மக்களாட்சி Notes 11th Political Science
11th Political Science Lesson 5 Notes in Tamil
5. மக்களாட்சி
மக்களாட்சியின் வரையறை மற்றும் வகைகள்
மக்களாட்சி என்ற சொல் , கிரேக்க சொற்களான “டெமொஸ்” மற்றும் “கிரேட்டோஸ்” என்ற இரு சொற்களில் இருந்து உருவானது. கிரேக்க மொழியில் டெமோஸ் என்றால் மக்கள் என்றும் “கிரேட்டோஸ்” என்றால் ஆட்சி என்றும் பொருள்படும். இவ்விரு வார்த்தைகளின் இணைப்பிலிருந்து தான் மக்களாட்சி என்ற சொல் பிறந்தது. இதற்கு மக்களின் ஆட்சி அல்லது மக்களால் ஆளப்படுகிண்ற ஆட்சி என்பது பொருள்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து மக்களாட்சி என்பது பெரிதும் விவாதிக்கப்படுகிற ஒரு முக்கியமான கருத்தாக இருந்து வருகிறது. இருபத்தியோராம் நூற்றாண்டில் இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. இதன் பொருளானது சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, கால இடைவெளிகளில் பல அறிஞர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் தத்துவஞானிகளால் வெவ்வேறு விதமாக விளக்கம் கூறப்பட்டு வந்துள்ளது. சக்தி வாய்ந்த கருத்தாக்கங்களான உரிமைகள், சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் மற்றும் அனைத்து மதங்களையும் மக்களாட்சியானது தன்னகத்தே கொண்டுள்ளது. இறையாண்மையுள்ள மக்களாட்சியில் இவை அனைத்துமே தொடக்கம் பண்டைய கிரேக்கத்தில் இருந்தாலும் தற்போதைய நவீன கால மக்களாட்சி முறையானது பிரிட்டனில் இருந்தே தொடங்கி வந்துள்ளது.
ஒரு நாட்டின் சமூக அமைப்பிம் வகைமுறை அல்லது தேசியத்தின் அடிப்படையில் அங்கு மக்களாட்சி அமைகிறது. மக்களாட்சியின் வகையையும், அதன் செயல்பாட்டையும் ஒரு நாட்டின் சமுக அமைப்பு முறையே தீர்மானிக்கிறது. சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை உருவாக்க மக்களாட்சி அவசியமாகீறது. மேலும் அரசியல் மற்றும் பிற அமைப்புகள் மூலமாக சமத்துவ சமுதாயத்தை நிலைநாட்ட இது உதவுகிறது.
தற்காலத்தில் மக்களாட்சி, மக்களால் மிகவும் விரும்பக்கூடிய ஒரு அரசாங்க முறையாகத் திகழ்கிறது. மேலும் உலக மக்களால் உயர்ந்த அரசியல் கருத்தாக்கமாக இது உருவாகி உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து மக்களாட்சி முறையானது பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியது. பேச்சு சுதந்திரத்திற்கு ஒரு முக்கியமான கருவியாக மக்களாட்சி முறை உள்ளது.
மக்களாட்சி: தத்துவவாதிகளின் வரையறை
மக்களாட்சி என்பது ஒரு மகிழ்ச்சியான அரசாங்க வகையாகும். இவ்வகை அரசில் எவ்வளது குழப்பங்கள் இருந்தாலும் எந்த வித பாகுபாடுமின்றி அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்கும் அதன் மூலம் சமத்துவ சமுதாயத்திற்குமான வழி உள்ளது.
- சாக்ரடீஸ் (Socrates)
ஓர் அரசின் மகிமையே அதன் மக்களாட்சியில் உள்ள சுதந்திரம்தான். எனவே மக்களாட்சியானது இயற்கையாகவே அரசில் சுதந்திரம் இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது.
பிளாட்டோ
ஓர் மக்களாட்சி அரசமைப்பின் அடித்தளமே சுதந்திரம்தான். மக்கள் இதை விரும்பக் காரணமே, இந்த அரசமைப்பில்தான் அனைவருக்கும் சமமான அளவில் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கும்.
- அரிஸ்டாட்டில் (Aristotle)
மக்களாட்சியின் பண்புகள்
- மக்களாட்சி என்பது தனிமனித சுதந்திரத்தை காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் உள்ள ஓர் ஆட்சி முறையாகும்.
- தனிமனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை உள்ளடக்கிய பெரும்பான்மையோரின் ஆட்சி என்ற கொள்கை அடிப்படையில் மக்களாட்சி அமைந்துள்ளது.
- மக்களாட்சியானது ஆட்சி அதிகாரத்தை வட்டார மற்றும் உள்ளூர் அளவில் மக்களுக்கருகே கொண்டு செல்கிறது. இது, ஒட்டு மொத்த அதிகாரமும் மத்தியிலே குவிக்கப்பட்டிருக்கும் முந்தைய அரசு முறைக்கு எதிராது. இதன் முக்கிய அம்சமே, மக்களுக்கு தாங்கள் தேர்ந்தெடுத்த அரசிடம் கேள்வி கேட்கும் உரிமை உள்ளது என்பது மற்றும் மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு மக்கள் எளிதாக அணுகக் கூடிய அளவிலும், அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுப்பதும் அரசின் கடமை என்பதும் ஆகும்.
- மக்களாட்சியின் தலையாய பணியே
- சட்டத்தின் முன் அனைவரும் சமம்,
- அனைவருக்கும் சமமான சட்ட பாதுகாப்பு
- பேச்சுரிமை
- மத சுதந்திரம்
- அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் ஏற்பாடு செய்யவுமான உரிமை போன்றவைகளும் மற்றும் மனிதனின் அடிப்படை உரிமைகளை காப்பதுமேயாகும்.
- மக்களாட்சியில் மட்டுமே சுதந்திரமான மற்றும் நேர்மையான அனைத்து குடிமக்களும் பங்கேற்கும் வகையில் தேர்தல் நடைபெறும் .
- மக்களாட்சியானது, அரசாங்கங்கள் சட்டத்தின் ஆட்சிஅடி செயல்படுவதை உறுதிசெய்து. மேலும் அனைத்து குடிமக்களும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதையும், அவர்களது உரிமைகள் அரசமைப்பு சட்டங்களினால் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்கிறது.
- மக்களாட்சி என்பது பல்வேறு அரசியல் முறைகளைக் கொண்ட ஒன்றாகும். மக்களாட்சி முறையானது ஒவ்வொரு நாட்டின் அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு வாழ்வினைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
- அரசியல் அமைப்பில் குடிமக்களின் பங்கேற்பை மக்களாட்சி உறுதி செய்கிறது மேலும் அவர்களின் உரிமைகளையும், மற்றும் சுதந்திரங்களையும் பாதுகாக்கிறது.
- அரசியல் சார்ந்த அமைப்புகளில் குடிமக்கள் பங்கேற்பதையும் அவர்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் மக்களாட்சி உறுதிசெய்கிறது. உயர்ந்த விழுமியங்களான சகிப்புத்தன்மை, ,ஒத்துழைப்பு மற்றும் ஒருமித்த கருத்துக்கள் ஆகியவை மக்களாட்சி நிலைபெற்ற சமுதாயங்களில் காணப்படுகின்றன.
- நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் வார்த்தைகளில் கூறினால், “சகிப்பின்மையே கூட ஒரு வகையான வன்முறைதான், உண்மையான மக்களாட்சி மலர இதுவே மிகப்பெரிய தடையாகும்”.
- மக்களாட்சி முறை அரசாங்கத்தில் அதிகார மற்றும் குடிமை பொறுப்புகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடமே உள்ளது.
- மக்களாட்சி முறை என்பது மக்களால் நடத்தப்படும் ஆட்சி என்ற கொள்கையை வலியுறுத்துகிறது. நேரடி மக்களாட்சி அல்லது பிரதிநிதித்துவ மக்களாட்சி முறை மூலமாக சட்டமியற்றுதல், கொள்கை உருவாக்கம் மற்றும் அரசின் செயல்பாடுகளில் அனைத்து குடிமக்களின் பங்கேற்பை இது உறுதிசெய்கிறது. மேலும் அனைத்து குடிமக்களும் தங்களது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் வாய்ப்பையும் இது வழங்குகிறது.
- மக்களாட்சி என்பது பொதுவாக மக்களால் நடத்தப்படும் அரசாங்கம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தில் இறையாண்மையானது ஒட்டுமொத்த மக்களிடம் உள்ளது. இது மக்களால் நேரடியாகவோ அல்லது இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மூலமாகவோ செயல்படுத்தப்படுகிறது.
மக்களாட்சியின் வகைகள் (Types of Democracy)
மக்களாட்சி அதன் செயல்பாட்டையும் நோக்கங்களையும் பொறுத்து பல்வேறு விதங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- அரசியல் மக்களாட்சி (Political Democracy)
- சமூக மக்களாட்சி (Social Democracy)
- தொழில்சார் மக்களாட்சி (Industrial Democracy)
- பொருளாதார மக்களாட்சி (Economic Democracy)
- முற்றதிகார மக்களாட்சி (Rotalitarian Democracy)
- தீவிர முன்னேற்றவாத மக்களாட்சி (Radical Democracy)
- பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சி (Plebiscitary Democracy)
அ) அரசியல் மக்களாட்சி
- அரசியல் மக்களாட்சியில் அரசாங்கத்தில் குடிமக்கள் தங்களின் பங்கேற்பின் மூலமாக பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு பதில்சொல்ல கடமைப்பட்டவர் ஆவர்.
- மக்களின் நேரடி ஈடுபாட்டின் மூலமோ அல்லது அவர்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்களின் மூலமோ மக்களாட்சி செயல்படுகிறது. இது மக்களின் துவக்கமுறை (Popular Initiative) என்று அறியப்படுகிறது.
- இதைப்போலவே ஒரு சட்ட முன்வரைவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உருவாக்கும்போது அதற்கு மக்கள் தங்கள் வாக்கின் மூலமாக ஒப்புதல் அளிக்கின்றனர். இது பொது மக்கள் வாக்கெடுப்பு (Referendum) என்று அறியப்படுகிறது.
- இதில் இரண்டாவது வகை மக்களாட்சி முறை , பிரதிநிதித்துவ மக்களாட்சி முறை எனப்படும். இதில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை குறிப்பிட்ட சில காலத்திற்கு தேர்ந்தெடுக்கிறார்கள். இப்பிரதிநிதிகள் மக்களின் சார்பாக கொள்கைகளை தீர்மானிக்கிறார்கள். இந்த பிரதிநிதித்துவ மக்களாட்சி முறையே உலகின் பிரதான மக்களாட்சி முறையாக பல்வேறு நாடுகளில் உள்ளது.
- அதே சமயத்தில் நேரடி மக்களாட்சி முறையானது கூட்டாட்சி குடியரசான சுவிட்சர்லாந்து நாட்டில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.
ஆ) சமூக மக்களாட்சி
- சமூக, பொருளாதார கொள்கைகளுக்கு ஊக்கம் அளிக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கருத்துகளின் ஒன்றிணைந்த சேர்க்கையாக இது உள்ளது. இம்மக்களாட்சி முறையானது பொருளாதாரத்தையும், மக்களின் பங்களிப்பையும் வலுப்படுத்தி சமூக நீதியையும், சமூக சமத்துவத்தையும் மேம்படுத்துகிறது.
- சமூக மக்களாட்சியானது பாலினம், பண்பாடு, நம்பிக்கைகள், மரபுகள் மற்றும் விழுமியங்களில் சமூக சமத்துவத்தை நிலைநாட்டுவதை அடிப்படைக் கொள்கையாக கொண்டுள்ளது.
