Ethics Questions

தொல்குடி விழுமியங்கள் 11th Ethics Lesson 6 Questions

11th Ethics Lesson 6 Questions

6] தொல்குடி விழுமியங்கள்

1) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு இன்றுவரை ஆசியா, ஆப்பிரிக்கா, ஆகிய கண்டங்களில் மட்டும் தொல்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.

ⅱ) இவர்களுள் மிகச்சிலரைத் தவிரப் பிறர் தனித்து வாழ்கின்றனர்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு இன்றுவரை ஆசியா, ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய ஆறு கண்டங்களிலும் தொல்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் மிகச்சிலரைத் தவிரப் பிறர் எல்லோரையும் போல உலகத்தோடு கலந்துவிட்டனர். இவ்வாறு கலந்துவிட்டவர்களின் பண்பாடுகளிலிருந்தும், ஒழுகலாறுகளிலிருந்தும், மனித சமத்துவம் சார்ந்த விழுமியங்கள் உருப்பெற்றுள்ளன.

2) கீழ்க்கண்டவற்றுள் தொல்குடி விழுமியங்கள் எவை?

ⅰ) பெண்களைப் போற்றல்

ⅱ) மக்கட்பேற்றைக் கொண்டாடல்

ⅲ) இயற்கையை வழிபடுதல்

ⅳ) விருந்தோம்பல்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: இத்தொல்குடி விழுமியங்கள், உலகப் பண்பாட்டு வரலாற்றிற்கும், தத்துவ வளர்ச்சிக்கும் மிகுந்த பயன்களை நல்கியுள்ளன. பெண்களைப் போற்றல், மக்கட்பேற்றைக் கொண்டாடல், வீரத்தையும் வெற்றியையும் விரும்புதல், இயற்கையை வழிபடுதல், விருந்தோம்பல், மூத்தோரை மதித்தல், கூடி உண்ணல், உயிர்களை நேசித்தல், உலகை விரும்பல் ஆகிய விழுமியங்களைத் தொல்குடி விழுமியங்கள் எனலாம்.

3) கூற்று: தொல்குடி அறிவு என்பது, நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கிக் கண்ணால் கண்ட பொருள்களையும் செயல்களையும் பகுத்தாராய்வதன் விளைவால் உருவானதாகும்.

காரணம்: கடுமையான உடலுழைப்பின் வழியாக இவ்வறிவை இயல்பாகக் கண்டடைந்தனர்.

(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விளக்கம்: தொல்குடி அறிவு என்பது, நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கிக் கண்ணால் கண்ட பொருள்களையும் செயல்களையும் பகுத்தாராய்வதன் விளைவால் உருவானதாகும். கடுமையான உடலுழைப்பின் வழியாக இவ்வறிவை இயல்பாகக் கண்டடைந்தனர்.

4) பொருத்துக:

A) மூங்கில் – 1) நெருப்பு

B) மலை – 2) உழவு

C) பன்றி – 3) உடல் உறுதி

D) ஏறு தழுவுதல் – 4) எதிரொலி

A B C D

a) 1 4 2 3

b) 4 3 2 1

c) 3 2 1 4

d) 3 1 4 2

விளக்கம்: மூங்கிலின் உரசலிலும் கற்களின் உராய்விலும் நெருப்பு மூட்டக் கற்றனர்; மலைகளில் மோதித்திரும்பும் குரல்களைக் கேட்டு எதிரொலியை அறிந்தனர்; நிலத்தைத் தோண்டிக் கிழங்கெடுக்கும் பன்றியிடமிருந்து உழவைக் கண்டுபிடித்தனர். கட்டுமரம் ஏறிக் கடலை வென்றனர்; ஏறு தழுவி உடலை உறுதி செய்தனர்; கீழாநெல்லி, மலைவேம்பு போன்ற மூலிகைகளைத் தின்று நோய் தீர்த்தனர். இத்தகைய பட்டறிவு, கூட்டுப்பொறுப்பு ஆகியவற்றின் இணைவில் தோன்றிய விழுமியங்களே, மாபெரும் அறங்களாக அமைந்தன. உலகளாவிய அறக்கருத்துகளின் விதைமுளைகளான இவை இலக்கியச் சான்றுகளுடன் இங்கு விளக்கி உரைக்கப்படுகின்றன.

5) பெண் சமூகத்தில் நிகழும் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் வழிகாட்டியாக இருந்தது எப்போது?

ⅰ) தனிச்சொத்து தோற்றத்திற்கு முன்

ⅱ) தனிக்குடும்ப தோற்றத்திற்கு முன்

ⅲ) அரசு தோற்றத்திற்கு முன்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: பெண்களைப் போற்றல்: தனிச்சொத்து, தனிக்குடும்பம், அரசு ஆகியவற்றின் தோற்றத்திற்கு முன்னால் பெண்ணே சமூகத்தில் நிகழும் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் வழிகாட்டியாக இருந்து குடிமரபைக் கொண்டுசெலுத்தியவளாகக் கருதப்படுகிறாள்.

6) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) பெண் முதன்மைச் சமூகத்தில் போட்டியும் பொறாமையும் பூசலும் போர்களும் அதிக அளவில் இருந்தன.

ⅱ) தம்மைச் சுற்றி வாழும் அனைவரின் முன்னேற்றத்தையும் நன்மைகளையும் பெண்கள் தலைமையில் உறுதிசெய்தனர்.

ⅲ) தொல்குடியைத் தொடர்ந்த இனக்குழு வாழ்விலும் பெண்களின் ஆளுமைப் பண்பு நீடித்தது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: இவ்வாறான பெண் முதன்மைச் சமூகத்தில் போட்டியும் பொறாமையும் பூசலும் போர்களும் குறைந்த அளவில் இருந்தன. தம்மைச் சுற்றி வாழும் அனைவரின் முன்னேற்றத்தையும் நன்மைகளையும் பெண்கள் தலைமையில் உறுதிசெய்தனர். அவர்களின் அறிவுத்திறனும் செயலாற்றலும் சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிகாட்டின. தொல்குடியைத் தொடர்ந்த இனக்குழு வாழ்விலும் பெண்களின் ஆளுமைப் பண்பு நீடித்தது. முதுகுடிப் பெண்களுக்குப் பழஞ்சமூகங்களில் பெருமதிப்பும் சிறப்பும் இருந்தன. தொல்குடிவாழ்வில் அனைத்து வளமைகளின் அடிப்படையாகப் பெண் கருதப்பட்டாள்.

7) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) வேட்டையாடுவதிலும் வேளாண்மையிலும் உணவைச் சேகரிப்பதிலும் பாதுகாப்பதிலும், குடித்தலைமை ஏற்பதிலும் பெண் கள் பங்கேற்கவில்லை

ⅱ) முதிய பெண்களைப் போற்றி மதிக்கும் பண்பாடு, தொல்குடிகளிடம் பெரும் விழுமியமாய் விளங்கியது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: வேட்டையாடுவதிலும் வேளாண்மையிலும் உணவைச் சேகரிப்பதிலும் பாதுகாப்பதிலும், குடித்தலைமை ஏற்பதிலும் மக்கட்பேற்றிலும் பெண் முன்னின்றாள். கலையையும் கல்வியையும் அளிப்பதிலும், உடலைப் பேணுவதிலும், மருத்துவம் பார்ப்பதிலும், பகிர்ந்தளித்தலிலும் வழிநடத்தலிலும், சிக்கல்களை இனங்காண்பதிலும் தீர்ப்பதிலும் பெண்ணே குடித்தலைமை ஏற்றாள். தம்மை வழிநடத்திய இம்முதிய பெண்களைப் போற்றி மதிக்கும் பண்பாடு, தொல்குடிகளிடம் பெரும் விழுமியமாய் விளங்கியது.

8) பெண்கள் பகட்டான வாழ்வை விரும்பாமல், எளிமையும் உயர்வும் உள்ள வாழ்வையே விரும்பினர் என்பதை கூறும் நூல்?

a) சிறு பாணாற்றுப்படை

b) பெரும்பாணாற்றுப்படை

c) நற்றிணை

d) புறநாநூறு

விளக்கம்: வாழ்விற்கான கடமைகளை அணிகலன்களாக விரும்பி ஏற்ற பேரறிவுடைய பெண்டிரைச் சங்க இலக்கியம் போற்றியுள்ளதைக் காண்கிறோம். பெண்கள் பகட்டான வாழ்வை விரும்பாமல், எளிமையும் உயர்வும் உள்ள வாழ்வையே விரும்பினர் என்பதைப் பெரும்பாணாற்றுப்படை எடுத்துரைக்கிறது.

9) நெல்லையும் முல்லையின் அரும்புகளையும் கொண்டு பெரிய காவலையுடைய ஊரின் நன்மைக்காக நற்சொல் கேட்டுநின்ற முதிய பெண்களைப் பற்றி கூறும் நூல்?

a) குறிஞ்சிப்பாட்டு

b) முல்லைப்பாட்டு

c) நற்றிணை

d) அகநானூறு

விளக்கம்: நெல்லையும் முல்லையின் அரும்புகளையும் கொண்டு பெரிய காவலையுடைய ஊரின் நன்மைக்காக நற்சொல் கேட்டுநின்ற முதிய பெண்களைப் பற்றி முல்லைப்பாட்டு (7-11) பேசுகிறது.

