சமத்துவம் பெறுதல் Notes 6th Social Science
6th Social Science Lesson 8 Notes in Tamil
8] சமத்துவம் பெறுதல்
நாம் வாழும் இச்சமூகம் பல்வேறு வகைகளில் வேறுபாடுகளைக் கொண்ட சமூகக் குழுக்களைக் கொண்டதாகும். நாம் “வேற்றுமையில் ஒற்றுமை” என்பதை நம்புவதால் அத்தகைய வேறுபாடுகளைக் களைந்து பிறருடன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பன்முகத் தன்மை எப்போதும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதால் மக்கள் தம்மிடமிருந்து வேறுபடும் பிற மக்களிடம் பகைமை உணர்வைக் கொள்வர். அவர்கள் பிற இனத்தின் மீது ஒரு பொதுவான எண்ணத்தைக் கொண்டிருப்பது சமூகத்தில் பதற்றத்திற்கு வழி வகுக்கிறது. இது போன்ற எண்ணங்கள் பாரபட்சத்திற்கு இட்டுச் செல்கின்றன.
- முன்முடிவு (பாரபட்சம்)
பாரபட்சம் என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும். அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே தவறாக முன்முடிவு எடுப்பதாகும். மக்கள் தவறான நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் கொண்டிருக்கும் போது பாரபட்சம் ஏற்படுகிறது.
முன்முடிவு = முன் + முடிவு/ பாரபட்சம்
பாரபட்சம் என்ற வார்த்தை முன்முடிவினை குறிக்கிறது. முன்முடிவு என்பது மக்களின் மத நம்பிக்கைகள், அவர்கள் வாழ்கின்ற பகுதிகள், நிறம், மொழி மற்றும் உடை போன்ற பலவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது. பாரபட்சமானது பாலினரீதியாகவும், இனரீதியாகவும், வர்க்கரீதியாகவும், மாற்றுத்திறனாளிகள் மீதும் மற்றும் பிறவற்றிலும் காணப்படுகிறது.
உதாரணமாக, கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்களின் மனப்பான்மை மற்றும் நடத்தையானது, நாகரிகமானது என்பது பாரபட்சமாகும்.
பாரபட்சம் உருவாவதற்கான காரணங்கள்
பாரபட்சம் உருவாவதற்குப் பொதுவான சமூக காரணிகள்,
- சமூகமயமாக்கல்
- நிர்ணயிக்கப்பட்ட நடத்தை
- பொருளாதார பயன்கள்
- சர்வாதிகார ஆளுமை
- இனமையக் கொள்கை
- கட்டுப்பாடான குழு அமைப்பு
- முரண்பாடுகள்
- மாறாக் கருத்து
- முன்முடிவு வலுவாக இருக்கும்போது மாறாக் கருத்து உருவாகிறது. மாறாக் கருத்து என்பது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றிய தவறான கருத்தாகும்.
- எடுத்துக்காட்டாக, பெண்கள் விளையாட்டிற்கு உகந்தவர்கள் அல்ல என்பது முன்முடிவு கொள்வதாகும். மாறாக தன்மை பற்றிய தவறான எண்ணங்கள் சிறுவயதிலேயே கற்றுக் கொள்ளப்படுகிறது. மேலும் குழந்தைகள் பொருட்கள், குழுக்கள், கருத்தியல்கள் போன்றவற்றில் வலுவான கருத்துக்களையும் தவறான எண்ணங்களையும் இளம் பருவத்திலேயே வளர்த்துக் கொள்கின்றனர்.
- குழந்தைகள் வளரும் போது அவர்களுக்கு பொருள்கள், மனிதர்கள் , நாகரிகம், நம்பிக்கை, மொழி இவற்றின் மீதான விருப்பு வெறுப்புகள் ஒத்தக் கருத்தால் மேலோங்குகிறது.
