General Tamil

General Tamil Model Question Paper 27

General Tamil Model Question Paper 27

General Tamil Model Question Paper 27: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெயர்

A) கரிசாலை

B) கையாந்தகரை

C) சிங்கவல்லி

D) தேகராசம்

விடை: C) சிங்கவல்லி

விளக்கம்:

கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையைக் குறிக்கும் வேறு பெயர்களாவன கரிசாலை, கையாந்தகரை, பிருங்காசம், தேகராசம்.

‘சிங்கவல்லி’ என்ற பெயர் குறிக்கும் மூலிகை தூதுவளை ஆகும். இதனை வள்ளலார் ‘ஞானப்பச்சிலை’ எனப் போற்றுகிறார்.

2. ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது’ – இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள் எது ?

A) நிரல்நிறைப் பொருள்கோள்

B) ஆற்றுநீர் பொருள்கோள்

C) மொழிமாற்றுப் பொருள்கோள்

D) விற்பூட்டுப் பொருள்கோள்

விடை: A) நிரல்நிறைப் பொருள்கோள்

விளக்கம்:

சில சொற்களை ஒரு வரிசையில் நிறுத்தி, அவற்றோடு பொருள் தொடர்புடைய வேறு சொற்களை அடுத்த வரிசையில் நிறுத்திப் பொருத்தமாக இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறைப் பொருள்கோளாகும்.

(எ. கா) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

அன்புக்கு பண்பும், அறத்துக்குப் பயனும் நிரல்நிறையாக அமைந்துள்ளது.

3. ‘கேண்மை’ – இச்சொல்லின் எதிர்ச்சொல்

A) துன்பம்

B) பகை

C) நட்பு

D) வலிமை

விடை: B) பகை

விளக்கம் :

கேண்மை என்பதன் பொருள் நட்பு. கேண்மை என்பதன் எதிர்ச்சொல் பகை.

4. “பாலை நிலத்திற்குரிய பறவைகள்’ எவை ?

A) கிளி, மயில்

B) நாரை, அன்னம்

C) புறா, பருந்து

D) கடற்காகம்

விடை : C) புறா, பருந்து

விளக்கம் :

கிளி, மயில் – குறிஞ்சி ; நாரை, அன்னம் – மருதம் ;

புறா, பருந்து – பாலை; கடற்காகம் – நெய்தல்;

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

5. ‘துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்

திறந்தாரை எண்ணிக்கொண் டற்று’ – இதில் அமைந்து வரும் மோனை

A) இணை மோனை

B) பொழிப்பு மோனை

C) ஒரூஉ மோனை

D) கூழை மோனை

விடை : B) பொழிப்பு மோனை

விளக்கம் :

1 3

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்

திறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

ஒன்று மற்றும் மூன்றாம் சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது பொழிப்பு மோனையாகும்.

6. ‘இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்’ – இதில் அமைந்து வரும் தொடை நயம்

A) அடி முரண் தொடை

B) அடி மோனைத் தொடை

C) அடி இயைபுத் தொடை

D) எதுவுமில்லை

விடை : A) அடி முரண் தொடை

விளக்கம் :

‘முரண்’ என்றால் மாறுபாடு. பாட்டின் அடிகளில், சொற்களில் மாறுபாடான பொருள் அமைந்து வந்தால் அது ‘அடிமுரண்’ எனப்படும்.

(எ.கா) இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்.

7. ‘அரியவற்றுள்’ – இச்சொல்லை அசை பிரித்து சரியான விடையை எழுதுக.

A) நிரை நேர் நேர்

B) நிரை நிரை நேர்

C) நிரை நேர் நிரை

D) நேர் நேர் நிரை

விடை : B) நிரை நிரை நேர்

விளக்கம் :

அரி / யவற் / றுள் நிரை நிரை நேர்

அரி – இருகுறில் இணைந்து வந்ததால் நிரையசை

யவற் – இருகுறில் இணைந்து ஒற்றடுத்து வந்ததால் நிரையசை.

றுள் – தனிக்குறில் ஒற்றடுத்து வந்ததால் நேரசை.

8. சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஔகாரம், எத்தனை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும் ?

A) ஒன்றே கால் மாத்திரை

B) ஒன்றரை மாத்திரை

C) ஒன்றே முக்கால் மாத்திரை

D) ஒரு மாத்திரை

விடை : B) ஒன்றரை மாத்திரை

விளக்கம் :

ஔகாரக்குறுக்கம்

‘ஔ’ என்னும் எழுத்து தனக்குரிய 2 மாத்திரை அளவிலிருந்து ஒன்றரை மாத்திரை அளவில் குறுகி ஒலிப்பது ஔகாரக் குறுக்கமாகும். இது மொழி முதலில் மட்டுமே குறுகும். (எ.கா) ஔவை, வௌவால்.

9. “இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா” எனக் குறிப்பிடும் நூல்

A) தொல்காப்பியம்

B) நன்னூல்

C) அகப்பொருள்

D) அகத்தியம்

விடை : A) தொல்காப்பியம், B) நன்னூல்

விளக்கம் :

“இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா” – தொல்காப்பியம்.

சொல்லதிகாரம் கிளவியாக்கம்.

நூற்பா எண் – (48)

“இரட்டைக் கிளவி யிரட்டிற்பிரிந் திசையா” – நன்னூல்

பிரிவு – பொதுவியல்

நூற்பா எண் – (45)

தொல்காப்பியர், பவணந்தி முனிவர் (நன்னூலார்) இருவருமே இன்கருத்தைக்

கூறியுள்ளார்கள்.

10. பொருந்தாததை எடுத்து எழுதுக.

A) அரசன் வந்தது – திணை வழு

B) கபிலன் பேசினாள் – பால் வழு

C) குயில்கள் கூவியது – எண் வழு

D) கமலா சிரித்தாய் – கால வழு

விடை : D) கமலா சிரித்தாய் – கால வழு

விளக்கம் :

இலக்கண முறைக்கு மாறாகப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். கமலா சிரித்தாய் – இடவழு

‘கமலா சிரித்தாள்’ என்பது சரியான சொற்றொடர் ஆகும். தன்னிலை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்கள் மாறி அமைவது இடவழு ஆகும்.