10) திருமண விழாக்களை முதிய பெண்கள் தலைமையேற்று நடத்தியதை பற்றி கூறும் நூல்?

a) குறிஞ்சிப்பாட்டு

b) முல்லைப்பாட்டு

c) நற்றிணை

d) அகநானூறு

விளக்கம்: திருமண விழாக்களை முதிய பெண்கள் தலைமையேற்று நடத்தியதை அகநானூறு (பாடல்:86) காட்டுகிறது. முதிய பெண்டிர், பூவும் நெல்லும் கலந்த நீர் நிறைந்த குடங்களில் உள்ள நீரால் மணமக்களை நீராட்டித் திருமணத்தை நிகழ்த்தியதாக, அப்பாடல் தெரிவிக்கிறது.

11) “நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள் எருமை நல்லான் கருநாகு பெறூஉம்” இப்பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?

a) சிறு பாணாற்றுப்படை

b) பெரும்பாணாற்றுப்படை

c) நற்றிணை

d) புறநாநூறு

விளக்கம்: “நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள் எருமை நல்லான் கருநாகு பெறூஉம்” (பெரும்பாணாற்றுப்படை: 164 – 165) நெய்யை விற்றுப் பசும்பொன்னை ஈடாகப் பெறாமல், பால் தரும் எருமையையும் நற்பசுவையும் எருமைக்கன்றையும் ஈடாக வாங்கும் பெண்ணைப் பெரும்பாணாற்றுப்படை போற்றுகிறது. இங்குப் பொலிவளிக்கும் பொன்னை விடவும் பயனளிக்கும் பால் மாடுகளையே பெரியதாகக் கருதும் நடைமுறை வாழ்வியல் அறிந்த பெண்ணின் பெருமையைக் காண்கிறோம்.

12) பொருத்துக:

A) செம்முது பெண்டு – 1) மதுரைக்காஞ்சி

B) செம்முது செவிலியர் – 2) புறநானூறு

C) பெருமுது பெண்டிர் – 3) அகநானூறு

D) தொன்முது பெண்டிர் – 4) முல்லைப்பாட்டு

A B C D

a) 1 4 2 3

b) 2 3 4 1

c) 3 2 1 4

d) 3 1 4 2

விளக்கம்: செம்முது பெண்டு (புறநானூறு 276), செம்முது செவிலியர் (அகநானூறு 254), செம்முகச் செவிலியர் (நெடுநல்வாடை 153), முதுசெம் பெண்டிர் (அகநானூறு 86), பெருமுது பெண்டிர் (முல்லைப்பாட்டு 11), முதுவாய்ப் பெண்டிர் (அகநானூறு 22), முதுவாய்ப் பெண்டு (அகநானூறு 63), பேரில் பெண்டு (புறநானூறு 270), தொன்முது பெண்டிர் (மதுரைக்காஞ்சி 409) எனப் பற்பல அடைமொழிகள்வழிப் போற்றப்பட்டுள்ளனர்.

13) கூரிய அறிவும் முதுமையும் உடைய பெண்களை செம்முது பெண்டிர் என்று கூறும் நூல்?

a) சிறு பாணாற்றுப்படை

b) பெரும்பாணாற்றுப்படை

c) நற்றிணை

d) புறநாநூறு

விளக்கம்: கூரிய அறிவும் முதுமையும் உடைய பெண்கள் செம்முது பெண்டிர் (நற்றிணை 288), இப்பெண்கள் தலைவனின் வெற்றிக்காகத் தலைவிக்கு வாழ்த்து கூறுவோராகவும், தூது செல்வோராகவும் மகளைத் தேடிச் செல்வோராகவும் விளங்கினர்.

14) பொதுநன்மை பேணும் பெண்களைப் பொதுசெய் பெண்டிர் என்று கூறும் நூல்?

a) குறிஞ்சிப்பாட்டு

b) முல்லைப்பாட்டு

c) நற்றிணை

d) அகநானூறு

விளக்கம்: குறி சொல்வோராகவும், விரிச்சி கேட்போராகவும், நிமித்தம் பார்ப்போராகவும், அறத்தொடு நிற்போராகவும், மணவினை நிகழ்த்துவோராகவும், நெல்லும் பூவும் தூவி இயற்கையைத் தொழுவோராகவும், பொதுநன்மை பேணுவோராகவும் விளங்கினர். பொதுநன்மை பேணும் பெண்களைப் பொதுசெய் பெண்டிர் என்று அகநானூறு போற்றுகிறது.

15) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) பிற்காலங்களில் பெருமுது பெண்டிர், ஆண் தலைமைக்கு உட்பட வேண்டியிருந்தது.

ⅱ) ஔவையார் போன்ற பெரும் புலமைத் திறத்தார் பீடும் பெருமையும் பெற்றிருந்தனர்.

ⅲ) பாணர்களோடும் பாடினிகளோடும் பிற கலைஞரோடும் கூடித் தொல்குடிப் பெருமைகளைப் தமிழில் ஔவையார் விதந்தோதினார்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: பிற்காலங்களில் இப்பெருமுது பெண்டிர், ஆண் தலைமைக்கு உட்பட வேண்டியிருந்தது. இந்நிலையிலும் மனையுறை மகளிராகப் புலியை முறத்தால் விரட்டியவராகவும், கணவனையும் தந்தையையும் செருக்களத்தில் பறிகொடுத்தபிறகும் அஞ்சாது போருக்குப் புதல்வரை அனுப்பியவராகவும் முதுகுடி மகளிர் அறியப்பட்டனர். இச்சூழலிலும் ஔவையார் போன்ற பெரும் புலமைத் திறத்தார் பீடும் பெருமையும் பெற்றிருந்தனர். பாணர்களோடும் பாடினிகளோடும் பிற கலைஞரோடும் கூடித் தொல்குடிப் பெருமைகளைப் தமிழில் ஔவையார் விதந்தோதினார்.

16) பரிசில் வாழ்வை விடவும், தன்மானம் பெரிது என்று அதியனிடம் ஒளவை முழங்குவது குறித்து கூறும் நூல்?

a) சிறு பாணாற்றுப்படை

b) பெரும்பாணாற்றுப்படை

c) நற்றிணை

d) புறநாநூறு

விளக்கம்: ‘அவனை அவர் பாடியது’ என்ற புலமை மரபுக்கேற்பக் கடையெழு வள்ளல்களுள் ஒருவனான அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாணர் குடியின் பெருமிதத்துடன் ஔவையார் எதிர்கொண்டார். பரிசில் வாழ்வை விடவும், தன்மானம் பெரிது என்று அதியனிடம் ஒளவை முழங்குவதைப் புறநானூறு காட்டுகிறது (புறம்: 206).

17) “பரிசில் அளிப்பதைக் காலம் தாழ்த்துவதால் புலவர்கள் இறந்துவிடார் என்றும் அறிவும் புகழும் உடையோர் எங்கு சென்றாலும் உரிய பெருமையுடன் வாழமுடியும்” இக்கூற்று யாருடையது?

a) பொன்முடியார்

b) வெள்ளி வீதியார்

c) நச்செள்ளையார்

d) ஔவையார்

விளக்கம்: பரிசில் அளிப்பதைக் காலம் தாழ்த்துவதால் புலவர்கள் இறந்துவிடார் என்றும் அறிவும் புகழும் உடையோர் எங்கு சென்றாலும் உரிய பெருமையுடன் வாழமுடியும் என்றும் ஔவை பாடுகிறார். புலவரை வேந்தர் அவமதிக்கும்போது தணிந்துபோகாமல் அறத்துணிவுடன் பொங்குகிறார்.

18) ‘எத்திசை செலினும் அத்திசை சோறே’ என்பது யார் கூற்று?

a) பொன்முடியார்

b) வெள்ளி வீதியார்

c) நச்செள்ளையார்

d) ஔவையார்

விளக்கம்: ஔவை தனிமனித நலன்களுக்காகப் பாடவில்லை; பாணர் சமூக நன்மைக்காகவே பாடுகிறார்; ‘எத்திசை செலினும் அத்திசை சோறே’ என்கிறார். இத்தகைய அறச்சீற்றம் தொல்குடிப் பெண்ணின் இயல்பாகும்.

19) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) மக்கட்பேறு என்பது, இன்றியமையாத ஒரு கடமையாகவும் பண்பாடாகவும் பார்க்கப்பட்டது.

