Samacheer NotesTnpsc

அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் Notes 9th Social Science

9th Social Science Lesson 4 Notes in Tamil

4. அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

அறிமுகம்

  • மனித நாகரிகம் குறித்த வரலாற்றின் இரண்டாவது கட்டம் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டத்திலிருந்து தொடங்குகிறது. இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு, உற்பத்தி மற்றும் போர் முறைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது.
  • அதற்குமுன், செம்பும் அதன் கலப்பு உலோகமான வெண்கலமும்தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவை விலையுயர்ந்தவை. இவற்றின் கூர்முனை விரைவில் மழுங்கிப் போகும் தன்மையுடையது என்பதால் வெண்கலத்தாலான ஆயுதங்களையோ , கலப்பை போன்ற கருவிகளையோ திறம்படப் பயன்படுத்த முடியாது.
  • மேலும், வெண்கலம் , செம்புத் தாது ஆகியவற்றை விட இரும்புத் தாதுவளம் இயற்கையில் அபரிமிதமாகக் கிடைக்கிறது.
  • மேலும், இரும்புக் கோடரியின் பயன்பாடு விவசாயத்தின் மிக நன்றாகப் பயன்பட்டது. இரும்புக் கோடரி காடுகளைத் திருத்தவும், இரும்புக் கலப்பை இறுகிய நிலத்தைப் பிளக்கவும் விவசாயிகளுக்குப் பெரிதும் உதவியாக இருந்தன.
  • பொ.ஆ.மு. 7ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இரும்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் அஸிரியப் பேரரசு வல்லமை பெற்றது.
  • சிற்றரசுகள் அல்லது நகர அரசுகள் சீனா, ஆசியா மைனர் (நவீன துருக்கி), கிரேக்கம், இத்தாலி, பாலஸ்தீனம், லெபனான் , வட ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தோன்றின.
  • பொ.ஆ.மு. 6ஆம் நூற்றாண்டில் வணிகமும் நகரமயமாக்கமும் வீட்டுருவாக்கம் பெற்று, வட இந்தியாவில் ஒரு புதிய நாகரிகம் வளர்ச்சி பெறக் காரணமாயின.
  • முக்கியமான சமூக அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த இக்கால கட்டத்தில்தான் புத்தரும் மகாவீரரும் தோன்றினர். அவர்களின் மறைவுக்குப் பிந்தைய நூற்றாண்டில், புத்த, சமணக் கோட்பாடுகள் இந்தியாவில் முக்கியமான சமயங்களாகப் பரவின.
  • புதிய நம்பிக்கைகளையும் தத்துவங்களையும் தாங்கி, அவற்றைப் பின்பற்றும் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்களுடன் எழுச்சிமிக்க சமயக் கோட்பாடுகளாக இவை பரவின.
  • இதே காலகட்டத்தில் புத்த, சமண சமயங்களைப் போலவே பாரசீகத்தில் ஜொராஸ்ட்ரிடிரியனிசமும் சீனாவில் கம்பூசியனிசமும் தாவோயிசமும் தோன்றின.

பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் மதம்

  • புதிய இரும்புக் காலத்தில் உருவான புதிய நாகரிகங்களுக்கு எனச் சில குறிப்பிட்ட பொதுக் கூறுகள் காணப்படுகின்றன.
  • புதிய கைத்தொழில்கள், தொலைதூர வர்த்தகத்தின் வளர்ச்சி, சிறுநகரங்களும் நகரங்களும் உருவாகுதல் , உலகளாவிய மதங்களின் தோற்றம், நன்னடத்தை விதிகள் உருவாகுதல் ஆகியன இவற்றின் பொதுக் குணங்களாகும்.
  • எனவே, பொருளாதார, பண்பாட்டு, அறிவுசார் நோக்கில் தனிச் சிறப்பான வளர்ச்சி பெற்ற காலகட்டமாக பொ.ஆ.மு. 6ஆம் நூற்றாண்டு திகழ்ந்தது.
  • இக்காலத்தில்தான் ஏராளமான அறிஞர்கள், சிந்தனையாளர்கள், புதிய மதங்களைத் தோற்றுவித்து அக்காலகட்டத்தை வரலாற்றுச் சிறப்புமிக்கதாய் ஆக்கினார்கள்.
  • சீனாவின் கன்பூசியஸ், ஈரானின் ஜெராஸ்டர், இந்தியாவின் மகாவீரர், புத்தர் ஆகியோர் இக்காலகட்டத்தில் புகழ் பெற்றனர்.

கன்பூசியனிசமும், தாவோயிசமும்

  • பொ.ஆ.மு. 6ஆம் நூற்றாண்டில் சீனாவில் கன்பூசியஸ், லாவோட்சே ஆகிய மாபெரும் சிந்தனையாளர்கள் இருவர் தோன்றினர்.
  • இவர்கள் தனிமனிதர்களுக்கும் சமூகத்திற்குமான சமூக நடத்தைகளையும் ஒழுக்க விதிகளையும் உருவாக்கினார்கள்.
  • ஆனால், இவர்களது மரணத்திற்குப் பிறகு, இவர்கள் நினைவாகக் கோவில்கள் கட்டப்பட்டு, இவர்கள் போதித்த தத்துவங்கள் மதங்களாக மாற்றப்பட்டன. இவை முறையே கன்பூசியனிசம், தாவோயிசம் என்று அழைக்கப்பட்டன.
  • இவர்களுடைய நூல்கள் சீனாவில் மிகவும் மதிக்கப்பட்டன. கன்பூசியனிசம் சீனாவின் ஆளும் வர்த்தகத்தின் மீது மட்டுமல்லாது சாதாரண மக்கள் மீதும் செல்வாக்கு செலுத்தியது.

கன்பூசியஸ் (பொ.ஆ.மு. 551 – 478)

  • கன்பூசியஸ் பொ.ஆ.மு. 551 இல் ஷாண்டுங் மாகாணத்தில் பிறந்தார். அவர் வரலாறு, கவிதை, தத்துவம், இசை ஆகியவற்றைப் பயின்றார். அவர் ஐந்து முக்கியமான படைப்புகளை எழுதினார்.
  1. ஆவண நூல் – இது மனித சமூகத்தை நெறிப்படுத்தும் அறவியல் கோட்பாடுகளைக் கூறுகிறது.
  2. இசைப்பாடல் நூல் – ஒழுக்க நெறிமுறைகளைப் பாடல் வடிவில் கூறுகிறது.
  3. மாற்றம் குறித்த நூல் – மெய்ப்பொருளியல் பற்றி பேசுகிறது.
  4. இளவேனிலும் இலையுதிர் காலமும் – அரசியல் ஒழுக்க நெறி பற்றிக் கூறுகிறது.
  5. வரலாற்று நூல் – சீனாவின் பண்டைய மதங்கள் பற்றிய நிகழ்வுகளையும் புராணக்கதைகளையும் கூறுகிறது.

கன்பூசியனிசத்தின் ஐந்து முக்கியக் கொள்கைகள்

  1. மனிதத்தன்மை
  2. நேர்மை
  3. நன்னடத்தை
  4. மெய்யறிவு
  5. நம்பகத்தன்மை
  • மெய்யறிவு குடும்பத்திலிருந்துதான் வளரும் என்றார் கன்பூசியஸ்.
  • ஓர் ஒழுங்கான குடும்பத்தின் கட்டுப்பாடுமிக்க தனிநபர்தான் சமூகத்தின் அடித்தளம் என்கிறார். அவரைப் பொறுத்தவரை மேன்மையான மனிதர் என்பவர் வெறும் அறிவாளியாகவோ, அறிஞராகவோ மட்டும் இல்லாமல், முன்மாதிரியான நடத்தை கொண்டவராகவும் இருக்கவேண்டும்.
  • கன்பூசியசின் மேன்மையான மனிதர் புத்திசாலித்தனம், துணிச்சல், நல்லெண்ணம் ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டவராவார்.
  • குழந்தைகள் பொற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனைவி கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று கன்பூசியஸ் வலியுறுத்தினாலும் “உத்தரவு தவறென்றால், ஒரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும், ஓர் அமைச்சர் அரசரை எதிர்க்க வேண்டும்” என்றும் தெளிவாக முன்மொழிகிறார்.
  • அரசு குறித்து அவரிடம் கேட்ட போது, “ஒரு அரசிற்கு மூன்று விசயங்கள் அவசியமானவை; நாட்டில் போதுமான உணவு, போதுமான இராணுவத் தளவாடங்கள், மக்களுக்குத் தம் ஆட்சியாளர் மீது நம்பிக்கை ஆகியன இருக்க வேண்டும்” என்றார்.
  • கன்பூசியசிஸ் பெயரைப் புதிய பின்இன் ஒலிபெயர்ப்பு முறைப்படி காங் ஃபூ சு என்று எழுதவேண்டும். சீனாவிற்குச் சென்ற ஐரோப்பிய அறிஞர்களுக்கு அதை உச்சரிக்க சிரமமாக இருந்தது. எனவே அதை லத்தீனில் ஒலி பெயர்த்து கன்பூசியஸ் என்று அழைக்கத் தொடங்கினர். பின்இன் என்பது லத்தீன் எழுத்துகளில் எழுதப்படும் சீனச் சொற்களை உச்சரிக்க மொழியிலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு முறையாகும்.
  • கன்பூசியஸின் தத்துவம் மக்களுக்குத் தமது அரசியல் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அளித்தது. மேலும் மக்களுக்கான அரசின் கடமைகளையும் சுட்டிக்காட்டியது.
  • அரசு ஒரு குறிக்கோளை முன்வைத்து இயங்க வேண்டும் என்று கன்பூசியஸ் போதித்தார்.
  • தேசிய வாழ்க்கை என்பதைப் பொறுத்தவரை, அரசியல் இறையாண்மைக்கான உண்மையான, முறையான ஆதாரம் நாட்டில் வாழும் மக்கள்தான் என்பது அவரது கருத்தாகும்.
  • ஆட்சியாளர்கள் பாரபட்சமின்றி ஆட்சி நடத்த வேண்டும்; நன்னடத்தை கொண்டோரைத்தான் அரசுப் பதவிகளில் அமர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
  • கன்பூசியனிசம் ஒரு மதம் என்பதற்காக கருதப்படாமல், ஒரு சமூக அமைப்பாக, அறம்சார் தத்துவ முறையாகவே கருதப்படுகிறது.

