தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் Notes 7th Social Science Lesson 18 Notes in Tamil
7th Social Science Lesson 18 Notes in Tamil
18] தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
அறிமுகம்:
பிகநிதயா எனப்படும் பழமையான பௌத்த சமய நூல் கி.மு. ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறு வகைப்பட்ட 62 தத்துவ, சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்ததாகக் கூறுகின்றது. இருந்த போதிலும் இப்பலவகைப்பட்ட பிரிவுகளில் ஆசீவகம் மட்டுமே இடைக்காலத்தின் பிற்பகுதிவரை செயல்பாட்டில் இருந்தது. ஆனால் சமணமும், பௌத்தமும் நவீன காலம் வரையிலும் தொடர்ந்து செழிப்படைந்தன, மகாவீரரும் புத்தரும் தங்கள் அற போதனைகளை வேத மதத்தின் பலிகொடுக்கும் வழிபாட்டு முறைகளுக்கு எதிராக வைத்தனர். அவர்களின் போதனைகள் பாதுகாக்கப்பட்டு, பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த துறவிகளின் மூலமாகப் பின்வந்த சந்ததிகளிடம் கையளிக்கப்பட்டன.
- சமணம்: சான்றுகள், இலக்கியங்கள்:
மகாவீரரின் அறவுரைகள் ஓராயிரம் ஆண்டுகளாக அவருடைய சீடர்களால் வாய்மொழி மூலமாகவே மக்களுக்குச் சொல்லப்பட்டு வந்தன. சமணத்தின் தொடக்க காலத்தில் சமணத் துறவிகள் சமணத்தின் ஐந்து உறுதிமொழிகளைக் கடுமையாகப் பின்பற்றினர். சமயம் சார்ந்த கையெழுத்துப் பிரதிகளே சொத்தாகக் கருதப்பட்டதால் சமயம் பற்றிய அறிவானது ஆவணப்படுத்தப்படவில்லை. மகாவீரர் இயற்கை எய்திய (நிர்வாணா) இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர், சமண அறிஞர்கள் பாடலிபுத்திரத்தில் ஒரு பேரவையைக் கூட்டித் தங்கள் சமயம் சார்ந்த போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டனர். இது தொடர்பாகக் கூட்டப்பட்ட முதல் சமணப் பேரவைக்கூட்டம் இதுவேயாகும். சட்ட விதிகளை வரையறுப்பதில் ஒருமித்தக் கருத்து எட்ட முடியாமல் போனதால் இக்கூட்டம் தோல்வியில் முடிந்தது. இருந்த போதிலும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வல்லபியில் கூட்டப்பட்ட பேரவை கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதில் வெற்றிபெற்றது. இது அறிஞர்களை, சமண சமயத்தின் கொள்கைகளை உறுதிபட விளக்க ஊக்குவித்தது. மேலும் காலப்போக்கில் அதிக வயதும் ஆழமான ஞானமும் கொண்ட கற்றறிந்த பல சமணத் துறவிகள் சமண சமயம் தொடர்பாகப் பல்வேறு தலைப்புகளிலான உரைகளைத் தொகுத்தனர். ஏறத்தாழ கி.பி. 500இல் சமண ஆச்சாரியார்கள் ஒன்றை உணர்ந்தனர். அதாவது கடந்த காலம், நிகழ்காலம் ஆகிய காலப்பகுதிகளைச் சேர்ந்த பல அறிஞர்களால் தொகுக்கப்பட்ட ஒட்டுமொத்த சமண இலக்கியலங்களையும் மனனம் செய்வது மிகச்சிரமமானது என்பதை உணர்ந்தனர். உண்மையில் சமணம் குறித்த மிக முக்கியச் செய்திகள் இழக்கப்பட்டு விட்டன. ஆகவே அவர்கள் தாங்கள் அறிந்த சமண இலக்கியங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்துவது என முடிவுசெய்தனர்.
கி.பி. முதலாம் நூற்றாண்டில் சமணத்தில் பெரும்பிளவு ஏற்பட்டு திகம்பரர், சுவேதாம்பரர் என இருபெரும் பிரிவுகள் ஏற்கனவே தோற்றம் பெற்றிருந்தன. திகம்பரர் சுவேதாம்பரர் ஆகிய இரு பிரிவினருமே ஆகம சூத்திரங்களைத் தங்களின் அடிப்படை நூல்களாக ஏற்றுக் கொண்டனர். ஆனால் அவற்றின் உள்ளடக்கம், கொடுக்கப்படும் விளக்கம் ஆகியவற்றில் வேறுபட்டனர்.
சமண இலக்கியங்கள்:
சமண இலக்கியங்கள் பொதுவாக இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- ஆகம சூத்திரங்கள்:
ஆகம சூத்திரங்கள் பல சமண சமயப் புனித நூல்களைக் கொண்டுள்ளது. அவை அர்த்த-மகதி பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. 12 நூல்களைக்கொண்ட அவை மகாவீரரின் நேரடி போதனைகளைக் கொண்டுள்ளன. அவை மகாவீரரின் நேரடிச் சீடர்களால் தொகுக்கப்பட்டவையாகும். 12வது ஆகம சூத்திரம் தொலைந்து போனதாகக் கருதப்படுகிறது.
- ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள்:
ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள் என்பன ஆகமங்கள்மேல் எழுதப்பட்ட உரைகள், விளக்கங்கள், தனிநபர்களால் எழுதப்பட்டு துறவிகளாலும் அறிஞர்களாலும் தொகுக்கப்பட்ட நூல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அவை பிராகிருதம், சமஸ்கிருதம், பண்டைய மராத்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, இந்தி, கன்னடம், தமிழ், ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. மொத்தம் 84 நூல்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் 41 சூத்திரங்கள், 12 உரைகள், ஒரு மாபெரும் உரை (மகா பாஷ்யா) ஆகியன இடம் பெற்றுள்ளன. 41 சூத்தரங்கள் என்பன 11 அங்கங்களையும் (சுவேதாம்பரர்களால் பின்பற்றப்படும் நூல்கள்) 12 உப அங்கங்களையும் (நெறிமுறைக் குறிப்பேடுகள்) 5 சேடாக்களையும் (துறவிகளுக்கான நடத்தை விதிகள்) 5 மூலங்களையும் (சமணத்தின் அடிப்டைக் கோட்பாடுகள்) பத்ரபாகுவின் கல்பசூத்ரா போன்ற எட்டு பல்வகைப்பட்ட நூல்களையும் கொண்டுள்ளது. பஞ்சதந்திரம் எனும் நூலில் பெருமளவில் சமணத்தின் தாக்கம் இருப்பதாக நம்பப்படுகிறது.
இவைகளோடு இந்தி, தமிழ், கன்னடம் ஆகிய இந்திய பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட சில சமண நூல்களையும் நாம் பெற்றுள்ளோம். அதற்கு எடுத்துக்காட்டு தமிழ்மொழியில் எழுதப்பட்ட காப்பிய நூலான சீவகசிந்தாமணி ஆகும். இந்நூல் சங்க இலக்கிய மரபில் திருத்தக்கத் தேவர் என்பாரால் இயற்றப்பட்டது. இந்நூல் தன் சொந்த முயற்சியால் மேநிலையை அடைந்த சமயப்பற்றுடைய, இறுதியில் துறவு பூண்ட ஒரு அரசனின் வாழ்க்கையை வர்ணிப்பதாகும். தமிழில் எழுதப்பட்ட மற்றொரு அறிவுசார் நூலான நாலடியார் சமணத்துறவி ஒருவரால் இயற்றப்பட்டதாகும். திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் ஒரு சமணர் என நம்பப்படுகிறது.
தமிழ் நாட்டில் சமணங்கள்:
சமணர்கள் கர்நாடகாவிலிருந்து கொங்குப்பகுதிக்கும் (சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் பகுதிகள்) காவேரி கழிமுகப்பகுதிக்கும் (திருச்சிராப்பள்ளி) தெற்குமுகமாக புதுக்கோட்டைப் பகுதிக்கும் (சித்தன்னவாசல்) இறுதியில் பாண்டிய நாட்டுக்குள்ளும் (மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்கள்) இடம் பெயர்ந்தனர் என்பதற்குத் தெளிவான சான்று உள்ளது. பொதுவாகத் தமிழர்கள் திகம்பரர் பிரிவைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். களப்பிரர்கள் சமண சமயத்தின் ஆதரவாளர்களாய் இருந்ததாக நம்பப்படுகிறது.
சித்தன்னவாசல் குகைக்கோவில்:
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து 70 மீட்டர் உயரமுடைய பெரும்பாறையொன்றில் அமைந்துள்ளது. இதன் ஒரு முனையில் ஏழடிப்பட்டம் எனப்படும் இயற்கையாக அமைந்த குகையும், மற்றொரு முனையில் ஒரு குடைவரைக் கோவிலும் உள்ளன. வேலி அமைக்கப்பட்டுள்ள குகையின் பின்னே தரையில் 17 சமணப்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த கல்துயிலிடங்கள் சமணர்களின் தங்குமிடங்களாக இருந்துள்ளதாய் நம்பப்படுகிறது. இத்துறவிகளின் கற்படுக்கைகளில் அளவில் பெரிதாக இருக்கும் ஒன்றில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்-பிராமிக் கல்வெட்டு உள்ளது கி.பி. எட்டாம் நூற்றாண்டு, அதற்குப் பின்னரான காலப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகளும் உள்ளன. அவைகளில் துறவிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் இவ்விடத்தில் தனிமையில் தங்கள் வாழ்வைக் கழித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
சித்தன்னவாசல் குகை
அறிவர் கோவில் எனும் பெயருடைய சித்தன்னவாசல் குகைக்கோவில் குன்றின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கோவிலின் முகப்பு எளிமையானதாக கல்லில் செதுக்கப்பட்ட நான்கு தூண்களைக் கொண்டுள்ளது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோவிலின் முன்பகுதியில் அர்த்த மண்டபமும் பின்பகுதியில் கருவறையும் (கர்ப்பகிரகம்) உள்ளன.
