General Tamil Model Question Paper 17
21. உரிய சொல்லால் நிரப்புக: செய்க பொருளைச் —— செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்
(அ) செய்யார்
(ஆ) செய்வார்
(இ) சென்று
(ஈ) செறுநர்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) செறுநர்
விளக்கம்:
“செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரியது இல்.” நூல்-திருக்குறள். பிரிவு-பொருட்பால். அதிகாரம்-பொருள் செயல்வகை. இயல்-கூழியல். குறள் எண்-759. பொருள்: ஒருவன் எப்போதும் பொருளைத் தேடி ஈட்ட வேண்டும். அவனுடைய பகைவரின் செருக்கை அழிக்கவல்ல, அதைவிடக் கூர்மையான வாள் வேறெதுவும் இல்லை.
22. இசைப்பண்ணும், இசையமைத்தவர் பெயரும் குறிக்கப்பட்டுள்ள தமிழிலக்கியம்
(அ) நற்றிணை
(ஆ) புறநானூறு
(இ) ஐங்குறுநூறு
(ஈ) பரிபாடல்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) பரிபாடல்
விளக்கம்:
எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடலில் ஒவ்வொரு பாடலின் கீழும் அப்பாடலின் ஆசிரியர் பெயரும் அதற்கு இசையமைத்தவர் பெயரும், அதற்குரிய யாழ், செந்துறை, தூக்கு, வண்ணம் முதலியனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. பாடல்களை ஆக்கிய புலவர்களின் பெயர்களும் எந்தப் பண்ணில் பாட வேண்டும் என்ற விவரங்களும் பண்ணமைத்த இசையறிஞர்களின் பெயர்களும் அந்தப் பாடல்களோடு கிடைக்கப் பெறுகின்றன.
23. “நெடியோன் குன்றம்”- எனப்பெறுவது
(அ) இமயமலை
(ஆ) திருவேங்கடமலை
(இ) கொல்லிமலை
(ஈ) அழகர்மலை
விடை மற்றும் விளக்கம்
(ஆ) திருவேங்கடமலை
விளக்கம்:
“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நலநாட்டு” – சிலப்பதிகாரம், வேனிற்காதை (1-2) நெடியோன் குன்றம்-திருவேங்கடம் (திருப்பதிமலை). தொடியோள்-குமரி (கன்னியாகுமரி). பௌவம்-கடல். தமிழக எல்லைகளாக வடக்கில் திருவேங்கட மலையையும் தெற்கில் கன்னியாகுமரி கடலையும் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.
24. “உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” – இப்பாடல் இடம்பெறும் நூல்
(அ) அகநானூறு
(ஆ) புறநானூறு
(இ) நற்றிணை
(ஈ) திருக்குறள்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) புறநானூறு
விளக்கம்:
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே! பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும் சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும், ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும், “மூத்தோன் வருக” என்னாது, அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே” புறநானூறு-பாடல் எண் 183. பாடியவர்-ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் திணை-பொதுவியல். துறை-பொருண்மொழிக் காஞ்சி. பொருள்-பல உதவிகள் செய்தும், பொருள்கள் பல கொடுத்தும் கல்வி கற்பது நன்றே. ஒரு வயிற்றில் உதித்த உடன் பிறப்புகளுள்ளும் கற்றவனையே தாயின் மனமும் மிக விரும்பும். ஒரு குடியில் பிறந்த சகோதரர்கள் பலர் இருப்பினும் அவர்களுள் மூத்தோனை வருக என்று என்னாது. அவர்களுள் கற்றவரையே அரசும் மதிக்கும். நான்கு வகை சாதிகளிலும் கீழ்ப்பால் ஒருவன் கல்வி கற்றால், மேற்பால் ஒருவனும் அவனை மதித்து நடப்பான்.
25. “நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” – இதனைக் கூறியவர்.
(அ) சீத்தலைச் சாத்தனார்
(ஆ) புகழேந்திப் புலவர்
(இ) இளங்கோவடிகள்
(ஈ) இராமலிங்க அடிகள்
விடை மற்றும் விளக்கம்
(இ) இளங்கோவடிகள்
விளக்கம்:
கோவலன் கண்ணகியின் வரலாற்றை சீத்தலைச் சாத்தனார் மூலம் அறிந்து கொண்ட இளங்கோவடிகள் “சிலப்பதிகாரம்” என்ற பெயரில் அந்த வரலாற்றை இயற்றப் போவதாகக் கூறிய கூற்று,
“அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்
கூற்றாவதும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டு மென்பதும்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்”
26. “சிங்கவல்லி” என்ற சொல் எச்செடியைக் குறிக்கும்?
(அ) குப்பமேனி
(ஆ) துளசி
(இ) கரிசலாங்கண்ணி
(ஈ) தூதுவளை
விடை மற்றும் விளக்கம்
(ஈ) தூதுவளை
27. “தாதுகு சோலை தோறும் சண்பகக் காடுதோறும்”
இவ்வடிகளில் “தாது” என்பதன் பொருள்
(அ) மலர்
(ஆ) மகரந்தம்
(இ) குளம்
(ஈ) சோலை
விடை மற்றும் விளக்கம்
(ஆ) மகரந்தம்
விளக்கம்:
“தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே!
– கம்பர்.
நூல்-கம்பராமாயணம்.
பெரும்பிரிவு-பாலகாண்டம்.
உட்பிரிவு-ஆற்றுப்படலம்.
பொருள்: சரயு ஆறு மகரந்தப் பொடிகளைச் சிந்தும் சோலைகளை வளப்படுத்தியும், சண்பக வனங்களைக் கடந்தும், அரும்புகள் விரிந்திருகின்ற குளங்களை நிரப்பியும், புது மணல் மிக்க நீர்நிலைகள் வழியாகவும் குருக்கத்தி வேலியிட்ட கமுகுத் தோட்டங்களில் பாய்ந்தும், வயல்களைச் சொழிக்கச் செய்தும் பாய்ந்து செல்வது, உடலினுள் உயிர்புகுந்து பரவுவதனைப் போன்று விளங்குகிறது.
தாது-மகரந்தம்.
போது-மலர்,
பூகம்-கமுகு மரம்(பாக்குமரம்).
28. “அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே”
இவ்வடியிலுள்ள “அல்” என்பதன் எதிர்ச்சொல்லைக்கண்டறிக
(அ) காலை
(ஆ) மாலை
(இ) இரவு
(ஈ) பகல்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) பகல்
விளக்கம்:
“அல்” என்பதன் பொருள் இரவு. “அல்” என்பதன் எதிர்ச்சொல் பகல்
29. “பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி:
அதுவே நம்மொழி” என்று கூறியவர்.
(அ) பாரதியார்
(ஆ) தேவநேயப் பாவாணர்
(இ) பரணர்
(ஈ) மறைமலையடிகள்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) தேவநேயப் பாவாணர்
30. கீழ்க்கண்டவற்றுள் கரிசிலாங்கண்ணியின் சிறப்புப் பெயர் யாது?
(அ) கீழ்வாய் நெல்லி
(ஆ) குமரி
(இ) பிருங்கராசம்
(ஈ) ஞானப்பச்சிலை
விடை மற்றும் விளக்கம்
(இ) பிருங்கராசம்
விளக்கம்:
கீழ்வாய்நெல்லி-கீழாநெல்லி.
குமரி-சோற்றுக்கற்றாழை.
சிங்கவல்லி, ஞானப்பச்சிலை-தூதுவளை.
கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்- கரிசலாங்கண்ணி