தாவோயிசம்

  • கன்பூசிய காலக்கட்டத்திற்கு முந்தைய தத்துவஞானிகளில் தலைசிறந்தவர் லாவோட்சே.
  • இவர் கன்பூசியஸை விட வயது மூத்தவர். லாவோட் சே பொ.ஆ.மு,. 604ல் பிறந்தார். அந்தக் காலகட்டத்து அரசியல்வாதிகளின் முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவற்றால் மனம் வெறுத்த அவர் நாட்டை விட்டு வெளியேறி, ஒரு உறைவிடத்தில் அமைதியாக வாழ்ந்தார்.
  • ஐயாயிரம் சொற்கள் கொண்ட ஒரு நூலை இரண்டு பாகங்களாக எழுதினார். பின்னர் அவர் அந்த இடத்திலிருந்து அகன்று சென்றார். அவர் எங்கே இறந்தார் எனத் தெரியவில்லை.
  • அவரது நூலான தாவோ டே ஞிங் என்பது வாழ்க்கைக்கான வழியாட்டியாகும்.

லாவோட்சேவின் போதனைகள் (தாவோயிசம்)

  • உலகில் மனிதர்களின் மகிழ்ச்சியின்மைக்குக் காரணம் மனிதர்களின் சுயநலம்தான். சுயநலம் என்பது நிறைவு செய்ய இயலாத அளவற்ற ஆசைகளை மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறது.
  • இயற்கையில் அனைத்துமே இயற்கை வழியிலேயே இயங்குகின்றன. மனித நடத்தைக்கான விதி இயற்கையோடு பொருந்தியிருக்க வேண்டும்.
  • மனிதர்கள் யாரோ ஒருவர் ஒழுங்குபடுத்திய ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். அறிவைப் பெற்ற மனிதர்கள் தமது களங்கமில்லாத தன்மையை இழந்ததுதான் இதற்குக் காரணம். தமது திரட்டப்பட்ட அறிவினைக் கொண்டு அவர்கள் ஒரு நகர நாகரிகத்தை ஏற்படுத்தி, தம்மைத்தாமே மகிழ்ச்சியற்றவர்களாக் ஆக்கிக் கொள்கிறார்கள்.

ஜொராஸ்ட்ரியனிசம்

  • நாம் அறிந்த மிகப் பழமையான உலக மதங்களில் ஜொராஸ்ட்ரியனிசமும் ஒன்று.
  • பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் செழித்தோங்கி, மத்தியக் கிழக்கில் ஆதிக்கம் செலுத்திய மூன்று மாபெரும் பாரசீகப் பேரரசுகளுக்கு அரச மதமாக அது இருந்தது.
  • ஜொராஸ்ட்ரியப்னிசத்தைத் தோற்றுவித்தவர் பாரசீகத்தைச் சேர்ந்த ஜொராஸ்டர். அவர் தம் மக்கள் மிகப் பழங்காலத்துக் கடவுளர்களை வணங்குவது கண்டு வேதனையுற்று அவர் அதற்கெதிராகக் கிளர்ச்சி செய்தார்.
  • ஒளிக் கடவுளான அஹுர மஸ்தா தான் உலகின் ஒரே கடவுள் என்று பிரகடனம் செய்தார்.
  • ஜொராஸ்ட்ரியங்களின் புனித நூல் ஜென்ட் அவெஸ்தா என்பதாகும். இது பல்வேறு காலகட்டங்களின் புனித இலக்கியங்களான பிரார்த்தனைப் பாடல்கள், வேண்டுதல்கள், சட்டங்கள், புராணங்கள், புனிதக் கதைகளின் தொகுப்பாகும்.
  • ஜொராஸ்ட்ரிய தத்துவங்களும் சடங்குகளும் வேதங்களில் சொல்லப்படும் தத்துவங்கள், சடங்குகளை ஒத்துக் காணப்படுகின்றன.
  • ஜெண்ட் அவெஸ்தாவின் மொழி இந்தோ-ஆரியன் மொழியினதாகும். மொழியியியலாளர்கள் மேற்கு ஆசியாவின், குறிப்பாக ஈரானின் மொழிகளுக்கும் இந்தோ-ஆரிய மொழிகளுக்கு இடையே நெருங்கிய உறவு இருப்பதை நிறுவியிருக்கிறார்கள்.
  • பழைய ஈரானிய மொழி பொ.ஆ.மு. இரண்டாவது ஆயிரமாண்டைச் சேர்ந்தது. பின்னர் அது திராவிடர்கள், இந்திய துணைக் கண்டத்தின் பூர்வகுடிகள் ஆகியோரின் மொழிகளையும் இணைத்துக் கொண்டது.
  • வரலாற்றுப் ஆய்வாளர் ரொமிலா தாப்பரின் கூற்றின்படி, பழைய ஈரானிய, இந்தோ-ஆரியன் மொழி பேசியோர் தொடக்கத்தில் ஒரே குழுவைச் சார்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கவேண்டும். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்திருக்கலாம் என்கிறார்.

போதனைகள்

  • ஒரு மதம் அல்லது ஓர் அரசு அல்லது ஒரு சமூகத்தின் முதன்மையான நோக்கம் ஒழுக்கத்தை வளர்த்தெடுப்பதுதான் என்று ஜொராஸ்டர் போதித்தார்.
  • எண்ணம், சொல், செயல் என அனைத்திலும் புனிதமாக இருப்பதுதான் மிக உயரிய மதக் கோட்பாடாகும். அஹுர மஸ்தாவிடம் 1. ஒளி, 2. நல்ல மனம், 3. நன்மை, 4. அரசாட்சி, 5. பக்தி, 6. ஆரோக்கியம், 7. இறவாத் தன்மை ஆகிய தன்மைகள் உள்ளன என்றார்.
  • அஹுர மஸ்தா அனைத்தும் அறிந்தவர். சகல சக்திகளும் கொண்டவர். எங்கும் நிறைந்திருப்பவர். ஜொராஸ்ட்ரிய மதத்தில் பலை, உருவ வழிபாடு ஆகியவை இல்லை. கடவுளின் வடிவமாகத் தீயை வணங்குவதுதான் உயர்ந்த வழிபாட்டு முறையாகக் கருதப்பட்டது.
  • தானம் செய்வதற்கும் ஏழைகளுக்குச் சேவை செய்வதற்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.
  • மனிதர்களின் நற்பண்புகள் என்பவை பிரார்த்தனை, தியானம், யாகங்கள், சடங்குகள் ஆகியவை மட்டும் அல்ல.
  • தீமையை எதிர்த்துப் போராடுவதும், நன்மை செய்ய முயற்சி செய்வதும் அஹுர மஸ்தாவின் செயல்களுக்குத் துணைபுரிவதும் நற்பண்புகள் ஆகும்.
  • பாரசீகத்தை (ஈரான்) அரபியர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, பொ.ஆ.8ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரை பல ஜொராஸ்ட்ரியக் குடும்பங்கள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இடம்பெயர்ந்ததால், அந்த மதம், தான் பிறந்த மண்ணிலேயே அழிந்துபோனது.
  • தமது புதிய நம்பிக்கைகளைத் திணிக்க அராபியர்கள் மேற்கொண்ட முயற்சிகள், மதகுருமார்கள் கொல்லப்பட்டது, நெருப்புக் கோவில்கள் அழிக்கப்பட்டது போன்ற காரணங்களால் ஜொராஸ்ட்ரிய மதம் அழிந்தது.
  • பாரசீகத்திலிருந்து முதலில் வர்த்தகர்களாகவும், பிறகு மதத் துன்புறுத்தலிலிருந்து தப்பித்துப் பாதுகாப்பான வாழிடம் தேடுபவர்களாகவும் இந்தியா வந்த பார்ஸிகள் தம்மோடு ஜோராஸ்ட்ரிய மதத்தையும் கொண்டு வந்தனர். அன்றிலிருந்து அதை இந்தியாவில் கடைபிடித்தும் வருகிறார்கள்.
  • ஈரானிய, இந்திய மதங்களைப் போன்ற கோட்பாடுகளைக் கொண்டிருந்த மனிச்சீயி மதம் பொ.ஆ.மு,3ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தில் மணி என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் திருச்சபைகள் ஏற்கப்பட்ட மதக் கருத்துகளை மறுப்பவர்களுக்கு எதிரானவர்களை ஒழுக்கியதால் மனிச்சீயி கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் துன்புறுத்தப்பட்டனர். இதனை மனிச்சீயி மதத்தால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இந்தியாவில் இரும்புத் தொழில்நுட்பம் ஏற்படுத்திய தாக்கம்