- புகழ்பெற்ற பிரெஞ்சு சிந்தனையாளர் அலெக்ஸ் டி டக்வில்லி (Alexis De’ Tocquville) அமெரிக்காவின் அரசியல் முறையை சிறந்த மக்களாட்சி முறைகளுள் ஒன்று என்று புகழ்கிறார். இது பிரபுத்துவ முறைக்கு எதிரானது என்கிறார்.
- அனைவருக்குமான சுதந்திரம் மற்றும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளே மனித உரிமைகளுடனான வாழ்விற்கு அடிப்படை என்று சமூக மக்களாட்சி வலியுறுத்துகிறது. மேலும் ஒவ்வொரு தனிமனிதனையும் அவர்களின் உழைப்பின் மூலம் வாழ்வில் வெற்றிபெற அவனை இயன்றவனாக்குகிறது.
- சமத்துவ வளர்ச்சியே சுதந்திரத்திற்கும், சுதந்திரத்தின் வளர்ச்சியே ஒரு நாட்டின் சிறந்த மக்களாட்சிக்கும் அடிப்படை என்று சமூக மக்களாட்சி வலியுறுத்துகிறது.
இ) தொழில்சார் மக்களாட்சி
- தொழில்சார் மக்களாட்சி என்பது தொழிற்சாலைகளில் மக்களாட்சி கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் மேம்படுத்தி அவர்களைப் பொறுப்புடன் செயலாற்ற வைக்கும் முறையாக இம்மக்களாட்சி முறை உள்ளது.
- முடிவுகள் எடுப்பதில் நிர்வாகத்துடன் தொழிலாளர்கள் இணைந்து செயல்படுவதை இம்மக்களாட்சி முறை ஊக்குவிக்கிறது. மேலும் இது தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்துக்கிடையே ஒரு இணக்கமான சூழல் ஏற்படவும், அதன் மூலம் பணியாளர்களின் திறன் மேம்படவும் உதவுகிறது. இதனால் நிர்வாகத்தின் நோக்கமே தொழிலாளர்களின் நோக்கமாக மாறி அதிக உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
- இந்த மக்களாட்சி முறையானது சமுதாய மற்றும் தனிமனித தேவைகளை நிறைவேற்றி , அவற்றின் ஒட்டுமொத்த நலனிற்கு பயன் விளைவிப்பதாக உள்ளது. மேலும் இது தொழிலாளர்களைத் தொழிலின் பங்குதாரர்களாக ஆக்குவதன் மூலம் அவர்களை ஆற்றலுறச் செய்கிறது.
- நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களின் இணைந்த செயல்பாட்டின் மூலமாகவே சமுதாய வளர்ச்சி மற்றும் நாட்டின் வளர்ச்சி சாத்தியப்படும், உற்பத்தி பெருகும் என்று இம்மக்களாட்சி முறை வலியுறுத்துகீறது.
- சிறந்த உற்பத்தி மற்றும் இணக்கமான சுழலின் வழியே இந்த மக்களாட்சி முறை நாட்டின் மேம்பாடு, வளர்ச்சி மற்றும் அமைதிக்கு வழிவகுக்கிறது.
ஈ) பொருளாதார மக்களாட்சி
- பொருளாதார மக்களாட்சி என்பது பல்வேறு வகுப்புகளுக்கிடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும் அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி, சமூக மற்றும் பொருளாதார வேறுபாடுகளையும், ஏழை – பணக்காரன் என்ற இடைவெளியை குறைப்பதுடன் பொருளாதார உற்பத்தி பெருக மக்களாட்சி முறையில் தகுந்த சூழலை ஏற்படுத்துவதும் பொருளாதார மக்களாட்சியின் அடிப்படைப் பண்புகளாகும்.
- “பணியிடத்தில் மக்களாட்சி” மற்றும் “தொழிலாளர்கள் நிறுவனத்தை தங்களது உடைமையாகக் கருதுதல்” போன்றவை சமத்துவத்தை ஊக்குவித்து வளத்தை மக்களாட்சி முறையில் மேம்படுத்த உதவுகிறது.
- பொருளாதார சுதந்திரத்தின் மூலமாக, மனிதனின் கண்ணியமான வாழ்விற்கு சமுதாயத்தையும் மற்றும் பொருளாதாரத்தையும் சரியான விகிதத்தில் இணைப்பதே சாத்தியமான வழியாகும் என்று பொருளாதார மக்களாட்சி கூறுகிறது.
- பொருளாதார உரிமைகளும், சமூக சமத்துவமும் இந்த மக்களாட்சி முறையின் அடிப்படையாக உள்ளது.
உ) முற்றதிகார மக்களாட்சி
- முற்றதிகார மக்களாட்சி முறையில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த பின் வேறு எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரமற்றவர்கள் ஆவர்.
- மக்கள் பிரதிநிதிகளே நாட்டின் அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றனர். இந்த முறை மக்களாட்சியில் மக்கள் பிரதிநிதிகள் தேர்தல்கள் மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அவர்கள் வாக்களித்த மக்களை விடம் மேம்பட்டவர்களாகவே உள்ளனர்.
- மக்களாட்சி முறையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருந்தாலும் சர்வாதிகார முறையிலேயே ஆட்சி புரிகின்றனர். மக்களின் விருப்பங்களை விட ஆட்சியாளர்களின் கொள்கைகளும் ஆளும் கட்சியின் சித்தாந்தமுமே உயர்வாக இந்த மக்களாட்சி முறையில் காணப்படுகிறது.
- மக்களின் நலன் என்ற பெயரில் மக்களின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதும், பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்தை பறித்து ஒட்டுமொத்த மக்களையும் முழுமையான கட்டுப்பாடில் வைத்திருப்பதும் இதன் பண்புகள் ஆகும்.
- முற்றதிகார மக்களாட்சி என்பது நாட்டின் பொருளாதாரத்தின் மேல் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும் அதன் மூலம் இது மக்களையும் கட்டுப்படுத்துகிறது.
ஊ) தீவிர முன்னேற்றவாத மக்களாட்சி (Radical Democracy)
- இந்த மக்களாட்சி முறையை புகழ்பெற்ற இந்திய அரசியல் சிந்தனையாளர் எம்.என்.ராய் அவர்கள் சிறந்த மக்களாட்சி முறை என்று பரிந்துரைத்தார். இந்த முறையில் மட்டுமே உண்மையான மக்களாட்சி மலரும் என்று நம்பினார்.
- இந்த மக்களாட்சி முறையில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் மக்களுக்கு நேரடியாக பதிலளிக்க கடமைப்பட்டவர்கள் ஆவர். தீவிர முன்னேற்றவாத மக்களாட்சியானது மனிதநேயத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமியற்றுபவர்களைவிட மக்களே அரசியல் அதிகாரத்தின் உண்மையான தலைவர்கள் என்று இது கூறுகிறது.
- மக்களிடமே அதிகாரம் உள்ளது. மக்களே நாட்டின் மன்னர்கள் ஆவர். ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசு ஆகும்.
- அவைகளின் ஒன்றிணைப்பில் அரசும் மற்றும் அரசாங்கமும் உருவாகின்றன. இந்த கிராம குடியரசுகளே மத்திய மாநில அரசுகளில் ஆதிக்க செலுத்துகின்றன.
- மக்கள் பங்களிப்புடன் கூடிய உண்மையான மக்களாட்சியை தீவிர முன்னேற்றவாத மக்களாட்சி நிலைநாட்டுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அதிகாரிகளும் மக்களுக்கு பொறுப்புடையவர்களாக உள்ளனர். தேவைப்பட்டால் அரசாங்கத்தை மாற்றும் அதிகாரம் மக்களிடம் உள்ளது.
எ) பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சி (Plebiscitary Democracy)
- பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சியில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை அல்லது கட்சியை தேர்ந்தெடுத்தல், பொதுவான பிரச்சனைகளில் முடிவெடுத்தல், புதிய அரசியல் அமைப்பைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் மாகாண சுய நிர்ணயம் போன்றவற்றில் பொது வாக்கெடுப்பின் மூலம் தங்களது நிலைப்பாட்டினை தெரிவிக்கின்றனர்.
- மக்கள் விரும்பினால் ஒரு சட்ட முன்வரைவை கொண்டுவருவதற்கும், கொள்கை உருவாக்குவதற்கும் உரிமை இந்த மக்களாட்சி முறையில் உள்ளது.
- ஒரு குறிப்பிட்ட அளவு ஆதரவை மக்கள் தாங்கள் கையெழுத்திட்ட மனு மூலம் தெரிவித்து தாங்கள் விரும்பிய மாற்றங்களை செய்ய அரசுக்கு பரிந்துரைக்கலாம்.
- மேலும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி சரியாக செயல்படாதபோது அல்லது மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்படும் போது, மக்கள் ஒரு குறிப்பிட்ட அளவு கையெழுத்துக்களை அவருக்கு எதிராக சேகரித்து அதன் மூலம் அவரை திரும்ப அழைக்கலாம்.
மக்களாட்சி என்பது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தளத்தில் வாழும் ஓர் நிதர்சனம்/ மெய்மையாகும்.
- G.D.கோவார்டு கோல் (G.D.Howard Cole)
- மக்களாட்சி என்பது மக்களால் நடத்தப்படும் அரசாங்கம், குறிப்பாக பெரும்பான்மை மக்களால் ஆகும்.
- மக்களாட்சி அரசாங்கத்தில் மேலான அதிகாரம் மக்களிடம் இருக்கும். இந்த அதிகாரத்தை மக்கள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க பயன்படுத்துவர். இங்கு தேர்தல்கள் சீரான இடைவெளியிலும் மற்றும் சுதந்திரமாகவும் நடைபெறும்.
- தாமல் ஜெஃபரசன் (Thomas Jeffaorson)
மக்களாட்சிக் கோட்பாடுகள் (Theories of Democracy)
- ஒரு கருத்தாக்கத்தின் மேம்பாட்யினை வரலாற்று ரீதியாகவும் மற்றும் பல்வேறு நிலைகளில் அதன் வளர்ச்சியையும் விளக்குவதே கோட்பாடு எனப்படும்.
- ஒரு கோட்பாடானது அதன் முக்கியத்துவம் மற்றும் உபயோகித்தலுக்காக பல்வேறு நாடுகளில் பல்வேறு பண்பாடுகளில் சோதித்தறியப்படுகிறது. ஒன்றுக்கொன்று தர்க்கரீதியாக பிணைக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் கோட்பாடானது அமைந்துள்ளது.
- மக்களாட்சி என்ற ஒரு கோட்பாடு பல்வேறு வரலாற்று காலகட்டங்களில் பல்வேறு நாகரீகங்களில் பல்வேறுவிதமாக உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது.
- மக்களாட்சியின் தொன்மை கோட்பாடானது பண்டைய கிரேக்கத்தில் தோன்றியது ஆகும். கிரேக்கத்தின் புகழ்பெற்ற நகர அரசுகள் யாவும் நேரடியான தேர்தல், பொதுக்கொள்கை மீதான விவாதங்கள் மற்றும் பொதுமக்களே முடிவெடுக்கும் முறை போன்ற மக்களாட்சி விழுமியங்களைக் கொண்டிருந்தன.
- கிரேக்கப் பண்பாடு, நாகரிகம் மற்றும் மொழியானது ஐரோப்பா, வட மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மெல்ல பரவத் தொடங்கிய போது இந்த மக்களாட்சியும் ஒரு ஆட்சி முறையாக அங்கெல்லாம் பரவியது.