11. பொருந்தாததைக் கண்டறிந்து எழுதுக.

A) ஐந்து கிலோ – எடுத்தல் அளவை ஆகுபெயர்

B) நாலு லிட்டர் – முகத்தல் அளவை ஆகுபெயர்

C) மூன்று மீட்டர் – நீட்டல் அளவை ஆகுபெயர்

D) இந்தியா வென்றது – உவமையாகுபெயர்

விடை : D) இந்தியா வென்றது – உவமையாகுபெயர்

விளக்கம் :

ஒரு பொருளின் இயற்பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குப் பெயராகி வருவது ஆகுபெயராகும்.

இந்தியா வென்றது – இடவாகு பெயர்

‘இந்தியா’ என்பது நாட்டைக் குறிக்காமல் இந்திய நாட்டைச் சேர்ந்த வீரர்களைக் குறிப்பதால் இஃது இடவாகு பெயராகும்.

12. தொழிற்பெயரைக் கண்டறிக. ‘வா’ –

A) வருதல்

B) வந்து

C) வந்தான்

D) வந்த

விடை : A) வருதல்

விளக்கம் :

வா – வேர்ச்சொல் ; வருதல் – தொழிற்பெயர், வந்து – வினையெச்சம், வந்தான் – வினைமுற்று, வந்த – பெயரெச்சம்.

13. அகர வரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக.

A) காசு, கூறை, கைப்பிடி, கிளி, கேணி

B) காசு, கிளி, கூறை, கேணி, கைப்பிடி

C) கிளி, கைப்பிடி, காசு, கூறை, கேணி

D) கேணி, காசு, கிளி, கூறை, கைப்பிடி

விடை : B) காசு, கிளி, கூறை, கேணி, கைப்பிடி

14. ‘இனிய நண்ப’ – இலக்கணக்குறிப்பு தருக.

A) குறிப்புப் பெயரெச்சம்

B) தெரிநிலை பெயரெச்சம்

C) எதிர்மறைப் பெயரெச்சம்

D) குறிப்பு வினையெச்சம்

விடை : A) குறிப்புப் பெயரெச்சம்

விளக்கம் :

காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பெயர்ச்சொல்லைத் தழுவி முடியும் எச்சம் குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.

(எ.கா) : நல்ல பையன், அழகிய மயில், இனிய நண்பன்.

15. “எதிரூன்றல் காஞ்சி, எயில் காத்தல் நொச்சி” – இதில் நொச்சி என்பது

A) மதில் காத்தல்

B) மதில் வளைத்தல்

C) மதில் பூச்சூடல்

D) மதில்வாகை சூடல்

விடை : A) மதில் காத்தல்

விளக்கம் :

நொச்சித்திணை : பகைவர்கள் மதிலைக் கைப்பற்றாதவாறு பாதுகாத்தல் ஆகும்.

16. சொல்லைப் பொருளோடு பொருத்துக :

சொல் பொருள்

a) வனப்பு 1. வலிமை

b) அடவி 2.. அழகு

c) வீறு 3. இனிமை

d) மதுரம் 4. காடு

குறியீடுகள் :

a) b) c) d)

A) 2 4 1 3

B) 2 3 1 4

C) 3 2 4 1

D) 1 3 2 4

விடை : A) 2 4 1 3

17. பொருத்துக :

நூல் ஆசிரியர்

a) திரிகடுகம் 1. பெருவாயின் முள்ளியார்

b) ஆசாரக்கோவை 2. நல்லாதனார்

c) பழமொழி நானூறு 3. காரியாசான்

d) சிறுபஞ்சமூலம் 4. முன்றுறை அரையனார்

குறியீடுகள் :

a) b) c) d)

A) 2 1 4 3

B) 2 3 4 1

C) 3 2 1 4

D) 3 1 4 2

விடை : A) 2 1 4 3

18. தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார் ?

A) கபிலர்

B) நரிவெரூஉத்தலையார்

C) அறியப்படவில்லை

D) ஓதலாந்தையார்

விடை : C) அறியப்படவில்லை

19. ஐஞ்சிறு காப்பியங்கள் – என்னும் வகைப்பாட்டில் இல்லாத நூல் எது ?

A) நாககுமார காவியம்

B) நீலகேசி

C) குண்டலகேசி

D) சூளாமணி

விடை : C) குண்டலகேசி

விளக்கம் :

ஐஞ்சிறு காப்பியங்கள் : சூளாமணி, நீலகேசி, உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம். குண்டலகேசி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும்.

20. ‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ – எனப் பாடியவர்

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) சுரதா

D) திருவள்ளுவர்

விடை : B) பாரதிதாசன்

விளக்கம் :

திருக்குறள் குறித்து பாரதிதாசன் இயற்றிய பாடல்

வெல்லாத தில்லை திருவள்ளுவன்வாய் விளைந்தவற்றுள்

பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்

சொல்லாத தில்லை பொதுமறையான திரிக்குறளில்

இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக்குந் நிலத்தே.

21. கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவர்

A) பெரியாழ்வார்

B) அப்பூதியடிகள்

C) மாணிக்கவாசகர்

D) அப்பர்

விடை : D) அப்பர்

விளக்கம் :

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான அப்பரை (திருநாவுக்கரசர்), சமண சமயத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் பலவிதங்களில் துன்புறுத்தினான். அத்துன்பங்களை இறைவன் அருளால் வென்று, அம்மன்னனையும் சைவத்திற்கு அப்பர் மாற்றினார்.

சமணர்கள் கல்லில் இவரைச் சேர்த்துக் கட்டிக் கடலில் விடவும், அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறினார். இந்நிகழ்வை,

“கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினாலும்

நற்றுணை ஆவது நமச்சிவாயமே”

என்று தனது பதிகத்தில் பதிவு செஉதுள்ளார்.

