆம் நூற்றாண்டிலிருந்து கோயில் கோபுரங்கள் தனிச்சிறப்புப் பெற்றன. வெளிக் கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் அமைத்து இரண்டு கோபுரங்களைக் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவன் இராஜராஜ சோழன் அது திருவாயில் என அழைக்கப்பட்டது.

நான்கு புரங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பப் பெறும் மரபு, இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்திலிருந்து தொடங்கியது. இவ்வகை கோபுரங்களில் கீழ்ப்பகுதியைக் கல்லாலும் மேற்பகுதியைச் செங்கற்களாலும் கட்டியிருப்பர்.

43. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

A) தென்னை மரம்

B) பனை மரம்

C) ஆலமரம்

D) மாமரம்

விடை : B) பனை மரம்

44. தமிழ்மொழியை “உயர்தனிச்செம்மொழி” என முதன் முதலில் நிலைநாட்டிய தமிழ் அறிஞர்

A) பரிதிமாற் கலைஞர்

B) மறைமலையடிகள்

C) ரா. பி. சேதுப்பிள்ளை

D) திரு. வி. க

விடை : A) பரிதிமாற் கலைஞர்

விளக்கம் :

தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என முதன்முதலாக நிலை நாட்டியவர் பரிதமாற் கலைஞர் ஆவார். மதுரை தமிழ்ச் சங்கத்தாரின் ‘செந்தமிழ்’ இதழில் ‘உயர்தனிச் செம்மொழி’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

45. பரிதிமாற் கலைஞர், ‘வசனநடை கைவந்த வல்லாளர்’ என யாரைப் பாராட்டுகிறார்?

A) ரா. பி. சேதுப்பிள்ளை

B) வையாபுரிப் பிள்ளை

C) ஆறுமுக நாவலர்

D) ந. மு. வேங்கடசாமி நாட்டார்

விடை : C) ஆறுமுக நாவலர்

விளக்கம் :

தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றிய ஆறுமுக நாவலரை, பரிதிமாற் கலைஞர் “வசனநடை கைவந்த வல்லாளர்” எனப் பாராட்டியுள்ளார்.

46. ஒரு நாளில் பதினெட்டு மணிநேரத்தைக் கல்வி கற்பதற்காகவே செலவழித்தவர் யார்?

A) அண்ணல் காந்தியடிகள்

B) அண்ணல் அம்பேத்கர்

C) அருணாசலக்கவிராயர்

D) ஆபிரகாம் பண்டிதர்

விடை : B) அண்ணல் அம்பேத்கர்

விளக்கம் :

ஒரு நாளில் பதினெட்டு மணி நேரத்தைக் கல்வி கற்பதற்காகவே செலவழித்தவர் அண்ணல் அம்பேத்கர் ஆவார். இலண்டனில் படிக்கும் போது காலையில் முதல் ஆளாக நூலகத்திற்கு உள்ளே சென்று மாலையில் கடைசி ஆளாக வெளியே வருவார்.

47. காமராசர் முதல் அமைச்சராகப் பதவி ஏற்ற ஆண்டு எது?

A) 1954

B) 1955

C) 1956

D) 1964

விடை : A) 1954

விளக்கம் :

1954 முதல் 1963 வரை காமராசர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.

48. தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழைமையானது எவ்வூரில் உள்ளது?

A) கோவில்பட்டி

B) பிள்ளையார்ப்பட்டி

C) ஆண்டிப்பட்டி

D) உசிலம்பட்டி

விடை : B) பிள்ளையார்ப்பட்டி

விளக்கம் :

தமிழகத்தில் இன்று காணப்படும் குடைவரைக் கோயில்களுள் பழைமையானது சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிள்ளையார்ப்பட்டிக் கோயில் ஆகும். இக்கோயிலைக் கட்டியவர் பாண்டியன் செழியன் சேந்தன் ஆவார்.

49. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை எத்தனை?

A) ஆறு கோடிப்பேர்

B) ஏழு கோடிப்பேர்

C) எட்டுக் கோடிப்பேர்

D) ஒன்பதுக் கோடிப்பேர்

விடை : C) எட்டுக் கோடிப்பேர்

விளக்கம் :

வணிகம், வேலை வாய்ப்பு, பஞ்சம், அந்நியப் படையெடுப்பு போன்ற காரணங்களால் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஏறத்தாழ 154 நாடுகளில் வாழ்கின்றனர். அவர்களின் என்னிக்கை எட்டுக்கோடி என பழைய சமச்சீர் கல்வி புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த எண்ணிக்கையில் மாற்றம் இருக்கலாம்.