இக்கோவிலில் காணப்படும் சுவரோவியங்கள் புகழ்பெற்ற அஜந்தா சுவரோவியங்களுடன் ஒப்புமை கொண்டுள்ளன. 1958இல் தான் மத்திய அரசின் தொல்லியல் துறை (ASI) இதைத் தனது பாதுகாப்பின் கீழ்க்கொண்டு வந்தது. அதன் பின்னர் இதைச் சுற்றி வேலி அமைக்கவும், பார்வையாளர்களின் வருமையை முறைப்படுத்தவும் இருபது ஆண்டுகளாயின. கருவறைக்குள் நுழைவதற்கு முன்பாக உள்ள மண்டபத்தின் இடப்புறச்சுவரில் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் வலப்புறச்சுவரில் ஆச்சாரியார்களின் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன.
சுவரோவியங்கள், சித்தன்னவாசல்
காஞ்சிபுரத்தில் சமணர்கள் (திருப்பருத்திக் குன்றம்):
பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் சமண சமயம் செழித்தோங்கியது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த சீனப்பயணி யுவான் சுவாங் அங்கு பெரும் எண்ணிக்கையிலான பௌத்தர்களும் சமணர்களும் இருந்ததாகத் தனது பயணக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான பல்லவ அரசர்கள் சமணர்களாவர். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் தொடக்கத்தில் சமணராக இருந்தவராவார். காஞ்சியில் இரண்டு சமணக் கோவில்கள் உள்ளன. ஒன்று திருப்பருத்திக் குன்றத்தில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவில் மற்றொன்று சந்திரபிரபா எனும் பெயரைக் கொண்டிருந்த தீர்த்தங்கரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சந்திரபிரபா கோவிலாகும். பல்லவர் கட்டடக்கலைப் பாணியில் இக்கோவில்கள் அமைந்துள்ளன. ஆனால் காலப்போக்கில் இவை சேதமடைந்துவிட்டன. விஜயநகர ஆட்சியின்போது (1387) புஷ்பசேனா எனும் சமண முனிவரின் சீடரான இருகப்பா என்பவரும் விஜயநகர அரசர் இரண்டாம் ஹரிஹர ராயரின் (1377-1404) அமைச்சரும் சேர்ந்து இக்கோவிலில் சங்கீத மண்டபம் ஒன்றைக் கட்டி கோவிலை விரிவுபடுத்தினர். அழகுமிக்க சுவரோவியங்களும் இக்காலத்தில் தான் வரையப்பட்டன.
ஜைன கோவில், திருப்பருத்திக் குன்றம்
கோவில்களிலுள்ள சுவரோவியங்கள் தீர்த்தங்கரர்களின் வாழ்க்கையில் நடந்த சில காட்சிகளைச் சித்தரிக்கின்றன. திருப்பருத்திக் குன்றத்திலுள்ள திரிலோக்கியநாத கோவிலின் ஓவியங்களின் மீது புதுப்பித்தல் பணியின்போது வர்ணங்கள் பூசப்பட்டுவிட்டதால் பாழாகிவிட்டன. திரிகூட பஸ்தி எனப்படும் இரண்டாவது கருவறையினுள் ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் கோவிலின் வளர்ச்சி குறித்த செய்திகளும், நூற்றாண்டுகளின் போக்கில் இக்கோவிலுக்குக் கொடையளித்த பலரைப்பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன.
சுவரோவியங்கள், திரிலோக்கியநாத கோவில்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பருத்திக் குன்றம் தவிர மாநிலத்தின் வேறுபல கிராமங்களிலும் சமண சமயம் குறித்தத் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கழுகுமலை சமண குடைவரைக் கோவில்கள்:
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் கழுகுமலையிலுள்ள கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் கோவில், தமிழ் நாட்டில் சமணம் புத்துயிர் பெற்றதைக் குறிக்கின்றது. இக்குகைக்கோவில் பாண்டிய அரசன் பராந்தக நெடுஞ்சடையனால் உருவாக்கப்பட்டது. இக்கோவிலில் பஞ்சவர் படுக்கை என்றழைக்கப்பட்ட பாறையில் செதுக்கி மெருகேற்றப்பட்ட கற்படுக்கைகள் உள்ளன. கழுகுமலை குகைக்கோவிலில் தீர்த்தங்கரர்களின் உருவங்களைத் தவிர யக்சர்கள், யக்சிகள் (முறையே ஆண், பெண் பணியாளர்கள்) ஆகியோரின் உருவச் சிலைகளும் இடம் பெற்றுள்ளன.