- கிரேக்க மக்களாட்சி முறையானது மெல்ல பிரதிநிதித்துவ மக்களாட்சியாக வளர தொடங்கியவுடன் அதன் முக்கியத்துவமும் அதன் தற்காலத்தைய பொருத்தமும் அதிகரித்தன.
- பின்பு பிரதிநிதித்துவ மக்களாட்சி முறை அறிவொளி காலகட்டங்களில் ஒரு பிரதான ஆட்சி முறையாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பரவத்தொடங்கியது.
- அமெரிக்க புரட்சி (1775 – 1783) மற்றும் பிரெஞ்சு புரட்சி (1789 -1799) காலங்களில் மக்களாட்சியானது அனைத்து தரப்பு மக்களின் பெரும் கோரிக்கையாக உருவெடுத்தது.
- தற்காலத்தில் மக்களாட்சி என்பது பல்வேறு மக்களாலும், பண்பாடு மற்றும் நாடு, மொழி ஆகியவற்றைக் கடந்துஅனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆட்சி முறையாக மாறிவிட்டது.
- ஒவ்வொரு நாட்டிலும் அவற்றின் பண்பாடு, மரபுகள் மற்றும் விழுமியங்கள் அந்நாட்டின் மக்களாட்சி முறையில் எதிரொலிக்கின்றன. அவை மக்களாட்சி முறையை செழுமைப்படுத்தியுள்ளன. மக்களாட்சி கோட்பாடுகள் அதன் நோக்கம் மற்றும் விளைவுகளை பொறுத்து பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மக்களாட்சியின் தொன்மைக் கோட்பாடு (Classical Democracy)
- பண்டைய கிரேக்கத்தில் நேரடியான மக்களாட்சி முறையாக தொன்மை மக்களாட்சி முறை உருவானது. இந்த மக்களாட்சி முறையானது ஏதென்ஸ் நகரத்தில் தான் முதன் முதலில் கிமு 800 மற்றும் கிமு 500க்கும் இடையே உருவானது.
- ஏதென்ஸ் நகரின் நேரடி மக்களாட்சி முறையில் நகர அரசின் (City State) குடிமக்கள் அனைவரும் சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் ஆவர். அவர்கள் சட்டமியற்றுதலிலும், முடிவுகள் எடுப்பதிலும் நேரடியாக பங்கேற்றனர்.
- குடியுரிமை பெற்ற குடிமக்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததால், அவர்கள் நகரின் பிரதான இடத்தில் கூடுவதற்கும், கூடி விவாதிப்பதற்கும் எளிதாக இருந்தது. அனைத்து குடிமக்களும் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், விவாதிக்கவும் மற்றும் வாக்களிக்கவும் முழு உரிமை இருந்தது. இதுவே தொன்மை மக்களாட்சி என அழைக்கப்பசுகிறது.
- மக்கள் தொகை மெல்ல அதிகரிக்க தொடங்கியவுடன் நேரடியாக கூடுவதும் விவாதிப்பதும் கடினமானது. எனவே மக்கள் பிரதிநிதிகள் மூலம் அரசாங்கத்தை நடத்தும் முறை உருவானது.
- இதில் சட்டமன்றம், மக்கள் நீதிமன்றம், நிர்வாக சபை என மக்களாட்சியின் மூன்று தூண்களும் பின்பு உருவாகின. தொன்மை மக்களாட்சி வெற்றிகரமாக இயங்க இரண்டு நிபந்தனைகள் உள்ளன.
- குடிமக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல் வேண்டும். அப்போது தன அவர்கள் விவாதங்களில் பங்கு பெறவும் முக்கிய பிரச்சனைகளில் வாக்களிக்கவும் இயலும்.
- அனைத்து குடிமக்களையும் அரசியலில் ஈடுபடவைக்கும் அளவிற்கு தொன்மை மக்களாட்சியின் பொருளாதாரம் இருத்தல் வேண்டும்.
தொன்மை மக்களாட்சியின் விதிகளாக கீழ்க்கண்டவைகள் உள்ளன.
- அரசியலின் முதன்மை கருத்தியல்களாக மக்களிடையே சமத்துவம், சுதந்திரம், சட்டம் மற்றும் நீதிக்குரிய மதிப்பு ஆகியவை இருத்தல்.
- அனைவருக்கும் பொதுவான மற்றும் அனைவரையும் சமமாக நடத்தும் நீதி அமைப்பு சமூகத்தின் எல்லா தளங்களிலும் இருத்தல். எளிதானதாக மற்றும் அனைவருக்குமான சுதந்திர அரசியல் வாழ்க்கை முறையும் இருப்பதாகும்.
தொன்மை மக்களாட்சியின் சிறப்பியல்பே அரசின் அனைத்து நிலைகளிலும் மக்களின் பங்களிப்பு இருப்பதே ஆகும். மேலும் உரிமைகள் மற்றும் சலுமைகளை தொன்மை மக்களாட்சியானது அனைத்து குடிமக்களுக்கும் சமமாக வழங்குகிறது.
பாதுகாக்கும் மக்களாட்சி (Protective Democracy)
- தொன்மை மக்களாட்சி மெல்ல வளர்ந்து பின்பு பாதுகாக்கும் மக்களாட்சியாக மாறியது. உரிமைகளைப் பாதுகாக்கும் மக்களாட்சி முறை அரசாக இது இருப்பதால் இந்த மக்களாட்சி முறையானது ‘பாதுகாக்கும் மக்களாட்சி’ என்றழைக்கப்படுகிறது.
- இந்த மூறை மூலம் தனிமனிதர்கள் தங்களது உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக்கொள்கிறார்கள். பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய இந்த பாதுகாக்கும் மக்களாட்சி, உரிமைகளை அடிப்படையாக கொண்டது.
- இது நாட்டு மக்களின் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைக் காப்பதற்கான வழிமுறைகளை கொண்டுள்ளது. பிரிட்டனின் புகழ்பெற்ற அரசியல் சிந்தனையாளடான ஜான் லாக் (1631 – 1704) இந்த மக்களாட்சி முறையை பரிந்துரைப்பவர்களின் முதன்மையானவர் ஆவார்.
- இயற்கை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை, சுதந்திர உரிமை மற்றும் சொத்துரிமை எந்த அளவுக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கிறதோ அந்த அளவிற்கு தன அவர்களின் சுதந்திரமும், வாக்குரிமையும் இருக்கும் என்று லாக் கூறுகிறார்.
- ஜெரமி பெந்தம் (1748 – 1832), ஜேம்ஸ் மில் (1773 – 1836) மற்றும் ஜான் ஸ்டுவட்ட் மில் (1806 – 1873) போன்ற பயன்பாட்டுவாத சிந்தனையாளர்கள் பாதுகாக்கும் மக்களாட்சி முறையை ஆதரிக்கின்றனர்.
- மக்களாட்சியின் அடிப்படை அம்சங்களான தனிமனித சுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதுகாத்தலே பயன்பாட்டு வாதத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். உரிமைகளை பாதுகாத்தலே மக்களாட்சியைப் பாதுகாத்தல் ஆகும்.
- ஜெரமி பெந்தம், ஜேம்ஸ் மில் மற்றும் ஜான் ஸ்டுவார்ட் மில் போன்றோர் மக்களாட்சி மட்டுமே ஒரு மனிதனின் அனைத்து உரிமைகளையும் உறுதியளித்து அவனை பாதுகாப்பதுடன் முன்னேற்றும் என்கிறார்கள்.
- உரிமைகளை அடிப்படையாக கொண்ட பாதுகாக்கும் மக்களாட்சியானது தாராளவாத மக்களாட்சியின் ஓர் அம்சமாகும் என்று இம்மூவரும் கூறுகின்றனர்.
பாதுகாக்கும் மக்களாட்சியின் அடிப்படை அம்சங்கள்
- பாதுகாக்கும் மக்களாட்சியானது மக்கள் இறையாண்மையில் நம்பிக்கை கொண்டுள்ளது.
- மக்கள் இறையாண்மை மற்றும் பிரதிநிதித்துவ மக்களாட்சி இரண்டுமே சட்டப்பூர்வமானவை ஆகும்.
- குடிமக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளைக் காப்பதே ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும்.
- அதிகாரத்துவம் மக்களுக்கு பொறுப்புடையதாக உள்ளது. இதை நிறுவ அவ்வப்போது தேர்தல்கள் நடைபெறும்.
- நீதி, நிர்வாகம் மற்றும் சட்டமன்ற அதிகாரங்களை அதிகாரப் பிரிவினை செய்தல் மூலமே உரிமைகள், சுதந்திரம் போன்றவற்றைக் காப்பதும், சலுகைகளை அனைவருக்கும் சமமாக அளிப்பதும் சாத்தியமாகும்.
- உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட பாதுகாக்கும் மக்களாட்சி அரசமைப்புவாதத்தைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. அரசமைப்பு வாதத்தில் ஆள்பவர் மற்றுல் ஆளப்படுவோர் அனைவரும் அரசமைப்பு வகுத்த விதிகளுக்கும், கொள்கைகளுக்கும் கட்டுப்பட்டவர்கள் ஆவர். அரசமைப்பு மட்டுமே அதிகாரத்தின் ஊற்றாகக் கருதப்படும். இதுவே உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் உத்திரவாதமளிக்கிறது. அரசமைப்பில் தனிமனித உரிமைகள், சங்கங்களின் உரிமைகள், உரிமை மீறல்கள், சுதந்திரத்தின் மீதான அத்துமீறல்கள் என அனைத்தையும் கையாள்வதற்கு சட்ட விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
- இது சட்டமன்றம் , நீதிமன்றம் மற்றும் நிர்வாக அமைப்புகளில் பாதுகாக்கும் மக்களாட்சியை நிலைநாட்டுகிறது. இது அரசுக்கும் குடிமைச் சமூகத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை தெளிவாக காட்டுகிறது.
மக்களாட்சியின் மார்க்சிய கோட்பாடு
- மார்க்சிய கோட்பாடனது மக்களாட்சியை சமூகத்தில் உள்ள வர்க்க அமைப்பின் பின்னணியில் காண்கிறது. இந்த வர்க்க பிரிவினையானது தொழிற்புரட்சி காலத்தில் தோன்றியதாகும்.
- சமுகம் இரு வர்க்கங்களாக பிரிந்திருந்தது. அவை முதலாளிகள் அல்லது உரிமையாளர்கள் வர்க்கம் என்று தொழிலாளிகள் அல்லது பாட்டாளிகள் வர்க்கம் என்று அழைக்கப்பட்டன.
- மார்க்சின் மக்களாட்சிக் கோட்பாடானது எப்போதுமே முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தீற்கு சவால் விடும் வகையிலும், பாட்டாளி வர்க்கம் சுரண்டப்படுவதற்கு எதிரான வகையிலும் தனது அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.
- மார்க்சின் கோட்பாடு தேர்தல் தொடர்பான உரிமைகளை வலியுறுத்தவில்லை. மாறாக பொருளாதார உரிமைகளையே வலியுறுத்தி சமதர்ம மக்களாட்சி உருவாக வேண்டும் என்கிறது.
- மார்க்சிய மக்களாட்சி, முதலாளித்துவத்தின் வீழ்ச்சியையும் அதன் பின் புரட்சியின் மூலம் சமூக மாற்றத்திற்கும் அறைகூவல் விடுகிறது. சமதர்ம சித்தாந்தத்தின் மூலமே அரசியல் அதிகாரம் சாத்தியம் என்றும் இது நாட்டின் வளத்தையும், உற்பத்தி மீதான உரிமையையும் சரிசமமாக மக்களுக்கு பிரித்தளிப்பதன் அடிப்படையில் மட்டுமே நிகழும் என்றும் கூறுகிறது.
