காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Notes 10th Social Science Lesson 13 Notes in Tamil
10th Social Science Lesson 13 Notes in Tamil
13. காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
அறிமுகம்
- 1757 ஜூன் 23இல் நடைபெற்ற பிளாசிப் போரில் வங்காள நவாபான சிராஜ்-உத்-தௌலா ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் தோற்கடிக்கப்பட்டார். ஆங்கிலேயப் படையின் தலைமைத் தளபதியான ராபர்ட் கிளைவ், வங்காளத்தின் நவாப்படைக்கு தலைமையேற்றிருந்தவரும் சிராஜ்-உத்-தௌலாவின் சித்தப்பாவுமான மீர் ஜாபரின் இரகசிய ஆதரவைப் பெற்று, பிளாசிப் போருக்கு வித்திட்டார்.
- சிராஜ்-உத்-தௌலாவின் அடக்குமுறைக் கொள்கைகளால் அவதிப்பட்ட ஜகத் சேத்துகள் (வங்காளத்திலிருந்த வட்டிக்கு பணம் கொடுப்போர்) கிளைவுக்கு உதவினார்கள்.
- பிளாசிப் போருக்குப் பிறகு வங்காளம் கொள்ளையடிக்கப்பட்டது. வங்காளத்தின் புதிய நவாபாக நியமிக்கப்பட்ட மீர் ஜாபரிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனி 2 கோடியே 25 இலட்சம் ரூபாயை 1757 மற்றும் 1760-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பெற்றது.
- இந்தத்தொகை பின்னர் ஆங்கிலேயர்களின் ஜவுளித்துறையை அதிவேகமாக இயந்திரமயமாக்க உதவிய பிரிட்டனின் தொழில் புரட்சிக்கு பயன்படுத்தப்பட்டது.
- அதேநேரத்தில் இந்தியாவில் தொழில்கள் முடங்கவும் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான சந்தையை இந்தியாவில் உருவாக்கவும் வழி வகுத்தது. இந்தியா, கிழக்கிந்திய கம்பெனியால் கொள்ளையடிக்கப்படும் செயலானது மேலும் 190 ஆண்டுகளுக்கு நீடித்தது.
- பிளாசிப் போருக்குப் பிறகு எல்லையை விரிவாக்கும் கொள்கையை ஆங்கிலேயர் பின்பற்றினர். வெகு விரைவில் இந்திய துணைக்கண்டத்தின் எஞ்சிய பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
- நில வருவாய் நிர்வாகம், இராணுவம், காவல்துறை, நீதிமுறை மற்றும் ஆட்சி சார்ந்த இதர நிறுவனங்களில் ஆங்கிலேயர் முறையான மாற்றங்களைக் கொண்டு வந்தனர்.
- காலனி ஆதிக்கச் சுரண்டல் மற்றும் காலனிய அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாடு இரண்டு கூறுகளைக் கொண்டிருந்தது.
- 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த இந்திய நிலைப்பாடு சீரமைக்கப்படும் இயல்பைப் பெற்றிருந்தது.
- பழங்குடியினர் புரட்சி மற்றும் விவசாயிகளின் கிளர்ச்சி இரண்டுமே பழைய முறைமையை நிலைநிறுத்தும் முயற்சியாகவே இருந்தது.
- இரண்டாவது நிலைப்பாடு 19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இந்திய தேசியவாதத்தின் வடிவத்தில் தோன்றியது. இந்த தேசியவாதமானது இந்தியாவை ஒரே நாடாக உருவகம் செய்துகொண்டு ஒற்றுமை உணர்வையும் தேசிய ஆர்வத்தையும் வலியுறுத்தியது.
- இந்திய துணைக் கண்டத்தில் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் மற்றும் மத்தியிலும் தொடர்ந்து 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த பல்வேறு போராட்டங்கள் மற்றும் நிலைப்பாடுகளை விளக்குவதாக இந்தப் பாடம் அமைந்துள்ளது.
- மேலும் இதில் ஆங்கிலேய ஆட்சியின் தன்மை, அதன் கொள்கைகளும் நிர்வாக முறைகளும் அவற்றால் இந்தச் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியன பற்றி விரிவாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
விவசாயிகள் மற்றும் பழங்குடியினரின் எதிர்ப்பு
- பல்வேறு சமூக-சமய சீர்திருத்த இயக்கங்களில் ஈடுபட்டு மேற்கத்திய நவீன கருத்துகள் மற்றும் பகுத்தறிவுவாதம் ஆகியவை குறித்து இந்தியாவின் நகர்ப்புற உயர்குடி மக்கள் முனைப்பாக இருந்த காலக்கத்தில் ஊரகப் பகுதிகளில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மிக வலுவுடைய மற்றும் தீவிரமான போக்கு நிலவியது.
- பாரம்பரியமான உயர்குடி மக்களும் விவசாயிகளும் பழங்குடியின மக்களுடன் இணைந்து கிளர்ச்சி செய்தனர். இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதை அவர்கள் கோராமல் காலனியாதிக்கத்திற்கு முன்னிருந்த நிலையை மீண்டும் நிலைநிறுத்தவதை வலியுறுத்தினார்கள்.
- நிலம் தொடர்பான தனிச்சொத்துரிமைகள் பற்றி கொள்கை, நில வருவாயை தீவிரமாக வசூல் செய்வது, பழங்குடியினர் அல்லாதவர்கள் பழங்குடியினரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது, உள்ளூர் மக்களின் சமூக-சமய வாழ்க்கையில் கிறித்தவ சமயப்பரப்பாளர்களின் தலையீடு ஆகிய பல பிரச்சனைகள் ஆங்கிலேயருக்கு எதிராக அமைதியின்மை உருவாக வழிவகுத்தன.
- பழங்குடி மக்கள் குறிப்பாக அவர்களை படையெடுப்பாளர்களாகவும், ஆக்கிரமிப்பாளர்களாகவும் காணத் தொடங்கினார்கள்.
- பல்வேறு பழங்குடியின மற்றும் விவசாயிகளின் கிளர்ச்சிகளுக்கான அடிப்படையாக இருந்தது என்னவெனில் அவர்கள் அனைவரும் தங்கள் வேதனைகளுக்குக் காரணமான மற்றும் கண்ணுக்குத் தெரியும் காரணியை உடனடியாக அகற்றத் துடித்ததேயாகும்.
- ஆங்கிலேய ஆட்சியில் கிட்டத்தட்ட ஒரு நூறுக்கும் குறையாத எண்ணிக்கையில் விவசாயிகளின் கிளர்ச்சிகள் நடந்தன. அவற்றைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்:
அ) மறுசீரமைத்தலுக்கான கிளர்ச்சிகள் – இந்த வகையான போராட்டம் பழைய முறைமைகள் மற்றும் பழைய சமூக உறவுகளை நிலைநிறுத்தும் முயற்சிகள் தொடர்புடையது ஆகும்.
ஆ) சமய இயக்கங்கள் – இத்தகைய இயக்கங்களுக்கு தலைமையேற்ற சமயத்தலைவர்கள் சமயச் சிந்தனைகளின் அடிப்படையில் சமூகத்தை சீரமைப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள்.
இ) சமூகக் கொள்ளை – இத்தகைய இயக்கங்களின் தலைவர்கள் ஆங்கிலேயர்களாலும் பாரம்பரிய உயர்குடியினராலும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர். ஆனால் அச்சமூகத்தைச் சார்ந்த மக்கள் அவர்களைத் தங்களுடைய மேம்பாட்டுக்காக உழைத்த நாயகர்களாகவும், சாதனையாளர்களாகவும் கண்டனர்.
ஈ) மக்களின் கிளர்ச்சி – பொதுவாக இவை தலைவர்கள் இல்லாமலும் திடீரெனவும் எழுந்த புரட்சி இயக்கங்களாகும்.
வருவாய் முறையில் மாற்றங்கள்
- இந்தியா முழுவதிலும் செயல்பாட்டில் இருந்த முகலாய வருவாய் அமைப்பை கிழக்கிந்திய கம்பெனி மறுசீரமைத்ததையடுத்து விவசாயிகளின் நிதிச்சுமைகள் பெரிதும் அதிகரித்தன.
- ஆங்கிலேய ஆட்சிக்கு முன் இந்தியாவில் தனிச்சொத்துரிமை பற்றிய எந்த விரிவான திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
- அதேபோன்று வருவாயை வசூலித்து அரசிடம் செலுத்தவேண்டியவர்களாக விளங்கிய ஜமீன்தார்களும் வேறு பலரும் எப்போதுமே நிலத்துக்கான சொத்துரிமையைப் பெற்றிருக்கவில்லை.
- எனவே நிலம் பற்றிய காலப்பகுப்புக்கு ஆங்கிலேயர் அறிமுகம் செய்த மாற்றங்கள், விவசாயிகளின் உறவுகளில் முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியது குறித்து படித்தோம்.
நிலத்தைக் கீழ்க்குத்தகைக்கு விடுவது
- நிலத்தைக் குத்தகைக்கு விடுவதும் கீழ்க்குத்தகைக்கு (subletting) விடுவதும் விவசாய உறவுகளைப் பெரிதும் சிக்கலாகிறது.
- ஜமீன்தாரர் தன்னிடம் இருந்த நிலத்தைப் பெரும்பாலும் தன்னிடம் சார்ந்திருந்த நிலப்பிரபுக்களுக்கு கீழ்க்குத்தகைக்கு விட்டார். பதிலுக்கு நிலப்பிரபு, விவசாயிகளிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்துக் கொடுப்பார். இதனால் விவசாயிகள் மீதான வரிச்சுமை அதிகரித்தது.
ஆ) விவசாயிகளின் கிளர்ச்சி
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெடிக்கத் தொடங்கிய விவசாயிகளின் கிளர்ச்சிகள் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி முடிவுக்கு வரும்வரை தொடர்ந்தன. இவற்றில் இந்திய மக்களின் சமூக-சமய வாழ்க்கையில் ஆங்கிலேய ஆட்சியை ஒரு அத்துமீறலாகக் கருதிய சமயத்தலைவர்களே பெரும்பான்மையான கிளர்ச்சிகளுக்குத் தலைமையேற்றனர்.
ஃபராசி இயக்கம்
- ஹாஜி ஷரியத்துல்லா என்பவரால் 1818ஆம் ஆண்டு ஃபராசி இயக்கம் தொடங்கப்பட்டது. வங்காளத்தின் கிழக்குப் பகுதிகளில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் உறுப்பினர்களை இஸ்லாத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
- இதனால் அவர் ஜமீன்தார்களுடனும், அடுத்து விவசாயிகள் கிளர்ச்சியை ஒடுக்க முயன்ற ஜமீன்தார்களுக்கு சலுகை காட்டிய ஆங்கிலேயருடனும் நேரடி மோதலை மேற்கொள்ள வழிவகுத்தது.
