பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் Notes 11th History
11th History Lesson 8 Notes in Tamil
8. பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம்
அறிமுகம்
பிற பண்பாட்டு மரபுகளைப் போலவே, மதமும் தனித்து இருப்பதில்லை. நிலவும் சூழ்நிலைகளோடு தன்னை தகவமைத்துக் கொண்டு மக்களின் சமூக, ஆன்மிகத் தேவைகளை மதமும் நிறைவு செய்கிறது. நீண்ட பண்பாட்டு வரலாற்றெனக் கொண்டிருக்கும் நாடான இந்தியாவில், மதங்கள் பல்வகைப்பட்ட மரபுகளோடு தொடர்புகொண்டு வளர்ந்துள்ளன. ஆரிய மொழி பேசிய மக்களின் வருகையோடு இந்தியா வந்த வேத மதம் சிந்து நாகரிகத்தின் பல கூறுகளை உள்வாங்கிக் கொண்டது. ஹரப்பாவில் தாய்த் தெய்வ வழிபாடு தொடங்குகிறது. சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிற்பம் சிவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்திரன், வருணன், அக்னி ஆகியோரே முக்கிய வேதக் கடவுள்கள் ஆவர். சிவன், விஷ்ணு வழிபாடு பின்னர் வளர்ந்தனவாகும். பொது ஆண்டுக்கு முந்திய முதலாயிரமாண்டின் (கி.மு 1000) இடைப்பகுதியில் சிந்து கங்கைச் சமவெளியில் பௌத்தம், சமணம் எனும் இரு மகத்தான மதங்கள் உருவாயின. (ஆசீவகம் போன்ற ஏனைய புறக்கோட்பாட்டு மதங்கள் போன்றே) இவை வைதீக வேதமத நடைமுறைகளை எதிர்த்தன.
இதைப் போலவே பொது ஆண்டின் முதலாயிரமாண்டின் இடைப்பகுதியில் நாட்டின் தென்பகுதியில் பக்தி இயக்கம் எனும் வடிவத்தில் ஓர் உன்னதமான சமய மரபு செழித்தோங்கியது. ஒரு மதக் கோட்பாடான, பக்தியின் பொருள் ஆழமான பற்றுடன் அனைத்துக்கும் மேலான இறைவனைச் சரணடைந்து முக்தி பெறுதலாகும். பகவத்கீதை போன்ற மத நூல்கள் பக்திக்கான பாதை அல்லது பக்தி மார்க்கத்தைப் பற்றி பேசியதாலும் இவ்வியக்கம் வலுப்பெற்றது. இக்காலப் பகுதியில்தான் பௌத்தம், சமணம் ஆகியவற்றின் ஒழுக்கநெறி, கடவுள் மறுப்புக் கோட்பாடுகளுக்கு எதிராகவே இவ்வியக்கம் தோன்றியது என வரலாற்றறிஞர்கள் வாதிடுகின்றனர். வேத இரையியல், இவை இரண்டிலிருமிருந்தும் சில கூறுகளை எடுத்து இணைத்துக் கொண்டது. ஆதிசங்கரர் புறமதக் கோட்பாடுகளை எதிர்கொள்ளும் பொருட்டு இந்து மதத்திற்கு ‘அத்வைதம்’ எனும் தத்துவக் கோட்பாட்டை வழங்கினார். அது அறிவார்ந்தவர்களின் நிலையில் செல்வாக்குப்பெற்றது. புகழ்பெற்ற சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் உள்ளத்தை உருக்கும் பாடல்களால் பக்திக் கோட்பாட்டிற்கு ஒரு வடிவம் கொடுத்து மக்களின் ஆதரவைப் பெற்றனர். வரலாற்றாய்வாளர்கள் இதனைப் பக்தி இயக்கம் என அழைக்கின்றனர். பக்தி இயக்கம் அரச ஆதரவோடு சமூக, அரசியல், மதம் , பண்பாடு , மொழி ஆகிய தளங்களில் மிக ஆழமான, நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு தென்னிந்தியா 7ஆம் நூற்றாண்டிலிருந்து 10ஆம் நூற்றாண்டு வரை மத மறுமலர்ச்சியின் இல்லமாக விளங்கியது. இராமானுஜர் போன்ற இறையியலாளர்களால், அது பதினோராம் நூற்றாண்டில் ஒரு தத்துவ, சித்தாந்த இயக்கமாக மறுவடிவம் கொண்டது. பக்தி வழிபாடு அடியார்கள் கொடுத்த ஊக்கத்தினால் 14ஆம் நூற்றாண்டில் இந்தியா முழுவதிலும் பரவியது. நாம் இங்கு பக்தி இயக்கத்தின் பொதுவான கூறுகளையும் அதை முன்னெடுத்த முக்கியமானவர்களையும், அதன் இருவகையான போக்குகளையும் மக்களின் சமூகப் பண்பாட்டு வாழிவில் அது ஏற்படுத்திய தாக்கத்தையும் பகுத்தாய்பு செய்ய உள்ளோம்.