- வர்க்க வேறுபாடுகள் , சிறப்பு சலுகைகள் போன்றவற்றை நீக்குவதன் மூலமே சுதந்திரம், சமூக நிலை மற்றும் மக்களாட்சி போன்றவை சாத்தியப்படும் என்று மார்க்சிய மக்களாட்சிவாதிகள் வாதிடுகின்றனர்.
- சமதர்ம சிந்தனையாளர்கள் அனைவருக்குமான கல்வி மூலம் மக்கள் தங்களை தாங்களே ஆள கற்றுக்கொள்வர் என்கின்றனர். மார்க்சின் கோட்பாடு தாராளவாத மக்களாட்சியைப் போலியானது என்று விமர்சிக்கின்றது. அது ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகிறது.
- பொருளாதார ஏற்ற தாழ்வே வர்க்க பிரிவினைக்கு அடிப்படை என்றும் உற்பத்தி மற்றும் அதன் விநியோகம் மீதான உரிமையே வர்க்க பிரிவினையை ஏற்படுத்துகிறது என்றும் மார்க்சிய கோட்பாடு கூறுகிறது.
- ஐரோப்பாவில் உள்ள மார்க்சிய மக்களாட்சிவாதிகள் தேர்தல் மூலமான மக்களாட்சியின் வலிமையான ஆட்சியை ஆதரிக்கிண்றனர். அதுவே சமதர்ம சமுதாயத்தை அடைய அமைதியான மற்றும் சப்பூர்வ வழியாகும். கீழ்க்கண்ட மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மக்களாட்சியில் சமதர்மம் மலர முடியும் என்கின்றனர்.
- மார்க்சிய மக்களாட்சிவாதிகள் அரசை மக்களுக்கு எதிராக குற்றமிழைகின்ற ஒரு நிறுவனமாக பார்க்கின்றனர். நாட்டின் இராணுவத்துக்கு ஒபதிலாக குடிமக்கள் அடங்கிய குடிமக்களின் படை ஏர்படுத்தப்படுதல்.
- அரசை நடத்துவோர் தேர்ந்தெடுக்கப்படுதல் மற்றும் அவர்கள் செயல்படாத நிலையில் அவர்களைத் திரும்ப அழைத்தல்.
- அரசியல் சார்புடைய காவல்துறை முழுவதுமாக நீக்கப்படல்.
- முடியாட்சியை அகற்றுதல்.
மக்களாட்சி பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள்
மக்களாட்சியே சமதர்மத்திற்கான பாதை ஆகும்.- கார்ல் மார்க்ஸ் (Karl Marx)
மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காகவே மக்களாலன அரசாங்க முறை ஆகும். – ——–ஆப்ரகாம் லிங்கன் (Abraham Lincoln)
எளியோருக்கும் வலியோருக்கும் சம வாய்ப்பு வழங்குதல் மக்களாட்சியில் மட்டுமே நடைபெறும் என்பதே என் கருத்து. இது வன்முறையற்ற வழியில் மட்டுமே சாத்தியப்பட வேண்டும்.
- மகாத்மா காந்தி (Mahatma Gandhi)
மக்களாட்சியின் உயர்ந்தோர் குழாம் கோட்பாடு : (Elitist Theory)
- மக்களாட்சியில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் உயர் அடுக்கில் உள்ளோரின் பங்கு தவிர்க்க முடியாதது. பல நூற்றாண்டுகளாக உயர் அடுக்கில் இருப்போர் முக்கிய வளங்களை தங்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர்.
- ஒரு ஆட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர். தொழில் சார்ந்த அல்லது விவசாயம் சார்ந்த சமூகத்தில் சொத்துக்களின் மீதான உரிமையும் உற்பத்தி மீதான, அதிகாரமும் முக்கிய காரணிகள் ஆகும்.
- இச்சமூகங்களில் உயர் அடுக்கில் உள்ளோர் நிலப்பிரபுக்களாகவும் தொழிற்சாலை முதலாளிகளாகவும் உள்ளனர். பின்னர் அவர்கள் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றி ஆளத் தொடங்கி விடுகின்றனர்.
- உயர்ந்தோர் குழாம் மக்களாட்சி கோட்பாட்டாளர்களுள் வில்பிரெடோ பரேட்டோ (1848 – 1923) கெய்டன் மோஸ்கா (1857 – 1941) மற்றும் ராபர்ட் மைக்கேல் (1876 – 1936) ஆகிய மூவரும் முக்கியமானவர்கள் ஆவர்.
- பரேட்டோ மக்களை ஆளும் உயர்ந்தோர் மற்றும் ஆளாத உயர்ந்தோர் என்று இரண்டாக பிரிக்கிறார். ஆளும் உயர்ந்தோரிடம் ஆட்சி அதிகாரம் உள்ளது.
- அவர்கள் தங்களது அதிகாரத்தை கல்வி, சமூக நிலை அரசியல் பதவி தொடர்புகள் மற்றும் செல்வம் மூலம் அடைகின்றனர். இவர்களுடைய பண்புகளை பரேட்டோ உளவியல் ரீதியாக இரண்டாக பிரிக்கிறார்.
அ) நரிகள் : தந்திரத்தின் மூலம் மக்களை ஏமாற்றி ஆள்வர், சூழ்ச்சியின் மூலமாக மக்களின் ஆதரவை பெறுவர். (அ) சிங்கங்கள்: மேலாதிக்கம் பலவந்தப்படுத்துதல் மற்றும், வன்முறை மூலமாக ஆட்சி அதிகாரத்தை அடைவர்.
- மக்களாட்சி மற்றும் சமதர்மம் முதலிய சமத்துவ கருத்துக்களை விமர்சித்து அதற்கெதிராக உயர்குடியின வாதம் வளர்ந்தது. ஆனால் ராபர்ட் மைக்கேல் (Robert Michels) எனும் சிந்தனையாளர் மக்களாட்சி பற்றி மாறுபட்ட கருத்தினைக் கொண்டுள்ளார்.
- மக்களாட்சி முறையில் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு நிர்வாகத்தில் மக்களின் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் பங்கு இருக்கும்படி இருந்தாலும் அவர்களுள் சிறு குழுவினரே அனைவரின் சார்பாகவும் முடிவுகள் எடுத்துக் கொள்கைகளை உருவாக்கி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இதை சிறுகுழு ஆட்சியின் இரும்புச்சட்டம் (Iron Law of Oligarchy) என்று இவர் கூறுகிறார்.
- ஜோசப் அலாய்ஸ் சம்பீட்டர் (Joseph Alois Schumpeter) (1883 – 1950) என்பவர் உயர்குடி மக்களின் ஆட்சி என்ற கருத்தியலை முன்வைக்கிறார். மக்களாட்சி என்பது ஒரு சிறந்த அரசியல் முறையாகும் இதில் சுதந்திரமான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படுகிறது.
- நிர்வாக மற்றும் சட்ட முடிவுகள் இந்த அதிகாரத்தின் மூலம் அரசின் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் அவர்களால் எடுக்கப்படுகிறது. இந்த உயர்ந்தோர் குழாம் கோட்பாடானது ஒரளவுக்கு மார்க்சிய மக்களாட்சி கோட்பாட்டுடன் ஒத்துப்போகிறது.
- பொட்ருட்கள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பெரிய நிறுவனங்கள் அதிகம் செலுத்துகிறது என்ற மார்க்சிய கோட்பாட்டுடன் ஒத்து போகின்ற அதே வேளையில் மக்களாட்சியின் மார்க்சின் அதிகாரவர்க்க கருத்துக்களை இது மறுதலிக்கிறது.
- உயர்ந்தோர் குழாம் கோட்பாடானது தனிமனிதர்கள் மற்றும் குழுக்களுடன் ஒன்றிணைந்து இயங்கி அவர்களின் கருத்து வேறுபாடுகளைக் களைந்து அவர்களின் நோக்கம் நிறைவேற வழிவகை செய்கிறது.
மக்களாட்சியின் பன்மைவாத கோட்பாடு (Pluralist Theory of Democracy)
- பன்மைத்தன்மை என்பது அனைத்தையும் உள்ளடக்கமாக கொண்ட ஒரு கருத்தாக்கம் ஆகும். இது சிறுபான்மையினரின் விருப்பங்கள் மற்றும் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறது.
- எனவே இது தாராளவாத மக்களாட்சியின் அடிப்படைப் பண்புகளை கொண்டுள்ளதாக கூறலாம். இது அதிகாரமானது, அரசு மற்றும் குடிமைச்சமூகத்திடமிருந்து தள்ளி இருக்க வேண்டும் என்றும், பொருளாதாரம் , அரசியல் முதலானவை அதிகாரத்திடமிருந்து பிரித்துவைக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.
- மக்களாட்சி நடைமுறைகளுக்காக சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. குறிப்பாக சட்டமன்றத்திற்கு இரு அவைகள், ஆட்சி அமைப்பிற்கு கூட்டாட்சி முறை என சிலவற்றை இந்த கோட்பாடு பரிந்துரைக்கிறது.
- பன்மைவாத மக்களாட்சியில் சமுகத்தின் பல்வேறுவகையான குழுக்களும் பங்கேற்று தங்கள் உரிமைகளை பாதுகாத்திட இயலும். இந்த முறையிலான மக்களாட்சியில் சமூகத்தின் பல்வேறு வகையான குழுக்களிடம் அதிகாரமானது பகிர்ந்தளிக்கப்படுகிறது.
- அனைத்துக்குழுக்களையும் சமநிலைக்கு ஆற்றலுறச்செய்து அவர்களுக்குள்ளே ஒரு ஆரோக்கியமான சமநிலை போட்டியை இடம்பெறச்செய்கிறது. இதன் மூலம் சமூகத்தின் அனைத்து பிரிவுகளும் பயன்பெறுகின்றன.
- மக்களாட்சிடில் சீரான கால இடைவெளியில் தேர்தல்கள் நடைபெற வேண்டும். அதில் கட்சிகள், குழுக்கள் மற்றும் தனிமனிதர்களிடையே அரசியல் போட்டியை பன்மைவாத சிந்தனை முறையானது பன்மை மக்களாட்சியை தீவிரமாக ஆதரிக்கிறது.
- ஜேம்ஸ் மேடிசன், (James Madison) ஜான் ஸ்டுவர்ட் மில் (John Stuart Mill) மற்றும் டி டாக்வில் (Tocqueville) போன்ற பயன்பாட்டுவாத சிந்தனையாளர்கள் தேர்தல்களின் மூலமே மாறுபட்ட மற்றும் பல்வேறுவிதமான மக்களின் விருப்பங்கள் வெளிப்படும் என்கின்றனர்.
- இது சமூகத்தில் சிறுபான்மையினருக்கு தங்கள் உரிமைகளையும் அதிகாரத்தில் தங்கள் பங்கினையும் கேட்டுப்பெறும் சக்தியை அளிக்கிறது.
- பல்வேறு சிறுபான்மையினரும் இணைந்து பணியாற்றக்கூடிய, ஆளக்கூடிய குழுவாட்சி (Polyarchy) என்னும் ஒரு அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்துகிறது.
- ராபர்ட் டால் (Robert Dhal) எனும் அறிஞர் மக்களாட்சியின் சாராம்சமே குழுவாட்சி (Polyarchy) எனப்படும். பல்வேறு சிறுபான்மை சமூகத்தினரும் இணைந்து பணியாற்றும் அரசியல் அமைப்பில் தான் சிறப்பாக வெளிப்படும் என்கிறார்.