22. “ரூபாயத்” என்பதன் பொருள்

A) மூன்றடிச் செய்யுள்

B) நான்கடிச் செய்யுள்

C) இரண்டடிச் செய்யுள்

D) ஐந்தடிச் செய்யுள்

விடை : B) நான்கடிச் செய்யுள்

விளக்கம் :

11 – ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் ‘ ரூபாயத்’ என்ற பெயரில் எழுதியிள்ள நூலினை கவிமணி அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலில் 115 பாடல்கள் உள்ளன. ‘ரூபாயத்’ என்றால் நான்கடிச் செய்யுள் என்பது பொருளாகும்.

23. அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து, திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது ?

A) இங்கிலாந்து

B) சீனா

C) உருசிய நாடு

D) அமெரிக்கா

விடை : C) உருசிய நாடு

விளக்கம் :

உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறள் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

24. வைதோரைக் கூட வையாதே – இந்த

வையமுழுவதும் பொய்த்தாலும் பொய்யாதே – இவ்வரியைப் பாடியவர்

A) குதும்பைச் சித்தர்

B) கடுவெளிச்சித்தர்

C) திருமூலர்

D) கவிமணி

விடை : B) கடுவெளிச்சித்தர்

விளக்கம் :

வைதோரைக் கூட வையாதே – இந்த

வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே !

வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை

வீணில் பறவைகள் மீதில் எய்யாதே ! – கடுவெளிச் சித்தர்

இவர் உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுள் என்றெண்ணி வழிபட்டார் அதனால் இவருக்கு கடுவெளிச் சித்தர் என்ர பெயர் வழங்கி வந்தது. மிக எளிய சொற்களில் அறக்கருத்துகளை எடுத்துரைத்தவர்.

25. 26 முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்

A) மடந்தை

B) அரிவை

C) மங்கை

D) தெரிவை

விடை : D) தெரிவை

விளக்கம் :

ஏழு பருவங்களைச் சார்ந்த பெண்கள்

பருவங்கள் வயது
பேதை 5 – 7
பெதும்பை 8 – 11
மங்கை 12 – 13
மடந்தை 14 – 19
அரிவை 20 – 25
தெரிவை 26 – 32
பேரிளம் பெண் 32 – 40

26. குமரகுருபரர் எம்மொழிகளில் புலமைமிக்கவர் ?

A) தமிழ், வடமொழி

B) தமிழ், வடமொழி, இந்துஸ்தானி

C) தமிழ், மலையாளம்

D) தமிழ், ஆங்கிலம்

விடை : B) தமிழ், வடமொழி, இந்துஸ்தானி

விளக்கம் :

குமரகுருபரர் கி. பி. 17 – ஆம் நூற்றாண்டைச் சார்ந்த புலவர். இவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர். இவர் தனது ஐந்தாம் வயது வரை பேச்சுத் திறனில்லாமல் இருந்தவர். பின்னர் திருச்செந்தூர் முருகன் அருளால் பேச்சு வரப் பெற்றார்.

கந்தர் கலிவெண்பா, மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், முத்துகுமார சுவாமி பிள்ளைத் தமிழ் போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.

27. “உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்” என்று கூறியவர்

A) கம்பர்

B) திருவள்ளுவர்

C) இளங்கோவடிகள்

D) வள்ளலார்

விடை : D) வள்ளலார்

விளக்கம் :

‘உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்’ என்று கூறியவர் வள்ளலார். கடவுளின் பெயரால் உயிர்க்கொலை செய்வதை அறவே வெறுத்தார்.

28. “இயற்பாடு பொருளால் கண்டது மறந்து

முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல்” – இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது ?

A) சீவகசிந்தாமணி

B) சிலப்பதிகாரம்

C) மணிமேகலை

D) கம்பராமாயணம்

விடை : C) மணிமேகலை

விளக்கம் :

மணிமேகலை – ஆபுத்திரன் நாடு அடைந்த காதை

பேதைமை யென்பது யாதென வினவின்

ஓதிய இவற்றை உண்ராது மயங்கி

இயற்படு பொருளால் கண்டது மறந்து

முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல். -சீத்தலைச் சாத்தனார்

பொருள் : “பேதைமை எனப்படுவது அறியாமை. அதாவது முற்கூறிய இயல்புகளை அறியாமல் அறிவு மயங்குதல், இயற்கையாய்த் தோன்றும் பொருள்களிலும் தாம் கண்டதனை மறந்து, முயலுக்குக் கொம்புண்டு எனப் பிறர் கூறும் பொய்யை மெய்யென நம்புதல் போன்றது” என்று அறவண அடிகள் கூறினார்.

29. “ஒன்று கொலாம்” என்ற திருப்பதிகத்தைப் பாடியவர் யார் ?

A) சேக்கிழார்

B) திருநாவுக்கரசர்

C) இளங்கோவடிகள்

D) பாரதியார்

விடை : B) திருநாவுக்கரசர்

விளக்கம் :

அப்பூதியடிகளின் மகன் மூத்த திருநாவுக்கரசு அரவம் தீண்டி இறந்துவிட்டான். இதனை அறிந்த திருநாவுக்கரசர் ‘ஒன்று கொலாம்’ என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி அவனை உயிர்ப்பித்தார். அதனால் அது ‘விடம் தீர்த்த பதிகம்’ எனப்படுகிறது.

“ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை

ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்

ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது

ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே”

பொருள் : சிவபிரானின் உள்ளம் அவர் இருக்கும் ஒப்பற்ற கயிலை மலை போன்று உயர்வானது. அவரின் கருணையால் ஒப்பற்ற நிலைக்கு உயர்ந்த சந்திரனை தனது சென்னியில் சூடியவர். தனது கையில் வெண்தலையை ஒப்பற்ற பலிப் பாத்திரமாக ஏந்தியுள்ளவர். அவரது வாகனமாகிய இடமும் ஒப்பற்றது.

30. தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது ?

A) தேவாரம்

B) திருவாசகம்

C) திருமந்திரம்

D) திருக்குறள்

விடை : C) திருமந்திரம்

விளக்கம் :

திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் மூவாயிரம் பாடல்கள் உள்ளன. இந்நூல் ‘தமிழ் மூவாயிரம்’ என்றும் வழங்கப்பெறும்.

31. ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ – என்று பாடிய புறநானூற்றுப் புலவர்

A) மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

B) கணியன் பூங்குன்றனார்

C) நரிவெரூஉத் தலையார்

D) ஔவையார்

விடை : A) மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

விளக்கம் :

புறநானூறு

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்

உண்பது நாழி உடுப்பவை இரண்டே

பிறவும் எல்லாம் ஓர்ஒக் கும்மே

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே.

– மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

பொருள் : தெளிந்த கடல் நீரால் சூழப்பட்ட இவ்வுலகம் முழுவதையும் பொதுவின்றித் தனதாக்கி ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்பவன் மன்னன். அவனுக்கும், நள்ளிரவிலும் பகலிலும் உறங்காது விரைந்தோடும் விலங்குகளை வேட்டையாடி வீழ்த்த எண்ணுகின்ற கல்வியறிவற்ற ஒருவனுக்கும், உண்ணத் தேவைப்படும் பொருள் நாழியளவே.

உடுத்தும் உடை மேலாடையும் இடுப்பாடையும் ஆகிய இரண்டே. மற்றவை எல்லாமும் இவ்வாறாகவே அமையும். ஆகவே, ஒருவன் தனது செல்வத்தினால் பெறும் பயன், அதனை மற்றவர்க்கும் கொடுத்தலாகும். அவ்வாறன்றி, ‘தாமே நுகர்வோம்’ என்று எண்ணினால் பலவற்றை அவன் இழக்க நேரிடும்.

32. உலகம் முழுவதையும் ஆளக் கருதுபவர் எதற்காகக் காத்திருக்க வேண்டும் ?

A) படை வரும் வரை

B) காலம் வரும் வரை

C) பணம் வரும் வரை

D) பலம் வரும் வரை

விடை : B) காலம் வரும் வரை

விளக்கம் :

திருக்குறள் (அதிகாரம் – காலமறிதல்)

காலம் கருதி இருப்பர், கலங்காது

ஞாலம் கருது பவர். – குறள் எண். 485

பொருள் : உலகம் முழுவதையும் ஆளக் கருதுபவர், அதற்குரிய காலத்தை எதிபார்த்துக் கலங்காமல் காத்திருப்பர்.

33. சீறாப்புராணத்தை இயற்றியவர் யார் ?

A) உமறுப்புலவர்

B) சீதக்காதி

C) அபுல்காசிம்

D) திருநாவுக்கரசர்

விடை : A) உமறுப்புலவர்

விளக்கம் :

சீறாப்புராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர். இவர் எட்டையபுர அரசவைப் புலவராக இருந்தார். இராமநாதபுர மன்னர் சேதுபதுயின் அமைச்சராக இருந்த அப்துல் காதிர் என்ற சீதக்காதி மரைக்காயரின் வேண்டுகோளின்படி உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார். ஆனால் நூல் முடிவடையும் முன்பே சீதக்காதி மறைந்து விட்டதால் அபுல்காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது. மேற்சொன்ன இரு வள்ளல் பெருமக்களை உமறுப்புலவர், பலவிடங்களில் நினைவுகூர்ந்து போற்றுகிறார்.

34. பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II

a) காகம் 1. கூவும்

b) குதிரை 2. கரையும்

c) சிங்கம் 3. கனைக்கும்

d) குயில் 4. முழங்கும்

குறியீடுகள் :

a) b) c) d)

A) 1 3 4 2

B) 4 3 1 2

C) 2 4 1 3

D) 2 3 4 1

விடை : D) 2 3 4 1

35. ‘மூலன்’ என்னும் இயற்பெயரை உடையவர்

A) திருமூலர்

B) அப்பர்

C) சாத்தனார்

D) தாயுமானவர்

விடை : A) திருமூலர்

36. “ஒரு நாடு வளமுடன் இருக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்த ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும்” – எனக் கூறியவர் யார் ?

A) பாரதியார்

B) அம்பேத்கர்

C) பெரியார்

D) அறிஞர் அண்ணா

விடை : C) பெரியார்

விளக்கம் :

“ஒரு நாடு வளமுடன் இருக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்த ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும். ஒழுக்கம் என்பதும் கற்பென்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலர்க்கும் பொதுவாகும்” – ஈ. வெ. ரா. பெரியார்.

37. இந்திய நாட்டை, ‘மொழிகளின் காட்சிச் சாலை’ என்று கூறியவர்

A) குமரிலபட்டர்

B) கால்டுவேல்

C) ச. அகத்தியலிங்கம்

D) ஹுராஸ் பாதிரியார்

விடை : C) ச. அகத்தியலிங்கம்

விளக்கம் :

இந்திய நாட்டில் 1300 – க்கும் மேற்பட்ட மொழிகளும், அதன் கிளை மொழிகளும் பேசப்பட்டு வருகின்றன. ஆதலால் இந்திய நாட்டை ‘மொழிகளின் காட்சி சாலை’ என்று குறிப்பிட்டுள்ளார் மொழியியல் பேராசிரியர் ச. அகத்தியலிங்கம்.

38. ‘நல்வி’ – இச்சொல்லின் பொருளை எழுதுக.

A) மான்

B) நாய்

C) புலி

D) பசு

விடை : A) மான்

39. “சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெரிங்கொடுமை” எனக் கூறியவர்

A) காந்தியடிகள்

B) பாரதியார்

C) பசும்பொன் முத்துராமலிங்கர்

D) பாரதிதாசன்

விடை : C) பசும்பொன் முத்துராமலிங்கர்

விளக்கம் :

“சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெரிங்கொடுமை. ஆண்டவன் மனித குலத்தைப் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும் அல்ல ; சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை ; ஆன்மிகத்திற்கும் இல்லை” – பசும்பொன் முத்துராமலிங்கர்

40. குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படுவது

A) கார்பன் டை ஆக்சைடு

B) ஆக்சிஜன்

C) குளோரோ ஃபுளுரோ கார்பன்

D) மீத்தேன்

விடை : C) குளோரோ ஃபுளுரோ கார்பன்

41. ‘தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்’ – எனக் கூறியவர்

A) டாக்டர் கிரௌல்

B) கால்டுவெல்

C) வீரமாமுனிவர்

D) ஜி. யூ. போப்

விடை : B) கால்டுவெல்

42. ‘தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு’ – இக்கடிதப் பகுதி யாருடையது ?