கழுகுமலை குகைக்கோவில் சிற்பங்கள்
தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள சமணக் கோவில்கள்:
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் ஒரு குன்றின் உச்சியில் அமைந்துள்ள குகைகளின் உள்ளே கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத் துறவிகளின் கற்படுக்கைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா லத்தேரியிலுள்ள பைரவ மலையில் இப்படுக்கைகள் காணக்கிடைக்கின்றன. மூன்று குகைகளில் இரண்டில் மட்டுமே கற்படுக்கைகள் உள்ளன. அவற்றில் ஒன்றில் நான்கு படுக்கைகளும் மற்றொன்றில் ஒரு படுக்கையும் உள்ளன. ஏனைய பகுதிகளில் காணப்படும் கற்படுக்கைகளில் உள்ள தலையணைப் பகுதி இங்குள்ள கற்படுக்கைகளில் காணப்படவில்லை.
திருமலை:
திருமலை சமணக் கோவில் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரின் அருகே அமைந்துள்ள ஒரு குகை வளாகத்தில் அமைந்துள்ளன. கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவ்வளாகத்தில் மூன்று சமணக் குகைகளும், இரண்டு சமணக் கோவில்களும், 22வது தீர்த்தங்கரரான நேமிநாதருடைய 16 மீட்டர் உயரமுடைய சிலையும் உள்ளன. நேமிநாதரின் இச்சிலையே தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிகவும் உயரமானதாகக் கருதப்படுகின்றது.
மதுரை:
மதுரையிலும் அதைச் சுற்றிலும் 26 குகைகளும் 200 சமண கற்படுக்கைகளும், 60 கல்வெட்டுகளும் 100க்கும் மேற்பட்ட சிலைகளும் உள்ளன. மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது கீழக்குயில்குடி கிராமமாகும். இங்குள்ள குன்றுகள் மதுரை நகருக்கு மேற்கே 12 கிலே மீட்டர் தொலைவில் மதுரை-தேனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. இங்குள்ள சிற்பங்கள் கி.பி. 860 முதல் 900 வரை ஆட்சிபுரிந்த பாண்டிய அரசன் பராந்தக வீரநாராயண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவையாகும். இங்கு எட்டு சிற்பங்கள் உள்ளன. ரிஷபநாதர் அல்லது ஆதிநாதர், மகாவீரர், பார்சவநாதர், பாகுபலி ஆகியோரின் சிற்பங்கள் இங்கு காணக்கிடைக்கின்றன.
கீழக் குயில்குடி குடைவரைக் கோவில்
கல்விக்குச் செய்த பங்களிப்பு:
சமண மடாலங்களும் கோவில்களும் கல்வி கற்றுக்கொடுக்கும் மையங்களாகவும் சேவை செய்துள்ளன. இந்நிறுவனங்களில் சமூக, சமய வேறுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும் கல்வி கற்றுத்தரப்பட்டது. சமணர்கள் தங்கள் கோட்பாடுகளைப் பரப்புரை செய்ததோடு, வெகு மக்களிடையே கல்வியைக் கொண்டு செல்வதில் தாங்கள் ஆற்றல் மிக்கத் தொடர்புச் சாதனங்கள் என்பதையும் நிரூபணம் செய்தனர். நாம் முன்னரே குறிப்பிட்டுள்ள பைரவமலை என்பது குக்கரப் பள்ளி என்னும் சிறு கிராமத்தின் அருகே அமைந்துள்ளது. ‘பள்ளி’ என்பது சமணர்களின் கல்வி மையங்களாகும். தமிழ்நாட்டில் ‘பள்ளி’ எனும் சொல்லை தங்கள் ஊர்ப்பெயர்களில் பின் ஒட்டாகக் கொண்ட கிராமங்களைப் பல பகுதிகளில் சாதாரணமாகக் காணமுடியும்.
கல்வி நிலையங்கள் அவற்றோடு இணைக்கப்பட்ட நூலகங்களைக் கொண்டிருந்தன. சமணத்தைப் போதித்தவர்களால் சமண மதத்தின் முக்கியக் கூறுகளை வலியுறுத்திப ற்பல நூல்கள் எழுதப்பட்டன. பெண்களும் துறவறம் பூண அனுமதிக்கப்பட்டதானது பெண்களிடையே கல்வியைக் கொண்டு செல்வதற்கு ஊக்கமளித்தது.
