Samacheer NotesTnpsc

இந்திய அரசியலமைப்பு Notes 10th Social Science Lesson 7 Notes in Tamil

10th Social Science Lesson 7 Notes in Tamil

7. இந்திய அரசியலமைப்பு

அறிமுகம்

ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்து அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு என்பதாகும். அது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அச்சாணி ஆகும். குறிப்பாக அரசின் நிறுவனக் கட்டமைப்பு பல்வேறு துறைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளிடையே அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் கட்டமைப்புடன் அரசியலமைப்பு சம்மந்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (U.S.A) தோன்றியது.

அரசியலமைப்பின் அவசியம்

  • அனைத்து மக்களாட்சி நாடுகளும் தங்களை நிர்வகித்துக் கொள்ள ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை பெற்றுள்ளன. ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ விரும்பும் வகையில் சில அடிப்படைக் கொள்கைகளை அரசியலமைப்பு வகுத்து கொடுக்கிறது. நமது சமூகத்தின் அடிப்படை தன்மையை அரசியலமைப்பு நமக்கு தெரிவிக்கிறது.
  • பொதுவாக ஒரு நாடு பல்வேறு நம்பிக்கையைக் கொண்டுள்ள பல்வேறு இன மக்களைக் கொண்டிருக்கும். எனவே அரசியலமைப்பானது அவ்வாறான குடிமக்களின் நம்பிக்கைகளை நிறைவு செய்ய உதவி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்.

இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்

  • 1946ஆம் ஆண்டு , அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இச்சபையில் 292 மாகாணப் பிரதிநிதிகள், 93 சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள், பலுச்சிஸ்தானின் சார்பில் ஒருவர் (1) மற்றும் மாகாண முதன்மை ஆணையர்கள் சார்பில் மூவர் (3) என மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்தனர்.
  • அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம், 1946ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள் நடைபெற்றது. இச்சபையின் தற்காலிக தலைவராக மூத்த உறுப்பினர் Dr. சச்சிதானந்த சின்கா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இந்திய அரசியலமைப்பை உருவாக்க கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் போதே அவர் இறந்ததைத் தொடர்ந்து, Dr. இராஜேந்திரபிரசாத் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராகவும், H.C.முகர்ஜி மற்றும் V.T, கிருஷ்ணமாச்சாரி இருவரும் துணைத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • இக்கூட்டத்தொடர் 11 அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது 2473 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் சில ஏற்கப்பட்டன.
  • அரசியல் நிர்ணய சபை பல்வேறு குழுக்களின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டது.
  • இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுத் தலைவர் Dr. B.R.அம்பேத்கர் தலைமையின் கீழ் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. எனவே அவர் “இந்திய அரசியலமைப்பின் தந்தை” என அறியப்படுகிறார்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்ட பின்னர், பொதுமக்கள், பத்திரிக்கைகள் , மாகாணசட்டமன்றங்கள் மற்றும் பலரால் விவாதிக்கப்பட்டது.
  • இறுதியாக முகவுரை, 22 பாகங்கள், 395 சட்டப்பிரிவுகள் மற்றும் 8 அட்டவணைகளைக் கொண்ட இந்திய அரசியலமைப்பு, 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த நாளே ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா என்பவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இத்தாலிய பாணியில் , அவரது கைப்பட எழுதப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள்

  • உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.
  • இதன் பெரும்பாலான கருத்துகள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை.
  • இது நெகிழாத்தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
  • கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது.
  • மத்தியில் மட்டுமல்லாமல் மாநிலங்களிலும் நாடாளுமன்ற முறையைத் தோற்றுவிக்கிறது.
  • இந்தியாவைச் சமயச்சார்பற்ற நாடாக்குகிறது.
  • சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
  • உலகளாவிய வயது வந்தோர் வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது.
  • ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது.
  • சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு சிறப்பு விதிகள் மூலம் சலுகைகள் வழங்க வகை செய்கிறது.

