[videopress U68FIchx] இந்திய துணைக்கண்டத்தில் அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை நாட்டியவர் யார்? பதினொன்றாம் நூற்றாண்டில் வட இந்தியாவைக் கொள்ளையடித்த துருக்கியக் குதிரைப்படை வீரர்கள் அடுத்த நூற்றாண்டில் கங்கைச் சமவெளியைத் தங்கள் அரசியல் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவருவதில் வெற்றி பெற்றனர். அவர்களின் துணிச்சலும் மூர்க்கக் குணமுமே வெற்றிக்குக் காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், தங்களையும் தங்கள் நாட்டையும் காத்துக்கொள்ளத் தவறிய இந்திய அரசர்களின் இயலாமையே அவர்களின் வெற்றிக்கான உண்மைக் காரணங்களாகும். இந்தியர்கள் தங்களிடையே ஒருவர் மேலொருவர் அவநம்பிக்கை கொண்டிருந்தனர். இஸ்லாமின் தொடக்கக் கால வெற்றிகளையும் அது பரவி வருவதையும் கவனத்தில் கொள்ளத் தவறினர். முஸ்லீம் வீரர்களின் மேம்பட்ட போர் செய்யும் ஆற்றல் அவர்களின் வெற்றிக்கு மற்றொரு காரணமாகும். இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி முகமது கோரியால் கி.பி.(பொ.ஆ) 12ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. அவருக்கு மகன்கள் இல்லாத காரணத்தால் பன்டகன் (இராணுவப் பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளைக் குறிக்கும் பாரசீகச் சொல்) எனும் தனிவகை அடிமைகளைப் பேணினார். அவர்கள் மாகாண அளவில் ஆளுநர்களாகப் பதவியில் அமர்த்தப்பட்டுப் பின்னர் சுல்தான் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். 1206இல் கோரியின் இறப்பிற்குப் பின்னர், அவரின் அடிமையான குத்புதீன் ஐபக் இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்கு அரசராக தன்னை அறிவித்துக் கொண்டார். அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை அவர் நாட்டினார். இவ்வரச மரபு “மம்லுக்” அரச மரபென்றும் அழைக்கப்பட்டது. மம்லுக் எனும் அராபிய வார்த்தைக்கு “அடிமை” என்று பொருள். குத்புதீன் ஐபக், சம்சுதீன் இல்துமிஷ், கியாசுதீன் பால்பன் ஆகிய மூவரும் இவ்வம்சத்தைச் சேர்ந்த மூன்று மாபெரும் சுல்தான்கள் ஆவர். அடிமை வம்சத்தினர் இத்துணைக் கண்டத்தை எண்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.