தென்னிந்தியாவில் பக்தி வழிபாடு
- ஒரு பழங்குடிச் சமூகம் நன்கு கட்டமைக்கப்பட்ட சமூகமாக மாற்றம் பெறும்பொழுதும் அதிகாரமிக்க முடியாட்சி முறையிலான நிர்வாகமுறை உருவாகும்போதும் தனது அதிகாரத்தை நியாயப்படுத்திக்கொள்ள அதற்கு ஏதாவது ஒரு மதத்தை ஆதரிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
- பௌத்தமும் சமணமும் பெரும்பாலும் வணிக வர்க்கத்தினரால் ஆதரிக்கப்பட்டன. அரசுகளும் அவற்றை ஆதரித்தன. பக்தி இயக்கம் நிலவுடைமைச் சாதிகளிடையேயிருந்து தோன்றியதால் அது பௌத்தத்தையும் சமணத்தையும் விமர்சனம் செய்தது.
- இதன் விளைவாக அரசர்களின் ஆதரவைப் பெறுவதில் மோதல்கள் ஏற்பட்டன. பக்தியானது சாதி, பாலின வேறுபாடுகளின்றி அனைவராலும் அணுக இயலும் என்ற நிலையை ஏற்படுத்தியதன் மூலம் சமணமும் பௌத்தமும் பிராமணர்களின் அதிகாரத்தை எதிர்த்தன.
பௌத்த மற்றும் சமணத்தோடு மோதல்
- சான்றுகள்: பக்தி இலக்கியங்கள், பெரும்பாலும் புராணங்கள், திருத்தொண்டர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் ஆகியவை தமிழகத்தில் நடைபெற்ற மத மோதல்கள் குறித்த செய்திகளை வழங்குகிண்றன.
- தேவாரமானது அப்பர் (திருநாவுக்கரசர்) சம்பந்தர் (திருஞான சம்பந்தர்) சுந்தரர் ஆகிய மூவரால் எழுதப்பட்டப் பாடல்களைக் கொண்டவை. இவை மூன்றும் சேர்ந்து பன்னிரு சைவத் திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளாக இடம் பெறுகின்றன.
- மாணிக்கவாசகரின் பாடல்கள் எட்டாவது திருமுறை ஆகும். இவற்றில் பல பாடல்கள் பௌத்தர்களையும் சமணர்களையும் பற்றிய விமர்சனங்களை விவரிப்பவையாகும். அறுபத்துமூன்று நாயன்மார்களைப் பற்றி கூறும் சேக்கிழாரின் பெரியபுராணம் பக்தி இயக்கம் குறித்த முக்கியச் சான்றாகும்.
- வைணவ அடியார்களான ஆழ்வார்களின் பாடல்கள் நாலாயிர திவ்வியப்பிரபந்தமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பக்தி இயக்கப் பாடல்களின் முக்கியத்துவம் யாதெனில் அவை இன்றுவரை மக்களால் படிக்கப்படுகின்றன, பாடப்படுகின்றன, வணங்கப்படுகின்றன. அவை தமிழ் இலக்கிய மரபின் முக்கியப் பகுதியாகவும் விளங்குகின்றன.
ஆரம்ப கால மோதல்கள்
- பல்லவர் காலத்தில்தான் முதன்முதலாகச் சைவமும் வைணவமும் ஒருபுறமாகவும் சிரமணப் பிரிவுகளான சமணம், பௌத்தம் மறுபுறமாகவும் இருந்து மோதிக்கொண்டன.
- முதலாம் மகேந்திரவர்மப் பல்லவர் சமணத்தைப் பின்பற்றியதால் ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களைத் துன்புறுத்தினார். அப்பர் தொடக்கத்தில் சமணராக, தர்மசேனன் எனும் பெயருடனிருந்தார்.
- பின்னர் தனது தமக்கையின் செல்வாக்கால் சைவமதத்தைத் தழுவினார். சில சமணர்களால் தூண்டப்பட்ட மகேந்திரவர்மன் அப்பரை மீண்டும் சமணராக மாறும்படி வற்புறுத்தினார். அப்பர் மறுத்தபோது துன்புறுத்தப்பட்டார். முடிவில் மகேந்திரவர்மனே சைவமதத்திற்கு மாறியபோது பிரச்சனை முடிவுக்கு வந்தது.
- மரபுசார்ந்த ஒரு கதையின்படி சம்பந்தர் இறையியல் வாதங்களில் சமணர்களை வென்றதால் தோற்றுப்போன சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டனர். கூன் பாண்டியன் எனவும் அறியப்பட்ட மாறவர்மன் அரிகேசரி (640 – 670) சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறிய பின்னர் சம்பந்தருடைய செல்வாக்கால் மீண்டும் சைவரானார்.
- ஒரு சைவக் கதையின்படி சைவத்திற்குத் திரும்பிய பின்னர் சமணர் பலரை மதுரை மாவட்டத்திலுள்ள சமந்தம் என்னும் ஊரில் கொல்லும்படி ஆணையிட்டதாகவும் தெரிகிறது.
- சைவ சித்தாந்தம் போன்ற தத்துவ ஆய்வு நூல்கள் பௌத்த சமண தத்துவ மோதல்களை விரிவாக விளக்குகின்றன. சைவ சித்தாந்த நூல்களில் ஒன்றான சிவஞானசித்தியாரில் ‘பரபக்கம்’ என்ற பெயரில் தனிப் பிரிவொன்றுள்ளது. அது பௌத்த சமண வாதங்களை முற்றிலுமாக எதிர்க்கின்றது.
