Indus Valley Civilization Notes - சிந்து சமவெளி நாகரிகம் பாடக்குறிப்புகள்Tnpsc
பண்டைய நாகரிகங்கள் – சிந்துவெளி நாகரிகம் Notes 9th Social Science
9th Social Science Lesson 2 Notes in Tamil
2. பண்டைய நாகரிகங்கள் – சிந்துவெளி நாகரிகம்
அறிமுகம்
- சமுதாயங்கள் மேற்கொண்ட மேம்பட்ட வாழ்வியல் முறைகள் பண்டைய வேட்டையாடுதல் – உணவு சேகரித்தல் குழுக்கள் மற்றும் புதிய கற்கால வேளாண்மைச் சமுதாயங்களில் வாழ்வியலை விட ஒழுங்கமைவு கொண்டதாக அமைந்திருந்தன.
- நகரச் சமூகங்களானது சமூக அடுக்குகளையும், நன்கு திட்டமிடப்பட்ட நகரங்களையும் கொண்டிருந்தன. அவர்கள் கைவினைத் திறன்களையும், வணிகம் மற்றும் பண்டமாற்று முறைகளையும், அறிவியல் தொழில் நுட்பத் தகவமைவையும், அமைப்பு ரீதியான அரசியல் அமைப்பையும் (தொடக்கநிலை அரசு) கொண்டிருந்தனர்.
- இதனால், பண்டைய சமூக அமைப்புகளில் இருந்து இவர்களைப் பிரித்துக்காட்ட ‘நாகரிகம்’ என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. இதனால், இவர்கள் இதற்கு முந்தைய சமூகங்களை விட உயர்வானவர்கள் என்று கருதி விடக்கூடாது.
- ஏனெனில் ஒவ்வொரு பண்பாடும் நாகரிகமும் தனக்கான தனித்த வாழ்வியல் கூறுகளைக் கொண்டுள்ளன.
பண்டைய சமூகங்களும், பண்டைய அரசு உருவாக்கமும்
- நவீன காலத்துக்கு முந்தைய சமூகங்கள்- குழுக்கள், தொல்குடிகள், குடித்தலைமை முறை மற்றும் அரசுக்கு முந்தைய நிலைகள் என அறிஞர்களால் வகைப்படுத்தப்படுகின்றன.
- இடைக்கற்காலத்திற்கு முன்பு தொடக்ககாலச் சமூகங்கள் மக்கள் குழுக்களாகவே (bands) இருந்தன. இந்தக் குழுக்கள் என்பது நாடோடிகளாக இருந்த வேட்டையாடுவோர், உணவு சேகரிப்போர் ஆவர்.
- புதிய கற்கால வாழ்க்கை முறை தொடங்கியபோது, கிராமங்களில் பெரிய குழுக்களாக மக்கள் திரள ஆரம்பித்தனர்.
- இவர்கள் ஒரு பகுதியில் வாழும் உறவுமுறையால் இணைக்கப்பட்ட தொல்குடி சமுதாயங்களாக இருந்தார்கள்.
- இடைக்கற்காலக் காலகட்டத்தில் உருவான தொல்குடி அமைப்புகள் பெரும்பாலும் சமத்துவ இயல்பு கொண்டதாகவே இருந்தது.
- தலைவரின் கீழான குழுக்கள் (குடித்தலைமை முறை chifdoms என்பவை இனக்குழு அமைப்புகளைவிடச் சற்றுப்பெரிய அரசியல் அமைப்புகள்.
- இவர்கள் தொல்குழிகள் வாழ்ந்த இடங்களை விடப்பெரிய பரந்த இடங்களில் வாழ்ந்தார்கள். இவர்கள் உறவுமுறை அடிப்படையில் இணைந்தவர்கள் என்றாலும், இவர்கள் அனைவரும் சரிசமமானவர்களாக இல்லை.
- இக்குழுவில் செல்வம், அதிகாரம் ஆகியவற்றின் காரணமாகச் சமூக வேறுபாடுகள் நிலவின.
- புதிய கற்காலத்திற்குப் பிறகு ஆறுகளும், மண்வளமும் கொண்ட குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்பட்ட பண்பாட்டு வளர்ச்சி நாகரிகங்களாக வளர்ந்தன.
