Samacheer NotesTnpsc

வங்கியியல் Notes 12th Economics Lesson 6 Notes in Tamil

12th Economics Lesson 6 Notes in Tamil

6. வங்கியியல்

“வணிக வங்கிகள் வாணிபத்திற்கான குறுகியகால கடனை அளித்தல், மற்றும் கடன் உருவாக்கம் செய்யும் நிறுவனங்கள் ஆகும்”

  • கல்பர்ட்சன் (Culbertson)

அறிமுகம் (Introduction)

பொருளாதார நடவடிக்கைகளான வியாபாரம், வாணிபம், விவசாயம் ஆகியவற்றிற்கு தேவைப்படும் நிதி உயிர்வாழ இரத்தம் தேவைப்படுவதைப் போன்றது. வங்கிகள் வைப்புகளை ஏற்றுக் கொள்ளுதல், கடன்களை வழங்குதல் ஆகிய அடிப்படை நிதிநடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. நவீன வாணிபத்தின் முதுகெலும்பாக வங்கித்துறை செயல்படுகிறது. நாட்டின் மேம்பாட்டிற்கு வங்கியமைப்பு மிகமுக்கிய பங்களிப்பினை செய்துவருகிறது. நாடுகளில் நிதிநிலைத் தன்மையை கருத்திற்கொண்டு வங்கிகளின் செயல்பாடுகள் நெறிப்படுத்தப்படுகின்றது.

மைய வங்கியின் தோற்ற வரலாறு (History of Central Bank)

1956-ல் நிறுவப்பட்ட ஒரு தனியார் வங்கியிலிருந்து தோன்றியதுதான் உலகின் முதல் மைய வங்கியான ஸ்வீடன் நாட்டு ரிக்ஸ் வங்கி. இம்மைய வங்கி 1897-ஆம் ஆண்டு பணத்தை வெளியிடுவதற்கான முழு உரிமையை பெற்றது. ஆனால், வங்கிக் கலையின் அடிப்படையில் 1864ல் தோற்றுவிக்கப்பட்டு பணத்தை வெளியிட்ட முதல் மைய வங்கி இங்கிலாந்து வங்கியாகும் (Bank of England).

1920-ஆம் ஆண்டு பிரஸ்ஸல்ஸ் நகரில் கூட்டப்பட்ட பன்னாட்டு நிதிய மாநாட்டில் (International Finance Conference) எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 1921 முதல் 1954-ஆம் ஆண்டுவரையான காலகட்டத்தில் பெரும்பாலான நாடுகளில் மையவங்கி அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. தென் ஆப்பிரிக்க ரிசர்வ் வங்கி (1921), சீன மைய வங்கி (1928), நியூசிலாந்து ரிசர்வ் வங்கி (1934), இந்திய ரிசர்வ் வங்கி (1934), சிலோன் மைய வங்கி (1950) மற்றும் இஸ்ரேல் மைய வங்கி (1954) போன்றவை அந்தந்த நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட மைய வங்கிகளில் சில.

இந்திய வங்கிகளின் வரலாறு

  • ஹிந்துஸ்தான் வங்கி (Bank of Hindustan) இந்தியாவின் முதல் வங்கி (1770) (வெள்ளையர் ஆட்சியில்)
  • இந்தியாவில் உள்ள வங்கிகள் அமைப்பு பிரசிடென்சி வங்கிகளால் (Presidency Banks) கட்டுப்படுத்தப்பட்டும் ஆதிக்கம் செலுத்தப்பட்டும் வந்தது.

மூன்று பிரசிடென்சி வங்கிகள் இருந்தன.

எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டன.

(1921) இந்திய இம்பீரியல் வங்கி இந்திய ஸ்டேட் வங்கி

(Imperial Bank of India) (State Bank of India SBI)

வணிக வங்கிகள் (Commercial Banks)

வணிக வங்கிகள் மக்களிடமிருந்து வைப்புக்களைப் பெற்று, பேரளவில் உற்பத்தி செய்வோர், பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடனை அளிக்கும் ஒரு நிதி அமைப்பு ஆகும். நீர்மைத்தன்மையை தக்கவைக்கும் பொருட்டு வணிக வங்கிகள் பெரும்பாலும் நீண்டகால கடன்களை அளிப்பதில்லை.

வணிக வங்கியின் பணிகள் (Functions of Commercial Banks)

வணிக வங்கிகள் இலாப நோக்கம் உடையவை. அதனால் அவைகள் வைப்புக்களைப் பெற்று முதலீட்டுக்கான கடன்களை அளிக்கின்றன. வணிக வங்கிகளின் பணிகளை முதன்மை பணிகள் மற்றும் இரண்டாம் நிலை பணிகள் என இருபெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தின் மூலம் அவைகளை நாம் அறியலாம்.

அ) முதன்மைப் பணிகள் (Primary Functions)

  1. வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் (Accepting Deposits)

பொதுமக்களால் செலுத்தப்படும் வைப்புக்களை (deposits) ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். இது வங்கி வணிகத்திற்கான முக்கிய நிதியாதாரம் ஆகும். பொது வைப்புக்களை இரு வகைகளாக பிரிக்கலாம் முறையே கேட்பு வைப்புகள் மற்றும் கால வைப்புகள் ஆகும்.

i) கேட்பு வைப்புகள் (Demand Deposits) இவை வங்கிகளில் வைப்புக்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர் முன்னறிவிப்பின்றி எப்பொழுது வேண்டுமானாலும் பணத்தை தனது கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் ஒரு வைப்பாகும். பனணம் பெறும் படிவம், காசோலை, அல்லது தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மூலம் எப்பொழுது அவருக்குத் தேவைப்படுகிறதோ அப்பொழுது பணத்தை தனது வைப்பிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். இவ்வகை வைப்புகள் மேலும் இருவகையாக பிரிக்கப்படுகின்றன. இவ்வகை வைப்புக்கள் சேமிப்பு வங்கிக் கணக்கு (Savings Bank Account) மற்றும் நடப்புக் கணக்கு (Current Account) என இருவகைகளாக வங்கிகளில் நடைமுறையில் உள்ளது.

ii) கால வைப்புகள் (Time Deposits) இவை ஒரு குறிப்பிட்ட காலவரையறை வரை வங்கிகளிடமிருந்து மீளப் பெறப்படாமல் இருக்கும் வைப்புகளாகும். வங்கிகள் கால வைப்புக்களுக்கு கூடுதலான வட்டியை வழங்குகின்றன. இவ்வகை வைப்புக்களை வங்கிகளிடமிருந்து மீளப்பெற குறிப்பிட்ட கால இடைவெளியும், எழுத்துப்பூர்வமான முன்னறிவிப்பும் தேவைப்படுகிறது. நிலை வைப்பு (Fixed Deposit) மற்றும் தொடர்வைப்பு (Recurring Deposit) ஆகியன கால வைப்பு வகைகளில் முக்கிய வகைகளாகும்.

2.  கடன் வழங்கல் (Lending Loans)

தனி நபர்கள் மற்றும் வாணிபத்திற்கான கடன்களை வங்கிகள் வழங்குகின்றன. வணிக வங்கிகள் ரொக்கக் கடன், மாற்றுச் சீட்டு தள்ளுபடி, மிகைப்பற்று ஆகிய முறைகளில் கடன்களை வழங்குகின்றன.

ஆ) இரண்டாம் நிலை பணிகள் (Secondary Functions)

இரண்டாம் நிலை பணிகளை முகமைப் பணிகள், பொதுப் பயன்பாட்டுப்பணிகள், இதரப் பணிகள் என மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.

  1. முகமைப்பணிகள் (Agency Function)

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முகவராக (Agent) இருந்து செய்யும் பணிகளை முகமைப்பணிகள் எனப்படுகிறது.

i) காசோலைகளை பணமாக்குதல்: தன் வாடிக்கையாளர்களுக்காக அவர்களுக்கு வரும் காசோலைகள், மாற்றுச் சீட்டுக்கள் போன்றவற்றை வங்கிகள் தீர்வகத்தின் மூலம் வசூல் செய்து கொடுக்கின்றன.

ii) வருமானத்தை பெறுதல்: வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வரவேண்டிய இலாப ஈவு, ஓய்வூதியம், சம்பளம், வாடகை, வட்டி ஆகியவற்றினை வசூலித்து தருகின்றன. வாடிக்கையாளருக்கான வருமானம் வசூலிக்கப்பட்டதை பற்றுச்சீட்டின் மூலம் வங்கிகள் தெரியப்படுத்துகிறது.

iii) செலவுகளை செலுத்துகிறது: வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களின் பல்வேறு செலுத்துக் கடமைகளை செய்கின்றது. தொலைபேசி கட்டணம், காப்பீட்டு பிரிமியம், கல்விக் கட்டணம், வாடகை செலுத்துதல் போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்காக செய்கிறது. இச்செலவுகளைச் செய்யும் பொது செலவுச் சீட்டின் மூலம் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துகின்றது.

2. பொதுப் பயன்பாட்டு பணிகள் (General Utility Functions)

இது வங்கிகள் தன் வாடிக்கையாளர்களுக்காக சில கூடுதல் பயன்பாடுகளை உருவாக்கும் நோக்கில் செய்யும் பணிகளைப் பொதுப் பயன்பாட்டு பணிகள் என்கிறோம். அவைகள்:

i) பாதுகாப்பு பெட்டக வசதி: நகைகள், பங்குகள், கடன் பத்திரங்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்களை பாதுகாக்க, பெட்டக வசதியை வணிக வங்கிகள் தருகின்றன. திருட்டு, இழப்புக்களையும் தவிர்க்க இவ்வசதி உதவுகிறது. பெட்டகத்தில் உள்ள பொருட்களுக்கு வங்கி பொறுப்பல்ல.

ii) பயணக் காசோலைகளை வழங்குதல்: பயணக் காசோலைகளை வழங்குவதன் மூலம் வெளிநாட்டு பயணத்தின்போது பணப்பாதுகாப்பினை வழங்குகிறது.

iii) அந்நியச் செலாவணியைக் கையாளுதல்: ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடும் வணிகர்களுக்கு வணிக வங்கிகள் அந்நிய செலாவணி வசதியைச் செய்து தருகிறது. ஆனால், இதற்காக நாட்டின் மைய வங்கியிடம் வணிகவங்கிகள் உயரிய அனுமதியினை பெற்றிருக்க வேண்டும்.

3. நிதிமாற்றுதல்: ஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிக்கு நிதியை மாற்றுவதாகும். வரைவு காசோலைகள், தொலைபேசி மற்றும் மின்னணு பரிமாற்றங்கள் மூலம் நிதி மாற்றப்படுகிறது.

4. கடன் உறுதியளிப்பு கடிதம் (Letter of Credit): வாடிக்கையாளரின் கடன் நம்பகத் தன்மையை சான்றளிக்கும் விதமாக வணிக வங்கிகள் கடன் உறுதியளிப்பு கடிதங்களை வழங்குகின்றன.

i) பத்திரங்களுக்கு எழுத்துறுதி வழங்குதல் (Under-writing of Securities) :

வணிக வங்கிகள் மேலும் பத்திரங்களுக்கான எழுத்துறுதி வழங்கும் பணியினை செய்கிறது. பொதுமக்கள் வங்கிகளின்மீது முழு நம்பிக்கையை வைத்திருப்பதால் அவைகள் எழுத்துறுதி வழங்கிய பத்திரங்களை வாங்குவதில் தயக்கம் ஏதும் இருக்காது.

ii) மின்னணு வங்கி: வணிக வங்கிகள் மின்னணு முறையை பின்பற்றுவதால் அவைகள் பற்று அட்டை, கடன் அட்டை மற்றும் இணைய வங்கி மூலம் விரைவான பணப்பரிவத்தணைகள் மேற்கொள்ள உதவுகின்றன.

இ) இதர பணிகள் (Other Functions)

i) பண அளிப்பு

வணிக வங்கியின் முக்கிய பணிகளில் ஒன்று பணப்புழக்க வேகத்தை அதிகரிப்பதன் மூலம் பண அளிப்பை அதிகரித்தல் ஆகும். உதாரணமாக வங்கி ஒருவருக்கு ₹5 இலட்சம் கடன் வழங்கும் போது கடன் பெறுபவர் பெயரில் உள்ள கேட்பு வைப்பு கணக்கில் வரவு வைக்கப்படுகின்றது. இங்கு பணம் ரொக்கமாகச் செலுத்தப்படவில்லை என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே அதிகமாக பணம் அச்சடிக்கப்படாமல் பண அளிப்பு அதிகரிக்கின்றது.

ii) கடன் உருவாக்கம்

கடன் உருவாக்கம் வணிக வங்கிகளின் பணிகளில் மிகச் சிறந்த ஒன்றாகும். இது மேற்சொன்ன பண அளிப்பினை அதிகரிக்கும் பணியை ஒட்டி அமைந்ததாகும். கடன் உருவாக்கம் என்பது கடன்களையும், முன்பண அளிப்பினையும் அதிகரிக்கும் ஒரு செயல். மொத்த பண அளிப்பில் கடன் பணத்தின் அளவினை அதிகரிப்பது கடன் உருவாக்கம் ஆகும்.

iii) புள்ளிவிவரங்களை திரட்டுதல்

இந்திய ரிசர்வ் வங்கியை போன்றே, வணிக வங்கிகளும் வணிகம், தொழில், விவசாயம், நிதி போன்ற அடிப்படை துறைகளின் புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இவைகளின் அடிப்படையில் தனது வாடிக்கையாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தங்களது ஆலோசனைகளை வணிக வங்கிகள் வழங்குகிறது.

வணிக வங்கிகளின் கடன் உருவாக்க நுட்பம் (The Technique of Credit Creatiuon)

வங்கிகளின் கடன் உருவாக்கம் என்பது மிக முக்கிய செயல் ஆகும். வங்கிக் கடன் என்பது வாடிக்கையாளர்களின் வைப்புகளிலிருந்து, தேவைப்படுவோருக்கு அவர்களின் விண்ணப்பம் மற்றும் ஒப்பந்தத்தின் போல் கடன் மற்றும் முன்பணம் கொடுப்பது ஆகும். வங்கிகள் வழங்கும் கடன்கள் பொருளாதாரத்தில் நிகர பண அளிப்பினை அதிகப்படுத்தும். சுருக்கமாக சொன்னால் வங்கிகளின் கடனளிப்பு பணத்தை உருவாக்கும், அதே கடன்கள் வாங்கியோரால் திருப்பிச் செலுத்தப்படும் பொழுது கூடுதலாக உருவான பணம் மறைந்து போகும். இதை ஒருசிலர் மாயை (illusion) என்றும் கூறுகின்றனர்.