- எடுத்துக்காட்டாக, ரகுவின் கண்ணில் மென்பந்துன் தாக்கியதால் , அவன் அழத்தொடங்கினான். உடனே அவனைப் பார்த்து அனைவரும் சிரிக்கத் தொடங்கினர். ஆனால் ரகுவின் கண்ணில் மென்பந்து தாக்கியபோது அவனது நண்பன் மணிக்கு உண்மையில் வருத்தமாக இருந்தது. ஆனால் அவனும் மற்றவர்களுடன் இணைந்து சிரிக்கத்தான் செய்தான்.
- மேற்கூறிய எடுத்துக்காட்டிலிருந்து பெண்கள் அழுவார்கள் என்றும் ஆண்கள் அழக்கூடாது என்ற பொதுவான கருத்தை வலியுறுத்துகிறோம். ஆகையால்தான் ரகு வலியால் அழுதபோது மற்ற அனைவரும் அவனைப் பார்த்து சிரித்தனர். இதுவே மாறாக் கருத்துள்ள எண்ணமாகும். இதிலிருந்து, நாம் ஒருவர் மீதான தவறான எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்ளும் போது, அங்கு மாறாக் கருத்து உருவாகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
- பாலின அடிப்படையில் மாறாக் கருத்தினை பற்றி திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் சித்தரிக்கப்படுவதை காணலாம். சலவைப்கட்டி, சலவை இயந்திரம், பாத்திரங்களை கழுவுதல் தொடர்பான அனைத்து விளம்பரங்களிலும் பெண்களையே முன்னிறுத்துகின்றனர். இரு சக்கர வாகனம் போன்ற விளம்பரத்தில் ஆண்களையே முன்னிறுத்துகின்றனர். இவ்வாறு பாலின அடிப்படையில் மாறாக் கருத்து இருப்பதை காணலாம்.
- சமத்துவமின்மை மற்றும் பாகுபாடு
- சமத்துவமின்மை என்பது ஒருவர் மற்றொருவரை பாகுபாட்டுடன் நடத்துவது ஆகும். சாதி ஏற்றத்தாழ்வு, மதச் சமத்துவமின்மை, இன வேறுபாடு மற்றும் பாலின வேறுபாடு போன்ற பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் பாகுபாட்டை வளர்க்கின்றன.
- மக்களுக்கெதிரான எதிர்மறையான செயல்களே பாகுபாடு எனப்படும். சாதி, மதம், பாலினம் சார்ந்து கடைப்பிடிக்கப்படும் பாகுபாடுகளே சமத்துவமின்மை, தீண்டாமை ஆகியனவற்றுக்கான காரணிகள் ஆகும். வெள்ளை நிற நபர்களிடமிருந்து கடுமை வண்ண நிறத்தவர்களை வேறுபாடாக நடத்துதல், நிறம்-சாதி-பாலினம் –மதம் போன்றவை அடிப்படையில் உரிமைகள், வாய்ப்புகள், சமத்துவ நிலை ஆகியன மறுக்கப்படுதல் போன்ற பாகுபாடுகள் நிகழ்கின்றன.
- எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15(1) அறிவுறுத்துகிறது.
- தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா அவர்கள், 27 ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்குப்பின் 1990 ஆம் ஆண்டு விடுதலையானார். இவர் தென்னாப்பிரிக்காவிலிருந்த இனநிறவெறிக்கு முடிவு கட்டினார். தென்னாப்பிரிக்காவிலிருந்த இனநிறவெறிக்கு முடிவு கட்டினார். தென்னாப்பிரிக்காவில் உலகளவில் அமைதி நிலவவும், மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னோடியாகவும் திகழ்ந்தார்.
சாதி பாகுபாடு
- இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம் சாதி முறை ஆகும். வேத கால ஆரிய சமுதாயத்தில் நிலவிய வர்ண அமைப்பிலிருந்து சாதி படிநிலை முறை உருவானது. தொடக்கத்தில் வர்ண அமைப்பும் தொழில் அடிப்படையில் நெகிழ்வான சமூகப் பிரிவினைகளையே கொண்டிருந்தது. பிற்கால வேத சமுதாயத்தில் இறுக்கமான, பாகுபாடுகள் நிறைந்த, பிறப்பு அடிப்படையில் படிநிலைப்படுத்தப்பட்ட சாதிப் பிரிவுகளாக வர்ண அமைப்பு விரிவடைந்தது.