- புதிய கற்காலத்துக்குப் பிந்தைய காலத்தில் அதாவது வெண்கலக் கால சமுதாயங்களில் வேளாண்மை உபரியும், மக்கள் தொகை நெருக்கமும் உள்ள இடங்களில் அரசுக்கு முந்தைய நிலை அரசுகள் (Protostate) உருவாகின.
- இந்த அமைப்பு தாம் போரில் கைப்பற்றிய பல சிறிய பகுதிகளையும், குழுத் தலைவர்களையும், நகரங்களையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளும் அரசியல் அமைப்பாக இருந்தது.
- சமூகப் படிநிலையில் அரசர்களும், அரச குடும்பத்தினரும் உயர்ந்த நிலையில் இருந்தார்கள். இவர்கள் வசிக்க வசதி மிக்க கட்டிடங்கள் கட்டப்பட்டன.
- மதகுருமார்கள், வணிகர்கள், அரசரின் அதிகாரிகள் ஆகியோர் நடுத்தர அடுக்கில் இருந்தார்கள்.
- கைவினக் கலைஞர்களும் விவசாயிகளும் சமூகப் படிநிலையின் அடித்தட்டில் இருந்தார்கள்.
- விவசாயிகளிடமும் கைவினக் கலைஞர்களிடமும் வரி வசூலிக்கப்பட்டது. மொழியும், இலக்கியமும் வளர்ந்தன.
- அறிவியலும், கணிதமும், வானவியலும் ஆராய்ச்சிகள் மூலம் வளர்ந்தன. நகரமயமாக்கல் செயல்முறை தொடங்கியது.
பண்டைய நாகரிகங்கள்
- நாகரிகம் என்பது ஒரு முன்னேறிய, முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை என்று கருதப்படுகிறது.
- ஒரு குறிப்பிட்ட சுற்றுச்சூழலுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ப உருவான தகவமைப்பு என்று கருதத்தக்க வாழ்க்கை முறையை நோக்கி அது இட்டுச் செல்கிறது.
- அதிகமான எண்ணிக்கையில் மனிதர்கள் அருகருகே வாழ்வது அவசியமாகிற போது, அவை திட்டமிடல், முறைப்படுத்துதல், தனித்தன்மை பேணுதல் ஆகியவற்றைக் கொண்டு வந்தனர்.
- பின்பு, குடியிருப்புகளைத் திட்டமிட்டு உருவாக்க வேண்டியிருந்தது. ஓர் அரசியல் அமைப்பு உருவானது, சமூகம் ஒழுங்குபடுத்தப்பட்டது.
- உணவு மற்றும் கைவினைப் பொருட்களின் உற்பத்தி முறைப்படுத்தப்பட்டது.
- நாகரிகங்கள் வடிவம் பெறத் தொடங்கியதும் மிகப் பெரிய கட்டடங்களை எழுப்பினர். எழுத்துக் கலையை உருவாக்கினர். அறிவியலும், தொழில்நுட்பமும் சமூக மேம்பாட்டிற்குப் பங்காற்றின.
- செழிப்பான பகுதிகளின் விவசாயிகள் உற்பத்தி செய்த உபரி உணவு, பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு உணவளிக்கப் போதுமானதாக இருந்தது.
- பயிர்வளர்ப்பில் ஈடுபடாத மற்றவர்கள் வெண்கலக் கருவிகள், அணிகலன்கள், மட்பாண்டங்கள் செய்தல் போன்ற கைத்தொழில்களில் ஈடுபட்டனர்.
- மதகுருமார்கள், எழுத்தர்கள், பிரபுக்கள், ஆள்பவர்கள், நிர்வாகிகள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோர் இந்த நாகரிகத்தின் அங்கங்களாகினர்.
- எகிப்திய, மெசடோமிய, சிந்துவெளி , சீன நாகரிகங்களில் முக்கியமானவையாகும்.
- இந்த நாகரிகங்கள் தழைத்த அதே காலக்கட்டத்தில் , உலகின் மற்ற பகுதிகளில் வாழ்ந்தோர் வேட்டையாடும் உணவு சேகரிப்போராக, மேய்ச்சல்காரர்களாக வாழ்ந்தார்கள்,.