- பக்தி இலக்கியங்களும் திருத்தொண்டர்களைப் பற்றிய நூல்களும் மோதல்கள் ஏற்பட்ட நிகழ்வுகளையும் புறச்சமயத்தார் தோற்கடிக்கப்பட்டதையும் விளக்குகின்றன. அவ்வாறான மோதல்கள் இறுதியில் வன்முறை சார்ந்ததாக மாற்றம் பெற்று பல சமணத் துறவிகள் கவுழில் ஏற்றப்பட்டதில் முடிந்ததெனக் கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன.
- தத்துவம் சார்ந்த வாதங்கள் ஒரு பக்கம் நடைபெற்றாலும் பக்தி இயக்கம் மன்னர் ஆதரவைப் பெற்றிருந்ததன் விளைவாக பௌத்தமும் சமணமும் தோல்வியைச் சந்தித்தன.
- பதினோராம் நூற்றாண்டில் இவ்விரு மதங்களும் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டன. பௌத்தம் தமிழகத்திலிருந்தும் இந்தியாவிலிருந்தும் முற்றிலுமாகத் துடைக்கப்பட்டாலும் தமிழ்மொழி பேசுகின்ற சமணர்கள் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர்.
- சமண பௌத்த கோவில்களும் கருவறைகளும் பெரும்பாலும் சிதைக்கப்பட்டன, அல்லது பயன்பாட்டில் இல்லாமல் ஆயின. கலைப்பொருட்கள் பல புறக்கணிக்கப்பட்டன அல்லது கொள்ளை போயின. இன்றைய அளவிலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தலைப்பகுதி உடைக்கப்பட்ட புத்தர், சமணத்தீர்த்தங்கரர் சிலைகளைக் காணமுடிகிறது.
- இவ்வாறு இருந்தபோதிலும் வைதீகமும் புறச் சமயங்களும் ஒன்றோடொன்று கருத்து பரிமாற்றம் செய்துகொண்ட அடையாளங்களும் காணப்படுகின்றன.
- பௌத்தம், சமணம் ஆகியவற்றின் மையக்கருத்தான துறவறத்தை சைவமும் வைணவமும் ஏற்றுக்கொண்டன. பௌத்தம், வைணவம் ஆகிய இரண்டும் எளிமையையும் உலக சுகங்களை மறுப்பதையும் முன்னிறுத்தியபோது பக்தி இயக்கம், விழாக்கள் , சடங்குகள் என வாழ்க்கையைக் கொண்டாடியது.
- சைவ உணவு, கொல்லாமை ஆகிய மதிப்பு வாய்ந்த நெறிகளும் பரஸ்பர செல்வாக்கின் விளைவாக ஏற்பட்டு இருக்கலாம். புறச் சமயங்கள் வடமொழியான பிராகிருதத்தைப் பயன்படுத்தியதற்கு எதிர்வினையாக தமிழ்மொழிக்கு மேலதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
- பௌத்தமும் சமணமும் ஊழ்வினைக் கோட்பாட்டை பேசியபோது பக்தி இயக்கத்தை விளக்கியவர்ஜள் சிவனையும் விஷ்ணுவையும் சரணடைவதன் மூலம் விதியை வெல்லமுடியும் எனக் கூறினர்.
- பௌத்தம், சமணம் ஆகியவற்றுடன் ஏற்பட்ட மோதலின் விளைவாக வேதமதங்கள் சில மாறுதல்களுக்கு உள்ளாயின.
பக்தி இயக்கம் வடஇந்தியாவில் பரவுதல்
- தென்னிந்தியாவில் பக்தி இயக்கம் அதன் புகழின் உச்சத்தை எட்டியபோது பக்திக் கோட்பாடானது வைணவப் புலவர்களாலும் அடியார்களாலும் தத்துவத் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விளக்கப்பட்டது.
- இராமானுஜர் வசிஷ்டாத்வைதம் என்னும் தத்துவத்தை உருவாக்கினார். அவருடைய போதனைகள் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரண்டல்ல ஒன்றே என்ற ஆதி சங்கரரின் கருத்தை மறுத்தன.
- தமிழகத்தில் பக்தி இயக்க ஏழாம் நூற்றாண்டிலேயே செழித்தோங்கி இருந்த நிலையில் வடஇந்தியாவில் பதினைந்தாம் நூற்றாண்டில்தான் அது முழு வேகத்தைப் பெற்றது.
- இக்காலத்தில் பெரும் எண்ணிக்கையில் பக்திப் பாடல்கள் எழுதப்பட்டன. சாதியை அடிப்படையாகக் கொண்ட பிரிவினைகள், ஒதுக்கி வைத்தல், பல கடவுள்களை வணங்கும்முறை, உருவ வழிபாடு போன்றவற்றால் ஏற்பட்டிருந்த சமூகப் பின்னடைவுகளுக்கு எதிராக வட இந்தியாவில் பக்தி இயக்கம் குரல் கொடுத்தது.