50. பொருத்துக :

a) சிறுபஞ்சமூலம் 1. காப்பிய இலக்கியம்

b) குடும்ப விளக்கு 2. சங்க இலக்கியம்

c) சீவகசிந்தாமணி 3. அற இலக்கியம்

d) குறுந்தொகை 4. தற்கால இலக்கியம்

குறியீடுகள் :

a) b) c) d)

A) 3 4 1 2

B) 2 3 1 4

C) 3 1 4 2

D) 4 1 2 3

விடை : A) 3 4 1 2

51. பொருத்துக :

a) ஐகாரக் குறுக்கம் 1. கஃறீது

b) ஔகாரக் குறுக்கம் 2. மருண்ம்

c) மகரக் குறுக்கம் 3. தலைவன்

d) ஆய்தக் குறுக்கம் 4. வௌவால்

குறியீடுகள் :

a) b) c) d)

A) 3 4 2 1

B) 4 3 1 2

C) 2 1 4 3

D) 4 2 3 1

விடை : A) 3 4 2 1

52. மரபுப் பிழையைக் கண்டறிந்து பொருத்துக :

a) காகம் 1. கூவும்

b) குதிரை 2. கரையும்

c) நரி 3. கனைக்கும்

d) குயில் 4. ஊளையிடும்

குறியீடுகள் :

a) b) c) d)

A) 2 3 4 1

B) 1 3 4 2

C) 4 1 2 3

D) 3 2 4 1

விடை : A) 2 3 4 1

53. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

A) சேர்ப்பன்

B) சேர்த்தியர்

C) பரதர்

D) பரத்தியர்

விடை : B) சேர்த்தியர்

விளக்கம் :

சேர்ப்பன், பரதர், பரத்தியர் ஆகியோர் நெய்தல் நில மக்கள் ஆவர்.

54. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

A) அவன் கவிஞன் அல்ல

B) அவன் கவிஞன் அன்று

C) அவன் கவிஞன் அல்லன்

D) கவிஞன் அல்ல அவன்

விடை : C) அவன் கவிஞன் அல்லன்

விளக்கம் :

அவன் கவிஞன் அல்லன் ; அவர்கள் கவிஞர்கள் அல்லர் என்பது சரியான தொடர்களாகும்.

அல்லன் – ஒருமை, அல்லர் – பன்மை.

‘அன்று’ அஃறிணை ஒருமை. ‘அல்ல’ அஃறிணை பன்மை.

55. மரபுத் தொடரின் பொருளறிக.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது

A) இல்லாத ஒன்று

B) சுரைக்காயை சமைக்க முடியாது

C) பட்டறி வில்லாத படிப்பறிவு

D) பயனின்றி இருத்தல்

விடை : C) பட்டறி வில்லாத படிப்பறிவு

56. அப்பிசி மாசம் அடமள இம்பாங்க என்ற தொடரில் கொச்சைச் சொற்களைத் திருத்தி எழுதுக.

A) அப்பிசி மாதம் அடமழை இம்பாங்க

B) ஐப்பசி மாசம் அடமழை என்பாங்க

C) ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்

D) அய்ப்பசி மாதம் அடைமழை இன்பார்கள்

விடை : ) ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்

57. படி என்ற அடிச் சொல்லில் இருந்து வினையாலணையும் பெயரை உருவாக்கு.

A) படித்து

B) படித்தல்

C) படித்த

D) படித்தவர்

விடை : D) படித்தவர்

விளக்கம் :

படி – வேர்ச்சொல்

படித்து – வினையெச்சம்

படித்தல் – தொழிற்பெயர்

படித்த – பெயரெச்சம்

படித்தவர் – வினையாலணையும் பெயர்

58. அகர வரிசையில் எழுதுக.