முகவுரை

  • ‘முகவுரை’ (Preamble) என்ற சொல் அரசியலமைப்பிற்கு அறிமுகம் அல்லது முன்னுரை என்பதைக் குறிக்கிறது. இது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் இலட்சியங்களை உள்ளடக்கியது. இது அரசியலமைப்பின் சுருக்கம் அல்லது சாராம்சத்தைக் கொண்டது. இது பெரும்மதிப்புடன் “அரசியலமைப்பின் திறவுகோல்” என குறிப்பிடப்படுகிறது.
  • 1947ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஜவஹர்லால் நேருவின் ‘குறிக்கோள் தீர்மானத்தின்’ அடிப்படையில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை அமைதுள்ளது.
  • முகவுரையானது 1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி திருத்தத்தின்படி திருத்தத்தின்படி திருத்தப்பட்டது. அதன்படி, சமதர்மம், சமயச்சார்பின்மை, ஒருமைப்பாடு என்ற மூன்று புதிய சொற்கள் சேர்க்கப்பட்டன.
  • ‘இந்திய மக்களாகிய நாம்’ என்ற சொற்களுடன் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடங்குகிறது. இது இந்திய அரசியலமைப்புத் தனது அதிகாரத்தை மக்களிடமிருந்து பெறப்பட்டதைத் தெளிவுபடுத்துகிறது. இதிலிருந்து, இந்திய மக்களே இந்திய அரசியலமைப்பின் ஆதாரம் என நாம் கூறமுடியும்.
  • இந்தியா ஒரு இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு என நமது அரசியமைப்பின் முகவுரை கூறுகிறது.
  • இந்திய குடிமக்கள் அனைவரும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி என அனைத்திலும் பாதுகாப்பு வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்திய மக்கள் அனைவரும்க்கும் சுதந்திரமாகச் சிந்தித்தல், உணர்வுகளை வெளிப்படுத்துதல், நம்பிக்கை, சமய வழிபாடு ஆகியவற்றில் சுதந்திரமாக செயல்பட இந்திய அரசியலமைப்பு உத்திரவாதம் அளிக்கிறது.
  • தகுதி, வாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சமத்துவத்தை அளிக்கிறது. இந்தியர்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்க ஊக்கமளிக்கிறது.
  • 1789ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின்போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன முக்கிய முழக்கங்களாயின. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இவற்றிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

குடியுரிமை

‘சிட்டிசன்’ (Citizen) எனும் சொல் ‘சிவிஸ்’ (Civis) எனும் இலத்தின் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் ஒரு ‘நகர அரசில் வசிப்பவர்’ என்பதாகும். இந்திய அரசியலமைப்பு, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது. இந்திய அரசியலமைப்பின் பாகம் II சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை குடியுரிமையைப் பற்றி விளக்குகின்றன.

குடியுரிமைச் சட்டம் (1955)

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு, 1955ல் இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம், குடியுரிமை பெறுதல் மற்றும் குடியுரிமை இழத்தல் ஆகியன பற்றி விளக்குகிறது. இச்சட்டம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் எட்டு முறை திருத்தப்பட்டுள்ளது. முதலில், இக்குடியுரிமைச் சட்டம் காமன்வெல்த் குடியுரிமையை வழங்கியது. ஆனால் 2003ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி இவ்வுரிமை நீக்கப்பட்டது.

குடியுரிமை பெறுதல்

குடியுரிமைச் சட்டம் 1955, குடியுரிமைப் பெற ஐந்து வழிகளைப் பரிந்துரைப் செய்கிறது. அவை; பிறப்பு, வம்சாவளி, பதிவுசெய்தல், இயல்புரிமை மற்றும் பிரதேச இணைவு ஆகும்.

குடியுரிமைச் சட்டம் 1955ன் படி ஒருவர் கீழ்க்காணும் ஏதேனும் ஒரு முறையில் குடியுரிமை பெறமுடியும்.

1. பிறப்பின் மூலம்: 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவர்.

2. வம்சாவளி மூலம்: 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ வெளிநாட்டில் பிறந்த ஒருவரின் தந்தை (அவர் பிறந்த போது) இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் பிறந்த அவர், வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமை பெறமுடியும்.

3. பதிவின் மூலம்: ஒருவர் இந்தியக் குடியுரிமை கோரி, பொருத்தமான அங்கீகாரத்துடன் பதிவு செய்வதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறலாம்.

4. இயல்புரிமை மூலம்: ஒரு வெளிநாட்டவர், இந்திய அரசிற்கு, இயல்புரிமை கோரி விண்ணப்பிப்பதன் மூலம் அவர், இந்தியக் குடியுரிமை பெறலாம்.

5. பிரதேச (நாடுகள்) இணைவின் மூலம்: பிற நாடுகள் பகுதிகள் இந்தியாவுடன் இணையும் போது இந்திய அரசு அவ்வாறு இணையும் நாடுகளின் மக்களைத் தமது குடிமக்களாகக் கருதி அவர்களுக்குக் குடியுரிமை வழங்கலாம்.