A) திரு. வி. கல்யாணசுந்தரனார்

B) மு. வரதராசனார்

C) பேரறிஞர் அண்ணா

D) ஜவஹர்லால் நேரு

விடை : B) மு. வரதராசனார்

43. “தேசியம் காத்த செம்மல், எனத் திரு. வி. கல்யாண சுந்தரனாரால் பாராட்டப் பெறுபவர்”.

A) அம்பேத்கர்

B) அண்ணா

C) முத்துராமலிங்கர்

D) பெரியார்

விடை : C) முத்துராமலிங்கர்

44. காமராசரின் அரசியல் குரு

A) பாவியக் கொத்து

B) பள்ளிப் பறவைகள்

C) கொய்யாக் கனி

D) சத்தியமூர்த்தி

விடை : D) சத்தியமூர்த்தி

45. “பாவலரேறு பெருஞ்சித்திரனார்” எழுதாத நூல் எது ?

A) பாவியக் கொத்து

B) பள்ளிப் பறவைகள்

C) கொய்யாக் கனி

D) குறிஞ்சித் திட்டு

விடை : D) குறிஞ்சித் திட்டு

விளக்கம் :

‘குறிஞ்சித்திட்டு’ பாவேந்தர் பாரதிதாசன் இயற்றிய நூலாகும்.

46. ‘தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது’ என்று கூறியவர்

A) அம்பேத்கர்

B) கெல்லட்

C) கமில்சுவலபில்

D) முனைவர் எமினோ

விடை : B) கெல்லட்

47. ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தை கைக் கொண்டு வாழவிடுவதே தருமம் – எனக் கூறியவர்

A) இராணி மங்கம்மாள்

B) அஞ்சலையம்மாள்

C) வள்ளியம்மை

D) வேலுநாச்சியார்

விடை : A) இராணி மங்கம்மாள்

48. ‘உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர். உன் உயர்வை விட நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர். உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்ததும் என்று உணர். நெருக்கடி நேரும்போது உன் நலம், உயர்வு, மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு’ – இக்கூற்று யாருடைய கடிதப் பகுதி ?

A) பேரறிஞர் அண்ணா

B) அன்னை இந்திராகாந்தி

C) மு. வரதராசனார்

D) திரு. வி. க

விடை : C) மு. வரதராசனார்

49. சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது ?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) குண்டலகேசி

D) வளையாபதி

விடை : B) மணிமேகலை

50. பொருத்துக

தமிழ்ச்சொல் பிறமொழிச்சொல்

a) திருவரங்கம் 1. சிதம்பரம்

b) திருச்சிற்றம்பலம் 2. ஸ்ரீரங்கம்

c) திருமறைக்காடு 3. மீனாட்சி

d) அங்கயற்கண்ணி 4. வேதாரணியம்

குறியீடுகள் :

a) b) c) d)

A) 1 3 4 2

B) 2 1 4 3

C) 3 2 4 1

D) 1 4 2 3

விடை : B) 2 1 4 3

51. மதுரையில் உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது ?

A) 1981

B) 1982

C) 1983

D) 1985

விடை : A) 1981

52. ‘நான் நிரந்தமானவன் அழிவதில்லை

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’

– எனக் கவிதை பாடியவர்

A) சுரத

B) கண்ணதாசன்

C) பாரதிதாசன்

D) மு. மேத்தா

விடை : B) கண்ணதாசன்

53. ‘எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்’ – எனப் பாடியவர்

A) பாரதிதாசன்

B) பாரதியார்

C) சுரதா

D) கண்ணதாசன்

விடை : A) பாரதிதாசன்

54. மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்கவும்.

A) கலம், தோணி, புணரி, மிதவை

B) கலம், பரிசில், ஓடம், பரவை

C) கலம், வங்கம், புணை, அம்பி

D) கலம், பரிசல், ஆழி, பஃறி

விடை : C) கலம், வங்கம், புணை, அம்பி

விளக்கம் :

மரக்கலத்தைக் குறிக்கும் வேறு பெயர்களாவன :

கப்பல், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம்.

புணரி, பரவை, ஆழி ஆகியவை கடலைக் குறிக்கும் வேறு பெயர்களாகும்.

55. பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்களைப் பொருத்துக.

பிறமொழிச்சொல் தமிழ்சொல்

a) மீனாட்சி 1. அங்கயற்கண்ணி

b) மதுரவசனி 2. வாள்நெடுங்கண்ணி

c) கட்கநேத்ரி 3. நீள்நெடுங்கண்ணி

d) விசாலாட்சி 4. தேன்மொழிப்பாவை

குறியீடுகள் :

a) b) c) d)

A) 1 4 3 2

B) 1 4 2 3

C) 1 3 4 2

D) 1 2 4 3

விடை : B) 1 4 2 3

56. பிழையற்றத் தொடரைத் தேர்வு செய்க.

A) ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்

B) ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்

C) ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்

D) ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்

விடை : B) ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்

விளக்கம் :

அ முதல் ஔ வரையுள்ள உயிரெழுத்துகளுக்கு முன்பாக ‘ஓர்’ என்ற சொல் அமையும்

ஒரு மாவட்டம் – சரியான சொற்றொடர்

ஓர் மாவட்டம் – தவறான சொற்றொடர்

ஓர் அமைச்சர் – சரியான சொற்றொடர்

ஒரு அமைச்சர் – தவறான சொற்றொடர்

57. “மாகதம்” எனப்படுவது

A) மதுரகவி

B) சித்திரகவி

C) வித்தாரகவி

D) ஆசுகவி

விடை : C) வித்தாரகவி

விளக்கம் :

வைதருப்பம் – ஆசுகவி

கௌடம் – மதுரகவி

பாஞ்சாலம் – சித்திரகவி

மாகதம் – வித்தாரகவி

58. அகத்திணையின் வகைகள்

A) ஐந்து

B) ஆறு

C) மூன்று

D) ஏழு

விடை : D) ஏழு

விளக்கம் :

அகத்திணையின் வகைகள் : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெரிந்திணை.