வெகுளாமை, வேப்பிலை, வீடுபேறு, வாழ்க்கை, வையம்

A) வையம், வாழ்க்கை, வீடுபேறு, வெகுளாமை, வேப்பிலை

B) வாழ்க்கை, வீடுபேறு, வெகுளாமை, வேப்பிலை, வையம்

C) வீடுபேறு, வெகுளாமை, வையம், வேப்பிலை, வாழ்க்கை

D) வெகுளாமை, வீடுபேறு, வேப்பிலை, வையம், வாழ்க்கை

விடை : B) வாழ்க்கை, வீடுபேறு, வெகுளாமை, வேப்பிலை, வையம்

59. சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

பற்றற்றான் பற்று விடற்கு பற்றினை பற்றுக அப்பற்றை பற்றுக

A) பற்றுக பற்று விடற்கு அப்பற்றைப் பற்றுக பற்றற்றான் பற்றினை

B) பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு பற்றுக

C) பற்றுக விடற்கு பற்று அப்பற்றைப் பற்றுக பற்றினை பற்றற்றான்

D) பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு

விடை : D) பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு

60. பொருத்துக :

a) இடுகுறிப் பொதுப் பெயர் 1. மரங்கொத்தி

b) இடுகுறிச் சிறப்புப் பெயர் 2. பறவை

c) காரணப் பொதுப் பெயர் 3. காடு

d) காரணச் சிறப்பு பெயர் 4. பனை

குறியீடுகள் :

a) b) c) d)

A) 4 3 2 1

B) 4 2 3 1

C) 3 4 2 1

D) 3 4 1 2

விடை : C) 3 4 2 1

61. முல்லைத் திணையின் தெய்வம் எது?

A) முருகன்

B) வருணன்

C) இந்திரன்

D) திருமால்

விடை : D) திருமால்

விளக்கம் :

முருகன் – குறிஞ்சித் திணை

வருணன் – நெய்தல் திணை

இந்திரன் – மருதத் திணை

திருமால் – முல்லைத் திணை

கொற்றவை – பாலைத் திணை

62. தேன்மொழி பொன்னியிடம், “நான், நாளை மதுரைக்குச் செல்வேன்” என்றாள். – எவ்வகைத் தொடர் என்று கண்டறிக.

A) நேர்க்கூற்றுத் தொடர்

B) அயற்கூற்றுத் தொடர்

C) உடன்பாட்டுத் தொடர்

D) எதிர்மறைத் தொடர்

விடை : A) நேர்க்கூற்றுத் தொடர்

விளக்கம் :

நேர்க்கூற்றுத் தொடர் – தேன்மொழி பொன்னியிடம், “நான், நாளை மதுரைக்குச் செல்வேன்” என்றாள்.

அயற்கூற்றுத்தொடர் – தேன்மொழி பொன்னியிடம் தான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள்.

உடன்பாட்டுத்தொடர் – தேன்மொழி நாளை மதுரைக்குச் செல்வாள்.

எதிர்மறைத்தொடர் – தேன்மொழி நாளை மதுரைக்குச் செல்லவில்லை.

63. பிறவினைத் தொடராக மாற்றுக.

கலைச்செல்வி திருக்குறள் கற்றாள்

A) திருக்குறள் கலைச்செல்வியால் கற்கப்பட்டது

B) கலைச்செல்வி திருக்குறள் கற்பித்தாள்

C) கலைச்செல்வி திருக்குறளை கற்கிறாள்

D) கலைச்செல்வி திருக்குறள் பயின்றாள்

விடை : B) கலைச்செல்வி திருக்குறள் கற்பித்தாள்

விளக்கம் :

கலைச்செல்வி திருக்குறள் கற்றாள் – தன்வினை

கலைச்செல்வி திருக்குறள் கற்பித்தாள் – பிறவினை

திருக்குறள் கலைச்செல்வியால் கற்கப்பட்டது – செயல்பாட்டுவினை

கலைச்செல்வி திருக்குறள் பயின்றாள் – செய்வினை

64. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு.

அடிக்கோடிட்ட உவமைக்கு பொருள் தருக.

A) ஊருணி நீர் குறைதல் போல

B) ஊருணி நீர் சுடுதல் போல

C) ஊருணி நீர் கெடுதல் போல

D) ஊருணி நீர் நிறைதல் போல

விடை : D) ஊருணி நீர் நிறைதல் போல

65. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தல் பொருட்டு

– இக்குறட்பாவில் ‘வேளாண்மை’ என்றச் சொல்லின் பொருள்

A) பயிர்த்தொழில்

B) உதவி செய்தல்

C) முயற்சி செய்தல்

D) பயிற்சி அளித்தல்

விடை : B) உதவி செய்தல்

விளக்கம் :

திருக்குறள் – ஒப்புரவறிதல்

தாளாற்றித் தந்த பொருளெள்ளாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தல் பொருட்டு – குறள் எண் 212.