- 1839இல் ஷரியத்துல்லா மறைந்த பிறகு இந்த கிளர்ச்சிக்கு அவரது மகன் டுடுமியான் தலைமை ஏற்றார். அவர் வரி செலுத்தவேண்டாம் என்று விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.
- பொதுமக்கள் நிலத்தையும் அனைத்து வளத்தையும் சரிசமமாக அனுபவிக்கவேண்டும் என்ற எளிய கொள்கையில் இந்த அறிவிப்பு பிரபலமடைந்தது.
- சமத்துவ இயல்பிலான மதம் குறித்து வலியுறுத்திய டுடு மியான், ‘நிலம் கடவுளுக்குச் சொந்தமானது’ என்று அறிவித்தார். எனவே வாடகை வசூலிப்பது அல்லது வரி விதிப்பது ஆகியன இறைச்சட்டத்துக்கு எதிரானது என்றார்.
- கிராம அமைப்புகளின் கட்டமைப்பு மூலமாக பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் ஒன்றுதிரட்டப்பட்டனர்.
- 1840கள் மற்றும் 1850கள் முழுவதும் ஜமீன்தாரர்கள் மற்றும் பயிரிடுவோர் மத்தியில் கடுமையான மோதல்கள் நிலவின.
- 1862இல் டுடு மியான் மறைந்தபிறகு 1870களில் நோவா மியான் என்பவரால் இந்த இயக்கம் மீண்டும் உயிர்பெற்றது.
பரசத்தில் வஹாபி கிளர்ச்சி
- வஹாபி கிளர்ச்சி என்பது ஆங்கிலேய ஆட்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராக துவங்கப்பட்டதாகும். வங்காளத்தில் பரசத் பகுதியில் 1827 வாக்கில் தோன்றியது.
- வஹாபி போதனைகளால் பெரிதும் ஆழமாக ஈர்க்கப்பட்டவராக திகழ்ந்த இசுலாமிய மதபோதகர் டிடுமீர் என்பவர் இந்தக் கிளர்ச்சிக்குத் தலைமையேற்றார்.
- ஜமீன்தாரி முறையால் ஒடுக்கப்பட்ட குறிப்பாக இசுலாமிய விவசாயிகள் மத்தியில் அவர் செல்வாக்குமிக்க நபராகத் திகழ்ந்தார். எனினும் பெரும்பான்மையான ஜமீன்தார்கள் இந்துக்களாக இருந்ததால் இந்தக் கிளர்ச்சிக்கு இந்து எதிர்ப்புச் சாயம் பூசப்பட்டது.
- 1831 நவம்பர் 6இல் புர்னியா நகரில் முதல் பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது. டிடு மீர் உடனடியாக ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தார்.
- உடனடியாக ஆங்கிலேயப் படையிடம் இருந்து பதிலடி கிடைத்தது. பெரும் எண்ணிக்கையிலான துருப்புகள் நர்கெல்பேரியாவுக்கு அனுப்பப்பட்டன. இப்போராட்டத்தில் ஐம்பது வீரர்களுடன் டிடு மீர் கொல்லப்பட்டார்.
- இறுதியில் கிராமப்பகுதி சமூகத்தில் விவசாயிகள் கிளர்ச்சி மூலமாக அதிகார கட்டமைப்பு பற்றிய தெளிவான விழிப்புணர்வும் அதிகாரத்தை மறுசீரமைப்பு செய்யவேண்டிய மனதிடமும் வெளிப்பட்டது.
- அடக்குமுறையின் அரசியல் மூலம் பற்றி கிளர்ச்சியாளர்கள் ஓரளவு அறிந்திருந்தனர். ஜமீன்தார் வீடுகள், அவர்களின் தானியக் கிடங்குகள், வட்டிக்குப் பணம் கொடுப்போர் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோருக்கெதிரான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டனர்.
- சில நேரங்களில் இத்தகைய அடக்குமுறையில் ஈடுபட்ட உள்ளூர் முகவர்களைப் பாதுகாக்க முனைந்த ஆங்கிலேய அரசு நிர்வாகமும் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த பண்புகளே 20ஆம் நூற்றாண்டின் விவசாய இயக்கத்திலும் பிரதிபலித்தன.
அ) பழங்குடியினர் கிளர்ச்சி
- காலனி ஆட்சியின் கீழ் முதன்முறையாக இந்திய வரலாற்றில் அரசு வனங்கள் குறித்த நேரடித் தனியுரிமை வேண்டும் என்று கோரியது.
- வனங்களை வர்த்தகமாக்கும் நடவடிக்கைகளுக்கு ஆங்கிலேய ஆட்சியில் ஊக்கம் கிடைத்ததன் காரணமாகப் பாரம்பரிய பழங்குடியின நடைமுறை தனது கட்டுக்கோப்பை இழந்தது. இதனால் பழங்குடியினப் பகுதியில் பழங்குடியினரல்லாதோரான வட்டிக்குப்பணம் கொடுப்போர், வர்த்தகர்கள், நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் போன்றோர் ஊடுருவுவதற்கு அது ஊக்கம் தந்தது.
- இதனால் ஆதிவாசி நிலத்தின் பெரும்பகுதி இழக்கப்பட்டு அவர்கள் தாங்கள் பாரம்பரியமாகக் குடியிருந்து வந்த பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வாழநேர்ந்தது.
- எனவே அமைதியான பழங்குடியினர் வாழ்க்கையில் மாற்றங்களை அறிமுகம் செய்தோர் அல்லது பழங்குடியின மக்களின் அப்பாவித்தனத்தைத் தேவையின்றி தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தியோருக்கு எதிரானதொரு பதில் நடவடிக்கையே பழங்குடியினக் கிளர்ச்சியாகும்.
பழங்குடியினர், யார் அவர்கள்?
இந்தியாவில் பழங்குடியினர் என்ற வார்த்தையின் நவீனப் பயன்பாடு சாதிய அடிப்படையில் வகுக்கப்பட்ட எஞ்சிய இந்திய சமூகத்தை விடுத்து அவர்களின் அடையாளத்தை விவரிப்பதைக் கட்டுப்ப்டுத்துகிறது. அவ்வப்போது தனிப்பட்ட குழுக்களைக் குறிப்பதற்காக இந்த வார்த்தைப் பெரிதும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள பழங்குடியினர் இந்திய சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். இந்திய வேளாண்மைச் சூழலுக்கு ஏற்றவாறு அவர்கள் இடம்பெயர் வேளாண்மை முறையைப் பின்பற்றினர்.
- கோல் கிளர்ச்சி
- ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய பகுதிகளிலுள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பும் ஆகிய இடங்களில் 1831 – 32ஆம் ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய பழங்குடியின கிளர்ச்சி கோல் கிளர்ச்சியாகும். இது பிந்த்ராய் மற்றும் சிங்ராய் தலைமையில் நடந்தது.
- சோட்டா நாக்பூர் பகுதியின் அரசர் வருவாய் வசூலிக்கும் பணியை வட்டிக்குப் பணம்கொடுப்போரிடம் குத்தகைக்கு விட்டிருந்தார். அதிக வட்டிக்கு கடன்கொடுத்தல் மற்றும் பழங்குடியினரைக் கட்டாயப்படுத்தி அவர்களின் பகுதிகளிலிருந்து வெளியேற்றுதல் போன்றவஒ கோல் இனத்தவரிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
- வெளியாட்களின் சொத்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்துதல், கொள்ளையடித்தல், கலவரம் செய்தல் ஆகிய வழிகளில் கோல்கலிம் தொடக்ககாலப் போராட்டம் மற்றும் எதிர்ப்புகள் அமைந்தன.
- அதனை அடுத்து வட்டிக்குப் பணம்கொடுப்போர் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேளங்களை முழங்கியும் அம்புகளை எய்தும் வெளியாட்களை வெளியேறச் செய்யும் எச்சரிக்கைகளை செய்தும் பல வகைகளில் பழங்குடியினத் தலைவர்கள் தங்கள் கிளர்ச்சி பற்றிய செய்தியைப் பரப்பினர்.
- 1831 – 32ஆம் ஆண்டில் கோல் இனத்தவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் வட்டிக்குப் பணம் கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியை நடத்தினர்.
- கோல் கிளர்ச்சியாளர்கள் அரசரின் அரண்மனையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அங்கு தங்களின் சுதந்திர அரசை உருவாக்கும் முயற்சியிலும் அவர்கள் வெற்றி பெற்றனர். ஆங்கிலேய அரசு பெரிய அளவிலான வன்முறை மூலம் இந்தக் கிளர்ச்சியை அடக்கியது.
- சாந்தலர்களின் கிளர்ச்சி
- இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் பரவலாக வாழ்ந்துவந்த சாந்தலர்கள் நிரந்தர குடியிருப்புகளின் கீழ் ஜமீன்களை உருவாக்குவதற்காக தங்கள் பூர்வீக இடத்தை விட்டு இடம்பெயரவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டதால் ராஜ்மஹால் மலையைச் சுற்றிலும் இருந்த வனப்பகுதியைவிட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர்.
- ரயில்வே கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவலர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டனர்.
- வெளியாட்களால் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்ட சாந்தலர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக வட்டிக்குப்பணம் கொடுப்போரைச் சார்ந்துவாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
- விரைவில் கடன் மற்றும் பணம்பறித்தல் ஆகிய தீய வலையில் அவர்கள் சிக்கத்தொடங்கினர்.
- மேலும், ஊழல்கறைபடிந்த ஆங்கிலேய நிர்வாகத்தின் கீழ் தங்களின் நியாயமான குறைகளுக்கு நீதி கிடைக்கமுடியாத சூழலில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக சாந்தலர்கள் உணர்ந்தனர்.
வெளிப்பாடு
- 1854ஆம் ஆண்டு வாக்கில் பல இடங்களில் சமூகக் கொள்ள நடவடிக்கைகள் பீர் சிங் என்பவரின் தலைமையில் நடந்தன. மகாஜன்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராகக் குறிவைத்து இவை நடந்தன.
- ஜமீன்தாரி நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்ட பீர்சிங் அங்கு அடித்துத் துன்புறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். மகாஜன்கள் மற்றும் வர்த்தகர்களைக் குறிவைத்து மேலும் பல கொள்ளைச் சம்பவங்களைக் குறிவைத்து மேலும் பல கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றி பீர் சிங்கும் அவரது நண்பர்களும் இதற்கு பதிலடி கொடுத்தனர். அடக்குமுறை நடவடிக்கைகள் சாந்தலர்களை மேலும் ஆத்திரமூட்டியது.