ⅱ) எந்த இனக்குழுவில் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உருவாகிறார்களோ, அந்த இனக்குழுவே வலிமையும் சிறப்பும் உடையது என்ற கருத்து தொல்குடி விழுமியமாய் இருந்தது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: மக்கட் பேற்றைக் கொண்டாடல்: தொல்குடிச் சமூகம் மானுட உழைப்பைப் போற்றிய சமூகமாகும். நவீன வேளாண்முறைகளும் இயந்திரங்களும் இல்லாத காலத்தில் மனிதர்களே அனைத்துழைப்புக்கும் பொறுப்பேற்றனர். கூட்டுழைப்பின் மூலமே ஒரு சமூகம் தன்னை உருவாக்கிக்கொள்ளவேண்டிய நிலை அன்றிருந்தது. இந்நிலையில் மக்கட்பேறு என்பது, இன்றியமையாத ஒரு கடமையாகவும் பண்பாடாகவும் பார்க்கப்பட்டது. எந்த இனக்குழுவில் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உருவாகிறார்களோ, அந்த இனக்குழுவே வலிமையும் சிறப்பும் உடையது என்ற கருத்து தொல்குடி விழுமியமாய் இருந்தது.

20) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) மக்கட்பேற்றை வழங்குபவள் தாய் என்பதால், அதிக மக்களைப் பெறுபவள் இனக்குழு வாழ்வில் தலைமைக்குரியவளாகக் கருதப்பட்டாள்.

ⅱ) தந்தையைக் கொண்டே ஒரு குடி தோன்றி வளர்கிறது என்பதால் தந்தைக்குக் கட்டுப்பட்டவர்களாக அக்குடியின் அனைத்து உறுப்பினர்களும் அடங்கி வாழ்ந்தனர்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: மக்கட்பேற்றை வழங்குபவள் தாய் என்பதால், அதிக மக்களைப் பெறுபவள் இனக்குழு வாழ்வில் தலைமைக்குரியவளாகக் கருதப்பட்டாள். தாயைக் கொண்டே ஒரு குடி தோன்றி வளர்கிறது என்பதால் தாய்க்குக் கட்டுப்பட்டவர்களாக அக்குடியின் அனைத்து உறுப்பினர்களும் அடங்கி வாழ்ந்தனர். இது தொல்குடிப் பண்பாட்டின் மாற்ற முடியாத வழக்கமாக இருந்தது.

21) கூற்று: வேட்டை, உணவுச்சேகரிப்பு, உணவு உற்பத்தி போன்றவற்றைப் பேசும் இடங்களில் எல்லாம் பெண் சிறப்பிக்கப்படுகிறாள்.

காரணம்: மக்கட்பேற்றைக் கொண்டாடுதல் என்பது, அதற்குக் காரணமான பெண்ணையும் சேர்த்துக் கொண்டாடுவதேயாகும்.

(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விளக்கம்: மக்கட்பேற்றைக் கொண்டாடுதல் என்பது, அதற்குக் காரணமான பெண்ணையும் சேர்த்துக் கொண்டாடுவதேயாகும். எனவேதான் வேட்டை, உணவுச்சேகரிப்பு, உணவு உற்பத்தி போன்றவற்றைப் பேசும் இடங்களில் எல்லாம் பெண் சிறப்பிக்கப்படுகிறாள்.

22) பின்வருவனவற்றுள் குடும்பத்தைக் காத்தல் குறித்து பேசும் திணை எது?

a) குறிஞ்சி

b) மருதம்

c) நெய்தல்

d) முல்லை

விளக்கம்: குறிஞ்சித்திணை பேசும் தினைப்புனம் காத்தல், முல்லைத் திணை பேசும் குடும்பத்தைக் காத்தல் போன்றவையும் தாய்வழிச் சமூகத்தின் செயல்பாடுகளேயாகும். இவற்றைப் பெண்களே செய்தனர்.

23) “ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக், களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” என்று பாடியவர் யார்?

a) பொன்முடியார்

b) வெள்ளி வீதியார்

c) நச்செள்ளையார்

d) ஔவையார்

விளக்கம்: தாய்வழி நிற்றல் என்பதே தொல்குடிச் சமூக அமைப்பின் நியதியாக இருந்ததைப் புறநானூறு குறிப்பிடுகிறது. இதனை, “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே, . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக், களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” (புறம்-312) என்ற பொன்முடியாரின் பாடல்வழி அறிகிறோம்.

வீரநிலைக்காலச் சமூகத்தில் பெண்ணுக்கான கடமையையும், தாய் சொற்படி வழிநடத்தப்படும் குழந்தைகளுக்கான கடமையையும் இப்பாடல் கூறுகிறது.

24) வீரம் என்பது யார் வழியாக பிள்ளைகளுக்கு வந்ததாகக் கருதப்பட்டது?

a) தந்தை

b) மரபு

c) உறவினர்

d) தாய்

விளக்கம்: பெண்ணே போருக்குத் தலைமை ஏற்றாள்; வீரம் என்பதும் அவள் வழியாகவே பிள்ளைகளுக்கு வந்ததாகக் கருதப்பட்டது. ஒரு போர்வீரனைப் போற்றும்போதுகூடத் தாயின் வீரத்தைச் சுட்டிக்காட்டியே அவன் கொண்டாடப்பட்டான்.

25) “செம்முது பெண்டின் காதலஞ்சிறாஅன்” என்று கூறும் நூல்?

a) குறிஞ்சிப்பாட்டு

b) முல்லைப்பாட்டு

c) நற்றிணை

d) புறநாநூறு

விளக்கம்: “நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச் சிறுவர் தாயே பேரிற் பெண்டே”(புறம்-270) செம்முது பெண்டின் காதலஞ்சிறாஅன்” (புறம்.276) எனப் பெண் தலைமையேற்ற தாய்வழிச் சமூகத்தின் சிறப்புப் பாடப்பட்டுள்ளது.

26) கூற்று: இயற்கையை வழிபடுவது என்பது தொல்குடி வாழ்வில் முக்கியமான ஒரு செயல்பாடாகும்

காரணம்: இயற்கையின் பேராற்றலைக் கண்ட மனிதன், அதை வணங்கத் தொடங்கினான்.

(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விளக்கம்: இயற்கையை வழிபடல்: இயற்கையை வழிபடுவது என்பது தொல்குடி வாழ்வில் முக்கியமான ஒரு செயல்பாடாகும். இயற்கையின் பேராற்றலைக் கண்ட மனிதன், அதை வணங்கத் தொடங்கினான். இடியும் மழையும் மின்னலும் அவனுக்கு அச்சமூட்டின. சூரியன் உதிப்பதும் மறைவதும்கூடப் பெரும் வியப்பைத் தந்தன. வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ, நில நடுக்கம் போன்றவற்றால் தம்மோடு இருப்பவர்கள் இல்லாமல் போவதைக் கண்டு தொல்குடியினர் மருண்டனர். விலங்குகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும், இயற்கையைப் புரிந்துகொள்ளவும் அவர்கள் போராடினர்.

27) இயற்கையின் மீதான அச்சமே வழிபாடானது என்பதை யாருடைய பாடல்வழி அறியலாம்?

a) பொன்முடியார்

b) பரணர்

c) கபிலர்

d) ஔவையார்

விளக்கம்: அன்றாட வாழ்வின் செயல்பாடுகளில் அவ்வப்போது குறுக்கிட்டுப் பதறவைத்த இயற்கை குறித்த பேரச்சம், தொல்குடிகளை உலுக்கியெழுப்பி இயற்கையை வழிபடச் செய்தது. இருட்டை விரட்டும் சூரிய சந்திரச் சுடர்களும் அச்சமூட்டும் விலங்குகளும் பற்றியெரியும் நெருப்பும் பேரலைகளை எழுப்பிய கடலும் உணவு உறையுளுக்கு அடிப்படையாகும். நிலமும் வானைத் தொட்டுவிடும் அளவு உயர்ந்தோங்கிய மலைகளும் தொல்குடி மக்களின் வழிபடு பொருள்களாகின. இயற்கையின் மீதான அச்சமே வழிபாடானது என்பதைப் பரணரின் பாடல்வழி அறியலாம். (நற்றிணை:201).

28) சங்க இலக்கியம் இயற்கையை பின்வரும் எவற்றுடன் தொடர்புபடுத்துகின்றது?

ⅰ) அணங்கு

ⅱ) சுணங்கு

ⅲ) சூர்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: அணங்குடை நெடுவரை (அகம்: 22) சூர்ச்சுனை (அகம்:91) அறுகுடை முந்நீர் (அகம்:220) பெருந்துறைப் பரப்பின் அமர்ந்து உறை சுணங்கோ (நற்:155) எனச் சங்க இலக்கியம் இயற்கையைச் சூர் உடனும், அணங்குடனும், சுணங்குடனும் தொடர்புபடுத்துகின்றது. இயற்கை வழிபாடு என்பது, அக்காலத் தொல்குடி வாழ்வின் அடிப்படையான நம்பிக்கையாகும். இயற்கையில் கிடைத்த எல்லாவற்றையும் நன்றியுணர்வுடன் அவர்கள் இயற்கைக்குப் படையலிட்டுள்ளதையும் பார்க்க முடிகின்றது. எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அதை அதற்கும் கொடுத்து நன்றியுணர்வோடு பார்க்கும் இச்செயல், தொல்குடியின் மிகச்சிறந்த விழுமியமாகக் கூறத்தக்கதாகும்.