பொருள் : தகுதியுடையோர் நலனுக்கு உதவி செய்யும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

66. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு

– எனும் குறளில் என்பு – என்பது எதைக் குறிக்கிறது?

A) கண்கள்

B) இருவகைகள்

C) ஐம்பொறிகள்

D) எலும்பு

விடை : D) எலும்பு

விளக்கம் :

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு – குறள் எண் 72

பொருள் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர். அன்பு உடையவர் தம் உடம்பையும் (எலும்பு) பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

என்பு – எலும்பு. இங்கு ஆகுபெயராயிற்று. எலும்பாலான உடம்பு என்பது பொருளாகும்.

67. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ – என்ற தொடரை எழுதியவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) கவிமணி

D) சுரதா

விடை : A) பாரதியார்

68. வனப்பு என்னும் சொல்லின் பொருள்

A) அழகு

B) அறிவு

C) வளமை

D) எளிமை

விடை : A) அழகு

69. “அடல்வேல் ஆடவர்க் கன்றியும் அவ்வில்

மடவரல் மகளிர்க்கும் மறம்மிகுத் தன்று”

என்ற பாடல் உணர்த்தும் துறை எது?

A) பொருண் மொழிக்காஞ்சி

B) முதுமொழிக்காஞ்சி

C) மூதின் முல்லை

D) முதுமொழி மாலை

விடை : C) மூதின் முல்லை

விளக்கம் :

வாகைத் திணையின் துறைகளுள் ஒன்று மூதின்முல்லையாகும். வீரக்குடி மகளிரின் வீரம் மேம்பட்ட இயல்பை இத்துறை உணர்த்துகிறது.

புறப்பொருள் வெண்பாமாலை

அடல்வேல் ஆடவர்க் கன்றியும் அவ்வில்

மடவரல் மகளிர்க்கும் மறம்மிகுத் தன்று – ஐயனாரிதனார்

பொருள் : கொல்லும் வேலினையுடைய வீரர்களுக்கு மட்டுமல்லாமல் மறக்குடி மகளிர்க்கும் வீரவுணர்ச்சி உள்ளது.

70. “உறுமிடத்து உதவாது உவர்நிலம்

ஊட்டியும்” – இடம்பெற்ற பாடலடி அமைந்த நூல் எது?

A) அகநானூறு

B) ஐங்குறுநூறு

C) புறநானூறு

D) திணைமாலை ஐம்பது

விடை : C) புறநானூறு

விளக்கம் :

புறநானூறு – 149 – ஆவது பாடல்

அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்

உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும்

வரையா மரபின் பாரிபோலக்

கடாஅ யானைக் கழற்கால் பேகன்

கொடைமடம் படுத லல்லது

படைமடம் படான்பிறர் படைமயக் குறினே – பரணர்

திணை : பாடாண்திணை துறை : இயன்மொழி

பொருள் : மழையானது, நீர் வற்றிய குளத்திலும் அகன்ற விளைநிலத்திலும் பெய்யும் ; பயன்படாக் களர் நிலத்திலும் மிகுதியாகப் பெய்யும். அதுபோல கழற்கால் பேகன் இரவலர்க்கு வரையின்றிக் கொடுத்தலில் அறியாமை உள்ளவனாய் இருப்பான். ஆனால் பிறர் படைகொண்டு வந்து போரிட்டால், போர் நெறி மாறுபடாமல் போர் பிரிவான். இப்பாடல் கடையெழு வள்ளல்களுள் ஒருவனான வையாவிக் கோப்பெரும் பேகன் என்னும் குறுநில மன்னனைப் பற்றி புகழ்ந்து பரணரால் பாடப்பட்டதாகும்.

71. நற்றிணையின் பேரெல்லை 12 அடியாக இருப்பினும் விதி விலக்காக 13 அடி கொண்ட பாடலை எழுதியது யார்?

A) கபிலர்

B) நக்கீரர்

C) மாறனார்

D) போதனார்

விடை : D) போதனார்

விளக்கம் :

“பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்” எனத் தொடங்கும் நற்றிணை 110 – ஆவது பாடலை இயற்றியவர் போதனார் ஆவார். நற்றிணையின் பேரெல்லை 12 அடிகளாக இருப்பினும் விதிவிலக்காக இப்பாடல் 13 அடிகளைக் கொண்டுள்ளது.

72. கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்

உண்பது நாழி உடுப்பவை இரண்டே

பிறவும் எல்லம், ஓர்ஓக் கும்மே”

– இப் பாடலடிகள் இடம் பெற்ற நூல்

A) குறுந்தொகை

B) நற்றிணை

C) புறநானூறு

D) அகநானூறு

விடை : C) புறநானூறு

விளக்கம் :

புறநானூறு – 189 – ஆவது பாடல்

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்

உண்பது நாழி உடுப்பவை இரண்டே

பிறவும் எல்லாம் ஓர்ஓக் கும்மே

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே – மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

பொருள் : தெளிந்த கடல்நீரால் சூழப்பட்ட இவ்வுலகம் முழுவதனையும் பொதுவின்றித் தனதாக்கி ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்பவன் மன்னன். நள்ளிரவிலும் பகலிலும் உறங்காது, விரைந்தோடும் விலங்குகளை வேட்டையாடி வீழ்த்த எண்ணுகின்ற கல்வியற்ற ஒருவனுக்கும் மன்னனுக்கும் உண்ணத் தேவைப்படும் பொருள் நாழியளவே ; உடுத்தும் மேலாடையும் இடுப்பாடையும் ஆகிய இரண்டே ஆகும். மற்றவை எல்லாமும் இவ்வாறாகவே அமையும். ஆகவே ஒருவன் தனது செல்வத்தினால் பெறும் பயன், அதனை மற்றவர்க்கும் கொடுத்தலாகும். அவ்வாறன்றி, “தாமே நுகர்வோம்” என்று எண்ணினால் பலவற்றை அவன் இழக்க நேரிடும்.

73. தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை

தேரும் சிலப்பதிகாரம் என்று பாராட்டியவர்

A) பாரதிதாசன்

B) பாரதியார்

C) சுரதா

D) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

விடை : D) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

74. அப்பூதியடிகள் களவு _______ , _______ , _______ நீக்கியவர்.

A) இல்லாமை, கொல்லாமை, புல்லாமை

B) பொய், காமம், சினம்

C) குற்றம், சீற்றம், பொய்

D) அழுக்காறு, அவா, வெகுளி

விடை : B) பொய், காமம், சினம்

விளக்கம் :

பெரிய புராணம் – அப்பூதியடிகள் புராணம்

களவு, பொய், காமம், கோபம் முதலிய குற்றம் காய்ந்தார்

வளமிகு மனையின் வாழ்க்கை நிலையினர் மனைப்பால் உள்ள

அளவைகள், நிறைகோல், மக்கள், ஆவொடு மேதி மற்றும்

உளஎலாம் அரசின் நாமம் சாற்றும் அவ்வொழுகலாற்றார் – சேக்கிழார்

பொருள் : அப்பூதியடிகள் களவு, பொய், காமம், சினம் முதலிய குற்றங்கள் நீக்கியவர் ; வளமிகு இல்லற வாழ்வினர் ; தம் வீட்டிலுள்ள அளவைக் கருவிகள் ; துலாக் கோல், மக்கள், பசுக்கள், எருமைகள் மற்றுமுள்ள பொருள்கள் அனைத்திற்கும் ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரையே சூட்டி வாழும் வழக்கமுடையவர்.

75. சிந்தாமணியே என்று அழைக்கப்பட்டவர்

A) நபுலன்

B) சீதத்தன்

C) சீவகன்

D) கலுழவேகன்

விடை : C) சீவகன்

விளக்கம் :

சீவகசிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் சீவகன். அவனைப் பேற்ற தாயாகிய விஜயை அவனைச் சீராட்டும் போது ‘சிந்தாமணியே’ என்று அன்புடன் அழைத்தமையால், அப்பெயரே சிந்தாமணி என நூற்பெயராக அமைந்தது என்றும் கூறுவர்.

76. பின்வருவனவற்றுள் பொருந்தாததைத் தேர்வு செய்க.

A) இரட்டைக் காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்

B) சிலப்பதிகாரம் ஒரு சமணக்காப்பியம்

C) தமிழில் தோன்றிய முதற்காப்பியம் சிலப்பதிகாரம்

D) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்

விடை : (*)

விளக்கம் :

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள், இவர் இந்து மதத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறியவர். அவர் எவ்வித காழ்ப்புணர்ச்சியுமின்றி அனைத்து தெய்வ வழிபாட்டு முறைகளையும் சிலப்பதிகாரத்தில் கூறியுள்ளார். கடவுள் வாழ்த்தில் கூட திங்கள், ஞாயிறு, மழை ஆகியவற்றை போற்றிப் பாடியுள்ளார். சமண மதம் குறித்து அவர் பாடல் இயற்றவில்லை. நூலின் ஆசிரியர் அமணர், ஆனால் நூல் சமணக்காப்பியம் அன்று.