வணிக வங்கிகள் கேட்பு வைப்புக்களின் அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். அதிக அளவு கடன்களை அதிகரிக்க முடியும். வணிக வங்கிகள் தங்களின் கடன் அல்லது முன்பணம் அளிக்கும் முறை மூலமாக அல்லது சொத்துக்களை வாங்கும் தன்மைகள் மூலமாகவும் தேவை வைப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடிகிறது. இச்சக்தி வங்கிகள் வைப்புக்களை புதிய வைப்புக்களை உருவாக்குவதன் மூலம் சாத்தியமாகிறது. இது எப்படி சாத்தியம் பின் வரும் பகுதி நமக்கு விளங்குகிறது. அதற்கு முன்னர் வணிக வங்கிகள் உருவாக்கும் வைப்பு முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல்நிலை/ செயலற்ற வைப்புக்கள் மற்றும் பெறப்படும்/ செயல்படும் வைப்புக்கள்

நவீன வங்கிகளால் உருவாக்கப்படும் வைப்புக்கள் இருவகைப்படும். அவைகள் முதல்நிலை அல்லது செயலற்ற வைப்புகள் (Primary or Passive Deposits) > மற்றும் பெறப்படும் அல்லது செயல்படும் வைப்புகள் (Derived or Active Deposits) ஆகும்.

ஒரு வாடிக்கையாளர் தனது ரொக்கப் பணத்தினை வங்கியில் செலுத்துகிறார் எனில் அவரது பெயரில் பற்று வைக்கப்படும். இது முதல்நிலை வைப்பு அல்லது செயல்படா வைப்பு என அழைக்கப்படுகிறது.

ஒருவருக்கு வழங்கப்படும் கடன், ரொக்கமாக கையில் கொடுக்கப்படாமல் அவர் கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு செலுத்தப்படும் தொகை பெறப்பட்ட வைப்பு அல்லது செயல்படும் வைப்பு எனப்படுகிறது.

கடன் உருவாக்கம் என்பது கடன் மற்றும் முன்பண பெருக்கத்தினை குறிக்கும். வழங்கப்படும் ஒவ்வொரு கடனும் புதிய வைப்பினை உருவாக்குகிறது. முதல்நிலை வைப்புக்களை பெறும் பொழுது அப்பணம் முழுமையுமே வணிக வங்கிகள் கடனாக அளித்திட முடியாது. மைய வங்கி அறிவுறுத்தியிருக்கும் குறைந்தபட்ச விகித அளவுக்கு குறையாமல் வணிக வங்கிகள் ரொக்க இருப்பாக வைத்திருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு வணிக வங்கிகள் 20 சதவிகித பணத்தினை வைத்துக்கொள்ள மைய வங்கி அறிவுறுத்தியிருக்கும். இச்சூழ்நிலையில் கடன் உருவாக்கத்தைப் பற்றி அறிவோம்.

  1. வங்கிகள் ரொக்க கையிருப்பு விகிதத்தை விட அதிகமாக ரொக்கப் பணம் வைத்திருக்க மாட்டார்கள். அவ்வாறு இருந்தால் அந்தப் பணத்தை கடனாக வழங்கி விடுவார்கள்.
  2. எல்லா மக்களும் ஒரே நேரத்தில் பணத்தை எடுக்கமாட்டார்கள். அதனால் குறைந்தபட்ச ரொக்க கையிருப்பு காலியாகி விடாது.

மேற்கண்ட அடிப்படியில் வணிக வங்கிகளின் கடன் உருவாக்கம் எவ்வாறு நிகழ்கிறது என உதாரணத்துடன் காண்போம். ஒருவர் வங்கியில் ₹1,000த்தினை செலுத்துவதாக எடுத்துக்கொள்வோம். அவ்வாறு செலுத்தப்படும் பணம், வாடிக்கையாளரின் கணக்கில் சேர்க்கப்பட்டு முதல்நிலை வைப்பாக இருக்கும். வங்கியின் மொத்த பண இருப்பில், அதாவது வங்கியின் ரொக்க பாதுகாப்பு பெட்டகத்தில் ₹1,000ம் அதிகரிக்கும். இந்த நிலையில் பொருளாதாரத்தில் உள்ள பண அளிப்பு அதிகரிக்காது. ஏனெனில் ரொக்கமாக வங்கியில் செலுத்தப்பட்ட ₹1,000 வாடிக்கையாளரின் வங்கிப்பணமாக உள்ளது.

மைய வங்கியின் அறிவுறுத்தலின்படி 20 சதவிகித குறைந்தபட்ச ரொக்க இருப்பான ₹200ஐ இருப்பில் வைக்க வேண்டிய தொகை போக ₹800 வங்கியில் கடன்கொடுக்க தயார் நிலையில் இருக்கும். இரண்டாவது நபர் கடன்கேட்டு விண்ணப்பிக்கும் பொழுது அவருக்கு ₹800 கடனாக அளிக்கப்படும். இங்கு கவனிக்கப்பட வேண்டியது, அவர் கேட்கும் கடன் ரொக்கமாக அளிக்கப்படாமல் அவரது கணக்கில் வைப்பாக வைக்கப்படும். இதுவே தருவிக்கப்பட்ட வைப்பு (Derived Deposit) ஆகும். அவரும், உடனே பணம் முழுவதையும் கணக்கிலிருந்து எடுக்கமாட்டார். அந்த தருவிக்கப்பட்ட வைப்பிலிருந்து ₹800ல் 20 சதவிகிதம் போக ₹640 மீண்டும் கடன்கொடுக்க தயார் நிலையில் இருக்கும். மூன்றாவதாக ஒரு நஒஅர், கடன் கேட்டு விண்ணப்பிக்கும் பொழுது, அவருக்கு ₹640ஐ கடனாக வழங்கி அவரது கணக்கில் வைப்பாக அளிப்பார்கள். அந்த தருவிக்கப்பட்ட வைப்பான ₹640ல் குறைந்தபட்ச தொகையான ₹128 போக, ₹512 கடன்வழங்க தயார் நிலையில் இருக்கும். இவ்வாறு புதிய தருவிக்கப்பட்ட வைப்புகளும், கடன் வழங்குதலும் தொடர்ந்து நடைபெறும்.

வணிக வங்கியின் வைப்புகளின் அளவு ₹1000 + 800 +640+512 + ……… என்று செல்லும். மொத்த வைப்புகளின் அளவு இறுதியாக ₹5000 த்தினை அடையும். எவ்வாறெனில், பண பெருக்கியின் அளவு (Money Multiplier) = 1/20 x 100 = 5 ஆகும். ஆகவே, மொத்த கடன் உருவாக்கம் 1000 x 5 = ₹5000 ஆகும். இந்த கடன் உருவாக்க நடைமுறையின் காரணமாக ₹1000 என்ற வைப்பு ₹5000ஆக பெருகுகின்றது என்பதனை அறிந்து கொண்டோம்.

முதன்மை வைப்புக்கள்

  • முதன்மை வைப்புக்களைக் கொண்டே வங்கிகள் கடன்களும் முன்பணங்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.
  • இதற்கான முயற்சிகளை வாடிக்கையாளர்களே செய்கின்றனர். இதில் வங்கிகளின் பங்கு செயலற்றது.
  • எனவே இந்த வைப்புக்கள் செயலற்ற வைப்புகள் செயலற்ற வைப்புக்கள் எனப்படுகின்றது.

பொருளாதார வளர்ச்சியில் வணிக வங்கிகளின் பங்கு

  1. மூலதன திரட்சி

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததான மூலதன திரட்சியில் வங்கிகள் முக்கிய பங்குவகிக்கின்றன. வணிக வங்கியானது தனது வங்கிப் பிரிவுகளின் (branches) கீழ் பரவலாக செயல்பட்டு பொதுமக்களின் சேமிப்பினை வைப்புகளாக திரட்சி அவைகளை உற்பத்தி நோக்கத்திற்காக கடன்களாக வழங்குகின்றன. இன்றைய நாட்களில் வங்கிகளின் சேமிப்புகளை திரட்டுவதில் பல கவர்ச்சிகரமான திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்தி, அவர்களிடமுள்ள சேமிப்புகளை முறைப்படுத்தப்பட்ட பணச்சந்தைக்கு கொண்டுவருகின்றன. இவ்வாறு கொண்டுவரப்படவில்லையெனில், அப்பணம் பொதுமக்களிடமே பயன்படுத்தப்படாமல் இருந்தாலோ, அல்லது தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்யப்பட்டிருந்தாலோ அவைகள் உற்பத்திக்கு பயன்பட்டிருக்காது.

2. கடன் உருவாக்கம்

வங்கிகளின் கடன் உருவாக்கம் மூலம் முன்னெற்றத் திட்டங்களுக்கு அதிக நிதியை பெற்றுத் தருகிறது. இதன் மூலம் உற்பத்தி, வேலைவாய்ப்பு, வருமானம், விற்பனை ஆகியவை ஏற்றம் பெற்று விரைவான பொருளாதார வளர்ச்சியை கொண்டு வருகின்றன.

3. அதிக உற்பத்தித்திறனை கொண்ட முதலீட்டை நோக்கி பணத்தை முறைப்படுத்துதல்

வங்கிகள் உற்பத்தி நோக்கில் பணத்தினை முதலீடு செய்கிறது. வெறுமனே வங்கிகள் மூலதன ஆக்கத்தை மட்டும் செய்யவில்லை. ஒரு துறையில் செய்யப்பட்ட முதலீட்டின் உற்பத்தித் திறன் குறைவாக இருந்தால் அத்துறைக்கு வழங்கப்படும் முதலீட்டுக் கடனை குறைத்துக்கொண்டு, அதிக உற்பத்தி திறன் கொண்ட துறைகளுக்கு கூடுதலாக முதலீட்டுக்கான கடனை மடைமாற்றம் செய்கிறது. இதனால் பொருளாதாரத்தில் முதலீட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி தீறன் கூடுகிறது. இவ்வகையில் வணிகவங்கிகள் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுகின்றன.

4. சரியான தொழிற்சாலைகளை ஊக்குவித்தல்

வங்கிகள் சரியான தொழிலையும், சரியான நபர்களையும் தெரிந்தெடுத்து கடன் வழங்குவதால் தொழிற்பெருக்கம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் உதவுகின்றன. எந்த பொருளுக்கு அதிக தேவை உள்ளதோ அந்த பொருளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு கடன்களையும், முன்பணங்களையும் வழங்குகிறது. ஆகவே, உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தி முறைகளில் நவீனத்துவத்தைப் புகுத்தி நாட்டின் தேசிய வருவாய் உயர்வதற்கு வழி செய்கின்றனர். சில சமயங்களில் முக்கியத்துவம் குறைந்த துறைகளுக்கும் கடன் வழங்குகிறது. இதனால் அமெரிக்காவில் 2007-08ம் ஆண்டுகளில் ஏற்பட்டது போன்ற பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும்.

5. கடனை பணமாக்குதல்

வணிகத்தில் எழும் குறிப்பிட்ட காலக் கடன்களை இடையிலேயே ரொக்கமாக்கித் தருவதன் மூலம் உற்பத்தி மற்றும் வணிக நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்படாமல் வணிக வங்கிகள் பாதுகாக்கிறது. வணிகத்தை அதிகப்படுத்த கடன் அடிப்படையில் விற்பனை மேற்கொள்வதைத் தவிர்க்க முடியாது. ஆனால் கடன் விற்பனை முதலீட்டை முடக்கிடும் செயலைச் செய்கின்றது. இதனால் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. கடன் விற்பனையில் கடனுக்கான உத்திரவாதமாக மாற்றுச்சீட்டுக்களை (Bills of Exchange) வங்கிகள் கழிவு செய்வதால், வர்த்தக நிறுவனங்கள் எந்த இடையூறுமின்றி பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர முடிகின்றது.

6. அரசிற்கு நிதி வழங்குதல்

குறைவளர்ச்சி நாடுகளில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் பணியினை அரசு மேற்கொள்கிறது. இதற்கு அதிக அளவு நிதி அரசிற்குத் தேவைப்படுகிறது. வணிக வங்கிகள் அரசிற்கு நீண்டகால கடன்களை மற்றும் குறுகியகால கடன்களை அரசு பத்திரங்களை ஏற்பதன் வாயிலாக வழங்குகிறது. இந்திய ரிசர்வ் வங்கி 2018-19 ஆண்டில் தனது உபரி நிதியிலிருந்து மத்திய அரசுக்கு ₹68,000 கோடி வழங்கியுள்ளது.

7. வேலைவாய்ப்பினை உருவாக்குதல்

வங்கிகள் தேசியமயமாக்கலுக்குப் பின் வங்கித்துறை பெருமளவுக்கு வளர்ந்துள்ளது. நிறைய எண்ணிக்கையில் கிளைகள் திறக்கபட்டு கடன் பெருக்கத்தினைச் செய்வதால் வேலைவாய்ப்புகள் உருவாகிறது.

8. வங்கிகள் தொழில்முனைவினை ஊக்கப்படுத்துதல்

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அண்மைக் காலமாக வணிக வங்கிகள் தொழில்முனைவினை ஊக்கப்படுத்தி வருகிறது. தொழில்முனைவு உருவாக்குவது மிகவும் சிக்கலான ஒரு நடைமுறை ஆகும். திட்ட எண்ணங்கள் உருவாவது, கண்டறிந்த திட்டங்களில் உள்ளூர்ச் சூழ்நிலையுடன் ஒத்துப்போகும் சரியான திட்டத்தினை தேர்ந்தெடுப்பது, நன்கு தயாரிக்கப்பட்ட திட்டத்தினை மேற்கொள்ள தொழில்முனைவோரை ஊக்கப்படுத்துவது, மற்றும் தொழில்நுட்ப, மேலாண்மை தொடர்பான ஆலோசனைகளை வழங்குவது என்பன தொழில் முனைவு மேம்பாட்டு நிலைகளாகும்.

தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானதாகவும் மற்றும் பொருளாதார ரீதியாக பயனளிக்கத்தக்க மிகச்சிறந்த திட்டங்களுக்கு வங்கிகள் 100 சதவிகித கடன்களை அளிக்கின்றன. ஆகவே, வணிக வங்கிகள் தொழில்முனைவுக்கும் நாட்டின் மேம்பாட்டிற்கும் தங்களின் சீரிய பணியினை செய்து வருகின்றன.

வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (Non-Banking Financial Institutions _ NBFIs)

ஒரு வங்கியல்லா நிதி நிறுவனம் (Non-bankinh Financial Institution – NBFI) அல்லது வங்கியல்லா நிதி நிறுமம் (Non-banking Financial Company – NBFC) என்பது ஒரு நிதி நிறுவனம் ஆகும். அது முழு வங்கிக்கான உரிமம் கொண்டதும் அல்ல, மற்றும் மைய வங்கியால் கண்காணிக்கப்படுவதும் இல்லை.

வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் முழுமையான வங்கிப் பணிகளைச் செய்யாமல் மற்ற நிதி பரிமாற்றங்களை மேற்கொள்கின்றது. அவைகள் வைப்புக்களைப் பெற்றுக்கொண்டு கடன்களை வழங்குகின்றது. மக்களின் சேமிப்பைத் திரட்டி முதலீட்டு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கின்றது. சுருங்கச்சொன்னால் அவை கடன் பெற்று கடன் வழங்குகின்றது. அவை பண அங்காடியிலும் மூலதன அங்காடியிலும் செயல்படுகின்றன.

ஒரு வங்கியல்லா நிதி நிறுவனம் இருவகைப்படும்: பங்குச்சந்தை மற்றும் இதர நிதி நிறுவனங்கள். இரண்டாவது வகையில் வருவது நிதி நிறுவனங்கள், நிதி கழகங்கள், சீட்டு நிறுவனங்கள், கட்டிட சங்கங்கள், முதல்நிலை பங்கு வெளியீட்டு நிறுவனங்கள், முதலீட்டு அமைப்புகள், யூனிட் டிரஸ்ட் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்.

மைய வங்கி (Central Bank)

மைய வங்கி, ரிசர்வ் வங்கி அல்லது பணவியல் அதிகார அமைப்பு என்பது அரசின் பணம், பண அளிப்பு மற்ரும் வட்டிவிகிதம் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனம் ஆகும். மேலும், நாட்டிலுள்ள வணிக வங்கிகளை மேற்பார்வையிடுவதும் இதன் பணியாகும்.

மைய வங்கியின் பணிகள் (Functions of Central Bank)

ஒவ்வொரு நாட்டின் மைய வங்கி அந்த நாட்டின் தலைமை வங்கியாகும். இந்தியாவின் மைய வங்கி இந்திய ரிசர்வ் வங்கி என அழைக்கப்படுகிறது. இது பணவியல் கொள்கை மூலம், பண அளிப்பினை மேலாண்மை செய்கிறது. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934ன்படி, ஏப்ரல் 1-ஆம் தேதி 1935 முதல் ரிசர்வ் வங்கி தனது பணியினை துவங்கியது. துவக்கத்தில் வங்கியின் மூலதனம் ₹100 மதிப்பு கொண்ட சம பங்குகளாக பிரிக்கப்பட்டு தனியார் வசம் இருந்தன. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, குறிப்பாக ஜனவரி 1, 1949 அன்று இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடைமையாக்கப்பட்டது. பின்வருவன இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள் ஆகும்.

  1. பண அதிகார அமைப்பு (Monetary Authority)

இது இந்தியாவில் பண அளிப்பினை கட்டுப்படுத்துவதன் மூலம் அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தினை நிலைப்படுத்துதல், சாதகமான செலுத்து நிலையைப் பேணுதல், நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்துதல், பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், மற்றும் வங்கியமைப்பை உறுதியாக்குதல் ஆகியவற்றை செய்கிறது.

2. காகிதப்பண வெளியீடு

இந்தியாவில் நாணயங்கள் மற்றும் ஒரு ரூபாய் காகிதப்பணத்தைத் தவிர அனைத்து வகையான காகிதப் பணத்தை வெளியிடுவதில் முற்றுரிமை பெற்ற நிறுவனம் ரிசர்வ் வங்கியாகும். மேலும், பண மற்றும் கடன் அளவுகளை இது மேலாண்மை செய்கிறது. புழக்கத்தில் உள்ள போலியான பணத்தினை கட்டுப்படுத்தும் பொறுப்பும் மைய வங்கிக்கு உண்டு.

3. வங்கி உரிமங்கள் வழங்குபவர்

வங்கிகள் முறைப்படுத்துதல் சட்டம், பிரிவு 22ன் படி ஒவ்வொரு வணிக வங்கியும் இந்தியாவில் வங்கித்தொழில் செய்ய மைய வங்கியிடம் உரிமம் பெற வேண்டியது அவசியம் ஆகும். இப்பணியையும் ரிசர்வ் வங்கி செய்கின்றது.

4. அரசுக்கான வங்கி

இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான வங்கி ஆகும். அரசுகளுக்கு குறுகியகால கடன்களை தருகிறது. இது அரசு கடன்கள், அரசு கடன் தொடர்பான சேவைகள், அரசு கடன் பத்திரங்கள்களை உருவாக்கி விற்பனை செய்வது ஆகிய பணிகளைச் செய்கின்றது. மேலும், அரசுக்கு வங்கி மற்றும் நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி

வரலாறு

  • 1934ம் ஆண்டு சட்ட விதிப்படி 1935ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அமைக்கப்பட்டது.
  • ஜனவரி 1ம் தேதி 1949ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டு மத்திய அரசுக்குச் சொந்தமானது.
  • 1937ல் தலைமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.
  • ஓஸ்போர்ன் ஸ்மித் (Osborne smith) RBI இன் முதல் ஆளுநர் ஆவார்.

நிர்வாகம்

  • மைய வங்கி/ மற்ற இந்திய வங்கிகளின் நெறியாளர்.
  • கடைசி நிலைக் கடன் ஈவோன்.
  • ஆளுநர், நான்கு துணை ஆளுநர்கள் மற்றும் மைய அரசால் நியமிக்கப்படும் மைய நிர்வாகக் குழு உறுப்பினர்கள்.

பணிகள்

  • காகிதப்பணம் வெளியிடுவதல்
  • அரசின் வங்கியாகச் செயல்படுதல் (அரசிற்கான நிதி வருவயைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் அரசின் செலவினங்களுக்குப் பணம் வழங்குதல்)
  • இந்திய வங்கி அமைப்புக்களை நெறிப்படுத்துதல்
  • அந்நியச் செலாவணியின் பாதுகாவலன்
  • கடன் அளிப்பை நெறிப்படுத்துதல்.

18ம் நூற்றாண்டில் காகிதப் பணம் வெளியிடும் முறை துவங்கியது. தனியார் வங்கிகளான வங்காள வங்கி, மும்பை வங்கி மற்றும் சென்னை வங்கிகள் முதலில் காகிதப் பணத்தை அச்சடித்தது.

ஷெர் ஷா சூரி (Sher shah suri) என்பவரால் ₹1 க்கு 40 செம்பு நாணயங்கள் என்ற விகிதத்தில் முதல் ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதச் சொல்லான ரௌப்பியா (Raupya) விலிருந்து ரூபாய் என்ற வார்த்தை தோன்றியது. இந்தியாவின் பன்முகத் தன்மையை விளக்கும் விதமாக ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் அதன் மதிப்பு 17 மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் (முன்பக்கத்தில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பின்பக்கத்தில் மற்ற மொழிகளிலும்)

5. வங்கிகளின் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியாகும். இது வங்கிகளுக்கு வேண்டிய கடன்களை அளிக்கிறது, அவைகளின் வைப்புக்களை ஏற்கிறது, மாற்றுச் சீட்டுக்களை மறு தள்ளுபடி செய்கிறது. அதனால் இது வங்கிகளின் வங்கி எனப்படுகிறது.

6. கடைநிலைக் கடன் ஈவோன்

வணிக வங்கிகளுக்கு தீர்க்க இயலாத நிதிச் சிக்கல்கள் ஏற்படும்பொழுது, நிதிக்கான மற்ற ஆதாரங்கள் இல்லாத சூழ்நிலையில் அச்சிக்கலிருந்து மீள்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஈட்டுக்கடனை அளித்து உதவுகிறது.

7. தீர்வாக செயல்படுகின்றது

வங்கிகளுக்கிடையே நடக்கும் பரிவர்த்தனைகளை தனது 14 தீர்வகங்களைக் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி சமன் செய்கின்றது. பரிவர்த்தனைக் கருவிகளை பரிமாறிக் கொள்ள உதவுவதுடன், பரிவர்த்தனை தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்குகிறது.

8. அந்நிய செலாவணி பாதுகாவலன்

இது அந்நிய செலாவணி இருப்புக்களை பாதுகாக்கும் பணியினை செய்கிறது. 1999 – ஆம் ஆண்டு அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act – FEMA) சட்டத்தின்படி இது அந்நிய செலாவணி மேலாண்மையும் நிர்வகிப்பினையும் மேற்கொள்கிறது. அந்நிய பணத்திற்கு எதிரான இந்திய ரூபாயின் பரிமாற்ற விகிதத்தை நிலைப்படுத்துவதற்காக வெளிநாட்டு பணங்களை அவ்வப்பொழுது வாங்கி விற்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

9. பொருளாதாரத்தை நெறிப்படுத்துகிறது

பணவியல் கொள்கையை அடிப்படையாக கொண்டு பொருளாதாரத்தை நெறிப்படுத்தி விரும்பத்தகுந்த பாதையில் கொண்டு செல்கிறது. மேலும், தேசிய வருவாய், வேலைவாய்ப்பு, செலவு, சேமிப்பு, முதலீடு போன்ற முக்கிய குறியீடுகளை தொடர்ந்து கண்காணித்து நெறிப்படுத்துகிறது.

10. அரசு கடன் பத்திரங்களை நிர்வகிக்கிறது

குறிப்பிட்ட சதவிகிதத்திலான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை அரசின் கடன்பத்திரங்களாக கொண்டுள்ள நிறுவனங்களை இந்திய ரிசர்வ் வங்கி கண்காணித்து நிர்வகிக்கின்றது.

11. செலுத்துதல் மற்றும் தீர்வு செய்வதில் நெறியாளாராகவும், மேலாளராகவும் செயல்படுகிறது

2007 –ஆம் ஆண்டு செலுத்துதல் மற்றும் தீர்வு சட்டம் (The Payment and Settlement System Act. 2007 – PSS Act) இந்திய ரிசர்வ் வங்கிக்கு நாட்டின் செலுத்துதல் மற்றும் தீர்வு செய்வதற்கான மேற்பார்வையிடும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. ஆகவே, ரிசர்வ் வங்கி பாதுகாப்பான மற்றும் திறமையான செலுத்துதல் மற்றும் தீர்வுகளை மேற்பார்வையிடுவதன் மூதல் மேம்பாட்டிற்கு வழிவகுக்கின்றது.

12. மேம்பாட்டு பணி

இந்திய ரிசர்வ் வங்கி சிறந்த வங்கி அமைப்பினை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதன் மூலம் சிறந்த உற்பத்தித் திறன் கொண்ட துறைகளுக்கு கடன்கள் வழங்கப்படுவதை உறுதி செய்கின்றது. தேசிய குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு பரந்த மேம்பாட்டு பணிகளை மேற்கொள்கிறது. இது மேலும், நாட்டின் நிதிக்கடமைப்பினை ஏற்படுத்தும் நிறுவனங்களையும் அமைக்கின்றது. இதனுடன்கூட, நாட்டில் நிதிச் சேவைகள் மற்றும் நிதிக் கல்வியறிவு ஆகியவற்றை விரிவாக்கும் பணியினையும் செய்கின்றது. இதற்கான கல்வி, ஆய்வு நிறுவனங்களையும் நடத்துகின்றது.

13. பணவியல் மற்றும் இதர தகவல்களை வெளியிடுகிறது

பணம், வங்கி மற்றும் முக்கிய பொருளாதாரப் புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது. மேலும், இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளை திறனாய்கிறது. புள்ளிவிவரங்களை திரட்டி, வரிசைப்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி வெளியீடு (Reserve Bank of India Bulletin) மூலம் மாத, காலாண்டு, ஆண்டு விவரங்களை வெளியிடுகிறது.

14. பரிவர்த்தனை மேலாளர் மற்றும் நெறியாளர்

சர்வதேச பண நிதியத்தின் (International Monetary Fund) இந்திய உறுப்பினர் பிரதிநிதியாக இந்திய ரிசர்வ் வங்கி விளங்குகிறது. நிதியத்திலிருந்து பெறப்படும் அந்நிய செலாவணியை மேலாண்மை செய்வதும், அதிகாரம் அளிக்கப்பட்ட அந்நிய செலாவணி விற்பனையாளர்களான வணிக வங்கிகளை நெறிப்படுத்தும் செயலையும் இந்திய ரிசர்வ் வங்கி செய்கிறது.

15. வங்கி குறைதீர்ப்பாய திட்டம்

இந்திய ரிசர்வ் வங்கி 1995ல் வங்கி குறைதீர்ப்பாயத்தினை (Banking Ombudsman) அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ், வங்கிகள் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு வரும் அனைத்து புகார்கள் மற்றும் மேல்மூறையீடுகளை வங்கி குறை தீர்ப்பாயம் களைகின்றது. இணையவழியில் வரும் புகார்கள் உட்பட அனைத்து வழிகளில் வரும் புகார்களையும் இந்த குறை தீர்ப்பாயம் கணக்கில் எடுத்துக் கொள்கின்றது.