- மதச் சான்றோர்கள் மூடநம்பிக்கைகளையும் தேவையற்ற சடங்குகளையும் விமர்சித்தனர். வைணவ பக்தி இயக்கத்தோடு இணைந்து ஒரு கடவுள் கோட்பாட்டை முன்வைத்தவர்கள் அன்றைய அளவில் முக்கிய மதங்களாகத் திகழ்ந்த வைதீகம், இஸ்லாம் ஆகியவற்றிலிருந்து விலகி சுதந்திரப் பாதையைப் பின்பற்றினர். இவ்விரு மதங்களிலிருந்த மூடநம்பிக்கைகளையும் பழமைவாதத்தையும் விமர்சித்தனர்.
- துருக்கியப் படையெடுப்போடு கூடிய இஸ்லாமின் வருகை வேத மதங்களுக்கும் குருமார்களுக்கும் பெரும் சவாலாகத் திகழ்ந்தது. பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாம் இந்தியாவின் பல பகுதிகளில் பரவியது. அதிகமான இந்தியர்கள் முஸ்லீம்களாயினர். இஸ்லாம் அரசு அதிகாரத்தோடு சமத்துவத்தை முன்வைத்தது இந்தியச் சமூகத்தில் கீழ்நிலையில் இருந்தோரைக் கவர்ந்தது.
- புதிய அரசியல் சமூகச் சூழல் பிரதான மதங்களின் சட்டதிட்டங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை ஓர் இயக்கமாக்கியது. இவ்வியக்கம் சாதி முறைக்கு எதிரானதாகவும், வேதங்களுக்கும் புராணங்களுக்கும் எதிரானதாகவும் உருவானது. பண்பாட்டுத் தளத்திலும் இவ்வியக்கம் பிராந்திய மொழிகளின் வளர்ச்சி இந்துஸ்தானி இசையின் வளர்ச்சி போன்ற தாக்கங்களை ஏற்படுத்தியது.
- முஸ்லீம்களின் அரசியல் அதிகாரத்திற்கு எதிரான இந்துக்களின் எதிர்வினை பன்முகத் தன்மை கொண்டதாய் இருந்தது. ஒருபுறம் புதிய மதத்திற்கு எதிராக வெறுப்பினைக் கொண்டிருந்தபோதும், புதிய சவால்களை எதிர்கொள்ளும் அளவுக்கு வலிமையை பெருக்க வேண்டுமெனின் இந்து மதத்திற்குள் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உணர்வும் தோன்றியது. இதன் முக்கிய விளைவு ஒருமைப்பாட்டை வற்புறுத்துகிற இயக்கங்கள் மற்றும் அவற்றின் புனிதர்கள் குறிப்பாக கபீர், குருநானக் மற்றும் ரவிதாஸ் ஆகியோரின் தோற்றம்.
சூபியிஸத்தின் தாக்கம்
- இந்து மதத்தில் தோன்றிய பக்தி இயக்கத்திற்கு இணையாக இஸ்லாம் மதத்தில் அதைப் போன்ற கருத்துக்களை சூபியிஸம் கொண்டிருந்தது. சூபி, வாலி, தர்வீஷ், பக்கீர் ஆகிய பெயர்கள் இஸ்லாமிய ஞானிகளைக் குறிப்பதாகும். இவர்கள் தியானம், யோகப் பயிற்சிகள், துறவறம், தியாகம் போன்றவற்றின் மூலம் உள்ளுணர்வைப் பெருக்கி இறை நிலையை உணர்ந்தவர்களாவர். 12ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியரின் சமூக வாழ்வில் சூபியிஸம் செல்வாக்குப் பெற்ற சக்தியாக விளங்கியது.
- சூபியிஸம் இஸ்லாமின் உள்ளுணர்வு சார்ந்த உள்முகமான, ஆச்சரியமான மற்றொரு பக்கமாகும். மதம், சமூக வேறுபாடுகள் என்ற எல்லைகளைத் தாண்டி சூபிகள் ஒட்டுமொத்த மனித குலத்தின் மேம்பாட்டிற்காகப் பணிச் செய்தனர் தத்துவ ஞானிகளான இவர்கள் தங்கள் பரந்த மனப்பான்மைக்காகப் பெயர் பெற்றனர்.
- இறைவனை அனைத்துக்கும் மேலான அழகின் உச்சம் என சூபிகள் கருதினர். அவ்வழகைக் கண்டு ஆச்சரியப்படல் வேண்டும், அதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுதல் வேண்டும், முழுக்கவனத்தையும் இறைவன்மேல் குவித்தல் வேண்டும் என்றனர்.
- அவர்கள் கடவுளை மஸ்க் (நேசிக்கப்பட வேண்டியவர்) என்றும் தங்களை ஆசிக் (நேசிப்பவர்கள்) என்றும் நம்பினர். பின்னாளில் சூபியிஸம் பல பிரிவுகளைக் கொண்டதாக மாறியது. சிஸ்டி, சுரவார்சி, குவாதிரியா , நஸ்பந்தி ஆகியன முக்கியப் பிரிவுகளாகும்.
- சூபியிஸம் நகர்ப் புறங்களிலும் கிராமப்புறங்களிலும் வேர்கொண்டது. சமூக அரசியல், பண்பாட்டுத் தளங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சூபியிஸம் அனைத்து விதமான மதச்சம்பிரதாயம், பழமைவாதம் வெளிவேடம் ஆகியவற்றை எதிர்த்தது.
