General Tamil Model Question Paper 19
51. பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார்?
(அ) விதுரன்
(ஆ) துரியோதனன்
(இ) தர்மன்
(ஈ) சகுனி
விடை மற்றும் விளக்கம்
(அ) விதுரன்
விளக்கம்:
திருதராட்டினன் தான் அமைத்த மண்டபத்தினைக் காண, பாண்டவரை அழைத்துவருமாறு தம்பி விதுரனைத் தூது விட்டான். தமையனின் ஆணைப்படி விதுரன் பாண்டவர்களிடம் தூது சென்றார்
52. நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர்
(அ) பூரிக்கோ
(ஆ) பாண்டியன் உக்கிர பெருவழுதி
(இ) பன்னாடு தந்த மாறன் வழுதி
(ஈ) உருத்திரசன்மார்
விடை மற்றும் விளக்கம்
(இ) பன்னாடு தந்த மாறன் வழுதி
விளக்கம்:
நற்றிணை:
நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படுவதும், “நல்” என்னும் அடைமொழி பெற்று போற்றப்படுவதுமாகும்.
பாடல்கள்-400.
பாடிய புலவர்கள்-275 பேர். அடி எல்லை-9-12. பாவகை-ஆசிரியப்பா. தொகுத்தவர்-அறியப்படவில்லை. தொகுப்பித்தவர்-பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. கடவுள் வாழ்த்துப் பாடியவர்-பாரதம் பாடிய பெருந்தேவனார்
53. “———-நெடுநீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்” – இவ்வடிகள் இடம்பெற்ற நூல்
(அ) பெரியபுராணம்
(ஆ) மணிமேகலை
(இ) கம்பராமாயணம்
(ஈ) சீவகசிந்தாமணி
விடை மற்றும் விளக்கம்
(இ) கம்பராமாயணம்
விளக்கம்:
கம்பராமாயணம்-அயோத்தியா காண்டம்-குகப்படலம்.
விடுநனி கடிதென்றான் மெய்உயிர் அனையானும்
முடுகினன் நெடுநாவாய் முரிதிரை நெடுநீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்
இடர்உற மறையோடும் எரியுறு மெழுகானார்.
பொருள்: விரைந்து படகினைச் செலுத்துமாறு குகனுக்கு இராமன் கட்டளையிட்டான். உயிரின் ஏவலுக்கு மெய் செயல்படுவது போலக் குகனும் படகினை விரைவாகச் செலுத்தினான். மடங்கி விழும் அலைகளையுடைய கங்கையாற்றில் இளம் அன்னம் விரைந்து செல்வதனைப் போல் படகு சென்றது. அவர்களின் பிரிவால் அனல்பட்ட மெழுகுபோல் துன்பமுற்று அந்தணர்கள் மனமுருகி நின்றார்கள்.
54. “புலனழுக்கற்ற அந்தணாளன்” – எனப் பாராட்டப்படுபவர்
(அ) ஓதலாந்தையார்
(ஆ) நக்கீரர்
(இ) பரணர்
(ஈ) கபிலர்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) கபிலர்
விளக்கம்:
“புலனழுக்கற்ற அந்தணாளன்” என்று புகழப்பட்டவர் கபிலர் ஆவார். வள்ளல் பாரியின் அவைக்களப் புலவராக விளங்கியவர். “குறிஞ்சிக்கோர் கபிலர்” என்று பாராட்டப்பட்டவர்.
குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறுநூற்றில் குறிஞ்சித்திணைப் பாடல்கள் நூறு, பதிற்றுப்பத்தில் ஏழாம்பத்து, கலித்தொகையில் குறிஞ்சிக் கலியிலுள்ள 29 பாக்கள் முதலியன இவர் இயற்றியவையாகும். இவரது பாட்டு வன்மைக்குப் பழைய இலக்கண உரைகளில் உதாரணமாகக் காட்டப்படும் “கபிலரது பாட்டு” என்னும் தொடரே சான்றாகும்.
“வாய்மொழிக் கபிலன்” என்று நக்கீரரும், “நல்லிசைக் கபிலன்” என்றுபெருங்குன்றூர் கிழாரும். “வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்” என்று பொருந்தில் இளங்கீரனரும், “புலனழுக்கற்ற அந்தணாளன்” என்று மாறோகத்து நப்பசலையாரும் புகழ்ந்துள்ளனர்.
