General Tamil Model Question Paper 25
31. தவறான தொடரைத் தேர்ந்தெடு
அ. சூலை நோயால் ஆட்கொள்ளப் பெற்றவர் அப்பர்
ஆ. மணக்கோலத்தில் ஆட்கொள்ளப் பெற்றவர் சுந்தரர்
இ. திருவெண்ணைய் நல்லூரில் ஆட்கொள்ளப்பெற்றவர் சம்பந்தர்
ஈ. திருப்பெருந்துறையில் ஆட்கொள்ளப்பெற்றவர் மாணிக்கவாசகர்
விடை மற்றும் விளக்கம்
விடை:
இ. திருவெண்ணைய் நல்லூரில் ஆட்கொள்ளப்பெற்றவர் சம்பந்தர்
திருவெண்ணெய் நல்லூரில் ஆட்கொள்ளப் பெற்றவர் சுந்தரர்
32. “இரவினீர்ங் குழலும் அற்றோ என அஃதும் என்னா
வெருவிலான் சலமே முற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்” – இப்பாடல் வரிகளை இயற்றிய ஆசிரியர்
(அ) பாரதியார்
(ஆ) பரஞ்சோதி முனிவர்
(இ) பெருஞ்சித்திரனார்
(ஈ) காரியாசான்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) பரஞ்சோதி முனிவர்
திருவிளையாடற்புராணம்
திருவாலவாய்க் காண்டம் – தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்.
“பரவிநீ வழிபட்டு ஏத்தும் பரஞ்சுடர் திருக்களத்தி
அரவுநீர்ச் சடையார் பாகத்து அமர்ந்தஞா னப்பூங்கோதை
இரவினீர்ங் குழலும் அற்றோ என அஃதும் அற்றே என்னா
வெரவிலான் சலமே முற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்”
– பரஞ்சோதி முனிவர்.
பொருள்: நக்கீரனை நோக்கி, “நீ வழிபடும் பரஞ்சோதியாகிய இறைவன், திருக்களாத்தியில் கோயில் கொண்டவன். பாம்பையும் கங்கையையும் அணிந்த சடையை உடையவன். அவனது இடப்பாகத்தில் எழுந்தருளிய உமையம்மையின் குளிர்ந்த கருங்கூந்தலுக்கும் இதே தன்மை தானோ?” என இறைவன் வினவினார். அதற்கு நக்கீரன், எதிர்வருவதனை எண்ணிச் சிறிதும் அஞ்சாமல் “அக்கூந்தலும் அத்தன்மையுடையதே” எனப் பதிலுறுத்தான்.
33. குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழி எந்த ஆயிரத்தில் உள்ளது?
(அ) முதலாம்
(ஆ) இரண்டாம்
(இ) மூன்றாம்
(ஈ) ஐந்தாம்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) முதலாம்
நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
முதலாயிரத்தில் பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணழ்வார், மதுரகவி ஆழ்வார் ஆகியோரின் பாசுரங்கள் அமைந்துள்ளன.
இரண்டாம் ஆயிரத்தில் திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்கள் மட்டும் அமைந்துள்ளன.
மூன்றாவது ஆயிரத்தில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருவரங்கத்தமுதனார் ஆகியோரின் பாசுரங்கள் மட்டும் அமைந்துள்ளன.
நான்கவாது ஆயிரத்தில் நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டும் அமைந்துள்ளது.
34. “திருவேங்கடத்தந்தாதி” – என்னும் நூலின் ஆசிரியர்
(அ) கம்பர்
(ஆ) குமரகுருபரர்
(இ) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
(ஈ) ஒட்டக்கூத்தர்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
திருவேங்கடத்தந்தாதி என்னும் நூலின் ஆசிரியர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஆவார். இவரின் வேறுபெயர் அழகிய மணவாளதாசர் ஆகும். இவர் சோழ நாட்டிலுள்ள திருமங்கை என்ற ஊரைச் சேர்ந்தவர். காலம் கி.பி. 17ம் நூற்றாண்டு. மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரிடம் அரசு அலுவலராய்ப் பணியாற்றி வந்தார். பின்னர் தன்இறுதிகாலத்தில் திருவரங்கத்தில் இறைத் தொண்டு புரிந்து வந்தார். இவர் பாடிய “அஷ்டப் பிரபந்தம்” என்னும் எட்டு நூல்களுள் “திருவேங்கடத்தந்தாதி” ஒன்றாகும்.
35. “எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்”
இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள இலக்கியத்தின் பெயர்.
(அ) மணிமேகலை
(ஆ) வளையாபதி
(இ) சிலப்பதிகாரம்
(ஈ) குண்டலகேசி
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) சிலப்பதிகாரம்
மதுரைக்காண்டம் – (வழக்குரை காதை)
“எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுடத் தான்தன்
அரும்பெறல் பதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகாரென் பதியே”
கண்ணகியின் கூற்றாக இளங்கோவடிகள் இயற்றியது.