- 1855இல் சித்து மற்றும் கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் கிளர்ச்சியைத் தலைமையேற்று நடத்தவேண்டி தங்களுக்கு கடவுளிடமிருந்து தேவசெய்தி கிடைத்ததாக அறிவித்தனர்.
- அவர்கள் மகாஜன்கள் மற்றும் தரோகாக்களை (காவல்துறை அதிகாரிகளை) முற்றிலுமாக கொன்றுகுவிக்கவும், நாட்டில் வசதிபடைத்த பெங்காலிகளையும் ஜமீன்தார்கள் மற்றும் வர்த்தகர்களை அழித்தொழிக்கவும், அவர்களை அழிக்க முயன்ற அனைவரையும் அழிக்கவும், அவர்களின் எதிரிகளின் குண்டுகள் நீராக மாறிவிடும்’ என்று கடவுள் உத்தரவிட்டதாக 1855 ஜூன் 30இல் அவர்கள் தெரிவித்தனர்.
- சாந்தலர்களின் கூட்டத்தால் இரண்டு தாரோகாக்கள் (காவல்துறை அதிகாரிகள்) கொல்லப்பட்டனர்.
- 1855ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தக் கிளர்ச்சி மகாஜன்கள், ஜமீன்தாரர்கள், ஆங்கிலேய அதிகாரிகள் ஆகியோருக்கு எதிரான வெளிப்படையான கிளர்ச்சியாக உருவெடுத்தது.
- வில் மற்றும் விஷம் தடவிய அம்புகளை ஏந்தியவாறும், கோடரிகள், கத்திகள் ஆகியவற்றுடனும் ராஜ்மகால் மற்றும் பாகல்பூர் நோக்கி கம்பெனி ஆட்சிக்கு முடிவு கட்டப்போவதாக முழக்கமிட்டபடி பேரணியாகச் சென்றனர்.
- இதனையடுத்து கிராமங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த ஆங்கிலேயர் சொத்துக்களைச் சூறையாடினார்கள். இறுதியாக கிளர்ச்சி முழுமையாக ஒடுக்கப்படும் முன் கிட்டத்தட்ட 15 முதல் 25 ஆயிரம் கிளர்ச்சியான படுகொலை செய்யப்பட்டனர். இந்த நிகழ்வுகளையடுத்து பழங்குடியின மக்கள் பற்றிய தங்கள் கொள்கைகளை ஆங்கிலேய அரசு மறுசீரமைப்புச் செய்தது.
- 1855இல் சாந்தலர்கள் வசமிருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்துவது பற்றிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.
- சாந்தல் பர்கானா மண்டலம் என்ற தனி மண்டலத்தை உருவாக்கும் வகையில் இந்தச் சட்டம் நிறைவேறியது.
இ) முண்டா கிளர்ச்சி
- ராஞ்சியில் இக்காலகட்டத்தில் நடைபெற்ற உலுகுலன் கிளர்ச்சி (பெரிய கலம்) பழங்குடியினக் கிளர்ச்சிகளில் மிக முக்கியமானதாக அறியப்படுகிறது.
- கூட்டாக நிலத்தை வைத்துக்கொண்டு குண்ட்கட்டி என்ற முறையில் விவசாயம் செய்வதில் முண்டா மக்கள் பெயர்பெற்றார்கள். நிலத்துக்கான தனிச்சொத்துரிமையின் அறிமுகமும் வர்த்தகர்கள் மற்றும் வட்டிக்குப் பணம் கொடுப்போரின் ஊடுருவல் ஆகியவற்றின் காரணமாக இந்த நடைமுறை முற்றிலும் சிதைந்தது.
- தோட்டங்களில் வேலைசெய்ய முண்டா இனமக்கள் கொத்தடிமைகளாக வலுக்கட்டாயமாக பணியில் அமர்த்தப்பட்டனர். ஊழல்கறைபடிந்த காவல்துறையினர், நீதி கிடைப்பதில் சிக்கல், கிறித்தவ சமயப்பரப்பாளர்கள் தொடர்பான மாயை ஆகியன முண்டா இன மக்களின் துயரங்களை மேலும் அதிகரித்தது.
- 1890 களில் பழங்குடியின மக்களை அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து இடம்பெயரச் செய்வது மற்றும் அவர்களைக் கட்டாயத் தொழிலாளிகளாக உருவாக்குவது ஆகியவற்றை பழங்குடியினத் தலைவர்கள் எதிர்த்தனர்.
- பிர்சா முண்டா தம்மை கடவுளின் தூதர் என்று அறிவித்த உடன் இந்த இயக்கத்துக்கு ஊக்கம் கிடைத்தது.
- தமக்கு இறைத் தொடர்பு இருப்பதாகக் கூறிய பிர்சா அண்டவெளியின் அதீத சக்திகளின் மூலமாக முண்டா இன மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்போவதாகவும் மக்களின் அரசை நிறுவப்போவதாகவும் பிர்சா உறுதியளித்தார்.
- பிர்சா முண்டாவின் பிரபலத்தைப் பயன்படுத்தி மேலும் அதிக எண்ணிக்கையில் பிர்சா இன மக்களை இந்த நோக்கத்துக்காக ஒன்றிணைக்க முண்டா தலைவர்கள் முயன்றனர். இரவுக் கூட்டங்கள் பல நடத்தப்பட்டு கிளர்ச்சி ஒன்றுக்கு திட்டமிடப்பட்டது.
- 1889ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில் அவர்கள் வன்முறையை கையில் எடுத்தனர். கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கிறித்தவ தூதுக்குழுக்கள் மற்றும் கிறித்தவர்களாக மதம் மாறிய முண்டாக்கள் மீது அம்பு எறிந்து தாக்குதல்கள் நடந்தன.
- அதன் பின் காவல் நிலையங்களும் தாக்கப்பட்டன அரசு அதிகாரிகளும் தாக்கப்பட்டனர். அடுத்த சில மாதங்களுக்கு இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. இறுதியாக இந்த கிளர்ச்சி முடக்கப்பட்டது.
- 1900ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட பிர்சா முண்டா பின்னர் சிறையில் உயிர்நீத்தார்.
- பழங்குடியினரின் தலைவராக அறியப்பட்ட பிர்சா முண்டா இன்றளவும் பல நாட்டுப்புறப் பாடல்களில் போற்றப்படுகிறார்.
- இந்த முண்டா கிளர்ச்சியை அடுத்து ஆங்கிலேய அரசு பழங்குடியின நிலம் பற்றிய கொள்கையை வகுக்க முனைந்தது.
- 1908இல் சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு பழங்குடியினர் நிலத்தில் பழங்குடியினரல்லாதோர் நுழைவது தடுக்கப்பட்டது.
1857ஆம் ஆண்டின் பெருங்கலகம்
1857ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சிக்கு பெரும் சவால் ஏற்பட்டது. தொடக்கத்தில் வங்காள மாகாணத்தில் சிப்பாய் கலகமாக உருவெடுத்த இந்த கலகம் பின்னர் குறிப்பாக விவசாயிகள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்றதை அடுத்து நாட்டின் இதர பகுதிகளுக்கும் பரவியது. 1857-58ஆம் ஆண்டிகளில் நடந்த நிகழ்வுகள் கீழ்க்கண்ட காரணங்களால் முக்கியத்துவம் பெற்றன.
- இராணுவ வீரர்களுடன் ஆயுதமேந்திய படைகளும் இணைந்து நடந்த முதல் மாபெரும் புரட்சி இதுவேயாகும்.
- இருதரப்புகளிலும் தூண்டப்பட்டதால் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு கிளர்ச்சியில் வன்முறை வெடித்தது.
- கிழக்கிந்திய கம்பெனியின் பணியினை புரட்சி முடிவுக்குக் கொண்டுவந்ததுடன் இந்திய தூணைக் கண்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசு கையில் எடுத்தது.
அ) காரணங்கள்
1. ஆங்கிலேய இந்தியாவின் இணைப்புக் கொள்கை
1840 மற்றும் 1850களில் இரண்டு முக்கியக் கொள்கைகளின் மூலம் அதிக நிலப்பகுதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டன.
மேலதிகாரக் கொள்கை: ஆங்கிலேயர் தங்களை வானளாவிய அதிகாரங்கள் கொண்ட உயர் அதிகார அமைப்பாக கருதினார்கள். உள்நாட்டு ஆட்சியாளர்கள் ஊழல்வாதிகள் மற்றும் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகள் இணைக்கப்பட்டன.
வாரிசு இழப்புக்கொள்கை: அரசுக்கட்டிலில் அரியணை ஏற தமக்கு ஆண்வாரிசைப் பெற்றெடுக்க உள்நாட்டு ஆட்சியாளர்கள் தவறினால் அந்த ஆட்சியாளரது இறப்புக்குப்பின் அந்தப்பகுதி ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்படும். சதாரா, சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள், ஜான்சி மற்றும் நாக்பூர் ஆகிய இந்த வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன.
2. இந்திய கலாச்சார உணர்வுகள் பற்றிய தீவிரத்தன்மை இல்லாதது:
- ஆங்கிலேயர்களின் உள்ளார்ந்த உணர்வுகள் குறித்து மக்களுக்கு எப்போதும் சந்தேகம் இருந்துவந்தது.
- 1806ஆம் ஆண்டில் வேலூரில் சிப்பாய்கள் சமயக்குறியீடுகளை நெற்றியில் அணிவதற்கும், தாடி வைத்துக்கொள்வதற்கும், தடைவிதிக்கப்பட்டதோடு தலைப்பாகைகளுக்கு பதிலான வட்ட வடிவிலான தொப்பிகளை அணியுமாறும் பணிக்கப்பட்டனர்.
- அதனை எதிர்த்து ஆவர்கள் கிளர்ச்சி செய்தனர். இத்தகைய ஆடைக் கட்டுப்பாடுகள் சிப்பாய்களை கிறித்தவ மதத்துக்கு மாறச் செய்வதற்கான ஒரு முயற்சியாக அவர்கள் அஞ்சினார்கள்.
- அதேபோன்று 1824ஆம் ஆண்டு கல்கத்தா அருகே பாரக்பூரில் சிப்பாய்கள் கடல்வழியாக பர்மா செல்ல மறுத்தனர். கடல் கடந்து சென்றால் தங்களது சாதியை இழக்க நேரிடும் என்று அவர்கள் நம்பினார்கள்.
- ஊதியம் மற்றும் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்படுவது குறித்தும் சிப்பாய்கள் கவலை அடைந்தனர்.
- ஐரோப்பிய சிப்பாய்களுடன் ஒப்பிடுகையில் இந்திய சிப்பாய்களுக்கு மிகக்குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்பட்டது.
