Science Notes

உடல்நலமும், சுகாதாரமும் Notes 6th Science Lesson 6 Notes in Tamil

6th Science Lesson 6 Notes in Tamil

6] உடல்நலமும், சுகாதாரமும்

அறிமுகம்

  • நலம் எனும் வார்த்தையானது முழுமையான மன மற்றும் உடல் நலத்தைக் குறிக்கிறது. மனிதர்கள் தங்கள் நலத்தை குறைந்தபட்ச அளவிலாவது பேணுவதற்கு சுகாதாரத்தைப் பேணுவது அவசியமாக உள்ளது.
  • உலக சுகாதார நிறுவனம் (WHO), “நலம் என்பது, ஒரு மனிதனின் முழுமையான உடல், மனம் மற்றும் சமூக நலனைக் குறிப்பதாகும்: இது நோயின்றி இருப்பதை மட்டும் குறிப்பதல்ல”. என்று வரையறுத்துள்ளது.
  • உடல் நலம் என்பது நமது சுற்றுச்சூழ்லைல் ஏற்படும் அழுத்தங்களுக்கும், மாற்றங்களுக்கும் ஏற்ற வகையில் உடல் தன்னைத் தகவமைத்துக் கொள்வதன் மூலம், உடலினுள் சமநிலையைப் பேணுகின்ற சிறப்பான நிலையாகும். இந்நிலை ஹோமியோஸ்டேசிஸ் எனப்படுகிறது.
  • சுகாதாரம் என்பது உடல் நலனிற்கு ஏற்ற நடைமுறைகளை நிறுவக்கூடிய அல்லது பராமரிக்கக்கூடிய அறிவியல் ஆகும். தினமும் பற்களைத் துலக்குதல் என்பது வாயின் சுகாதாரத்தைப் பேணும் முக்கிய வழியாகும்.
  • நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும், நோய் பரவாமல் இருப்பதற்காகவும் நம்மையும், நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாகப் பராமரிக்கும் செயல்முறையே சுகாதாரம் என்று வரையறுக்கப்படுகிறது.

உணவின் ஊட்டச்சத்துக்கள்

நமக்கு ஆற்றலைத் தருகின்ற, உடல் வளர்ச்சிக்கு உதவக்கூடிய மற்றும் நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கக்கூடிய வேதியியல் கூறுகள் உணவில் காணப்படுகின்றன. அவையே, ஊட்டச்சத்துக்கள் எனப்படுகின்றன. முக்கிய ஊட்டச்சத்துகள் ஆறு வகைப்படும், அவையாவன:

  1. கார்போஹைட்ரேட்டுகள்
  2. புரதங்கள்
  3. கொழுப்புகள்
  4. வைட்டமின்கள்
  5. தாது உப்புக்கள்
  6. நீர்

கார்போஹைட்ரேட்டுகள் (மாவுச்சத்து)

கார்போஹைட்ரேட்டுக்கள் ஆற்றல் தரும் உணவுக்கூறுகள் ஆகும்.

கார்போஹைட்ரேட்டுகளின் வகைகள்

கார்போஹைட்ரேட்டுக்களின் நிலை மூலப்பொருள்கள்
சர்க்கரை பழங்கள், தேன், கரும்புச்சர்க்கரை, பீட்ரூட்
ஸ்டார்ச் அரிசி, சோளம், உருளைக்கிழங்கு மற்றும் பிற
நார்ச்சத்து உணவு முழுதானியங்கள், கொட்டை உணவுகள் மற்றும் பிற

கார்போஹைட்ரேட்டுக்களை சர்க்கரை, ஸ்டார்ச் மற்றும் நார்ச்சத்து ஆகிய வடிவில் நாம் பெறுகிறோம்.

கொழுப்புகள்

கொழுப்பு என்பதும் ஆற்றல் தரும் ஓர் உணவு ஆகும். இது கார்போஹைட்ரேட்டைவிட அதிக ஆற்றலைத் தரக்கூடியது. வெண்ணெய், நெய், பால், பாலாடைக்கட்டி, பன்னீர், கொட்டைகள், இறைச்சி, மீன் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவை கொழுப்புச் சத்து உள்ள சில முக்கிய உணவுப் பொருள்கள் ஆகும். இவை நமது உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு, உடலைப் பாதுகாத்து உடல் செல்களையும் பாதுகாக்கின்றன.