77. முக்கூடற்பள்ளு நூலின் ஆசிரியர் பெயர் _____

A) கபிலர்

B) பரணர்

C) நக்கீரர்

D) பெயர் தெரியவில்லை

விடை : D) பெயர் தெரியவில்லை

78. “மதோன்மத்தர்” என அழைக்கப்படுபவர் யார்?

A) பெருமாள்

B) திருமால்

C) இயேசு

D) சிவபெருமாள்

விடை : D) சிவபெருமாள்

விளக்கம் :

“மத்தம் சுடும் மாதோன்மத்த ரான

மருதீசர் மருதூர் எங்கள் ஊரே”

பொருள் : ஊமத்தம் பூவை விரும்பிச் சூடும் பெரும் பித்தனாகிய சிவபெருமானுக்கு உரிய ஊர் எங்கள் மருதூர்.

79. ‘முக்கூடற்பள்ளு’ இலக்கியத்தை நாடகவடிவில் இயற்றியவர் யார்?

A) கன்னாயினாப் புலவர்

B) எண்ணாயினாப் புலவர்

C) கண்ணாயினாப் புலவர்

D) என்னயினாப் புலவர்

விடை : D) என்னயினாப் புலவர்

விளக்கம் :

‘முக்கூடற்பள்ளு’ என்ற சிற்றிலக்கியத்தினை இயற்றியவர் யாரென அறியப்படவில்லை. ஆயினும் நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் ‘என்னாயினப் புலவர்’ எனச் சிலர் கூறுவர் எனினும் உறுதியாக எதுவும் தெரியவில்லை.

80. பிரபந்தம் என்னும் வடச் சொல் உணர்த்தும் பொருள்

A) நகைச்சுவை நூல்

B) நன்கு கட்டப்பட்டது

C) அறிவுரை நூல்

D) அறநூல்

விடை : B) நன்கு கட்டப்பட்டது

விளக்கம் :

‘சிற்றிலக்கியம்’ என்ற சொல்லாட்சி வருவதற்கு முன் ‘பிரபந்தம்’ என்ற சொல்லே வழக்கிலிருந்தது. பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு ‘நன்கு கட்டப்பட்டது’ என்பது பொருளாகும்.

81. ‘பாஞ்சாலி சபதம்’ – எப்பாவகையைச் சார்ந்தது?

A) வெண்பா

B) ஆசிரியப்பா

C) சிந்து

D) கலிப்பா

விடை : C) சிந்து

82. “லிட்டன் பிரபு” எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் பாடல் வடிவ நூல் எது?

A) பிசிராந்தையார்

B) மனோன்மணீயம்

C) சிவகாமியின் சரிதம்

D) பில்கணீயம்

விடை : B) மனோன்மணீயம்

விளக்கம் :

மனோன்மணீயம்

இந்நூலை இயற்றியவர் பெ. சுந்தரம்பிள்ளை ஆவார். இது நாடக நூலாகும். லிட்டன் பிரபு என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘இரகசிய வழி’ என்ற நூலைத் தழுவி இந்நூல் இயற்றப்பட்டது. இது வழிநூலாயினும் ‘முதல்நூல்’ என்று கூறத்தக்க அளவு சிறப்புடையது.

இந்நூலின் இடையே ‘சிவகாமியின் சரிதம்’ என்ற துணைக்கதை ஒன்று இடம்பெற்றுள்ளது.

83. “வரையழி வாலருவி வாதாலாட்ட” – இவ்வடியில் வரும் ‘தாலாட்டு” என்ற சொல்லாட்சி காணப்பெறும் எட்டுத்தொகை நூல்

A) அகநானூறு

B) குறுந்தொகை

C) பரிபாடல்

D) ஐங்குறுநூறு

விடை : C) பரிபாடல்

விளக்கம் :

பரிபாடல் – வையை

வரை அழி வால் அருவி வாதாலாட்ட

கரை அழி வால் அருவிக் கால் பாராட்ட – (52 & 53 – ஆம் அடிகள்)

பொருள் : அளவு கடந்து வெண்மையான நீரைக் கொட்டிகின்ற அருவி தாலாட்டவும் தடையில்லை செல்லக் கூடியதும் தூய்மையுடையதும் உருவம் அற்றதுமாகிய தென்றல் காற்று பாராட்டவும் வையை நதி விளங்கியது.