16. இந்திய வங்கி நெறிமுறை மற்றும் மதிப்பீடுகள் வாரியம்

வங்கிகளின் திறனை அளவிடும் விதமாக உலகளவில் ஏற்கப்பட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் மதிப்பீடுகள் (அடிப்படையில்) இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய வங்கி நெறிமுறை மற்றும் மதிப்பீடுகள் வாரியத்தை (Banking Codes and Standards Board of India – BCSBI) அமைந்துள்ளது.

கடன் கட்டுப்பாட்டு அளவுகள் (Credit Control Measures)

கடன் கட்டுப்பாட்டு நுட்பம் என்பது மைய வங்கியின் பணவியல் மேலாண்மையின் முக்கிய நோக்கம் ஆகும். கடன் கட்டுப்பாட்டு முறைகள், 1934ஆம் ஆண்டின் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் மற்றும் 1949-ஆம் ஆண்டின் வங்கி நெறிமுறைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் சட்டபூர்வ அங்கீகாரத்தினை பெறுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி தனது கடன்கட்டுப்பாட்டு முறையினை மற்ற நாடுகளிலுள்ள கடன் கட்டுப்பாட்டு முறைகளைவிட சிறப்பாக அமல்படுத்தி வருகிறது.

கடன் கட்டுப்பாட்டு முறைகள்

கடன் அளவுக் கட்டுப்பாட்டு முறைகள்

  1. வங்கி விகிதக் கொள்கை
  2. வெளிச்சந்தை நடவடிக்கைகள்
  3. மாறும் குறைந்தபட்ச வங்கி ரொக்க இருப்பு விகிதம்

கடன் தன்மைக் கட்டுப்பாட்டு முறைகள்

  1. கடன் பங்கீடு
  2. நேரடி நடவடிக்கைகள்
  3. நெறிமுறை தூண்டல்
  4. விளம்பரப்படுத்துதல்
  5. நுகர்வோர் கடனை நெறிப்படுத்துதல்
  6. விளிம்பு நிலை தேவைத் தொகையை மாற்றுதல்

கடன் கட்டுப்பாட்டு முறைகள் (Methods of Credit Control)

  1. கடன் அளவுக் கட்டுப்பாடு முறைகள் (Quantitative Methods of Credit Control)
  1. வங்கி விகிதக் கொள்கை (Bank Rate Policy)

வங்கி விகிதக் கொள்கை என்பது தள்ளுபடி விகித கொள்கை (Discount Rate Policy) என்றும் அழைக்கப்படுகிறது. மைய வங்கியானது எந்த விகிதத்தில் முதல்நிலை மாற்றுச் சீட்டுகள் மற்றும் பிணையங்கள் தள்ளுபடி செய்கிறது என்பதே வங்கி விகித கொள்கை என்பதாகும். மைய வங்கியானது பணவீக்க காலத்தில் வங்கி விகிதம் அதாவது மைய வங்கியின் தள்ளுபடி விகிதம் அதிகரிக்கப்படுவதால் நடப்பு வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டு கடன் அளவு கூறைக்கப்படுகிறது. மாறாக, பணவாட்ட காலத்தில் எதிர்மறையாக வங்கி தள்ளுபடி விகிதம் குறைக்கப்படுகிறது. இது நடப்பு சந்தை வட்டி விகிதத்தை குறைக்கும். இதனால் உந்தப்பட்டு நிறைய கடன்கள் அருவாகும். இதனால் கடன் பண அளிப்பு அதிகரித்து பணவாட்டம் சரிசெய்யப்படும்.

2. வெளிச்சந்தை நடவடிக்கைகள் (Open Market Operations)

  • ஒரு குறுகிய அளவில் பார்க்கும்பொழுது, மைய வங்கியானது பொதுச் சந்தையில் அரசின் கடன் பத்திரங்களை வெளியிடுவதும் திரும்பப்பெறுவதும் வெளிச்சந்தை நடவடிக்கைகள் எனப்படுகின்றது.
  • சற்று விரிவாக பார்க்கும்பொழுது, மைய வங்கி அரசின் கடன் பத்திரங்களை மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களின் தகுதிபடைத்த பத்திரங்களையும் விற்பனை செய்வதும் , திரும்பப் பெறுவதும் ஆகும்.
  • வணிக வங்கிகளும், தனி நபர்களும் வெளியிடும் கடன் பத்திரங்களை வாங்கும்பொழுது, பொருளாதாரத்தில் சுழற்சியில் உள்ள பணமும், கடன் பணமும் குறையும், இதனால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும். மாறாக, பணவாட்ட காலத்தில் , முன்னர் வெளியிடப்பெற்ற கடன் பத்திரங்களை திரும்ப பெற்றுக்கொள்ளும்பொழுது வணிக வங்கிகளிடமும் பொதுமக்களிடமும் ரொக்கம் மற்றும் கடன் பணத்தின் அளவு அதிகரிக்கும்.

3. மாறும் ரொக்க இருப்பு விகிதம் (Variable Cash Reserve Ratio)

அ) ரொக்க இருப்பு விகிதம்: வணிக வங்கிகளிடம் வந்து சேரும் கேட்பு மற்றும் கால வைப்புகளில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அவைகள் மைய வங்கியில் இருப்பாக வைக்கவேண்டும். இது மைய வங்கி சட்டத்தின்படி பின்பற்ற வேண்டியது ஆகும். இதுவே, ரொக்க இருப்பு விகிதம் எனப்படுகிறது. ரொக்க இருப்பு விகிதத்திற்கும் வணிக வங்கிகள் வழங்கும் கடன் அளவிற்கும் எதிர்மறை தொடர்பு உள்ளது. வணிக வங்கிகளிடம் கூடுதலான பணம் உள்ள சூழ்நிலையைல் அவைகள் தேவைக்கு அதிகமான கடன் பணத்தை உருவாக்க வாய்ப்பிருக்கிறது. இது பொருளாதாரத்தில் விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே மைய வங்கி தனது அதிகாரமான ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்துவதன் மூலம், வணிக வங்கிகளின் கடன் அளவை கட்டுப்படுத்துகிறது.

பணவாட்டத்திற்குப் பின் பொருளாதாரம் மீட்சி பெற அதிக கடன் தேவைப்படுகிறது. அச்சமயத்தில் பண அளிப்பு குறைவாக இருக்கும். மைய வங்கி இவ்விகிதத்தை குறைப்பதன் மூலம், வணிக வங்கிகள் குறைவான இருப்பை மட்டுமே வைத்துக்கொண்டு கூடுதலான தொகையை கடன் பணமாக அளிக்க இயலும். ரொக்க இருப்பு விகிதம் அதிகமாக இருந்தால் வணிக வங்கிகளின் கடன் உற்பத்தி குறைவாகவும், ரொக்க இருப்பு விகிதம் குறைவாக இருந்தால் கடன் உற்பத்தி அதிகமாகவும் இருக்கும்.

மாறும் ரொக்க இருப்பு விகிதம் என்பது பணவியல் கொள்கையின் ஒரு கருவி. இதனை முதன்முதலாக கீன்ஸ் பரிந்துரைத்தார் அமெரிக்க மைய வங்கியான பெடரல் ரிசர்வ் சிஸ்டம் (Federal Reserve System) முதன் முதலில் இதை அமல்படுத்தியது.

ஆ) சட்டபூர்வ நீர்மை விகிதம்: சட்டப்பூர்வ விகிதமான இதில், வங்கிகள் தன்னகத்தே எப்பொழுதும் வைத்திருக்க வேண்டிய ரொக்கம், தங்கம் மற்றும் ஒப்புதல் பெற்ற பத்திரங்கள் உள்ளடக்கிய நீர்மை தன்மை கொண்ட சொத்துக்கள் ஆகும். இது கேட்பு வைப்பு மற்றும் கால வைப்பு போன்ற வங்கியின் பொறுப்புக்களின் ஒரு குறிப்பிட்ட சதவிகித அளவிற்கு இருக்க வேண்டும்.

      II. கடன் தன்மைக் கட்டுப்பாட்டு முறைகள்

கடன் தன்மை கட்டுப்பாட்டுமுறை அல்லது தெரிந்தெடுத்த கடன் கட்டுப்பாட்டு முறைகள் (Se;ective Credit Control Methods) என்பது தெரிந்தெடுத்த துறைகளில், தொழில்கள், வணிகங்கள் அல்லது பயன்களில் மட்டும் கடன் கட்டுப்பாட்டினை கொண்டு வருவது ஆகும். இம்முறைகளில் கீழ்க்கண்டவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

  1. கடன் பங்கீடு,
  2. நேரடி நடவடிக்கைகள்,
  3. நெறிமுறை தூண்டல்,
  4. விளம்பரப்படுத்துதல்,
  5. நுகர்வோர் கடனை முறைப்படுத்துதல், மற்றும்
  6. ஈட்டுக் கடன்களில் விளிம்பு நிலையை தொகையை மாற்றுதல் ஆகியன கடன் தன்மை கட்டுப்பாட்டு முறைகள் ஆகும்.
  7. கடன் பங்கீடு (Rationing of Credit)

இது ஒரு பழமையான கடன் கட்டுப்பாட்டு முறையாகும். முதன்முறையாக பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் மையவங்கியான இங்கிலாந்து வங்கியில் (Bank of England) இம்முறை பயன்படுத்தப்பட்டது. வணிக வங்கிகள் வழங்கும் கடன்கள் பல்வேறு நோக்கங்களுக்காக வழங்கப்படுகிறது. நாட்டின் பண அளிப்புச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அக்கடன் நோக்கங்களைப் பட்டியலிட்டு வரையறை செய்வதன் மூலன் கடன் கட்டுப்பாட்டினை ஏற்படுத்துவது ஆகும். இதில் பின்வரும் இருவகைகள் உள்ளனள் மாறும் தொகுப்பு வரையறை (Variable Portfolio Ceiling) மற்றும் மாறும் மூலதன-சொத்து விகிதம் (Variable Capital – Asset Ratio).

மாறும் தொகுப்பு வரையறை : இதில் ஒவ்வொரு வணிக வங்கியும் எவ்வளவு அதிகபட்ச கடன் மற்றும் முன்பணம் கொடுக்கலாம் என்பதனை மைய வங்கி வரையறுப்பது ஆகும்.

மாறும் மூலதன-சொத்து விகிதம்: இது வணிக வங்கிகள் தங்களது சொத்து மதிப்பில் எந்த அளவு மூலதனமாக வைத்துக்கொள்ளலாம் என்பதனை மைய வங்கி வரையறை செய்வது ஆகும்.

2. நேரடி நடவடிக்கைகள் (Direct Actions)

நேரடி நடவடிக்கைகள் என்பது பின்வருவனவற்றை உள்ளடக்கியது ஆகும்:

அ) வணிக வங்கிகள் தள்ளுபடிக்காக கொண்டுவரும் மாற்றுச்சீட்டு உள்ளிட்ட அனைத்து பிணையங்களையும் ஒட்டுமொத்தமாக மைய வங்கி மறுப்பது ஆகும். இதன் மூலம் வணிக வங்கிகள் வழங்கும் கடன் அளவு கட்டுப்படுத்தப்படும்.

ஆ) மூலதனம் மற்றும் இருப்புக்களைத் தாண்டி மொத்தக் கடனளவை கொண்டுள்ள வணிக வங்கிக்கு வேண்டப்படும் நிதி ஒதுக்கீட்டினை மைய வங்கி மறுப்பது ஆகும்.

இ) அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி மைய வங்கியில் கடன்பெறும் வணிக வங்கிகளுக்கு இயல்பான வட்டியுடன் அபராத வட்டி விகிதத்தை விதிப்பது ஆகும்.

3. நெறிமுறைத் தூண்டல் (Moral Suasion)

வணிக வங்கிகளின் கடன் அளவை கட்டுப்படுத்த மைய வங்கி அடிக்கடி கையாளும் ஒரு முறையாகும். இம்முறையின்கீழ், அறிவுரைகளையும் வேண்டுகோளையும் வைப்பதன் மூலம் வணிக நெறிமூறையினைப் போதித்து வணிக வங்கிகள் வழங்கும் கடன்களைக் கட்டுப்படுத்துகிறது.

4. விளம்பரப்படுத்தல் (Publicity)

மைய வங்கி தனது கடன் வழங்கும் கொள்கைகளை பொதுமக்களிடம் விளம்பரப்படுத்துவதன் மூலம் கடன் அளவை கட்டுப்படுத்துவது ஆகும். ஆனால், இம்முறையின் வெற்றி மைய வங்கியால் எந்த அளவுக்கு மக்களிடம் பொதுக்கருத்தினை ஏற்படுத்த முடிகிறது என்பதைப் பொறுத்து அமையும்.

5. நுகர்வோர் கடனை நெறிப்படுத்தல் (Regulation of Consumer Credit)

தவணைமுறைக் கொள்முதல் போன்றவற்றில் நுகர்வோர் செலுத்தும் தவணைத் தொகையை அதிகப்படுத்துதல், தவணைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் நுகர்வோர் கடன் வாங்குவதை குறைப்பது ஆகும்.

6. ஈட்டுக் கடன்கள் மீதான விளிம்பு தொகை தேவையை மாற்றுதல் (Changes in the Margin Requirement on Security Loans)

பெரும்பாலான நாடுகளில் நடைமுறையில் இருந்தாலும், இம்முறை அமெரிக்காவில் பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்நாட்டின் மையவங்கியான அமெரிக்க பெடரல் ரிசர்வ் சிஸ்டத்தின் இயக்குநர் குழு ஈட்டுக் கடன்களின் விளிம்புநிலை தொகை தேவையை மாற்றியமைக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது. இந்த அதிகாரம், அமெரிக்காவின் 1934-ஆம் ஆண்டு பிணைய பரிவர்த்தனை சட்டத்தின் (Securities Exchange Act, 1934) அடிப்படையில் அமைந்துள்ளது. இதன் மூலம் பங்குச்சந்தையில் ஊக வாணிபத்தில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பணத்தின் அளிப்பைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியால் மேற்கொள்ளப்படும் கருவிகளே ரெபோ விகிதம் மற்றும் மீள்ரெப்போ விகிதங்களாகும். ரெப்போ விகிதம் எப்பொழுதும் மீள்ரெப்போ விகிதத்தை விட அதிகமாகவே இருக்கும்.