29) “தேன் சுவையுடைய கனிகள், மாங்கனி, பலாவின் சுளைகள், கள் போன்றவற்றைக் கொண்டு வான்கோட்டுக் கடவுளைத் தொல்குடிகள் வணங்கினர்” என்று கூறும் நூல்?

a) அகநாநூறு

b) முல்லைப்பாட்டு

c) நற்றிணை

d) புறநாநூறு

விளக்கம்: தேன் சுவையுடைய கனிகள், மாங்கனி, பலாவின் சுளைகள், கள் போன்றவற்றைக் கொண்டு வான்கோட்டுக் கடவுளைத் தொல்குடிகள் வணங்கினர். (அகம் : 348) திணை நிலங்களுடன் இணைந்து வாழ்ந்தோரின் இந்த இயற்கை வழிபாடே, பின்னாளில் சமய வளர்ச்சிக்குக் காரணமாயிற்று. ஐம்பூதத்தால் உருவாக்கப்பட்டது இவ்வுலகம் என்கிற பகுத்தறிவுக் கருத்தும் தொல்குடிமக்களின் இயற்கை வழிபாட்டின் விளைச்சலேயாகும்.

30) தொல்குடிகள் குறித்த பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) வீரத்தாலும் வெற்றியாலும் பொருளும் புகழும் ஈட்டப்பட்டன.

ⅱ) வேட்டையாடியும் வேளாண்மை செய்தும் வாழ்ந்த தொல்குடி மக்களிடம் வீரம் என்பது தம் இனத்தைக் காப்பது, தம் பொருள்களைக் காப்பது என்ற இயல்புணர்வாகவே இருந்தது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: வீரத்தையும் வெற்றியையும் விரும்புதல்: ஒருவனை ஒருவன் வெல்வதும், ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது இல்லை. அது இந்த உலகத்தின் இயற்கையாகும். தொல்குடிச் சமூகத்தில் வீரன் மதிக்கப்பட்டான்; வெற்றியை வீரமே உருவாக்கியது; வெற்றி அல்லது வீரமரணம் போற்றப்பட்டது; வீரத்தாலும் வெற்றியாலும் பொருளும் புகழும் ஈட்டப்பட்டன. வேட்டையாடியும் வேளாண்மை செய்தும் வாழ்ந்த தொல்குடி மக்களிடம் வீரம் என்பது தம் இனத்தைக் காப்பது, தம் பொருள்களைக் காப்பது என்ற இயல்புணர்வாகவே இருந்தது.

31) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) சங்க இலக்கியத்தில் காட்டப்படும் போர்கள் இனக்குழுச் சமூகங்களின் உரிமைப்போர்கள் ஆகும்.

ⅱ) முந்தைய தொல்குடி மக்களின் போர்களுள், மாடுகளைக் கவர்ந்து செல்வதும் அவற்றை மீட்பதும் நிலங்களைக் கைப்பற்ற முனைவதுமான உரிமைப்போர்களும் இருந்தன.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: தொல்குடி வாழ்வியலின் பண்புகளை வெளிப்படுத்தும் சங்க இலக்கியத்தில் காட்டப்படும் போர்கள், நாட்டைக் காக்கவும் தம் உடைமைகளைக் காக்கவும் தம்மை அண்டி வாழும் மக்களைக் காக்கவும் செய்யப்பட்ட இனக்குழுச் சமூகங்களின் உரிமைப்போர்கள் ஆகும். இதற்கும் முந்தைய தொல்குடி மக்களின் போர்களுள், மாடுகளைக் கவர்ந்து செல்வதும் அவற்றை மீட்பதும் நிலங்களைக் கைப்பற்ற முனைவதுமான உரிமைப்போர்களும் இருந்தன.

32) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) கொடை, பாணர் கடன் ஆகிய சொற்கள் பரிசு என்ற பொருளில் ஆளப்பெற்றது.

ⅱ) பண்டைய நாளைய தொல்குடி வாழ்க்கையிலும், வேளிர் வாழ்க்கையிலும் வேந்தர் வாழ்க்கையிலும் பரிசு இரண்டறக் கலந்து நின்றது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: கொடையும் அரசியலும்: சங்ககால வேளிரும் வேந்தரும் கொடை அளிப்பதில் முனைந்து நின்றனர். கொடை, பாணர் கடன் ஆகிய சொற்கள் பரிசு என்ற பொருளில் ஆளப்பெற்றது. பண்டைய நாளைய தொல்குடி வாழ்க்கையிலும், வேளிர் வாழ்க்கையிலும் வேந்தர் வாழ்க்கையிலும் பரிசு இரண்டறக் கலந்து நின்றது. பரிசு, அதனை அளிப்பவனின் செல்வச் செழிப்பை எடுத்துக்காட்டுகின்றது. பரிசைப் பெறுபவனிடம் பரிசு அளிப்பவன் கைம்மாறு எதையும் எதிர்பார்க்கவில்லையானாலும் பரிசு பெற்றவன் கொடையாளிக்கு கைம்மாறு அளிக்கும் நிலைக்குத் தள்ளப் பெறுகின்றான்.

33) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) கிழார், வேளிர், வேந்தர் ஆகியோர் வணிக வளத்தினாலும், பிற வழிகளினாலும் கிடைத்த செல்வத்தை சேமித்து வைப்பதை குறிக்கோளாக கொண்டிருந்தனர்.

ⅱ) கிழார், வேளிர், வேந்தர் ஆகியோர் பாணர்களுக்கும், புலவர்களுக்கும் மட்டுமின்றிச் சமயத்தலைவர்களுக்கும் கொடையளித்தனர்.

ⅲ) தொல்குடிச் சமூகத்தில் மாடுகளே செல்வமாகக் கருதப்பட்டதால், இந்த மாடுபிடிப் போர்கள், முனைப்பான இருப்பிற்கான போர்களாகவே இருந்தன.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: கிழார், வேளிர், வேந்தர் ஆகியோர் வணிக வளத்தினாலும். பிற வழிகளினாலும் கிடைத்த செல்வத்தைப் பாணர்களுக்கும், புலவர்களுக்கும், குடியிலுள்ளோர்க்கும் அளித்து, அதனால் புகழ் ஈட்டினர். அப்புகழ் அவர்களை சமூகத்தில் உயர்ந்தவர்களாகச் செய்தது. கிழார், வேளிர், வேந்தர் ஆகியோர் பாணர்களுக்கும், புலவர்களுக்கும் மட்டுமின்றிச் சமயத்தலைவர்களுக்கும் கொடையளித்தனர். தம்மோடு பகையுடைய இனக்குழுவின் ஆநிரையைக் கவர்வது வெட்சி எனவும், தம்மிடமிருந்து பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரையை மீட்டுவருவது கரந்தை எனவும் அறியப்படுகிறது. தொல்குடிச் சமூகத்தில் மாடுகளே செல்வமாகக் கருதப்பட்டதால், இந்த மாடுபிடிப் போர்கள், முனைப்பான இருப்பிற்கான போர்களாகவே இருந்தன. இத்தகைய போர்களில் துணிவுடையவர்களே வெற்றிபெற்றனர்.

34) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) பெரும்பாலும் போரில் ஈடுபட்ட வீரர்கள் வில்லுடனோ வேலுடனோ அல்லது வாளுடனோ இருந்தமையைச் பழமொழி பாடல்கள் சுட்டுகின்றன.

ⅱ) தம்மையும், தம்மண்ணையும் காக்கப் போரிட்ட வீரர்களைத் தொல்குடிச் சமூகத்தினர் கொண்டாடினர்.

ⅲ) தம்மினத்திற்காக உயிர்விடுதல் என்பது அங்குப் பெருமைக்குரியதாகக் கருதப்பட்டது

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: பெரும்பாலும் போரில் ஈடுபட்ட வீரர்கள் வில்லுடனோ வேலுடனோ அல்லது வாளுடனோ இருந்தமையைச் சங்கப்பாடல்கள் சுட்டுகின்றன. வல்வில் மறவர்’, ‘நெடுவேல் காளை’ போன்ற தொடர்களால் அதை அறிகிறோம். இத்தகைய போர்கள் கூட்டாக நிகழ்த்தப்பட்டன; போரில் வீரம் காட்டியவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். இவ்வாறு தம்மையும், தம்மண்ணையும் காக்கப் போரிட்ட வீரர்களைத் தொல்குடிச் சமூகத்தினர் கொண்டாடினர். அவர்களுக்கு நல்ல உணவையும் கள்ளையும் கொடுத்துக் களைப்பைப் போக்கினர். தொல்குடிச் சமூகத்தால் கொண்டாடப்பட்ட வீரர்கள், தம் கூட்டத்திற்காகத் தம் உயிரையும் கொடுக்கும் விருப்பத்துடன் செயல்பட்டனர். தம்மினத்திற்காக உயிர்விடுதல் என்பது அங்குப் பெருமைக்குரியதாகக் கருதப்பட்டது (புறம்: 68).