- வேட்டையாடுவோர் – உணவு சேகரிப்போரும், மேய்ச்சல் சமூகத்தினரும் இந்த நாகரிகங்களோடு ஊடாட்டங்கள் மூலம் உறவு பேணத் தொடங்கினர். அவர்களது வரலாறும் அதே அளவில் முக்கியமானதுதான்.
- இந்த நாகரிகங்களின் சம காலத்தில் தென்னிந்தியாவில் புதிய கற்கால வேளாண்மை மேய்ச்சல் சமுதாயங்களும், நுண்கற்கருவிகள் பயன்படுத்தும் வேட்டையாடுவோர் – உணவு சேகரிப்போர் சமுதாயங்களும் வாழ்ந்தனர்.
எகிப்திய மம்மிகள்
- பதப்படுத்தப்பட்ட இறந்த உடல் மம்மி எனப்படும்.
- இறந்தவர்களின் உடல்களை சோடியம் கார்பனேட், சோடியம் பைகார்பனேட் ஆகியவற்றின் கலவையான நாட்ரன் உப்பு என்ற ஒரு வகை உப்பை வைத்துப் பாய்துகாக்கும் வழக்கம் எகிப்தியரிடையே இருந்தது.
- நாற்பது நாட்களுக்குப் பிறகு, உப்பு உடலின் ஈரப்பதம் அனைத்தையும் உறிஞ்சிய பிறகு, உடலை மரத்தூளால் நிரப்பி, லினன் துண்டுகளால் சுற்றி, துணியால் மூடி வைத்துவிடுவார்கள்.
- உடலை சார்க்கோபேகஸ் எனப்படும் கல்லாலான சவப்பெட்டியில் பாதுகாப்பார்கள்.
- பேப்பர் என்ற சொல் “பாப்பிரஸ்” (Papyrus) என்ற தாவரத்தின் பெயரிலிருந்து வந்தது. எகிப்தியர்கள் காகித நாணல் (பாப்பிரஸ்) என்ற தாவர தண்டிலிருந்து தாள்களைத் தயாரித்தனர். இத்தாவரம் நைல் பள்ளத்தாக்கில் அதிகமாக வளர்ந்தது.
- அக்காட் நகரம் தான் பின்னர் பாபிலோன் என்று அழைக்கப்பட்டது. இது மேற்கு ஆசியாவின் வணிக, பண்பாட்டு மையமாக திகழ்ந்தது.
- கில்காமெஷ் காவியம் தான் உலகின் முதல் காவியமாக இருக்கலாம். பண்டைய சுமேரியாவில் கியூனிஃபார்ம் எழுத்து முறையைக் கொண்டு 12 களிமண் பலகைகளில் இது எழுதப்பட்டிருந்தது.
- அஸிரிய பேரரசு உலகின் முதல் இராணுவ அரசு எனக் கருதப்படுகின்றது. அவர்கள் ஒரு வலிமையான இராணுவ சக்தியாக உருவாவதற்கான காரணம், இரும்புத் தொழில் நுட்பத்தை நன்கு பயன்படுத்தியமைதான்.
சிகுராட் என்றால் என்ன?
சிகுராட்கள் என்பது பண்டைய மெஸபடோமியாவில் (தற்போதைய ஈராக்) காணப்படும் பிரமிட் வடிவ நினைவிடங்கள் ஆகும். மிகவும் புகழ்பெற்ர சிகுராட் உர் என்ற நகரில் காணப்படுகிறது.
எழுத்து மற்றும் எழுத்துமுறை உருவாக்கம்
- எழுத்து உருவாக்கப்பட்டது மனிதகுல வரலாற்றில் ஒரு முக்கியமான மைல் கல்லாகும்.
- 4000 ஆண்டின் பிற்பகுதியில் சுமேரியாவின் எழுத்துமுறை உருவானது.
- ஹைரோகிளிபிக் எனப்படும் சித்திர எழுத்துமுறை என்ற எகிப்திய எழுத்து முறை பொ.ஆ.மு. மூன்றாம் ஆயிரமாண்டின் துவக்கத்தில் உருவானது.
- இதே காலகட்டத்தில் ஹரப்பா மக்களும் ஒரு வித எழுத்து முறையை பின்பற்றினார்கள். எனினும் சிந்துவெளி எழுத்துகள் இன்னமும் வாசித்துப் புரிந்துகொள்ளப் படவில்லை.