புரதங்கள்

உடல் வளர்ச்சி, செல்களைப் புதுப்பித்தல் மற்றும் செரிமானம் போன்ற பல்வேறு விதமான உடற்செயல்களுக்கும் புரதங்கள் மிகவும் அவசியம். முட்டை, மீன், பால், கோழி, இறைச்சி, சோயாபீன்ஸ், கொட்டைகள், பருப்புக்கள் போன்றவற்றில் புரதச்சத்து உள்ளது. புரதங்கள் உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் ஆகும்.

  • அதிகமான புரதம் உள்ள உணவு சோயாபீன்ஸ் ஆகும்.

வைட்டமின்கள்

உடலில் நடைபெறும் பல்வேறுபட்ட உயிர் வேதிவினைகளுக்கு வைட்டமின்கள் மிகவும் அவசியம். பழங்கள், காய்கறிகள், தானியங்கள், இறைச்சி போன்றவற்றில் வைட்டமின்கள் அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின்கள் பாதுகாக்கும் உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன. A, B, C, D, E மற்றும் K ஆகிய ஆறு முக்கிய வைட்டமின்கள் உள்ளன. இவற்றுள் வைட்டமின் B மற்றும் வைட்டமின் C இரண்டும் நீரில் கரையும் வைட்டமின்கள் ஆகும். வைட்டமின் A, D, E மற்றும் K ஆகியவை கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஆகும்.

வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள்

வைட்டமின்கள் மூலங்கள் குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் அறிகுறிகள்
வைட்டமின் A மீன் எண்ணெய், முட்டை, பால், நெய், கேரட், சோளம், மஞ்சள் நிற பழங்கள், கீரைகள். மாலைக்கண் நோய் குறைவான கண்பார்வை, மங்கலான வெளிச்சத்தில் பார்ப்பதில் சிரமம்
வைட்டமின் B முழு தானியம், தீட்டப்படாத அரிசி, பால், மீன், இறைச்சி, பட்டாணி, பயறு வகைகள், பச்சைக் காய்கறிகள் பெரிபெரி நரம்பு பலவீனம், உடல் சோர்வு.
வைட்டமின் C ஆரஞ்சு, நெல்லிக்காய், பச்சைமிளகாய், தக்காளி ஸ்கர்வி ஈறுகளில் இரத்தக் கசிவு
வைட்டமின் D மீன் எண்ணெய், முட்டை, பால், சூரிய ஒளியின் மூலம் நமது தோலில் உருவாகிறது. ரிக்கெட்ஸ் பலவீனமான, எளிதில் வளையக் கூடிய எலும்புகள்
வைட்டமின் E தாவர எண்ணெய்கள், பச்சைக் காய்கறிகள், முழுக் கோதுமை, மாம்பழம், ஆப்பிள், கீரைகள் நரம்பு பலவீனம், மங்கலான கண்பார்வை, மலட்டுத் தன்மை மலட்டுத் தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை
வைட்டமின் K பச்சைக் காய்கறிகள், தக்காளி, முட்டைக்கோஸ், முட்டை மற்றும் பால் பொருள்கள் பலவீனமான எலும்புகள், பற்கள் போன்றவை சிறு காயத்தினால் ஏற்படும் அதிகப்படியான இரத்தக்கசிவு
  • நெல்லிக்கனிகளில், ஆரஞ்சுப் பழங்களைவிட 20 மடங்கு, அதிக வைட்டமின் C காணப்படுகிறது.
  • சூரிய வெப்பக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் களிம்புகள் (Sun Screen Lotion) தோலின் வைட்டமின் D உற்பத்தியை 95% குறைக்கிறது. எனவே, வைட்டமின் D குறைபாட்டு நோய் ஏற்படுகிறது.

தாது உப்புகள்

தாது உப்புகள் உடல் வளர்ச்சிக்கும் , உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் தேவைப்படுகின்றன. கீரை வகைகள், பருப்பு வகைகள், முட்டை, பால், மீன் மற்றும் பழங்கள் போன்றவை தாது உப்புக்கள் நிறைந்த முக்கிய உணவுப் பொருள்கள் ஆகும். தாது உப்புகளும் பாதுகாப்பு உணவுகள் ஆகும்.