- அவர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டதோடு மூத்த படையினரால் இனக் குறியிடப்பட்டு அவமதிக்கப்பட்டார்கள்.
ஆ) கலகம்
- புதிய என்ஃபீல்டு துப்பாக்கிக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் பற்றிய வதந்திகள் புரட்சிக்கு வித்திட்டது.
- பசு மற்றும் பன்றிக் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பசை (கிரிஈஸ்0 இத்தகைய புதிய குண்டு பொதியுறையில் (காட்ரிட்ஜ்களில்) பயன்படுத்தப்பட்டதாக சிப்பாய்கள் பெரிதும் சந்தேகம் கொண்டனர்.
- அவற்றை நிரப்பும் முன் அதை வாயால் கடிக்கவேண்டி இருந்தது (இந்துக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு பசு புனிதம் வாய்ந்ததாகவும், முஸ்லிம்களுக்கு பன்றி இறைச்சி தடை செய்யப்பட்ட உணவாகவும் இருந்தது).
- மார்ச் 29ஆம் தேதி மங்கள் பாண்டே என்ற பெயர் கொண்ட சிப்பாய் தனது ஐரோப்பிய அதிகாரியைத் தாக்கினார்.
- கைது செய்ய உத்தரவிட்டும் அவரது சக சிப்பாய்கள் மங்கள் பாண்டேவை கைது செய்ய மறுத்துவிட்டனர்.
- மங்கள் பாண்டேயும் வேறும் பலரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். இதனால் ஆத்திரம் அதிகரித்து அதனையடுத்து வந்த நாட்களில் கீழ்ப்படிய மறுத்தல் போன்ற பல நிகழ்வுகள் அதிகரித்தன.
- கலவரம், பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது ஆகியன அம்பாலா, லக்னோ, மீரட் ஆகிய ராணுவக் குடியிருப்புப் பகுதிகளில் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாயின.
இந்துஸ்தானத்தின் மாமன்னராக பகதூர் ஷா அறிவிக்கப்படுதல்
- 1857மே மாதம் 11இல் மீரட்டில் இருந்து தில்லி செங்கோட்டை நோக்கி ஒரு குழுவாக சிப்பாய்கள் அணிவகுத்துச் சென்றனர்.
- சிப்பாய்கள் போன்று அதே அளவு ஆர்வமிக்க கூட்டமும் முகலாய மாமன்னர் இரண்டாம் பகதூர் ஷா தங்கள் தலைவராக வேண்டும் என்று கோருவதற்காக அங்கு குழுமியது.
- பெரும் தயக்கங்களுக்குப் பிறகு இரண்டாம் பகதூர் ஷா இந்துஸ்தானத்தின் (ஷாஹின்ஷா இ-ஹிந்துஸ்தான்) மாமன்னராக பதவியேற்றார்.
- அதனை அடுத்து விரைவாக வடமேற்கு மாகாணம் மற்றும் அயோத்தி பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினார்கள். தில்லி வீழ்ச்சி அடைந்தது பற்றிய செய்தி கங்கை நதிப்பள்ளத்தாக்கை எட்டியவுடன், ஜூன் மாதத் தொடக்கம் வரை ஒவ்வொரு இராணுவக் குடியிருப்பு பகுதியிலும் கிளர்ச்சிகள் நடந்தன.
- வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப் மற்றும் வங்காளத்தைத் தவிர ஆங்கிலேய ஆட்சி காணாமல் போனது.
உள்நாட்டு கிளர்ச்சி
- வட இந்தியாவின் பாதிக்கப்பட்ட கிராம சமீகத்தில் வாழ்ந்த மக்களும் இந்த கிளர்ச்சிக்கு சரிசமமாக ஆதரவு தெரிவித்தனர். ஆங்கிலேய ராணுவத்தில் வேலை பார்த்த சிப்பாய்கள் உண்மையில் சீருடையில் இருந்த விவசாயிகள் ஆவர்.
- வருவாய் நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டதில் அவர்களும் சமமான பாதிப்புகளை அடைந்தனர்.
- சிப்பாய் கலகமும் அதனை அடுத்து இந்தியாவின் பல பகுதிகளில் நடந்த உள்நாட்டு கிளர்ச்சியும் ஊரகப் பகுதிகளுடன் இணைப்பைக் கொண்டவையாகும்.
- வடமேற்கு மாகாணங்கள் மற்றும் அயோத்தியின் பகுதிகளில் இந்த முதலாவது உள்நாட்டு கிளர்ச்சி வெடித்தது. இந்த இரண்டு பகுதிகளில் இருந்துதான் சிப்பாய்கள் முக்கியமாகப் பணியில் சேர்க்கப்பட்டனர்.
- பெரும் எண்ணிக்கையிலான ஜமீன்தார்களும் தாலுக்தார்களும் ஆங்கிலேய அரசின் கீழ் பல சலுகைகளை இழந்த காரணத்தால் கிளர்ச்சி நோக்கி ஈர்க்கப்பட்டனர்.
- தாலுக்தார்-விவசாயக் கூட்டணி என்பது தாங்கள் இழந்ததை மீட்கும் ஒரு பொது முயற்சியாகக் கருதப்பட்டது. அதேபோன்று, பல இந்திய மாநிலங்களில் ஆட்சியாளர்கள் பட்டத்தைத் துறக்க நேரிட்டதால் அவர்களால் ஆதரிக்கப்பட்ட கைவினைக்கலைஞர்களும் சரிசமமாக அவதியுற்றனர்.
- ஆங்கிலேயப் பொருட்களால் இந்தியக் கைவினைப் பொருட்கள் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் வேலை இழந்தனர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஒட்டுமொத்த ஆத்திரம் கிளர்ச்சியாக வெடித்தது.
பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிய முக்கியப் போராட்ட வீரர்கள்
- பாதிக்கப்பட்ட அரசர்கள், நவாபுகள், அரசிகள், ஜமீன்தார்கள் ஆகியோர் ஆங்கிலேயருக்கு எதிரான தங்கள் ஆத்திரத்தைப் பயன்படுத்திக்கொள்ள இந்தக் கிளர்ச்சி ஒரு மேடையை அமைத்துக்கொடுத்தது.
- கடைசி பேஷ்வா மன்னரான இரண்டாவது பாஜிராவின் தத்துப்பிள்ளையான நானா சாகிப், கான்பூர் பகுதியில் இந்த கிளர்ச்சிக்கி தலைமைதாங்கினார். அவருக்கு ஓய்வூதியம் தர கம்பெனி மறுத்துவிட்டது.
- அதேபோன்று, லக்னோவில் பேகம் ஹஸ்ரத் மகால், பரேலியில் கான் பகதூர் ஆகியோர் தத்தமது பகுதிகளில் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.
- ஒருகாலத்தில் இந்தப் பகுதிகள் அவர்களாலோ அல்லது அவர்களுடைய மூதாதையர்களாலோ ஆளப்பட்டவையாகும்.
- இந்தக் கிளர்ச்சியின் மற்றொரு முக்கிய தலைவராக ஜான்சியின் ராணி லட்சுமிபாய் திகழ்ந்தார். அவரது விஷயத்தில், வங்காளத்தின் தலைமை ஆளுநரான டல்ஹௌசி பிரபு, லட்சுமிபாயின் கணவர் மறைந்த பிறகு அவரது வாரிசாக ஒரு ஆண்பிள்ளையை தத்து எடுத்துக்கொள்ள அனுமதி தர மறுத்துவிட்டதால் வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் அவரது அரசு ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்டது.
- சக்திவாய்ந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரைத் துவக்கிய ராணி லட்சுமிபாய் தாம் வீடும் வரை ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார்.
- பகதூர் ஷா ஜாபர், கன்வர் சிங், கான் பகதூர், ராணி லட்சுமிபாய் மற்றும் தங்கள் சுயதேவைக்காக பலரும், ஆங்கிலேய ஆட்சியை ஏற்கமறுத்த சிப்பாய்களின் வீரதீரத்தால் நிர்ப்பந்திக்கப்பட்ட பலரும் இவர்களில் அடங்குவர்.
- 1857ஆம் ஆண்டு கிளர்ச்சியின் முக்கிய அத்தியாயமாக இருப்பது கான்பூர் முற்றுகையாகும். கான்பூரில் சுற்றிவளைக்கப்பட்ட கம்பெனிப் படைகளும் இரானுவ வீரர்களும் நீட்டிக்கப்பட்ட சுற்றிவளைப்புக்குத் தயாராக இல்லாததால் நானாசாகிப் தலைமையிலான கிளர்ச்சிப் படைகளின் கீழ் சரணடைந்தனர். அவர்கள் அலகாபாத்துக்கு திரும்பிச்செல்ல பாதுகாப்பான வழி அமைக்கப்பட்டது. அவர்கள் பயணம் செய்த படகுகள் தீயிடப்பட்டு எரிக்கப்பட்டு அதனை அடுத்து கான்பூர் தளபதி மேஜர் ஜெனரல் ஹக் வீலர் உள்பட பெரும்பாலும் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
இ) கிளர்ச்சி அடக்கப்படுதல்
- 1857ஆம் ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் தில்லி, மீரட், ரோகில்கண்ட், ஆக்ரா, அலகாபாத் மற்றும் பனாரஸ் ஆகிய மண்டலங்களின் படைகள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு கடுமையான ராணுவச்சட்டம் அமல்படுத்தப்பட்டது.
- சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்காமல் இந்தியர்களின் வாழ்க்கை பற்றி முடிவெடுத்து அவர்களின் வாழ்வைப் பறிக்கும் அதிகாரம் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
- 1858ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்த லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தியாளர் வில்லியம் ஹோவர்ட்ரஸ்ஸல், அலகாபாத்திலிருந்து கான்பூர் வரை கர்னல் நீலின் ஆணைகளின்படி சென்ற படையின் ஒரு பகுதியாகத் திகழ்ந்த ஒரு அதிகாரியை சந்தித்துப் பேசினார்.
- இந்தப் பேரணியில் கலந்துகொண்ட இரண்டு நாட்களில் 42 பேர் சாலை ஓரத்தில் தூக்கிலிடப்பட்டதாகவும் மேலும் படைகள் அணிவகுத்துச் செல்லும்போது எதிர்ப்பட்ட 12 நபர்களைக் கொண்ட குழுவினரின் முகபாவம் ஏளனத்தையும், வெறுப்பையும் காட்டுவதாக இருந்ததால் அவர்களும் கொல்லப்பட்டனர்.