ரெப்போ விகிதம் (Repo Rate) மீள் ரெப்போ விகிதம் (Reverse Repo Rate)
வணிக வங்கிகளுக்கு மைய வங்கி குறுகிய கால கடன் வழங்கும்பொழுது விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ விகிதம் எனப்படுகீறது. இவ்வங்கிகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படும்பொழுது அவைகள் பத்திரங்களை ஈடாக வைத்து இந்திய ரிசர்வ் வங்கியில் கடன்களை பெறும். அந்நிலையில் விதிக்கப்படும் வட்டி விகிதமே ரெப்போ விகிதம் எனப்படுகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் கடன் வாங்குவதற்கான செலவை அதிகப்படுத்தி, கடன் வாங்குவதைக் கூறைக்கிறது. பணவாட்ட சூழ்நிலையில் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டு கடன் வழங்குதல் அதிகரிக்கும். வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே மீள் ரெப்போ விகிதம் எனப்படுகிறது. மீள் ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், அது வணிக வங்கிகளுக்கு இலாபகரமான வட்டி விகிதமாகி அவைகளிடம் உள்ள பணத்தை ரிசர்வ் வங்கியிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. இதனால் அந்த பணத்திற்கு உயர் பாதுகாப்பு கிடைக்கிறது. இதனால் வணிக வங்கிகள் தனது வாடிக்கையாளருக்கு கடன் கொடுப்பது குறைகிறது. இது இயற்கையாகவே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும்.

இந்திய ரிசர்வ் வங்கியும் கிராமப்புற கடனும் (RBI and Rural Credit)

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மைய வங்கியானது பணவியல் நெறிமுறைகளை செயல்படுத்துவதுடன் அதன் எல்லை முடிந்துவிடுவதல்ல. அது, விவசாயம் மற்றும் தொழில் உள்ளடக்கிய அனைத்துத் துறைகளின் வளர்ச்சிகளிலும் பங்குபெறுவது எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயத் துறை நிதியளிப்பில் இந்திய ரிசர்வ் வங்கியின் பங்கு

இந்திய ரிசவ் வங்கி விவசாயத்துறைக்கான நிதியளிப்பில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் முறைசார் நிறுவனங்களின் கடன் வசதி பற்றாக்குறை போன்ற காரணங்களால் ரிசர்வ் வங்கியின் பொறுப்பு இதில் அதிகமாகிறது. தனது பங்கின் முக்கியத்துவம் கருதி இந்திய ரிசர்வ் வங்கி விவசாயத்திற்கென தனியான விவசாய கடன் துறையை (Agriculture Credit Department) துவங்கியது.

விவசாய கடன் துறையின் பணிகள்

அ) நிபுணத்துவம் பெற்ற அலுவலரை நியமித்து விவசாய கடன் தொடர்பான அனைத்து வினாக்களையும் ஆய்வு செய்வது.

ஆ) மைய அரசு, மாநில அரசு, மாநில கூட்டுறவு வங்கிகள், மற்றும் இதர வங்கி நடவடிக்கைகளில் நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசனைகளை வழங்குவது.

இ) ஊரகத் துறைக்கு தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலமாக விவசாயக் கடன் வழங்குவது மேலும் அவைகளை ஒருங்கிணைப்பது ஆகியவையாகும்.

  • விவசாய மேம்பாட்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் மிகவும் பங்கு மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது நேரடியாக விவசாயிகளுக்கான கடனை வழங்காமல், ஊரக கடன் வழங்குவதில் தேர்ச்சி பெற்ற நிறுவனங்கள் மூலமாக மறு கடனாக வழங்கி வந்தது. இந்திய ரிசர்வ் வங்கி தனக்குக்கீழாக மாநில கூட்டுறவு வங்கிகள் (மாநில அளவு), மத்திய கூட்டுறவு வங்கிகள் (மாவட்ட அளவு), மற்றும் துவக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் (கிராம அளவு) மூன்றடுக்கு முறை வழியாக விவசாயத்திற்கான கடனை வழங்கி வந்தது.
  • இந்திய ரிசர்வ் வங்கி பருவகால விவசாய பணிகள் மற்றும் விவசாய பொருள் சந்தையிடல் தொடர்பாக குறுகியகால கடன்களை அல்லது பயிர்க்கடன்களை (short-term loans or crop loans) வழங்கி வந்தது. இதற்காக மாநில கூட்டுறவு வங்கிகள் அரசு பத்திரங்கள் மற்றும் நிலவள வங்கிகளின் கடன் பத்திரங்களை ஈடாக ஏற்று 15 மாதக் கடனை ரிசர்வ் வங்கி வழங்கி வந்தது. இதேபோல் நிலத்தினை தர மேம்படுத்துதல், பாசன வசதி ஏற்படுத்துதல், இயந்திரங்கள் வாங்குதல் ஆகிய நோக்கங்களுக்காக 15 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரையிலான மத்திய கால கடன்களையும் (medium –term loan) வழங்கி வந்தது. மேலும், நிலத்தினை முற்றிலுமாக மாற்றுவது மற்றும் பழைய கடன்களை திருப்பச் செலுத்த உதவும் வகையில் 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால கடன்களையும் (long-term loan) வழங்கி வந்தது.
  • 1982-ஆம் ஆண்டிற்கு பிறகு விவசாய கடன் சம்பந்தமான அனைத்து பொறுப்புகளையும் நபார்டு வங்கி (NABARD) இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து பெற்றுக்கொண்டது. அதிலிருந்து ஊரகக் கடன் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நபார்டு வங்கி மேற்கொண்டுள்ளது.

விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் (Agricultural Refinance Deelopment Corporation – ARDC)

இந்திய விவசாயிகளுக்கு மத்திய மற்றும் நீண்டகால கடன்களே அதிகம் தேவை இருந்தபொழுதிலும் அதைப் பெறுவதில் சிக்கல்கள் இருந்தன. இவ்வகைக் கடன்களை அளிக்கும் ஒரே அமைப்பு ரீதியான நிறுவனம் நிலவள வங்கிகள் (Loan Development Banks) ஆகும். ஆனால், அந்த வங்கிகள் போதுமான அளவு வெற்றியடையாமல் பின்தங்கியிருந்தது. அதே சமயம் இந்த நோக்கத்திலான கடன்களின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்தது. இந்த இடைவெளியினைப் போக்கவும், பல்வேறு விவசாய மேம்பாட்டு திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் பாராளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் ஜூலை 1, 1963-ல் விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகத்தின் நோக்கங்கள்

  1. மத்திய நிலவள வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் பட்டியல் வங்கிகள் (Scheduled Banks) போன்ற தகுதிவாய்ந்த அமைப்புகளுக்கு தேவையான மறுநிதியினை வழங்குவது.
  2. இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய நிலவள வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் பட்டியல் வங்கிகள் வெளியிடும் கடன் பத்திரங்களை வாங்கி அதன் மூலம் நிதியளிப்பினை செய்வது.

வட்டார ஊரக வங்கிகள் (Regional Rural Banks – RRBs)

  • ஊரக நிதி வழங்கும் நிறுவனங்களில் அடுத்த முக்கியமான வங்கியமைப்பு வட்டார ஊரக வங்கிகள் ஆகும். இது கிராமின் வங்கிகள் (Gramin Banks) என்றும் அழைக்கப்படுகிறது. மறைந்த பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களின் 20-அம்ச பொருளாதார திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களை தொடர் கடன்சூழலில் (indebtedness) இருந்து விடுப்பதாகும். அக்கால கட்டத்தில் அமல்படுத்தப்பட்ட புதிய பொருளாதார திட்டத்தினை தொடர்ந்து வட்டார ஊரக வங்கிகள் 1975ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. இவைகளுக்கான மூலதன 50% மைய அரசாலும் 15% மாநில அரசாலும் 35% நடத்துகின்ற வணிக வங்கிகளாலும் அளிக்கப்பட்டது.
  • இவ்வங்கிகளின் நோக்கம் விவசாயிகளுக்கு, குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் (small and marginal farmers)> நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் ஊரக பகுதியில் விவசாயம், வர்த்தகம், தொழில் மற்றும் இதர உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துவது ஆகும்.

வட்டார ஊரக வங்கிகளுக்கான சலுகைகள்

ஆரம்பத்தில் பங்குமூலதனத்தை வழங்கிய வணிகவங்கிகள் அவைகளுக்கான மேலாண்மை மற்றும் நிதி தொடர்பான உதவிகளை மற்றும் குறைந்த அளவாக 8.5 சதவிகித வட்டியில் கடன்களையும் வழங்கி வந்தன. மேலும், வணிகவங்கிகள் தனது அலுவலர்களை அயற்பணியாளர்களாக வட்டார வங்கிகளுக்கு அனுப்புவது, மற்றும் வட்டார ஊரக வங்கிப் பணியாளர்களுக்கு ஆகும் பயிற்சி செலவுகளை மேற்கொள்வது ஆகிய சலுகைகளை வழங்குகிறது. மத்திய ரிசர்வ் வங்கி வட்டார ஊரக வங்கிகளுக்கு கீழ்க்கண்ட சலுகைகள் வழங்கியுள்ளது.

அ) வட்டார ஊரக வங்கிகள் 3 சதவிகித ரொக்க இருப்பினையும், 25 சதவிகித சட்டபூர்வ நீர்மை இருப்பினை வைத்திருக்கவும் அனுமதிக்கப்படுகிறது.

நபார்டு வங்கி மூலம் இவைகளுக்கு மறு கடன்களையும் வழங்கி வருகின்றன.

விவசாய கடனுக்கான நபார்டு வங்கியின் பங்கு (NABARD And Its Role In Agricultural Credit)

துவக்க காலத்திலிருந்தே மத்திய ரிசர்வ் வங்கி விவசாயக்கடன்கள் வழங்க தனித்துறையை ஏற்படுத்தியது. பின்னர் விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் என்ற துணை அமைப்பு இருந்த பொழுதிலும், இந்திய ரிசர்வ் வங்கி விவசாய முன்னேற்றக் கருத்தை விரி செய்து கிராமப்புற முன்னேற்றத்திற்காக கடன்களை விரிவுபடுத்தும் நோக்கில் கிராமப்புற முன்னேற்றத்திற்கான திட்டங்களை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த விரிவான அடித்தளம் கொண்ட ஒரு அமைப்பு மத்திய ரிசர்வ் வங்கிக்குத் தேவைப்பட்டது. அதன் காரணமாக 1982-ஆம் ஆண்டு ஜூலை மாதம் விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டிற்கான தேசிய வங்கியினை (National Bank for Agriculture and Rural Development – NABARD) 1982ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி தோற்றுவித்தது. சுருக்கமாக நபார்டு என்று அழைக்கப்படுகிறது. விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகத்தின் பணிகள் முழுமையும், வட்டார ஊரக வங்கிகளின் மறுகடன் பணிகளையும் தானே ஏற்று செய்துவருகிறது. அதன்பிறகு, அனைத்து விவசாயக் கடன்களுக்கான தலைமை அமைப்பாக நபார்டு வங்கி செயல்பட்டு வருகிறது. நபார்டின் மூலதனம் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய அரசு ஆகியவை சரிபகுதியாக வழங்கியுள்ளது. நபார்டு வங்கி மேலாண்மையைப் பொறுத்தவரை, இந்திய அரசின் மைய இயக்குநர் குழுவிலிருந்து நபார்டு வங்கியின் இயக்குநர் குழுவுக்கு மூவரைப் பரிந்துரைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் நபார்டின் தலைவராக இருப்பார்.

நபார்டு வங்கியின் பணிகள்

ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கியும் அதன் துணை அமைப்புகளும், விவசாயம் மற்றும் ஊரக முன்னேற்றத்திற்காக எந்தெந்த பணிகளை ஆற்றிவந்ததோ அப்பணிகள் அனைத்தையும் நபார்டு வங்கி மேற்கொண்டு வருகிறது. பின்வருவன நபார்டு வங்கியின் குறிப்பிட்ட பணிகளாகும்:

  1. நபார்டு வங்கி ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அனைத்து வகையான உற்பத்தி மற்றும் முதலீட்டுக்காக விவசாயம், சிறுதொழில்கள், குடிசை மற்றும் கிராமத் தொழில்கள், கைவினைத் தொழில்கள், மற்றும் இதர ஊரக தொழில் நடவடிக்கைகளுக்கான மறுகடனை வழங்கிறது.
  2. இது மாநில கூட்டுறவு வங்கிகள், வட்டார ஊரக வங்கிகள், நிலவள வங்கிகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கிட்யால் அங்கீகரிக்கப்பட்ட இதர நிதிநிறுவனங்கள் ஆகியவற்றிற்கு குறுகியகால, மத்தியகால மற்றும் நீண்டகால கடன்களை வழங்குகிறது.
  3. கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்களின் பங்கு முதலீட்டை வழங்கும்பொருட்டு மாநில அரசுகளுக்கு 20 ஆண்டு நீண்டகால கடன்களை நபார்டு வங்கி வழங்குகிறது.
  4. மைய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது விவசாயம் மற்றும் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான பங்கு மூலதனம் அல்லது கடன் பத்திரங்களை பெற்றிருக்கும் நிறுவனங்களுக்கு நீண்டகால கடனை அளிக்கிறது.
  5. மைய அரசு, மாநில அரசுகள், திட்டக்குழு (தற்பொழுது நிதி ஆயோக்) மற்றும் மைய, மாநில அரசுகளின் – சிறுதொழில்கள், குடிசை மற்றும் கிராமத் தொழில்கள், கைவினைத் தொழில்கள், இதர மிகச்சிறு தொழில்களுக்கு உதவும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயலாற்றும் நடவடிக்கைகளை நபார்டு வங்கி மேற்கொண்டுள்ளது.
  6. நபார்டு வங்கி, வட்டார ஊரக வங்கிகள் மற்றும் துவக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை தவிர்த்த அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ஆய்வு செய்யும் பணியினை செய்கிறது.
  7. வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான ஆய்வுகளை மேம்படுத்தும்விதமாக ஆய்வு மற்றும் வளர்ச்சி நிதியினை பராமரிக்கிறது.