- இந்த முறையில் அரசாங்கத்தின் அதிகாரம் மற்றும் அதிகார வரம்பில் அனைத்து மாறுபட்ட குழுக்களும் சுதந்திரமாக செயல்பட முடியும் என்கிறார். இந்த அமைப்பின் சிறப்பான செயல்பாட்டிற்கு முக்கிய நிபந்தனைகளாக சட்ட செயல்முறைகள், கொள்கைகள், அரசியல் நடவடிக்கைகளுக்கான சட்டப்படியான ஒருமித்த வயப்பு ஆகியன இருத்தல் வேண்டும்.
- ராபர்ட் டாலின் கோட்பாட்டில் பின்பு ஒரு திருத்தம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் மக்களாட்சி செயல்படும் விதத்தை சிறப்பாக விவரிப்பதற்காக உருக்குலைந்த குழுவாட்சி என்ற கோட்பாட்டினை முன்னிறுத்த அந்த திருத்தத்தை ராபர்ட் டால் செய்தார்.
மக்களாட்சியின் ஆழ்விவாதக் கோட்பாடு (Deliberative Theory of Democracy)
- மக்களாட்சியின் நோக்கமே ஆழ்ந்த பொது விவாதங்கள், பரப்புரைகள் மற்றும் வாத பிரதிவாதங்கள் வழியே பொதுமக்களின் நலன் காக்கப்படுவதாகும். இதையே இம்மக்களாட்சி முறை வலியுறுத்துகிறது.
- பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் விவாதங்கள் ஆகியவை கிராம அளவில் வெகு காலமாகவே உறுதியாக உள்ளன. அரசாங்கத்தின் செயல்பாட்டை கீழ்மட்டத்தில் பஞ்சாயத்து அமைப்புகள் வலுப்படுத்துகின்றன.
- ஜேம்ஸ் மில்லரின் கூற்றுப்படி ஆழ்விவாத கோட்பாடானது பங்கேற்பாளர்களின் பொதுவிவாதம், அதன் மூலம் அனைவரின் கருத்தையு, உள்ளடக்கிய முடிவுகள் என்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதன் சிறப்பம்சமே மக்கள் பொறுமையாக மாற்றுக்கருத்தை கேட்பதும், அதன் அடிப்படையில் தங்களது கருத்தில் மாற்றங்கள் கொண்டுவருவதும் தான்.
- பொதுவிருப்பமும், பொது கருத்துமே ஆழ் விவாத கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட மக்களாட்சியின் முக்கிய பண்புகளாகும். செல்வக்கின் அடிப்படையில் இல்லாமல் கருத்துக்களை விவாதித்து ஏற்பதன் மூலமே முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
- உரிமைகளின் அடிப்படையிலான அணுகுமுறையே வளர்ச்சிக்கு வித்திடும். குழுக்களிடையே விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் கருத்துமோதல் வரும் போது அவற்றை மக்களாட்சி நெறி முறையில் ஏற்கத்தக்க வகையில் தீர்வைக் காண இம்முறை ஏதுவாகிறது.
- இந்த மக்களாட்சி முறை மற்ற மக்களாட்சி முறைகளிலிருந்து வேறுபடுகிறது. இது ஒரு மனிதன் தனது சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு சமத்துவம், சமதர்மம் மற்றும் பொதுநலனுக்காக நேர்மையுடன் செயல்படுமளவுக்கு பகுத்தறிவு பெற்றிருப்பான் என்று கூறுகிறது.
- அனைத்து கருத்துகளையும் கேட்டு அவற்றை திறந்த மனதுடன் விவாதித்து பின்பு எடுக்கப்படுகின்ற முடிவுகளே மதிப்புமிக்கவை என்கிறது.
- இந்த மக்களாட்சி முறையானது மாறக்கூடிய தன்மையை அடிப்படையாக கொண்டது. இது ஆழ்ந்து ஆராய்தலையும், விவாதத்தையும் மையமாகக் கொண்டுள்ளது.
- இது வாக்களித்தலை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ள பண்டைய மக்களாட்சி முறையிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. இதன் ஆழமான விவாதங்களே சட்டமியற்றும் முறைக்கு சரியான அடிப்படையாகும்.
- இந்த மக்களாட்சி முறையானது பிரதிநிதித்துவ மக்களாட்சி மற்றும் நேரடியான மக்களாட்சியுடன் இணக்கமாக உள்ளது. நீதி கோட்பாடுகளின் புகழ் பெற்ற சிந்தனையாளர்களான ரால்ஸ் (Rawls) மற்றும் ஹேபர்மாஸ் (Habermas) இருவரும் அரசியல் தேர்வானது முறையாக, சட்டப்படியாக இருத்தல் வேண்டும் என்றும், ஒரு தெளிவான இலக்கை நோக்கிய சுதந்திரமான விவாதம் சமமான மற்றும் பகுத்தறியும் நபர்களிடையே நடந்து அதன் அடிப்படையில் அரசியல் தேர்வுகள் இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
- அதிகாரத்தை பயன்படுத்த பொறுப்பாக்கப்பட்டுள்ள இறையாண்மையுள்ள அமைப்பில் அனைவருக்கும் முழுமையான மற்றும் சமமான உறுப்பினர் பதவி அளிக்கப்படும்.
- அந்த அமைப்பு ஒட்டுமொத்த உறுப்பினர்களின் பொது விருப்பத்தின் அடிப்படையில் செயல்படும். இந்த முறையில் ஆழ் விவாதக் கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட மக்களாட்சியானது செயல்படுகிறது.
நேபாள நாட்டில் ஏப்ரல் புரட்சியும், மக்களாட்சியும்
ஏப்ரல் மாதம் 2006- ஆம் ஆண்டு ஏழு கட்சி கூட்டணி என்ற மக்களாட்சியை ஆதரிக்கின்ற தலைவர்கள் நேபால தலைநகரான காட்மாண்டுவை சுற்றி ஏழு இடங்களில் எதிர்ப்பு கூட்டங்களை நடத்த மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். அதை ஏற்று கூடிய லட்சக்கணக்கான நேபாள நாட்டு மக்கள் எதேச்சாதிகார முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவரவும், முழுமையான மக்களாட்சியை கொண்டுவரப்வும் நேபாள நாட்டுமுடியரசுடன் போராடத் தொடங்கினர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இருந்த இந்த போராட்டம் அரசர் கியானேந்திராவை (King Gyanendra) பதவி விலக வைத்து மக்களாட்சிக்கு வழி வகுத்தது.
பூடானில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மாற்றம்
பூடானின் நான்காவது அரசர் ஜிக்மே சிங்யோ வாங்சக் (Jigme Singye Wangchuck) பூடானின் 20 மாவட்டங்களுக்குப் பயணம் செய்தார். ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மாற்றத்தை விளக்கவே அந்த பயணம். பூடானின் அரசர் அந்நாடு பரம்பரை முடியாட்சியிலிருந்து நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கு மாறவேண்டியதன் அவசியத்தை இந்த பயணத்தில் மக்களிடம் எடுத்துரைத்தார். அவர் 2006-ஆம் ஆண்டு, தான் 34 ஆண்டுகாலமாக அமர்ந்திருந்த அரியாசனத்தை துறந்தார். பூடான் நாடு நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கு மாறியது. அரசின் தலைவராக பூடான் மன்னரின் மகன் ஜிக்மே கேசர் நம்கெயில் வாங்சக் (Jigme Khesar Namgyel Wangchuck), பொறுப்பேற்றார். இப்பொழுது பூடான் நாடாளுமன்ற மக்களாட்சியை கொண்டுள்ளது மற்றும் அரசர் ஜிக்மே ஓர் அரசமைப்பிலான மன்னராவார்.
நவீன மற்றும் சமகால மக்களாட்சி (Modern and Contemporary Democracy)
நவீன மற்றும் சமகால மக்களாட்சியானது 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் மேற்கு ஐரோப்பாவில் தொழிற்புரட்சியின் விளைவாகத் தோன்றியது. அதனுடன் கூடவே தொழிலாளர்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் தோன்றின.
நவீன மற்றும் சமகால மக்களாட்சியின் சிறப்பம்சங்கள்
- எழுதப்பட்ட அரசமைப்பு, மக்களின் அன்றாட வாழ்வின் தேவைக்கேற்றார் போல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இதை வைத்திருத்தல் வேண்டும்.
- ஒவ்வொரு தனி மனிதனுக்கும், சமூக குழுக்களுக்கும், குறிப்பாக எளியோர் மற்றும் மத சிறுபான்மையினோருக்கான அரமைப்பு உத்திரவாதமளிக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள்.
- அரசின் பல்வேறு அமைப்புகளுக்கிடயேயான அதிகார பிரிவினை.
- அரசாங்கம் (நிர்வாக அதிகாரம்) நாடாளுமன்றம் (சட்ட அதிகாரம்) மற்றும் நீதி அமைப்புகள் (நீதி அதிகாரம்).
- கருத்து, பேச்சு, எழுத்து மற்றும் பத்திரிகை சுதந்திரம்.
- மத சுதந்திரம்.
- அனைவருக்கும் சமமான மற்றும் பொதுவான வாக்குரிமை (ஒருவருக்கு ஒரு ஓட்டு) மற்றும் வயது வந்தோர் வாக்குரிமை.
- மக்களாட்சியின் முக்கிய அம்சமாக “பெரும்பான்மையினரின் ஆட்சி” கூறப்பட்ட போதிலும் அந்த நடைமுறையானது நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் மூலமே சாத்தியப்படுகிறது.
- மேலும் உரிமைகளுக்கு தரப்படும் முக்கியத்துவம் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் முதலான சுதந்திரங்கள் பிரதிநிதித்துவ மக்களாட்சியில் இன்றியமையாதவை ஆகும்.
- மேலும் மக்கள் அரசியல் பரப்புரைகள், தேர்தல் அறிக்கைகள் மூலம் வேட்பாளர் யார் என்று அறிகிறார்கள், அதனடிப்படையில் தங்கள் வாக்குகளை முடிவு செய்கிறார்கள்.
- மக்களாட்சி முறையானது ஒரு கட்சி ஆட்சி முறையில் இருந்து பல கட்சி ஆட்சி முறை வரை பல்வேறு நாடுகளில் செயல்பட்டுவருகிறது. பல நாடுகளில் அனைவருக்கும் சமமான வாக்குரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் மக்களாட்சி செயல்படுகிறது.
- ஆசிய மற்றும் ஐடோப்பிய நாடுகளில் மக்களாட்சி என்ற சொற்பதத்தை மக்கள் தாராளவாத மக்களாட்சியாகவே உணர்கிறார்கள். இதன் சிறப்பம்சமே அரசியல் பன்முகத்தன்மை, சட்டத்தின் முன் அனைவரும் சமம், குடிமைச் சுதந்திரங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆகியவைகளாகும். பேச்சு சுதந்திரமே நவீன மக்களாட்சியின் அடிப்படைத் தேவையாகும்.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து அரசாங்கங்களுமே மக்களின் பேச்சு சுதந்திரத்தின் மூலம் பொறுப்புடையதாக்கப்படுகின்றன. தற்போது எளிதாக கிடைக்கின்ற தகவல்களால் மக்களும், அரசாங்கமும் சிறந்த முடிவுகளை எடுக்க முடிகின்றது.
மக்களாட்சி கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது
- அதிகாரப் போட்டி நிறைந்த அரசியல் அமைப்பு
- பொதுவாழ்வில் பங்கேற்கும் உரிமை
- சட்டத்தின் ஆட்சி
தற்கால மக்களாட்சியின் வகைகள்:
பிரதிநிதித்துவ மக்களாட்சி (Representative Democracy)
- பிரதிநிதித்துவ மக்களாட்சியில் தகிதிவாய்ந்த அனைத்து குடிமக்களும் வாக்களித்தலின் மூலம் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் பிரதிநிதிகளை அந்தந்த தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
- ஒவ்வொரு தொகுதியும் மக்கள் தொகையின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும். சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒவ்வொரு தொகுதியும் மக்கள் தொகையின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும்.