- ஆன்மீகப் பேரின்ப நிலையை மட்டும் இலக்காகக் கொண்ட புதிய உலக ஒழுங்கை உருவாக்க ஆசை கொண்டது. அரசியல் அதிகாரத்திற்காக மோதிக்கொள்வதே இயல்பாக இருந்த ஒரு சூழலில், போர்களாலும் போட்டிகளால் சூழல் பாழ்பட்டுக்கிடந்த நிலையில் சூபிகள் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிலைநாட்டப் பணியாற்றினர்.
- சூபிகளின் மகத்தான பங்களிப்பு இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான வெறுப்பின் கூரிய முனைகளை மழுங்கடித்து அவர்களிடையே சகோதரத்துவத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தியதாகும்.
பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகள்
- பக்தி இயக்கச் சீர்த்திருத்தவாதிகள் ஒரு கடவுள் கோள்கையைப் போதித்தனர்.
- பிறப்பு இறப்பு எனும் சுழற்சியிலிருந்து விடுபட முடியும் என நம்பினர். இறைவனிடம் ஆழமான பற்றும் நம்பிக்கையும் கொள்வதன் மூலம் முக்தி அடைய முடியும் எனும் கருத்தை முன்வைத்தனர்.
- இறைவனுடைய அருளைப் பெற அர்ப்பணிப்பை வற்புறுத்தினர்.
- குருவானவர் வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் இருத்தல் வேண்டும்.
- உலக சகோதரத்துவம் எனும் கொள்கையைப் போதித்தனர்.
- உருவ வழிபாட்டை விமர்சனம் செய்தனர்.
- ஆழ்ந்த பக்தியுடன் பாடல்கள் பாட வேண்டுமென வலியுறுத்தினர்.
- மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் கடவுளின் குழந்தைகளே எனக் கூறினர். பிறப்பின் அடிப்படையில் மக்களைப் பிரித்துவைக்கும் சாதிமுறையைக் கண்டனம் செய்தனர்.
- சடங்குகள், சம்பிரதாயங்கள், புனிதயாத்திரைகள், நோன்புகள் ஆகியவற்றைக் கண்டனம் செய்தனர்.
- எந்த மொழியையும் புனிதமான மொழி என அவர்கள் கருதவில்லை. மக்களின் மொழிகளில் பாடல்கள் இயற்றினர்.
பக்தி இயக்கச் சீர்திருத்தவாதிகள்
கபீர்
- இடைக்கால இந்தியாவின் மிக முக்கியமான பண்பாட்டு ஆளுமையாகக் கபீர் கருதப்படுகிறார். புனிதங்கள் எனக் கருதப்பட்டவற்றை கேள்விக்குறியாக்கும் அவருடைய பாடல்கள் சடங்குகள், சம்பிரதாயங்களைக் கேலிக்குரியதாக்கி, கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற கருத்தை முன்வைத்தன.
- இவருடைய கருத்துகளால் கவரப்பட்ட மக்கள் இவரைப் பின்பற்றினர். அவருடைய வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவான செய்திகளே கிடைத்துள்ளன.
- நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த இவர் இராமானந்தரின் சீடராக, அவரிடமிருந்து வேதாந்தத் தத்துவத்தைக் கற்றுக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. பிரபலமான தஸ்கிரா-இ-ஆலியா-இ-ஹிந்த் (இஸ்லாமிய துறவிகளின் வாழ்க்கை) எனும் நூல் அவரை சூபி துறவியான ஷேக் தகி என்பவரின் சீடராகச் சித்தரிக்கிறது.
- முற்போக்கான மதச் சிந்தனைகளைக் கொண்ட கபீர் இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களிலுள்ள பிரிவினை வாதங்களையும், குறுகிய மனப்பான்மைகளையும் எதிர்த்தார்.
- இந்து சமூகத்தின் கீழ்த்தட்டுகளைச் சார்ந்த மக்கள் அவருடைய கருத்துக்களால் கவரப்பட்டனர். உருவ வழிபாடு, பல கடவுள் வழிபாடு, சாதிமுறை ஆகிய கைவிடப்பட வேண்டுமென உறுதிபடக் கூறினார். அதே சமத்தில் இஸ்லாமிலிருந்த சம்பிரதாயங்களையும் கடுமையாக விமர்சித்தார்.
- கடவுளின் மேல் உண்மையான பற்றுதலைக் கொண்டிருந்த அவர் இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிக்கும் தடைகளை உடைக்க முயன்றார். கடவுளை அடைய அவர் கண்டடைந்த பாதை கீழ்நிலையில் உள்ளோர்க்கும் மேல்நிலையில் உள்ளோர்க்கும் ஏற்புடையதாயிருந்தது. அவருடைய பாடல்கள் இன்றுவரை இந்தியாவின் பலபகுதிகளில் பாடப்பட்டு வருகின்றன.
ரவிதாஸ்
- ரவிதாஸ் 15, 16ஆம் நூற்றாண்டின் பக்தி இயக்கத்தைச் சேர்ந்த கவிஞரும் துறவியுமாவார். பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களால் குருவாக வணங்கப்படுபவர்.