தொழில் நிதியும் இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI and Industrial Finance)

தொழில் நிதியினை வணிக வங்கிகள் வழங்கினாலும் , அதன் கடனளவும், கடனுக்கான காலஅளவும் குறைவாகவே இருந்து வந்தது. வங்கிகள் பெரும்பாலும் பொதுமக்களிடம் குறுகிய கால வைப்புக்களை பெறுவதால், அவைகள் பெரும்பாலும் குறுகியகாலக் கடன்களை அளிக்க மட்டுமே முன்வந்துகொண்டிருந்தன. முன்னதாக, தொழிற் துறையின் மொத்தக் கடனில் வணிக வங்கிகளின் கடன் மிகக் குறைந்த அளவாக இருந்தது.

ஆகவே, தொழிற்துறைக்கான நீண்டகால கடன்களைப் பெறுவதற்கான ஆதாரங்கள் தேவைப்பட்டன. தொழிற்துறைக்கான நிதி மற்றும் மேம்பாட்டிற்காக பின்வரும் நிறுவனங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டன.

தொழில்நிதிக்கான அமைப்புகள்

அனைத்து இந்திய அளவில்

  • இந்திய தொழில் நிதிக் கழகம்
  • இந்திய தொழிற் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம்
  • இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி

மாநில அளவில்

  • மாநில நிதிக்கழகங்கள்
  • மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம்

இந்திய அளவில் உள்ள நிறுவனங்கள் (All India Level Institutions)

  1. இந்திய தொழில் நிதிக் கழகம்

தொழில்நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவன சங்கிலித்தொடரில் முதன்மையாக ஆரம்பிக்கப்பட்டது நிறுவனம் இந்திய தொழில் நிதிக் கழகம் ஆகும். பாராளுமன்ற சட்டப்படி இது 1948-ஆம் ஆண்டு ஜூலை 1-ல் அமைக்கப்பட்டது. இக்கழகம் பின்வரும் வழிகளில் தொழில் நிதியினை வழங்குகிறது:

  1. இந்திய ரூபாய் மற்றும் வெளிநாட்டு பணத்தில் நீண்ட காலக் கடன்களை வழங்குகிறது.
  2. வெளியிடப்பட்ட சம உரிமைப் பங்குகள், முன்னுரிமைப் பங்குகள் மற்றும் கடன் பத்திரகளுக்கு ஒப்புறுதியளிக்கிறது.
  3. சம உரிமைப் பங்குகள், முன்னுரிமைப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை வாங்குகிறது.
  4. இறக்குமதி செய்யப்படும் மற்றும் இந்தியாவிலிருந்து வாங்கப்படும் தொழிற்துறை இயந்திரங்களுக்கான பணத்திற்கு உத்திரவாதம் அளிக்கின்றது.
  5. வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து அந்நாட்டின் பணத்தில் வாங்கப்படும் கடன்களுக்கான உத்திரவாதத்தையும் அளிக்கிறது.

பொதுத்துறை, தனியார் துறை, இணை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் தொழிற்துறையில் ஈடுபடவோ அல்லது விரிவுபடுத்தவோ இந்திய தொழில் நிதிக்கழகம் (IFCI) நிதியுதவு அளிக்கின்றது. இத்தகைய நிதி உதவிகள் புதிய தொழில் திட்டங்களை ஏற்படுத்தவோ, விரிவாக்கம் செய்யவோ, பரவலாக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள இயந்திரங்களைப் புனரமைப்பு செய்யவோ நவீனப்படுத்தவோ அளிக்கப்படுகின்றது. மைய அரசால் தொழிற்துறையில் பின்தங்கிய மாவட்டங்கள் என்று அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் தொழில் தொடங்க நிதியினை குறைந்த வட்டிவிகிதங்களில் வழங்குகின்றது.

இந்திய தொழில் நிதிக் கழகம் தனக்கான நிதியை பின்வரும் வழிகளில் பெறுகிறது:

அ) கடன்பத்திரங்களை சந்தையில் வெளியிடுகிறது,

ஆ) இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி மற்றும் மைய அரசிடம் கடனாக பெறுகிறது, மற்றும்

இ) பாதுகாப்பான வெளிநாட்டு கடனை வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு மூலதனச் சந்தையிலிருந்தும் பெறுகிறது.

2. இந்திய தொழிற் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம் (Industrial Credit and Investment Corporation of India (ICICI))

இந்திய அரசு, உலகவங்கி மற்றும் அமெரிக்க அரசு ஆகியவற்ரால் நியமிக்கப்பட்ட மூவர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்திய தொழிற் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம் 1955-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் நாள் ஒரு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. உலக வங்கியிலிருந்து பெறப்படும் இந்திய தொழிற்கடன்களை மூறைப்படுத்தி அளிப்பதும், மூலதனச் சந்தையை கட்டமைப்பதும் இக்கழகத்தின் நோக்கமாகும். ஆரம்பத்தில் இக்கழகத்தின் மூலதனம், தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்தது. ஆனால், தற்பொழுது குறிப்பாக இது தேசியமயமாக்கப்பட்ட பின், இதன் பெரும்பாலான மூலதனம் பொதுத் துறை நிறுவனங்களான வங்கிகள், ஆயுள் காப்பீட்டுக் கழகம், பொது காப்பீட்டுக் கழகம் மற்றும் இதன் துணை அமைப்புகள் ஆகியோரிடம் உள்ளது.

இக்கழகத்தின் முக்கிய இயல்புகளில் ஒன்று, வெளிநாட்டு கடன்பணத்தை பெற்று தொழில் வளர்ச்சிக்கு உதவுவது ஆகும். இதன் துவக்கத்திலிருந்து வழங்கப்பட்ட கடன்களில் 50 சதவிகிதம் வெளிநாட்டுப் பணமாகவே வழங்கப்பட்டுள்ளது. இக்கழகம் வெளிநாடுகளிலிருந்தே நிதிவசதியை பெறுவதால் இது சாத்தியமாகிறது. முக்கியமாக உலக வங்கி இக்கழகத்திற்கு கடன் வழங்குவதில் தனிப்பெரும் நிறுவனமாக உள்ளது. 1973 முதல் இது தனக்கான நிதியை பன்னாட்டு மூலதனச் சந்தையிலிருந்தே பெறுகிறது.

பெரும்பாலான இந்திய ரூபாய்களில் திரட்டப்படும் நிதி, கடன் பத்திரங்கள் மூலம் மூலதனச்சந்தையிலிருந்தே திரட்டப்படுகிறது. மேலும், இக்கழகம் இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியிடமிருந்தும், மையவங்கியிடமிருந்தும் கடன் பெறுகிறது. அதேசமயம் இதன் பெரும்பாலான நிதி தனியார் துறைக்கே செல்கிறது.

ICICI வங்கியின் பணிகள்

  • தொழில் நிறுவனங்களுக்கு உதவுதல்
  • அந்நியச் செலாவணி கடன்கள் வழங்குதல்
  • வர்த்தக வங்கிப் பணிகள்
  • கடன் பெற சான்று வழங்கல்
  • திட்டங்களை நிறைவேற்ற ஏற்பாடு செய்தல்
  • வீட்டு வசதிக் கடன்கள் வழங்குதல்
  • குத்தகை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

3. இந்திய தொழில் மேம்பாட்டு (Industrial Development Bank of India (IDBI))

வங்கிகள் உள்ளிட்ட தொழிற்கடன்கள் வழங்கும் பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் ஒரு தலைமை நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும் என்ற முதன்மை நோக்கத்தின் அடிப்படையில் இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி துவங்கப்பட்டது. இந்த வங்கி பிப்ரவரி 15, 1976 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் முழு துணை அமைப்பாக இருந்தது. பின்னர் இது பிரிக்கப்பட்டு அதே ஆண்டின் பிப்ரவரி 16 முதல் இந்திய அரசிற்கு சொந்தமான தன்னாட்சி பெற்ற ஒரு கழகமாக மாறியது.

இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் பணிகள்

இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் முக்கிய பணிகள் இரு பிரிவுகளாக கீழே தொகுக்கப்பட்டுள்ளன:

  1. மற்ற தொழில் நிதிநிறுவனங்களுக்கு நிதியளிப்பது மற்றும்
  2. தொழிற் நிறுவனங்களுக்கு நேரடியாகவோ அல்லது மற்ற நிதியளிக்கும் நிறுவனங்களுடன் இணைந்தோ நேரடியாக கடன் வழங்குவது.

இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியானது, மைய அரசின் தொழில் நிதிக் கழகம், மாநில தொழில் நிதிக் கழகங்கள் மற்றும் அரசால் குறிப்பிடப்படும் நிதிநிறுவனங்கள், பட்டியல் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் வழங்கிய கடன்களுக்கு மறுநிதியினை அளிக்கிறது. தொழிற் நிறுவனங்களுக்கு பல்வேறு வகைகளில் கடன்களை வழங்குகிறது.

இவ்வங்கியின் சிறப்புச் செயல்பாடாக வளர்ச்சி உதவி நிதி (Development Assistant Fund) என்ற ஒரு சிறப்புநிதியை உருவாக்கியுள்ளது. இந்நிதி அதிக முதலீட்டையும் குறைந்த எதிர்பார்க்கப்படும் வருவாயையும் கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டதாகும். அவ்வகையான தொழில் நிறுவனங்கள் இயல்பான வழியில் போதுமான நிதியை திரட்ட இயலாது. மார்ச் 1982ல் ஏற்றுமதி- இறக்குமதி வங்கி (EXIM Bank) துவங்கப்படும்வரை ஏற்றுமதிக்கான நிதி உதவியையும் இவ்வங்கி வழங்கி வந்தது குறிப்பிடத் தகுந்ததாகும்.

மாநில அளவிலான நிறுவனங்கள்

  1. மாநில நிதிக்கழகங்கள் (State Financial Corporation (SFCs))

1951ஆம் ஆண்டு இந்திய அரசால் இயற்றப்பட்ட மாநில தொழில் நிதிக் கழக சட்டத்திபடி பல்வேறு மாநிலங்களில் மாநில தொழில் நிதிக் கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அந்தந்த மாநிலங்களில் சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டினை ஏற்படுத்துவது இக்கழகங்களின் நோக்கமாகும். சில தொழில் நிதிக் கழகங்கள் தங்களின் மாநில எல்லைகளைத் தாண்டியும் தொழில் நிதி உதவிகளை செய்துவருகிறது.

ஒரு கோடிக்கு ரூபாய்க்குள் பங்கு மூலதனத்தையும், இருப்புக்களையும் கொண்ட நிறுவனங்களுக்கு மாநில தொழில் நிதிக் கழகங்கள் கடன்கள் மற்றும் ஒப்புறுதிகளையும் வழங்குகிறது. அதிகபட்சமாக ஒரு தொழில் நிறுவனத்திற்கு ₹60 இலட்சம் நிதியாக வழங்கப்படுகிறது.

மாநில தொழில் நிதிக் கழகங்கள் மறுநிதியாக இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியிடமிருந்து கடன் பெறுகிறது. இது தவிர, கடன் பத்திரங்களை விற்பதன் மூலம் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியிடமிருந்தும் தற்காலிக கடன்களைப் பெறுகிறது.

  1. மாநில தொழில் மேம்பாட்டு கழகங்கள் State Industrial Development Corporations (SIDCOs)

  • மாநில தொழில் மேம்பாட்டு கழகம் மாநில அரசுகளினால் அமைக்கப்படுவது ஆகும். இக்கழகம் அந்தந்த மாநில அரசுகளுக்கே உரிமையானதாகும். இக்கழகங்கள் தொழிற்நிறுவனங்களுக்கான கடன்களை அளிப்பதோடு, மாநிலத்தில் தொழில்மயமாதலை தூண்டுவதும் ஆகும்.
  • மாநில தொழில் மேம்பாட்டு கழகம் தொழில் நிறுவனங்களுக்கு கடன்கள், ஒப்புறுதியளித்தல் மற்றும் நேரடியாக பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களை வாங்குதல் மூலம் நிதி வசதியினை அளிக்கிறது.
  • மாநில தொழில் மேம்பாட்டு கழகம் தொழில் நிறுவனங்களுக்கு கடன்கள், ஒப்புறுதியளித்தல், மற்றும் நேரடியாக பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களை வாங்குதல் மூலம் நிதி வசதியினை அளிக்கிறது.
  • கூடுதலாக, தொழில்நுட்ப விசாரணைகள் , திட்டத்தினை கண்டறிதல், திட்ட சாத்தியக்கூறுகளை ஆராய்தல் தெரிந்தெடுத்தல் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி வழங்குதல் என பல மேம்பாட்டு பணிகளையும் இக்கழகம் மேற்கொள்கிறது.
  • தனியார் பங்கேற்பை அனுமதிக்கும் கூட்டுத் திட்டங்களையும் இக்கழகம் ஊக்குவிக்கிறது. இவ்வகையான கூட்டுத்திட்டங்களின் முதலீடு கழகத்தின் சார்பில் 26 சதவிகிதம், தனியாரின் 25 சதவிகிதம் மற்றும் பொதுமக்களின் 49 சதவிகிதம் ஆகியன பங்களிப்பாக இருக்கும்.
  • பல்வகை அடிப்படை வசதிகளை கொண்ட தொழிற்பேட்டைகளை அமைப்பது மற்ரும் புதிய தொழில் மையங்களை அமைப்பது என இக்கழகத்தின் பணிகள் விரிவடைகின்றன. மாநில அரசுகளின் மானியங்களை நிர்வகிப்பதும் இக்கழகத்தின் பணியாகும். மேலும், இவைகள் இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியிலிருந்து மறுநிதியினை பெறுகிறது. பங்கு கடன் பத்திரங்கள் மூலம் கடன் பெறுவது, வைப்புக்களை ஏற்பது போன்ற பணிகளையும் இது மேற்கொள்கிறது.