84. பண்டைக்காலத்தில் முழுமதி நன்னாட்களிலும், மாலைநேரத்திலும் ஆடவரும் மகளிரும் கூடி வட்டமாய் நின்று கைகோத்து ஆடும் கூத்து எது?

A) பாவைக் கூத்து

B) குரவைக் கூத்து

C) தெருக்கூத்து

D) ஒயிலாட்டம்

விடை : B) குரவைக் கூத்து

விளக்கம் :

குரவைக் கூத்து

சங்ககாலம் முதல் இன்றுவரை வழ்க்கில் உள்ள நடன வகை குரவைக் கூத்து ஆகும். இது ‘மலை நடனம்’ என்றும் அழைக்கப்படுகிறது. போர்க்காலத்தில் ஆடப்படும் குரவைக் கோத்தில் கோபமும் வீரமும் மிக்குத் தோன்றும். இதனை ‘சினமாந்த வெறிக்குரவை’ என்று புறநானூறு குறிப்பிடுகிறது. போரில்லாத காலங்களில் அமைதியான முறையில் முழுமதி நன்னாட்களிலும் மாலை நேரத்துலும் ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடும் குரவைக் கூத்து ‘தண்குரவை’ என அழைக்கப்படுகிறது.

தீங்கு நிகழுமோ என்ற அச்சம் ஏற்படும் போது தீங்கு ஏற்படாமல் காப்பதற்காக குரவைக் கூத்து ஆடினர் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

85. பாவேந்தர் பாரதிதாசனின் தலைமாணாக்கராக போற்றப்பட்டவர் யார்?

A) வாணிதாசன்

B) மோகன ரங்கன்

C) சுரதா

D) அப்துல் ரகுமான்

விடை : C) சுரதா

விளக்கம் :

கவிஞர் சுரதா

பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை ‘சுப்புரத்தினதாசன்’ என்று இவர் மாற்றிக் கொண்டார். அதன் சுருக்கமே ‘சுரதா’ ஆகும். இவர் பாரதிதாசனின் தலைமாணாக்கராகப் போற்றப்பட்டார்.

86. பின்வருவனவற்றைப் பொருத்துக :

a) குயில் பாட்டு 1. அப்துல் ரகுமான்

b) அழகின் சிரிப்பு 2. சுரதா

c) துறைமுகம் 3. பாரதியார்

d) பால்வீதி 4. பாரதிதாசன்

குறியீடுகள் :

a) b) c) d)

A) 4 3 2 1

B) 3 4 2 1

C) 2 1 4 3

D) 3 4 1 2

விடை : B) 3 4 2 1

87. எந்த இணை சரியானது?

A) சுரதா – இமயம் எங்கள் காலடியில்

B) தாரா பாரதி – இது எங்கள் கிழக்கு

C) வாணிதாசன் – சுட்டுவிரல்

D) மு. மேத்தா – பசிக்கயிறு

விடை : B) தாரா பாரதி – இது எங்கள் கிழக்கு

விளக்கம் :

சரியான இணைகள் :

இமயம் எங்கள் காலடியில் – ஆலந்தூர் கோ. மோகனரங்கன்.

சுட்டுவிரல் – அப்துல் ரகுமான்

88. வால்ட் விட்மன்

கூற்று : 1 புதுக்கவிதைன் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.

கூற்று : 2 “புல்லின் இதழ்கள்” என்ற நூலை எழுதியவர்.

சரியான விடையளி :

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) கூற்று இரண்டும் சரி

D) கூற்று இரண்டும் தவறு

விடை : C) கூற்று இரண்டும் சரி

விளக்கம் :

வால்ட் விட்மன் அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர் ; இதழாளர், கட்டுரையாளர், புதுக்கவிதை இயக்கத்தை இவர் தோற்றுவித்தார். இவருடைய ‘புல்லின் இதழ்கள்’ (Leaves of grass) என்ற நூல் உலகப் புகழ் பெற்றது. இவருடைய கவிதைகளை சங்கர் ஜெயராமன் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

89. தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர்

A) பம்மல் சம்பந்தனார்

B) சங்கரதாசு சுவாமிகள்

C) தி. க. சண்முகனார்

D) மறைமலையடிகள்

விடை : A) பம்மல் சம்பந்தனார்

விளக்கம் :

தமிழ்நாடகத் தந்தை – பம்மல் சம்பந்தனார்.