59. கரணத்தேர் ___________ எனப் பிரியும்.

A) கரணம் + தேர்

B) கரணத்து + ஏர்

C) கரன் + அத்து + ஏர்

D) காரணம் + தேர்

விடை : B) கரணத்து + ஏர்

விளக்கம் :

‘கரணத்தேர்’ குற்றியலுகரப் புணர்ச்சி வகையாகும்.

கரணத்து + ஏர். ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ என்ற விதிப்படி வருமொழி முதலில் உயிர் வந்ததால் நிலைமொழி ஈற்றிலுள்ள உகரம் நீங்கி ‘கரணத்த் + ஏர்’ என்றானது. ‘உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’ என்ற விதிப்படி த் + ஏ தே என்றாகி ‘கரணத்தேர்’ என்று புணர்ந்தது.

60. மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

A) இல்லாரை எள்ளுவர் செல்வரை எல்லாரும்

B) இல்லாரை செல்வரை எல்லாரும் எள்ளுவர்

C) இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

D) செல்வரை எல்லாரும் எள்ளுவர் இல்லாரை

விடை : C) இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

விளக்கம் :

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் ; செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு. – திருக்குறள் எண். 752

61. மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

A) குணநலம் நலனே சன்றோர் பிறநலம்

B) சான்றோர் நலனே குணநலம் பிறநலம்

C) குணநலம் சான்றோர் நலனே பிறநலம்

D) சான்றோர் குணநலம் நலனே பிறநலம்

விடை : C) குணநலம் சான்றோர் நலனே பிறநலம்

விளக்கம் :

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்

எந்நலத்து உள்ளதூஉம் அன்று. – திருக்குறள் எண். 982

62. பகுபதத்தில் குறைந்தளவு இருக்க வேண்டிய உறுப்புகள்

A) பகுதி, சந்தி

B) இடைநிலை, சாரியை

C) பகுதி, விகுதி

D) விகுதி, சாரியை

விடை : C) பகுதி, விகுதி

விளக்கம் :

பகுபதத்தின் உறுப்புகளாவன பகுதி, விகாரம், சந்தி, இடைநிலை, சாரியை, விகுதி. குறைந்தளவு இருக்க வேண்டிய உறுப்புகள் பகுதி, விகுதி என இரண்டாகும். ஏனைய உறுப்புகள் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆனால் பகுதி, விகுதி கண்டிப்பாக இருக்க வேண்டும்.

(எ.கா) கூனன் கூன் – பகுதி, அன் – விகுதி

63. உறுவேனில் – இலக்கணக்குறிப்பு யாது ?

A) வினைத்தொகை

B) உரிச்சொற்றொடர்

C) பண்புத்தொகை

D) வினையெச்சம்

விடை : B) உரிச்சொற்றொடர்

விளக்கம் :

சால, உறு, தவ, நனி, கூர், கழி, கடி, மா ஆகியவை உரிச்சொற்களாகும்.

64. “இறை, செப்பு” என்பன கீழ்க்கண்ட எச்சொல்லுக்கு வழங்கும் வேறுபெயர்கள் ?

A) வினா

B) மொழி

C) விடை

D) இறைவன்

விடை : C) விடை

65. கீழ்க்காணும் தொடரில் சரியான விடையைத் தேர்வு செய்க.

A) யானையின் கண் சிறியது

B) யானையின் கண்கள் சிறியது

C) யானையின் கண்கள் சிறியன

D) யானையின் கண் சிறியன

விடை : C) யானையின் கண்கள் சிறியன

66. ஓடையில் யானையும் யானைக் ___________ம் நின்றன.

A) யானைக் கன்று

B) யானைக் குட்டி

C) யானைக் குருளை

D) யானைப் பிள்ளை

விடை : A) யானைக் கன்று

67. Refrigerator – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

A) குளிர் பதனப் பெட்டி

B) குளிரூட்டும் பெட்டி

C) குளிர்சாதனப் பெட்டி

D) குளிர் காக்கும் பெட்டி

விடை : B) குளிரூட்டும் பெட்டி

68. ‘கோ’ – இச்சொல்லின் உரிய பொருளைக் கண்டறிக.

A) அரசன்

B) அன்னம்

C) ஆதவன்

D) அன்பு

விடை : A) அரசன்

69. உவமை விளக்கும் பொருளைக் கண்டறிந்து பொருத்துக.

உவமை பொருள்

a) அத்திப் பூத்தது போல 1. ஒற்றுமை

b) உயிரும் உடம்பும் போல 2. பயனில்லை

c) ஆற்றில் கரைந்த புளி 3. வேதனை

d) இடிவிழுந்த மரம் போல 4. அரிய செயல்

குறியீடுகள் :

a) b) c) d)

A) 3 1 4 2

B) 2 3 4 1

C) 4 1 2 3

D) 4 2 1 3

விடை : C) 4 1 2 3

70. “அன்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்” – இவ்வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர்

A) தேவாரம்

B) திருவாசகம்

C) ஏர் எழுபது

D) திருக்கோவை

விடை : B) திருவாசகம்

விளக்கம் :

திருவாசகம்

அண்டப் பகுதியின் உண்டப் பிறக்கும்

அளப்ப்ருந் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன. – மாணிக்கவாசகர்

71. “கேழல்” என்பதன் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

A) எருமை

B) புலி

C) கரடி

D) பன்றி

விடை : D) பன்றி

விளக்கம் :

மேதி, கடா – எருமை ; உழுவை – புலி;

கேழல் – பன்றி ; எண்கு – கரடி.

72. பட்டியல் I – ஐ பட்டியல் II – உடன் பொருத்தி விடை எழுது.

பட்டியல் I பட்டியல் II

a) திருஞானசம்பந்தர் 1. திருவாதவூர்

b) திருநாவுக்கரசர் 2. திருவெண்ணைய் நல்லூர்

c) சுந்தரர் 3. திருவாமூர்

d) மாணிக்கவாசகர் 4. சீர்காழி

குறியீடுகள் :

a) b) c) d)

A) 4 3 2 1

B) 4 2 3 1

C) 2 4 1 3

D) 2 3 4 1

விடை : A) 4 3 2 1

73. “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ” – இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது ?

