General Tamil Model Question Paper 15
21. “தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்பெறுபவர்
(அ) சுரதா
(ஆ) சிற்பி
(ஈ) பாரதிதாசன்
(ஈ) வாணிதாசன்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) வாணிதாசன்
விளக்கம்:
வாணிதாசன்
இயற்பெயர்-எத்திராசலு (எ) அரங்கசாமி.
காலம்: 22.07.1915-07.08.1974.
அறிந்த மொழிகள்-தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு
பணி-34 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
இயற்றிய நூல்கள்-தமிழச்சி, கொடிமுல்லை, எழிலோவியம், பொங்கற்பரிசு, இன்ப இலக்கியம், தீர்த்தயாத்திரை.
சிறப்புப் பெயர்கள்-கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் “வேர்ட்ஸ் வொர்த்”.
சிறப்புகள்:சாகித்ய அகாதெமி, வெளியிட்ட “தமிழ் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளீயீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுத்தமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
இயற்கைப் புனைவு இவருடைய பாடல்களில் சிறந்து விளங்குவதால், இவர் தமிழகத்தின் “வேர்ட்ஸ்வொர்த்” எனப் பாராட்டப் பெற்றார்.
இவருடைய பாடல்கள் உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. “தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டுள்ளார். பிரரெஞ்சுக் குடியரசுத் தலைவர் இவருக்கு “செவாலியர்” விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
22. அதியமான் நெடுமானஞ்சியின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்.
(அ) வெள்ளிவீதியார்
(ஆ) ஒளவையார்
(இ) காக்கைப்பாடினியார்
(ஈ) நக்கண்ணையார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) ஒளவையார்
விளக்கம்:
அதியமான் நெடுமானஞ்சி தகடூரை ஆண்ட குறுநில மன்னன். கடையெழு வள்ளல்களில் ஒருவன். இம்மன்னனின் அரசவைக்கு தம் புலமையால் பெருமை சேர்த்தவர் ஒளவையார். உண்டாரை நெடுங்காலம் வாழ வைக்கும் நெல்லிக்கனியை மலைப் பிளவுகளையெல்லாம் தாண்டிச் சென்று, கொண்டு வந்து அதனை ஒளவை உண்ணுமாறு கொடுத்தவன் அதியமான்.
23. கீழே தரப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை?
அ. குறுந்தொகைச் செய்யுட்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளையும், அதிக அளவாக ஏழு அடிகளையும் கொண்டு இருக்கின்றன.
ஆ. குறுந்தொகைச் செய்யுட்களைத் தொகுத்தவர் பூரிக்கோ.
இ. குறுந்தொகைக்கு நக்கீர தேவநாயனார் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியுள்ளார்.
ஈ, குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன.
(அ) ஆ, இ சரியற்றவை
(ஆ) அ, ஈ சரியற்றவை
(இ) அ, இ சரியற்றவை
(ஈ) இ, ஈ சரியற்றவை
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) அ, இ சரியற்றவை
விளக்கம்:
குறுந்தொகை என்ற நூலுக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. இந்நூலின் பாடல்கள் நான்கடி சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடையவை. ஆனால் ஒன்பதடியில் இருபாடல்கள் (307, 391) அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்து நீங்கலாக இந்நூலில் 401 பாடல்கள் உள்ளன.
24. “புலவரேறு” என்று சிறப்பிக்கப் பெற்றவர்
(அ) நக்கண்ணையார்
(ஆ) நாமக்கல் கவிஞர்
(இ) வரத நஞ்சையப்பிள்ளை
(ஈ) கபிலர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) வரத நஞ்சையப்பிள்ளை
விளக்கம்:
அ.வரதநஞ்சையப் பிள்ளை.
காலம்-01.09.1877 முதல் 11.07.1956 வரை.
சிறப்பு:தமிழ், வடமொழி, தெலுங்கு ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். கணிதம், ஜோதிடம் ஆகிய கலைகளில் வல்லவராயிருந்தார் “புலவரேறு” என்று சிறப்பிக்கப்பட்டார்.
இயற்றிய நூல்கள்: தமிழரசி குறவஞ்சி, தமிழ்த்தாய் திருப்பணி, கருணீக புராணம்.
விருது-கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் “தங்கத்தோடா” என்ற விருதினைப் பெற்றவர்.
25. “தோடுடைய செவியன், விடமுண்ட கண்டன்”
என்ற தொடரால் குறிக்கப்படுபவர்
(அ) உமையொரு பாகனாம் சிவபெருமான்
(ஆ) குழலூதும் கோவிந்தனாம் கண்ணன்
(இ) மராமரம் ஏழினைத் துளைத்த இராமன்
(ஈ) மாமரம் தடிந்த தணிகை வேலன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) உமையொரு பாகனாம் சிவபெருமான்
விளக்கம்:
திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருபிரமபுரம் (சீர்காழி) தோவரத் திருப்பதிகம், முதலாம் திருமுறை 1-ஆவது திருப்பதிகம்.
“தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசி என் உள்ளங்கவர் கள்வன்”
பொருள்: காதில் தோடு அணிந்து எருதின்மேல் ஏறி வெண்மையான மதியை சூடி, சுடுகாட்டில் உள்ள சாம்பலை உடல் எல்லாம் பூசி என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்.
இரண்டாம் திருமுறை 1-ஆவது பாடல்.
வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்,
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறுநல்ல நல்ல வைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
பொருள்: மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும் விடம் உண்ணட கண்டனும் ஆகிய சிவபிரான் திங்கள், கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்தவனாய் மகிழ்ச்சியுற்ற நிலையில் வீணையை மீட்டிக் கொண்டு என் உளம் புகுந்து தங்கியுள்ள காரணத்தால், ஞாயிறு, திங்கள் முதலான ஒன்பான் கோள்களும் குற்றமற்ற நலத்தைச் செய்வனவாம். அவை அடியார்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும்.
26. கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
அ. பழந்தமிழரின் போர் வாழ்வு, மன்னர்களின் அறச்செயல், வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு, கல்விப்பெருமை, புலவரது பெருமிதம் மக்களின் நாகரிகம், பண்பாடு பற்றியறியப் புறநானூற்றுச் செய்யுட்கள் உதவுகின்றன.
ஆ. புற வாழ்வு பற்றிய நானூறு செய்யுட்களின் தொகுப்பு, புறநானூறு.
இ. புறநூனூற்றில் அதிக செய்யுட்களைப் பாடியவர் ஒளவையார்
ஈ. அறியாது முரசு கட்டிலில் தூங்கிய பெண்ணைக் கொன்றமையால் “பெண் கொலை புரிந்த மன்னன்” என்று தூற்றப்படும் செய்தி சொல்லப்பட்டுள்ளது.
(அ) அ, இ, ஈ சரியானவை
(ஆ) அ, ஆ, ஈ சரியானவை
(இ) அ, ஆ, இ சரியானவை
(ஈ) ஈ, இ, ஆ சரியானவை
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) அ, ஆ, இ சரியானவை
27. பொருத்துக:
நூல் நூலாசிரியர்
(அ) பெருமாள் திருமொழி – 1. காரைக்கால் அம்மையார்
(ஆ) திருத்தொண்டத் தொகை – 2. ஆண்டாள்
(இ) அற்புதத் திருவந்தாதி – 3. சுந்தரர்
(ஈ) நாச்சியார் திருமொழி – 4. குலசேகர ஆழ்வார்
அ ஆ இ ஈ
(அ) 4 2 3 1
(ஆ) 3 4 1 2
(இ) 2 1 4 3
(ஈ) 4 3 1 2
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) 4 3 1 2
28. கீழ்க்காணும் நூல்களுள் இலக்கண நூல் அல்லாதது
(அ) தொல்காப்பியம்
(ஆ) தேம்பாவணி
(இ) தண்டியலங்காரம்
(ஈ) வீரசோழியம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) தேம்பாவணி
விளக்கம்:
தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர். இந்நூல் இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையான சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட இலக்கிய நூலாகும்.
29. கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க.
அ. ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு, மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்.
ஆ. பாம்பாடடிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள்
இ. எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்கள் சித்தர்கள்.
ஈ. இரும்பைப் பொன்னாக்கும் இரசவாத வித்தை கற்று உலகில் செல்வராக வாழச் சித்தர்கள் அவாவினர்
விடை மற்றும் விளக்கம்
விடை: ஈ. இரும்பைப் பொன்னாக்கும் இரசவாத வித்தை கற்று உலகில் செல்வராக வாழச் சித்தர்கள் அவாவினர்
30. “கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே “கற்றவர்களின் சிறப்பைப் போற்றும் இவ்வடிகள் இடம்பெறும் நூல்.
(அ) அகநானூறு
(ஆ) புறநானூறு
(இ) நற்றிணை
(ஈ) கலித்தொகை
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) புறநானூறு
விளக்கம்:
புறநானூறு 183-வது பாடல்
உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனம் அவன்கண் படுமே.
பாடியவர்-ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.
திணை-பொதுவியல்.
துறை-பொருண்மொழிக்காஞ்சி.
பொருள்: ஆசிரியருக்குத் துன்பம் நேரும் போது உதவ வேண்டும். அவருக்கு நிறைந்த செல்வம் கொடுக்க வேண்டும். அவரைப் பின்பற்றி நடப்பதற்கு தயங்கக் கூடாது. இப்படிக் கல்வி கற்பது முறையாகும். இது பெரிதும் நன்மை பயக்கும். ஏனென்றால், தன் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புக் கொண்ட பலரில் சிறப்புப் பெற்றிருப்பவனிடம் தாயின் மனமும் திரிந்து செல்லும். ஒரே குடியில் பிறந்த பலரில் மூத்தவனை வருக என அழைக்காமல் அவர்களில் அறிவுடையவன் வழியில் அரசாட்சியும் நடைபெறும். பிறப்பால் நான்கு பிரிவுகள் உண்டு. அவற்றில் கீழ்க்குலத்தில் பிறந்த ஒருவன் கற்றிருந்தால் மேற்குலத்தில் பிறந்தவனும் அவனிடம் அடக்கமாவான்.