- சமூக, அரசியல் மற்றும் பொருளாதர வளர்ச்சிக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனித்தனியே சித்தாந்தங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை கொண்டுள்ளன. அவற்றை சீர்தூக்கி ஆராய்ந்து மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றனர். வெற்றி வாய்ப்பு, மக்களிடம் உள்ள செல்வாக்கு போன்றவற்றின் அடிப்படையில் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கின்றன.
- தேர்தலின் போது கட்சிகள் தங்கள் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை தேர்தல் அறிக்கையாக வெளியிடுகின்றன. இந்தியா போன்ற மிகப்பெரிய மக்களாட்சி நாட்டில், தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் தங்கள் எதிர்காலத் திட்டங்கள், அதை அடையும் வழிகள் என அனைத்தையும் தேர்தல் அறிக்கையாக தயாரித்து அதன் மூலம் மக்களின் நம்பிக்கையை வெல்ல முற்படுகின்றன.
- எந்த ஒரு குடிமகனும், கட்சி சார்பின்றி தேர்தல்களில் போட்டியிட விரும்பினால் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கவும் அனுமதி உண்டு. பிரதிநிதித்துவ மக்களாட்சி அமைப்பில் அரசியல் கட்சிகளின் பங்கு முக்கியமானது.
- அரசியல் கட்சிகள் அவ்வப்போது நடத்தும் பொதுக்கூட்டங்கள், அரசின் கொள்கைகளை விமர்சித்தோ ஆதரித்தோ வெளியிடும் அறிக்கைகள், முதலியவற்றின் வழியே மக்களை விழிப்புணர்வடையச் செய்கின்றனர்.
- எனவே இதன் மூலம் அரசியல் கட்சிகள் மக்கள் தங்கள் தேவையை அறியச்செய்கின்றன. மேலும் அதனுடன் முக்கிய பிரச்சனைகளில் ஒரு பொதுக்கருத்தையும் உருவாக்குகின்றன.
- மக்கள் பிரதிநிதிகள் அரசமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவர்கள். இப்பிரதிநிதிகள் மக்கள் நலனுக்கான தங்களது பொறுப்பையும், கடமையையும் செய்வதற்கு அரசமைப்பால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
- பிரதிநிதித்துவ மக்களாட்சி முறை, தாராளவாத மக்களாட்சி மூறையுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. தாராளவாத மக்களாட்சி முறையானது அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் தோன்றி பின்பு பல மூன்றாம் உலக நாடுகளில் பரவி தற்போது முன்னாள் சோவியத் ரஷ்ய நாடுகளிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் காலூன்றியுள்ளது.
- தாராளவாத மக்களாட்சி அரசானது அதிபர் முறை மக்களாட்சி அல்லது நாடாளுமண்ற முறை மக்களாட்சி என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும் அவற்றுள் சில வேறுபாடுகளும் உள்ளன.
- பிரதிநிதித்துவ மக்களாட்சியானது ஒன்றுக்கொன்று தொடர்புடைய எண்ணிலடங்கா கொள்கைகளால் ஆனது.
அவற்றுள் சில:
- ஒரே சீரான இடைவெளியில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் தேர்தல். வயதுவந்தோர் வாக்குரிமை மற்றும் வாக்களித்தலின் ரகசியம் காக்கப்படுதல் அடிப்படையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் எனும் ஒரு சுயேச்சையான அமைப்பு.
- மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக பல கட்சிகள் போட்டியிடும் தேர்தல்.
- சுதந்திரமான நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இயங்கும் தேர்தல் சட்டங்கள்.
- பேச்சு மற்றும் கூட்டங்கள் கூடுவதற்கான சுதந்திரம்.
- தேர்தலில் ஒரு வேட்பாளராக பங்கேற்கும் சுதந்திரம்.
ஐ.நா.வின் பூர்வகுடி மக்கள் தன் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தை வெறும் கொண்டாட்டங்களோடு மகிழ்ந்து நிறுத்தி விடாமல் அனைவரும் ஒன்றிணைந்து அந்த பிரகடனத்தின் நோக்கங்களை செயல்படுத்தும் தருணம் இது.
உலகம் முழுவதும் 37 கோடிக்கும் அதிகமாக பூர்வகுடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் தனித்துவமான பண்பாடு மற்றும் அதை வளர்ச்செய்வது என்ற உறுதிமொழி சர்வதேச பூர்வகுடியின மக்கள் நாளான ஆகஸ்டு 9 அன்று மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது வெறும் உறுதிமொழி ஏற்போடு நின்று விடாமல் அதை செயலுக்கு கொண்டுவரும் பணிகள் தொடங்கப்பட வேண்டும். பல நூற்றாண்டுகளாக அடக்கு முறைகளை சந்தித்து வருகிற அவர்களுக்கு தங்கள் மனித உரிமைகள், வாழும் முறை மற்றும் கனவுகளை காத்துக்கொள்ளவும் அதை அடையவும் தேவையான வழிகள் அவர்களுக்கு தேவைப்படுகின்றன.
உள்நாட்டு மக்களுக்கான உரிமைகள் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை
பூர்வகுடியின மக்கள் உரிமைக்கான ஐ.நா. பிரகடனம் ஒரு கருவியாக அவர்களுக்கு வாய்த்துள்ளது. இந்த பிரகடனம் பூர்வகுடியின மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பற்றி கூறுகிறது. பொதுவாழ்வில் அவர்கள் பங்கேற்பதற்கான உரிமைகள் பற்றி பேசும் அதே வேளையில், அவர்களின் தனித்துவமான அரசியல், பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பற்றியும் கூறுகிறது. மிக முக்கியமாக இந்த பிரகடனம் பூர்வகுடியின மக்கள் தங்கள் தொன்மை நிலங்களின் மேல் கொண்டிருக்கும் உரிமை, அதன் மூலம் அவர்கள் செய்யும் வர்த்தகம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்கிறது.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேல் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் செப்டம்பர் மாதம் 2007ஆம் ஆண்டு இந்த பிரகடனம் ஐ.நா.பொதுச்சபையில் 143 உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேறியது. இந்த ஆதரவு நாடுகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே உள்ளது. கொலம்பியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் பிரகடனம் நிறைவேறிய போது அதை ஆதரிக்காவிட்டாலும் தற்போது ஆதரிக்கின்றன. இந்த ஆதரவு ஊக்கமளிப்பதாக இருந்தாலு இந்த தீர்மானம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட நாம் உழைத்தாக வேண்டியுள்ளது. அப்போது தான் பூர்வகுடியின மக்களின் தினசரி துன்பங்களும், பாகுபாடுகளும் முடிவுக்கு வரும். உலகப் பூர்வகுடியின மக்களில் பத்தில் ஒருவர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ வாய்ப்புகளும் மிகக்குறைவாகவே உள்ளன. நாட்டில் உருவாக்கப்படுகின்ற வளர்ச்சி மற்றும் பொருளாதார திட்டங்களும் பூர்வகுடியின மக்களை சரிவர சென்றடைவதில்லை அவர்களின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் மரபுகளில் போதிய கவனம் செலுத்தப்படுவதுமில்லை. அரசின் மற்ற துறை முடிவுகளும் கூட பூர்வகுடியின விவகாரத்தில் அலட்சிய மற்றும் கண்டுகொள்ளாத போக்கையே கடைபிடிக்கின்றன. இதன் விளைவாக பெரும்பான்மை மக்களால் பூர்வகுடியின மக்களுக்காக இயற்றப்படும் சட்டமும் கொள்கைகளும் அவர்களுடைய நிலம் மற்றும் இயற்கை வளங்களில் சர்ச்சையையே ஏற்படுத்துகின்றம. மேலும் இவை பூர்வகுடியின மக்களின் அடிப்படை வாழும் முறையையே மாற்றி வாழ்வதற்கு அச்சுருத்தலாக அமைகிறது.
நாம் நம்முடைய ஒட்டுமொத்த முயற்சியினால் அவர்களுக்கான சர்வதேச பிரகடனத்தை செயலுக்கு கொண்டுவரவேண்டும். இல்லையெனில் அவை வெற்று முழக்கங்களாகவே நின்று விடும். அப்பிரகடனத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும்போது தான் அவர்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும்.
உள்நாட்டு மக்களுக்கான உரிமைகள் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை
ஐ.நாவின் பூர்வகுடியின மக்கள் உரிமைகள் பற்றிய பிரகடனம் மற்றும் பிற மனித உரிமை தொடர்பான சட்டங்கள் மூலம் அரசுகள், பூர்வகுடியின மக்கள், ஐ.நா. அமைப்பு மற்றும் இவர்களுடன் தொடர்புடைய அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றி பேச்சுவார்த்தை, பரஸ்பர புரிந்து கொள்ளல் மற்றும் மனித உரிமை மீதான மதிப்பு இவற்றின் வழியே பூர்வகுடியின மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை எட்ட வேண்டும்.
பங்கேற்பு மக்களாட்சி (Participatiory Democracy)
- பங்கேற்பு மக்களாட்சியானது, சமத்துவம் என்ற நிலையிலிருந்து சம நீதியின் அடிப்படையிலான பங்கு என்ற நிலைநோக்கி செல்ல ஊக்குவிக்கிறது. சமீப காலங்களில் பங்களிப்பு மக்களாட்சியில் மக்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.
- தொன்மை பிரதிநிதித்துவ மக்களாட்சியை விட மக்களே நேரடியாக பங்கேற்கும் மக்களாட்சியில் தான் மக்களாட்சியின் தன்மை அதிகமிருக்கும். இது குடிமை சமூகத்தின் அடிப்படையிலானது.
- அனைவருக்குமான வாய்ப்புகளை ஏற்படுத்தி, அந்த வாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்த ஏதுவான சூழலையும், முடிவெடுத்தலில் அனைவருக்குமான பங்கைடும் இது உறுதி செய்கிறது.
- சமூக உறவுகளே அரசியல் நடவடிக்கைகளுக்கு அடிப்படையாகும். பங்களிப்பு மக்களாட்சியானது மக்களின் பங்களிப்பை அதிகரித்து அரசியல் சமத்துவத்தை ஏற்படுத்தி அதன் மூலம் சமூகத்தையே மக்களாட்சிமயமாக்குகிறது.
- பங்கேற்பு மக்களாட்சியின் நோக்கமே ஆர்வமுள்ள மக்களை அரசியல், பொருளாதார மற்றும் சட்ட நடைமுறைகளில் பங்கேற்கச் செய்வதும், மக்களை அரசின் முடிவுகளுக்கு பொறுப்புடையவர்களாக மாற்றுவதுமே ஆகும்.
- பங்கேற்பு மக்களாட்சியின் சிறப்பம்சமே அரசின் செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் எடுப்பதில் மக்கள் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதுதான். இந்த முறை மக்களாட்சியில் அதிகாரம் நேரடியாக் அமக்களிடம் மட்டும் இருக்குமே தவிர வேறு எந்த அமைப்பிடமோ, தனி நபர்களிடமோ இருக்காது.
- தற்போதைய பொருளாதார வளர்ச்சிக் காலத்தில் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமத்துவத்தை ஏற்படுத்த , மக்கள் தங்கள் பங்கேற்புகளை அளிக்கும் வகையில் பங்கேற்பு மக்களாட்சியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மிக முக்கிய பண்பே அரசியல் சமத்துவம் உள்ள ஒரு மக்களாட்சி முறையாக இருப்பதாகும். அதில் அனைவருக்கும் சமமான அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.
