சிந்துவெளி நாகரிகம் Book Back Questions 6th Social Science Lesson 3
6th Social Science Lesson 3
3] சிந்துவெளி நாகரிகம்
Book Back Questions with Answer and Do You Know Box Content
உங்களுக்குத் தெரியுமா?
நாகரிகம் என்ற சொல் பண்டைய லத்தீன் மொழிச் சொல்லான “சிவிஸ்” (CIVICS) என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் “நகரம்” ஆகும்.
தொல்லியலாளர்கள் எவ்வாறு புதையுண்ட நகரத்தைக் கண்டு பிடிக்கிறார்கள்?
அகழ்வாராய்ச்சியாளர்கள் செங்கற்கள், கற்கள், உடைந்த பானை ஓடுகள் போன்றவற்றை ஆராய்ந்து அவை பயன்படுத்தப்பட்ட காலத்தை அறிந்து கொள்கிறார்கள். பண்டைய இலக்கிய ஆதாரங்களைப் பயன்படுத்துகின்றனர். வான் வழிப் புகைப்படங்கள் மூலம் புதையுண்ட நகரங்கள் மற்றும் இடங்களின் மேற்பரப்பைக் கண்டறிந்து கொள்கிறார்கள். நிலத்தடியை ஆய்வு செய்ய காந்தப்புல வருடியை (Magnetic scanner) பயன்படுத்துகின்றனர். எஞ்சிய தொல்பொருள்கள் புதையுண்டு இருக்கின்றனவா இல்லையா என்பதை ரேடார் கருவி மூலம் அறிய முடியும். (தொலை நுண்ணுணர்வு முறை)
இந்தியத் தொல்லியல் துறை – ASI (Archaelogical Survey of India)
1861ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்ற நிலஅளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது.
வெண்கலக் காலம் என்பது, மக்கள் வெண்கலத்தாலான பொருள்களைப் பயன்படுத்திய காலம் ஆகும்.
மெஹர்கர் – சிந்து வெளி நாகரிகத்துக்கு முன்னோடி: மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம் ஆகும். இது பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது தொடக்க கால மனிதர்கள் வாழ்ந்ததாகக் கண்டறியப்பட்ட இடங்களுள் ஒன்று. மக்கள் வேளாண்மையிலும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டதற்கான சான்று இங்கு கிடைத்துள்ளது. கி. மு. (பொ. ஆ. மு) 7000-ஐ ஒட்டிய காலத்திலேயே மெஹெர்கரில் நாகரிகத்துக்கு முந்தைய வாழ்க்கை நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதிர்ச்சியடைந்த ஹரப்பா காலத்தைச் சார்ந்தது.
மனிதர்களால் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட உலோகம் – செம்பு.
மொகஞ்ச-தாரோவில் வெண்கலத்தால் ஆன இந்த சிறிய பெண் சிலை கிடைத்தது. “நடன மாது” என்று குறிப்பிடப்படுகிற இந்தச் சிலையைப் பார்த்த சர் ஜான் மார்ஷல் “முதலில் இந்தச் சிலையை நான் பார்த்த பொழுது இரு வரலாற்றிற்கு முந்தைய காலத்தின் உருவாக்க முறையைச் சார்ந்தது என்று நம்புவதற்குக் கடினமாக இருந்தது. ஏனெனில் இதுபோன்று உருவாக்கம் பண்டைய மக்களுக்கு கிரேக்க காலம் வரை தெரியவில்லை. இவை ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என நினைத்தேன். இச்சிலைகள் அக்காலகட்டத்துக்கு உரியதாகவே இருந்தன” என்றார்
கே. வி. டி (கொற்கை-வஞ்சி-தொண்டி) வளாகம்: பாகிஸ்தானில் இன்றும் கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை, உறை, கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் உள்ளன. கொற்கை, பூம்புகார் போன்ற சங்க கால நகரங்கள் மற்றும் துறைமுகங்களின் பெயர்களுடன் உள்ள இடங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளன ஆறுகளான காவ்ரி, பொருண்ஸ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஆறுகளான காவிரி வாலா மற்றும் பொருனை ஆகிய பெயர்கள் தமிழ்ச்சொற்களை முழுமையாகப் பிரதிபலிக்கின்றன.
சிந்துவெளி நாகரிகத்தின் மறைந்த பொக்கிஷங்கள்: பழங்கால எழுத்துக்களைப் படிப்பதன் மூலம் அக்கால நாகரிகத்தை நாம் அறிந்துகொள்ளலாம். ஆனால் சிந்துவெளி எழுத்துகளை இன்று வரை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, சிந்துவெளி மக்களின் வாழ்க்கை முறையை அறிவதற்கு வேறு ஏதாவது சான்றுகளையே நாம் நோக்க வேண்டி உள்ளது.