குடியுரிமையை இழத்தல்

குடியுரிமைச் சட்டம் 1955ன் படி, ஒருவர் தன் குடியுரிமையை, சட்டத்தின் மூலமாக பெறப்பட்டதாகவோ(அ) அரசியலமைப்பின் கீழ் முன்னுரிமையால் பெறப்பட்டதாகவோ இருக்கும்பட்சத்தில் பெற்ற குடியுரிமையைத் துறத்தல், முடிவுறச் செய்தல், இழத்தல் என்ற பின்வரும் மூன்று வழிகளில் இழப்பார்.

  1. ஒரு குடிமகன் தாமான முன்வந்து தனது குடியுரிமையை இழத்தல்.
  2. வேறு ஒரு நாட்டில் குடியுரிமை பெறும்போது தாமாகவே இந்தியக் குடியுரிமைமுடிவுக்கு வந்துவிடுதல்.
  3. இயல்புரிமையின் மூலம் குடியுரிமை பெற்ற ஒரு குடிமகன், மோசடி செய்து குடியுரிமை பெற்றவர், தவறான பிரதிநிதித்துவம் தந்தவர் (அ) உண்மைகளை மறைத்தவர் (அ) எதிரி நாட்டுடன் வாணிகம் செய்தவர் அல்லது இரண்டாண்டு காலத்திற்கு சிறை தண்டனை பெற்றவர் என்பதை மத்திய அரசு கண்டறிந்து அவர் குற்றம் புரிந்தவர் என்று திருப்திப்படும் பட்சத்தில் மத்திய அரசு, அவரது குடியுரிமையை இழக்கச் செய்யும்.

அடிப்படை உரிமை

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி (III) 12ல் இருந்து 35 வரையுள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றிக் கூறுகின்றன. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்த அடிப்படை உரிமைகளை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளின் தாக்கத்தால் உருவாக்கினார்கள்.
  • முதலில் இந்திய அரசியலமைப்பு ஏழு அடிப்படை உரிமைகளை வழங்கியது. ஆனால் , தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன.
  • இந்திய அரசியலமைப்பின் பகுதி (III) ‘இந்தியாவின் மகாசாடனம்’ என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் பொதுவானது. ஆனால் இந்திய குடிமக்களுக்கு மட்டுமேயான சில அடிப்படை உரிமைகளும் உள்ளன.
  1. சமத்துவ உரிமை

பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

பிரிவு 15 – மதம், இனம், சாதி, பாலினம் மற்றம் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடை செய்தல்.

பிரிவு 16 – பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல்.

பிரிவு 17 – தீண்டாமையை ஒழித்தல்.

பிரிவு 18 – இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்குகல்.

  1. சுதந்திர உரிமை

பிரிவு 19 – பேச்சுவார்த்தை, கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்கள் , அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை.

பிரிவு 20 – குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை

பிரிவு 21 – வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு பெறும் உரிமை

பிரிவு 21A – தொடக்கக்கல்வி பெறும் உரிமை

பிரிவு 22 – சில வழக்குகளில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை

  1. சுரண்டலுக்கெதிரான உரிமை

பிரிவு 23 – கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்

பிரிவு 24 – தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்

  1. சமயச்சார்பு உரிமை

பிரிவு 25 – எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை

பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை

பிரிவு 27 – எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்

பிரிவு 28 – மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமலிருக்க உரிமை

  1. கல்வி, கலாச்சார உரிமை

பிரிவு 29 – சிறுபான்மையினரின் எழுத்து, மொழி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு.

பிரிவு 30 – சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை.

  1. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

பிரிவு 32 – தனிப்பட்டவரின், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது, நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல்.

  • 1978-ஆம் ஆண்டு 44-வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தப்படி, அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை (பிரிவு 31) நீக்கப்பட்டது.
  • இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி XII, பிரிவு 300 A வின் கீழ் ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது.
  • பெரும் முதலாளிகளிடமிருந்து வந்த எதிர்ப்பு காரணமாக கி.பி. (பொ.ஆ) 1215இல் இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜான் என்பவரால் வெளியிடப்பட்ட உரிமைகள் பட்டயமே, ‘மகாசாசனம்’ எனப்படும். இதுவே, குடிமக்களின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய முதல் எழுதப்பட்ட ஆவணமாகும்.

அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை (சட்டப்பிரிவு – 32)

  • நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும். இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய, நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும்.
  • உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள் இரண்டுமே ஐந்து வகையான நீதிப்பேராணைகளை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன. அவை ஆட்கொணர்வு நீதிப்பேராணை, கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை, தடையுறுத்தும் நீதிப்பேராணை ஆவணக் கேட்பு நீதிப்பேராணை, தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை ஆகியனவாகும்.
  • இது போன்ற ஆணைகளை வெளியிட்டு மக்களின் உரிமைகளைக் காப்பதினால் உச்சநீதிமன்றம் ‘அரசியலமைப்பின் பாதுகாவலன்’ என அழைக்கப்படுகிறது.
  • Dr.B.R. அம்பேத்கரின் கூற்றுப்படி, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32, இந்திய அரசியலமைப்பின் ‘இதயம் மற்றும் ஆன்மா’ ஆகும்.

