General Tamil Model Question Paper 19
11. “தொண்டர்சீர் பரவுவார்” என்று போற்றப்படுபவர் யார்?
(அ) அப்பூதியடிகள்
(ஆ) திருநாவுக்கரசர்
(இ) சேக்கிழார்
(ஈ) திருஞானசம்பந்தர்
விடை மற்றும் விளக்கம்
(இ) சேக்கிழார்
விளக்கம்:
செயற்கரிய செயல்களைச் செய்து பெருமை பெற்ற சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் நூலான பெரியபுராணத்தை இயற்றியமையால் சேக்கிழார் தொண்டர்சீர் பரவுவார் எனப் போற்றப்பட்டார்.
12. யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?
(அ) கவுந்தியடிகள்
(ஆ) மாதவி
(இ) அறவணவடிகள்
(ஈ) கண்ணகி
விடை மற்றும் விளக்கம்
சரியான விடை: காயசண்டிகையின் அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை பிச்சையேற்றாள். “காயசண்டிகை” என்ற விடை கொள்குறிகளில் கொடுக்கப்படவில்லை.
விளக்கம்:
மணிமேகலை-பாத்திரங்கொண்டு பிச்சை புக்க காதை
பாடல்-8.
மணமனை மறுகின், மாதவி ஈன்ற
அணிமலர்ப் பூங்கொம்பு, “அகமலி உவகையிற்,
பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம்
பிச்சை ஏற்றல் பெருந்தக வுடைத்து”
பொருள்: மணங்கொண்ட மனையிடத்தாக மாதவியாள் கோவலனோடு வாழ்ந்து பெற்றெடுத்த, அழகிய மலர்களையுடைய பூங்கொம்பு போன்றவளாகிய மணிமேகலை, தன் உள்ளத்தே பெருகும் மகிழ்ச்சியினைக் கொண்டவளாக, “பத்தினிப் பெண்கள் பண்புடனே இடுகின்ற பிச்சையினை முதற்கண் அவ்விடத்தே ஏற்றல் பெரிதும் பெருமையுடயதாகும்” என்றாள்.
பாடல்-9
“குளனணி தாமரைக் கொழுமலர் நாப்பண்
ஒருதனி ஓங்கிய திருமலர் போன்று,
வான்தரு கற்பின் மனையுறை மகளிரில்-
தான்தனி யோங்கிய தகைமையள் அன்றோ
ஆதிரை நல்லாள்! அவள்மனை யிம்மனை;
நீ புகல் வேண்டும், நேரிழை! என்றனள்.
பொருள்: அதனைக் கேட்டதும், அங்கே நின்றிருந்த காயசண்டிகை, குளத்திற்கு அழகுடன் திகழ்கின்ற தாமரையின் கொழுமையான மலர்கள் பலவற்றிற்கும் நடுவிலே, ஒப்பற்ற தனிச் சிறப்புடையதாக உயரமுடன் விளங்கும் ஓர் அழகிய மலரினைப் போன்று மழைவளம் தரும் கற்புச் செல்வியரான இல்லுறை மகளிருள், தான் தனித்த புகழுடைய தன்மையன் ஆதிரையாள் அல்லவோ! அவள் இருக்கும் மனை இதுவேயாகும். நேரிழையே நீ இதன்கண் புகுவாய்” என்றனள்.
ஆதிரை பிச்சையிட்ட காதை பாடல்-24.
“ஆங்ஙனம் ஆகிய ஆதிரை கையால்,
பூங்கொடி நல்லாய்! பிச்சை பெறு’கென,
மனையகம் புகுந்து மணிமே கலைதான்
புனையா ஓவியம் போல நிற்றலும் –
பொருள்: “அப்படிப்பட்டவளாகிய ஆதிரையின் கையினாலே, பூங்கொடி போன்ற நல்லவளே, நீ பிச்சை பெறுவாயாக” என்றனள் காயசண்டிகை. மணிமேகலையும், ஆதிரையின் இல்லத்தே புகுந்து, எழுதாத ஓவியம் போல நின்றனள்.
சரியான விடை: காயசண்டிகையின் அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை பிச்சையேற்றாள். “காயசண்டிகை” என்ற விடை கொள்குறிகளில் கொடுக்கப்படவில்லை.
13. ‘தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்”
என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்.
(அ) கம்பர்
(ஆ) இளங்கோவடிகள்
(இ) திருத்தக்க தேவர்
(ஈ) காரியாசான்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) இளங்கோவடிகள்
விளக்கம்:
“தண்டமிழ் ஆசான்”, “சாத்தான் நன்னூற்புலவன்” என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர் இளங்கோவடிகள்.