A) நற்றினை

B) கலித்தொகை

C) குறுந்தொகை

D) புறநானூறு

விடை : C) குறுந்தொகை

விளக்கம் :

இறைவன் தருமிக்கு அருளிய பாடலாக திருவிளையாடற்புராணத்தில் கூறப்பட்டுள்ள பாடல் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீஅறியும் பூவே – இறையனார்

74. “தேம்பாவணி” எத்தனை காண்டங்களை உடையது ?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

விடை : B) மூன்று

75. பொருந்தாத இணையைக் கண்டறிக.

A) மேதி – எருமை

B) சந்தம் – அழகு

C) கோதில் – பசு

D) அங்கணர் – சிவன்

விடை : C) கோதில் – பசு

விளக்கம் :

கோதில் – குற்றமில்லாத

76. பொருளறிந்து பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II

a) நயனம் 1. இருள்

b) இந்து 2. புன்னகை

c) முறுவல் 3. கண்கள்

d) அல் 4. நிலவு

குறியீடுகள் :

a) b) c) d)

A) 3 4 2 1

B) 3 4 1 2

C) 4 3 2 1

D) 3 2 1 4

விடை : A) 3 4 2 1

77. நற்றிணையைத் தொகுத்தவர் யார் ?

A) பன்னாடு தந்த மாறன் வழுதி

B) இளம் பெருவழுதி

C) உக்கிரப் பெருவழுதி

D) பாண்டியன் மாறன் வழுதி

விடை : A) பன்னாடு தந்த மாறன் வழுதி

விளக்கம் :

நற்றிணைப் பாடல்களைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்கள் 275 பேர். இண்நூலுக்கு கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

78. உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக.

புரிசை

A) வேகம்

B) வளம்

C) மதில்

D) மேகம்

விடை : C) மதில்

79. சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.

“உருமு”

A) இடுப்பு

B) இடி

C) மேகம்

D) கதிரொளி

விடை : B) இடி

80. குலசேகர ஆழ்வார் இயற்றிய நூல் எது ?

A) நந்திக்கலம்பகம்

B) நாலாயிர திவ்வியப்பிரபந்தம்

C) கலித்தொகை

D) நற்றிணை

விடை : (*)

விளக்கம் :

‘நாலாயிர திவ்வியப்பிரபந்தம் என்ற நூல் பெருமாளைக் குறித்துப் பாடப்பட்ட பக்திப் பாடல்களின் தொகுப்பாகும். கி. பி. 6 முதல் கி. பி. 9 – ஆம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்த வைணவ சமய ஆழ்வார்கள் பன்னிருவர்களினால் இயற்றப்பட்ட பாடல்களை 10 – ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் தொகுத்த நூல்தான் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஆகும். பின்னர் வந்த மணவாள மாமுனிகள் திருவரங்கத்தமுனார் இயற்றிய ‘ இராமானுஜ நூற்றந்தாதியையும்’ இந்நூலில் இணைத்தார். இந்நூலில் உள்ள ‘பெருமாள் திருமொழி’ என்ற பிரபந்தம் மட்டுமே குலசேகர ஆழ்வாரால் இயற்றப்பட்டது.

மேலும் குலசேகர ஆழ்வார் வடமொழியில் ‘முகுந்தமாலை’ என்ற நூலையும் இயற்றியுள்ளார்.

81. ‘கள்ள வேடம் புனையாதே – பல

கங்கையில் உன்கடம் நனையாதே

– இதில் ‘கடம்’ என்பதன் பொருள்

A) உடம்பு

B) கால்கள்

C) கைகள்

D) தலை

விடை : A) உடம்பு

82. திருஞானசம்பந்தருக்கு தொடர்பில்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

A) உமையான் பொற்கிண்ணத்தில் அளித்த ஞானப்பாவை உண்டார்.

B) 220 தலங்களில் வழிபட்டார்.

C) திராவிட சிசு என ஆதிசங்கரரால் குறிப்பிடப்பட்டார்.

D) அப்பூதியடிகளின் மூத்த மகளை உயிர் பெறச் செய்தார்.

விடை : D) அப்பூதியடிகளின் மூத்த மகளை உயிர் பெறச் செய்தார்.

விளக்கம் :

அப்பூதியடிகளின் மூத்த மகன் அரவந்தீண்டி உயிர் நீத்தபோது நஞ்சு நீங்க ‘ஒன்றுகொலாம்’ என்ற திருப்பதிகத்தைப் பாடி உயிப்பித்தவர் திருநாவுக்கரசர் ஆவார்.

83. உமறுப்புலவர் பாடிய முதுமொழிமாலை என்ற நூலில் உள்ள பாக்கள்

A) 120 பாக்கள்

B) 204 பாக்கள்

C) 80 பாக்கள்

D) 67 பாக்கள்

விடை : C) 80 பாக்கள்

84. சாலை இளந்திரையன் தமிழக அரசின் “பாவேந்தர் விருது” பெற்ற ஆண்டு எது ?

A) 1990

B) 1991

C) 1993

D) 1994

விடை : B) 1991

விளக்கம் :

1991 – இல் நடைபெற்ற பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் சாலை. இளந்திரையனுக்குப் ‘பாவேந்தர் விருது’ வழங்கப்பட்டது.

85. நந்திக்கலம்பகம் யார் மீது பாடப்பெற்றது ?

A) பாண்டிய மன்னன்

B) குலசேகர ஆழ்வார்

C) மூன்றாம் நந்திவர்மன்

D) பல்லவ மன்னன்

விடை : C) மூன்றாம் நந்திவர்மன்

விளக்கம் :

பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டிடைதி தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் நந்திக் கலம்பகம் ஆகும். இது கலம்பக வகையில் இயற்றப்பட்ட முதல் நூலாகும்.

86. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்த நூல்

A) குறுந்தொகை

B) நற்றிணை

C) ஐங்குறுநூறு

D) பதிற்றுப்பத்து

விடை : B) நற்றிணை

விளக்கம் :

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை.

87. சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர் யார் ?