- சீன நாகரிகமும் ஆரம்ப காலத்திலிருந்தே தனக்கென்று ஒரு எழுத்து முறையை உருவாக்கியது.
சிந்து சமவெளி நாகரிகம்
- ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படும் சிந்து சமவெளி நாகரிகம் இந்தியாவிலும்,பாகிஸ்தானிலும் சுமார் 1.3 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் பரவியிருந்தது.
- மேற்கே பாகிஸ்தான்-ஈரான் எல்லையில் உள்ள சுட்ஜென்-டோர், வடக்கே ஷோர்டுகை (ஆப்கனிஸ்தான்) கிழக்கே ஆலம்கீர்பூர் (உத்திரப்பிரதேசம்-இந்தியா),தெற்கே டைமாபாத்(மஹாராஷ்ற்றா-இந்தியா)ஆகிய இடங்களை எல்லைகளாகக் கொண்டது இந்நாகரிகம்.
- இப்பரப்பில் ஹரப்பா நாகரிகத்துக்கான பல சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- இந்நாகரிகம் பரவியுள்ள முக்கிய பகுதிகள் குஜராத், பாகிஸ்தான்,இராஜஸ்தான்,ஹரியனா.
திட்டமிடப்பட்ட நகரங்கள்
- ஹரப்பா (பஞ்சாப், பாகிஸ்தான்), மொஹஞ்சதாரோ (சிந்து, பாகிஸ்தான்), தோலாவிரா (குஜராத், இந்தியா), கலிபங்கன் (ராஜஸ்தான், இந்தியா), லோதால் (குஜராத், இந்தியா), பானவாலி (ராஜஸ்தான், இந்தியா) ராகிகரி (ஹரியானா, இந்தியா), சுர்கொடா (குஜராத், இந்தியா, ஆகியவை சிந்துவெளி நாகரிகத்தின் முக்கியமான நகரங்கள்.
- ஹரப்பா நகரங்களில் மதில் சுவர்கள், திட்டமிடப்பட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர்க் கால்வாய்கள் ஆகியவை காணப்படுகின்றன.
- ஹரப்பர்கள் சுட்ட, சுடாத செங்கற்களையும், கற்களையும் கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தினார்கள்.
- உள்ளாட்சி அமைப்பு ஒன்று நகரங்களின் திட்டமிடலை கட்டுப்படுத்தியிருக்கக் கூடும். சில வீடுகளில் மாடிகள் இருந்தன.
- மொஹஞ்சதாரோவில் உள்ள மாபெரும் குளியல் குளம் ஒரு முக்கியமான கட்டுமானமாகும்.
- இக்குளத்தின் அருகே நன்கு தளமிடப்பட்ட பல அறைகளும் உள்ளன.
- தோண்டியெடுக்கப்பட்ட சில கட்டுமானங்கள் களஞ்சியங்கள் போல் காணப்படுகின்றன.
- ஹரப்பர்களின் அரசு அமைப்பு பற்றி நமக்கு விபரங்கள் தெரியவில்லை. ஆனால், பண்டைய அரசு போன்ற ஒரு அரசியலைமைப்பு ஒன்று இருந்திருக்க வேண்டும்.
- மொஹஞ்சதாரோவிலிருந்து கிடைத்துள்ள ஒரு சிலை “பூசாரி அரசன்” என்று அடையாளம் காட்டப்படுகிறது. ஆனால் அது சரியானதா என்று உறுதிப்படுத்த முடியவில்லை.
- ஹரப்பாதான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்பதால், சிந்துவெளி நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்த நாகரிகம் சிந்து நதிக்கு அப்பாலும் பரவியுள்ளதால் சிந்து சமவெளி நாகரிகம் என்று முன்னர் அழைக்கப்பட்டதற்கு மாறாக சிந்துவெளி நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது.
வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும்
- ஹரப்பா மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கோதுமை, பார்லி மற்றும் பலவிதமான தினை வகைகளைப் பயிரிட்டார்கள்.
- இரட்டைச் சாகுபடி முறையும் அவர்கள் கடைபிடித்தார்கள்.
