General Tamil Model Question Paper 17
31. “தென்தமிழ் தெய்வப்பரணி” என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் யார்?
(அ) ஒட்டக்கூத்தர்
(ஆ) பரணர்
(இ) குமரகுருபரர்
(ஈ) பிசிராந்தையார்
விடை மற்றும் விளக்கம்
(அ) ஒட்டக்கூத்தர்
32. 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஊர் எது?
(அ) கீழார்வெளி
(ஆ) ஆதிச்சநல்லூர்
(இ) மதுரை
(ஈ) திருவண்ணாமலை
விடை மற்றும் விளக்கம்
(ஆ) ஆதிச்சநல்லூர்
விளக்கம்:
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளிலிருந்து கி.மு.300 முதல் கி.பி.300 வரையிலான காலகட்டத்தைச் சார்ந்த மக்கள் இறந்தோரின் உடலுடன் தங்கத்தினால் ஆன ஆபரணங்கள், செம்பினாலான ஆண், பெண் தெய்வ உருவங்கள், இரும்பினாலான கத்திகள், விளக்குத் தாங்கிகள் போன்றவற்றையும் சேர்ந்து புதைத்தது தெரிய வருகிறது.
33. “எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்”
சிறுபாணாற்றுப்படை வரி கடையெழுவள்ளல்களுக்குப் பிறகு வள்ளன்மையைக் கொண்டவனாக யாரைக் கூறுகிறது?
(அ) நச்சினார்க்கினியர்
(ஆ) நல்லியக்கோடன்
(இ) கரிகாலன்
(ஈ) நக்கீரர்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) நல்லியக்கோடன்
விளக்கம்:
எழுசமங் கடந்த எழு உறழ் திணிதோள்
எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்
விரிகடல் வேலிவியலகம் விளங்க
ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள்
பொருள்:
கடையெழு வள்ளல்களும் ஏற்று நடத்திய கொடையாகிய பாரத்தை உலகம் விளங்கும்படி தான் ஒருவனே மேற்கொண்டு தாங்கிய வலிமைமிக்க முயற்சியை உடையவன் நல்லியக்கோடன்.
34. நீலமணி மிடற்(று) ஒருவன் போல மன்னுக பெரும நீயே
– இவ்வாறு ஒளவையாரால் பாடப்பெற்ற மன்னர் யார்?
(அ) குமணன்
(ஆ) கோப்பெருஞ் சோழன்
(இ) சோழன் கரிகாற் பெருவளத்தான்
(ஈ) அதியமான் நெடுமான் அஞ்சி
விடை மற்றும் விளக்கம்
(ஈ) அதியமான் நெடுமான் அஞ்சி
விளக்கம்:
“வலம் படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம் படக் கடந்த கழல் தொடித் தடக்கை,
ஆர் கலி நறவின், அதியர் கோமான்!
போர் அடு திருவின் பொலந் தார் அஞ்சி!
பால் புரை பிறை நுதற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும்! நீயே, தொல் நிலைப்
பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின் அகத்து அடக்கு,
சாதல் நீங்க, எமக்கு ஈந்தனையே!
– ஒளவையார்.
நூல்-புறநானூறு.
பாடல் எண்-91.
திணை-பாடாண் திணை.
துறை-வாழ்த்தியல்.
ஒளவையார் அதியமான் நெடுமான் அஞ்சியை வாழ்த்தியது:
பொருள்:
“வெற்றியைப் பொருந்திய தப்பாத வாளை ஏந்திப் பகைவர் போர்க்களத்தில் அழியுமாறு வென்றவனும் கழலுமாறு அமைத்த வீரவளை பொருந்திய பெரிய கைகளையுடையவனும் மிக்க ஆரவாரம் செய்யும் மதுவினையுடையவனுமான அதியர் கோமானே!
நீ தொன்மையான பெரிய மலையின் பிளவிடத்தில் அரிதான உச்சியில் சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனியைக் கொண்டாய்; அதனைப் பெறுவதற்கு அரியது என்று கருதாமல் அக்கனியின் அரும்பயனாக அமைந்த தன்மையை எனக்குக் கூறாமல் நின் மனத்து அடக்கினாய்; அவ்வரிய கனியை, இறப்பு என்னை விட்டு அகலுமாறு எனக்கு அளித்தாய். பகைவரைப் போரில் வெல்லும் வீரமாகிய செல்வமும் பொன்னாற் செய்த மாலையும் உடைய அஞ்சியே! பெரும! நீ பால் போன்று பிறையணிந்த நெற்றியுடன் பொலிவுற்ற திருமுடியையும் நீலமணி போலும் கரிய கழுத்தினையும் உடைய ஒருவனாகிய சிவபெருமான் போல நிலை பொருவாயாக!”