- அவர் இயற்றிய பக்திப் பாடல்கள் பக்தி இயக்கத்தின் மேல் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின. ரவிதாஸின் வாழ்க்கை விவரங்களைப் பற்றி உறுதியான செய்திகள் இல்லை. கிடைத்துள்ள செய்திகளிலும் முரண்பாடுகளுள்ளன.
- பெரும்பான்மையான வரலாற்றறிஞர்கள் அவரை தோல் பதனிடுவோர் குடும்பத்தைச் சேர்ந்தவரெனக் கூறியுள்ளார். இவர் பக்தி இயக்கத் துறவியும் புலவருமான இராமானந்தரின் சீடர்களின் ஒருவராவார். சீக்கியரின் மதப் பாடல்களில் ரவிதாசரின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
- சாதி அடிப்படையிலான சமூகப் பிரிவுகள் ஆண், பெண் சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராகப் பேசினார். ஆன்மீக விடுதலையைப் பெறும் முயற்சியில் ஒற்றுமையை ஊக்குவித்தார்.
குருநானக்
- குரு நானக் மிகப்பெரும் அமைப்பின் செல்வாக்குமிக்க துறவியாவார். அவரால் நிறுவப்பட்ட சீக்கிய மதம் அவருடைய, ஐயப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பண்பாட்டு ஒற்றுமைச் சிந்தனையைப் பறைசாற்றுகிறது.
- ஒரு கடவுள் கோட்பாட்டைக் கொண்ட சீக்கிய மதம் கடவுள் ஒருவரே என்ற கருத்தையும், ஒழுக்க நெறிகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டுமென்பதையும் வலியுறுத்திக் கூறியது.
- இரண்டு நூற்றாண்டுகளில், பத்து சீக்கிய குருக்களின் தலைமையில் சீக்கிய மதம் பஞ்சாப் முழுவதும் விரிவடைந்து பெருவாரியான மக்களை ஈர்த்தது. சீக்கிய மதப் போதனைகள் வலிமை வாய்ந்த சமூக உணர்வை ஏற்படுத்தின.
- அக்காலத்தில் நிலவிய அரசியல் சூழல் முகலாயப் பேரரசுடன் பகைமையை உருவாக்கி அடக்குமூறைக்கு வழி வகுத்தது இறுதியில் குருக்களின் உயிர்த்தியாகத்தில் முடிந்தது.
- குரு கோவிந்த சிங் சீக்கிய மதத்தின் கடைசி குரு ஆவார். அவருக்குப் பின்னர் கிரந்த சாகிப் (புனித நூல்) குருவாகக் கருதப்பட்டது. குரு நானக்கின் போதனைகள் ஆதிகிரந்தம் ஆகும்.
- ஏனைய சிக்கிய குருக்களின் போதனைகளும், இராமானந்தஎ, சைதன்யர், நாமதேவர், கபீர், ஷேக் பருத் போன்ற பக்தி இயக்க கவிஞர்களின் சூபி துறவிகளின் போதனைகளும் ஆதி கிரந்தத்தோடு சேர்த்து குரு கிரந்த சாகிப் எனப்படுகிறது.
சைதன்யர் (1485 – 1533)
- வங்காளத்தைச் சேர்ந்த சைதன்யர் பக்தி இயக்கத்தின் ஒரு குறிப்பிட்ட நிலையை பிரதிபலித்தார். கபீர் மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த பக்தி இயக்கத் துறவிகளின் போதனைகளிலிருந்து அவர் வேறுபட்டார்.
- அனைத்து வேறுபாடுகளையும் கடந்து நிற்கும் இறைவனை புரிந்துகொள்ள மக்களை ஒரூங்கிணைத்த கபீரைப் போலல்லாமல் சைதன்யர் ஏனைய கடவுள்களைக் காட்டிலும் கிருஷ்ணர் உயர்வானவர் எனக்கொண்டார்.
- வேறு வகையில் சொல்வதென்றால் சைதன்யருடைய இயக்கம் ஒருமைப்பாட்டிற்கான இயக்கமல்ல, மாறாக இது ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகும்.
- விஷ்ணுவின் பல வடிவங்களில் பரவசத்தைத் தரும் கிருஷ்ணரின் வழிபாட்டுக்குத் திரும்புவதாகும்.
- வங்காள வைணவர்கள் இந்துமதத்தைச் சீர்திருத்த முயலவில்லை. மாறாக விஷ்ணுவின்மேல் பக்தி கொள்ள வற்புறுத்தினர். இருந்தபோதிலும் பல சமூகங்களிலிருந்து சைதன்யருக்குச் சீடர்கள் உருவாயினர்.
- சைதன்யர் இறை வழிபாட்டில் குழுவாகக் கூடிப் பாட்டிசைத்து அத்துடன் பரவசத்தை ஏற்படுத்தும் நடனமாடும் பழக்கத்தைப் பிரபலமாக்கினார்.