- ஆடு மாடு வளர்த்தலும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது.
- மாடுகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகளையும் அவர்கள் வளர்த்தார்கள்.
- யானை உள்ளிட்ட பல விலங்குகள் பற்றி அறிந்திருந்தார்கள். ஆனால் குதிரைகளைப் பயன்படுத்தவில்லை.
- ஹரப்பாவின் மாடுகள் ஜெபு என்றழைக்கப்படும். இது ஒரு பெரிய வகை மாட்டின் இனம்.சிந்துவெளி முத்திரைகளில் இவ்வைகையான காளை உருவம் பரவலாகக் காணப்படுகிறது.
மட்பாண்டக் கலை
- ஹரப்பர்கள் ஓவியங்கள் தீட்டப்பட்ட மட்பாண்டங்களை பயன்படுத்தினார்கள்
- மட்பாண்டங்கள் ஆழமான சிவப்பு வண்ணம் பூசப்பட்டு கருப்பு நிற ஓவியங்கள் தீட்டப்பட்டவை.
- பீடம் வைத்த தட்டு, தானியம் போன்றவற்றைச் சேமித்து வைப்பதற்கான ஜாடிகள், துளையிடப்பட்ட ஜாடிகள், கோப்பைகள், ‘S’ வடிவ ஜாடிகள், தட்டுகள்,சிறுதட்டுகள், கிண்ணங்க்கள், பானைகள் என்று பலவிதமான மட்பாண்டங்களைச் செய்தார்கள். அவர்கள் மட்பாண்டங்களில் சித்திரங்களைத் தீட்டினார்கள்.
- அரசமர இலை, மீன் செதில், ஒன்ரையொன்று வெட்டும் வட்டங்கள், குறுக்கும் நெடுக்குமான கோடுகள், கிடைக் கோட்டுப் பட்டைகள், கணித வடிவியல் (ஜியோமதி) வரடிவங்கள், செடி, கொடிகள் எனப் பல்வேறு ஓவியங்களைக் கருப்பு நிறத்தில் தீட்டினார்கள்.
உலோகக் கருவிகளும் ஆயுதங்களும்
- ஹரப்பா பண்பாட்டு மக்கள் செர்ட் என்ற சிலிகா கல் வகையில் செய்த பிளேடுகள், கத்திகள், செம்புப் பொருட்கள், எலும்பாலும் தந்தத்தாலும் செய்யப்பட்ட கருவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள்.
- இரும்பின் பயனை அவர்கள் அறியவில்லை.
- கூர்மையான கருவிகள், உளிகள், ஊசிகள், மீன் தூண்டில் முட்கள், கத்திகள், நிறுவைத் தட்டுகள், முகம் பார்க்கும் கண்ணாடி, அஞ்சனம் தீட்டும் குச்சி ஆகியவை செம்பால் செய்யப்பட்டன.
- செம்பில் செய்த அம்புகள், ஈட்டிகள், உளி, கோடாரி ஆகிய கருவிகளைப் பயன்படுத்தினார்கள்.
- மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள நடனமாடும் பெண்ணின் சிலை, அவர்களுக்கு மெழுகு அச்சில் உலோகத்தை உருக்கி ஊற்றி சிலை வார்க்கும் தொழில் நுட்பம் தெரிந்திருந்த்து என்பதைக் காட்டுகிறது.
ஆடை, அணிகலன்கள்
- ஹரப்பா பண்பாட்டு மக்கள் பருத்தி மற்றும்பட்டு பற்றி அறிந்திருந்தார்கள்.
- உலோகத்தாலும் கல்லாலுமான அணிகலன்களைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் செம்மணிக்கல் (கார்னிலியன்), செம்பு மற்றும் தங்கத்தாலான அணிகலங்களைச் செய்தார்கள்.
- கல் அணிகலன்களையும் சங்கு வளையல்களையும் செய்தார்கள். சிலவற்றில் அணி வேலைப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இவற்றை அவர்கள் மெசபடோமியாவிற்கு ஏற்றுமதி செய்தார்கள்.
வணிகமும் பரிமாற்றமும்
- ஹரப்பர்களுக்கு மெசபடோமியர்களுடன் நெருங்கிய வணிகத் தொடர்பு இருந்தது.