அ) ஆட்கொணர்வு நீதிப்பேராணை (Habeas Corpus)

சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது.

ஆ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை (Mandamus)

மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினைச் சம்பந்தப்பட்ட துறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இ) தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition)

ஒரு கீழ்நீதிமன்றம் தனது, சட்ட எல்லையைத் தாண்டி செயல்படுவதைத் தடுக்கிறது.

ஈ) ஆவணக் கேட்பு பேராணை (Certiorari)

உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்பச் செய்ய கீழ்நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை ஆகும்.

உ) தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை (Quo –Warranto)

இப்பேராணை சட்டத்திற்குப் புறம்பாக, தகாத முறையில் அரசு அலுவலகத்தைக் கைப்பற்றுவதை தடை செய்கிறது.

அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்தல்

  • இந்திய அரசியலமைப்புச் அட்டப்பிரிவு 352ன் கீழ் குடியரசுத் தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19ன் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது.
  • மற்ற அடிப்படை உரிமைகளையும் குடியரசுத் தலைவர் சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதின் மூலம் தடை செய்யலாம். குடியரசுத் தலைவரின் இந்த ஆணைகள் நாடாளுமன்றத்தால் கட்டாயம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • ஆனால் எந்த சூழ்நிலையிலும் , குடியரசுத்தலைவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 20 மற்றும் 21ன் கீழ் வழங்கப்பட்ட உரிமைகள் (குற்றங்கள் மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு, வாழ்க்கை மற்றும் தனிநபர் சுதந்திரம் பாதுகாப்பு) தடைசெய்ய முடியாது.

அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்

  • அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி IV சட்டப்பிரிவு 36ல் இருந்து 51 வரை தரப்பட்டுள்ளது.
  • அரசியலைப்புச் சட்டம், வழிகாட்டும் நெறிமுறைகளுக்காகத் தனியாக வகைப்பாட்டினையும் கொண்டிருக்கவில்லை.
  • இருப்பினும் பொருளடக்கம் மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் அவை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கைகளை, நீதிமன்றத்தால் வலுக்காட்டாயமாகச் செயற்படுத்த முடியாது. ஆனால் இவை ஒரு நாட்டினை நிர்வகிக்க அவசியமானவை.
  • ஓர் அரசு சட்டத்தை இயற்றும் போது இந்த கொள்கைகளையும் கவனத்தில் கொள்ளவேண்டியது முக்கிய கடமையாகும். சமுதாய நலனை மக்களுக்குத் தருவதே இதன் நோக்கமாகும். இந்திய அரசியலமைப்பின் ‘புதுமையான சிறப்பம்சம்’ என Dr. B.R. அம்பேத்கார் இதனை விவரிக்கிறார்.
  • 2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட, 86வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி, இந்திய அரசியலமைப்பின்படி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 45 திருத்தப்பட்டு, பிரிவு 21A வின் கீழ் தொடக்கக் கல்வி, அடிப்படை உரிமையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தம், மாநில அரசுகள் முன்பருவ மழலையர் கல்வியை (Early Childhood care and Education – EECE) 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வழங்க அறிவுறுத்துகிறது.

அடிப்படை உரிமைகளுக்கும் அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகள்

அடிப்படை உரிமைகள் அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்
இவை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை. இவை அயர்லாந்து நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை.
அரசாங்கத்தால் கூட இந்த உரிமையை உருக்கவோ, நீக்கவோ முடியாது இவை அரசுக்கு வெறும் அறிவுறுத்தல்களே ஆகும்.
இவற்றை நீதிமன்ற சட்டதால் செயற்படுத்த முடியும். எந்த நீதிமன்றத்தாலும் கட்டாயப்படுத்த முடியாது.
இவை சட்ட ஒப்புதலைப் பெற்றவை. இவை தார்மீக மற்றும் அரசியல் ஒப்புதலைப் பெற்றவை.
இந்த உரிமைகள் நாட்டின் அரசியல் ஜனநாயக்த்தை வலுப்படுத்துகின்றன. இந்தக் கொள்கைகளைச் செயற்படுத்தும் பொழுது, சமுதாய மற்றும் பொருளாதார ஜனநாயகம் உறுதியாகிறது.
இவை இயற்கையான உரிமைகள். இவை மனித உரிமைகளைப் பாதுகாக்க வழிவகுக்கிறது.