- அவருடைய இயக்கம் வங்காளத்திலும் ஒரிசாவிலும் பிரபலமானது. இது பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற பக்தி இயக்கத்தின் இருவேறு நிலைகளிடையே இருந்த வேறுபாடுகளை உணர்த்துகிறது. எங்கெல்லாம் சமூக சமத்துவம் பற்றிய அக்கறையும் கவலையும் இருந்ததோ அங்கு இந்துமதத்தின் மீது இஸ்லாம் நேரடியாகச் செல்வாக்குச் செலுத்தியது.
நாமதேவர்
- மகாராஷ்டிராவில் சதாரா மாவட்டத்தில் நரஸ் வாமணி எனும் கிராமத்தில் தையல் கலைஞரின் மகனாகப் பிறந்த நாமதேவர், ஜனதேவர் எனும் துறவியினால் ஈர்க்கப்பட்டு பக்தி இயக்கத்தில் பங்கெடுத்தார்.
- பந்தர்பூரிலுள்ள விட்டலா (விஷ்ணு)வின் மேல் தீவிர பக்தி கொண்ட நாமதேவர் தன் சீடர்களுடன் பெரும்பாலான நேரத்தை இறை வழிபாட்டிலும் தானே இயற்றிய பாடல்களைப் பாடுவதிலும் கழித்தார்.
- மராத்திய, இந்தி மொழிகளில் “அபங்க” (மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்து மத குருமார்கள் இறைவனைப் புகழ்ந்து எழுதிய பாடல்கள்) என்றழைக்கப்பட்ட பாடல்களை எழுதினார். அவர் பஞ்சாப் வரை பயணம் மேற்கொண்டார். பஞ்சாபிலும் அவருடைய போதனைகள் பிரபலமாயின.
- பின்னர் அவை குருகிரந்தத்தில் சேர்க்கப்பட்டன. “முழுமையான இதயத்தோடு இறைவனை வணங்குகள், மதப் பணி சார்ந்த வாழ்வை வாழுங்கள். உறுதியான பக்தியுடன் அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணியுங்கள்” என்பனவே அவருடைய செய்திகளின் சாரமாகும்.
இராமானந்தர்
- சைதன்யர் மாதாவாச்சாரியாரின் (வேதாந்தத்தில் துவைதக் கொள்கையை முன்னிறுத்தியவர்) தத்துவப் பள்ளியைச் சேர்ந்தவர். இராமானந்தர் இராமானுஜரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்.
- பிரயாகையில் (அலகாபாத்) பிறந்த இராமானந்தர் காசியில் இந்து மதத் தத்துவத்தில் உயர்கல்வியைக் கற்று இராமானுஜரின் பள்ளியில் போதகராகப் பணியிலமர்ந்தார்.
- வட இந்தியாவின் புனிதத் தலங்களுக்குச் சென்று வந்த அவர் வைணவத்தை போதித்தார். இராமர் சீதை ஆகியோரிடம் பக்தி வைத்தல் என்று தானே உருவாக்கிய புதிய கோட்பாட்டின் அடிப்படையில் வைணவத்தில் முற்போக்கான மாற்றங்களை அறிமுகப்படுத்தினார்.
- கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையைப் போதித்தார். சாதிமுறையை நிராகரித்த அவர் குறிப்பாக இந்து மதத்தின் பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொள்ளும் பிராமணர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தார்.
- சமூகத்தின் அடித்தளத்தைச் சேர்ந்த மக்கள் இவரைப் பின்பற்றினர். ரவிதாஸ், கபீர் மற்றும் இரண்டு பெண்கள் அவருடைய பன்னிரண்டு சீடர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர் என்பது மரபு.
- பிராந்திய மொழியான இந்தியில் தனது கொள்கைகளை போதித்தவர்களில் முதலாமவர் இராமானந்தரே. இதன் காரணமாகவே அனைத்துத் தரப்பு மக்களாலும் அறியப்பட்டவரானார்.
- இவருடைய சீடர்கள் மிதவாதிகள், முற்போக்கர்கள் என இரு பிரிவாகப் பிரிந்தனர். துளசிதாசரை உள்ளடக்கிய முற்போக்குப் பிரிவினர் இந்துக்களும் முஸ்லீம்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய சிந்தனையை உருவாக்க பெருமுயற்சி எடுத்தனர்.
மீராபாய் (1498 – 1546)
- மீராபாய் ராஜஸ்தானில், மேர்தா மாவட்டத்தில் குத் எனும் ஊரில் பிறந்தார். ஜோத்பூர் அரசை நிறுவிய ராணா ஜோதாஜியின் கொள்ளுப் பேத்தி ஆவார்.
- இவர் மேவாரின் அரசனான ராணா சங்காவின் மகன் போஜராஜன் என்பாரை மண்ந்தார். கிருஷ்ணரின் தீவிர பக்தையாக மாறிய அவர் அரண்மனையைவிட்டு வெளியேறி, அன்பே கடவுளை அடையும் வழியென போதனை செய்யவும் பஜனைப் பாசல்களைப் பாடவும் தொடங்கினார்.
- கடவுளை கிருஷ்ணர் எனும் பெயரில் வணங்க வேண்டுமென்றும், பிறப்பு , செல்வம், வயது, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் கிருஷ்ணருடைய அருள் யாருக்கும் மறுக்கப்படக் கூடாது எனப் போதித்தார்.