  • கங்கைச் சமவெளியில் மக்கள் தங்களது உணவுத்தேவையை விட அதிகமான அளவில் பயிர்களை உற்பத்தி செய்ய அறிந்து கொண்டனர்.
  • எனவே மற்றொரு பகுதி மக்கள் வேறு சில கைத்தொழில்களை மேற்கொள்ள வாய்ப்பு அமைந்தது. விவசாயிகளைப் போலவே இந்த கைவினைக் கலைஞர்களும் தமக்கு மூலப்பொட்ருட்களைச் சேகரித்துத் தரவும், தமது உற்பத்தியை விநியோகிக்கவும் சிலரை நம்பி இருந்த நேர்ந்தது.
  • ஆரம்பக்கட்ட நகரமயமாக்கல் இரண்டு விதங்களில் நிகழ்ந்தது. ஒன்று, சில கிராமங்கள் இரும்புத் தொழில், மட்பாண்டங்கள் செய்தல், மரவேலைகள் தொழில், நெசவு போன்றவற்றில் ஈடுபட்டதன் மூலமாக நிகழ்ந்தது.
  • இன்னொன்று, கிராமங்களின் தனித்திறமை கொண்ட கைவினைஞர் குழுக்கள் மூலப்பொருட்கள் கிடைக்கும் இடத்திற்கு அருகில் இருந்தவாறு, சந்தைகளை இணைத்ததன் மூலம் நிகழ்ந்தது.
  • இப்படி மக்கள் ஒரே இடத்தில் குவிந்து கிராமங்கள் நகரங்களாகவும் பரிமாற்ற மையங்களாகவும் வளர்ச்சிபெற உதவுகிறது.
  • வைசாலி, சிராவஸ்தி, ராஜகிருஹம், ஹௌசாம்பி, காசி ஆகியவை கங்கைச் சமவெளியின் சில முக்கியமான வர்த்தக மையங்களாகும்.

மதம் – ரிக் வேதத்துக்குப் பிந்தைய காலம்

  • ரிக் வேதத்தைத் தொடர்ந்து யஜுர், சாம, அதர்வ வேதங்கள் எழுதப்பட்டன. பிராமணங்கள் என அழைக்கப்படும் சடங்குகளின் தொகுப்புகள், இசைப் பாடல் வரிகள், காடுகளில் ரகசியமாகக் கற்று அறியவேண்டிய அறிவு, சில ரிக்வேதப் பாடல்களின் விளக்கங்கள் அடங்கிய ஆரண்யங்களும் உபநிடதங்களும் பொ.ஆ.மு. 1000 -600 காலகட்டத்தில் கங்கைச் சமவெளியில் தொகுக்கப்பட்டன.

வேத காலத்திற்குப் பிறகு

  • பிந்தைய வேத காலத்தில் ரிக்வேதக் கடவுள்களான வருணன், இந்திரன், அக்கினி, சூரியன், உஷா போன்றவை தம் முக்கியத்துவத்தை இழந்தன.
  • சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய புதிய கடவுள்கள் தோன்றினார்கள்.
  • ஆரியர்கள் தவமியற்றல், பிரம்மச்சரியம் போன்ற கருத்தாக்கங்களை உருவாக்கினார்கள். அந்தணர்கள் வலியுறுத்திய சடங்கு, சம்பிரதாயங்கள் மதத்தின் உண்மையான சாரத்தை மறைத்தன.
  • பிராமணங்களில் சொல்லப்பட்ட விதமாக, செல்வர்கள் மற்றும் மேட்டுக்குடியினரின் ஆதரவோடு நடந்த யாகம் போன்ற சடங்குகளை எதிர்த்துத்தான் மகாவீரரும் புத்தரும் அதற்கு மாற்றாக எழுச்சி மிக்க தங்கள் நன்னெறிப் போதனைகளை முன்வைத்தனர்.

சமணமும், பௌத்தமும்

  • கங்கைச் சமவெளி விவசாயத்திற்குக் காளைகளைப் பயப்படுத்துவது அவசியமாக இருந்தது. எனவே, வேத சங்குகள், யாகங்களுக்காக ஏராளமான கால்நடைகள் பலியிட்டது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
  • சமணரும் புத்தரும் மதச் சடங்குகளுக்காக விலங்குகள் பலியிடுவதை எதிர்த்தனர். அவர்களது துறவும், இரந்துண்ணுதலும், சொத்துகளைத் துறந்து வாழும் மூறையும் அப்புதிய போதகர்களை மக்களுக்கு ஏற்புடையவர்களாக ஆக்கின.
  • வேதச் சடங்குகளின் ஆடம்பரம், விலங்குகளைப் பலியிடுதல், சொத்துகள் மீதான ஆசை போன்ற செய்கைகள் மக்கள் வெறுப்புறச் செய்தன. இதுவே காலப்போக்கில் அவர்களை சமணம் மற்றும் புத்தம் நோக்கி இட்டுச் சென்றது.
  • மகாவீரரும் புத்தரும் தூய வாழ்க்கை வாழ்ந்தார்கள்.எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்கள்.
  • அவர்கள் புகழ்பெற்ற மகத அரசர்களான பிம்பிசாரர், அஜாதசத்ரு ஆகியோரின் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.
  • கௌசாம்பி , குசிநகரம், பனாரஸ், வைஷாலி, ராஜகிருஹம் போன்ற வடபுறத்து நகரங்கள் வணிக நோக்கில் வளர்ச்சி அடைந்த போக்கு வைசியர்களின் முக்கியத்துவத்தை அதிகரித்தது.
  • வைசியர்கள் தமது சமூக நிலையைமேலும் உயர்த்திக் கொள்ளும் ஆவலில் சமணம் மாற்றும் பௌத்தம் நோக்கித் திரும்பினார்கள்.

சமணம்

மகாவீரர் : பிறப்பும் வாழ்வும்

  • வர்த்தமான மகாவீரர் வைஷாலிக்கு அருகே உள்ள குந்தகிராமத்தில் பொ.ஆ.மு. 599இல் பிறந்தார். அவருடைய தாய் திரிசலை, லிச்சாவி இனத்தசி சேர்ந்த இளவரசியாவார்.
  • அவர் தனது இளமைக்காலத்தை ஓர் இளவரசராகக் கழித்தார். யசோதா என்ற இளவரிசியை மணந்தார்.
  • அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மகாவீரர் தனது முப்பதாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி துறவியானார்.
  • சுமார் 12 ஆண்டு காலம் அவர் கடுமையான தவம் செய்து பல இடங்களுக்கு அலைந்து திரிந்தார். துறவற வாழ்வின் 13வது ஆண்டில் அவர் உயரிய ஞானத்தை (கைவல்யம்) அடைந்தார்.
  • அப்போது முதல் அவர் ஜீனர் (உலகை வென்றவர்) என்றும் மகாவீரர் என்றும் அழைக்கப்பட்டார்.
  • சமணர்கள், அவர் தீர்த்தங்கரர்களின் நீண்ட பரம்பரையில் வந்தவர் என்றும் அவர்தான் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் கருதினார்கள்.
  • ரிஷபர் என்பவர்தான் முதல் தீர்த்தங்கரர். பார்சுவநாதர் என்பவர் மகாவீரருக்கு முந்தைய 23வது தீர்த்தங்கரர். மகாவீரர் மகதம், விதேகம், அங்கம் ஆகிய நாடுகளில் விரிவாகப் பயணம் செய்து உபதேசம் செய்தார்.
  • மகத மன்னர்களான பிம்பிசாரரும், அஜாதசத்ருவும் அவருடைய போதனைகளால் ஈர்க்கப்பட்டார்கள்.
  • ஆயிரக்கணக்கான மக்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினர். 30 ஆண்டுகள் போதனை செய்த பிறகு, பொ.ஆ.மு. 527இல் தமது 72வது வயதில் ராஜகிருகத்திற்கு அருகில் உள்ள பவபுரியில் மகாவீரர் காலமானார்.

மகாவீரரின் போதனைகள்

மும்மணிகள் (திரிரத்னா) என்று அழைக்கப்படும் சமண மதத்தின் முக்கியமான மூன்று கொள்கைகள்.

  1. நன்னம்பிக்கை – மகாவீரரின் போதனைகளில், ஞானத்தில் நம்பிக்கை வைத்தல்.
  2. நல்லறிவு – கடவுள் இல்லை, உலகம் படைத்தவன் – இன்றியே இருந்து வருகிறது, அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மா உண்டு என்ற கருத்துகளை ஏற்பது.
  3. நன்னடத்தை — இது மகாவீரரின் ஐம்பெரும் சூளுரைகளைக் கடைபிடிப்பட்க்ஹைக் குறிப்பது.

அவையாவன :

  1. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தலாகாது
  2. நேர்மையுடன் இருப்பது
  3. கருணை
  4. உண்மையுடன் இருப்பது
  5. பிறருடைய சொத்துக்களுக்கு ஆசைப்படாமல் வாழ்வது.

சமண மதம் பரவுதல்

  • தமது புதிய கொள்கையைப் பரப்புவதற்காக மகாவீரர் மடாலயங்களை நிறுவினார்.
  • வசதிகளை ஒதுக்கிவைத்து, மிகக் கடுமையான எளிய வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த சமணத் துறவிகளை நியமித்தார்.
  • வட இந்தியாவில் இந்தப் புதிய மதத்திற்குத் தனநந்தர், சந்திரகுப்த மௌரியர், காரவேலன் போன்ற அரசர்களின் ஆதரவு கிடைத்தது.
  • பொ.ஆ.மு. 4ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்திலும் மேற்கு இந்தியாவிலும் இந்த மதத்திற்கு குறிப்பிடத்தக்க ஆதரவு இருந்தது.
  • சமணம் அனைவரிடத்திலும் ஒரு பொது உணர்வை உருவாக்கியது. வர்ணாசிரம முறையை எதிர்த்தது. இதைப் பின்பற்றத் தொடங்கிய மக்கள் அதிகச் செலவு பிடிக்கும் ஆரம்பரச் சடங்குகளையும் பலிகளையும் கைவிட்டனர்.
  • உயிருள்ள, உயிரற்ற என அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மாவும் உணர்வும் உண்டு; அவற்றால் வலியை உணர முடியும் என்றும் மகாவீரர் போதித்தார்.