தாது உப்புகள் மற்றும் அவற்றின் பணிகள்

தாது உப்புகள் பணிகள்
கால்சியம் வலுவான எலும்புகள் மற்றும் பற்கள், இரத்தம் உறைதல்
பாஸ்பரஸ் வலுவான எலும்புகள் மற்றும் பற்கள்
அயோடின் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி
இரும்புச் சத்து ஹீமோகுளோபின் உற்பத்தி மற்றும் மூளை வளர்ச்சி
  • உலகளவில் 80% முருங்கைக் கீரை உற்பத்தி இந்தியாவில்தான் உள்ளது. முருங்கைக் கீரையை சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன.

முருங்கைக் கீரையில்:

வைட்டமின் A

வைட்டமின் C

பொட்டாசியம்

கால்சியம்

இரும்புச் சத்து மற்றும்

புரதம்

ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. இது ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாகவும் (Antioxidants) உள்ளது.

நீர்

நமது உடலை நலமுடன் பேணுவதற்கு அதிக அளவு நீர் தேவைப்படுகிறது. நாம் தினந்தோறும் குறைந்தது 8 டம்ளர்கள் (2 லிட்டர்கள்) நீர் பருக வேண்டும்.

உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்துக்கள்

  • உடல் நலம் என்பது நோயின்றி இருப்பது மட்டுமல்ல. இது முழுமையான உடல்நலம், மனநலம் மற்றும் சமூகநலம் ஆகியவற்றை உள்ளடக்கியது. சத்தான உணவை உண்பதால் நாம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நலமுடன் இருக்கமுடியும்.
  • உடல் நலத்துடன் இருக்கும்போது நீங்கள் தன்னம்பிக்கையோடும், அனைத்து செயல்களிலும் ஈடுபாட்டோடும், வாழ்க்கையை அனுபவிக்கும் திறனோடும் இருப்பீர்கள்.
  • சத்துக் குறைவான உணவு வகைகள் உடல் பருமனையும், நோய்களையும் உண்டாக்குகின்றன.

சரிவிகித உணவு

நமது உடல் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் தேவையான அனைத்து சத்துக்களையும் போதுமான அளவு கொண்ட ஓர் உணவு அவசியம். உடல் நலத்தை உறுதி செய்யக்கூடிய பல்வேறு ஊட்டச்சத்துக்களை சரிவிகித உணவு போதுமான அளவு கொண்டுள்ளது.

உணவு என்பது போதுமான அளவு நீரையும், சரியான அளவு ஆற்றலையும் நமக்கு வழங்க வேண்டும், கீழ்க்காணும் காரணங்களுக்காக சரிவிகித உணவு அவசியமாகும்.

  • அதிக வேலை செய்யும் திறன் பெறுவதற்கு
  • நல்ல உடல் மற்றும் மன நலத்திற்கு
  • நோய்களை எதிர்க்கும் திறன் பெறுவதற்கு
  • உடல் நன்றாக வளர்வதற்கு

ஊட்டச்சத்துக் குறைபாடு

இந்தக் குழந்தைகள் இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகும்.

ஊட்டச்சத்துக் குறைபாடு

நாம் உண்ணும் உணவில் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சரியான விகிதத்தில் கிடைக்கவில்லையென்றால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு எனும் வார்த்தை, சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளாததால் ஏற்படும் விளைவைக் குறிக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் நோய்கள் உண்டாகின்றன. நமது உணவில் போதிய அளவு ஊட்டச்சத்து இல்லாததால் ஏற்படும் நோய்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்கள் எனப்படுகின்றன.

  • சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 14.4 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த வகையில் இந்தியா, சீனாவிற்கு அடுத்ததாக, அதிக எண்ணிக்கையில் உடல் பருமன் உடையவர்களைக் கொண்ட நாடுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

புரதக் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

நோய்கள் அறிகுறிகள்
குவாஷியோர்கர் வளர்ச்சிக் குறைபாடு, முகம், கால்களில் வீக்கம், வயிற்றுப் போக்கு மற்றும் உப்பிய வயிறு
மராஸ்மஸ் மெலிந்த உடல் , மெதுவான உடல் வளர்ச்சி.