A) உமறுப்புலவர்

B) கம்பர்

C) நாமக்கல் கவிஞர்

D) பாரதியார்

விடை : B) கம்பர்

விளக்கம் :

கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல் ஆவார். செய்ந்நன்றி மறவா இயல்புடைய கம்பர் தம்மை ஆதரித்த வள்ளல் சடையப்பரை, கம்பராமாயணத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் பாடிச் சிறப்பித்துள்ளார்.

88. சரியான தொடரைக் கண்டறிக.

இரட்டைக் காப்பியம் என்பன்

A) மணிமேகலையும், சீவக சிந்தாமணியும்

B) சிலப்பதிகாரமும், வளையாபதியும்

C) சிலப்பதிகாரமும், மணிமேகலையும்

D) மணிமேகலையும், வளையாபதியும்

விடை : C) சிலப்பதிகாரமும், மணிமேகலையும்

விளக்கம் :

சிலப்பதிகாரத்தின் காவிய நாயகனான கோவலனுக்கும் ஆடலரசி மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் வரலாறு குறித்து கூறும் மணிமேகலை என்பதால் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என வழங்கப் பெறுகின்றன.

89. வெள்ளிப்பிடி அருவா

ஏ1 விடலைப் பிள்ளை கை அருவா சொல்லியடிச்ச அருவா – எப்பாடல் வகையைச் சார்ந்தது ?

A) தொழிற்பாடல்

B) விளையாட்டுப் பாடல்

C) ஒப்பாரி பாடல்

D) சடங்குப் பாடல்

விடை : A) தொழிற்பாடல்

90. “யாமறிந்த புலவரிலே இளங்கோவைப் போல்” – என இளங்கோவைப் புகழ்ந்து பாடியவர் யார்?

A) வாணிதாசன்

B)கணியன்

C) பாரதியார்

D) பாரதிதாசன்

விடை : C) பாரதியார்

விளக்கம் :

யாமறிந்த புலவர்களிலே கம்பனைப் போல்

வள்ளுவனைப்போல் இளங்கோவைப்போல்

பூமிதனில் யாங்கணுமே புகழ்ச்சியில்லை – பாரதியார்

91. தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட முதல் தேசிய சமுதாய நாடகம் எது ?

A) கதரின் வெற்றி

B) தேசியக் கொடி

C) தேசப் பக்தி

D) தமிழ்தேசியம்

விடை : A) கதரின் வெற்றி

92. படித்துப் புரிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும்.

2. நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே.

3. நீ தேட வேண்டுவது தொண்டு.

4. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும்.

சரியான விடையாளி :

A) நேரு எழுதிய கடித வரிகள்

B) மு. வ. எழுதிய கடித வரிகள்

C) அண்ணா எழுதிய கடித வரிகள்

D) காந்தி எழுதிய கடித வரிகள்

விடை : B) மு. வ. எழுதிய கடித வரிகள்

93. “வட்ட மேசை மாநாடு நடந்த ஆண்டு”

A) 1915

B) 1917

C) 1930

D) 1932

விடை : (*)

விளக்கம் :

1930 – முதலாவது வட்டமேஜை மாநாடு.

1931 – இரண்டாவது வட்டமேஜை மாநாடு.

1932 – மூன்றாவது வட்டமேஜை மாநாடு.

94. ‘பகுத்தறிவுக் கவிராயர்’ எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்

A) ந. பிச்சமூர்த்தி

B) உடுமலை நாராயணகவி

C) சுரதா

D) வாணிதாசன்

விடை : B) உடுமலை நாராயணகவி

95. பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II

a) எட்வர்டு மை பிரிட்சு 1. ஒருவர் மட்டும் பார்க்கும் படக் கருவி

b) எடிசன் 2. இயக்கப்படும்

c) ஈஸ்ட்மன் 3. ஓடும் குதிரையை வைத்து இயக்கப்பட்ட படம்

d) பிரான்சிஸ் சென்கின்சு 4. படச்சுருள்

குறியீடுகள் :

a) b) c) d)

A) 2 4 3 1

B) 3 1 4 2

C) 2 3 1 4

D) 4 2 3 1

விடை : B) 3 1 4 2

96. பாவாணர், சொற்பிறப்பியல் அகரமுதலில் திட்ட இயக்குநராக பணிஉஅமர்த்தப்பட்ட ஆண்டு

A) 08. 05. 1974

B) 05. 01. 1981

C) 07. 02. 1902

D) 12. 04. 1976

விடை : A) 08. 05. 1974

97. தமிழர் புலம் பெயரக் காரணங்கள்

A) வஞ்சம், அந்நியர் படையெடுப்பு

B) வறுமை, மேலை நாட்டின் மோகம்

C) வாணிகம், தமிழ்நாட்டில் வாழ விருப்பம் இன்மை

D) வாணிகம், வேலைவாய்ப்பு

விடை : D) வாணிகம், வேலைவாய்ப்பு

98. முதன் முதலில் இயக்கப்படமாக எடுக்கப்பட்ட விலங்கு

A) குதிரை

B) நாய்

C) பூனை

D) மான்

விடை : A) குதிரை

விளக்கம் :

1830 – இல் போட்டோ எடுக்கும் முறையைக் கண்டுபிடித்த பின்னர் எட்வர்டு மைபிரிட்ஜ் இயக்கத்தை படம் பிடிக்க முயன்றார். அவர் ஓடும் குதிரையின் இயக்கித்தினை முதன் முதலில் படம் பிடித்தார்.

99. பெரியாரின் பொண் விடுதலைச் சிந்தனைகள் _______ வகைப்படும்.

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

விடை : A) இரண்டு

விளக்கம் :

பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் இரண்டு வகைப்படும். ஒன்று அடிப்படைத் தேவைகள், மற்றொன்று அகற்றப்பட வேண்டியவை.

100. இந்தியாவில் மட்டுமில்லாமல் __________, ___________ ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும், தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கிறது.

A) சிங்கப்பூர், மலேசியா

B) சிங்கப்பூர் , மொரிசியசு

C) சிங்கப்பூர், இலங்கை

D) சிங்கப்பூர், பினாங்கு

விடை : B) சிங்கப்பூர் , மொரிசியசு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!