35) பலர்க்கு நிழலாகி உலகம் மீக்கூறி என்று கூறும் நூல் எது?

a) புறநாநூறு

b) அகநானூறு

c) நற்றிணை

d) பொருநராற்றுப்படை

விளக்கம்: வீரன் மக்களின் நம்பிக்கைக்குரியவனாகப் பார்க்கப்பட்டான், அவனின் வீரம் சிறப்பிக்கப்பட்டது. அவன் பலர்க்கும் நிழலாயிருந்தான்; அவன் நிழலில் தங்கியிருப்பவர்களாக மக்கள் விளங்கினர்; என்றும் இந்த உலகத்தில் நின்று நிலைப்பவனாக அவன் விளங்கினான். [பலர்க்கு நிழலாகி உலகம் மீக்கூறி (புறம்: 223)]

36) நடுகல் எடுக்கும் முறைகளைப் பற்றியும் நடுகல் வழிபாடு பற்றியும் கூறும் நூல்கள் எவை?

ⅰ) தொல்காப்பியம்

ⅱ) சிலப்பதிகாரம்

ⅲ) புறப்பொருள் வெண்பாமாலை

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: நடுகல் வழிபாடு: நடுகல் வழிபாட்டில் இரண்டு நிலைகளை இலக்கியங்கள் கூறுகின்றன. 1. நடுகல் எடுத்தல் 2. நடுகல் வழிபாடு. இவை நடுகல் எடுக்கும் முறைகளைப் பற்றியும் நடுகல் வழிபாடு பற்றியும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியன பேசுகின்றன.

37) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) தொல்காப்பியம் கல் எடுக்கும் நிகழ்வை ஏழு வகையாக வகைப்படுத்தி உள்ளது.

ⅱ) காட்சி என்பது கணியன் அல்லது சோதிடனைக் கொண்டு கல்லை அறிந்து எடுத்து வருவதைக் குறிக்கின்றது.

ⅲ) நீரினால் பொருள்களைப் புனிதமடையச் செய்யலாம் என்று பண்டைய மக்கள் நம்பினர்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: தொல்காப்பியம் கல் எடுக்கும் நிகழ்வை ஆறு வகையாக வகைப்படுத்தி உள்ளது. அவை, 1. காட்சி 2. கால்கோள் 3. நீர்ப்படை 4. நடுகல் 5. பெரும்படை 6. வாழ்த்து என்பவையாகும். காட்சி என்பது கணியன் அல்லது சோதிடனைக் கொண்டு கல்லை அறிந்து எடுத்து வருவதைக் குறிக்கின்றது. குறிப்பிட்ட தன்மையை உடைய கல்லைக் கொண்டு வரவேண்டும் என்ற தீர்மானித்துக்கொண்டு வருவது முதல் இரண்டு நிகழ்வுகள். இரண்டாவது நிலையான நீர்ப்படை என்பது நீராட்டுதல் ஆகும். நீரினால் பொருள்களைப் புனிதமடையச் செய்யலாம் என்று பண்டைய மக்கள் நம்பினர். இதற்குப் பல சக்திகள் உண்டு என்றும் நம்பினர்.

38) “இயற்கையாக நிகழும் மரணத்தைவிடப் பகைவர்களுடன் போர்புரிந்து இறப்பவர் மேலானவராகக் கருதப்பட்டனர்” என்று கூறும் நூல் எது?

a) புறநாநூறு

b) அகநானூறு

c) நற்றிணை

d) பொருநராற்றுப்படை

விளக்கம்: இயற்கையாக நிகழும் மரணத்தைவிடப் பகைவர்களுடன் போர்புரிந்து இறப்பவர் மேலானவராகக் கருதப்பட்டனர் (அகம்:61). இவ்வாறு தம்மினத்திற்காக உயிர்விட்ட வீரன், மக்களால் வணங்கப்பட்டான். இறந்த வீரனைப் புதைத்து அவ்விடத்தில் கற்களை நட்டுவைத்தனர். இந்நடுகற்கள் வழிபடப்பட்டன. இத்தகைய வீரனை வழிபட்டால், வருங்காலப் போர்களில் மாபெரும் வெற்றிகளை அவன் அருள்வான் எனத் தொல்குடி மக்கள் நம்பினர். எனவே வீரர்களைப் புதைத்த இடங்களின்மீது நட்டு வைக்கப்பட்ட நடுகற்களுக்குப் பலிகொடுத்தனர்.

39) “கல்லே பரவின் அல்லது நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” என்று கூறும் நூல் எது?

a) புறநாநூறு

b) அகநானூறு

c) நற்றிணை

d) பொருநராற்றுப்படை

விளக்கம்: நடுகற்களை நீரால் கழுவி, நெய்விளக்கு ஏற்றிப் பூவும் புகையும் இட்டு வழிபட்டனர். மக்கள் நடுகற்களைத் தெய்வங்களாகக் கருதி வணங்கினர். போரில் வீரமரணம் அடைந்த வீரனையன்றி வணங்கத்தக்க வேறு தெய்வம் இல்லையென்றும் கருதினர். “கல்லே பரவின் அல்லது நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” (புறம்:335) எ9ன்கிறார் மாங்குடிகிழார்

40) உருவ வழிபாடு தோன்ற வாயிலாக இருந்தது எது?

a) நடுகல்

b) சிற்பங்கள்

c) ஓவியம்

d) அச்சம்

விளக்கம்: இத்தகைய நடுகற்களை வணங்கும் வழக்கம் தம்மில் தலைமையுடையோரை வணங்குவதாக மாறிப் பின் அது கடவுள் வணக்கமாகவும் வளர்ந்தது. எனவே, உருவ வழிபாடு தோன்ற இந்த நடுகல் வழிபாடே வாயிலாயிற்று எனலாம். பெரியபடையும் வீரர்களின் துணிவும் வெற்றியை ஈட்டித்தரும் இருபெரும் ஆற்றல்களாகக் கருதப்பட்டன.

41) ‘அடங்காத் தானை’, ‘விறல்கெழு தானை’ போன்ற தொடர்கள் இடம்பெற்ற நூல்?

a) புறநாநூறு

b) அகநானூறு

c) நற்றிணை

d) பொருநராற்றுப்படை

விளக்கம்: பெரிய படையைக் கொண்டவர்கள், தம் படைபற்றிக் கொண்டிருந்த பெருமிதத்தை அடங்காத் தானை (புறம்:71) விறல்கெழு தானை (புறம்:122) போன்ற தொடர்களால் அறிகிறோம். போர் என்பது கூட்டாக செய்யப்படுவது என்பதால், போரின் மூலம் வந்த பொருள்களை அனைவரோடும் பகிர்ந்துகொள்வது என்பதும் தொல்குடி மக்களின் ஒரு வாழ்வியல் விழுமியமாக இருந்தது. இது ‘பாதீடு’ எனப்பட்டது. போருக்குச் சென்றோருக்குப் போரில் கிடைத்த பொருள்கள் அனைத்தும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

42) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) தமக்கென எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளாமல், தேவையுள்ளோர் எவரோடும் தமக்குக் கிடைத்ததைப் பங்கிட்டுப் பொதுவில் வைக்கும் வாழ்வறமே கொடை எனலாம்.

ⅱ) விருந்தோம்பல் பண்பாடு, தம்மிடமுள்ளதை அனைவரும் பகிர்ந்துண்டு மகிழ்ந்து வாழும் கூட்டுச்சமூக வாழ்வைக் காட்டுகிறது.

ⅲ) தம்மைத்தேடி வந்தவரை உணவிட்டுப் பேணி மகிழ்வித்தல் என்பது, ஒரு தலையாய கடமையாக இருந்தது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: விருந்தோம்பல்: தமக்கென எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளாமல், தேவையுள்ளோர் எவரோடும் தமக்குக் கிடைத்ததைப் பங்கிட்டுப் பொதுவில் வைக்கும் வாழ்வறமே விருந்தோம்பல் எனலாம். விருந்தோம்பல் பண்பாடு, தம்மிடமுள்ளதை அனைவரும் பகிர்ந்துண்டு மகிழ்ந்து வாழும் கூட்டுச்சமூக வாழ்வைக் காட்டுகிறது. தொல்குடி மக்களிடையே விருந்தோம்பல் என்பது, மிகப்பெரியதொரு விழுமியமாகக் கருதப்பட்டது. தம்மைத்தேடி வந்தவரை உணவிட்டுப் பேணி மகிழ்வித்தல் என்பது, ஒரு தலையாய கடமையாக இருந்தது.

43) கூற்று: தொல்குடி மக்கள் நீண்ட நெடியவழியில் பயணித்துக் களைத்து வருபவர்க்கு உணவிட்டுக் களைப்பைப் போக்கினர்.

காரணம்: வேட்டையாடியும் வேளாண்மை செய்தும் வாழ்ந்த தொல்குடி மக்கள் பசியின் கொடுமையை உணர்ந்திருந்தனர்.

(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விளக்கம்: விருந்து என்பது, தம்மோடு உறவுடையவரைப் பேணல் என்பதோடு முடிவதில்லை; அறிமுகம் இல்லாத புதியவர் என்றாலும் விருந்தோம்புதல் ஒரு பண்பாட்டுச் செயல்பாடாகத் தொல்குடிகளிடம் இடம்பெற்றிருந்தது. உயிர்களை நேசித்தல், சுற்றியுள்ளோரைப் பாதுகாத்தல் என்பன அரிய விழுமியங்கள். வேட்டையாடியும் வேளாண்மை செய்தும் வாழ்ந்த தொல்குடி மக்கள் பசியின் கொடுமையை உணர்ந்திருந்தனர். அதனாலேயே, நீண்ட நெடியவழியில் பயணித்துக் களைத்து வருபவர்க்கு உணவிட்டுக் களைப்பைப் போக்கினர்.