அடிப்படைக் கடமைகள்

  • இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் என்பவை முன்னாள் சோவியத் யூனியன் (USSR) அரசியலமைப்பின் தாக்கத்தால் சேர்க்கப்பட்டதாகும்.
  • 1976ஆம் ஆண்டு , காங்கிரஸ் கட்சி சர்தார் ஸ்வரன் சிங் கமிட்டியை அமைத்து அடிப்படைக் கடமைகள் குறித்து ஆராய பரிந்துரை செய்தது. அக்கமிட்டி அரசியலமைப்புச் சட்ட திருத்தம் செய்ய பரிந்துரைத்தது.
  • அதன்படி 1976 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42வது அரசியல் அமைப்புச் சட்டத்திருத்தம் நமது அரசியலமைப்பில் குடிமக்களின் பொறுப்புகள் சிலவற்றைச் சேர்த்தது. இவ்வாறு சேர்க்கப்பட்ட பொறுப்புகளே குடிமக்களின் கடமைகள் என்றழைக்கப்பட்டன.
  • மேலும் இந்தச் சட்டத்திருத்தம், அரசியலமைப்பின் பகுதி IV A என்ற ஒரு பகுதியைச் சேர்த்தது.
  • இந்தப் புதிய பகுதி 51A என்ற ஒரேயொடு பிரிவை மட்டும் கொண்டது. இது முதன்முறையாக, குடிமக்களின் பத்து அடிப்படைக் கடமைகளை விளக்கும் குறிப்பிட்ட சட்டத் தொகுப்பாக உள்ளது.

அடிப்படைக் கடமைகளின் பட்டியல்

ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமைகளாக பின்வருவனவற்றை சட்டப்பிரிவு 51 A வலியுறுத்துகிறது.

அ) ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அரசியலமைப்பு, அதன் கொள்கைகள், நிறுவனங்கள், தேசியகீதம், தேசியக்கொடி, தேசிய சின்னங்கள் ஆகியவற்றை மதித்தல்.

ஆ) சுதந்திர போராட்டத்திற்குத் தூண்டுகோலாக அமைந்த உயரிய நோக்கங்களைப் போற்றி வளர்த்தல்.

இ) இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை , ஒருமைப்பாடு இவற்றைப் பேணிப் பாதுகாத்தல்

ஈ) தேசப் பாதுகாப்பிற்காகத் தேவைப்படும் பொழுது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல்.

உ) சமய, மொழி மற்றும் பிராந்திய அல்லது பகுதி சார்ந்த வேறுபாடுகளை மறந்து, பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் பழக்கத்தை நிராகரித்து, பெண்களின் கண்ணியத்தைக் காக்கும் எண்ணங்களை மேம்படுத்தி, இந்திய மக்கள் அனைவரிடையேயும் சகோதரத்துவத்தை வளர்த்தல்.

ஊ) நமது உயர்ந்த, பாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்து பாதுகாத்தல்

எ) காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் மற்றும் உயிரினங்கள் அடங்கிய இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, மேம்படுத்தி அவை வாழும் சூழலை ஏற்படுத்துதல்.

ஏ) அறிவியல் கோட்பாடு, மனிதநேயம், ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தல்

ஐ) வன்முறையைக் கைவிட்டு பொது சொத்துக்களைப் பாதுகாத்தல்.

ஒ) தனிப்பட்ட மற்றும் கூட்டுசெயல்பாடுகள் என அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்தவற்றை நோக்கி செயல்பட்டு, தேசத்தின் நிலையான, உயர்ந்த முயற்சி மற்றும் சாதனைக்காக உழைத்தல்.

ஓ) 6 முதல் 14 Z வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை வழங்குதல். (2002இல் அடிப்படைக் கடமையை அறிமுகப்படுத்தியது. இந்தப் பிரிவின்கீழ் அனைத்து இந்திய குடிமக்கள் அல்லது பெற்றோர்கள் 6 முதல் 14 வயதுள்ள தங்கள் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்).

மத்திய- மாநில உறவுகள்

இந்திய அரசு கூட்டாட்சி முறையில் அமைந்துள்ளதால் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே அதிகாரங்களை அரசியலமைப்பு பிரிக்கிறது. மத்திய – மாநில அரசுகளுக்கிடையே நிலவும் உறவினை நாம் மூன்று தலைப்புகளின் கீழ் காணலாம்.