சமணத்தில் பிளவு

  • காலப்போக்கில் சமணம் திகம்பரர் (திசையையே ஆடையாக உடுத்தியவர்கள்), சுவேதாம்பரர் (வெண்ணிற உடை உடுத்தியவர்கள்) என இரு பிரிவுகளாகப் பிரிந்தது.
  • திகம்பரர்கள் மகாவீரரின் போதனைகளில் மாற்றங்களைச் சிறிதும் ஏற்காதவர்கள். இவர்கள் மாகாவீரரின் கொள்கைகளை அவர் குறிப்பிட்டது போலவே கடைபிடித்தார்கள்.
  • இவர்கள் ஆடைகளைத் துறந்து வாழ்ந்தார்கள். சுவேதாம்பரர்கள் தலை முதல் கால் வரை வெண்ணிற உடை உடுத்தினார்கள்.
  • சமூகத்தீற்கான தமது கடமைகளை நிறைவேற்றுவது முக்கியமானது என்று இவர்கள் கருதினார்கள்.
  • சமணக் காஞ்சி: 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த முக்கியமான சமயங்களில் சமணமும் ஒன்று. பல்லவ மன்னரான மகேந்திர வர்மன் சமண சமயத்தைச் சார்ந்தவர். அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் தாக்கத்தால் அவர் சைவ சமயத்துக்கு மாறினார். தற்போதைய காஞ்சி நகரத்துக்கு அருகில் சமணக் காஞ்சி அமைந்திருக்கிறது. அங்கே சமணக் கோயில்களை நீங்கால் காணலாம். அவற்றுள் முக்கியமானது திருப்பருத்திக்குன்றம் சமணக் கோயிலாகும். இக்கோயிலின் கூரையில் மகாவீரரின் வாழ்க்கைக் கதை ஓவியமாக வரையப்பட்டுள்ளது.
  • கர்நாடகாவில் உள்ள சிரவண – பெலகொலாவில் உள்ள பாகுபலியின் சிலைதான் (இவர் கோமதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்) இந்தியாவில் செதுக்கப்பட்ட மிக உயரமான (57 அடி) சமணச் சிலை இதுவேயாகும்.

சமணத்தின் வீழ்ச்சி

அரச ஆதரவு இன்மை, அதன் கடுமை, குழு மனப்பான்மை, புத்த மதத்தின் வரவு எல்லாம் சேர்ந்து இந்தியாவில் சமணம் வீழ்ச்சியடையக் காரணமாயின.

பௌத்தம்

கௌதம புத்தர் – பிறப்பும் வாழ்வும்

  • கௌதம புத்தர் இன்றைய நேபாளத்தில் உள்ள கபிலவஸ்துவில் பிறந்தார். அவருடைய தந்தை சாக்கியர்கள் எனும் ஒரு சத்திரிய இனக்குழுவின் தலைவராக இருந்த சுத்தோதனார் ஆவார்.
  • கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர். அவர் சாக்கிய இனத்தவர் என்பதால் சாக்கிய முனி என்றும் அழைக்கப்பட்டார். அவர் பொ.ஆ.முல். 567இல் கபிலவஸ்துவிற்கு அருகில் உள்ள லும்பினி வனத்தில் பிறந்தார்.
  • அவருடைய தாயார் மாயாதேவி(மஹாமாயா) அவர் பிறந்த சில நாட்களிலேயே மரணமடைந்தார். எனவே அவர் தம்முடைய சிற்றன்னையால் வளர்க்கப்பட்டார்.
  • உலக விவகாரங்களை நோக்கி அவரது கவனம் செல்லாதிருக்க, சித்தார்த்தரின் தந்தை அவருக்கு 16வது வயதில் யசோதரா என்ற இளவரசியை மணமுடித்து வைத்தார்.
  • சித்தார்த்தர் யசோதராவுடன் சிறிது காலம் மகிழ்ச்சியான இல்லற வாழ்வு வாழ்ந்தார். அவர்களுக்கு ராகுலன் என்ற மகன் பிறந்தான்.
  • ஒருநாள் மாலை, சித்தார்த்தார் நகர்வலம் வந்தபோது, உறவினர்களால் கைவிடப்பட்ட ஒரு முதியவர், வலியால் கதறிக்கொண்டிருந்த ஒரு நேயாளி, இறந்த உடலைச் சுற்றி அழுது கொண்டிருந்த உறவினர்கள் ஆகியோரைப் பார்த்தார்.
  • இந்தக் காட்சிகளால் சித்தார்த்தர் மனவேதனை அடைந்தார். உலகைத் துறந்த துறவி ஒருவர் எந்த விதமான துயரமும் ஒன்றி இருப்பதையும் பார்த்தார். இந்த ‘நான்கு பெரும் காட்சிகள்’ அவரை உலகைத் துறக்கவும், துன்பங்களுக்காக காரணத்தைத் தேடவும் தூண்டின.
  • பொ.ஆ.மு. 537இல் தனது 30வது வயதில் அவர் தனது மனைவி, மகனைத் துறந்து, அரண்மனையை விட்டு வெளியேறி, உண்மையைத் தேடி காட்டிற்குச் சென்றார்.
  • அங்குமிங்கும் திரிந்தலைந்து மெய்யறிவை நாடினார். இக்காலத்தில்
  • ஒருநாள் ஓர் அரச மரத்தின் கீழ் அமர்ந்தார். தொடர்ந்து பல நாட்கள் அமர்ந்திருந்த அவருக்கு மெய்யறிவு கிட்டியது. அவர் மெய்யறிவு அடைந்த அந்த இடம் இன்றைய பீஹாரில் உள்ள புத்த கயா ஆகும். இது ‘மஹாபோதி கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.
  • தனக்கு மெய்யறிவு ஏற்பட்டதும், தமது அறிவை மக்களுக்கு அளிக்க புத்தர் முடிவுசெய்தார். புத்த கயாவிலிருந்து வாரணாசி சென்ற அவர், சாரநாத்தில் தனது முதல் போதனையைச் செய்தார்.
  • மகதம், கோசல நாடுகளில் போதனை செய்தார். அவருடைய சொந்த குடும்பத்தினர் உட்பட பலர் அவருடைய சீடர்களாகினர்.
  • 45ஆண்டுகள் போதனை செய்த பிறகு, பொ.ஆ.மு. 487இல் தமது 80வது வயதில் குஷிநகரத்தில் (உத்தரப் பிரதேசத்தின் கரக்பூர் அருகே) பரிநிர்வாணம் அடைந்தார்.

பௌத்தத்தின் போதனைகள்

  1. நான்குபெரும் உண்மைகள்:
  2. உலகம் துன்பமும் துயரமும் நிறைந்தது
  3. ஆசையும் ஏக்கமும்தான் இந்தத் துன்பத்திற்குக் காரணம்
  4. ஆசையை, ஏக்கத்தை அடக்குவதன் மூலம் இந்த துன்பம் அல்லது வலியைப் போக்கலாம்
  5. இதை ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வதன் மூலம் அல்லது புத்தர் கூறிய உத்தமமான எண்வழிப் பாதை மூலம் அடைய முடியும்.
  6. நிர்வாணம் அடைதல், புத்தரின் போதனையின்படி, ஒரு மனிதன் உயர்ந்த ஆனந்தம் அல்லது நிர்வாணத்தை அடைய வேண்டுமெனில், அதனை ஒழுக்கமான வாழ்க்கையின் மூலமும், புத்தரின் எண்வழிப் பாதையைக் கடைப்பிடிப்பதன் மூலமும் எட்ட முடியும்.
  7. அகிம்சை என்பது புத்தரின் மற்றொரு அடிப்படையான நம்பிக்கை. அவர் வேள்விகளில் தரப்படும் ரத்தப் பலிகளைக் கண்டித்தார். புத்தத்தை கடைபிடிப்பவரின் அத்தியாவசியமான பண்பு, அனைத்து உயிர்களின் மி0இதும் அன்பு செலுத்துவதுதான் என்றார் புத்தர்.
  8. ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம்: புத்தர் தமது சீடர்கள் நல்ல செயல்கள் செய்ய வேண்டும்; ஒழுக்கமான, நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று அறிவுறுத்தினார். பொய் கூறுதல், உயிர்களைக் கொல்லுதல், மதுபானங்கள் உட்கொள்ளுதல், திருடுத, சிற்றின்பத்தை நாடுதல் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு வலியுறுத்தினார்.

பௌத்தம் பரவுதல்

  • தம்முடைய போதனைகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரப்புவதற்காக புத்தர் பௌத்த சங்கத்தை நிறுவினார்.
  • பௌத்தத்தைப் பரப்ப பிட்சுக்களும் (ஆண் துறவிகள்), பிட்சுணிகளும் (பெண் துறவிகள்) நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் எளிமையான துற வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
  • பௌத்தம் மத்திய ஆசியா, இலங்கை, திபெத் , தென்கிழக்கு ஆசியா,இலங்கை, திபெத், தென்கிழக்கு ஆசியா, கிழக்கிந்திய நாடுகளான சீனா, மங்கோலியா, கொரியா, ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் பரவியது.
  • புத்தரின் நெருக்கமான சீடராக இருந்தவர் ஆனந்தன். அவர் ஒருமுறை புத்தரிடம், ‘பெண்கள் துறவியாக முடியுமா?’ எனக் கேட்டார். அதற்குப் புத்தர், ‘பெண்கள் உலக இன்பங்களையும் ஆடம்பரங்களையும் துறந்தார், அவர்களும் ஆண்களைப் போல தூறவியாக முடியும்; மெய்யறிவையும் அடைய முடியும்’ என்றார்.