- பௌத்தம்:
புத்தரின் உண்மையான பெயர் சித்தார்த்த சாக்கிய முனி கௌதமர் என்பதாகும். ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தால் “கௌதமர் சாக்கிய இனக்குழுவைச் சேர்ந்தவர், மேலும் அவர் முழுநிறைவு எனும் இலக்கை எட்டியவர்” எனப் பொருள்படும். கௌதம புத்தர் மகாவீரரரின் சமகாலத்தவர் ஆவார். அவரது தந்தையார் இன்றைய நேபாளத்திற்கு அருகேயுள்ள ஒரு பகுதியில் சாக்கிய இனக்குழுவின் தலைவராக ஆட்சி செய்து வந்தார். கௌதமர் பழைய மதங்களின் குருமார்களிடமிருந்து தான் கற்றுக்கொள்வதற்கு ஏதுவுமில்லை எனத் தெரிந்து கொண்டார். துறவற வாழ்க்கையை மேற்கொள்வதே வீடுபேறு எனப்படும் முக்தியை அடைவதற்கான ஒரேவழி என மதங்கள் அறிவித்தன. ஆனால் துறவு வாழ்க்கை மேற்கொண்ட பின்னரும் கௌதமரால் எங்கிருந்தும் உண்மைக்கான பொருளை உணர முடியவில்லை. ஒருநாள் இரவு அவர் ஒரு போதி மரத்தின் கீழ் அமர்ந்து தனது சந்தேகங்கள், தனிமை ஆகியவை பற்றி சிந்தனை வயப்பட்டிருந்த வேளையில் ஒரு பேரமைதி அவர் மீது நிலவியது. விளைவாக கௌதமர் எனும் துறவி புத்தர் எனும் ஞானியானார். இறுதியில் மானுடத் துயரங்கள் குறித்த புதிரையும் அதற்கான காரணங்களையும், களைவதற்கான வழிகளையும் தெரிந்து கொள்வதில் வெற்றி பெற்றார். அரச வாழ்வு (மிகை ஆர்வமும் இன்ப நுகர்வும்) துறவு வாழ்வு (தன்னடக்க நிலையை எய்துவதல்) ஆகிய இரண்டுமே தவறு என உறுதிபடக் கூறிய அவர் இவை இரண்டிற்கும் இடைப்பட்டதைக் கண்டறிந்தார். அவருடைய இடைப்பட்ட வழி எண்வகை வழிகளை அடித்தளமாகக் கொண்டதாகும். அவைந ல்ல எண்ணங்கள், நல்ல குறிக்கோள்கள், அன்பான பேச்சு, நன்னடத்தை, தீது செய்யா வாழ்க்கை, நல்ல முயற்சி, நல்ல அறிவு, நல்ல தியானம் என்பனவாகும்.
புத்தர் கடவுளின் புகழைக் கற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் அன்பின் வலிமையைக் கற்றுக் கொடுத்தார். அனைத்து மனிதர்களும் ‘சமமான உரிமைகளுடன்’ பிறக்கின்றனர் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். அவர் நீண்ட பயணங்களை மேற்கொண்டு தனது செய்திகளைத் தொலைதூரப் பகுதிகளில் பரப்பினார். புத்தர் தனது போதனைகளை பிராகிருத மொழியில் பரப்புரை செய்தார். புத்தரின் நான்கு பேருண்மைகள் பின்வருமாறு:
- வாழ்க்கை துயரம், வயோதிகம், நோய், இறுதியில் மரணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
- துயரங்கள் ஆசையினாலும் வெறுப்பினாலும் ஏற்படுகின்றன.
- ஆசையைத் துறந்துவிட்டால் துயரங்களை வென்று மகிழ்ச்சியை அடையலாம்.
- ஒருவர் எண்வகை வழிகளைப் பின்பற்றினால் உண்மையான மகிழ்ச்சியும், நிறைவும் கைவரப்பெறலாம்.
பௌத்த இலக்கியங்கள்:
புத்தருடைய போதனைகள் நீண்ட காலத்திற்கு ஆசிரியர்களின் நினைவாற்றல் வழியாக சீடர்களுக்குக் கற்றுத்தரப்பட்டது. ஏறத்தாழ கி.மு.80இல் அவை எழுதப்பட்டன. அவை பாலி மொழியில் எழுதப்பட்டன. பாலிமொழியில் எழுதப்பட திரிபிடகா எனும் பௌத்தப் பொது விதிகள் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளன. அவை மூன்று கூடைகள் என்றும் அழைக்கப்பட்டன. அவை: வினய பிடகா, சுத்த பிடகா, அபிதம்ம பிடகா.
வினய பிடகா:
இதில் பௌத்தத் துறவிகளுக்கான (பிட்சுக்கள்) விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன. தூய்மையான நடத்தையைப்பெற இவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
சுத்த பிடகா:
விவாதங்களைச் சான்றுகளாகக்கொண்டு பௌத்தத்தின் மூலக் கோட்பாடுகளைக் கூறுகின்றது.
அபிதம்ம பிடகா:
இது நன்னெறிகள், தத்துவம், நுண்பொருள் கோட்பாடு ஆகியன குறித்து விளக்குவதாகும்.
பொதுவிதிகளைப் பற்றிக் கூறுகிற ஏனைய பௌத்த நூல்கள்:
ஜாதகங்கள்:
பௌத்த இலக்கியங்களில் காணப்படும் புத்தருடைய வாழ்க்கை தொடர்பான பல்வேறு கதைகளைக் கூறும் நூல்.
புத்தவம்சா:
இது கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ள மரபுவழிக் கதையாகும். கௌதமருக்கு முன்பாக வாழ்ந்ததாக நம்பப்படுகிற 24 புத்தர்களின் வாழ்க்கையையும் செயல்பாடுகளையும் இது எடுத்துரைக்கின்றது. பொது விதிகள், கோட்பாடுகள் குறித்து விளக்கும் நூல்களைத் தவிர பாலி மொழியில் எழுதப்பட்ட நூல்கள் நீண்ட வரிசை கொண்டதாக உள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை அவற்றில் அடங்கும்.