சட்டமன்ற உறவுகள்

  • மத்திய நாடாளுமன்றம், இந்தியா முழுவதற்கும் அல்லது இந்தியாவின் எந்த பகுதிக்கும் சட்டமியற்றும் அதிகாரம் பெற்றுள்ளது. இது இந்தியாவின் மாநிலங்களுக்கு மட்டுமின்றி யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும்.
  • இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணை, மத்திய- மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரப் பகிர்வினைப் பற்றி கூறுகிறது. அவை மத்திய பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப்பட்டியல் என மூன்றி பட்டியல்கள் முறையே 97, 66, 47 என்று அதிகாரத்தை வழங்கியுள்ளது.
  • மத்திய அரசுக்கு சொந்தமான பட்டியலில், சட்டமியற்றும் பிரத்யோக அதிகாரத்தை நாடாளுமன்றம் பெற்றுள்ளது.
  • மாநில அரசுக்குச் சொந்தமான பட்டியலில் சட்டமியற்றும் பிரத்யோக அதிகாரத்தை மாநில சட்டமன்றம் பெற்றுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் பொதுப்பட்டியலில் உள்ள துறைகளின் மீது சட்டமியற்ற அதிகாரம் கொண்டுள்ளன.
  • ஆனால், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் குறித்து சட்டமியற்றும் பொழுது முரண்பாடு ஏற்பட்டால், மத்திய அரசு இயற்றும் சட்டமே இறுதியானது.
  • தற்போது அதிகாரப் பகிர்வு என்பது மத்திய அரசு பட்டியலில் 100 துறைகள், மாநில அரசு பட்டியலில் 61 துறைகள் மற்றும் இரண்டுக்கும் பொதுவான பொதுப்பட்டியலில் 52 துறைகள் என்றும் மாற்றப்பட்டுள்ளது. 1976ஆம் ஆண்டு மேற்கோள்லப்பட்ட 42வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மாநிலப்பட்டியலில் இருந்து 5 துறைகளை, பொதுப் பட்டியலுக்கு மாற்றியது. அவை, கல்வி, காடுகள்,எடைகள் மற்றும் அளவுகள், பறவைகள் மற்றும் வனவிலங்கள் பாதுகாப்பு, மற்றும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற அமைப்புகளைத் தவிர பிற நீதிமன்றங்களின் நீதி நிர்வாகம் ஆகியனவாகும்.

நிர்வாக உறவுகள்

ஒரு மாநில அரசின் நிர்வாக அதிகாரம் அதன் சொந்த மாநிலத்தில் மட்டுமே உள்ளது மற்றும் அம்மாநிலத்தில் மட்டுமே தனக்கான சட்டமியற்றும் தகுதியையும் பெற்றுள்ளது. அதே வேளையில், மத்திய அரசும், பிரத்தியோக நிர்வாக அதிகாரம் பெற்றுள்ளது. அவை,

அ) நாடாளுமன்றம் தொடர்பான விஷயங்களில் சட்டங்களை இயற்ற சிறப்பு அதிகாரம்

ஆ) மாநில அரசுகள் செய்து கொள்ளும் உடன்படிக்கை

இ) ஒப்பந்தங்களை அங்கீகரிப்பது ஆகியனவாகும்.

  • 1969இல் மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் குறித்து முழுவதும் ஆராய தமிழக அரசு Dr.P.V.இராஜமன்னார் தலைமையின் கீழ் மூவர் குழு ஒன்றை நியமித்தது.

நிதி உறவுகள்

  • இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி XII சட்டப்பிரிவு 268ல் இருந்து 293 வரை உள்ள பிரிவுகள் மத்திய-மாநில அரசுகளின் நிதிசார்ந்த உறவுகளைப் பற்றி விளக்குகிறது.
  • மத்திய-மாநில அரசுகள், அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் , பலவகையான வரிகளை விதிக்கும் அதிகாரங்களைப் பெற்றுள்ளன.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 280ன் கீழ் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்ட நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசால் சில வரிகள் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு, மத்திய அரசாலும், மாநில அரசாலும் பிரித்துக்கொள்ளப்படுகின்றன.
  • மத்திய-மாநில அரசுகளின் உறவினை விசாரிக்க மரைந்த முன்னாள் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் 1983ஆம் ஆண்டு சர்க்காரியா குழுவினை நியமித்தார். அக்குழுவின் 247 பரிந்துரைகளில் 180 பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்தியது. அவற்றுள் மிக முக்கியமானது 1990இல் அமைக்கப்பட்ட மாநிலங்களுக்கிடையிலான குழு ஆகும்.