- அவருடைய பக்திப் பாடல்களும் இசைப்பாடல்களும் வளமான பண்பாட்டு மரபாகும். அவருடைய போதனைகள் தெய்வீகபக்தி என்னும் செய்தியை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்றது.
சூர்தாஸ்
- அக்பரின் அவையில் இடம் பெற்றிந்த சூர்தாஸ் ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகன் எனப் பலராலும் அறியப்பட்டவர்.
- சூர்தாஸ் தில்லி சுல்தானியர் காலத்து, வைணவப் போதகரான வல்லபாச்சாரியாரின் சீடர் என நம்பப்படுகிறது. வல்லபாச்சாரியார் புஷ்தி மார்க்கத்தை (அருள் பாதை) நிறிவியவராவார்.
- சூர்தாஸ் அன்பெனும் மதத்தையும் தனிப்பட்ட கடவுளிடம் பக்தியோடிருப்பதையும் போதித்தார். கடவுள் கிருஷ்ணரைக் குறித்து இந்தி மொழியில் உணர்வுபூர்மான பாடல்களை இயற்றினார்.
- சூர்தாஸின் கவிதைகளில் கிருஷ்ணருடைய ‘பால்லீலா’ முக்கியக் கருப்பொருளாக விளங்கியது. அவருக்குக் கிருஷ்ணர் தெய்வீகமானவர்.
- அவரைப் பொருத்த அளவில் காதல் என்பது உணர்வுபூர்வமான கருப்பொருளாகும். பிருந்தாவனத்தில் கிருஷ்ணர் மீது கோபியர் கொண்ட கட்டுப்படுத்த இயலாத காதலை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றார்.
- கோபியர் வெளிப்படுத்திய காதலின் தீவிரம் என்பது ஒரு தெய்வீக ஆன்மாவின் மேல் மனித ஆன்மா கொண்டிருக்கும் இயற்கையான கவர்ச்சியின் வெளிப்பாடென்றார்.
- சூர்சாகர், சூர்சரவளி, சாஹித்ய லஹரி ஆகியன அவருடைய முக்கியப் படைப்புகளாகும். அவருடைய மாபெரும் படைப்பான சூர்சாகர் அல்லது சூர்சமுத்திரம் கிருஷ்ணர் பிறந்ததிலிருந்து மதுராவுக்கு புறப்படும் வரையிலான கதைகளைக் கொண்டுள்ளது.
துக்காராம்
- துக்காராம் 1608 ஆம் ஆண்டு மஹாராஷ்டிராவில் பூனாவுக்கு அருகே ஒரு கிராமத்தில் பிறந்தார். சத்ரபதி சிவாஜி, ஏக்நாத், ராம்தாஸ் போன்றோரின் சமகாலத்தவர்.
- தொடக்கத்தில் ஒரு வணிகராக இருந்த இவர் பின்னர் தனக்குப் பிரியமான கடவுளான பந்தர்பூர் விட்டலாவின் புகழைப்பாடும் பாடல்களைப் பாடுவதில் நேரத்தை செலவிட்டார்.
- துக்காராம் கடவுள் வடிவமற்றவர் என நம்பினார். அவரிப் பொருத்த அளவில் உலக நடவடிக்கைகளில் ஆன்மீக இன்பத்தைத் துய்க்க முடியாது எனக் கூறினார்.
- வேத வேள்விகள், சடங்குகள் , புனிதப் பயணங்கள், உருவ வழிபாடு ஆகியவற்றை நிராகரித்தார். கடவுள் பற்று, மன்னிக்கும் மனப்பாங்கு, மன அமைதி ஆகியவற்றைப் போதித்தார். சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய செய்திகளைப் பரப்பினார்.
- இந்து முஸ்லீம் ஒற்றுமையை ஏற்படுத்த முயன்றார். அவர் தன்னுடைய ‘அபங்க’ பாடல்களை மராத்தி மொழியில் எழுதினார்.
பக்தி இயக்கத்தின் தாக்கங்கள்
- முக்தி என்பது வர்ணாஸ்ரமக் கொள்கையின்படி முதல் மூன்று படி நிலைகளைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமே உரியது என்ற நம்பிக்கையை மாற்றி அது அனைவருக்கும் உரியது என்ற கருத்தை முன்வைத்தது.
- பக்தி இயக்கம் பெண்களுக்கும் சமூகத்தின் அடித்தட்டிலிருந்த மக்களுக்கும் சேர்த்து ஆன்ம விடுதலைக்கான வழியைக் காட்டியது. பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட பக்தி இலக்கியங்கள் எண்ணிக்கையில் பெருகின.
- பக்தி இயக்கத்தைச் சேர்ந்த துறவிகள் தத்துவ ஞானத் துறையில் சிறந்து விளங்கி துவைதம், அத்வைதம் ஆகிய தத்துவக் கோட்பாடுகளை வழங்கினர். இக்காலத்தில் பிராந்திய அளவில் நடைமுறையிலிருந்த பண்பாட்டுப் பழக்கங்களான, அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுவது பண்டிகைகள், விழாக்கள் நடத்துவது, புனிதப் பயணங்கள் செல்வது, சைவ, வைணவச் சடங்குகளை செய்வது ஆகியன இன்றுவரை நடைமுறையில் உள்ளன.