பணவியல் கொள்கை (Monetary Policy)

  • பண அளிப்பு மற்றும் வட்டிவிகிதத்தை மேலாண்மை செய்யும் நோக்கோடு உருவாக்கப்படும் பேரினப் பொருளியல் கொள்கையே பணவியல் கொள்கை எனப்படுகின்றது.
  • பேரினப் பொருளியல் கொள்கைகளான பணவீக்கம், நுகர்ச்சி, வளர்ச்சி மற்றும் நீர்மைத்தன்மை போன்றவற்றை அடைய மேற்கொள்ளும் தேவை சார்ந்த பொருளியல் கொள்கையாகும்.
  • இரண்டாம் உலகப்போருக்குப் பின் முக்கியத்துவம் பெற்றதும், 1976ஆம் ஆண்டு நோபல் பரிசுபெற்ற மில்டன் ஃபிரைட்மேனால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட பணவியல் கொள்கையாகும். அவர் ஒரு பணவியலாளராக இருந்தும், 1930களில் நிலவிய உலக பெருமந்தத்துக் காரணம் அமெரிக்க மையவங்கியான பெடரல் ரிசர்வ் சிஸ்டத்தின் பணவியல் கொள்கையில் ஏற்பட்ட குளறுபடிகள்தான் என்பதனைத் தனது நூலான “அமெரிக்க ஐக்கிய அரசுகளின் பணவியல் வரலாறு, 1867-1960” (Monetary History of the United States, 1867 – 1960) என்ற நூலில் மிகத் தைரியமாகத் தெரிவித்திருந்தார்.

விரிவாக்க பணக்கொள்கை மற்றும் சுருக்க பணக்கொள்கை

  • விரிவாக்க பணக்கொள்கை என்பது (Expansionary Monetary Policy) மலிவுப் பணக்கொள்கையாகும் (Cheap Money Policy). இதில் பணவியக் அதிகார அமைப்பான மைய வங்கி அதன் கருவிகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை நிலைப்படுத்துகிறது. நடப்பு குறுகியகால வட்டி விகிதத்தைவிட கூறைவான வட்டிவிகிதத்தையும், வழக்கத்தை விட வேகமான பண அளிப்பையும் ஏற்படுத்துவது விரிவாக்கப் பணக்கொள்கையாகும். இது பாரம்பரியமாக பொருளாதார நடவடிக்கைகளின் பின்னிறக்க காலத்தில் ஏற்படும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக எடுக்கப்படும். வட்டி விகித கூறைப்பு நடவடிக்கை கடனுக்கு ஆகும் செலவை குறைந்து தொழில் உற்பத்தியையும், வாணிபத்தையும் விரிவாக்கும். இதனால் தொகு தேவை (அனைத்து பொருட்கள் மற்றும் பணிகளுக்கான தேவை) அதிகரித்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியால் கணக்கிடப்படும் குறுகியகால வளர்ச்சியை தூண்டும்.
  • மேற்கூறியதற்கு எதிரானது சுருக்கப் பணக்கொள்கை (Contractionary Monetary Policy) அருமைப் பணக்கொள்கை (Dear Money Policy) எனப்படுகிறது. இதில், குறுகியகால வட்டிவிகிதம் நடப்பு வட்டிவிகிதத்தைவிட அதிகப்படுத்துவது, பண அளிப்பினை குறைப்பது அல்லது சுருக்குவது ஆகும். இது, பொருளாதாரத்தின் குறுகியகால வளர்ச்சியை குறைத்து பணவீக்கத்தை குறைப்பது ஆகும். சுருக்கப்பணக் கொள்கை வேலைவாய்ப்பின்மையை அதிகரித்து, நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்கள் கடன் வாங்குவதையும் செலவு செய்வதையும் குறைப்பதன் மூலம் பொருளாதாரத்தை பின்னோக்கி திருப்புவது ஆகும்.

பணக்கொள்கையின் இரண்டு நிலைகள்

பணவீக்கம்

மலிவுப்பணக்கொள்கை

  1. கடன் பெறுதல் எளிது
  2. நுகர்வோர் அதிகம் நுகர்வோர்
  3. வியாபாரம் விசாலமாகும்
  4. அதிக மக்கள் வேலை பெறுவார்கள்
  5. மக்கள் அதிகம் செலவு செய்வார்கள்

மந்த நிலை

அருமைப்பணக்கொள்கை

  1. கடன் பெறுதல் கடினம்
  2. நுகர்வோர் குறைவாக நுகர்வர்
  3. வியாபார விரிவாக்கம் தள்ளிப்போகும்
  4. வேலையின்மை அதிகரிக்கும்
  5. உற்பத்தி குறையும்.

பணவியல் கொள்கையின் நோக்கங்கள் (Objectives of Monetary Policy)

வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தில் பணவியல் கொள்கை நிலைப்படுத்துதல் மற்றும் பொருளாதார அமைப்பினில் சமநிலையைப் பேணுதல் ஆகிய பணிகளை செய்யவேண்டியுள்ளது. ஆனால், வளர்ச்சி குறைந்த நாடுகளின் பொருளாதாரத்தில் இது இயக்கநிலையை ஏற்படுத்தி பொருளாதாரத்தை விரிவாக்க ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியுள்ளது. பணவியல் கொள்கை பொருளாதாரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு கருவியாக உணரப்படுகிறது.

பணவியல் கொள்கையின் குறிப்பிடப்பட்ட குறிக்கோள்கள்

  1. பணத்தின் நடுநிலைத் தன்மை

பொருளியலாளர்களான விக்ஸ்டெட், ஹேயக் மற்றும் ராபர்ட்சன் ஆகியோர் பணத்தின் நடுநிலை பற்றி விவரித்த முக்கிய நிபுணர்கள் ஆவர். அவர்கள் பணவியல் அதிகார அமைப்பு பொருளாதாரத்தில் பணம் நடுநிலைத் தன்மை நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர். பணத்தில் ஏற்படும் மாற்றமே அனைத்து பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் அடிப்படைக் காரணம் ஆகும். பண நடுநிலையாளர்களின் கூற்றுப்படி, பணவியல் மாற்றங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கும் நாட்டின் பொருளாதார அமைப்பில் விலகலையும், இடையூறுகளையும் ஏற்படுத்தும் என்றனர்.

2. விகித நிலைத்தன்மை

  • பரிவர்த்தனை விகித நிலைத்தன்மை என்பது பணவியல் கொள்கையின் பாரம்பரியமான நோக்கமாகும். பல்வேறு நாடுகளில் பொன் திட்டம் அமலில் இருந்து காலத்தில் இது ஒரு முக்கிய நோக்கமாகும். எப்பொழுது ஒரு நாட்டின் செலுத்துச் சமநிலையில் சமனற்ற நிலை தோன்றுகிறதோ அப்பொழுது தங்க நகர்வின் காரணமாக அது தானாகவே சரி செய்துகொள்ளும்.
  • “எப்பொழுது தங்கம் உள்வருகிறதோ அப்பொழுது பணமும் கடனும் விரிவடைகிறது: எப்பொழுது தங்கம் வெளிச்செல்கிறதோ அப்பொழுது பணமும் கடனும் சுருங்குகிறது” என்பது ஒரு முக்கியமான புகழ்பெற்ற வாக்கியமாகும். இம்முறை இருக்கும்பொழுது செலுத்துச் சமநிலையில் ஏற்படும் சமனற்ற நிலைகள் தானாகவே சரிசெய்யப்பட்டு பரிவர்த்தனை விகிதத்தில் நிலைத்தன்மை பேணப்படும்.
  • பரிவரித்தனை விகிதங்களில் நிலையற்ற தன்மை இருந்தால், அது தங்கம் வெளிச்செல்லுதல் அல்லது உள்வருதல் ஆகியவற்றால் செலுத்துச் சமநிலையில் சமனற்ற நிலையை உருவாக்கும். ஆகவே பரிவர்த்தனை விகிதங்களில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது பன்னாட்டு வாணிபத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

3. விலை நிலைத்தன்மை

  • பொருளியலாளர்கள் காஸல், கீன்ஸ் போன்றவர்கள் விலை நிலைத்தன்மை ஏற்படுத்துவது பணவியல் கொள்கையில் முக்கிய நோக்கமாக என்கின்றனர். விலை நிலைத்தன்மை பொதுமக்களிடம் பொதுவான நம்பிக்கையை ஏற்படுத்தும். மேலும் இது வணிக நடவடிக்கையை அதிகரித்து ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். மக்களிடையே சமமான வருவாய் மற்றும் சொத்துப் பங்கீடுகளை செய்யும். இவைகளின் தொடர் விளைவாக வளர்ச்சிக்கான பொது அலையும் சமுதாய நலனும் நிறுவப்படும்.
  • இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது, விலை நிலைத்தன்மை என்பது விலை மாறாமல் நிலையாக (Price rigidity) இருப்பதோ, விலைத் தேக்கமடைந்து (price stagnation) இருப்பதோ அல்ல. ஒரு மிதமான விலையேற்றம் என்பது பொருளாதார வளர்ச்சியின் ஊக்க சக்தியாக இருக்கும். இந்த மிதமான விலையேற்றம் என்பது கிட்டத்தட்ட நிலையான விலையின் பெரும்பாஅலான பண்புகளையும் தன்னகத்தே கொண்டதாக இருக்கும்.

4. முழுவேலைவாய்ப்பு

  • உலக பெருமந்தத்தின்பொழுது, வேலைவாய்பின்மை மிகவேகமாக அதிகரித்தது. இது சமுதாய அளவில் அபாயகரமானதும், பொருளாதார அளவில் வீணடிப்பையும், அறநெறியளவில் வருந்தத்தக்கதாகவும் இருந்தது. ஆகவே, முழுவேலைவாய்ப்பு என்பது பணவியல் கொள்கையின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. மேலும், 1936-ல் வெளியிடப்பட்ட “வேலைவாய்ப்பு , வட்டி மற்றும் பணத்திற்கான பொதுக் கோட்பாடு” (General Theory of Employment, Interest and Money) என்ர கீன்ஸின் நூல் முழுவேலைவாய்ப்பு என்ற பணவியல் கோட்பாட்டின் குறிக்கோளை முன்னிலைப்படுத்தியது.

5. பொருளாதார வளர்ச்சி

  • பொருளாதார வளர்ச்சி என்பது நீண்டகாலத்தில் உண்மை தலா வருவாய் (real per capita income)அதிகரித்து செல்லும் நடவடிக்கை ஆகும். இது மனித விருப்பத்தை நிறைவு செய்யும் பொருள் உற்பத்தியின் அளவு அதிகரிப்பதை உணர்த்துவது ஆகும்.
  • ஆகவே, சமநிலை பண அளவு, உற்பத்தி அளவுகள், சாதகமான சேமிப்பு-முதலீடு ஆகிய சூழ்நிலைகளை பராமரித்து அதன்மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியினை ஏற்படுத்துவது பணவியல் கொள்கையின் குறிக்கோளாக அமைகிறது. தேவை மற்றும் அளிப்பிற்கிடையே சமநிலையை ஏற்படுத்த நெகிழ்ச்சியுடன் கூடிய பணவியல் கொள்கை ஒரு சிறந்த வழிமுறையாகும்.

6. செலுத்துச் சமநிலையில் சமநிலையை பேணுதல்

  • செலுத்துச் சமநிலையில், சமநிலையை பேணுதல் என்பது பணவியல் கொள்கையின் அடுத்தக் குறிக்கோளாகும். உலகப்போர்களுக்குப் பிறகு வாணிபத்தில் சமனற்ற நிலைகள் தோன்ர ஆரம்பித்தன.
  • உலக வர்த்தகம் சமனற்ற நிலையில் அதிகரித்ததால் வரும் அந்நிய செலாவணி பிரச்சனையாகும். இதன்காரணமாக செலுத்துசமநிலையில் வரும் பற்றாக்குறை பொருளாதாரத்தின் மற்ற குறிக்கோள்களையும் நிறைவேற்றுவதின் திறனையும் குறைக்கும்.
  • இதனால், குறைவளர்ச்சி நாடுகள் தங்களுடைய இறக்குமதியினை குறைப்பதால் அதன் வளர்ச்சி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் பாதகமான நிலைக்கு தள்ளப்படுகிறது.
  • ஆகவே, பணவியல் கொள்கை செலுத்துச்சமநிலையில் சமமான நிலையினை பேணுவதை தனது குறிக்கோளாக கொண்டிருக்கிறது.

வங்கித் துறையில் சமீபகால, முன்னேற்றங்கள் (Recent Advancements in Banking Sector)

மின்னணு வங்கி முறை (E-Banking)

  • மின்னணு வங்கியானது நிகழ்நிலை வங்கி முறை (Online Banking) அல்லது இணைய வங்கி முறை (Internet Banking) என்றும் அழைக்கப்படுகிறது. இம்முறையில் ஒரு வங்கி அல்லது நிதிநிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தங்களது பல்வேறு நிதிப்பரிவத்தனைகளை அவ்வங்கி அல்லது நிறுவனத்திற்கு நேரில் செல்லாமல் அவைகளின் இணையதளத்திலேயே நிகழ்த்துவது ஆகும்.
  • பாரம்பரியமான கிளை வங்கிமுறை போல் (branch banking) அல்லாது இவ்வங்கி முறையொல் மையப்படுத்தப்பட்ட வங்கிகளுக்குள் (core banking) இணைப்பினை ஏற்படுத்தி பரிவர்த்தனைகள் மற்றும் இதர வங்கி நடவடிக்கைகள் நடைபெறுகிறது. இன்றைய இந்த மெய்நிகர் வங்கி முறை (virtual banking) வழக்கமான வங்கிமுறையுடன் ஒப்பிழும்பொழுது பரிவர்த்தனைகளுக்கான செலவையும் நேரத்தையும் பெருமளவுக்கு குறைக்கின்றது.