அலுவலக மொழிகள்

  • அரசியலமைப்பு சட்டப் பகுதி XVII இல் 343 லிருந்து 351 வரையுள்ள சட்டப்பிரிவுகள் அலுவலக மொழிகள் பற்றி விவரிக்கின்றன. இவை நான்கு தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளன. அவை யூனியன் பிரதேச மொழிகள், வட்டார மொழிகள், நீதித்துறை மொழிகள், சட்டம் மற்றும் சிறப்பு வழிகாட்டு மொழிகள் என்ற பெயரில் உள்ளன.
  • முதலாவது மொழிக்குழு 1955ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. இது தனது அறிக்கையை, 1956இல் சமர்ப்பித்தது. இவ்வறிக்கையின் தொடர்ச்சியாக நாடாளுமன்றம் 1963ஆம் ஆண்டில் அலுவலகமொழி சட்டம் இயற்றியது.
  • இச்சட்டம் ஹிந்தியுடன் ஆங்கிலம் மத்திய அரசின் அனைத்து அலுவலக நோக்கங்களுக்காகவும், நாடாளுமன்ற கருத்து பரிமாற்றத்திற்காகவும், 15 ஆண்டுகளுக்கு பிறகும் கூட அதன் பயன்பாட்டைத் தொடரலாம் என்று அறிவித்தது.
  • மீண்டும் 1967ஆம் ஆண்டு அலுவலக மொழிகள் திருத்தச் சட்டம், அலுவலக மொழியாக ஆங்கிலம் காலவரையறையின்றி தொடரலாம் என்று அறிவித்தது.
  • மீண்டும் 1967ஆம் ஆண்டு அலுவலக மொழிகள் திருத்தச் சட்டம், அலுவலக மொழியாக ஆங்கிலம் காலவரையறையின்றி தொடரலாம் என்று அறிவித்தது. அரசியலமைப்பும் கூட சில வட்டார மொழிகளை மாநிலங்களுக்கான அலுவலக பரிமாற்ற மொழியாகப் பயன்படுத்த அனுமதித்தது.
  • தொடக்கத்தில் 14 மொழிகள் அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. தற்போது 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • 2004ஆம் ஆணு இந்திய அரசு “செம்மொழிகள்” எனும் புதிய வகைப்பாட்டினை ஏற்படுத்த தீர்மானித்தது. அதன்படி 6 மொழிகள் செம்மொழி தகுதியைப் பெற்றுள்ளன. அவை , தமிழ் (2004), சமஸ்கிருதம் (2005), தெலுங்கு (2008), கன்னடம் (2008), மலையாளம் (2013) மற்றும் ஒடியா (2014).

அவசரகால ஏற்பாடுகள்

அவசரகால நிலைகளை எதிர்கொள்ளும் விதமாக மத்திய அரசு கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுள்ளது. அரசியலமைப்பில் மூன்று வகையான அவசரநிலைகள் பற்றி கூறப்பட்டுள்ளன.

தேசிய அவசரநிலை (சட்டப்பிரிவு 352)

  • போர், வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு, அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்லது உடனடி ஆபத்து அல்லது அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், குடியரசுத் தலைவர், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம்.
  • போர் அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது அது ‘வெளிப்புற அவசரநிலை’ எனப்படுகிறது. ஆயுதமேந்திய கிளர்ச்சிக் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும்பொழுது அது ‘உள்நாட்டு அவசர நிலை’ எனப்படுகிறது.
  • இந்த வகையான அவசரநிலைகள் 1962, 1971, 1975 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டன.

மாநில அவசரநிலை (சட்டப்பிரிவு 356)

  • ஒரு மாநிலத்தில், மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும்பொழுது அரசியலமைப்பின் விதிகளுக்கேற்ப ஆளுநர் அறிக்கை அளிக்கும் பொழுது, குடியரசுத் தலைவர் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356ன் கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம்.
  • இந்த அவசரநிலை, சட்டப்பிரிவு 352ன் படி நடைமுறையில் இருந்தாலும் அல்லது தேர்தல் ஆணையம் சட்டமன்றத் தேர்தலை நடத்த உகந்த சூழல் இல்லை என்று சான்றளித்தாலும் மட்டுமே ஓராண்டைத் தாண்டியும் தொடரமுடியும்..
  • அதிகபட்சம் அவசரநிலையின் காலம் 3 ஆண்டுகள் இருக்கமுடியும். இந்த வகையான அவசரநிலையில் சட்டமியற்றுதல் மற்றும் நிர்வாக செயல்பாடுகளில் மாநிலங்கள் தங்கள் தன்னாட்சியை இழக்கின்றன.
  • அவசரநிலை அறிவித்த பிறகு மாநில சட்டமன்றம் முடக்கப்படுகிறது. மாநிலமானது, குடியரசுத் தலைவர் சார்பாக ஆளுநரால் ஆளப்படுகிறது.
  • இந்தியாவில் முதன்முறையாக 1951இல் பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.