- மேற்காசிய பகுதிகளான ஓமன், பஹைரைன், ஈராக், ஈரான் போன்ற பகுதிகளில் ஹரப்பன் முத்திரைகள் கிடைத்துள்ளன.
- கியூனிபார்ம் ஆவணங்கள் மெசபடோமியாவிற்கும், ஹரப்பர்களுக்கும் இடையே இருந்த வணிகத் தொடர்பை எழுத்துகளில் காணப்படும் மெலுஹா என்ற குறிப்பு சிந்து பகுதியைக் குறிப்பதாகும்.
எடைகளும் அளவுகளும்
- ஹரப்பர்கள் முறையான எடைகளையும் அளவுகளையும் பயன்படுத்தினார்கள்.
- வணிகப் பறிமாற்றங்களில் ஈடுபட்ட காரணத்தால் அவர்களுக்கு முறைப்படுத்தப்பட்ட அளவுகள் தேவையாக இருந்தது.
- ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் கனசதுரமான செர்ட் எடைகள் கிடைத்துள்ளன.
- தராசுகளுக்கான செம்புத் தட்டுகள் கிடைத்துள்ளன.
- எடைகள் அவர்களுக்கு ஈரடிமான எண் முறை (பைனரி) பற்றித் தெரிந்ததைக்காட்டுகின்றன
- எடைகளின் விகிதம் 1;2;4;8;16;32 என்று இரண்டிரண்டு மடங்காக அதிகரித்தன
.
முத்திரைகள் எழுத்துருக்கள்
- ஹரப்பா பண்பாட்டுப் பகுதிகளில் நுரைக்கல்,செம்பு,சுடுமண் தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்ட முத்திரைகள் கிடைத்துள்ளன.
- வணிக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
- ஹரப்பன் எழுத்துக்கள் இதுவரை வாசிக்கப்படவில்லை
- ஹரப்பன் பகுதிகளிலிருந்து சுமார் 5000 எழுத்துடைய சிறு எழுத்துத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- சில அறிஞர்கள் இவை திராவிட மொழியின என்று உறுதியாகக் கருதுகிரார்கள்.
- சிந்துவெளி நாகரிகமே இந்தியப் பண்பாட்டு உருவக்கத்துக்கான அடித்தளம் எனலாம்.
கலைகள், பொழுதுபொக்குகள்
- ஹரப்பா பகுதிகளில் கிடைத்துள்ள சுடுமண்ணாலான சிறுசிலைகள், மட்பாண்டங்களில் உள்ள ஓவியங்கள், வெண்கலச் சிலைகள் ஆகியவை ஹரப்பர்களின் கலைத்திறமையைக் காட்டுகின்றன.
- மாக்கல்லில் செய்யப்பட்ட ‘மதகுரு அல்லது அரசன்’ செம்பில் வார்க்கப்பட்ட நடனமாடும் பெண் சிலை (இரண்டும் மொஹஞ்சதாரோவில் கிடைத்தவை), ஹரப்பா , மொஹஞ்சதாரோ தோலாவிராவில் கிடைத்த கற்சிலைகள் ஆகியவை இப்பகுதியின் முக்கியமான கலை படைப்புகள்
- பொம்மை வண்டிகள், கிலுகிலுப்பைகள், பம்பரங்கள், கோலிக்குண்டுகள்,பல்வேறு விளையாட்டிற்கான சுடுமண் சில்லுகள் ஆகியவை ஹரப்பா மக்களின் பொழுதுபோக்கு விளையாட்டுகளைக் காட்டுகின்றன,
ஹரப்பன் மக்களும் பண்பாடும்
- ஹரப்பர்களின் எழுத்துகளுக்கான பொருள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், ஹரப்பா நாகரிகம் பற்றி முழுமையாக அறிய முடியாமல் உள்ளது. அவர்கள் திராவிட மொழியைப் பேசினார்கள் என்று அறிஞர்களில் ஒரு சாரார் கூறுகிரார்கள்.
- தொல்லியல் ஆய்வுகள் நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அவர்கள் கிழக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் இடம் பெயர்ந்ததைக் காட்டுகின்றன.
- ஹரப்பா மக்களில் சிலர் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் குடிபெயர்ந்திருக்க வாய்ப்புகள் உண்டு. அவர்களது எழுத்துக்கு பொருள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே பல கேள்விகளுக்கு உறுதியான பதில் கிடைக்கும்.