14. கம்பரைப் புரந்தவர் யார்?
(அ) ஒட்டக்கூத்தர்
(ஆ) சடையப்பவள்ளல்
(இ) சீதக்காதி
(ஈ) சந்திரன் சுவர்க்கி
விடை மற்றும் விளக்கம்
(ஆ) சடையப்பவள்ளல்
விளக்கம்:
கம்பரைப் புரந்தவர் திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல் ஆவார். கம்பர் தம்மை ஆதிரித்த வள்ளல் சடையப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் கம்பராமாயணத்தில் பாடியுள்ளார்.
15. ஜி.யூ.போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழி பெயர்த்தார்?
(அ) பிரெஞ்சு
(ஆ) கிரேக்கம்
(இ) ஆங்கிலம்
(ஈ) ஜெர்மன்
விடை மற்றும் விளக்கம்
(இ) ஆங்கிலம்
விளக்கம்:
ஜியார்ஜ் யூக்ளோ போப் (ஜி.யூ.போப்) திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்
ஜி.யூ.போப் தமது 80-வது அகவையில் கி.பி.1900-ஆம் ஆண்டில் திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார்
16. நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு
(அ) 2004
(ஆ) 2003
(இ) 2005
(ஈ) 2002
விடை மற்றும் விளக்கம்
(அ) 2004
விளக்கம்:
தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டி, கி.பி.1901-ல் தொடங்கி எடுத்த முயற்சிகள் கி.பி.2004 வரை தொடர்ந்தன. அதன் பயனாக கி.பி.2004-இல் நடுவணரசு கமிழைச் செம்மொழியாக அறிவித்தது.
17. குரூக், மால்தோ, பிராகுயி என்பன
(அ) தென்திராவிட மொழிகள்
(ஆ) நடுத்திராவிட மொழிகள்
(இ) வடதிராவிட மொழிகள்
(ஈ) மேலைநாட்டு மொழிகள்
விடை மற்றும் விளக்கம்
(இ) வடதிராவிட மொழிகள்
விளக்கம்:
தென்திராவிட மொழிகள்: தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா.
நடுத்திராவிட மொழிகள்: தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூலி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கு, பெங்கோ, முண்டா.
வடதிராவிட மொழிகள்: குரூக், மால்தோ, பிராகுயி. இவற்றுள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் “திராவிட பெருமொழிகள்” எனப்படும்.
18. “ஓர் இலட்சிய சமூகம் – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது” என்றவர்.
(அ) பெரியார்
(ஆ) அண்ணல் அம்பேத்கர்
(இ) காந்தியடிகள்
(ஈ) திரு.வி.க.
விடை மற்றும் விளக்கம்
(ஆ) அண்ணல் அம்பேத்கர்
19. திரு.வி.கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது?
(அ) முருகன் அல்லது அழகு
(ஆ) சித்திரக்கவி
(இ) உரிமை வேட்டல்
(ஈ) தமிழ்ச்சோலை
விடை மற்றும் விளக்கம்
(ஆ) சித்திரக்கவி
விளக்கம்:
சித்திரக்கவி என்ற நூலின் ஆசிரியர் பரிதிமாற்கலைஞர்
20. பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக
(அ) சூசையப்பர் தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர்
(ஆ) திருமந்திரம் சைவத்திருமுறைகளில் பத்தாவது திருமுறை
(இ) சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
(ஈ) மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்
விளக்கம்:
“மதங்க சூளாமணி” என்பது ஒரு நாடகத்தமிழ் நூலாகும். இந்நூலை இயற்றியவர் விபுலானந்த சுவாமிகள். இந்நூல் 3 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
உறுப்பியல்: சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையினால் பெறப்பட்ட அழிந்துபோன நாடகத் தமிழ் நூல் சூத்திரங்கள் சிலவற்றை ஆதூரமாகக் கொண்டு தமிழ்நாடாக இலக்கியத்தை உரைக்கிறார்.
எடுத்துக்காட்டியல்: ஷேக்ஸ்பியரின் 12 நாடகங்களை ஆய்வு செய்து விளக்கியுள்ளார்.
ஒழிபியல்: தனஞ்சயனார் வடமொழியில் இயற்றிய நாடக இலக்கண நூலான தசரூபத்தின் முடிவுகளைத் தொகுத்துக் கூறியுள்ளார்.