மிலிந்தபன்கா – அதாவது ‘மிலிந்தாவின் கேள்விகள்’ எனப்பொருள். கிரேக்க – பாக்டீரியன் அரசன் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த பிட்சுவான நாகசேனர் என்பவருக்குமிடையே பௌத்தத்தின் சில அம்சங்கள் குறித்து நடைபெற்ற உடையாடலைக் கொண்டுள்ளது. இதன் மூலம், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது.
- இலங்கையின் புகழ்பெற்ற வரலாற்றுத் தொகுப்புகளான மகாவம்சம், தீபவம்சம் ஆகியனவற்றுள், மகாவம்சம் இலங்கை உட்பட இந்தியத் துணைக்கண்டத்தின் அரச குலங்களைப் பற்றி கூறுகிறது. தீபவம்சம் புத்தருடைய போதனைகளையும் அவற்றைப் பரப்பியோர் இலங்கைக்கு வருகை புரிந்ததைப் பற்றியும் பேசுகிறது.
- புத்த கோசாவால் எழுதப்பட்ட விசுத்திமக்கா பிற்காலத்தைச் சேர்ந்த ஒரு நூலாகும். இவரே முதல் பௌத்த உரையாசிரியர் ஆவார்.
- மகாயான பௌத்தத்தின் எழுச்சியைத் தொடர்ந்து பௌத்த சமயத்துள் சமஸ்கிருத மொழி முக்கிய இடத்தை வகிக்கத் தொடங்கியது. இருந்தபோதிலும் ஒரு சில சமஸ்கிருத நூல்கள் ஹீனயானப் பிரிவினராலும் படைக்கப்பட்டன. அஸ்வகோஷரால் எழுதப்பட்ட புத்தசரிதா சமஸ்கிருதத்தில் இதிகாச பாணியில எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றை இயம்புகிறது.
தமிழகத்தில் பௌத்தம்:
தமிழகத்தில் பௌத்தமானது இலங்கையைச் சேர்ந்த சமயப் பரப்பாளர்களால் பரப்பப்பட்டதாக நம்பப்படுகிறது. இதற்குச் சான்றாக பாண்டிய நாட்டில் சில நினைவுச் சின்னங்கள் உள்ளன. அவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும். குகைகளில் காணப்படும் அவை பஞ்ச பாண்டவ மலை என அழைக்கப்படுகிறது. இக்காலப் பகுதியில் தழைத்தோங்கிய பௌத்தமானது சமணம், ஆசீவகம் இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகள் ஆகியவற்றுடன் நட்பமைதியுடன் கூடிச் செயல்பட்டுள்ளது. பக்தி இயக்க காலம் முதல் பக்தி இயக்கப் பெரியோர்கள் பௌத்தத்தை எதிர்த்தனர். பௌத்தம் அரசர்கள் அளித்து வந்த ஆதரவை இழக்கத் தொடங்கியது. தமிழகத்தில் பௌத்தம் சந்தித்த சவால்கள் குறித்த சான்றுகளைச் சைவ நாயன்மார்களின் தேவாரப் பாடல்களும் வைணவ ஆழ்வார்களால் இயற்றப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தமும் முன்வைக்கின்றன. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சீனப் பயணியான யுவான்சுவாங் தென்னிந்தியா வந்தபோது பௌத்தம் ஏறத்தாழ சரிவுற்ற நிலையிலிருந்தது.
பௌத்தம் முற்றிலுமாக மறைந்து போனது என்ற ஒரு பொதுக்கருத்து உள்ளது. ஆனால் அப்படியல்ல, வீரசோழியம் எனும் நூல் (11ஆம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்கள் காலத்தில் பௌத்தர் ஒருவரால் எழுதப்பட்ட இலக்கண நூல்) கிடைக்கப் பெற்றமையும், நாகப்பட்டினத்தில் கிடைத்துள்ள 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தரின் செப்புச் சிலைகளும் பின்வந்த காலங்களிலும் பௌத்தம் இருந்தமையை உறுதி செய்கின்றன. சேலம் மாவட்டம் தியாகனூர் கிராமத்தில் கிடைத்திருக்கும் புத்தரின் சிற்பங்கள் இக்கருத்திற்கு மேலும் வலுச்சேர்க்கின்றன.
புத்தர் சிற்பம், தியாகனூர்
நாம் முன்னர் பார்த்தவாறு பல்லவர் காலம் முதலாகவே பௌத்தம் சைவ, வைணவச் சமயங்களின் சவால்களை எதிர்கொண்டது. இதில் நாகப்பட்டினம் மட்டுமே விதிவிலக்காகத் திகழ்ந்தது. அங்கே பெத்தத்தை சோழ அரசர்கள் ஆதரித்தனர். அவ்வாதரவு சமயக் காரணங்களுக்காக அல்ல. மாறாக அரசியல் காரணங்களுக்காக அளிக்கப்பட்ட ஆதரவாகும். நாகப்பட்டினத்தில் ஸ்ரீவிஜயா அரசரால் கட்டப்பட்ட சூடாமணி விகாரைக்கு ராஜராஜ சோழன் ஆதரவளித்தார். பிற்காலத்தில் அது அழிவுக்குள்ளாயிற்று கூலவாணிகன் சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை முற்றிலுமாக தமிழ் பௌத்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காப்பியமாகும். சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளில் இருந்த பௌத்த சமயம் தொடர்பான சொற்களை அவர் தமிழில் மொழியாக்கம் செய்து பௌத்தத்தை இம்மண் சார்ந்ததாக ஆக்கினார்.