- விளையாட்டாக கலகக்காரர்களின் கொடிகளை அசைத்தும், தமுக்கடித்தும் சிறுவர்களைக் கூட விட்டுவைக்கவில்லை என அதிகாரி எடுத்துரைத்தார். கண்ணில் தென்பட்ட ஒவ்வொரு இந்தியரும் சுடப்பட்டு அல்லது சாலையோரம் வரிசையாக நடப்படிருந்த மரங்களில் தூக்கிலிடப்பட்டனர், கிராமங்கள் தீக்கிரையாகின.
ஈ) தோல்விக்கான காரணங்கள்
- 1857ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது மற்றும் திட்டமிடப்பட்டது என்பதை நிரூபிக்க எந்தவித ஆதாரமும் இல்லை. அது தானாக நடந்தது.
- ஆனால் தில்லி முற்றுகை இடப்பட்ட பிறகு அண்டை மாநிலங்களின் ஆதரவைப்பெற முயற்சி மேற்கொள்லப்பட்டது. மேலும் ஒருசில இந்திய மாநிலங்களைத் தவிர, இந்தக் கிளர்ச்சியில் பங்கேற்க இந்திய இளவரசர்களிடம் பொதுவாக ஆர்வம் குறைந்து காணப்பட்டது.
- காலனி அரசுக்கு விசுவாசமாக அல்லது ஆங்கிலேய அதிகாரத்தை அறிந்து அச்சப்பட்டு இந்திய அரசர்களும் ஜமீன்தார்ளும் ஒதுங்கியிருந்தனர்.
- பெரும்பாலும் அவர்கள் ஐந்தாம் படையாக செயல்பட்டனர். கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களும் குறைந்த அளவே ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கிடைத்தோ அல்லது கிடைக்காமலோ இருந்தனர். ஆங்கில அறிவு பெற்ற நடுத்தர வகுப்பும் கிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
- மத்திய தலைமை இல்லாததும் கிளர்ச்சி தோல்வியடைய முக்கிய காரணமாக அமைந்தது. தனிநபர்கள், இந்திய அரசர்கள் மற்றும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக சண்டையிட்ட பல்வேறு சக்திகளை ஒன்றிணைக்கப் பொதுவான செயல்திட்டம் ஏதுமில்லாமல் போனது.
- இறுதியில் ஆங்கிலேய ராணுவம் கிளர்ச்சியை கடுமையாக ஒஃபுக்கியது. ஆயுதங்கள் கிடைக்கப்பெறாமை, அமைப்பாற்றல் இன்மை, ஒழுக்கமின்மை, உதவியாளர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டது ஆகிய காரணங்களால் கிளர்ச்சித் தலைவர்கள் தோல்விஅடைந்தனர்.
- 1857ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தில்லி ஆங்கிலேய துருப்புகளால் கைப்பற்றப்பட்டது. சிறைபிடிக்கப்பட்ட பகதூர் ஷா பர்மாவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஈ) இந்தியா ஆங்கிலேய அரசுக் காலனியாக மாறுதல்
- 1857ஆம் ஆண்டின் நிகழ்வுகளை அறிந்து ஆங்கிலேயர் அதிர்ந்தனர். 1858ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசு சட்டம் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாடாளுமன்றத்தால் நேரடியாக ஆட்சி அதிகாரம் செலுத்தப்படும் ஆங்கிலேய அரசின் காலனிகளில் ஒன்றாக இந்தியா அறிவிக்கப்பட்டது.
- அமைச்சரவை உறுப்பினர் ஒருவரிடம் பொறுப்பு வழங்கப்பட்டது அவர் இந்தியாவுக்கான அரசுச் செயலராக பதவி வகிப்பார்.
- கிழக்கு இந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டித் அரச குடும்பத்திற்கான அதிகாரப்பகிர்வு , இந்திய விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற கண்காணிப்பு நிரந்தரமாக இருந்ததை வெளிப்படுத்தியது.
நிர்வாகத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள்
- 1857ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டிஷ் ஆட்சியும் அதன் கொள்கைகளும் பெரிய அளவில் மாற்றங்களைச் சந்தித்தன. சமூக சீர்திருத்தம் தொடர்பான விஷயத்தில் பிரிட்டிஷ் அரசு எச்சரிக்கை மிகுந்த அணுகுமுறையைக் கொண்டது.
- இந்திய மக்களுக்கு விக்டோரியா அரசியார் செய்த அறிவிப்பில், பாரம்பரிய நிறுவனங்கள் மற்றும் மதம் தொடர்பான விஷயங்களில் ஆங்கிலேய அரசு தலையிடாது என்று தெரிவித்தார்.
- அரசுப்பணிகளில் இந்தியர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் உறுதிமொழி கூறப்பட்டது. இந்திய ராணுவத்தின் கட்டமைப்பில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
- இந்தியர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டது. முக்கியமான பதவிகள் மற்றும் பொறுப்புகள் வகிப்பதிலிருந்து இந்தியர்கள் விலக்கி வைக்கப்பட்டனர். காலாட்படையின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்ட ஆங்கிலேயர், அவற்றுக்கு ஆளெடுக்கும் முயற்சியை இதர பகுதிகளுக்கும் 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சியின்போது ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்த சமூகங்களுக்கும் மாற்றினார்கள்.
- உதாரணமாக ராஜபுத்திரர்கள், பிராமணர்கள் வடைந்திய மூஸ்லிம்கள் ஆகியோரை விலக்கி வைக்கப்பட்டனர். காலாட்படையின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்ட ஆங்கிலேயர், அவற்றுக்கு ஆளெடுக்கும் முயற்சியை இதர பகுதிகளுக்கும் 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சியின்போது ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்த சமூகங்களுக்கும் மாற்றினார்கள்.
- உதாரணமாக ராஜபுத்திரர்கள், பிராமணர்கள், வட இந்திய முஸ்லிம்கள் ஆகியோரை விலக்கி வைத்த ஆங்கிலேயர் கூர்க்காக்கள் , சீக்கியர்கள், பதான்கள் போன்ற இந்து அல்லாத குழுக்களுய்க்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
- இவற்றுடன், இந்திய சமூகத்தின் சாதி, மதம், மொழி மற்றும் மண்டலம் ஆகியன சார்ந்த வேறுபாடுகளை ஆங்கிலேயர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதையடுத்து அது ‘பிரித்தாளும் கொள்கை’ என்று அறியப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் விவசாயிகளின் கிளர்ச்சிகள்
அ) கருநீலச்சாய (இண்டிகோ) கீளர்ச்சி 1859 – 1860
- செயற்கை நீலச்சாயம் உருவாக்கப்படும் முன் இயற்கையான கருநீலச்சாயம் உலகம் முழுவதும் இருந்த ஆடை தயாரிப்பாளர்களால் பெரிதும் மதித்துப் போற்றப்பட்டது.
- பல ஐரோப்பியர்கள் இந்தியாவில் இண்டிகோ தோட்டக்காரர்களாக மாறுவதன் மூலம் தங்கள் செல்வத்தை ஈட்ட முயன்றனர். அவர்கள் இண்டிகோ பயிரிட இந்திய விவசாயிகளை பணியில் அமர்த்தினார்கள்.
- பின்னர் அது சாயமாக தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு அந்த சாயம் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
- 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா பிரிட்டனுக்கு அதிக அளவில் பெரும்பான்மையாக நீலச்சாயத்தை அனுப்பிவைத்தது. இந்த முறையானது அடக்குமுறை சார்ந்ததாக இருந்தது. விவசாயிகள் இந்தப் பயிரை முகவர்கள் பயிரிடுவோருக்கு நிலத்துக்கான வாடகை மற்றும் இதர செலவுகளை சமாளிப்பதற்காக, ரொக்கப்பணத்தை முன்பணமாகக் கொடுத்து உதவினர்.
- ஆனால் இந்த முன்பணம் வட்டியுடன் திரும்பச் செலுத்தப்படவேண்டும். உணவு தானியப் பயிர்களுக்குப் பதிலாக இண்டிகோ பயிரைப் பயிரிட விவசாயிகள் வற்புறுத்தப்பட்டனர்.
- பருவத்தின் இறுதியில் இண்டிகோ பயிருக்கு மிகக்குறைந்த விலையையே விவசாயிகளுக்கு ஆங்கிலேய முகவர்கள் கொடுத்தனர்.
- இந்த குறைந்த தொகையைக் கொண்டு தாங்கள் வாங்கிய முன்பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாது என்பதால் அவர்கள் கடனில் மூழ்கினர். எனினும், லாபம் கிடைக்காத நிலையிலும், மீண்டும் இண்டிகோ பயிரை பயிரிடும் மற்றொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் மீண்டும் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
- விவசாயிகளால் தாங்கள் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியவே இல்லை. தந்தை வாங்கிய கடன்கள் அவரது மகன் மீதும் சுமத்தப்பட்டன.
- இண்டிகோ கிளர்ச்சி 1859ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தக் கிளர்ச்சி ஒரு வேலைநிறுத்த வடிவில் தொடங்கியது.
- வங்காளத்தின் நடியா மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இனி இண்டிகோ பயிரிடப்போவதில்லை என மறுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த இயக்கம் இண்டிகோ பயிரிடப்பட்ட வங்காளத்தின் இதர மாவட்டங்களுக்கும் பரவியது. இந்தக் கிளர்ச்சி பின்னர் வன்முறையாக வெடித்தது.
- இந்து மற்றும் முஸ்லிம் விவசாயிகள் இந்தக் கிளர்ச்சியில் பங்கேற்றனர். குடங்கள் மற்றும் உலோகத்தட்டுக்களை ஆயுதங்களாக ஏந்தியபடி பெண்களும் ஆடவரோடு இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
- ஆங்கிலேய முகவர்களின் கொடுமைகள் குறித்து கல்கத்தாவில் வாழ்ந்த அப்போதைய இந்திய பத்திரிக்கையாளர்கள் எழுதினார்கள்.
- நீல் தர்ப்பன் (இண்டிகோவின் கண்ணாடி) என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை தீன பந்தி மித்ரா எழுதினார்.
- இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் வாழ்ந்த மக்களிடையே இண்டிகோ விவசாயிகள் குறித்த பிரச்சனைகளை கவனத்தில் கொண்டுவர இந்த நாடகம் பயன்பட்டது.
- இண்டிகோ விவசாயம் வங்காளத்தில் பெரும் வீழ்ச்சி கண்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்கையான இண்டிகோ சாயத்துக்கான தேவைகள் சரிந்து உலகம் முழுவதும் செயற்கையான நவீன நீலச்சாயங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.
ஆ) தக்காண கலவரங்கள் 1875
- பிரிட்டனின் அரச குடும்பத்துக்கு அதிகாரங்கள் மாற்றம் பெற்ற பிறகு தொழில்களின் சரிவு காரணமாக தொழிலாளர்கள் நிலத்தை இழக்க நேரிட்டது.