பௌத்தத்தில் பிளவு

  • பொ.ஆ.மு. 2ஆம் நூற்றாண்டில், கனிஷ்கரின் ஆட்சிக் காலத்தில், பௌத்தத் துறவி நாகார்ஹுனா என்பவர் பௌத்தத்தில் ஒரு சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். பௌத்தம், ஹீனயானம், மஹாயானம் என்று இரு பிரிவுகளாகப் பிரிந்தது.
  1. ஹீனயானம் (சிறிய பாதை) –

இது புத்தர் போதித்த அசல் வடிவம். இந்த வடிவத்தைப் பின்பற்றியவர்கள் புத்தரைத் தமது குருவாக ஏற்றார்கள். அவரைக் கடவுளாக வழிபடவில்லை. இவர்கள் உருவ வழிபாட்டை மறுத்தார்கள். மக்கள் மொழியான பாலி மொழியையே தொடர்ந்து பயன்படுத்தினார்கள்.

  1. மஹாயானம் (பெரிய பாதை) –

புத்தர் கடவுளாக வழிபடப்பட்டார். போதிசத்துவர் அவருடைய முந்தைய அவதாரமாகக் கருதப்பட்டார். மஹாயானத்தைப் பின்பற்றுவோர் புத்தர், போதிசத்துவரின் சிலைகளை நிறுவி அவர்களது புகழ் பாடும் மந்திரங்களைச் சொல்லி வழிபட்டனர். பின்னர் இவர்கள் தம்முடைய மத நூல்களை சமஸ்கிருதத்தில் எழுதினார்கள். இந்த வகை பௌத்தத்தை கனிஷ்கர் ஆதரித்தார்.

பௌத்தத்தின் வீழ்ச்சி

கீழ்க்கண்ட காரணங்களால் இந்தியாவில் பௌத்த மதம் வீழ்ச்சி பெற்றது.

  1. புத்தம் மக்களின் மொழியில் (பாலி) பிரச்சாரம் செய்யப்பட்டதனால் நன்கு பெயர் பெற்றிருந்தது. பிற்காலத்திய நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதால், சாமானிய மக்களுக்கு அவற்றைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது.
  2. பௌத்தம் ஹீனயானம், மஹாயானம் என்று பிளவுண்டதும் மற்றொரு முக்கியமான காரணம். மஹாயானத்தில் உருவ வழிபாடு இருந்ததால், பௌத்தத்திற்கும், இந்து மதத்திற்கும் வேறுபாடு இல்லாமல் போனது.
  3. குப்தர்களின் காலத்தில் பௌத்தம் அரச ஆதரவை இழந்தது.
  4. மேலும் ஹூணர்கள், துருக்கியர்களின் படையெடுப்புகள் புத்தத்தைக் கிட்டத்தட்ட அழிந்துவிட்டன.

பிற அவைதீக பிரிவுகள்

ஆசிவகம்

  • பௌத்தமும், சமணமும் தோன்றிய காலத்தில் ஆசிவகம் என்றொரு பிரிவும் தோன்றியது. அதைத் தோற்றுவித்தவர் மக்கலி கோசலர் (மஸ்கரிபுத்திர கோசலர்) என்பவர்.
  • இவர் மகாவீரரின் நண்பர். சிறிது காலத்திற்கு இருவரும் சேர்ந்து இருந்திருக்கிறார்கள்.
  • பின்னர் கோசலர் பிரிந்து ஆசிவகப் பிரிவைத் தோற்றுவித்தார். நாத்திகப் பிரிவான ஆசிவகம் மனிதர்களின் நிலையை அவர்களுடைய பழைய வினைகள்தான் தீர்மானிக்கின்றன என்று கூறும் வினைப்பயன்(கர்மம்) என்ற கோட்பாட்டை நிராகரித்தது.
  • கோசலர் தர்மமோ. பக்தியோ எந்தவிதத்திலும் மனிதர்களின் இறுதி நிலையைத் தீர்மானிக்காது என்று வாதிட்டார்.
  • ஆசிவகர்கள் தென்னிந்தியாவில் சிறு எண்ணிக்கையில் இருந்தார்கள்.
  • சோழர்கள் காலத்தில் அவர்கள் மீது ஒரு சிறப்பு வரி விதிக்கப்பட்டது. புத்தர்களின் இலக்கியமான மணிமேகலை, சமணர்களின் இலக்கிய நூலான நீலகேசி, சைவ நூலான சிவஞானசித்தியார் ஆகிய தமிழ் நூல்களில் ஆசிவகத் தத்துவத்தைப் பற்றிய செய்திகள் ஓரளவுக்கு உள்ளன.

மௌரியருக்கு முந்தைய அரசுமுறை

  • ஆரியர்கள் கிழக்கில் பரவியது கங்கைப்பகுதியில் புதிய குடியேற்றங்கள் உருவாவதற்கு வழிவகுத்தது.
  • இரும்புக் கருவிகளின் அறிமுகத்தின் ஒரு முக்கியமான விளைவு யாதெனில் கங்கைக் கரையில் இருந்த அடர்ந்த காடுகளை எளிதில் திருத்த முடிந்தது.
  • அமைதியான விவசாய வாழ்க்கையின் காரணமாகக் குறிப்பிட்ட ஒரு பகுதியில் குறிப்பிட்ட ஒரு குலம் நிரந்தரமாகக் குடியேறியது. இந்தக் குலத்திற்குப் புவியியல் சார்ந்த அடையாளமும் ஏற்பட்டது.
  • கைப்பற்றப்பட்ட நிலங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஓர் அரசியல் அமைப்பு தேவைப்பட்டது. கண-சங்கம் என்ற அமைப்பு (இனக்குழு சார்ந்த தலைவர் ஆட்சிமுறை) இத்தகைய சூழலில்தான் தோன்றியது.
  • குறிப்பிட்ட இனக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் ஜனபதங்கள் என்றழைக்கப்பட்டன.

கண – சங்கங்கள்

  • மகாவீரர், புத்தர் ஆகியோர் காலத்தில் முடியாட்சிகள், கண—சங்கங்கள் எனப்படும் குலக்குழு ஆட்சி என்று இரு வேறுபட்ட அரசு வடிவங்கள் இருந்தன.
  • வேத சடங்குகளைச் செய்ய மறுத்தல், வர்ணாசிரம முறையை எதிர்த்தல் ஆகியவை மூலம் கண-சங்கங்கள் முடியாட்சிகளுக்கு ஓர் அரசியல் மாற்றைத் தந்தன.
  • சாக்கியர்கள், கோலியர்கள், மல்லர்கள் போல் கண-சங்கங்கள் ஒரே ஓர் குலத்தால் ஆனவையாகவும் இருந்தன.
  • அதே நேரத்தில் விரிஜ்ஜிகள், விருஷ்ணிகள் (இது வைசாலியில் இருந்தப் ஒரு கூட்டமைப்பு) போன்று பல குலங்களின் கூட்டமைப்பாகவும் இருந்தன.
  • கண-சங்கஸ்களில் சத்திரிய ராஜகுலம் என்ற ஆளும் குடும்பங்கள், அடிமைகளும் தொழிலாளர்களும் அடங்கிய தாஸ கர்மகாரர்கள் என இருவகையான சமூகப் படிநிலைகல் இருந்தன.
  • தாஸ கர்மகாரர்களுக்கு சபையில் பிரதிநிதித்துவம் கிடையாது. கண-சங்கங்களில் வேறுபல மத வழிபாட்டுப் பழக்கங்களும் அனுமதிக்கப்பட்ட பண்பு இருந்தது. இது முடியாட்சிகளில் நிலவிய சமூக கலாச்சார முறைக்கு நேர்மாறானது.
  • கண-சங்கங்களில் குலத்தின் தலைவர் மற்ற குடும்பங்களின் தலைவர்களைக் கொண்ட சபைக்குத் தலைமை தாங்குவார்.
  • இந்தசபை கண-சங்கங்ளின் விவகாரங்கள் குறித்து விவாதிக்கும். ஒத்த கருத்துடன் கூடிய முடிவு எட்டப்படவில்லை என்றால் வாக்கெடுப்பிற்கு விடப்படும்.
  • தலைவருக்கு அலோசகர்கள் இருந்தார்கள். பிற்காலங்களில் மிக விரிவான நீதி வழங்கும் நடைமுறைகள் உருவாகின.
  • கண-சங்கத்தின் வருவாய் முக்கியமாக வேளாண்மையிலிருந்தும் கால்நடை மேய்ச்சலிலிருந்தும் (இது பஞ்சாப் மற்றும் கோஆப் பகுதியில் மட்டும்) ஓரளவிற்கு வர்த்தகத்திலிருந்தும் வந்தது.
  • வட மேற்கின் தலைவர்களுக்கு வருவாய் பெருமளவு வர்த்தகத்திலிருந்தான் வந்தது.
  • நிலம், இனக்குழு மொத்தத்திற்கும் சொந்தமாக இருந்தது. அவற்றில் தாஸ கர்மகாரர்கள் வேளாண்மை செய்தார்கள்.
  • வீட்டுவேலைகளில் மட்டும்தான் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டார்கள். உற்பத்தியில் அடிமைகளை ஈடுபடுத்தும் வழக்கம் இல்லை.