தாது உப்புக்கள் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

தாது உப்புக்கள் நோய்கள்
கால்சியம் ரிக்கெட்ஸ்
பாஸ்பரஸ் ஆஸ்டியோமலேசியா
அயோடின் கிரிட்டினிசம் (குழந்தைகளில்) முன்கழுத்துக் கழலை (பெரியவர்கள்
இரும்புச் சத்து இரத்த சோகை

உடற்பயிற்சி

உடல் தகுதியையும், முழுமையான உடல் நலத்தையும் மேம்படுத்தக்கூடிய அல்லது பராமரிக்கக்கூடிய உடல் செயல்பாடே உடற்பயிற்சி ஆகும்.

உடற்பயிற்சி, கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணங்களுக்காக அவசியமாகும்.

  • வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை அதிகப்படுத்துதல்.
  • வயது முதிர்ச்சியைத் தவிர்த்தல்.
  • தசைகள் மற்றும் இதய இரத்த ஓட்ட மண்டலத்தை வலுப்படுத்துதல்.
  • விளையாட்டுத் திறனை மேம்படுத்துதல், எடையைக் குறைத்தல் அல்லது பராமரித்தல் மற்றும் அனுபவ மகிழ்ச்சி அளித்தல்.
  • குழந்தைகள் மற்றும் முதியோர்களில் உடல் பருமனால் ஏற்படும் விளைவுகளைக் குறைத்தல்.

ஓய்வு

உடல் மற்றும் மன நலத்திற்கு போதுமான அளவு ஓய்வு அவசியம். உடல் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், ஊட்டச்சத்து எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு ஓய்வும் முக்கியம் ஆகும்.

“சீக்கிரம் படுக்கச் சென்று, அதிகாலை எழும் பழக்கம் ஒரு மனிதனை நலமுடனும், வளமுடனும் மற்றும் அறிவுடனும் வைக்கிறது”

  • பெஞ்சமின் பிராங்க்ளின்

தூய்மை

தூய்மை என்பது உடல் நலத்தைக் காப்பதற்காக கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்களின் தொகுப்பு ஆகும். உலக சுகாதார நிறுவனத்தின் ( தூய்மை என்பது உடல் நலத்தைக் காப்பதற்காக கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்களின் தொகுப்பு ஆகும். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கூற்றுப்படி, “உடல் நலத்தைப் பராமரிக்கவும், நோய்கள் பரவுவதைத் தடுக்கவும் உதவக்கூடிய நிலை மற்றும் நடைமுறைகளையே தூய்மை குறிக்கிறது”.

தன் சுத்தம்

தன் சுத்தம் என்பது சுத்தமாக இருப்பதன் மூலமாக ஒருவர் தன் உடல் ஆரோக்கியத்திலும், நலனிலும் அக்கறை கொள்வதற்காக மேற்கொள்ளும் நடைமுறைகளை உள்ளடக்கியதாகும், நாம் எத்தனை முறை குளிக்கிறோம், கைகளைக் கழுவுகிறோம், நகங்களை வெட்டுகிறோம், உடை மாற்றுகிறோம் போன்ற பழக்கவழக்கங்களை இது உள்ளடக்கியதாகும். நாம் வீட்டிலும், வேலை செய்யும் இடங்களிலும், குளியலறை மற்றும் கழிவறை உள்ளிட்ட அனைத்து இடங்களின் தரைகளை கிருமிகள் இல்லாதவாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டியதையும் இது உள்ளடக்கியுள்ளது.

தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் தூய்மை கடைபிடிக்கவேண்டிய கால இடைவெளி

கூறுகள் அல்லது பகுதிகள் அடிக்கடி தூய்மை செய்வதற்கான ஆலோசனை
கண் தூய்மை தினசரி காலையிலும் முகம் அசுத்தம் அடையும் போதும்
முடித் தூய்மை வாரம் இரு முறை அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள்
உடல் தூய்மை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை
வாய்த் தூய்மை ஒரு நாளைக்கு இரு முறை பல் தேய்த்தல், சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளித்தல்
பாதத் தூய்மை தினந்தோறும்
கைத் தூய்மை அசுத்தமான பகுதியைத் தொடும்போது, சாப்பிடும் முன்பு, சுத்தமானவற்றை தொடுவதற்கு முன்பு
ஆடைத் தூய்மை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இருமுறை.