- அதிக அளவிலான வரி விதிப்பு வேளாண்மையைப் பாதித்தது. பஞ்சத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்தன.
- 1875ஆம் ஆண்டு மே மாதத்தில் தக்காணத்தில் வட்டிக்குப் பணம் வழங்குவோருக்கு எதிரான கலவரங்கள் பூனா அருகே உள்ள சூபா என்ற கிராமத்தில் முதன்முதலாக வெடித்ததாகப் பதிவாகியுள்ளது.
- பூனா மற்றும் அகமதுநகர் ஆகிய பகுதிகளில் சுமார் 30 கிராமங்களில் இதே போன்ற கலவரங்கள் ஏற்பட்டதாகப் பதிவாகியது.
- குஜராத்தில் வட்டிக்குப் பணம் வழங்குவோரை குறிவைத்துதான் இந்த கலவரங்கள் பெரும்பாலும் அரங்கேறின. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் விவசாயிகள் நேரடியாக வருவாயை அரசுக்கு செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
- மேலும் புதிய சட்டப்படி எந்த நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கப்பட்டதோ அந்த நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கப்பட்டதோ அந்த நிலத்தை எடுத்துக்கொண்டு ஏலம் விட்டு கடன் தொகையை எடுத்துக்கொள்ள கடன்வழங்கியோருக்கு அனுமதி கிடைத்திருந்தது.
- இதன் விளைவாக உழும் வர்க்கத்திடமிருந்து நிலம் உழாத வர்க்கத்திடம் கைமாறத் தொடங்கியது.
- கடன் என்னும் மாய வலையில் சிக்கிய விவசாயிகள் நிலுவைத் தொகையைச் செலுத்த இயலாமல் பயிரிடுதலையும் விவசாயத்தையும் கைவிட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
- மானிடவியலாளர் கேத்லீன் கௌ கூறும் தகவலின்படி, ஆங்கிலேய ஆட்சி விவசாயிகள் மத்தியில் முகலாயர்களின் காலத்தில் இருந்ததை விட வேதனை மற்றும் இடர்ப்பாடுகளைக் கொண்டுவந்தது.
- விவசாயிகளின் பிரச்சனைகள் பல வகைகளில் பல அளவுகளில் உள்ளூர் கலவரங்களில் தொடங்கி போர் போன்ற நிலவரங்கள் வரை பல மாவட்டங்களில் பரவி ஆங்கிலேய ஆட்சியின் முதல் காலாண்டுகளில் கடும் விளைவுகளைச் சந்தித்துப் பின்னர் 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நீடித்தது என ரனஜித் குகா குறிப்பிடுகின்றார்.
இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்படுதல் (1870 – 1885)
அ) தேசியத்தின் எழுச்சி
- 19ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் ஆங்கிலக்கல்வி பெற்ற இந்தியர்களின் புதிய சமூக வகுப்பினர் மத்தியில் தேசிய அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.
- பல்வேறு பிரச்சாரங்கள் மூலமாக தேசம், தேசியம் மற்றும் பல்வேறு மக்களாட்சியின் உயர்ந்த இலட்சியங்கள் பற்றிய கருத்துக்களை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய பணியை இந்திய அறிவாளர்கள் மேற்கொண்டனர்.
- குடியுரிமை, நாடுபற்றிய கருத்து, குடியியல், சமூகம், மனித உரிமைகள், சட்டத்துக்கு முன் சமம், சுதந்திரம், அரசு மற்றும் தனியார் பற்றிய புரிதல் , இறையாண்மை, மக்களாட்சி மற்றும் இதர விஷயங்களின் நவீன எண்ணங்களை அவர்கள் தெளிவுபடுத்தினர்.
- வட்டார மொழி மற்றும் ஆங்கில அச்சு ஊடகங்களின் வளர்ச்சி இது போன்ற கருத்துகளைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றியது.
- எண்ணிக்கையில் அவர்கள் குறைவாக இருந்தாலும் தேசிய அளவிலான வீச்சைக் கொண்டு அகில இந்தியா முழுவதும் தொடர்புகளை உருவாக்கும் திறன் பெற்றிருந்தனர்.
- அவர்கள் வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அல்லது மருத்துவர்களாக பணியாற்றினார்கள்.
- சென்னைவாசிகள் சங்கம் (1852), கிழக்கிந்திய அமைப்பு (1866), சென்னை மகாஜன சபை (1884), பூனா சர்வஜனிக் சபை (1870), பம்பாய் மாகாண சங்கம் (1885) மற்றும் பல அரசியல் அமைப்புகளைத் தொடங்குவதில் அவர்கள் முனைப்பு காட்டினார்கள்.
- ஆங்கிலக் கல்வி பயின்று மேற்கத்தியக் கருத்துகள் பற்றிய சிந்தனையும் நவீன மதிப்புகள் மற்றும் நிறுவனங்களில் வலுவான நம்பிக்கையும் கொண்ட இந்தியர்களின் கனவுகளை நசுக்கும் வகையில் தங்கள் கொள்ஐகளை ஆங்கிலேயர் நடைமுறைப்படுத்தினார்கள்.
- எனினும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட தேசிய எழுச்சி மக்களிடையே இந்தியாவின் கடந்த கால சிறப்புகளையும் பெருமைகளையும் கொண்டாடும் நோக்கில் ஆழமாக வேரூன்றவும் மக்களிடையே தேசப்பற்றை உருவாக்கவும் பல்வேறு சமய மற்றும் கலாச்சார அடையாளங்கள் அதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
ஆ) காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனம்
- காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தை உருவாக்குவதே தொடக்ககால இந்திய தேசியவாதிகளின் பங்களிப்புகளில் முக்கியமான ஒன்றாக இருந்தது.
- இந்தியா பொருளாதார ரீதியாக கட்டுப்படுத்தப்பட்டதோடு பிரிட்டனின் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை அனுப்பும் ஒரு அனுப்புனராக இந்தியா மாற்றம் பெற்றது.
- ஒரே நேரத்தில் பிரிட்டிஷாரின் மூலதனத்தை முதலீடு செய்யவும், ஆங்கிலேய உற்பத்திப் பொருட்களை கொண்டுசேர்க்கும் ஒரு சந்தையாகவும் இந்தியா உருவானது.
- இந்தியாவுக்கு எந்தவித ஆதாயமுமின்றி இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்குத் தொடர்ந்து வளங்களைப் பரிமாற்றம் செய்யும் விதமாக காலனி ஆட்சியின் கீழ் பொருளாதாரம் அமைந்தது. இதுவே வளங்களின் சுரண்டலாக (செல்வச் சுரண்டல்) அறியப்பட்டது.
- தாதாபாய் நௌரோஜி, நீதிபதி ரனடே மற்றும் ரொமேஷ் சந்திர தத் ஆகியோர் காலனி ஆட்சியின் பொருளாதாரம் பற்றிய இந்த விமர்சனத்தைச் செய்வதில் முக்கியப் பங்காற்றினார்கள்.
- இந்தியாவை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அடக்கி ஆள்வதுதான் பிரிட்டிஷாரின் வளத்துக்கு அடிப்படையானது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்தனர்.
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காலனி ஆதிக்கமே முக்கியத் தடையாக உள்ளதென்று அவர்கள் முடிவு செய்தனர்.
இ) குறிக்கோள்கள் மற்றும் வழிமுறைகள்
- ஒரு அகில இந்திய அமைப்பை உருவாக்க முனைந்ததன் விளைவாக 1885ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது.
- பம்பாய், மதராஸ், கல்கத்தா ஆகிய மூன்று மாகானங்களிலும் அரசியல் ரீதியாக தீவிரம் காட்டிய கல்வி அறிவு பெற்ற இந்தியர்களின் குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை உருவாக்க A.O.ஹியூம் தமது சேவைகளை வழங்கினார்.
- இந்திய தேசிய காஸ்கிரசின் முதல் (1885) தலைவராக உமேஷ் சந்திர பானர்ஜி இருந்தார்.
- 1885 டிசம்பர் 28இல் இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வு நடைபெற்றது. தேசிய ஒற்றுமை குறித்த உணர்வுகளை ஒருங்கிணைப்பதே காங்கிரசின் ஆரம்பகால முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தாலும் பிரிட்டனுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளவும் உறுதி மேற்கொண்டது.
- பிரிட்டனுடம் மேல்முறையீடுகள் செய்வது, மனுக்களைக் கொடுப்பது, அதிகாரப் பகிர்வு ஆகியவற்றை ஆங்கிலேய அரசு உருவாக்கிய அரசியல்சாசன கட்டமைப்பிற்குள் செய்வது உள்ளிட்ட வழிமுறைகளை காங்கிரஸ் பின்பற்றியது. கீழ்க்கண்டவை சில முக்கிய கோரிக்கைகள் ஆகும்.
- மாகாண மற்றும் மத்திய அளவில் சட்டமேலவைகளை உருவாக்குவது.
- சட்டமேலவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது.
- நிர்வாகத்துறையிலிருந்து நீதித்துறையைப் பிரிப்பது.
- இராணுவச் செலவுகளைக் குறைப்பது
- உள்நாட்டு வரிகளைக் குறைப்பது.
- நீதிபதி மூலமாக விசாரணையை விரிவுசெய்வது
- ஒரே நேரத்தில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஆட்சிப்பணித் தேர்வுகளை நடத்துவது.
- காவல்துறை சீர்திருத்தங்கள்.
- வனச்சட்டத்தை மறுபரிசீலனை செய்தல்.
- இந்தியத் தொழிற்சாலைகளின் மேம்பாடு மற்றும் முறையற்ற கட்டணங்கள் மற்றும் கலால் வரிகளை முடிவுக்குக் கொண்டுவருவது.
இந்திய சமூகத்தின் உயரடுக்குகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களிடையே உள்ள ஆர்வங்களில் இடைவெளி அதிகமாக இருப்பதை இவை காட்டுகின்றன.
வறுமை பற்றிய கேள்வி
இந்தியாவில் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கும் வறுமை அதிகரிப்பதற்கும் பொருளாதாரச் சுரண்டலே முக்கியக் காரணம் என்று தொடக்ககால காங்கிரஸ் தலைவர்கள் நம்பினார்கள். இந்தியாவில் தொழில்மயமாக்கல் நிகழவேண்டுமென்று தொடக்ககால இந்திய தேசியவாதிகள் அறிவுறுத்தினார்கள்.
ஈ) தீவிர தேசியவாதம்
- தொடக்ககால இந்தியா தேசியவாதிகளின் மிதவாத கோரிக்கைகள் தொடர்பான ஆங்கிலேயர்களின் அணுகுமுறை குறிப்பிடத்தக்க அளவில் மாறவில்லை என்பதால் மித தேசியவாத தலைவர்களின் திட்டங்கள் தோல்விகண்டன.