மக்களாட்சியை அளவிடுதல் மற்றும் மதிப்பிடுதல்
- மக்களாட்சி என்பது தங்களது ஒப்புதலையோ அல்லது ஒப்புதலின்மையையோ காட்டுவதற்கான ஒரு சரியான முறையான வழியாகும். இந்திய அரசமைப்பின் வரைவுக் குழு தலைவர் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் இதை வலியுறுத்திக் கூறுகிறார்.
- “அரசியலில் நமக்கு சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் சமத்துவமற்ற தன்மையே நிலவும்” என்றார். அரசியலில் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒவ்வொரு வாக்கிற்கும் ஒரே மதிப்பு என்ற விதியை அங்கீகரிக்கிறோம். ஆனால் நம் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பின் காரணாமாக நம்முடைய சமூக பொருளாதார வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே மதிப்பு என்ற விதிமுறையை தொடர்ந்து மறுத்தே வருகிறோம்.
- மக்களாட்சியை மதிப்பிடுதல் மற்றும் அளவிடுதல் என்பது அதன் தரம் மற்றும் அளவின் அடிப்படையில் நிகழ்கிறது. தர நிலையை பகுப்பாய்வு செய்வதன் மூலம் சமூக மாற்றத்தின் இயக்காற்றலை கண்டறிய ஏதுவாகிறது. அதே சமயத்தில் அளவு நிலையை பகுப்பாய்வு செய்வதன் மூலம் சிறப்பான மக்களாட்சி நடைமுறைக்கான மாற்றம் எவ்வாறு உள்ளது என்று அறிய முடிகிறது.
- மக்களாட்சியின் தர நிலையினை மக்கள் பங்கெடுக்கும் ஆர்ப்பாட்டங்கள், கண்டன கூட்டங்கள், பிரச்சாரங்கள், மக்கள் கருத்து சுதந்திரத்தினை பயன்படுத்தும் விதம் மற்றும் அரசமைப்பு மக்களுக்கு கொடுத்திருக்கும் உரிமைகள் இவற்றின் மூலம் அறியலாம்.
- சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகள் சமூக மாற்றத்திற்கான குறிப்பாக சாதி, மத, பாலின மற்றும் பண்பாட்டு கண்ணோட்டங்களில் முன்னோக்கி செல்லவேண்டியதை வலியுறுத்துகின்றன.
- வளர்ச்சிக்கான பொருளாதார முறையானது மாறிக்கொண்டேயிருக்கிறது. இதில் கொள்கைகள் வகுப்பதன் முலம் ஏற்றத்தாழ்வுகளை களைவதற்காக மக்களாட்சியும் மாறிவரும் பொருளாதார முறையுடன் நேரடி தொடர்பில் உள்ளது.
- மனித வள மேம்பாட்டுக் குறியீடு மற்றும் தனி நபர் வருமானத்தின் மூலம் மக்களாட்சியானது மதிப்பிடப்படுகிறது. கீழ்க்கண்ட அடிப்படை காரணிகள் மக்களாட்சியை அளவிடவும் மதிப்பிடவும் உதவுகின்றன.
- இறையாண்மை: ஒரு ஆட்சியானது எந்த அளவிற்கு மற்ற நாடுகளின் குறுக்கீடு இல்லாமல் தன் நாட்டின் உள் விவகாரங்கள் மற்றும் வெளியுறவு கொள்கைகளை கையாள முடிகிறதோ அதுவே அதன் இறையாண்மை எனப்படும்.
- ஆட்சி அதிகாரம்: நாட்டின் எல்லைக்குள் எந்த அளவிற்கு மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் செல்லுபடியாகுமோ அந்த எல்லைகள் ஆட்சி அதிகாரத்துக்குட்பட்டவை எனப்படும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்: இரகசிய வாக்கெடுப்பு முறை தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கையில் ஆட்சி அதிகாரம் இருப்பதை இது குறிக்கிறது.
- வயது வந்தோர் வாக்குரிமை: தேர்தல்களில் ஒரு குறிப்பிட்ட வயதை கடந்த அனைத்து குடிமக்களுக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்களிக்க கொடுக்கப்பட்டிருக்கும் உரிமை.
- மொத்த வாக்குப்பதிவு : தேர்தல் நாளன்று வாக்களித்த மக்களின் வாக்கு சதவீதத்தை குறிக்கிறது.
- முறைப்படுத்தப்பட்ட தேர்தல்கள்: தேர்தல் ஒரு சீரான இடைவெளியில் (5 ஆண்டுக்கு ஒரு முறை) குறிப்பிட்ட அட்டவணையில் அரசமைப்பு கூறியுள்ளபடி நடத்துதல்.
- சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள்: அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட நியாயமான வாய்ப்புகளை வழங்குதல். மேலும் வாக்காளர்கள் எந்த வித பயமும் , பாரபட்சமுமின்றி தங்கள் வாக்கை பதிவு செய்தல்.
- ஊடகங்களை அணுகுதல் மற்றும் பரப்புரை: அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கும் ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் பரப்புரை செய்ய அவர்களின் வாக்கு விகிதத்திற்கு ஏற்றார் போல் வாய்ப்பு வழங்குதல்.
- சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்தல்: அரசமைப்பில் கூறியுள்ளபடியும் நீதிமன்றங்களின் விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதலின் படியும் சட்டத்தை ஆட்சியாளர்கள் செயல்படுத்துதல்.
- சட்டமன்ற அதிகாரம்: நாடாளுமன்ற அமைப்பின் மூலமாக சட்டமன்றமானது செயலாட்சித்துறை மீது ஏற்படுத்தும் கட்டுப்பாடு சட்டமன்ற அதிகாரம் எனப்படும்.
- சுதந்திரமான நீதித்துறை: நீதித்துறையானது செயலாட்சி துறை மற்றும் எந்த ஒரு வெளிப்புற குறுக்கீடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுதலை இது குறிக்கிறது.
- எதிர்க் கட்சிகளின் பங்கு: எதிர்க் கட்சிகள், ஆளும் கட்சியின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்தும், விமர்சித்தும் அது அரசமைப்பு வகுத்த பாதையை விட்டு விலகாமல் ஆட்சி புரிய வைத்து நாடாளுமன்ற மக்களாட்சியைக் காப்பதை இது குறிக்கிறது.
- நீதிப் புனராய்வு: சட்டமன்றம் இயற்றும் சட்டங்களையும் , அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும், அரசமைப்பு விதிகளின் அடிப்படையில் சீராய்வு செய்யவும், அவை மற்ற அமைப்புகளால் எந்த அளவிற்கு மதிக்கப்படுகிறது என்பதை கண்காணிக்கவும் உள்ள நீதிமன்ற அதிகாரம்.
- கட்சி பலம்: கட்சிகள் நிறுவனமயமாக்கப்பட்டு அவற்றின் அதிகாரம் மற்றும் பணிகள் பரவலாக்கப்பட்டு அவை அனைவருக்குமான கட்சிகளாக இருப்பதே அவற்றின் பலத்தை தீர்மானிக்கிறது.
- கட்சியின் சித்தாந்தம்: அரசியல் கட்சிகள் நன்கு வரையறுக்கப்பட்ட நிலையான மற்றும் ஒத்திசைவான கட்சி சித்தாந்தங்களை வகுத்துள்ளன.
- கட்சி முறை அமைப்பு: சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை.
- பத்திரிகை சுதந்திரம்: பத்திரிகைகள் சுதந்திரமாகவும், பயமின்றியும் தங்களது பல்வேறு வகையான அரசியல் கருத்துக்களையும், விமர்சனங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல எந்த அளவிற்கு முடிகிறதோ அதுவே பத்திரிகை சுதந்திரமாகும்.
- சுதந்திரமான குடிமைச் சமூகம்: குடிமைச் சமூகமானது அரசுக்கு எதிரான அரசியல் தலைவர்களுக்கு எதிரான தங்களது கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை எந்த வித அச்சுறுத்தலுமின்றி வெளிப்படுத்தும் சூழல்.
- குடிமைச்சுதந்திரம்: அரசமைப்பில் பேணப்பட்டுள்ள அடிப்படை மற்றும் மனித உரிமைகள் அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்படுதல்.
- சொத்துரிமை: அரசமைப்பில் பாதுகாப்பளிக்கப்பட்டிருக்கும் சொத்து உரிமைகள்.
- மத சுதந்திரம்: மதங்களிடையே நல்லிணக்கத்தை பேணுவதற்கும் அரசியல் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் மதச்சார்பின்மையை நிலைநாட்டவும் மத சுதந்திரமானது அரசமைப்பால் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உத்திரவாதமளிக்கப்பட்டுள்ளது.
- வளங்கள் மீதான அனைவருக்குமான வாய்ப்பு: வளங்கள் சரிசமமாக அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு பொருளாதார சமநிலையை வருவாய், கல்வி மற்றும் சுகாதாரத்தின் மூலம் ஏற்படுத்துதல். இது அரசியலில் அனைவரும் பங்கேற்பதற்கான ஒரு சிறந்த யுத்தியாகும்.
- இயற்கைச் செல்வங்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் மீதான அனைவருக்குமான வாய்ப்பு: இயற்கை செல்வங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் மீது அனைவருக்கும் சரிசமமான வாய்ப்பு மற்றும் அதை எளிதில் பயன்படுத்தும் வழிகள் இருப்பின் அது அனைவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மற்றும் சமூக விடுதலைக்கு வித்திடும்.
- பாலின சமத்துவம்: சட்டமன்றம், சமூக அமைப்புகள் மற்றும் அரசின் பல்வேறு பதவிகளில் பெண்ணுக்கும் ,ஆணுக்கும் இணையான பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களை கண்ணியமாக நடத்துதல்.
- ஏழை எளியோரின் சமூக பொருளாதார நிலை மேம்பட அரசியல் சமத்துவம்: சாதி, இன, பழங்குடியினர் மற்றும் மத சிறுபான்மையினருக்கு அரசமைப்பில் சமஉரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் அவர்கள் தங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை எட்டவும் அரசின் நிர்வாக அதிகாரத்தில் பங்கேற்கவும் ஏதுவாகிறது. மேலும் சட்ட மன்றத்தில் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை பெறவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பதையும் அவர்கள் தங்களின் அரசியல் பங்கேற்பின் மூலம் பெறுகின்றனர்.
இந்திய மக்களாட்சியின் சாதனைகள்
- இந்தியாவையும், இந்திய அரசமைப்பையும் உருவாக்கிய நம் முன்னோர்கள் ஒரு வலிமையான மக்களாட்சிக்கு அடித்தளத்தை இட்டுச் சென்றுள்ளனர். இது நம் இந்தியாவை சிறந்த ஒரு நாடாகத் திகழச்செய்கின்றது.
- நமது மக்களாட்சியின் அடித்தளமானது நம் அரசமைப்பின் சமூக அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. நம் அரசமைப்பின் முகவுரையானது அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள், வழிகாட்டு நெறிமுறைகள், நாடாளுமன்ற மக்களாட்சி முறை மற்றும் சட்ட திருத்த நடைமுறைகள், நீதிப் புனராய்வு மற்றும் அரசமைப்பின் அடிப்படை அம்சக் கோட்பாடுகள் என அரசு செயல்பட வேண்டிய விதத்தை காட்டும் ஒரு வழிகாட்டியாக உள்ளது.