நுண்ணுயிரிகள் – ஓர் அறிமுகம்

தன் சுத்தத்தை அலட்சியம் செய்யும் போது நோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது தன் சுத்தத்தை அலட்சியப்படுத்துவதால் நுண்ணுயிரிகள் மூல ஏற்படும் சில நோய்களைக் காண்போம்.

  1. சீதபேதி
  2. பற்சொத்தை
  3. சேற்றுப்புண்
  4. பொடுகு

உன் கண்களால் காணமுடியாத சில நுண்ணுயிரிகள் உள்ளன என்பதை உன்னால் நம்பமுடிகிறதா? ஆம், நுண்ணுயிரிகளை நுண்ணோக்கி இல்லாமல் பார்க்க முடியாது. பெரும்பாலான நுண்ணுயிரிகள் நான்கு முக்கியப் பிரிவுகளாக உள்ளன.

  • பாக்டீரிய
  • வைரஸ்
  • புரோட்டோசோவா
  • பூஞ்சைகள்

பாக்டீரியா

பாக்டீரியா என்பவை மிகச் சிறிய புரோகேரியோட்டிக் நுண்ணுயிரிகள் ஆகும். பாக்டீரியா செல்களில் உட்கரு கிடையாது. இவை பொதுவாக செல் சவ்வினால் சூழப்பட்ட நுண்ணுறுப்புகளைக் கொண்டிருக்காது.

  • பாக்டீரியா ஒட்டுண்ணிகளாகவோ அல்லது தன்னிச்சையான நுண்ணுயிரிகளாகவோ காணப்படும்.
  • அவை திசுக்களைத் தாக்கக்கூடியவை.
  • அவை சீழ் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருள்களை உற்பத்தி செய்யும்.
  • நோய் என்பது, குறிப்பிட்ட அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளைக் கொண்ட உடல் செயலியல் நிகழ்வு ஆகும். கோளாறு என்பது உடல் செயல்பாடுகளில் ஏற்படும் ஒழுங்கற்ற தன்மை ஆகும்.

பாக்டீரியா நோய்கள்

வ.எண் பாக்டீரியா நோய்கள் பரவும் முறை
1 காலரா / வயிற்றுப்போக்கு அசுத்தமான நீர்
2 நிமோனியா / காய்ச்சல் இருமல் மற்றும் தும்மலின் போது வெளிப்படும் காற்றுத் திவளைகளை சுவாசித்தல்
3 டெட்டனஸ் / கக்குவான் பாக்டீரியாக்களினால் தாக்கப்பட்ட காயங்கள்
4 காசநோய் இருமல் மற்றும் தும்மலின் போது வெளிப்படும் காற்றுத் திவளைகளை சுவாசித்தல்
5 டைபாய்டு / காய்ச்சல் அசுத்தமான உணவு அல்லது நீர்

வைரஸ்கள்

வைரஸ் என்பது தொற்று ஏற்படுத்தக்கூடிய காரணியாகும். இவை புரத உறையால் சூழப்பட்ட, நீயூக்ளிக் அமிலத்தினைக் கொண்டுள்ளது.

இது மற்றொரு உயிரினங்களின் செல்களில் புகுந்து பெருக்கமடைகின்றது. தாவரங்கள், விலங்குகள் , நுண்ணுயிரிகள் போன்ற அனைத்து உயிரினங்களையும் வைரஸ் பாதிக்கக் கூடியவை. அவை உயிருள்ள செல்களுக்குள் புகுந்து அச்செல்லின் ஆக்கக்கூறுகளைப் பயன்படுத்தி பெருக்கம் அடைகின்றன. வைரஸ், செல்களை அழித்து, பாதிப்படையச் செய்து அல்லது மாற்றமடையச் செய்து உங்களை நோய் வாய்ப்பட வைக்கும்.

  • ஒரு வைரஸ் டி.என்.ஏ. வுக்குப் பதிலாக ஆர்.என்.ஏ. வைப் பெற்றிருந்தால் அதற்கு ரெட்ரோ வைரஸ் என்று பெயர்.

வைரஸினால் உருவாகும் நோய்கள்

  1. சாதாரண சளி
  2. இன்புளுயன்சா
  3. கல்லீரல் ஒவ்வாமை
  4. சின்னம்மை
  5. இளம் பிள்ளைவாதம்
  6. பெரியம்மை
  7. தட்டம்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!