- சிந்துவெளி நாகரிகத்தில் ஒன்றுக்கும் அதிகமான குழுக்கள் இருந்தன.
- சிந்துவெளியில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், வேட்டையாடுவோர்-உணவு சேகரிப்போர் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
- சிந்துவெளி கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகிறது; பொ.ஆ.மு 3300 முதல் பொ.ஆ.மு 2600 வரையான காலகட்டம் ஹரப்பா என அழைக்கப்படுகிறது.
- பொ.ஆ.மு 2600-1900 வரையான காலகட்டம் முதிர்ந்த ஹரப்பா நாகரிகம் எனப்படுகிறது.
- பிந்தைய ஹரப்பா பொ.ஆ.மு 1700 வரை நீடித்திருக்கலாம்.
சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி
- சுமார் பொ.ஆ.மு 1900லிருந்து சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி பெறத் துவங்கியது.
- பருவநிலை மார்ரம், மெசடோமியாவுடனான வணிகத்தில் வீழ்ச்சி, நதியின் வறட்சி அல்லது வெள்ளப்பெருக்கு,அந்நியர் படையெடுப்பு ஆகியவை இந்த நாகரிகம் வீழ்ச்சி பெறவும், மக்கள் தெற்கு மற்றும் கிழக்கு திசை நோக்கி இடம் பெயரவும் சில முக்கியமான கரணங்களாக அமைந்தன எனக் கருதப்படுகிறது.
- சிந்துவெளி நாகரிகம் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை, அது கிராமப் பண்பாடாக இந்தியாவில் தொடர்ந்தது.
சிந்துவெளி நாகரிகமும், தமிழர் நாகரிகமும்
- தென்னிந்தியாவின் பெருங்கற்கால முதுமக்கள் தாழிகளில் காணப்படும் கோட்டுருவக் குறியீடுகள் சிந்துவெளி எழுத்துகளை ஒத்திருப்பதும், தமிழக ஊர் பெயர்கள் – பாகிஸ்தானின் சிந்து பகுதி ஊர் பெயர்கள் ஒத்துள்ளமையும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தமிழ் பண்பாட்டிற்கும் உள்ள உறவை நிறுவ வாதங்களாக முன்வைகப்படுகின்றன.
- அருட்தந்தை ஹென்றி ஹெராஸ், அஸ்கோ பர்போலா, இராவதம் மகாதேவன் போண்ற ஆய்வாளர்களும் சிந்துவெளி எழுத்துக்கும் திராவிட/தமிழ் மொழிக்கும் இடையே ஒற்றுமை நிலவுவதை இனங்கண்டுள்ளார்கள்.
- தொல்லியல் சான்றுகள் இடைக் கற்காலத்திலிருந்தே தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் பல மக்கள் குழுக்கள் தொடர்ச்சியாக வசித்து வந்ததைக் காட்டுகின்றன.
- சிந்துவெளியின் சில கருத்துக்களும் தொழில்நுட்பங்களும் தென்னிந்தியாவை அடைந்துள்ளன.
- தமிழ்நாட்டின் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, அகழ்வாய்வுப் பகுதிகளில் கிடைத்துள்ள கார்னீலியன் பாசிமணிகள், சங்கு வளையல்கள், செம்பு முகம்பார்க்கும் கண்ணாடிகள் ஆகியவை முதலில் சிந்துவெளி மக்களால் அறிமுகம் செய்யப்பட்டவை எனக் கருதப்படுகிறது.
- மக்கள் இடம் பெயராமலேயே கருத்துக்களும், அறிவும், பொருட்களும் தொலை தூரங்களுக்குப் பரவ முடியும். இவ்வாதத்திற்கு தெளிவான முடிவுகள் பெற மேலதிகமான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
- தமிழகத்தின் பண்டைய நகரங்களான கீழடி, அரிக்கமேடு, உறையூர் போன்றவை இந்தியாவின் இரண்டாவது நகரமயக் காலகட்டத்தில் தழைத்தோங்கின. இந்த நகரங்கள் சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்து சுமார் 1200 ஆண்டுகள் கழித்து உருவானவை.