- இந்தியாவில் சாதி ஒடுக்குமுறைக் கெதிராக பலரும் போராடி வருகின்றனர். இவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆவார். தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இவர் சிறுவயதிலேயே சாதிப்பாகுபாட்டின் காரணமாக பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார். இந்தியாவில் அனைத்து குடிமக்கள் மத்தியிலும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் சாதி முறை அழிப்புக்காக தீவிரமாகப் போராடினார்.
பாலினப் பாகுபாடு
- பாலினப் பாகுபாடு என்பது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல்நலம், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றைக் குறிக்கிறது.
- எடுத்துக்காட்டாக ஒரு பெண் பள்ளிப்படிப்பை முடித்தபின் கல்லூரிக்கு செல்ல அனுமதி இல்லை. இதேபோன்று பெரும்பான்மையான பெண்கள் அவர்கள் விரும்பும் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படாமல் திருமணத்தில் தள்ளப்படுகின்றனர். இன்னும் ஒரு சில குடும்பங்களில் பெண்பிள்ளைகள் நவீன ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப்படுவதில்லை.
- ஆனால் அக்குடும்பத்தின் ஆண்பிள்ளைகள் அவ்வகையான ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப்படுகின்றனர். இதுவே பாலினப் பாகுபாடு ஆகும்.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
- இவர் பாபா சாஹேப் என பிரபலமாக அழைக்கப்படுகிறார்.
- இவர் இந்திய சட்ட நிபுணராகவும், பொருளாதார நிபுணராகவும், அரசியல்வாதியாகவும், சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார்.
- இவர் 1915இல் எம்.ஏ.பட்டத்தை பெற்றார். பின்னர் 1927 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டத்தை பெற்றார். அதற்கு முன்னர் இலண்டன் பொருளாதாரப் பள்லியில் D.Sc பட்டத்தையும் பெற்றிருந்தார்.
- இவர் அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவு குழுவின் தலைவராக இருந்தார். எனவே, இவர் இந்திய அரசியலமைப்பின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
- இவர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றினார்.
- இவரது மறைவுக்குப் பின்னர், 1990ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
மத பாகுபாடு
மதம் சார்ந்த பாகுபாடு என்பது நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு தனிநபரின் மீதோ அல்லது குழுவினர் மீதோ சமத்துவமின்றி நடத்துவது ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெவ்வேறு மதங்களின் மக்களுக்கிடையே பிரச்சினைகள் நிலவுகின்றன. நமது அரசமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமத்துவம் வழங்குகிறது; பிறப்பிடம் , சாதி, மதம், மொழி போன்ற எதன் காரணமாகவும் சமத்துவம் மறுக்கப்படக் கூடாது. இருப்பினும், வழிபாட்டு இடங்கள் போன்றவற்றில் இன்னமும் சாதி, மதம், பாலினம், மொழி அடிப்படையில் பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இத்தகைய பாகுபாடுகள், சமத்துவமின்மை போன்றவற்றுக்கு எதிராக நமது மாபெரும் சிந்தனையாளர்கள் கடுமையாகப் போராடியுள்ளனர்.
சமூக – பொருளாதார சமத்துவமின்மை
- சமூக-பொருளாதார தளத்தில் வளர்ச்சியின் பயன்கள் சமமாக பரவுவதில்லை. குறைவான தொழிற்வளர்ச்சி, குறைவான வேளாண் உற்பத்தி, குறைவான மனித மேம்பாடு ஆகியவை குறைந்த வருவாய் மாவட்டங்களுடன் தொடர்புடையவை. அதேபோல் கல்வியறிவு குறைந்த விகிதம் உள்ள மாவட்டங்கள் குறைவான பாலின விகிதத்துடன் காணப்படுகின்றன.
சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டினை நீக்குவதற்கான தீர்வுகள்
இந்திய சமுதாயத்தில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டினை அகற்றுவதற்கான தீர்வுகளாக கீழ்க்கண்டவற்றை மேற்கொள்ளலாம்.
- அனைவருக்கும் தரமான உடல்நலம் மற்றும் கல்வியினை கிடைக்கச் செய்தல்.
- தற்போதைய பாலின பாரபட்சத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்.
- பாலின ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவதற்காக பொதுவாழ்வு மற்றும் நிறுவனங்களில் பெண்களின் திறன்களை வெளிப்படுத்துதல்.
- மற்ற மதங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வெளிப்படையான மனநிலை வளர்த்தல்.
- வகுப்பறையில் குழுவாக சாப்பிடுவதை ஊக்குவித்தல் மூலம் சாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் எந்தவித பாரபட்சமின்றி மாணவர்களை ஒன்றாக இணைக்கச் செய்தல்.
- பல தரப்பட்ட மக்களிடமும் இணங்கி இருத்தல்.
- சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துதல்.
எழுத்தறிவு விகிதம் – 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு | ||||||||||
அதிகம் | குறைவு | |||||||||
வ.எண் | மாவட்டத்தின் பெயர் | விகிதம் | வ.எண் | மாவட்டத்தின் பெயர் | விகிதம் | |||||
1 | கன்னியாகுமரி | 92.14% | 1 | தருமபுரி | 64.71% | |||||
2 | சென்னை | 90.33% | 2 | அரியலூர் | 71.99% | |||||
3 | தூத்துக்குடி | 86.52% | 3 | விழுப்புரம் | 72.08% | |||||
4 | நீலகிரி | 85.65% | 4 | கிருஷ்ணகிரி | 72.41% | |||||
பாலின விகிதம் – 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு தலா ஆயிரம் ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கை | ||||||||||
அதிகம் | குறைவு | |||||||||
வ.எண் | மாவட்டத்தின் பெயர் | பாலின விகிதம் | வ.எண் | மாவட்டத்தின் பெயர் | பாலின விகிதம் | |||||
1 | நீலகிரி | 1041 | 1 | தருமபுரி | 946 | |||||
2 | தஞ்சாவூர் | 1031 | 2 | சேலம் | 954 | |||||
3 | நாகப்பட்டினம் | 1025 | 3 | கிருஷ்ணகிரி | 956 | |||||
4 | தூத்துக்குடி, திருநெல்வேலி | 1024 | 4 | இராமநாதபுரம் | 977 |
இந்திய அரசியலமைப்பு மற்றும் சமத்துவம்
- ஒரு அரசியலமைப்பு என்பது நாட்டின் நிர்வாகத்தை வழிநட்த்தும் விதிகள் மற்றும் விதிமுறைகளின் தொகுப்பாகும். இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவு ‘சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்’ என்கிறது. மேலும் மக்களுக்குள் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படுவதைத் தடுக்கிறது.
- நாட்டின் நிலப்பரப்பு பன்முகத்தன்மை கொண்டது என்பதால் அனைவருக்கும் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நமது அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. சமுதாயத்தில் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான இரண்டு முக்கியமான காரணிகள் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல் ஆகும்.
- பல்வேறு வகையான சுதந்திரம் என்பது அவரவர் மதத்தை பின்பற்றவும், மொழியைப் பேசவும், விழாக்களைக் கொண்டாடவும், கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதும் ஆகும்.
- அரசியலமைப்பு என்பது விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் சட்டவடிவமைப்பாகும், இதன்படி ஒரு நாடு நிர்வகிக்கப்படும். சமத்துவம் என்பது தீண்டாமையை ஒரு குற்றமாகக் காண்பதாகும்.
- இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 17-ன்படி இந்தியாவில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது. எந்த வகையிலும் தீண்டாமையைப் பின்பற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது.