- “தீவிர தேசியவாதிகள்” என்று அழைக்கப்பட்ட தலைவர்களின் குழுவால் இவர்கள் விமர்சிக்கப்பட்டனர். மனுக்கள் மற்றும் கோரிக்கைகள் கொடுப்பதை விட , உயரடுக்கு மக்கள் மற்றும் பொதுமக்களிடையே இருந்த இடைவெளியைக் குறைப்பதற்கு இந்தத் தீவிர தேசியவாதிகள் சுய உதவியில் அதிக கவனம் செலுத்தியதோடு சமய அடையாளங்களையும் பயம்ன்படுத்தினர்.
- சுரண்டல்வாத ஆங்கிலேயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு தீவிரத்தன்மைகொண்ட நேரடி செயல்திட்டங்கள் தேவை என்று பிரச்சாரம் செய்தவர்களுக்கு வங்கப் பிரிவினை ஒரு உந்துதலாக அமைந்தது.
வங்கப் பிரிவினை
- 1899இல் இந்தியாவின் அரசப் பிரதிநிதியாக (வைஸ்ராய்) கர்சன் பிரபு நியமிக்கப்பட்டார். இந்திய அறிவாளர்கள் மூலமாக பஞ்சம் மற்றும் பிளேக் பிரச்சனைகளைக் கையாள்வதை விடுத்து உள்ளாட்சி அமைப்பு, உயர் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி ஆகியவற்றைக் குறைத்து மதிப்பிடுவது மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தைத் தடுப்பது ஆகிய அடக்கி ஆளும் நடவடிக்கைகளை கர்சன் பிரபு கையாண்டார்.
- 1905ஆம் ஆண்டின் வங்கப் பிரிவினை மிகவும் அதிருப்தியைச் சம்பாதித்த நிகழ்வாகும். இந்தியா முழுவதும் விரிவான போராட்டங்கள் பரவ இந்தப் பிரிவினை வழிவகுத்ததன் மூலம் இந்திய தேசிய இயக்கத்துக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்கியது.
- இந்துக்கள் , முஸ்லிம்கள் இடையே பிளவை உருவககி வங்காளத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அரசியல் நடவடிக்கைகளை அடக்க வங்கப்பிரிவினை வகுக்கப்பட்டது.
அ) இந்து –முஸ்லிம் பிரிவினை
- வங்காளிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதே வங்கப் பிரிவினைக்கான நோக்கம் என்று வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டது.
- வங்காளத்தைப் பிரித்து இரண்டு நிர்வாகப் பிரிவுகளின் கீழ் வைத்ததன்மூலம் வங்காள மொழி பேசும் மக்களை ஒரு மொழிசிறுபான்மையினர் என்ற தகுதிக்கு கர்சன் பிரபு குறைத்துவிட்டார்.
- முகலாயர்களின் ஆட்சிக்காலங்களில் கூட அனுபவிக்காத ஒற்றுமையை முஸ்லிம்கள் கிழக்கு வங்காளம் என்ற புதிய மாகாணத்தில் அனுபவிப்பார்கள் என்று கர்சன் உறுதியளித்தார்.
- மத அடிப்படையில் வங்காள மக்களைப் பிரிக்க நினைத்த பிரிவினைச் செயலானது அவர்களைப் பிரிப்பதற்குப் பதிலாக ஒன்றிணைத்தது.
- வங்காள அடையாளத்தை உணர்வுப் பெருமையுடன் உருவாக்க வட்டார மொழிப் பத்திரிகைகளின் வளர்ச்சி பெரும் பங்காற்றியது.
ஆ) பிரிவினைக்கு எதிரான இயக்கம்
- பிரிவினை பற்றி யோசனை கூறப்பட்ட நிலையிலேயே அதனை மித தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய இரு பிரிவு தலைவர்கள் குழுக்களும் விமர்சனம் செய்தன.
- ஆரம்பகாலப் பிரிவினைவாத எதிர்ப்பு பிரச்சாரம் இங்கிலாந்தில் பொதுக்கருத்தை மாற்றும் குறிக்கோளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதனால் வேண்டுகோள்கள், செய்திப்பிரச்சாரங்கள், மனுக்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றின் மூலமாகப் பிரிவினைக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். எனினும் விரிவான ஆர்ப்பாட்டங்கள் நடந்தபோதிலும் 1905 ஜூலை 19இல் வங்கப் பிரிவினை அறிவிக்கப்பட்டது.
- வங்கப் பிரிவினையை தடுக்கத் தவறிய மித தேசியவாதத் தலைவர்கள், தங்களுடைய உத்திகள் பற்றி மறு சிந்தனைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஆர்ப்பாட்டங்களுக்கு புதிய வழிமுறையையும் அவர்கள் தேடத் தொடங்கினார்கள், பிரிட்டிஷ் பொருட்களை புறக்கணிப்பது அவற்றில் ஒரு முறையாகும்.
- எனினும் சுதேசி இயக்கத்தின் கொள்கை வங்கப் பிரிவினையைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்வதில் இன்னமும் கட்டுப்பட்டிருந்தது. முழுமையான மறைமுக எதிர்ப்பைத் துவங்ங்குவதற்கு பிரச்சாரத்தைப் பயன்படுத்த மித தேசியவாதிகள் வங்காளத்தை தாண்டி இந்த இயக்கத்தை விரிவு செய்வதற்கு மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் போராட்டத்தைத் துவங்க ஆதரவாக இருந்தனர்.
- 1905 அக்டோபர் 16இல் வங்காளம் அதிகாரப்பூர்வமாகப் பிரிவினையானபோது அந்தநாள் துக்கநாளாக அறிவிக்கப்பட்டது.
- ஆயிரக்கணக்கானவர்கள் கங்கை நதியில் புனித நீராடியதோடு வந்தே மாதரம் பாடலை பாடியபடி கல்கத்தாவின் சாலைகளில் அணிவகுத்துச் சென்றார்கள்.
இ) வங்காளத்தில் புறக்கணிப்பும் சுதேசி இயக்கமும் (1905 -1911)
- புறக்கணிப்பும் சுதேசி இயக்கமும் இந்தியாவைத் தற்சார்பு அடையச் செய்யும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக எப்போதும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே இருந்தன.
- வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போது நான்கு முக்கியப் போக்குகள் காணப்பட்டன:
- மிதவாதப் போக்கு: ஆங்கிலேய ஆட்சி, அவர்களின் நீதி பரிபாலன உணர்வு, மக்களாட்சி நடைமுறை ஆகியவற்றின் மீது நம்பிக்கை. ஒரு தனிப்பட்ட இயக்கத்தின் மூலமாக மட்டுமே பிரிட்டிஷாரிடம் இருந்து அதிகாரத்தை மீட்டெடுக்க மித தேசியவாத தலைவர்கள் ஆயத்தமாக இல்லை. அவர்களுக்கு புறக்கணிப்பு மற்றும் சுதேசி இயக்கம் இரண்டுமே குறைந்த அளவு முக்கியத்துவம் உடையவையாக இருந்தன.
- ஆக்கப்பூர்வ சுதேசி: மித தேசியவாதிகளின் சுயதோல்வியையும் சாதாரண அணுகுமுறையையும் நிராகரித்ததுசன், சுதேசி தொழில்கல், தேசிய பள்ளிகள், நடுவர் நீதிமன்றங்கள் மற்றும் கிராமங்களில் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் மூலம் சுய உதவியில் கவனம் செலுத்தியது. இவை பெரும்பாலும் அரசியல் சாராமல் இருந்தன.
- தீசிர தேசியவாதம்: அரசியல் சாராத ஆக்கப்பூர்வ திட்டங்களில் இந்திய தேசியவாதிகளின் ஒரு பிரிவினர் ஓரளவு பொறுமை மட்டுமே கோண்டிருந்தனர். சுயஉதவி என்ற யோசனையை வேடிக்கையானதாகப் பறந்தள்ளிய அவர்கள் அந்நியப் பொருட்களை புறக்கணிப்பதில் கவனம் செலுத்தினார்கள்.
- புரட்சிகர தேசியவாதம்: இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி குறித்த முற்றிலும் தீவிர வெளிப்பாடாக பிரிட்டிஷாரை எதிர்த்து தீவிரவாத முறைகள் மூலமாக சண்டையிடுவதாகும். சுதேசிக்கு எதிரான அல்லது நடடின் மைந்தர்களுக்கு எதிரான அடக்குமுறைப்போக்கு கொண்ட பிரிட்டிஷ் அதிகாரிகளைக் குறிவைத்து இந்த வன்முறைகள் நடந்தேறின. பொதுமக்கள் இயக்கத்திலிருந்து தனிநபர் செயல்பாட்டுக்கு மாற்றம் பெறுவதைக் குறிப்பதாகவும் அது அமைந்தது.
ஆக்கப்பூர்வ சுதேசி
- ஆக்கப்பூர்வ திட்டங்கள் அனைத்தும் பெரும்பாலும் சுய உதவியையே வலியுறுத்தின. ஆங்கிலேய ஆட்சியின் கட்டுப்பாட்டில் சிக்காமல் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளை மாற்றாக உருவாக்குவது குறித்து அது கவனம் செலுத்தியது.
- மக்களை சுயமாக வலுவாக்க வேண்டிய அவசியம் குறித்து அது வலியுறுத்தியது.
- அதனால் அரசியல் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன் ஒரு மதிப்பு வாய்ந்த குடிமகனை உருவாக்க முடியும். துணிகள், கைத்தறி ஆடைகள், சவக்காரம் (சோப்புகள்), மண்பாண்டங்கள், தீப்பெட்டி, தோல்பொருட்கள் ஆகியன எங்கும் பரவியிருந்த சுதேசி கடைகளில் விற்கப்பட்டன.
மறைமுக எதிர்ப்பு
- வங்கப் பிரிவினையைத் திரும்பப் பெறுவது அதற்குமேலும் கருப்பொருளாக இல்லாத காரணத்தால் 1906இல் சுதேசி இயக்கம் மாற்றுப்பாதையில் செல்லத் துவங்கியது.
- அரசியக் சுதந்திரம் அல்லது இந்தியாவில் தன்னாட்சி பற்றிய சிந்தனையை பிரச்சாரப்படுத்த இந்த இயக்கத்தை பல தலைவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். இந்த புதிய திசையில் சுதேசி இயக்கம் நான்கு அம்சங்களைக் கொண்டிருந்தது.
- அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பது; அரசுப்பள்ளிகள் கல்லூரிகளைப் புறக்கணிப்பது, நீதிமன்றங்கள், பட்டங்கள் மற்றும் அரசு சேவைகளை புறக்கணிப்பது; சுதேசி தொழிற்சாலைகளை மேம்படுத்துவது; பொறுத்துக்கொள்ளும் அளவைத் தாண்டி ஆங்கிலேயர்களின் அடக்குமூறை இருக்குமானால் ஆயுதமேந்திய போராட்டத்துக்கு ஆயத்தமாவது என நான்கு அம்சங்கள் பின்பற்றப்பட்டன.
- எதேச்சதிகார வலுவான நிர்வாகம் ஒருபக்கமும் மற்றொரு பக்கம் இராணுவ வலுவில்லாத மக்களும் இருந்த நிலைமையில் மறைமுக எதிர்ப்பு முறைக்கு எந்தவித நடைமுறைப் பயன்பாடும் இல்லாமல் விளங்கியது.
- இடைவிடாத ஒத்துழையாமை மற்றும் கீழ்ப்படியாத நிலைமை ஆகியவற்றின் மூலமாக எதிர்ப்பை அதுபோன்ற நிலையில் தெரிவிக்க இயலும்.
தீவிர தேசியவாதம்
- பஞ்சாபின் லாலா லஜ்பதி ராய், மகாராஷ்டிராவின் பால கங்காதர திலகர், வங்காளத்தின் பிபின் சந்திர பால் ஆகிய மூன்று தலைவர்களும் சுதேசி காலத்தில் எப்போதும் லால்-பால்-பால் (Lal-Bal-Pal) மூவர் என்று குறிக்கப்பட்டனர்.
- சுதேசி இயக்கத்தின்போது தீவிர தேசியவாதத்தின் இயங்கு தளமாக பஞ்சாப், மகாராஷ்டிரா, வங்காளம் ஆகியன உருவெடுத்தன.
- தென்னிந்தியாவில் வ.உ.சிதம்பரனார் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி சுதேசி இயக்கத்தின் மிகமுக்கியத் தளமாக விளங்கியது.
சுயராஜ்ஜியம் அல்லது அரசியல் சுதந்திரம்
- சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சி அடைவதே தீவிரவாதத் தன்மை கொண்ட தலைவர்களின் பொதுக் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தன. எனினும் சுயராஜ்ஜியம் என்ற வார்த்தையின் பொருளில் தலைவர்கள் வேறுபட்டனர்.
- திலகரைப் பொறுத்தவரை சுயராஜ்ஜியம் என்பது, முழுமையான தன்னாட்சி மற்றும் அந்நிய ஆட்சியில் இருந்து முழுமையான விடுதலை பெறுவதாக இருந்தது.
- புரட்சிகர தேசியவாதிகள் மீது விமர்சனப் பார்வைகளைக் கொண்ட மித தேசியவாதிகள் போன்று இல்லாமல், அவர்கள் மீது தீவிர தேசியவாதிகள் இரக்கம் கொண்டிருந்தனர்.
- எனினும் அரசியல் படுகொலைகள் மற்றும் தனிநபர்களின் தீவிரவாதச் செயல்களை தீவிரத் தேசியவாதத் தலைவர்கள் ஏற்கவில்லை.
- சுதேசிய இயக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஆங்கிலேய ஆட்சி அடக்கியது. முக்கிய தலைவர்கள் சிறைகளில் நீண்ட காலத்துக்கு அடைபட்டார்கள்; புரட்சியாளர்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டனர். பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது.
தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் (1916 -18)
- லோகமான்ய பாலகங்காதர திலகர், அன்னிபெசண்ட் அம்மையார் ஆகியோர் தலைமையிலான தன்னாட்சி (1916-1918) இயக்கத்தின்போது இந்திய தேசிய இயக்கம் புத்துயிரூட்டப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டது.
- முதல் உலகப்போரும், இந்தியா அந்தப் போரில் பங்கேற்றதும் தான் தன்னாட்சி இயக்கத்துக்கான பின்னணியாகும்.
- 1914ஆம் ஆண்டில் ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டன் போர் அறிவித்த நிலையில் மித தேசியவாத மற்றும் தாராளமய தலைமை பிரிட்டிஷாருக்காக ஆதரவைத் தந்தது.
- அதற்குப் பதில் பிரிட்டிஷ் அரசு போருக்குப் பிறகு தன்னாட்சியை இந்தியாவிற்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
- உலகப் போரின் பல அரங்குகளுக்கு இந்தியத் துருப்புகள் அனுப்பப்பட்டன. ஆனால் இந்தக் குறிக்கோள்கள் குறித்து பிரிட்டிஷ் அரசுக்கு எந்தவித உறுதிப்பாடும் இல்லை.
- இந்தியாவின் தன்னாட்சிக்கு வழிவகுக்கும் காரணத்துக்கு உதவாமல் ஆங்கிலேய அரசு ஏமாற்றியதால் ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடி தரும் புதிய மக்கள் இயக்கத்துக்கான அழைப்பாக இது உருவெடுத்தது.
அ) பொதுப்பாதையை வகுப்பதற்கான முயற்சியை நோக்கி
- காங்கிரசின் 1916ஆம் ஆண்டு வருடாந்திர அமர்வு இரண்டு முக்கிய மாற்றங்களுடன் தொடங்கியது. ஒன்று, தீவிரத்தன்மைகொண்ட குழுவிற்கு எதிரான குரலில் மிக முக்கியமானவர்களாகக் கருதப்பட்ட மித தேசியவாதத் தலைவர்களான ஃபிரோஸ் ஷா மேத்தா, கோகலே ஆகிய இருவரின் மறைவு (1915)..
- காலனித்துவ அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பொதுவான முன்னணியை வைக்க மித தேசியவாதிகளை கட்டாயப்படுத்திய அன்னிபெசண்டின் அதிகரித்துவரும் புகழ் மற்றொரு காரணியாகும்.
- லக்னோவில் நடந்த காங்கிரஸ் (1916) அமர்வில் தீவிர தேசியவாத குழுவினரையும் கட்சியில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது.
- 1916ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திலகர் முதலாவது தன்னாட்சி இயக்கத்தை நிறுவினார். 1916ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுமையற்ற தமது ஆதரவாளர்களின் தொடர் கோரிக்கைகளை அடுத்து அன்னிபெசண்ட் அம்மையார் காங்கிரஸ் கட்சியின் ஆதரவின்றி தன்னாட்சி இயக்கத்தை ஆரம்பிக்க முடிவுசெய்தார்.
- இரண்டு அமைப்புகளும் சுதந்திரமாகச் செயல்பட்டன. பத்திரிகை, உரைகள், பொதுக்கூட்டங்கள், விரிவுரைகள், விவாதங்கள் மற்றும் தன்னாட்சிக்கு ஆதரவான சுற்றுப்பயணம் ஆகியவை மூலமாகத் தீவிரப் பிரச்சார இயக்கத்தை நடத்த தன்னாட்சி இயக்கங்கள் பயன்பட்டன.
- இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் சேர்ப்பதிலும் இவ்வியக்கங்களை ஊரகப் பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதிலும் இரண்டு அமைப்புகளுமே வெற்றிபெற்றன.
- இந்தியாவின் தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் தனது பெரும்பான்மையான கொள்கைகளை அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கத்தில் இருந்து பெற்றது.
ஆ) தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள்கள்
- அரசியலமைப்பு வழிகளைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் பேரரசிற்குள் தன்னாட்சியை அடைவது.
- தன்னாட்சிப் பகுதி (டொமினியன்) என்ற தகுதியை அடைவது. ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றுக்குப் பின்னர் இந்த அரசாட்சி சாராத நிலை வழங்கப்பட்டது.
- அவர்களின் இலக்குகளை அடைய வன்முறையல்லாத அரசியல்சாசன வழிமுறைகளைக் கையாள்வது.
- தன்னாட்சி மூலம் இந்த நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபைகளைக் கொண்ட அரசை கொள்ளலாம் என்று நான் கருதுகிறேன். கருவூலத்தை செலவு செய்யும் அதிகாரம் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சபையும்,ச்ச் அந்த சபைப்பு கட்டுப்படும் அரசும், அமையும் பிரிட்டிஷ் அரசுக்கு உள்ள விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டிருக்காமல் அல்லது போரின்போது இந்தியா செய்த சேவைகளுக்கு விருதாகவோ இல்லாமல் தேசிய தன்னுறுதி அடிப்படையின் தன்னாட்சியை இந்தியா கோரவேண்டும்.
- அன்னிபெசண்ட் (1915ஆம் ஆண்டு செப்டம்பரில்)
இ) லக்னோ ஒப்பந்தம் (1916)
- தன்னாட்சி இயக்கமும் அதனையடுத்து மித தேசியவாதிகள் மற்றும் தீவிர தேசியவாதிகளின் மறு இணைப்பு காரணமாக முஸ்லிம்களுடன் புதிய பேச்சுகளுக்கான சாத்தியக்கூறு லன்கோ ஒப்பந்தத்தின்போது ஏற்பட்டது.
- லக்னோ ஒப்பந்தத்தின் (1916) போது காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் லீக்கும் இந்தியாவில் விரைவில் தன்னாட்சி வேண்டுமென்பதை ஏற்றுக்கொண்டது.
- இதற்குப் பதிலாக முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகளை வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமை ஏற்றது.
ஈ) பிரிட்டிஷாரின் பதில் நடவடிக்கை
- தன்னாட்சி இயக்கத்துக்கான ஆங்கிலேயரின் பதில் நடவடிக்கை நிரந்தர நிலைப்பாட்டில் இல்லை. உள்ளாட்சி அமைப்புகளில் இந்தியர்களை பெரும் எண்ணிக்கையில் இடம்பெறச் செய்ய சீர்திருத்தம் தேவை என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.
- சுயராஜ்ஜியத்துக்கான கோரிக்கையை திலக்ரும் அன்னிபெசண்ட் அம்மையாரும் எழுப்பியது பிரபலமானதைத் தொடர்ந்து தலைவர்களை தனிமைப்படுத்தி அவர்களின் செயல்பாடுகளை முடக்கும் அதே பழைய திட்டத்தை ஆங்கிலேய அரசு பயன்படுத்தியது.
- 1919இல் மாண்டேகு-செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்களை ஆங்கிலேய அரசு அறிவித்தது. இதன் மூலம் இந்தியா தன்னாட்சி நோக்கி படிப்படியாக முன்னேற உறுதி கூறப்பட்டது.
- இந்திய தேசியவாதிகள் இடையே இது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் இரு பேரிடியாக, தன்னிச்சையான கைது மற்றும் கடும் தண்டனைகளுடன் கூடிய ரௌலட் சட்டத்தை அரசு இயற்றியது.