அரசுகள் உருவாக்கம்

  • பொ.ஆ.மு. 6ஆம் நூற்றாண்டில் அரசாட்சிகள், குழு ஆட்சிகள், குடித்தலைமை ஆட்சிகள் ஆகியவற்றின் உருவாக்கமும், நகரங்களின் உருவாக்கமும் நிகழ்ந்தன.
  • பெரியளவிலான குடித்தலைமை ஆட்சி அமைப்புகளிலிருந்து அரசாட்சிகள் தோன்றின.
  • ரிக் வேதகால பரதர், பாசு, தரிசு, துர்வசு போன்ற பழங்குடிகள் முன்னணிக்கு வந்தன.
  • புத்த இலக்கியங்கள் பதினாறு மஹாஜனங்களைப் பட்டியலிடுகின்றன.
  • ஜனபதங்களில் பல்வேறு சமூக,பண்பாட்டுக் குழுக்கள் வாழ்ந்தன.
  • அரசாட்சிகள் உருவானதும், பல்வேறு நாடுகளிடையே மேலாதிக்கத்திற்கான போராட்டங்கள் அடிக்கடி நடந்தன.
  • எதிரிகளின் மீது போருக்கு உள்ள அதிகரத்தைக் காட்ட ராஜசூயம், அஸ்வமேதம் போன்ற வேள்விகள் நட்த்தப்பட்டன.
  • ரிக் வேத பட்டமான ‘ராஜன்’ என்பதற்கு பதிலாக சாம்ராட், ஏக்ராட், விராட், போஜன் போன்ற பட்டங்களை மன்னர்கள் பயன்படுத்தினர்.
  • வட இந்தியா, வடக்கே காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கே கோதாவரி வரை பரவியிருந்தது.
  • இங்கு காசி,கோசலம்,அங்கம்,மகதம்,வஜ்ஜி,மல்லா,சேதி,வட்சா,குரு,பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம், ஆசாகம், அவந்தி, காந்தாரம், காம்போஜம் என்று பதினாறு மஹாஜனபதங்கள் தோன்றின.

முடியாட்சி அதிகாரத்தின் வளர்ச்சி

  • அரசருக்கு முழுமையான அதிகாரம் இருந்தது.
  • ரிக் வேத காலத்தின் சபை இப்போது இல்லை.
  • போர், அமைதி, நிதி கொள்கைகளுக்கு சமிதியின் உதவியை அரசர் நாடினார்.
  • சபைகள் இருந்தாலும் கூட, அரசரின் அதிகாரம் அதிகரித்துக் கொண்டே சென்றது.
  • சதபதப் ப்ராமணம் ‘அரசர் தவறிழைக்காதவர், அனைத்து விதமான தண்டனைகளிலிருந்தும் விலக்குப் பெற்றவர்’ என்கிறது.
  • அரசு அதிகாரத்தின் வளர்ச்சி விரிவுபடுத்தப்பட்ட நிர்வாக அமைப்பில் பிரதிபலித்தது.
  • இப்போது அரசருக்கு ஆட்சியில் துணைபுரிய வரிவசூல் அதிகாரி(பகதுகர்),தேரோட்டி(சூதா), சூதாட்டக் கண்கானிப்பாளர்(ஆஷைரபா), அரண்மணை காரியஸ்தர் (ஷத்திரி), வேட்டைத் துணைவர் (கோரிகர்த்தனா), அரசவையினர் (பலகோலா), தச்சர் (தஷன்), தேர் செய்பவர் (ரதகார) என்று பலர் இருந்தார்கள்.
  • மேலும் கோவில், ராணுவம் தொடர்பான அதிகாரிகளான புரோகிதர் (சேப்லைன்), தளபதி (சேனானி), கிராம அதிகாரி (கிராமணி) போன்றோர் இருந்தனர்.
  • வேத காலத்தின் பிற்பகுதியில் கிராமத்தலைவராகவும் ராணுவ அதிகாரியாகவும் இருந்த கிராமணிதான் கிராமத்தில் அரச அதிகாரம் செலுத்தப்படுவதற்கான இணைப்பாக இருந்தார்.
  • அரசரே நீதி வழங்கினார்.சமயங்களில் நீதி வழங்கும் பொறுப்பை அரசவை அதிகாரிகளான அத்யாக்காக்களிடம் அளித்தார்.
  • கிராமங்களில் கிராம்யவாதின் என்ற கிராம நீதிபதியும், சபா என்ற கிராம நீதிமன்றமும் நீதி வழங்கின.
  • குற்றங்களுக்குத் தண்டணை கடுமையாக இருந்தது.

மகதத்தின் உருவாக்கம்

  • முடியாட்சிகளில் கடைபிடிக்கப்பட்ட அரசியல் கண-சங்கங்களின் முறையிலிருந்து மாறுபட்டிருந்த்து.
  • அரசாட்சிகள் ஒரு மையப்படுத்தப்பட்ட அரசுடன் இயங்கின.
  • அரசியல் அதிகாரம் ஆளும் குடும்பத்திடம் குவிந்திருந்தது.
  • இது மரபுரிமையாக வந்ததால், வம்சங்களாக மாறின.
  • பரீஷைத் (அமைச்சர்கள்), சபா (ஆலோசனைக் குழு) போன்ற ஆலோசனை அமைப்புகள் இருந்தன.
  • சபா வரிவசூல் செய்து, தலைநகரில் இருந்த கருவூலத்தில் செலுத்தியது.
  • அங்கிருந்து அது இராணுவச் செலவு, அரசு அதிகாரிகளுக்கான ஊதியம் போன்ற பணிகளுக்கான மறு விநியோகம் செய்யப்பட்டது.
  • அக்காலத்து இலக்கியங்களில் குறிபிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை சக்திவாய்ந்தவைகளாக உருவாகின.
  • இந்த அரசாட்சிகளோடு போட்டியிட்ட ஒரே வைசாலியைத் தலைநகரமாகக் கொண்ட விருஜ்ஜி.
  • இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் சாதகமான இடமான கங்கைச் சமவெளியைக் கைபற்றுவதற்கு நடந்த போராட்டத்தில் மகதம் வெற்றி பெற்றது.
  • அதன் முதல் முக்கியமான அரசர் பிம்பிசாரர்.
  • அவர் வைசாலியின் செல்வாக்கு மிக்க லிச்சாவி குலத்துடனும் கோசல அரச குடும்பத்துடனும் திருமண உறவுகள் வைத்து, அங்கத்தைக் கைபற்றினார்(இப்போதைய மேற்கு வங்கம்).
  • இந்த நடவடிக்கை அவர் கங்கைச் சமவெளியை அடைய உதவியது.
  • ஒரு நிர்வாக முறையை ஏற்படுத்துவதில் பிம்பிசாரர் வெற்றி பெற்றார்.
  • அவரது நிர்வாக முறையில் கிராமம்தான் அடிப்படை அலகு.
  • கிராமங்களத் தவிர வயல்கள், மேய்ச்சல் நிலங்கள், தரிசு நிலங்கள், காடுகள் (ஆரண்யம், கேந்ரம், வனம்) ஆகியவையும் இருந்தன.
  • ஒவ்வொரு கிராமமும் கிராமணி என்ற கிராமத்தலைவடரின் அதிகாரத்தின் கீழ் இருந்தது.
  • வரிவசூல் செய்து, கருவூலத்தில் செலுத்துவது இவரது பொறுப்பு.
  • சாகுபடி செய்யப்படும் நிலங்களை அளந்து, விலைச்சலின் மதிப்பை அளவிட்டு, கிராமணிக்கு உதவி செய்ய அதிகாரிகள் இருந்தார்கள்.
  • நிலவரி (பலி) தான் அரசின் முக்கியமான வருவாய் ஆதாரம்.
  • விளைச்சலில் அரசிற்கான பங்கு (பாகம்) சாகுபடி செய்யப்பட்ட நிலத்தின் பரப்பிற்கு ஏற்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது.
  • ஆறில் ஒரு பங்கு உரிமையானவர் என்று பொருள் படும் ஷட்பாகின் என்ற சொல் அரசரைக் குறிக்கிறது.
  • எனவே அங்கு ஒரு விவசாயப் பொருளாதாரம் இயங்கிவந்தது.
  • பிம்பிசாரரின் புதல்வரான அஜாதசத்குரு பொ.ஆ.மு 493இல் தனது தந்தையக் கொன்றுவிட்டு அரியணை ஏறியதாகச் சொல்லப்படுகிறது.
  • இராணுவ வெற்றிகளின் மூலம் ஆட்சியை விருவுபடுத்தும் தனது தந்தையின் கொள்கையை இவரும் தொடர்ந்தார்.
  • மகதத்தின் தலைநகரான ராஜகிருஹம் ஐந்து மலைகளால் சூழப்பட்டிருந்ததால், வெளியிலிருந்து வரும் அபாயங்கலிலிருந்து தகுந்த பாதுகாப்பு அளித்தது.
  • அஜாதசத்குரு இந்த ராஜகிருஹக் கோட்டையை வலுப்படுத்திய அதே வேளையில் கங்கைக்கரையில் பாடலிகிராமத்தில் மற்றொரு கோட்டையைக் கட்டினார்.
  • இது உள்ளூர் உற்பத்திகளுக்கான பரிமாற்ற மையமாக விளங்கியது.
  • பின்னர் மௌரியத் தலைநகர் பாடலிபுத்திரமாக இது மாறியது.
  • அஜாதசத்ரு பொ.ஆ.மு 461இல் இறந்தார்.
  • இவருக்குப் பிறகு ஐந்து அரசர்கள் ஆட்சி செய்தார்கள்.
  • எல்லோருமே தந்தையக் கொன்று ஆட்சிக்கு வரும் அஜாதசத்ருவின் உதாரணத்தைப் பின்பற்றினார்கள்.
  • இப்படித் தொடர்ந்து தந்தையைக் கொல்வதால் மனம்வெறுத்த மகத மக்கள் கடைசி அரசரின் ராஜப்பிரதிநிதியான சிசுநாகரை அரசராக நியமித்தார்கள்.
  • கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்த பிறகு சிசுநாக வம்சம் மகாபத்ம நந்தரிடம் ஆட்சியை இழந்தது. இவர்தான் நந்த வம்சத்தைத் தோற்றுவித்தவர்.
  • நந்த வம்சம்தான் வட இந்தியாவின் முதல் சத்திரியரல்லாத வம்சமாகும்.
  • நந்தர்கள் மகதத்தை மேலும் விரிவாக்கினார்கள்.
  • நந்தர்கள் பாசனத்திற்கு முக்கியத்துவம் தந்தனர்.
  • அவர்கள் வெட்டிய கால்வாய்கள் கலிங்கம் (ஒடிசா) வரை நீண்டன.
  • இவர்கள் காலத்தில் வரிகளை வசூலிப்பதற்கென்றே அதிகாரிகளை நியமிக்கும் தொடர் வழக்கம் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக மாறியது.
  • ஒரு பேரரசை உருவாக்கும் நந்தர்களின் கனவு சந்திரகுப்த மௌரியரால் சிதைந்தது.
  • இவர் பொ.ஆ.மு 321இல் மௌரிய அரசை நிறுவினார்.
  • ஈரானில் அசிரியப் பேரரசும் இந்தியாவில் மகதப் பேர்ரசும் உருவாக இரும்புக் கலப்பை சார்ந்த விவசாயம் வழிவகுத்தது.