- இன்றும் கூட நாடு முழுவதும் பல்வேறு வகையான பாகுபாடு காணப்படுகிறது. பெண்கள், விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக வகுப்பினர் உள்ளிட்டோர் இன்னும் இந்தியாவில் சமத்துவத்திற்காகப் போராடி வருகிறார்கள்.
சாதனையாளர்கள்
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (1931 – 2015)
- அவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் இராமேஸ்வரத்தில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தார். இவர் இந்தியாவின் பதினோறாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். இவர் மக்களின் குடியரசுத் தலைவர் என்று அன்புடன் நினைவு கூறப்படுகின்றார்.
- இவர் இராமநாதபுரத்தில் பள்ளிப்படிப்பினையும், திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பினையும் முடித்தார். சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியல் படிப்பிற்கு பிறகு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சேர்ந்தார்.
- இளமைக் காலத்தில் அப்துல் கலாமின் குடும்பம் வறுமையில் வாடியது. எனவே, தனது குடும்பத்திற்கு உதவியாக செய்தித் தாள்களை விற்பனை செய்தார்.
- இவர் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா (1997) உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
- இவர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார், அவற்றுள் புகழ் பெற்றவை இந்தியா 2020, அக்னிச்சிறகுகள், எழுட்சி தீபங்கள், தி லூமினஸ் பார்க் , மிஷன் இந்தியா.
- அவரது சிறந்த பணியால் “இந்தியாவின் ஏவுகணை மனிதர்” என்று சிறப்பிக்கப்படுகிறார்.
திரு. விஸ்வநாதன் ஆனந்த்
- விஸ்வநாதன் ஆனந்த் சென்னையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தாயார் சதுரங்க விளையாட்டில் ஆர்வம் அதிகம் கொண்டிருந்தபடியால் ஆனந்திற்கும் ஐந்து வயதிலேயே சதுரங்கள் விளையாட்டைக் கற்றுக் கொடுத்தார். அதுவே, அவரது எதிர்கால வாழ்க்கையில் சதுரங்க வீரராக திகழ அடிப்படையாக அமைந்தது.
- ஆனந்த் 2000, 2007, 2008, 2010 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் சதுரங்க விளையாட்டின் உலகச் சாம்பியனாக விளங்கினார்.
- தனது 14வது வயதில் உலக இளையவர் சதுரங்கப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.
- 1988ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரானார்.
- நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை 1991-92ல் பெற்ற முதல் வீரராவார்.
- 2007ஆம் ஆண்டில் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதினைப் பெற்றார்.
செல்வி.செ.இளவழகி
- செ.இளவழகி சென்னை வியாசர்பாடிப் பகுதியில் உள்ள ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவராவார். இவரது தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர்.
- 2008ஆம் ஆண்டில் பிரான்ஸின் கேனஸ் நகரின் பாலைஸ் தேஸ் விழாப் போட்டிகளில் தனது முதல் கேரம் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
- அதே ஆண்டில் தேசிய கேரம் சாம்பியன் போட்டியில் முந்தைய உலக சாம்பியனான ரேஷ்மி குமாரியை தோற்கடித்து வெற்றிபெற்றார்.
திரு. மாரியப்பன் தங்கவேலு
- மாரியப்பன் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் பிறந்தவர். இவரது தாயார் தனி நபராக இருந்து செங்கல் சூளையில் வேலை செய்தும் காய்கறிகள் விற்பனை செய்தும் நாள் ஒன்றுக்கு ரூ. 100/- ஊதியம் பெற்று இவரை வளர்த்தார்.
- இவருக்கு விபத்தின் காரணமாக வலது காலில் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டது. இத்தகைய பின்னடைவு இருந்தபோதும் பள்ளிக்கல்வியினை முடித்தார்.
- இவர், “நான் பிற மாணவர்களைவிட வேறுபாடு கொண்டவன் என நினைத்ததில்லை” எனக் கூறுகிறார்.
- 2016ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் ஆண்கள் உயரம் தாண்டுதல் T – 42 போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.