வஜ்ரபோதி எனும் பௌத்தத் துறவி தாந்ரீகச் சடங்குகளில் திறன் பெற்று விளங்கினார் என்றும், பல்லவ அரச சபையை அலங்கரித்த அவர் பின்னர் சீனம் சென்று விட்டதாகவும் இரண்டாம் நரசிம்ம பல்லவன் காலத்து சான்றொன்று கூறுகிறது. பௌத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த சமயமென மகேந்திரவர்மனின் மத்த விலாச பிரகாசனம் எனும் நூல் எழுத்துரைக்கின்றது.
கல்விப்புலத்தில் பௌத்த சங்கங்களும் விகாரைகளும் கல்விக்கான இல்லங்களாகத் தொண்டு செய்தன. கல்வி கற்பதற்காக உலகின் பல பகுதிகளிலிருந்து மாணவர்கள் இங்கு வந்தனர். நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச்சிறந்த கல்வி மையங்கள் எனப் பெயர்பெற்றன. இவையனைத்தும் பௌத்த விகாரைகளாகும். திபெத், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது பௌத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திற்று. பௌத்தத்தின் போதனைகளைப் பரப்புவதற்கு அவர்கள் செயல்திறன் மிக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.
விகாரைகள்:
நாளந்தா பௌத்த விகாரை
இந்தியத் தொல்லியல் துறையால் காவிரிப்பூம்பட்டினத்தில் அகழ்வாய்வு செய்து ஒரு பௌத்த விகாரையும் ஒரு கோவிலும் கண்டறியப்பட்டது. மேலும் 125க்கும் மேற்பட்ட ஆய்விடங்களில் நூற்றுக்கணக்கான கல்சிற்பங்களும் செப்புச்சிலைகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பௌத்தம் தமிழகம் முழுவதும் பரவியிருந்தது என்பதற்கு இவைகளே சான்றுகளாகும். திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் ஒதுக்கமாயுள்ள திருநாட்டியட்டாங்குடி கிராமத்தின் ஒரு வயலில் கிணறு வெட்டும்போது 1.03 மீட்டர் உயரமுடைய, பத்மாசன கோலத்திலுள்ள புத்தரின் சிலையொன்று கிடைத்துள்ளது.
பத்மாசன கோலத்தில் புத்தர்
- ஆசீவகத் தத்துவம்:
ஆசீவகர்கள் வினைப்பயன் (கர்மா), மறுபிறவி, முன்தீர்மானம் ஆகிய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆசீவகப் பிரிவின் தலைவர் கோசலா மன்காலிபுத்தா ஆவார். ஆசீவகர்கள் மிகக் கடுமையான துறவறத்தைக் கடைபிடித்தனர். ஆசீவக சமயமும் அதன் தத்துவமும் வேதப்பாடல்களிலும் பிராமணங்கள், ஆரண்யங்கள் ஆகியவற்றிலும் பண்டைய சமஸ்கிருதத் தொகுப்புகளிலும் சமண பௌத்த சமயங்களுக்கு முந்தைய காலப்பகுதியைச் சேர்ந்த ஆய்வுகளிலும் காணக் கிடைக்கின்றன. ஆசீவகத்திற்கான இலக்கியங்கள் இல்லாது போனாலும் கோசலரின் தத்துவங்கள் ஏனைய மதங்களில் ஜீவித்திருக்கின்றன.
ஆறாண்டு காலங்கள் கோசலா மகாவீரருடன் நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர். மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ஆசீவர்களை ஆதரித்தனர். மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வட இந்தியாவில் ஆசீவகம் சரிவைச் சந்தித்தது. இதனிடையே தென்னிந்தியாவில் பரவியிருந்த ஆசீவகம் அங்கே பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்பட்டது.
ஆசீவகத் துறவிகளைக் குறிக்கும் படம்
வரலாறு முழுவதிலும் ஆசீவகர்கள் அனைத்து இடங்களிலும் அடக்குமுறையைச் சந்திக்க நேர்ந்தது. பல்லவர், சோழர், ஹோய்சாளர் ஆகியோரது ஆட்சிக் காலங்களில் கிராம சமூகத்தினர் ஆசீவகர்கள் மீது சிறப்பு வரிகளை விதித்தனர். இது போன்ற இடர்ப்பாடுகள் இருந்தபோதிலும் 14ஆம் நூற்றாண்டு வரை இன்றைய கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், பாலாற்றின் பகுதிகளில் (வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்கள்) ஆசீவகம் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தது. இறுதியில் ஆசீவகர்கள் வைணவத்தால் ஈர்த்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
சுருக்கம்:
- சமணத்தை அறிந்து கொள்வதற்கான சான்றுகளும் இலக்கியங்களும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
- தமிழகத்தில் சமணம் இருந்தமை குறித்துத் திறனாய்வு செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்திலுள்ள சமண நினைவுச் சின்னங்களும் கலைகளும் முக்கியமாக சித்தன்னவாசலும் கழுகுமலையும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
- ‘பள்ளி’ வாயிலாக கல்விக்கு சமணர்கள் ஆற்றிய பங்களிப்பு விளக்கப்பட்டுள்ளது.