உடை: பொதுவாக பருத்தி ஆடைகளே பயன்பாட்டில் இருந்தன. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட நூலைச் சுற்றி வைப்பதற்கான சுழல் அச்சுக்கள் மூலம் அவர்கள் நூற்கவும் செய்திருக்கின்றனர் என்று தெரிகிறது. கம்பளி ஆடைகளும் உபயோகப்படுத்தப்பட்டன.
அன்பும் அமைதியும்: குடியிருப்புகள் தரைமட்டத்திலிருந்து நன்கு உயர்த்தப்பட்ட தளங்களில் கட்டப்பட்டிருந்தன. சிந்துவெளி மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்திருப்பதாகவே தோன்றுகிறது. ஏனென்றால் அவர்களிடம் படை இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும் சில ஆயுதங்கள் மட்டுமே அங்கிருந்து கிடைத்துள்ளன. அவர்கள் தங்களின் மேம்பட்ட நிலையை அவர்களுடைய ஆடைகள், விலைமதிப்பற்ற நகைகள் மற்றும் மேம்பட்ட நகர வாழ்க்கை மூலம் வெளிப்படுத்தினர்.
அணிகலன்கள்: ஆண், பெண் இருபாலரும் ஆபரணங்களை விரும்பி அணிந்திருக்கின்றனர். கழுத்தணிகள், கையணிகள், வளையல்கள், மோதிரங்கள், காதணிகள் மற்றும் காலணிகள் முதலியவற்றையும் அணிந்தனர். தங்கம், வெள்ளி, தந்தம், சங்கு, செம்பு, சுடுமண் மற்றும் விலையுயர்ந்த கற்களால் அணிகலன்கள் செய்யப்பட்டிருந்தன.
சிந்துவெளி மக்கள் இரும்பு மற்றும் குதிரையை அறிந்திருக்கவில்லை.
சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்பு நிற மணிக்கற்களைப் (carnelian) பயன்படுத்தினர்.
கலைத்திறன்: பொம்மை வண்டிகள், தலையையும், கால்களையும் அசைக்கக்கூடிய பசுபொம்மைகள், களிமண் பந்துகள், சிறிய பொம்மைகள், சிறிய களிமண் குரங்கு, சுடுமண் பொம்மைகள், கொட்டைகளைக் கொறிக்கும் அணில் பொம்மைகள், மண்ணால் ஆன நாய்கள், நடனமாடும் ஆண் பொம்மை போன்றவையும் கிடைத்துள்ளன. சுடுமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு வகையான பொம்மைகள் மக்களின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஆர்வத்தைக் காட்டுகின்றன.
மொகஞ்ச-தாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம் உலகப் பாரம்பரியத் தளமாக யுனெஸ்கோ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
முதல் எழுத்து வடிவம் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது.
கதிரியக்க கார்பன் வயதுக்கணிப்பு முறை – தொல்லியல் ஆய்வாளர்களுக்கான தரப்படுத்தப்பட்ட முறை: கார்பனின் கதிரியக்க ஐசோடோப் ஆன கார்பன்14 ஐப் பயனப்டுத்தி, ஒரு பொருளின் வயதை அறியும் முறை கதிரியக்க கார்பன் முறை அல்லது கார்பன்14(c14) முறை என்று அழைக்கப்படுகிறது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. சிந்துவெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?
(அ) செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
(ஆ) செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்
(இ) செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி
(ஈ) செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்
2. சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது
(அ) பழைய கற்காலம்
(ஆ) இடைக்கற்காலம்
(இ) புதிய கற்காலம்
(ஈ) உலோக காலம்
3. ஆற்றங்கரைகள் “நாகரிகத்தொட்டில்கள்” என அழைக்கப்படக் காரணம்
(அ) மண் மிகவும் வளமானதால்
(ஆ) சீரான கால நிலை நிலவுவதால்
(இ) போக்குவரத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதால்
(ஈ) பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்
கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. கூற்று: ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம்.
காரணம்: திட்டமிடப்பட்ட நகர அமைப்பு, மேம்பட்ட கழிவு நீர் அமைப்பு.
(அ) கூற்றும் காரணமும் சரி
(ஆ) கூற்று தவறு, காரணம் சரி
(இ) கூற்று சரி, காரணம் தவறு
(ஈ) கூற்றும் காரணமும் தவறு
2. கூற்று – ஹரப்பா நாகரிகம் வெண்கல காலத்தைச் சார்ந்தது.
காரணம்: ஹரப்பா மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது.