55. பொருந்தாத நூலை எடுத்து எழுதுக
(அ) நான்மணிக்கடிகை
(ஆ) நாலடியார்
(இ) புறநானூறு
(ஈ) இனியவை நாற்பது
விடை மற்றும் விளக்கம்
(இ) புறநானூறு
விளக்கம்:
புறநானூறு- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
ஏனைய மூன்றும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகும்.
56. அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது?
(அ) மலையைப் போன்றது
(ஆ) கடலைப் போன்றது
(இ) வளர்பிறையைப் போன்றது
(ஈ) தேய்பிறையைப் போன்றது
விடை மற்றும் விளக்கம்
(இ) வளர்பிறையைப் போன்றது
விளக்கம்:
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.
- குறள் எண்-782.
பொருள்: அறிவுடையவரின் நட்பு, திங்களின் வளர்பிறை போல் நாள்தோறும் வளரும் தன்மையுடையது. அறிவில்லாதவரின் நட்பு தேய்பிறை போல் நாள்தோறும் தேய்ந்து போகும் தன்மையுடையது
57. பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
அ. ஒழுக்கத்தின் எய்துவர் – 1. செல்வம் நிலைக்காது
ஆ. இழுக்கத்தின் எய்துவர் – 2. மேன்மை
இ. பொறமை உடையவரிடம் – 3. உயர்வு இருக்காது
ஈ. ஒழுக்கமில்லாதவரிடம் – 4. எய்தாப்பழி
அ ஆ இ ஈ
அ. 2 4 1 3
ஆ. 2 3 1 4
இ. 1 4 2 3
ஈ. 3 4 1 2
விடை மற்றும் விளக்கம்
அ. 2 4 1 3
விளக்கம்:
திருக்குறள்:
14-வது அதிகாரம் ஒழுக்கமுடைமை-குறள் எண்:135.
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
பொருள்: பொறமையுள்ளவனிடம் செல்வம் இல்லாதது போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையிலும் உயர்வு இருக்காது.
குறள் எண்:137.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
பொருள்: ஒழுக்கத்தால் அனைவரும் மேன்மை அடைவர். ஒழுக்கக் கேட்டால் அடையக்கூடாத பழியை அடைவர்.
58. வாய்மை எனப்படுவது
(அ) குற்றமோடு பேசுதல்
(ஆ) மற்றவர் வருந்த பேசுதல்
(இ) கடும் சொற்களைப் பேசுதல்
(ஈ) தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
விளக்கம்:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
– குறள் எண் 291.
பொருள்: வாய்மை எனக் கூறப்பெறுவது எது என்றால் அது பிறருக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல் ஆகும்.
59. “கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்”
(அ) சுந்தரகாண்டம்
(ஆ) அயோத்திய காண்டம்
(இ) ஆரண்ய காண்டம்
(ஈ) யுத்த காண்டம்
விடை மற்றும் விளக்கம்
(அ) சுந்தரகாண்டம்
விளக்கம்:
கம்பராமாயணத்தில் ஐந்தாம் காண்டமாக விளங்குவது சுந்தரகாண்டம் இக்காண்டமே காப்பியத்தின் மணிமுடியாக விளங்குகிறது என்பர். இப்பகுதி முழுவதும் சிறிய திருவடியாகிய அனுமனின் செயல்களே சொல்லப்படுகின்றன. அனுமனுக்குச் “சுந்தரன்” என்னும் பெயரும் உண்டு என்பதால் அனுமனின் தலைமைப் பண்புகள் வீறு பெற்று விளங்கும் இக்காண்டம் சுந்தர காண்டம் எனலாயிற்று.
60. “நூறாசிரியம்” என்னும் கவிதை நூலின் ஆசிரியர்
(அ) கவிஞர் மீரா
(ஆ) கவிஞர் சுரதா
(இ) கவிஞர் பெருஞ்சித்திரனார்
(ஈ) மு.மேத்தா
விடை மற்றும் விளக்கம்
(இ) கவிஞர் பெருஞ்சித்திரனார்
விளக்கம்:
“நூறாசிரியம்” என்ற கவிதை நூலின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார். இவரது இயற்பெயர் துரை.மாணிக்கம். இவர் இயற்றிய பிற நூல்களாவன, கொய்யாக்கனி, ஐயை, பாவியக் கொத்து, எண்சுவை எண்பது, மகபுகு வஞ்சி, அறுபருவத்திருக்கூத்து, கனிச்சாறு, கற்பனை ஊற்று, உலகியல், பள்ளிப்பறவைகள்.