44) மூங்கில் குழாய்களில் கொண்டுசென்ற உணவினைத் தம் வழியில் எதிர்ப்பட்டவர்களின் பசி நீங்கப் பகிர்ந்துண்ட செய்தியை காட்டும் நூல் எது?

a) புறநாநூறு

b) அகநானூறு

c) நற்றிணை

d) பொருநராற்றுப்படை

விளக்கம்: முல்லைத்திணை மக்கள், மூங்கில் குழாய்களில் கொண்டுசென்ற உணவினைத் தம் வழியில் எதிர்ப்பட்டவர்களின் பசி நீங்கப் பகிர்ந்துண்ட செய்தியை அகநானூற்றுப் பாடல் காட்டுகிறது (அகம் :311).

45) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) விருந்தினரின் பசியைப் போக்கத் தன் வாழ்நலனுக்காகப் பயிரிட வைத்திருந்த விதைத்தினையை உரலில் இட்டுக் குத்திப் பசி போக்கிய செய்தியை அகநானூறு தெரிவிக்கிறது.

ⅱ) விருந்தினரைப் போற்றுவதைத் தொல்குடி மக்கள் தம் கடமையாகக் கொண்டிருந்தனர்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: விருந்தினரின் பசியைப் போக்கத் தன் வாழ்நலனுக்காகப் பயிரிட வைத்திருந்த விதைத்தினையை உரலில் இட்டுக் குத்திப் பசி போக்கிய செய்தியைப் புறநானூறு (புறம்: 316) தெரிவிக்கிறது. இவ்வாறு விருந்தினரைப் போற்றுவதைத் தொல்குடி மக்கள் தம் கடமையாகக் கொண்டிருந்தனர். வறுமையிலும் விருந்தோம்பல் நடைபெற்றுள்ளது.

46) எங்கிருந்தோ வரும் விருந்தினருக்கு அவர் மனங்கோணாமல் எவ்வாறு விருந்தளிக்க வேண்டும் என்பதை விளக்கும் நூல் எது?

a) புறநாநூறு

b) அகநானூறு

c) நற்றிணை

d) பொருநராற்றுப்படை

விளக்கம்: வறுமையுற்ற ஒருவன் முதல்நாள் தன்னிடம் வந்த விருந்தினரின் பசியைப் போக்கத் தன் வீரத்தின் அடையாளமான வாளையே விற்றுப் பசி போக்கிய நிகழ்வைப் புறநானூறு (புறம்:316) குறிப்பிடுகிறது. எங்கிருந்தோ வரும் விருந்தினருக்கு அவர் மனங்கோணாமல் எவ்வாறு விருந்தளிக்க வேண்டும் என்பதைப் பொருநராற்றுப்படை விளக்குகிறது.

47) விருந்தினரை கன்றிடம் பசு அன்பு காட்டுவதைப்போல, எலும்பே குளிரும்படி அன்பால் நெகிழச் செய்யவேண்டும் என்று கூறும் நூல் எது?

a) மலைபடுகடாம்

b) அகநானூறு

c) நற்றிணை

d) பொருநராற்றுப்படை

விளக்கம்: நண்பனைப்போல விருந்தினரிடம் உறவு பாராட்டவேண்டும்; இனிய சொற்களைப் பேசவேண்டும்; கண்ணில் காணும்படி தனக்கு நெருக்கமாக கன்றிடம் பசு அன்பு காட்டுவதைப்போல, எலும்பே குளிரும்படி அன்பால் நெகிழச் செய்யவேண்டும் என்கிறது (பொருநராற்றுப்படை: 74-78).

48) தமிழ் இலக்கியங்களில் வியந்து பேசப்பட்ட கொடை என்னும் செயல்பாடு எதன் நீட்சியேயாகும்?

a) அன்பு

b) விருந்தோம்பல்

c) வீரம்

d) இரக்கம்

விளக்கம்: தொல்குடிச் சமூக அமைப்பில் எத்தகைய உணவாயினும் அதனைப் பிறருடன் பகிர்ந்துண்ணும் உயரிய பண்பையே காணமுடிகிறது. இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே (182) எனப் புறநானூறு பேசும் வாழ்வும் தொல்குடி மக்களின் வாழ்வும் வேறுவேறல்ல எனலாம். பின்னாளில் தமிழ் இலக்கியங்களில் வியந்து பேசப்பட்ட கொடை என்னும் ஒரு செயல்பாடு, இந்த விருந்தோம்பலின் ஒரு நீட்சியேயாகும்.

49) புல்லால் வேயப்பட்ட குடிசைகளில் வாழ்ந்த எளிய மக்களின் விருந்தோம்பலை கூறும் நூல் எது?

a) மலைபடுகடாம்

b) அகநானூறு

c) நற்றிணை

d) பொருநராற்றுப்படை

விளக்கம்: கொடையில், கொடுத்தவன் பெயரை வியந்து போற்றுவது உண்டு. விருந்தோம்பலில் இவ்வழக்கம் சிறிதுமில்லை. பசி போக்குதல் என்னும் எளிய விழுமியமாகவே விருந்தோம்பல் இருந்துள்ளது. எனவேதான், பெருஞ்செல்வர்களாய் இல்லாத எளிய மக்களும் தம்மைத் தேடி வந்தவருக்கு உணவளித்துத் தம்மிடமுள்ளதைக் கொடுத்துப் பகிர்ந்துண்டும் மகிழ்ந்தும் வாழ்ந்துள்ளனர். புல்லால் வேயப்பட்ட குடிசைகளில் வாழ்ந்த எளிய மக்களின் விருந்தோம்பலை மலைபடுகடாம் (434–443) வியந்துபேசுகிறது.

50) பின்வருவனவற்றுள் விருந்தோம்பல் என்பதின் அடிப்படையாக உள்ளது எது?

a) அன்பு

b) பசி போக்கல்

c) வீரம்

d) இரக்கம்

விளக்கம்: விருந்தோம்பல் என்பதின் அடிப்படையே பசி போக்கல் என்பதாகத்தான் உள்ளது. அனைத்தையும் அனைவருக்குமானதாகப் பகிர்ந்தளிக்கும் பொதுப்பண்பையே விருந்தோம்பலாகச் சங்கப்பாடல்கள் சிறப்பிக்கின்றன. இது தொல்குடிப் பண்பாட்டில் விளைந்த அரியதொரு விழுமியமாகும்.

51) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) தொல்குடிச் சமூகத்தில் வீரர், செல்வமாகக் கருதப்பட்டனர்.

ⅱ) அரசரின் வாய்ச்சொற்களைக் கேட்டுக் கேட்டுத் தமக்குள் சில நியதிகளை அவர்கள் உருவாக்கிக்கொண்டனர்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: 6. மூத்தோரை மதித்தல்: தொல்குடிச் சமூகத்தில் மூத்தோர், செல்வமாகக் கருதப்பட்டனர்; அவர்களின் அறிவும் அனுபவமும் அச்சமூகத்திற்குப் பயன்பட்டன. மூத்தோரின் வாய்ச்சொற்களைக் கேட்டுக் கேட்டுத் தமக்குள் சில நியதிகளை அவர்கள் உருவாக்கிக்கொண்டனர். தம் பிறப்புக்கும் வளர்ப்புக்கும் காரணமான பெற்றோரைப் போற்றல், சமூகத்தில் தாம் முன்னிலைக்கு வர உதவியவர்களை மதித்தல் என்பதாகப் பழஞ்சமூகங்களில் மூத்தோரை மதிக்கும் பண்பாடு உருக்கொண்டது.

52) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) மூத்தோரை மதிக்கும் தொல்குடிப் பண்பாடு என்பது, அவர்களின் அனுபவ வளங்களைத் தமதாக்கிக் கொள்வதாகும்.

ⅱ) தொல்குடிச் சமூகத்தில் மூத்தோருக்கெனத் தனித்ததொரு இடமிருந்தது.

ⅲ) நற்செயல்களை முன்னிருந்து நடத்துகிறவர்களாகவும் நீதி வழங்குபவர்களாகவும் அனுபவ ஆசான்களாகவும் பூசல்களைத் தவிர்ப்போராகவும் இளையோர் விளங்கினர்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மூத்தோரை மதிக்கும் தொல்குடிப் பண்பாடு என்பது, அவர்களின் அனுபவ வளங்களைத் தமதாக்கிக் கொள்வதாகும். தொல்குடிச் சமூகத்தில் மூத்தோருக்கெனத் தனித்ததொரு இடமிருந்தது. நற்செயல்களை முன்னிருந்து நடத்துகிறவர்களாகவும் நீதி வழங்குபவர்களாகவும் அனுபவ ஆசான்களாகவும் பூசல்களைத் தவிர்ப்போராகவும் மூத்தோர் விளங்கினர். மூத்தோர் வணங்கப்பட்டனர்.

53) அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை என்று கூறும் நூல் எது?

a) நாலடியார்

b) திருக்குறள்

c) சிறுபஞ்ச மூலம்

d) இனியவை நாற்பது

விளக்கம்: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் (குறள்:441) மூத்தோரான அறிவுடையோரின் நட்பை விரும்பி ஏற்கவேண்டும் என்கிறது திருக்குறள். பெரியோரைத் துணையாகக் கொள்வதையும் திருக்குறள் முதன்மைப்படுத்துகிறது. ஆராய்ந்து மூத்தோர் கூறும் தீர்ப்புகள் சரியானவையாக இருக்கும் எனப் பொது மக்கள் நம்பினர்.

54) மன்னன் கரிகாலன், முதியவனாய் வேடம் பூண்டு வந்து தீர்ப்பு வழங்கியதை எதன் மூலம் அறிகிறோம்?

a) சங்கப்பாடல்

b) மூதுரை

c) நாட்டுப்புறப்பாடல்

d) பழமொழிப்பாடல்

விளக்கம்: சிறுவனான கரிகால்வளவனின் தீர்ப்பு எப்படி இருக்குமோ என நினைத்தவர்களின் உள்ளக்குறிப்பை உணர்ந்துகொண்ட மன்னன் கரிகாலன், முதியவனாய் வேடம் பூண்டு வந்து தீர்ப்பு வழங்கினான். இதைப் பழமொழிப் பாடலால் (21) அறிகிறோம். சுருங்கக்கூறின், மூத்தோரையும் அவர்களின் வழிகாட்டல்களையும் எந்தச் சமூகம் கொண்டாடுகிறதோ, அந்தச் சமூகமே பெருஞ்சிறப்படைகிறது எனலாம்.

55) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) உயிர்களிடம் இரங்கும் நிலவுடைமையாளரின் உயிர்ப்பரிவு என்பது, பொதுநோக்குடன் அன்பு செய்யும் தொல்குடியினரின் உயிர்நேயத்திலிருந்து கிளைத்ததாகும்.

ⅱ) இயற்கையோடு இயற்கையாக இயைந்து வாழ்ந்த தொல்குடிச் சமூகத்தில் உயிர்களை நேசித்தல் என்பது எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற இயல்புணர்வுச் செயல்பாடாகும்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: 7. உயிர்கள் மீது அன்பு செலுத்துதல்: உயிர்நேயம் என்பது தொல்குடிப் பண்பாடாகும். உயிர்களிடம் இரங்கும் நிலவுடைமையாளரின் உயிர்ப்பரிவு என்பது, பொதுநோக்குடன் அன்பு செய்யும் தொல்குடியினரின் உயிர்நேயத்திலிருந்து கிளைத்ததாகும். இயற்கையோடு இயற்கையாக இயைந்து வாழ்ந்த தொல்குடிச் சமூகத்தில் உயிர்களை நேசித்தல் என்பது எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற இயல்புணர்வுச் செயல்பாடாகும்; குளம்வெட்டி, காட்டை அழித்து நாடாக்கிய நிலவுடைமையாளருக்குப் பெருமிதம் பேணும் பண்பார்ந்த நடத்தையாகும்.

56) புல்லால் வேயப்பட்ட குடிசைகளில் வாழ்ந்த எளிய மக்களின் விருந்தோம்பலை பால்வளம் சுரப்பதையும், எருமைகளின் எண்ணிக்கை பெருகுவதையும் காட்டும் நூல் எது?

a) மலைபடுகடாம்

b) ஐங்குறுநூறு

c) நற்றிணை

d) பொருநராற்றுப்படை

விளக்கம்: மற்ற உயிர்களின் துணையின்றி மனிதன் மட்டும் தனித்தியங்கமுடியாது என்பதை அவன் உணரவேண்டும். இத்தகைய உயிர்நேய உணர்வு, தொல்குடிகளிடம் நிறைந்திருந்தது. தொல்குடி வேளாண் சமூகத்தில் பல்லுயிர்களின் பங்களிப்பு போற்றப்பட்டது. தம்மோடு இணைந்து, தமக்கான உணவினையும் பிறவற்றையும் பெற்றுத்தரும் உயிர்களின் இன்றியமையாமையை தொல்குடியினர் உணர்ந்திருந்தனர். எனவே அவற்றையும் தம்மைப் போலவே எண்ணினர். தம்மோடு அவற்றையும் இணைத்துக்கொண்டனர். பால்வளம் சுரப்பதையும், எருமைகளின் எண்ணிக்கை பெருகுவதையும் ஐங்குறுநூறு காட்டுகிறது.

57) முதுமையின் காரணமாக மேய்ச்சல் நிலம் தேடிச்செல்ல இயலாத முதிய பசுவுக்கு கரும்பை உணவாகத் தருவதை கூறும் நூல்?

a) மலைபடுகடாம்

b) ஐங்குறுநூறு

c) நற்றிணை

d) அகநானூறு

விளக்கம்: முதுமையின் காரணமாக மேய்ச்சல் நிலம் தேடிச்செல்ல இயலாத முதிய பசு, அருகிலுள்ள பயிரை மேய்ந்துவிடுகிறது; மக்கள் அதனை அடித்து விரட்டவில்லை, அதன்மீது இரக்கப்பட்டு அதற்குக் கரும்பை உணவாகத் தருகின்றனர். இதனை அகநானூறு (150) காட்டுகிறது. தொல்குடிச் சமூகத்தில் மாடுகளே செல்வங்கள்; மாடுகளின் உழைப்பால் வரும் பயனைத் துய்ப்பதோடு; அவற்றின் நோயையும் வருத்தத்தையும் உணர்ந்திருந்தனர். தொல்குடி மக்களின் இத்தகைய உயிர்நேயம் நம்மை வியக்கவைக்கிறது.

58) காக்கைக்கும் சோறிட வேண்டிய கடப்பாட்டினை கூறும் நூல்?

a) மலைபடுகடாம்

b) ஐங்குறுநூறு

c) நற்றிணை

d) அகநானூறு

விளக்கம்: பிறிதின் துன்பத்தைத் தம் துன்பம்போல் கருதிக் களையத் துடிக்கும் தொல்குடிப் பண்பாடு, இன்றும் நாம் பின்பற்ற வேண்டிய உயர்ந்ததொரு விழுமியமாகும். சிறிய உயிர்களே ஆயினும் அவற்றுக்கும் தேவையான உணவினைத் தொல்குடி மக்கள் வழங்கினர். அவர்களின் பார்வையில் உயிர்கள் என்பவை, மனிதர்களைப் போலவே பசியும் வருத்தமும் நோயுமுடையவை. எனவே, எறும்புகளுக்கு உணவிடுவதும், பறவைகளுக்குச் சோறிடுவதுங்கூடத் தொல்குடிகளுக்குத் தவிர்க்கவியலாத கடமைகளாயின. காக்கைக்கும் சோறிட வேண்டிய கடப்பாட்டினை நற்றிணைப் பாடலால் (258) அறிகிறோம்.

59) உப்பு வணிகரான உமணர்கள் தம் குழந்தைகள்போலக் கருதி வளர்த்த விலங்கு எது?

a) நாய்

b) குரங்கு

c) மாடு

d) பூனை

விளக்கம்: வலிமையற்ற சிறுவிலங்குகளையும் மக்கள் பாதுகாத்தனர்; உப்பு வணிகரான உமணர்கள் தம் குழந்தைகள்போலக் கருதிக் குரங்குகளையும் வளர்த்தனர். ‘மகாஅர் அன்ன மந்தி‘ என்ற அடி, தம் குழந்தைகளைப் போலவே குரங்குகளையும் உமணர்கள் எண்ணியமையைக் காட்டுகிறது. இச்செய்தியைச் சிறுபாணாற்றுப்படை (55-61) பதிவு செய்துள்ளது. இயற்கையோடு இயற்கையாகத் தொல்குடி மக்கள் வாழ்ந்தனர்; அவர்களுக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பேதமில்லை; யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுநோக்கு அவர்களின் உடைமையாயிருந்தது.

60) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) கூடியுழைப்பதும், கூட்டுழைப்பால் வரும் உணவைப் பொதுவில் வைத்துப் பகிர்ந்துண்பதும் தொல்குடிச் சமூகத்தின் தனிச்சிறப்பாகும்

ⅱ) எல்லாருக்கும் வேட்டை கிடைப்பதை உறுதிப்படுத்தமுடியாத சூழலில், கிடைத்த உணவைக் கிடைக்காதவருடன் பகிர்ந்துண்டனர்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: 8. கூடி உண்ணல்: கூடியுழைப்பதும், கூட்டுழைப்பால் வரும் உணவைப் பொதுவில் வைத்துப் பகிர்ந்துண்பதும் தொல்குடிச் சமூகத்தின் தனிச்சிறப்பாகும். வேட்டையாடலும் வேளாண்மையும் விழாக்களும் தொழில்களும் கூட்டுழைப்பாலேயே சாத்தியமாயின. மிகப்பெரும் உடலுழைப்பால் அன்றாட வாழ்வை அவர்கள் நடத்தினர். எல்லாருக்கும் வேட்டை கிடைப்பதை உறுதிப்படுத்தமுடியாத சூழலில், கிடைத்த உணவைக் கிடைக்காதவருடன் பகிர்ந்துண்டனர். கூட்டுழைப்பும் கூடி உண்ணலும் கூட்டுப்பொறுப்பும் பிரிக்கமுடியாத அங்கங்களாய்த் தொல்குடி வாழ்வில் படிந்திருந்தன.