அரசியல் தளம் (Political Front)
- சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் 1951ஆம் ஆண்டு நடந்தபோது, களத்தில் 54 அரசியல் கட்சிகள் இருந்தன. சமீபத்தில் நடந்து முடிந்த 2014ஆம் ஆண்டு பொது தேர்தலின் போது அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 264ஆக கூடி இருந்தது. இதிலிருந்து அரசியல் நடைமுறை விரிவாகவும் ஆழமாகவும் மாறிவருவது புலனாகிறது.
- சுதந்திர இந்தியாவில் 1951ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில் 17.30 கோடி இந்திய மக்கள் வாக்களிக்கும் உரிமை பெற்று இருந்தனர். இவர்களில் 44.87 சதவிகிதத்தினரே வாக்களித்தனர். நாட்டின் 16வது பொதுத்தேர்தல் 2014ஆம் ஆண்டு நடந்த போது வாக்காளர்களின் எண்ணிக்கை 81.40 கோடியாக அதிகரித்திருந்தது. இதில் 66.4 சதவிகிதத்தினர் வாக்களித்தனர். இவர்களில் 67.9 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 65.6 சதவீதத்தினர் பெண்கள். இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 8251 ஆக அதிகரித்திருந்தது.
- 2004ஆம் ஆண்டு முதல் வாக்குகள், மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தின் மூலமாக பதிவு செய்யப்படுகின்றன. இந்த இயந்திரங்கள், இந்தியாவிலேயே தயார் செய்யப்படுகின்றன. இவற்றின் துல்லியம், மற்றும் ரகசியம் காக்கப்படுதல் ஆகியவை வெற்றிகரமாக சோதித்தறியப்பட்டுள்ளது.
- நம் தேர்தல் முறையானது அதிக வாக்குகளை எண்ணிக்கை அடிப்படையில் பெற்ற்வர் வெற்றி பெற்றவர் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பிரதிநிதி பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறார். சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரு வாக்களருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் தேர்தல் நடைபெறும் . இதம் மூலம் வாக்காளர்கள் தங்களின் பிரதிநிதிகளை சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கின்றனர்.
- நம் நாட்டில் 1898ஆம் ஆண்டிலிருந்து 18 வயது பூர்த்தியான அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது மக்களாட்சி எனும் மகுடத்தில் மேலும் ஒரு சிறகாகும்.
- உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடான இந்தியா, தனது அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து, மாநிலங்களின் பல்வேறு கோரிக்கைகளையும் ஏற்று கூட்டாட்சி தத்துவத்துடன் ஒரு வெற்றிகரமான அரசாக திகழ்கிறது.
- இந்திய அரசமைப்பின் 73-வது மற்றும் 74-வது சட்டத் திருத்தம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும், பெண்களுக்கும் உள்ளாட்சி அரசாங்க அமைப்புகளான கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் போட்டியிட இடம் ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது.
- இந்திய மக்களாட்சி முறையானது இளமைத் துடிப்போடு உள்ள உத்வேகமான ஒரு மக்களாட்சியாகும். இந்திய ராணுவம் கூட அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தின் மீது எவ்வித செல்வாக்கையும் செலுத்த முடியாது. அதேசமயத்தில் ராணுவ அமைப்புக்கு முழு அதிகாரமும், உரிய மரியாதையும் அளிக்கப்படுகிறது.
சமூகதளம் (Social Front)
மக்களாட்சி முறையானது அரசியல் அதிகாரத்தில் மிக முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. மக்களாட்சி முறையினால், அரசியல் அதிகாரமானது மத்திய மற்றும் உயர் வர்க்கம் மற்றும் நகர சமூகத்திடமிருந்து மெல்ல விலகி அது தற்போது சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் உள்ளது. சுதந்திரத்திற்குப்பின் அரசமைப்பின் மூலமாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு போலவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் அரசு பதவிகளிலும், சட்டமன்றங்களிலும் இடஒதுகீட்டை பெற்றுள்ளனர்.
- இந்தியாவின் பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் சுதந்திரமான நீதித்துறையானது இந்திய சமூகம் தொடர்ந்து சட்டத்தின் ஆட்சியின் படி செயல்பட வழிவகை செய்கிறது.
- இந்தியர்களின் சராச்ரை ஆயுட்காலமானது 36 வருடங்கள் என்று 1951ஆம் ஆண்டில் இருந்தது. இது 2014ஆம் ஆண்டு கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 66 வருடங்கள் என்று உயர்ந்துள்ளது. இதற்கு காரணமாக மருத்துவத்துறையில் இந்தியாவின் வளர்ச்சி, அனைவரையும் சென்றடைய கூடிய வகையில் அரசின் சுகாதார திட்டங்கள், தொற்றுநோய்கள் மற்றும் கொள்ளைநோய்கள் ஒழிப்புக்கான மருந்துகள் மற்றும் அதற்கான திட்டமிடல் போன்றவற்றை கூறலாம்.
- இதைப் போலவே சின்னம்மை மற்றும் இளம்பிள்ள வாதம் ஆகிய நோய்களும் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டன. கல்வித்துறையிலும் மாபெரும் வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளது. 1950 – 51-ல் வெறும் 27 பல்கலைக்கழகங்களும் 578 கல்லூரிகளும் இருந்த இந்தியாவில், 2014ஆம் ஆண்டு கணக்கின்படி சுமார் 712 பல்கலைக்கழகங்களும் 36,371 கல்லூரிகளுமாக பெருகி வளர்ந்து உள்ளன. இதை போலவே, எழுத்தறிவு விகிதமும் 1941-ல் 18.3 சதவிகித்த்திலிருந்து 2011-ல் 73 சதவிகிதமாக கிட்டத்தட்ட நான்கு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.
மக்களாட்சியே சிறந்தது. நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் மற்ற எல்லா முறைகளுமே மோசமானவை. மக்களாட்சியில் சில சாதக, பாதக அம்சங்கள் இருந்தாலும் நமக்கு இதைவிட சிறந்தது வேறொன்றுமில்லை. ஆனால் மக்களாட்சியில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று கூறுவது மாபெரும் தவறு. பிரச்சனைகள் புத்திகூர்மையினாலும், கடின உழைப்பாலும் மட்டுமே தீரும்.
சமூக மக்களாட்சியை அடிப்படையாக கொள்ளமால் கொண்டுவரப்படுகிர அரசியல் மக்களாட்சி வெகுகாலம் நீடிக்காது. சமூக மக்களாட்சி என்றால் என்ன? இது ஒரு வாழும் முறை, இது சுதந்திரம் , சமத்துவம் மற்றும் சகோதரத்துவதை அடிப்படை விதிகளாக கொண்ட ஒரு வாழ்வு முறையாகும் பி.ஆர். அம்பேத்கர்
பொருளாதார தளம் : (Economic Front)
- இது பாதுகாப்பு விவகாரங்கள், அரசமைப்பு சட்டப்படியான மக்களாட்சி ஆளூகை, சமூகம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
- இந்தியா தன் பொருளாதாரம், ராணுவம் மற்றும் அணு ஆற்றலின் காரணமாக ஆசியாவில் ஒரு வட்டார சக்தியாகவும் , தெற்கு ஆசியாவில் ஒரு வல்லரசாகவும் உருவாகியுள்ளது. இதன்படி 1991ஆம் ஆண்டு வரை நாட்டின் வளர்ச்சிக்கு ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டமிடம், வேலை வாய்ப்பிற்கு பெரிய அளவில் பொதுத்துறை நிறுவனங்களை ஏற்படுத்துதல், இளைஞர்களுக்கு அறிவியல் தொழில்நுட்ப கல்வி என்றிருந்த நிலையில் 1991ஆம் ஆண்டு தாராளமயம் மற்றும் சந்தை சார்ந்த மாதிரியிலான உலகமயமாதல் என்ற பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இது கட்டமைப்பு, சீரமைப்பு செயல்திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பிறகு நாட்டின் பொருளாதாரத்தில் தனியார் மற்றும் அயல்நாட்டவரின் பங்களிப்பு அதிகரித்தது. இதன் மூலம் புதிய தொழில்முறை நடுத்தர வர்க்கம் என்ற பிரிவு உண்டாக்கியது. கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்தில் தொழில் நுட்ப புதுமைகள் மிகப்பெரும் வளர்ச்சியை கொண்டு வந்தன. மேலும் நகரங்களிலும், கிராமங்களிலும் உள்கட்டமைப்பு மற்றும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இதன் மூலம் மின்னனு தொழில் நுட்ப புதுமைகள் மிகப்பெரும் வளர்ச்சியை கோண்டு வந்தன. மேலும் நகரங்களிலும், கிராமங்களிலும் உள்கட்டமைப்பு மற்றும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இதன் மூலம் மின்னனு தொழில்நுட்ப இந்தியா என்ற வளர்ந்த நிலை நோக்கி இந்தியா நகரத் தொடங்கியுள்ளது. வங்கித்துறை சீர்திருத்தங்களும் பெரிய சமூக மாற்றங்களை சாத்தியப்படுத்தியுள்ளன.
- இந்தியாவின் ஒட்டு மொத்த தேசிய வருவாயானது 1950-51-ல் ரூபாய் 2.92 லட்சம் கோடியாக இருந்து 2014-2015-ல் கிட்டத்தட்ட 35 மடங்கு வளர்ந்து ரூபாய் 105.28 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதை போலவே, தனி நபர் வருமானமும் 1950 – 51 –ல் ரூபாய் 247ஆக இருந்து, 2014- 2015ஆம் ஆண்டு ரூபாய் 88,533ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 1950 – 51ஆம் ஆண்டுகளில் 50.8 கோடி டன்களாக இருந்தது. அது 2014-15ஆம் ஆண்டுகளில் 264.77 கோடி டன்களாக கிட்டத்தட்ட ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. இந்திய விவசாயத் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியே இதன் முக்கிய காரணமாகும்.
இந்திய மக்களாட்சியின் விளக்கம்
- இந்திய மக்களாட்சியில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மற்றும் ஒட்டு மொத்த சமுகத்திற்குமான சவால்கள் உள்ளன. குறிப்பாக அனைவருக்குமான கல்வித் திட்டம் சரியாக செயலாக்கப்படாததால் இன்று இந்தியாவின் மிக முக்கிய பிரச்சினையாக எழுத்தறிவின்மை உள்ளது.
- வறுமை, மதவாதம், மத அடிப்படைவாதம், பாலினப் பாகுபாடு, பெண்களுக்கெதிரான வன்முறை, அரசியல் வன்முறை, சீர்திருத்தங்கள் செய்யப்படாமலே இயங்கி கொண்டிருக்கும் நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறை, குடிமைச் சமூகத்தின் குறைவான பங்களிப்பு, அரசியலில் அதிகரித்தி வரும் குற்றவாளிகளின் எண்ணிக்கை, அதிகரித்து வரும் பொருளாதார குற்றங்கள், வளர்ச்சித் திட்டங்களில் மாநிலங்களுக்கிடையே பாகுபாடு காட்டும் மத்திய அரசு மற்றும் அனைவரையும் சரிசமமாக சென்றடையாத வளர்ச்சி போன்ற பிரச்சனைகள் இந்தியாவில் தலையாய பிரச்சனைகளாக உள்ளன. மேலும் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்பு, பணிபுரிவதற்கான சுதந்திரம் மற்றும் கட்டுப்பாடுகளும் – சம நிலைகளும் (Checks and Balances) போன்ற இந்திய மக்களாட்சியின் அடிப்படை கட்டமைப்புகள் தான் தற்கால மற்றும் எதிர்கால சவால்களாக இந்தியாவிற்கு உள்ளன.
- அரசமைப்பின் 73-வது மற்றும் 74-வது சட்ட திருத்தத்திற்குப் பிறகும் இந்தியாவின் சில கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தலே பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளதை நீங்கள் அறிவீர்களா?