- பௌத்த போதனைகள் பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளன.
- தமிழ்நாட்டில் பெத்தம் செயல்பட்டது ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் பௌத்த மரபு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.
- ஆசீவகத் தத்துவத்தின் சாரமும் அது தமிழ் நாட்டில் இருந்தமையும் விவரிக்கப்பட்டுள்ளன.
சொற்களஞ்சியம்:
பழமை சாராத, வழக்கத்திலுள்ள மதக்கொள்கைக்கு மாறான | Heterodox | Not conforming to orthodox beliefs, especially religious ones, unorthodox | |
ஒரு விதி, பொது ஒழுங்கு | Canon | A rule, an accepted principle | |
ஒரு மனதாக | Unanimous | All sharing the same view | |
துறவி, சந்நியாசி | Ascetic | Monk, hermit | |
சீர்கெடு, மோசமடை | Deteriorate | To grow worse | |
தடங்கள், அடையாளங்கள், சுவடுகள் | Vestiges | Things left behind, remains, traces | |
அடிநில குகை | Cavern | A large deep underground cave | |
சிறு குன்று | Hillock | Small hill, mound | |
கட்டடத்தின் முகப்பு | Façade | The front of a building | |
சுவரில் அல்லது மேற்கூரையில் வரையப்படும் ஓவியங்கள் | Frescoes | Paintings done in water colour on a wall or ceiling | |
சுவரோவியம் | Mural | A large picture painted on a wall | |
உத்வேகம், உந்து சக்தி | Impetus | Motivation, stimulus | |
இரட்சிப்பு, முக்தி, விமோசனம் | Salvation | Saving from harm, ruin or loss | |
ஐயுறவுவாத, சமய ஐயுறவாளர் | Sceptic (skeptic) | Someone who habitually doubts accepted beliefs | |
அடக்கமுடியாத ஆசை, மிகு விருப்பம் | Craving | A storong desire | |
துன்புறுத்தல், அடக்குமுறை | Persecution | Unfair treatment of a person or a group, especially because of their religious or political beliefs |
தெரியுமா உங்களுக்கு?
சமணத்தின் ஐம்பெரும் உறுதிமொழிகள்:
- எந்த உயிரினத்தையும், துன்புறுத்தாமலிருப்பது – அகிம்சை.
- உண்மை – சத்யா.
- திருடாமை – அசௌர்யா.
- திருமணம் செய்து கொள்ளாமை – பிரம்மச்சரியா.
- பணம், பொருள், சொத்துக்கள் மீத ஆசை கொள்ளாமை – அபரிக்கிரகா.
கல்பசூத்ராவின் ஜைனசரிதா எனும் சமண நூல் சமண தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாறுகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக சமண சமயத்தை நிறுவியவரும் முதல் தீர்த்தங்கரருமான பார்சவநாதர், கடைசியும் 24வது தீர்த்தங்கரருமான மகாவீரர் ஆகியோரின் வரலாறுகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்நூலின் ஆசிரியராகக் கருதப்படும் பத்ரபாகு, சந்திரகுப்த மௌரியரோடு மைசூருக்குப் புலம்பெயர்ந்து (ஏறத்தாழ கி.மு.296) பின் அங்கேயே குடியமர்ந்தார்.
நிர்வாண நிலையை அடைந்து அதன் பின்னர் இவ்வுலகிற்கும் அடுத்த உலகத்திற்குமிடையே பாதை அமைப்போரே தீர்த்தங்கரர்கள் ஆவர்,
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சமணர்களின் எண்ணிக்கை 83,359 ஆகும். மொத்த மக்கள்தொகையில் இது 0.12 விழுக்காடாகும்.
விகாரா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு ‘வாழ்விடம்’ அல்லது ‘இல்லம்’ என்று பொருள். தொடக்கத்தில் சுற்றியலைந்து திரியும் துறவிகள் இவற்றை மழைக்காலங்களின் போது தங்குமிடங்களாகப் பயன்படுத்தினர். பணம் படைத்த, சாமானிய பௌத்தர்ளால் வழங்கப்பட்ட கொடைகளின் மூலம் இவை கல்வி மையங்களாக மாற்றம் பெற்றன. அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பல விகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது. அவை பல்கலைக்கழகக் கல்வியை வழங்கியதோடு, புனித நூல்களின் கருவூலச் சேகரங்களாகவும் திகழ்ந்தன. நாளந்தாவைப் போன்றே பல விகாரைகள் உலகப்புகழ் பெற்றவையாகும்.