ஆர்.டி.ஜி.எஸ் (RTGS), நெஃப்ட் (NEFT)

  • இது ஒரு வங்கியின் வாடிக்கையாளர் தனது கணக்கிலிருக்கும் பணத்தினை மற்ற வங்கியின் எந்த ஒரு கிளையில் கணக்கு வைத்திருக்கும் மற்றொரு வாடிக்கையாளருக்கு பணத்தினை விரைவாக மாற்றும் முறைகளாகும்.
  • இவ்வகை பணபரிமாற்றங்கள் இருவகைப்படும்: ஆர்.டி.ஜி.எஸ். மற்றும் நெஃப்ட். இதில் நிகழ்நேர பெருந்திரள் தீர்வுகள் (Real Time Gross Settlements –RTGS ஆர்.டி.ஜி.எஸ்) என்பது பெயரில் குறிப்பிட்டுவாறு பரிவர்த்தனைக்காக காத்திருக்கும் நேரம் ஏதும் இல்லாமல் நிகழ்நேரத்திலேயே கணக்கீடு ஏதும் இன்று நடைபெறுகிறது.
  • மொத்த பணமதிப்பு தீர்வ்ய் என்பதன் பொருள் பணப்பரிவர்த்தனைகள் அறிவுறுத்தலின்படி ஒன்றன்பின் ஒன்றாக தீர்க்கப்படுகிறது என்பதாகும்.
  • தேசிய மின்னணுவழி பணப்பரிவர்த்தனை (National Electornic Funds Transfer – NEFT – நெஃப்ட்) என்பது வலைத்தள இணைப்பின் மூலமாக ஏதேனும் ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் மூலம் மற்றொரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கணக்கு வைத்திருக்கும் தனி நபர்கள், வர்த்தகர்கள், மற்றும் நிறுவனங்கள் பணம் பெற்றுக்கொள்ளும் மூறையாகும்.
  • இதில் நெஃப்ட் அரைமணிக்கொருமுறையான தொகுப்பாக பணப்பரிவர்த்தனையை மேற்கொள்கிறது. அனைத்து வங்கி வேலைநாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 7 மணிவரை மொத்தம் 23 தொகுப்புகளாக பணிப்பரிவர்த்தனை நடைபெறுகிறது. இதில், பணப்பரிவர்த்தனை நடைபெற்ற அதே நாளில், பணத்தை பெறுபவர் காலை 8 மணிமுதல் மாலை 6.30 வரையிலான தொகுப்பில் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் மாலை 6.30 மணிக்குமேல் இரவு 7 மணி வரையிலான நேரத் தொகுப்பில் பரிமாற்றம் நிகழ்ந்தால் அதே வேலைநாளிலோ அல்லது அடுத்த வேலைநாளிலோ முடிவுறும். இவ்விரு முறைகளும் இந்திய ரிசர்வ் வங்கியின் பார்வையில் நடைபெறுகிறது.
NEFT RTGS
தேசிய மின்னணு வழி பணப்பரிவர்த்தனை நிகழ்நேர பெருந்திரள் தீர்வுகள்
தொகுப்பாக பரிமாற்றம் செய்யப்படுகின்றது. எனவே தாமதமாகும். நிகழ்நேரத்தில் பரிமாற்றம். எனவே விரைவாகச் செயல்படும்.
நேரம் : காலை 8 மணிமுதல் மாலை 6.30 மணிவரை (மாலை 12.30 வரை மட்டும் சனிக்கிழமைகளில்) நேரம் காலை 9 மணிமுதல் மாலை 4.30 வரை (மாலை 1.30 வரை சனிக்கிழமைகளில்)
குறைந்தபட்ச அளவு கிடையாது. குறைந்தபட்ச அனுப்பும் தொகை ₹2 இலட்சம்

தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (Automated Teller Machine)

  • தானியங்கி பணம் வழங்கும் இயந்திர முறை 1967-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த தலைமுறை தானியங்கி பணம் வழங்கும் முறை நேரடித் தொடர்பினை தவிர்ப்பதாக இருக்கும். இந்த நேரடி தொடர்பற்ற ஏ.டி.எம். மூறை ஸ்மார்ட் கைபேசி வசதியில் உள்ள ஆப்பிள் பே, கூகுள் வாலட் போன்ற பணப்பரிவர்த்தனை முறைகளை போன்றது.
  • சில வெளிநாடுகளில் நேரடி தொடர்பற்ற ஏ.டி.எம். முறைகள் கிடைக்கின்றன. இந்தியாவில் பையோமெட்ரிக் முறையில் அறிந்து பணம் வழங்கும் முறைகள் கத்தார் தேசிய வங்கி ஏ.டி.எம் இயந்திரங்களில் பயன்படுத்தப்படுகிறது. இம்முறைகள் ஏ.டி.எம்.களில் நடைபெறும் பாதுகாப்பற்ற பணப்பரிவர்த்தனையின் சிக்கல்களைத் தவிர்ப்பதாக இருக்கும்.

பே.டிஎம் (Paytm)

  • பேடிஎம் என்பது இந்திய மின்னணு வர்த்தக பணம் வழங்கும் முறையாகும். பணம் வழங்கும் வங்கி (Payment Bank) என்பதன் விரிவாக்கம் தான் பே.டிஎம் எனப்படுகிறது. இது ஆகஸ்ட் 2015ல் இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று ஆரம்பிக்கப்பட்டதாகும். இவ்வங்கி விஜய் சர்மா கேல்கர் என்பவரின் 51 சதவிகித பங்குகள், ஒன்97 கம்யூனிகேசன்ஸ் (One97 Communications) நிறுவனத்தின் 39 சதவிகித பங்கிகள், மற்றும் ஒன்97 கம்யூனிகேசன்ஸின் துணைநிறுவனத்தின் 10 சதவிகித பங்குகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தனி நிறுவனம் ஆகும்.

பற்று அட்டை (Debit Card) மற்றும் கடன் அட்டை (Debit Card and Credit Card)

பற்று அட்டை என்பது வாடிக்கையாளர் தனது வங்கிக் கணக்கிலிருக்கும் பணத்தை தானியங்கி இயந்திரத்தின் மூலம் பணம் எடுப்பது, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களை வழங்குவது போன்ற பணப்பரிவத்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் அட்டையாகும்.

கடன் அட்டை என்பது, அந்த அட்டையை வழங்கிய நிறுவனத்தில் உறுதியளித்த நபர்களால் பெறப்படும் அட்டையாகும். இவ்அட்டையைக் கொண்டு பொருட்கள் மற்றும் பணிகளுக்கான கட்டணங்களை செலுத்தலாம். அவ்வாறு செலுத்தப்பட்ட தொகையுடன், ஒத்துக்கொள்ளப்பட்ட கூடுதல் கட்டணத்தையும் சேர்த்து பின்னர் கடன் அட்டை வழங்கிய நிறுவனத்துக்கு அவர் செலுத்த வேண்டும். பெரும்பாலும் வங்கிகள்தான் கடன் அட்டைகளை வழங்குகிறது. கடன் அட்டை முறை என்பது கடன் வழங்கும் முறையின் ஒரு நீட்சி ஆகும்.பல்வகைப்பட்ட சிக்கலான கட்டணமுறைகள் வாடிக்கையாளர்கள் கடன் அட்டை கொண்டு பொருட்களை வாங்குவதைக் கட்டுப்படுத்துகிறது.

செயல்படாத சொத்து (Non-Peforming Assets)

  • கடன் வாங்குபவர் தொடர்ந்து 90 நாட்களில் வட்டியோ அல்லது கடன்தொகையின் பகுதியையோ செலுத்தாமல் இருந்தால் அதை செயல்படாத சொத்து என்கிறோம். இவ்வகையான செயல்படா சொத்துக்கள் நிதிநிறுவனங்களுக்கு மிகப்பெரும் பிரச்சனையாக இருக்கும்.
  • ஏனெனில், அவைகள் தங்களது வருமானத்திற்கு கடனுக்கான வட்டியை சார்ந்தே இருக்கும். இப்பொழுது, அவ்வகை சொத்துக்களின் மதிப்ப்ய் ₹10 லட்சம் கோடி அளவுக்கு இருக்கிறது. இதன் விளைவாக, வங்கிகளில் மூலதனப் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆகவே, இந்திய அரசு ஏழை மக்களின் வரிப்பணத்தினை பயன்படுத்தி அப்பற்றாக்குறையை சரிசெய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறது.
  • ஏற்கனவே ₹2 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறைக்கான பணத்தை இந்திய அரசு செலுத்தியுள்ளது. 2018-19ஆம் ஆண்டுகளில் ₹68,000 கோடி மத்திய அரசு வங்கிகளுக்கு செலுத்தியுள்ளது. இவ்வாறு செயல்படா சொத்துக்கள் சாதாரண மக்களை பாதிக்கின்றது.

வங்கிகள் இணைப்பு (Merger of Banks)

  • 2017ஆம் ஆண்டு மைய அரசின் அமைச்சரவைக் குழுகூடி இந்திய ஸ்டேட் வங்கி குழுவின் ஐந்து இணை வங்கிகளை இணைப்பதற்கான முடிவை எடுத்தது. இதற்காக சட்ட மசோதா பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
  • ஐந்து இணை வங்கிகளுடன் பாரதிய மகிளா வங்கியும் இணைக்கப்பட்டு பாரத ஸ்டேட் வங்கியாக ஏப்ரல் 1, 2017 முதல் செயல்படத் தொடங்கியது. இந்த இணைப்பினால் உலகிலுள்ள முதல் 50 வங்கிகள் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கியும் இடம்பெற்றது.
  • பைக்கனர் ஸ்டேட் வங்கி, ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி மற்றும் திருவாங்கூர் ஸ்டேட் வங்கி ஆகியவை இணைக்கப்பட்ட இணைப்பு வங்கிகள் ஆகும்.
  • இதற்கு முன்னரே, இந்தூர் ஸ்டேட் வங்கி, சௌராஸ்டிரா ஸ்டேட் வங்கி ஆகிய இரு வங்கிகள் இணைக்கப்பட்டிருந்தன. இணைப்பிற்குப் பிறகு, பாரத ஸ்டேட் வங்கியின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 37 கோடியாகவும், கிளைகளின் எண்ணிக்கை 24 ஆயிரமாகவும், தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்களின் எண்ணிக்கை 60 ஆயிரமாகவும் இருக்கிறது.

பணச்சந்தை (Money Market)

அதிக நீர்மைத் தன்மையை கொண்டதும் குறுகியகாலத்தில் முதிர்ச்சியுறுவதுமான நிதிக் கருவிகளை கையாளும் சந்தையே பணச் சந்தை எனப்படுகிறது. ஒருநாள் முதற்கொண்டு ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் நிதிக் கருவிகள் இச்சந்தையில் கையாளப்படுகிறது. இங்கு கையாளப்படும் நிதிக்கருவிகள் அரசுப் பத்திரங்கள், வணிகப் பத்திரங்கள், அழைப்புப் பணம், வைப்புச் சான்றுகள், வங்கியாளர் ஏற்புகள், மாற்றுச் சீட்டுகள், மறு வாங்கல் ஒப்பந்தங்கள், கருவூல உறுதிச் சீட்டுக்கள், அந்நிய செலாவணிகள் போன்றவை ஆகும். இவைகள் அனைத்தும் ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் வகையிலான கருவிகள் ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகள், மேம்பாட்டு வங்கிகள், வட்டார வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் இதர அமைப்புசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவை குறுகிய கால நிதியை பணச்சந்தையில் அளிக்கின்றது.

மூலதனச் சந்தை (Capital Market)

  • நீண்டகால நிதிக் கருவிகளை வாணிபம் செய்யும் சந்தை மூலதனச் சந்தை எனப்படுகிறது. உற்பத்தி நோக்கில் நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு தேவைப்படும் நிதியினை திரட்டும் இடமாக மூலதனச் சந்தை இருக்கிறது. மூலதனச் சந்தையில் பயன்படுத்தப்படும் பாரம்பரியமான நிதிக் கருவிகள் கடன் பத்திரங்களும் சமபங்குகளும் ஆகும். ஆனால் இப்பொழுது அக்கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • மேற்கூறியவையுடன் அந்நிய செலாவணி, முன்பேர வர்த்தகம் மற்றும் இதர கடன் சாதனங்களும் அடங்கும். இச்சந்தையில் தனி முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், நிதிக் கழகங்கள், வங்கிகள், அரசு, பங்கு சந்தைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களை கடனளிப்பவர்கள், கடன்பெறுபவர்கள் மற்றும் வசதி செய்யும் நிறுவனங்கள் என மூன்று வகையாக பிரிக்கலாம்.

பணமதிப்பு நீக்கம் (Demonetization)

  • பணமதிப்பு நீக்கம் என்பது அரசின் சட்டப்பூர்வ பணத்தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட அலகிலான பணத்தினை மதிப்பௌ செல்லாது என அறிவிக்கும் செயலாகும். அந்த பணம் பணச்சுழற்சியிலிருந்து நீக்கப்பட்டு அந்த இடத்தில் வேறு வடிவிலான பணம் இடம்பெறும். இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் நாள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ₹500 மற்றும் ₹1000 மதிப்பிலான காகிதப்பணம் மதிப்பு நீக்கப்பட – அவ்வாறு மதிப்பு நீக்கப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பில் 99 சதவிகிதம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு திரும்பியது.

பண மதிப்பு நீக்கத்தின் நோக்கங்கள்

  1. கருப்புப் பணத்தினை ஒழிப்பது,
  2. இலஞ்சத்தை தடுப்பது
  3. தீவிரவாதத்திற்கு பணம் செல்வதை தடுப்பது மற்றும்
  4. கள்ளப் பணத்தினை தடுப்பது ஆகியன.

தொகுப்புரை

ஒரு நாட்டின் வளர்ச்சிச் செயல்பாட்டில் நிதித் துறை முக்கியபங்கு வகிக்கின்றது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. வருமானத்தை விட குறைவாகச் செலவு செய்வோரிடமிருந்து வருவாய்க்கு அதிகமாகச் செலவு செய்வோருக்கு அதாவது நிகரச் சேமிப்பாளர்களிடமிருந்து நிகரக் கடன் வாங்குவோருக்கு பணம் பரிமாறும் அமைப்பாக நிதி நிறுவனங்கள், கருவிகள் மற்றும் அங்காடிகளை உள்ளடக்கிய பண அமைப்பு செயல்படுகின்றது. வணிகவங்கிகள் தங்கள் செயல்பாடுகளை மாற்றியமைத்தல் அவைகளில் செயல்திறனை மேம்படுத்தியது மூலமாக நிதியியல் சீர்திருத்தக் கொள்கைகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் 2010களில் செயல்படா சொத்துக்களின் அளவு கணிசமான அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!