35. பெண்களின் பருவங்களில் மங்கைப் பருவத்திற்குரிய வயது வரம்பு
(அ) 14-19
(ஆ) 12-13
(இ) 20-25
(ஈ) 13-14
விடை மற்றும் விளக்கம்
(ஆ) 12-13
விளக்கம்:
ஏழு பருவங்களைச் சார்ந்த பெண்கள்:
பருவங்கள் வயது
பேதை 5-7
பெதும்பை 8-11
மங்கை 12-13
மடந்தை 14-19
அரிவை 20-25
தெரிவை 26-32
பேரிளம் பெண் 33-40
36.கீழ்க்கண்டவற்றுள் பாஞ்சாலி சபதத்திற்குரிய உட்பிரிவுகளைத் தேர்க:
(அ) 92 படலங்கள், 5027 பாடல்கள்
(ஆ) 2 சருக்கங்கள், 2330 பாடல்கள்
(இ) 5 சருக்கங்கள், 412 பாடல்கள்
(ஈ) 10 சருக்கங்கள், 894 பாடல்கள்
விடை மற்றும் விளக்கம்
(இ) 5 சருக்கங்கள், 412 பாடல்கள்
விளக்கம்:
பாரதியாரின் முப்பெரும் படைப்புகளில் “பாஞ்சாலி சபதம்” ஒன்றாகும்.
இது சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச சருக்கம் என்று ஐந்து சருக்கங்களையும் நானூற்றுப் பன்னிரண்டு பாடல்களையும் கொண்ட குறுங்காப்பியமாகும்.
37. கடற்பயணத்தின் சிறப்பை – அதை விளக்கும் நூலோடு பொருத்துக:
அ.விளைந்து முதிர்ந்த விழுமுத்து – 1.பட்டினப்பாலை
ஆ. பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி – 2. புறநானூறு
இ. காற்றின் போக்கையறிந்து கலம் செலுத்தினர் – 3. மதுரைக்காஞ்சி
ஈ. கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவது போல்
நாவாய் அசைந்தது – 4. அகநானூறு
அ ஆ இ ஈ
அ. 4 3 2 1
ஆ. 3 4 2 1
இ. 1 2 4 3
ஈ. 3 4 1 2
விடை மற்றும் விளக்கம்
ஆ. 3 4 2 1
38. “திவ்விய கவி” என்றழைக்கப்படுபவர் யார்?
(அ) குலசேகர ஆழ்வார்
(ஆ) ஆண்டாள்
(இ) பிள்ளளைப்பெருமாள் ஐயங்கார்
(ஈ) பெரியாழ்வார்
விடை மற்றும் விளக்கம்
(இ) பிள்ளளைப்பெருமாள் ஐயங்கார்
விளக்கம்:
“திவ்விய கவி” என்றழைக்கப்படுபவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஆவார். இவரின் மற்றொரு பெயர் அழகிய மணவாளதாசர். இவரது காலம் கி.பி.17-ஆம் நூற்றாண்டாகும். மன்னர் திருமலை நாயக்கரிடம் அரசு அலுவலராய்ப் பணியாற்றி வந்தவர். இவர் எழுதிய அஷ்டப்பிரபந்தம் என்று அழைக்கப்பட்ட நூல்களாவன. திருவேங்கடத்து அந்தாதி, திருவரங்கத்து அந்தாதி, திருவரங்கத்து மாலை, திருவரங்கக் கலம்பகம், திருவேங்கடமாலை, அழகர் அந்தாதி, அரங்கநாயகர் ஊசல், நூற்றியெட்டு திருப்பதி அந்தாதி.
39. “சிறைத் தண்டனைக்காக நீ வருந்துகிறாயா?” என்று கேட்டார் காந்தியடிகள். அப்பெண் “இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார்” என்று கூறினார். அப்பெண் யார்?
(அ) வேலு நாச்சியார்
(ஆ) அஞ்சலையம்மாள்
(இ) தில்லையாடி வள்ளியம்மை
(ஈ) அம்புஜத்தம்மாள்
விடை மற்றும் விளக்கம்
(இ) தில்லையாடி வள்ளியம்மை
விளக்கம்:
தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின வாழ்வுரிமையை மீட்க காந்தியடிகள் போரடினார். அப்பொழுது நிகழ்த்திய வீரம் செறிந்த உரை, வள்ளியம்மையை இளமையிலேயே (16ஆம்அகவை) அறப்போரில் ஈடுபடக் காரணமாய் அமைந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட வள்ளியம்மை சிறை சென்று சொல்லவொண்ணா இன்னல்களை அடைந்தார். உயிருக்குப் போராடிய நிலையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட வள்ளியம்மையைச் சந்திக்க காந்தியடிகள் சென்றார். அப்பொழுது, “சிறைத்தண்டனைக்காக நீ வருந்துகிறாயா?” எனக் கேட்டார். அதற்கு வள்ளியம்மை, “இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார். இந்தியர்களுக்காக எத்தகு இன்னல்களையும் ஏற்பேன். என் இன்னுயிரையும் தருவேன்” என்று கூறினார். அதைக் கேட்ட காந்தியடிகள் உள்ளம் நெகிழ்ந்தார்.
40. “உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்
(அ) பாம்பாட்டிச் சித்தர்
(ஆ) குதம்பைச் சித்தர்
(இ) அழுகுணிச் சித்தர்
(ஈ) கடுவெளிச் சித்தர்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) கடுவெளிச் சித்தர்