நிதி சார்ந்த அவசரநிலை (சட்டப்பிரிவு 360)

  • நிதிநிலைத் தன்மை, இந்தியாவின் கடன் தன்மை மற்றும் இந்தியாவின் பகுதிகள் ஆபத்தில் இருந்தால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 360ன் கீழ் குடியரசுத் தலைவர் நிதிசார்ந்த அவசரநிலையைப் பிறப்பிக்கலாம்.
  • இந்த வகையான அவசர நிலையில் மத்திய-மாநில அரசு ஊழியர் எந்த வகுப்பினராயினும் அவர்களது ஊதியம், படிகள் மற்றும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைவரது ஊதியமும் குடியரசுத் தலைவரின் ஓர் ஆணையின் மூலம் குறைக்கப்படும். இந்த வகையான அவசரநிலை இந்தியாவில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்

  • ‘அமெண்ட்மெண்ட்’ (Amendment) எனும் சொல் மாற்றம், மேம்படுத்துதல் மற்றும் சிறு மாறுதல் என்பதைக் குறிக்கிறது. வழக்கமாக இச்சொல் ஒரு நாட்டின் அரசியலமைப்பில் செய்யப்படும் ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட மாற்றங்களைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.
  • அரசியலமைப்பின் சட்டம் பகுதி XXல் 368வது சட்டப்பிரிவு, அரசியலமைப்பினை சட்ட திருத்தம் செய்வதில் பின்பற்றப்படும் முறைகள் மற்றும் திருத்தம் செய்வதில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பற்றி தெரிவிக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் செய்வதில் பின்பற்றப்படும் வழிமுறைகள்

  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும், அவையின் ஒட்டுமொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மற்றும் அவைக்கு வந்து , வாக்களித்தவர்களில் 3 ல் 2 பங்குக்கு குறையாமல் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட வேண்டும்.
  • குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தபின் மசோதா திருத்தப்பட்டச் சொற்களுடன் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • நாடாளுமன்றத்தால் மட்டுமே அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவரமுடியும். மாநில சட்ட மன்றத்தால் அரசியலமைப்பில் எந்தவொரு சட்டத்திருத்தத்தையும் கொண்டுவர முடியாது.

அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வகைகள்

  • அரசியலமைப்பின் 368வது சட்டப்பிரிவு மூன்று வகைகளில் அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்களைச் செய்ய வழிவகுக்கிறது. அதாவது நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மை மற்றும் மொத்த மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களின் எளிய அறுதிப் பெரும்பான்மையுடன் திருத்தம் மேற்கொள்ளலாம்.
  • ஆனால் சில அரசியலமைப்பு சட்டப்பிரிவுகளைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்தின் எளிய அறிய பெரும்பான்மை தேவை என அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ளது.
  • அதாவது, நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் வந்திருந்து, வாக்களித்த பெரும்பான்மை உறுப்பினர்கள் மூலம் சாதாரண சட்டமன்ர நடைமுறை போல் செய்யப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்கள், திருத்தங்களாகக் கருதப்படமாட்டாது.
  • 368வது சட்டப்பிரிவும் இதனை ஏற்காது. ஆகையால் அரசியலமைப்பினை மூன்று வழிகளில் மட்டுமே திருத்தமுடியும்.
  1. நாடாளுமன்றத்தின் சாதாரண அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல்.
  2. நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல்.
  3. நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலைப் பெறுவதன் மூலம் திருத்தப்படுதல்.
  • அரசிலமைப்பின் 42வது சட்டத்திருத்தம் ‘சிறிய அரசியலமைப்பு’ என அறியப்படுகிறது.

அரசியலமைப்பு சீர்திருத்தக் குழுக்கள்

  • அரசியலமைப்பு செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய 2000ஆம் ஆண்டில் இந்திய அரசு ஒரு தீர்மானத்தின் படி திரு. M.N. வெங்கடாசலய்யா தலைமையில் அரசியலமைப்புச் சட்ட செயல்பாட்டிற்கான தேசிய சீராய்வு ஆணையம் ஒன்றை அமைத்தது.
  • அரசின் பல்வேறு நிலைகள், அவற்றிற்கிடையேயான தொடர்பு மற்றும் பங்களிப்புகள் குறித்துப் புதிய நோக்கத்தோடு ஆராய ஏப்ரல் 2007ஆம் ஆண்டு மூன்று உறுப்பினர்களைக் கொண்ட N.M.பூஞ்சி தலைமையில் அப்போதைய அரசு ஓர் ஆணையத்தை அமைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!