பொருள்: “புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும், தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டு பசுவின் துயரை அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரதிலிட்டு கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த பெரும் புகழுடைய புகார் நகரமே யான் பிறந்த ஊர்”
36. “வேலை தெரியாத தொழிலாளி, தன் கருவின் மீது சீற்றம் கொண்டானாம்” என்ற பழமொழி எம்மொழியைச் சார்ந்தது?
(அ) தமிழ்மொழி
(ஆ) பிரெஞ்ச் மொழி
(இ) ஆங்கில மொழி
(ஈ) குஜராத்திய மொழி
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) ஆங்கில மொழி
தாய்மொழி வழிக்கல்வி பற்றி காந்தியடிகள் எழுதிய கடிதம் ஒன்றில் “வேலை தெரியாத தொழிலாளி, தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம்” என ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு. மொழி, நிறைவு பெற்றதாக இல்லை எனக் குறை சொல்பவர்கள் இந்தத் தொழிலாளியைப் போன்றவர்களே. குறைபாடு மொழியைப் பயன்படுத்துபவர்களிடம் தான் இருக்கிறதே அன்றி மொழியில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
37.. “திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த சான்றோர்” யார்?
(அ) வீரமாமுனிவர்
(ஆ) குணங்குடி மஸ்தான்
(இ) பாரதியார்
(ஈ) ஜி.யூ.போப்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) ஜி.யூ.போப்
ஜி.யூ.போப் அவர்கள் திருக்குறள் மற்றும் திருவாசகம் போன்ற தமிழ் நூல்களை மிக விருப்பமுடன் படித்தார். 1886-இல் திருக்குறளையும் 1900-இல். திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும்போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தை உடன் வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரின் விருப்பம் நிறைவேற்றப்பட்டது.
38. பொருத்தமான தொடரைத் தேர்வு செய்க:
வேலுநாச்சியார் என்பவர்.
(அ) சொக்கநாத நாயக்கரின் மனைவி
(ஆ) ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழகப் பெண்
(இ) தென்னாட்டின் ஜான்சி ராணி
(ஈ) தமது பதினாறாம் வயதில் மரணமடைந்தார்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழகப் பெண்
கி.பி.1722-ல் ஆங்கிலேயர் சிவகங்கையின் மீது படையெடுத்தனர். அப்போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டார். தம் கணவர் மரணமடைந்தாலும் வேலுநாச்சியார் மனம் தளராமல் மைசூர் மன்னர் ஹைதர் அலி கொடுத்து உதவிய 5000 படைவிரர்களுடனும் மருது சகோதரர்களுடனும் படைக்குத் தலைமையேற்றுச் சென்று, ஆங்கிலேயருடன் போர் புரிந்தார். அப்போரில் கணவரைக் கொன்றவர்களை வென்று 1780-ல் சிவகங்கையை மீட்டார்.
சொக்கநாத நாயக்கரின் மனைவி இராணி மீனாட்சி ஆவார் “தென்னாட்டின் ஜான்சி ராணி” எனப் புகழப்பட்டவர் சுதந்திரப்போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் ஆவார். தனது 16-ஆம் அகவையில் மரணமடைந்தவர் தில்லையாடி வள்ளியம்மை ஆவார்.
39. “புளிய மரங்கள் அடர்ந்த பகுதி” – என்ற அடிப்படையில் பெயரிடப்படாத ஊர் எது?
(அ) புளியங்குடி
(ஆ) புளியஞ்சோலை
(இ) புளிப்பேரி
(ஈ) புளியம்பட்டி
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) புளிப்பேரி
வயலும் வயல் சார்ந்த இடங்களுமான மருதநிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆற்றின் கரையிலிருந்த மரங்களின் பெயரையும் ஊர்ப் பெயர்களாக வழங்கி வந்தனர்.
கடம்பமரங்கள் சூழந்த பகுதி கடம்பூர் எனவும் தென்னை மரங்கள் சூழந்த பகுதி தெங்கூர் எனவும் புளியமரங்கள் சூழ்ந்த பகுதி புளியங்குடி, புளியங்குளம், புளியஞ்சோலை, புளியம்பட்டி எனவும் வழங்கப்பட்டன. ஏரிகள் சூழ்ந்த பகுதி வேப்பேரி, சீவலப்பேரி என வழங்கப்பட்டன. எனவே “புளிப்பேரி” தவறானதாகும்
40. “உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்றுகூறியவர்
(அ) திருமூலர்
(ஆ) இராமலிங்கர்
(இ) திரு.விக.
(ஈ) திருவள்ளுவர்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) இராமலிங்கர்
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்”
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்”
– இராமலிங்க அடிகளார்