வட மேற்கு இந்தியாவும் அலெக்ஸாண்டரும்

  • வரலாற்று ரீதியாக வடமேற்குப் பகுதி, வட இந்தியா, ஆப்கானிஸ்தான், பாரசீகம் (ஈரான்) என்று பல்வேறு ஆளுகைகளுக்கு உட்பட்டு இருந்திருக்கிறது.
  • பொ.ஆ.மு ஆறாம் நூற்றாண்டில் அது பாரசீகத்தின் இரண்டாம் சைரஸால் ஆரம்பிக்கப்பட்ட அகமெனீட் பேரரசரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
  • அப்போதிருந்து இந்தியப் பகுதிகள் கிரேக்கர்களை எதிர்த்த பாரசீகர்களின் போர்களுக்குக் கூலிப்படை வீர்ர்களை அளித்து வந்தன.
  • கிரேக்கர்கள் டக்சீலா என்று அழைத்த தக்சீலம் வடமேற்கின் முக்கியமான நகரமாகும்
  • இது ஈரானிய-இந்திய பண்பாடும் கல்வியும் ஒன்றாகக் கலந்த மையமாக மாறியது.
  • மாசிடோனியாவின் அலெக்ஸாண்டர் அகாமெனீட் பேரரசைக் கைப்பற்றியதுடன், வடமேற்கில் அப்பேரரசின் ஆதிக்கம் முடிந்தது
  • அகாமெனீட் பேரரசர் மூன்றாம் டேரியஸின் பகுதிகளில் அணிவகுத்து வந்த கிரேக்கப் பேரரசர் அலெக்ஸாண்டர் பொ.ஆ.மு 326இல் இந்தியப் பகுதிக்குள் நுழைந்தார்.
  • வட இந்தியாவில் அவரது படையெடுப்பு இரண்டாண்டுகளுக்கு நீடித்தது.
  • ஜீலம் பகுதியின் அரசரான போரஸ் ஹைடாஸ்பெஸ் போரில் (ஜீலம்) அலெக்ஸாண்டரை வீரத்தோடு எதிர்த்தார்.
  • போரஸ் போரில் தோல்வியுற்றாலும், மீண்டும் அரியணையில் அமர்த்தப்பட்டார்.
  • அலெக்ஸாண்டரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய தளபதிகளில் ஒருவர் பேரரசைக் கொன்றுவிட்டார்.
  • அலெக்ஸாண்டர் இந்தியாவில் தான் கைபற்றிய பகுதிகளுக்கு ஆளுநர்களை நியமித்துவிட்டுத் திரும்பிச் சென்றார்.
  • ஆனால் முப்பத்திமூன்றாவது வயதில் அவர் திடீரென மரணமடைந்தும், அந்த ஆளுநர்கள் மேற்கு ஆசியாவில் செல்வம் தேடுவதற்காக, வடமேற்கு இந்தியாவை விட்டு வெளியேறினர்.
  • அலெக்ஸாண்டர் ஒரு மாபெரும் தளபதி. உலகையே வென்றவர்.
  • ஆனாலும் அவரது மரணத்திற்கு பிறகு, அவரது மாபெரும் பேரரசு சிதறுண்டது.
  • அவரது பேரரசை அவரது தளபதிகள் பிரித்துக் கொண்டனர்.
  • தாலமி எகிப்தை அதன் தலைநகர் அலெக்சாண்ட்ரியாவுடன் எடுத்துக் கொண்டார்.
  • செல்யூகஸ் நிகேடர் பாரசீகம், மெஸபடோமியா, ஆசியா மைனர் என்றழைக்கப்படும் ஆசியாவின் தென்மேற்குப் பகுதியில் ஒரு பகுதி ஆகியவற்றைத் தன் பங்காக எடுத்துக் கொண்டனர்.
  • எனினும், அலெக்ஸாண்டரின் மரணம் மௌரியப் பேரரசு என்ற பெரும் பேரரசு உருவாவதற்கான வழியைத் திறந்து விட்டது.

மௌரியப் பேரரசு – அரசும் சமூகமும்

மௌரிய அரசர்கள்

  • சாணக்கியர் அல்லது கௌடில்யர் என்று அறியப்பட்ட விஷ்ணுக்குப்தருக்கு நந்த அரசரோடு வினோதம் ஏற்பட்டதும், அவர் நந்த அரசரை ஆட்சியிலிருந்து அகற்றுவதாகச் சபதமேற்றார்.
  • மெசிடோனிய அலெக்சாண்டரின் வீரதீரத்தினால் கவரப்பட்டதாக நம்பப்படும் சந்திரகுப்தர் தமக்கான ஒரு அரசை அமைக்கும் நோக்கில் படைகளைத் திரட்டி நல்வாய்ப்புக்காகக் காத்திருந்தார்.
  • அலெக்ஸாண்டர் மரணமடைந்ததைக் கேள்விப்பட்ட சந்திரகுப்தர் மக்களைத் தூண்டி விட்டு, மக்கள் உதவியோடு அலெக்ஸாண்டர் விட்டுச் சென்றிருந்த படையை விரட்டினார்.
  • பிறகு அவர், தமது கூட்டாளிகளுடன், பாடலிபுத்திரத்திற்கு அணிவகுத்து வந்து, பொ.ஆ.மு 321இல் நந்த அரசரைத் தோற்கடித்தார். இவ்வாறாக மௌரிய வம்சம் உருவானது.
  • சந்திரகுப்தரின் ஆட்சியின் போது, ஆசியா மைனரிலிருந்து இந்தியா வரைக்கும் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அலெக்ஸாண்டரின் தளபதி செல்யூகஸ் நிகேடர் சிந்து நதியைத் தாண்டி இந்தியாவிற்கு படையெடுத்து வந்தபோது சந்திரகுப்தரிடம் தோற்றுப்போனார்.
  • செல்யூகஸின் தூதரான மெகஸ்தனிஸ் இந்தியாவிலேயே தங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
  • அவரது இண்டிகா என்ற நூல் மௌரியர் காலத்து அரசியலையும் சமூகத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது.
  • கங்கைச் சமவெளியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திய பிறகு, அலெக்ஸாண்டரின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு சந்திரகுப்தர், தனது கவனத்தை வடமேற்குப் பக்கம் திரும்பினார்.
  • இன்றைய ஆப்கனிஸ்தான், பலுசிஸ்தான், மாக்ரான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வடமேற்கு எந்த எதிர்ப்புமின்றிச் சரணடைந்தது.
  • அதன்பிறகு சந்திரகுப்தர் மத்திய இந்தியாவிற்கு நகர்ந்தார்.
  • தனது வாழ்வின் இறுதிக்காலத்தில், தீவிர சமணராக மாறிவிட்ட அவர், தனது மகன் பிந்துசாரருக்காகப் பதவி விலகினார் என்று சமண இலக்கியங்கள் கூறுகின்றன.
  • பிந்துசாரர் தனது ஆட்சியில் மௌரிய அரசை கர்நாடகம் வரை விரிவுபடுத்தினார்.
  • அவரது மறைவின்போது இந்தியாவின் பெரும்பகுதி மௌரிய ஆட்சியின் கீழ் இருந்தது.
  • பொ.ஆ.மு. 268 இல் பிந்துசாரருக்குப் பின் அசோகர் அரசரானார்.
  • தெற்கில் எஞ்சியுள்ள பகுதிகளையும் தனது பேரரசில் இணைக்கும் ஆசையால் தனது ஆட்சியின் எட்டாவது ஆண்டில் அவர் கலிங்கத்தின் மீது படையெடுத்தார்.
  • கலிங்க மக்கள் வீரத்தோடு போர் புரிந்தனர்.
  • ஆனால் பெரும் உயிர்ப்பலிகளுக்குப் பிறகு அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
  • இந்தப் போரும் படுகொலைகளும் அசோகரைப் பெரிதும் பதித்தன.
  • அவர் போரிடுவதை விட்டுவிட முடிவு செய்தார்.
  • புத்தகத் துறவி உபகுப்தரைச் சந்தித்த பின்னர், அசோகர் தீவிர புத்தப் பற்றாளராக மாறி, தனது புத்த தம்மத்தைப் பரப்ப ஆரம்பித்தார்.
  • தன்னையே வெற்றி கொள்வதும், மனிதர்களின் மனதை தம்மத்த்தால் (தம்மம் – பாலி; தர்மம் – சமஸ்கிருதம்) வெற்றி கொள்வதும் உண்மையான வெற்றி என்று அவர் அறிவித்தார்.
  • அவை பாறைகளில் பொறிக்கப்பட்டன.
  • தனது கலிங்கக் கல்வெட்டு ஒன்றில் அவர் போர் வெற்றிக்காக நடந்த படுகொலைகளைப் பார்த்துத் தாம் அடைந்த மன வேதனையை அசோகர் பதிவு செய்துள்ளார்.
  • மற்றொரு கல்வெட்டில், தாம் இனிமேல் கலிங்கப் போரில் நடந்த படுகொலைகளில் நூற்றில் ஒரு பங்கைக் கூட, ஏன் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட பொறுத்துக்கொள்ளப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
  • உயிர்களைக் காக்கும் அசோகரின் பெருவிருப்பம் விலங்குகளைப் பலியிடுவது தடை செய்யப்பட்டது.
  • விலங்குகளுக்கான மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.
  • அசோகர் தனது மகன் மகேந்திரனையும்,மகள் சங்கமித்திரையும் தம்மம் குறித்த தனது செய்தியைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.
  • அசோகர் 38 ஆண்டுகள் ஆட்சி செய்த பின் உயிர் துறந்தார்.
  • நான்கு சிங்கங்களைக் கொண்ட நமது தேசியச் சின்னம்சாரநாத்தில் உள்ள அசோகர் தூணை பிரதிபலிக்கும் விதமாகவே தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • மொத்தம் உள்ள 33 கல்வெட்டுகளில் 14 முக்கியமான பாறைக் கல்வெட்டுகள், 7 தூண் பிரகடனங்கள், 2 கலிங்கக் கல்வெட்டுகள்.
  • இவை போக, சிறு பாறைக் கல்வெட்டுகளும், தூண் பிரகடனங்களும் உண்டு.
  • மௌரியப் பேரரசு பற்றி, குறிப்பாக அசோகரின் தம்ம ஆட்சியைப் பற்றி அறிய இவை மிகவும் நம்பகமான ஆதாரங்களாகத் திகழ்கின்றன.
  • பொ.ஆ.மு 250இல் மௌரியத் தலைநகரான பாடலிபுத்திரத்தில் மூன்றாவது புத்த மாநாடு நடைபெற்றது.
  • பௌத்தத்தை மற்ற பகுதிகளில் பரப்ப வேண்டும், மக்களை பௌத்தத்திற்கு மாற்ற சமயப்பரப்பாளர்களை அனுப்ப வேண்டும் என்பது இந்த மநாட்டின் முக்கியமான முடிவாகும்.