(அ) கூற்றும் காரணமும் சரி
(ஆ) கூற்று தவறு, காரணம் சரி
(இ) கூற்று சரியானது, ஆனால் அதற்கான காரணம் தவறானது
(ஈ) கூற்று மற்றும் காரணம் தவறானவை
3. கூற்று: ஹரப்பா மக்களின் பொறியியல் திறன் குறிப்பிடத் தக்கது.
காரணம்: கடலின் அலைகள், ஓதங்கள் நீரோட்டத்தைக் கணித்த பின் கப்பல் கட்டும் தளத்தைக் கட்டியிருப்பது.
அ. கூற்றும் காரணமும். சுரி
ஆ. கூற்று தவறானது, காரணம் சரியானது.
இ. கூற்று சரியானது, ஆனால் அதற்கான காரணம் தவறானது
ஈ. கூற்று மற்றும் காரணம் தவறானவை.
கீழே கூறப்பட்டுள்ள மொகஞ்ச-தாரோவை பற்றிய கூற்றுகளில் எவை சரியானவை?
அ. தங்க ஆபரணங்கள் பற்றித் தெரியவில்லை.
ஆ. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன.
இ. கருவிகள் இரும்பினால் செய்யப்பட்டன.
ஈ. பெருங்குளம் நீர் கசியாமல் இருப்பதற்காக பல அடுக்குகளால் இயற்கை தார் கொண்டு பூசப்பட்டன.
கீழ்காணும் கூற்றை ஆராய்க:
அ. நகரங்கள், தெருக்களின் வடிவமைப்பு மற்றும் செங்கல் அளவுகள் ஆகியவற்றில் சீரான தன்மை.
ஆ. ஒரு விரிவான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு
இ. தானியக் களஞ்சியம் ஹரப்பா நகரங்களில் முக்கியமான பகுதியாக விளங்கியது.
மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது / எவை சரியானவை?
(அ) 1 & 2
(ஆ) 1 & 3
(இ) 2 & 3
(ஈ) அனைத்தும் சரி
பொருந்தாததை வட்டமிடு:
காளைகள், ஆடுகள், எருதுகள், பன்றிகள், குதிரைகள்.
தவறான இணையைத் தேர்ந்தெடு:
1. ASI – அ. ஜான் மார்ஷல்
2. கோட்டை – ஆ. தானியக்களஞ்சியம்
3. லோத்தல் – இ. கப்பல் கட்டும் தளம்
4. ஹரப்பா நாகரிகம் – ஈ. காவிரி ஆறு
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. _________ மிகப் பழமையான நாகரிகம்.
2. இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை ___________ என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.
3. ___________ தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது.
4. மக்கள் குழுக்களாகச் சேர்ந்து __________ தை உருவாக்குகிறார்கள்.
சரியா, தவறா எனக் கூறுக:
1. மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடமாகும்.
2. இந்தியாவின் தொல்பொருள் ஆய்வியல் துறை தொல்பொருள் ஆராய்ச்சிக்கும், நாட்டின் கலாச்சார நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பிற்கும் பொறுப்பானது.
3. தானியக் களஞ்சியம் தானியங்களைச் சேகரித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
4. முதல் எழுத்துவடிவம் சீனர்களால் உருவாக்கப்பட்டது.
பொருத்துக:
1. மொகஞ்ச-தாரோ – அ. மேடான பகுதி
2. வெண்கலம் – ஆ. சிவப்பு மணிக்கல்
3. கோட்டை – இ. உலோகக் கலவை
4. கார்னிலியன் – ஈ. இறந்தோர் மேடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: (விடைகள்)
1. செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம் 2. உலோக காலம்
3. பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்
கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. கூற்றும் காரணமும் சரி
2. கூற்று சரியானது, ஆனால் அதற்கான காரணம் தவறானது.
3. கூற்று மற்றும் காரணம் தவறானவை
4. பெருங்குளம் நீர் கசியாமல் இருப்பதற்காக பல அடுக்குகளால் இயற்கை தார் கொண்டு பூசப்பட்டன.
5. அனைத்தும் சரி
6. குதிரைகள்
7. ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு
கோடிட்ட இடத்தை நிரப்புக: (விடைகள்)
1. ஹரப்பா 2. அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் 3. தானிய களஞ்சியம் 4. சமுதாயம்
சரியா? தவறா? (விடைகள்)
1. சரி
2. சரி
3. சரி
4. தவறு
சரியான விடை: முதல் எழுத்து வடிவம் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது.
பொருத்துக: (விடைகள்)
1. மொஹஞ்ச-தாரோ – இறந்தோர் மேடு
2. வெண்கலம் – உலோகக் கலவை
3. கோட்டை – மேடான பகுதி
4. கார்னிலியன் – சிவப்பு மணிக்கல்