61) கூட்டுழைப்பால் பெற்ற உணவினை எத்தகைய ஏற்றத்தாழ்வுமின்றிச் சமமாகப் பகிர்ந்துண்டனர் என்று கூறும் புலவர் யார்?

a) மாமூலனார்

b) மாங்குடி மருதனார்

c) அவ்வையார்

d) பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

விளக்கம்: கூட்டுழைப்பால் பெற்ற உணவினை எத்தகைய ஏற்றத்தாழ்வுமின்றிச் சமமாகப் பகிர்ந்துண்டனர் என்கின்றார் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். (பெரும்பாணாற்றுப்படை: 134-138). கூட்டுழைப்புவழி வரும் உணவைக் கூடியுண்ணும் தொல்குடியின் பொதுமைப்பண்பு, வியக்கவைக்கும் பெருமிதப் பேருணர்வாகும். இந்தப் புராதனப் பொதுவுடைமைப் பேருணர்வுதான், தொல்குடிகளின் அரசியல் அமைப்பைக் குழந்தைக்குரிய எளிமையினும் எளிமையான ஒரு படைப்பாக்குகிறது என்கிறார் ஏங்கல்ஸ். (தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, உலகாயதம், தமிழில்: எஸ். தோதாத்ரி, ப.285)

62) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) தொல்குடிமக்கள் இந்த உலக வாழ்வைப் பெரிதும் விரும்பிப் போற்றினர்.

ⅱ) இங்குள்ள யாவும் மெய் என்றும், இதைத் தவிர வேறு உண்மை இல்லை என்றும் வாழ்ந்தனர்.

ⅲ) உலகில் இருந்து இன்பம் துய்ப்பதன்றிப் பிற செல்வங்கள் பெரிது என நம்பினர்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: உலகை விரும்பல்: தொல்குடிமக்கள் இந்த உலக வாழ்வைப் பெரிதும் விரும்பிப் போற்றினர்; இந்த உலகில் உண்டும் உறங்கியும் உடுத்தும் ஆடியும் பாடியும் கூடியும் கலந்தும் களிப்பதைவிட வேறு இன்பமில்லை என்ற உண்மையைத் தம் வாழ்வுவழி அவர்கள் கண்டறிந்தனர்; இங்குள்ள யாவும் மெய் என்றும், இதைத் தவிர வேறு உண்மை இல்லை என்றும் வாழ்ந்தனர். இன்பமும் துன்பமும் கலந்த இவ்வுலக வாழ்வுக்கு உவப்பனவற்றை மட்டும் ஏற்று இனியன கண்டு மகிழ்ந்தனர்; உலகியல் இன்பங்களைத் துய்ப்பதில் ஒருபோதும் அவர்கள் அயர்வடையவில்லை; இல்லிருந்து இன்பம் துய்ப்பதன்றிப் பிற செல்வங்கள் எதுவும் பெரிதல்ல என்றுணர்ந்திருந்தனர்.

63) “முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வார்இருங் கூந்தல் வயங்கு இழைஒழிய வாரேன், வாழிய நெஞ்சே” என்று கூறும் நூல்?

a) பட்டினப்பாலை

b) ஐங்குறுநூறு

c) குறுந்தொகை

d) பெரும்பாணாற்றுப்படை

விளக்கம்: முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வார்இருங் கூந்தல் வயங்கு இழைஒழிய வாரேன், வாழிய நெஞ்சே (பட்டினப்பாலை: 218-220) என்னும் பாடலடிகள் குறையற்ற சிறப்புகள் வாய்ந்த பட்டினத்தையே பரிசாகத் தந்தாலும் பெரிய கூந்தலை உடைய தன் துணைவியைப் பிரிய விரும்பாத தலைவனை நமக்குக் காட்டுகின்றன.

64) நரைதிரையின்றி நெடுநாள் வாழ்வதற்குமான வழியை கூறியவர் யார்?

a) கணிமேதாவியார்

b) மாங்குடி மருதனார்

c) அவ்வையார்

d) பிசிராந்தையார்

விளக்கம்: இத்தகைய மகிழ்ச்சியான உலக வாழ்வை விரும்புவதற்கும், நரைதிரையின்றி நெடுநாள் வாழ்வதற்குமான வழியைப் பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடல் (191) காட்டுகிறது. இவ்வாறு, உலகை விரும்பிய தொல்குடிமக்கள், வாழ்வின் நன்மைகளைப் பெருக்கிக் கொள்வதற்காகப் போர் செய்வதையும் கூட ஒரு வாழ்வறமாகக் கொண்டிருந்தனர். போர் வெற்றியின் மூலம் கிடைக்கும் புகழ், வாழ்தல் பற்றிய அவர்களின் வேட்கையை வளர்த்தது. போரின் வெற்றிகளைப் பாடி ஆடிக் கொண்டாடினர். இவ்வாறு உலக வாழ்வில் வரும் புகழை விரும்பி ஏற்றலும், வெற்றியைத் துய்த்துக் களிப்பதும் தொல்குடிகளின் இயல்பாகும்.

65) தனக்கு மகன் பிறந்துள்ள செய்தியைக் கேட்டுத் தன் போர் உடையையும் களையாமல் வந்து சினம் குறையாமல் சிவந்த கண்களால் அவனைக் கண்டு பெருமிதப்பட்ட மன்னன்?

a) பேகன்

b) நன்னன்

c) ஆய் அண்டிரன்

d) அதியமான்

விளக்கம்: இவ்வுலகு இனிமையானது என்பதால், புதிதாய் ஓர் உயிர் இவ்வுலகுக்கு வரும்போது தனிப்பெரும் மகிழ்வோடு அதை வரவேற்றுக் கொண்டாடினர். மன்னனான அதியமான் நெடுமான் அஞ்சியும் தனக்கு மகன் பிறந்துள்ள செய்தியைக் கேட்டுத் தன் போர் உடையையும் களையாமல் வந்து சினம் குறையாமல் சிவந்த கண்களால் அவனைக் கண்டு பெருமிதப்பட்டதாகப் பாடுகிறார் ஔவையார் (புறம் : 100).

66) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) தந்தையின் சிவந்த கண்ணால் உற்றுநோக்கப்பட்ட குழந்தை எதிர்காலத்தில் கொடையாளியாய் திகழ்வான் என்பது நம்பிக்கையாகும்.

ⅱ) வீரர்கள் தம் கூட்டத்திற்காக வாழ்ந்து மடிவதே பிறப்பின் பெரும்பயன் என்ற வாழ்வறத்தைக் கொண்டிருந்தனர்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: இவ்வாறு தந்தையின் சிவந்த கண்ணால் உற்றுநோக்கப்பட்ட குழந்தை எதிர்காலத்தில் பெருவீரனாய்த் திகழ்வான் என்பது வீரர் நம்பிக்கையாகும். இத்தகைய வீரர்கள் தம் கூட்டத்திற்காக வாழ்ந்து மடிவதே பிறப்பின் பெரும்பயன் என்ற வாழ்வறத்தைக் கொண்டிருந்தனர். புகழ் எனில் உயிரையும் கொடுப்பதும், பழி எனில் உலகமே கொடுக்கப்பட்டாலும் அதை ஏற்க மறுப்பதும் முதுகுடிப் பெருமிதமாக இருந்தது. தொல்குடி மக்களின் வாழ்வியல் விழுமியங்களே மாபெரும் அறங்களாக அமைந்தமையை இப்பாடப்பகுதி தெளிவுபடுத்தியுள்ளது. அவர்தம் வாழ்வியல் கூறுகளான பெண்களைப் போற்றல், மக்கட்பேறு, இயற்கை வழிபாடு, நடுகல் வழிபாடு, விருந்தோம்பல், மூத்தோரைமதித்தல், உயிர்கள்மீது அன்பு செலுத்துதல், கூடி உண்ணல், உலகை விரும்பல் ஆகியவை இலக்கியச் சான்றுகளின் வாயிலாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

67) அமெரிக்காவின் வாசிங்டன் மாநிலத்தில் அமைந்துள்ள சியாட்டில் எவ்வகை நகரம்?

a) முத்து நகரம்

b) வணிக நகரம்

c) துறைமுக நகரம்

d) வங்கி நகரம்

விளக்கம்: அமெரிக்காவின் வாசிங்டன் மாநிலத்தில் உள்ள மேற்குக்கடலோரத் துறைமுகநகரமான சியட்டில் (Seattle), கிங்கவுண்டியின் தலைமையிடம். இந்த நகரம், அமெரிக்கப் பழங்குடியினத் தலைவரான ‘சியட்டில்’ பெயரால் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!