மௌரிய ஆட்சி நிர்வாகம்

  • தொடக்க ஆண்டுகளில் மௌரிய அரசு எடுத்த சில நடவடிக்கைகள் சமூக முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவின.
  • ஒரு பெரிய நிலையான ராணுவத்தை அமைக்கவும், பரந்த நிர்வாக அமைப்பை உருவாக்கவும் வரிகளை உயர்த்தியது.
  • மௌரியர்கள் செயல்திறம்மிக்க அரசாட்சி முறையை உருவாக்கினர்.
  • நிர்வாகத்தின் தலைவர் அரசர்.
  • அவருக்கு அமைச்சர் குழு உதவிபுரிந்தது.
  • மகாமாத்ரேயர்கள் என்ற அதிகாரிகள் அமைச்சர்களுக்குச் செயலாளர்களாகப் பணியாற்றினார்கள்.
  • வருவாய்க்கும் செலவினங்களுக்கும் பொறுப்பான அதிகாரி சமஹர்த்தா என்றழைக்கப்பட்டார்.
  • பேரரசு நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
  • அவற்றை ஆளுநர்கள் ஆட்சி செய்தார்கள்.
  • பெரும்பாலும் இளவரசர்களே ஆளுநர்களாக செயல்பட்டனர்.
  • மாவட்ட நிர்வாகம் ஸ்தானிகா என்பவரின் கீழ் கொண்டு வரப்பட்டது.
  • ஐந்து முதல் பத்து கிராமங்களின் நிர்வாகியாக கோபர் என்ற பட்டத்துடன் ஒருவர் நியமிக்கப்பட்டார்.
  • நகர நிர்வாகம் நகரகா என்பவர் பொறுப்பில் இருந்தது.
  • இவரது தலைமையில் தலா ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஆறு குழுக்கள் தமது கடமைகளைச் செய்தன.
  • அவர்கள் வெளிநாட்டினரைக் கவனித்துக் கொள்ளல்,பல்வேறு உற்பத்தித் தொழில்களைக் கவனித்துக் கொள்ளல், சுங்க கலால் வரி வசூலித்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டார்கள்.
  • நகர நிர்வாகத்தைப் போலவே ராணுவத்துறையும் 30 பேர் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்பட்டது.
  • இக்குழுவில் தலா ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆறு துணைக்குழுக்கள் இருந்தன.
  • கிராம மட்டத்தில், எல்லைகள் பாதுகாப்பது, நிலம் குறித்த ஆவணங்களைப் பராமரிப்பது, மக்கள் மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கையக் கணக்கெடுப்பது போன்ற பணிகளைச் செய்ய கிராமணி என்ற அதிகாரி இருந்தார்.
  • அதிகாரிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் கண்காணிக்க சிறந்த உளவுத் துறை இயங்கியது.
  • எல்லா முக்கியமான ஊர்களிலும் நகரங்களிலும் நீதி வழங்க முறையான நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
  • குற்றங்களுக்கான தண்டணை கடுமையாக இருந்தது.
  • புதிய குடியிருப்புகளை உண்டாக்குதல், மக்களுக்கு நிலம் அளித்து, விவசாயிகளாக வாழ ஊக்குவித்தல், பாசன வசதிகளை ஏற்படுத்துதல், நீர் பகிர்வைக் கட்டுபடுத்துதல் என்று கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்கு அரசு உபரி வருவாயைப் பயன்படுத்தியது.
  • வேளாண்மை, சுரங்கம், தொழிழ், வணிகம் ஆகியவை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன.
  • நிலத்தில் தனியார் சொத்துரிமை உருவாவதை அரசு விரும்பவில்லை.
  • நிலம் விற்பதை அரசு தடை செய்தது.
  • மௌரிய அரசு நகர மேம்பாட்டிற்கு ஊக்கமளித்தது.
  • அது ஈரான், மெசபடோமியா, வடசீனத்தின் அரசுகளுக்கு நிலவழியாக வணிகப் பெருவழிகளை உருவாக்கியது.
  • அர்த்தசாஸ்திரம், காசி, வங்கம் (வங்காளம்), காமரூபம்(அஸ்ஸாம்), மடுரை ஆகிய இடங்களைத் துணி உற்பத்தி மையங்கள் என்று குறிப்பிடுகிறது.
  • வட இந்தியாவின் பளபளப்பான கறுப்பு மட்பாண்டங்கள் தொலைதூரத்தில் இருக்கும் தென்னிந்தியா வரை பரவியிருந்தது.
  • இது மௌரியர் காலத்து வணிகம் தெற்குவரை பரவியிருந்ததைக் காட்டுகிறது.
  • நகரமயமாக்கத்திற்கு வணிகம் பெரிய அளவில் உதவியது.
  • கௌசாம்பி, பிட்டா, வைசாலி, ராஜகிருகம் போன்ற புதிய நகரங்கள் தோஆப் பகுதியில் உருவாகின.
  • சந்திரகுப்தரின் அமைச்சரான சாணக்கியர் அர்த்தசாஸ்திரம் என்ற நூலை எழுதினார். இது மௌரிய ஆட்சி நிர்வாகம் பற்றி எடுத்துரைக்கிறது.

கல்வி மையங்கள்

  • மடங்களும் கோவில்களும் கல்வி கற்பிக்கும் பணியைச் செய்தன.
  • மிகப் பெரிய மடாலயமான நாளந்தா மகதகர்கள் காலத்தில்தான் கட்டப்பட்டது.
  • கல்வி மையங்க்களில் புத்த, வேத இலக்கியங்கள், தர்க்கம், இலக்கணம், மருத்துவம், தத்துவம், வானவியல் ஆகியவை கற்றுத் தரப்பட்டன. போர்க்கலையும் கற்றுத் தரப்பட்டது.
  • காலப்போக்கில் நாளந்தா அக்காலத்தின் மிகவும் குறிபிடத்தக்க கல்வி மையமாகத் திகழ்ந்தது.
  • அதன் நிர்வாக்ச் செலவுகளுக்காக 100 கிராமங்களின் வருவாய் ஒதுகீடு செய்யப்பட்டது.
  • மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
  • மாணவர்களுக்கு இலவசத் தங்குமிடமும் உணவும் தரப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!