நாடக உலகின் இமயமலை, தமிழ் நாடகத் தலைமையாசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள்

ஔவை சன்முகனார் – தி. க. சண்முகனார்.

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை – மறைமலையடிகள்

90. பாவேந்தர் பாரதிதாசனால் எழுதப்பட்ட “சாகித்திய அகாதெமி” பரிசு பெற்ற நாடக நூல் எது?

A) சேர தாண்டவம்

B) குடும்ப விளக்கு

C) குறிஞ்சித் திரட்டு

D) பிசிராந்தையார்

விடை : D) பிசிராந்தையார்

விளக்கம் :

‘பிசிராந்தையார்’ என்ற நாடக நூலுக்காக பாரதிதாசன் அவர்கள் 1969 – இல் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்.

91. சி. சு. செல்லப்பாவின் எந்த இதழ் நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டது?

A) எழுத்தாணி

B) எழுத்து

C) அகரம்

D) சிகரம்

விடை : B) எழுத்து

92. சி. சு. செல்லப்பாவின் எந்த நூல் சாகித்திய அக்கதெமி விருது பெற்றுள்ளது?

A) சுதந்திர தாகம்

B) ஆங்கில மோகம்

C) ஜீவனாம்சம்

D) சுதந்திரப் பறவை

விடை : A) சுதந்திர தாகம்

விளக்கம் :

சி. சு. செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ என்ற நூலுக்காக 2001 – இல் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

93. தமிழில் வந்த முதல் அறிவியல் இதழ்

A) தமிழர் நேசன்

B) அமுதசுரபி

C) கலைமகள்

D) பாரதமணி

விடை : A) தமிழர் நேசன்

விளக்கம் :

1917 – இல் தமிழர் நேசன் என்ற அறிவியல் இதழ் தமிழர் கல்விச் சங்கத்தின் சார்பில் மாதவையா போன்றோரின் முயற்சியில் தொடங்கப்பட்டது. இந்த இதழில் வேதியியல், மருத்துவம், தாவரவியல், விலங்கியல் மற்றும் அடிப்படை அறிவியல் கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

94. ஏற்றுமதி இறக்குமதி குறித்துக் கூறும் சங்க நூல்கள் எழுதுக.

A) பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு

B) குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து

C) மதுரைக் காஞ்சி, முல்லைப்பாட்டு

D) மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை

விடை : D) மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை

95. தொண்டைக்கட்டைத் தொலைக்கும் உணவுப் பொருள் எது?

A) மிளகு

B) வெந்தயம்

C) கடுகு

D) சீரகம்

விடை : A) மிளகு

96. துள்ளும் என்னும் ஊர் தற்பொழுது _______ என அழைக்கப்படுகிறது.

A) மண்டலம்

B) தண்டலம்

C) போரூர்

D) காட்டூர்

விடை : B) தண்டலம்

97. உ. வே. சா ‘தன் சரிதம்’ என்னும் வரலாற்று நூலை எந்த இதழில் தொடராக எழுதினார்?

A) சுதேசமித்திரன்

B) ஆனந்த விகடன்

C) தினமணி

D) இந்தியா

விடை : B) ஆனந்த விகடன்

98. தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?

A) பரணர்

B) பாரி

C) தேவநேயப்பாவாணர்

D) பெருந்தேவர்

விடை : C) தேவநேயப்பாவாணர்

99. வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?

A) ஆங்கிலம்

B) பிரெஞ்சு

C) கனடா

D) இலத்தீன்

விடை : D) இலத்தீன்

100. ‘இந்தியாவின் தேசியப் பங்குவீதம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) அண்ணல் அம்பேத்கர்

B) வில்லியம் மில்லர்

C) இலக்குவனார்

D) மகாகவி இரவீந்திரநாத் தாகூர்

விடை : A) அண்ணல் அம்பேத்கர்

விளக்கம் :

அம்பேத்கரின் ‘இந்தியாவின் தேசியப் பங்குவீதம்’ என்ற ஆய்வுக்காக கொலம்பியா பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. இந்த ஆய்வு நூலானது பொருளியல் துறைப் பேராசிரியர்களுக்கும் வல்லுநர்களுக்கும் பேருதவியாக இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin