Samacheer NotesTnpsc

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Notes 6th Social Science

6th Social Science Lesson 10 Notes in Tamil

10] மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

அறிவுமலர்ச்சிக்காலம்:

கி.மு.(பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு பண்டைய இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டம் ஆகும். இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாளச் சின்னமாக அக்காலம் விளங்குகிறது. வரலாற்று அறிஞர் வில் டூராண்ட் இக்காலத்தை “நட்சத்திரங்களின் மழை” என்று பொருத்தமாக வர்ணிக்கிறார்.

சான்றுகள்:

இலக்கியச் சான்றுகள்:

  • அங்கங்கள் – சமண நூல்கள்.
  • திரிபிடகங்கள் மற்றும் ஜாதகங்கள் – பௌத்த நூல்கள்.

அறிவு மலர்ச்சிக்கும் சமணம் பௌத்தம் ஆகியவை தோன்றியதற்குமான காரணங்கள்:

புதிய அறிவு மலர்ச்சி ஏற்பட்டதற்கு பல காரணங்கள் உள்ளன. ஏற்கனவே இருந்த சமயத்தின் பெயரால் செயல்படுத்தப்பட்ட சுரண்டல் நடைமுறைகள் புதிய நம்பிக்கைகள் தோன்றுவதற்கு வழியமைத்துக் கொடுத்தன. அவையாவன:

  • பின்வேத காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிக்கலான சடங்குகளும் வேள்விகளும்.
  • அதிக அளவில் செலவு செய்ய வேண்டி இருந்த வேள்விச் சடங்குகள்.
  • மூடநம்பிக்கைகளும், நடைமுறைகளும் சாதாரண மக்களைக் குழப்பம் அடையச் செய்தன.
  • வேள்விச் சடங்குகளுக்கு மாற்றாகக் கற்பிக்கப்பட்ட உபநிடதத் தத்துவவங்களைச் சாதாரண மக்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.
  • அடிமைமுறை, சாதி முறை மற்றும் பாலியல் பாகுபாடுகளும் புதிய விழிப்புணர்வு தோன்றுவதற்குக் காரணமாயின.

சமண மதத்தின் தோற்றம்:

உலகத்தின் மிகப்பழமையான, தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் மதங்களில் சமணமும் ஒன்றாகும். சமணம் 24 தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது. தீர்த்தங்கரர்கள் பல்வேறு காலங்களில் மதம் தொடர்பான உண்மைகளைப் போதித்தோர் ஆவர். முதல் தீர்த்தங்கரர் ரிஷபர். கடைசித் தீர்த்தங்கரர் மகாவீரர் ஆவார். கி.மு.(பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டில் மகாவீரரரின் வழிகாட்டுதலில் சமணம் முக்கியத்துவம் பெற்றது.

மகாவீரர் (தலைசிறந்த வீரர்):

வர்த்தமானர் (செழிப்பு என்று பொருள்) ஒரு சத்திரிய இளவரசர். இருந்தபோதிலும் அவர் தன்னுடைய 30வது வயதில் இளவரசர் என்னும் தகுதியைக் கைவிட்டுவிட்டு துறவறம் மேற்கொண்டார். தீவிரமான தியானத்தை மேற்கொண்டார்.

பன்னிரண்டரை ஆண்டுகால கடுமையான தவத்திற்குப் பின்னர் அவர் எல்லையற்ற அறிவை அடைந்தார். இந்நிலைக்கு “கைவல்ய” என்று பெயர்.

அதன் பின்னர் அவர் ஜினா (Jina) ஆனார். இவரைப் பின்பற்றியவர்கள் சமணர் (Jains) என்று அழைக்கப்பட்டனர். மகாவீரர் பண்டைய சிரமானிய (Sramanic) மரபுகளை மறு ஆய்வு செய்தார். அவற்றின் அடிப்படையில் புதிய கோட்பாடுகளை உருவாக்கினார். ஆகவே இவர்தான் உண்மையிலேயே சமணத்தை உருவாக்கியவர் என நம்பப்படுகிறது.

சமணத்தின் தனித்தன்மை வாய்ந்த போதனைகள்:

  • இப்பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் என்பதை சமணம் மறுக்கிறது.
  • அகிம்சை அல்லது அறவழியே சமணத்தின் அடிப்படைத் தத்துவம்.
  • முக்தி அடைவது அல்லது பிறப்பு-இறப்பு-மறுபிறப்பு எனும் சுழற்சியிலிருந்து விடுபடுவதே சமணத்தின் இறுதி லட்சியமாகும்.
  • இறுதித் தீர்ப்பு என்ற நம்பிக்கையை சமணம் மறுக்கிறது (இறுதித் தீர்ப்பு என்பது யார் சொர்க்கத்திற்கு செல்வது? யார் நரகத்திற்கு செல்வது? என்பதைக் கடவுள் தீர்மானிப்பார் என்ற நம்பிக்கை).
  • ஒருவருடைய வாழ்வின் நலன் அல்லது தரம் என்பது அவருடைய கர்ம வினையால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை சமணம் ஆதரிக்கிறது.

திரிரத்தினங்கள் அல்லது மூன்று ரத்தினங்கள்:

கர்மாவிலிருந்து விடுதலை பெறுவதற்கும் மோட்ச நிலையை அடைவதற்கும் மகாவீரர் மூன்று வழிகளை அறிவுறுத்தினார். அவை:

  • நன்னம்பிக்கை.
  • நல்லறிவு.
  • நற்செயல்.

சமணத்தின் நடத்தை விதிகள்:

மகாவீரர் தன்னைப் பின்பற்றுவோரை ஒழுக்கம் மிகுந்த வாழ்க்கையை மேற்கொள்ளக் கூறினார். அப்படிப்பட்ட வாழ்வை மேற்கொள்ள ஐந்து கொள்கைகளைப் போதித்தார். அவை:

  • அகிம்சை – எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது.
  • சத்யா – உண்மையை மட்டுமே பேசுதல்.
  • அஸ்தேய – திருடாமை.
  • அபரிக்கிரகா – பணம், பொருள் சொத்துக்கள் மீது ஆசை கொள்ளலாமல் இருப்பது.
  • பிரம்மச்சரியா – திருமணம் செய்து கொள்ளாமை.

திகம்பரரும் சுவேதாம்பரரும்:

சமணம் திகம்பரர், சுவேதாம்பரர் என இரு பிரிவுகளாகப் பிரிந்தது.

திகம்பரர்:

  • திகம்பரர் வைதீக பழமைவாதப் போக்குடைய சீடர்கள்.
  • திகம்பரர் பிரிவைச் சேர்ந்த சமணத் துறவிகள் ஆடைகள் அணிவதில்லை. நிர்வாணமாக வாழ்ந்தனர். அவர்கள் எந்த விதமான உடைமையும் வைத்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது.
  • பெண்கள் நேரடியாக விடுதலை பெறவோ நிர்வாண நிலையை அடையவோ முடியாது என திகம்பரர் நம்பினர்.

சுவேதாம்பரர்:

சுவேதாம்பரர்:

  • சுவேதாம்பரர்கள் முற்போக்கானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
  • சுவேதாம்பர பிரிவைச் சேர்ந்த துறவிகள் வெள்ளை நிற ஆடைகளை அணிகின்றனர். ரஜோகரனா (கம்பளி நூல்களைக் கொண்ட சிறிய துடைப்பம்) பிச்சைப் பாத்திரம், புத்தகம் ஆகியவை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
  • ஆண்களைப் போலவே பெண்களும் விடுதலை பெற சமமான தகுதிகளைக் கொண்டுள்ளனர் என சுவேதாம்பரர்கள் நம்புகின்றனர்.

சமணம் பரவியதற்கான காரணங்கள்:

இந்தியாவில் சமணம் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான காரணங்கள்:

  • மக்கள் பேசிய மொழியிலேயே சமணக் கருத்துக்கள் சொல்லப்பட்டன.
  • புரிந்து கொள்ளும்படியான போதனைகள்.
  • அரசர்கள் மற்றும் வணிகர்களின் ஆதரவு.
  • சமணத் துறவிகளின் விடாமுயற்சி.

தமிழகத்தில் சமணத்தின் செல்வாக்கு:

  • பண்டைய தமிழ் இலக்கியங்கள் ஜைனம் என்பதை சமணம் என்று குறிப்பிடுகின்றன.
  • மதுரை நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் கீழக்குயில்குடி கிராமத்தில் சமணர் மலை என்ற பெயரில் ஒரு குன்று உள்ளது. சமணத் துறவிகளால் உருவாக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் உருவங்கள் இம்மலையில் காணப்படுகின்றன. இது இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்படும் நினைவு சின்னமாக உள்ளது.
  • மதுரையிலிருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள அரிட்டாபட்டி என்ற கிராமத்தில் கலிஞ்சமலை உள்ளது. இதன் ஒரு பகுதியில் பாண்டவர் படுக்கை என்று அழைக்கப்படும் சமணர் குகைகள் உள்ளன. சமணத் துறவிகளுக்கான கற்படுக்கைகளே பாண்டவர் படுக்கை என அழைக்கப்படுகிறது.
  • அறவோர் பள்ளி என்பது சமணத் துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலையில் குறிப்பு உள்ளது.
  • கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் வழியில் சமண பெண் துறவியான கவுந்தியடிகள் அவர்களை ஆசீர்வதித்து அவர்களுடன் சென்றாக தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

  • புகார், உறையூர், மதுரை, வஞ்சி (கருவூர்) காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் சமண மடாலயங்கள் இருந்துள்ளன.
  • ஜைனக் காஞ்சி – காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்திக் குன்றம் என்ற கிராமத்தில் இரண்டு பழமையான சமணக் கோவில்கள் உள்ளன. இக்கிராமம் முன்னர் ஜைனக் காஞ்சி என்று அழைக்கப்பட்டுள்ளது.
  • திருப்பருத்திக்குன்றம் சித்தன்னவாசல் சிதாறல் மலைக்கோவில்.

பௌத்தம்:

கௌதம புத்தர்:

பௌத்த மதத்தை நிறுவியவர் கௌதம புத்தர் ஆவார். அவரின் இயற்பெயர் சித்தார்த்தர். மகாவீரரைப் போலவே இவரும் ஒரு சத்திரிய இளவரசர். அரசாட்சி செய்து கொண்டிருந்த சாக்கிய அரசவம்சத்தில் பிறந்தவர். சித்தார்த்தர் ஏழு நாள் குழந்தையாக இருந்த போது அவருடைய தாயார் இயற்கை எய்தினார். எனவே அவருடைய சிற்றன்னை கௌதமி அவரை வளர்த்தார்.

நான்கு பெரும் காட்சிகள்:

சித்தார்த்தா தனது 29வது வயதில் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளைக் கண்டார். அவை

  • கூன் விழுந்த முதுகுடனும், கந்தல் ஆடைகளுடனும் கவனிப்பரற்ற ஒரு முதியவர்.
  • குணப்படுத்த முடியாத வியாதியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நோயாளி.
  • இறந்துவிட்ட ஒரு மனிதனின் சடலம் அழுது கொண்டிருக்கும் அவனின் உறவினர்களால் இடுகாட்டிற்குக் கொண்டு செல்லப்படுதல்.
  • ஒரு துறவி.

ஞானமடைதல்:

புத்தர் (ஞானம் பெற்ற ஒருவர் என்று பொருள்) மனித வாழ்க்கை முழுவதும் துன்பங்களும் துயரங்களும் நிறைந்தது என உணர்ந்தார். அதனால் 29ஆம் வயதில் அரண்மனையை விட்டு வெளியேறி துறவறம் மேற்கொண்டார். ஆறு ஆண்டுகள் தவமிருந்தார். தன்னைத்தானே வருத்திக் கொள்வது விமோச்சினத்திற்கான பாதை அல்ல என்பதை உணர்ந்தார். அதனால் கயாவுக்கு அருகே ஒரு அரசமரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தை மேற்கொண்டார்.

அவ்வாறு தியானத்தில் இருந்தபோது 49ஆம் நாள் அவர் ஞானம் பெற்றார். அப்போதிலிருந்து அவர் புத்தர் (ஞானம் பெற்றவர்) என அழைக்கப்பட்டார். சாக்கிய அரச குடும்பத்தைச் சேர்ந்த துறவி என்பதால் சாக்கிய முனி என்றும் அழைக்கப்பட்டார்.

வாரணாசிக்கு அருகேயுள்ள, சாரநாத் என்னும் இடத்தில் உள்ள மான்கள் பூங்கா என்ற இடத்தில் புத்தர் தனது முதல் போதனைச் சொற்பொழிவை நிகழ்த்தினார். இது “தர்ம சக்ர பரிவர்த்தனா” அல்லது தர்ம சக்கரத்தை நகர்த்துதல் என்று அழைக்கப்படுகின்றது.

புத்தரின் நான்கு பேருண்மைகள்:

  • வாழ்க்கை துன்பங்கள், துயரங்கள் நிறைந்தது.
  • ஆசையே துன்பங்களுக்கான காரணம்.
  • ஆசையைத் துறந்துவிட்டால் துன்ப துயரங்களைப் போக்கி விடலாம்.
  • சரியான பாதையைப் பின்பற்றினால் (எண்வகை வழிகள்) ஆசைகளை வென்று விடலாம்.

புத்தரின் எண்வகை வழிகள்:

  • நல்ல நம்பிக்கை.
  • நல்ல எண்ணம்.
  • நல்ல பேச்சு.
  • நல்ல செயல்
  • நல்ல வாழ்க்கை.
  • நல்ல முயற்சி.
  • நல்ல அறிவு.
  • நல்ல தியானம்.

புத்தரின் போதனைகள் எளிமையாக இருந்தன. மக்கள் பயன்படுத்திய மொழியிலேயே போதிக்கப்பட்டன. மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றியதாக போதனைகள் இருந்ததால் அவர்கள் தங்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்தனர். புத்தர் சடங்குகளையும் வேள்விகளையும் எதிர்த்தார்.

புத்தரின் போதனைகள்:

  • புத்தரின் போதனைகள் “தம்மா” என்று குறிப்பிடப்படுகின்றன.
  • கர்மா கோட்பாட்டை பௌத்தம் ஏற்றுக் கொண்டது. (ஒருவனுடைய செயல்களே அவனது வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிக்கிறது என்பதாகும்).
  • புத்தர் கடவுளின் இருப்பை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ஆனால் பிரபஞ்ச விதிகளை நம்பினார்.
  • நிர்வாண நிலை அடைவதே வாழ்க்கையின் இறுதி நோக்கம் என்று புத்தர் வலியுறுத்தினார்.
  • புத்தர் அகிம்சையை வலியுறுத்தினார்.
  • சாதிபடி நிலையினை புத்தர் நிராகரித்தார்.
  • வாழ்க்கைச் சக்கரம் – உலகைப் பற்றிய புத்தரின் பார்வையை பிரதிபலிக்கிறது.

பௌத்த சங்கம்:

புத்தர் தனது கருத்துக்களைப் பரப்புவதற்காக சங்கம் ஒன்றை நிறுவினார். அதில் உறுப்பினர்களாக இருந்த துறவிகள் “பிட்சுக்கள்” என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் மிக எளிய வாழ்க்கையை மேற்கொண்டனர்.

பௌத்த பிரிவுகள்:

ஹீனயானம் மகாயானம்
  • புத்தரின் சிலைகளையோ உருவப் படங்களையோ வணங்க மாட்டார்கள்.
  • மிக எளிமையாக இருப்பர்.
  • தனிமனிதர்கள் முக்தி அடைவதே தங்களின் நோக்கம் என்று நம்பினர்.
  • பிராகிருத மொழியைப் பயன்படுத்தினர்.
  • ஹீனயானம் தேரவாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • புத்தரின் உருவங்களை வணங்கினர்.
  • விரிவான சடங்குகளைப் பின்பற்றினர்.
  • அனைத்து உயிரினங்களும் முக்தி பெறுவதே தங்களது நோக்கம் என நம்பினர்.
  • சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தினர்.
  • இப்பிரிவு மத்திய ஆசியா இலங்கை, பர்மா, நேபாளம், திபெத், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பரவியது. இந்நாடுகளில் மத்திம வழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பௌத்தம் பரவியதற்கான காரணங்கள்:

  • புத்தரின் போதனைகள் மிக எளிமையாக உள்ளுர் மக்கள் பேசிய மொழிகளில் இருந்தன.
  • விரிவான மதச் சடங்குகளை பௌத்தம் நிராகரித்தது. மாறாக பண்டைய வேதமதம் செலவு மிக்க சடங்குகளையும் வேள்விகளையும் நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது.
  • மக்கள் தம்மதத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தியது.
  • புத்தரின் கருத்துக்களைப் பரப்பியதில் பௌத்த சங்கங்கள் முக்கியப் பங்கு வகித்தன.
  • அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர் போன்ற அரசர்கள் பௌத்தம் பரவுவதற்கு ஆதரவு அளித்தனர்.
  • பௌத்த விகாரைகள் அல்லது மடாலயங்கள் சிறந்த கல்வி மையங்களாகச் செயல்பட்டன. அவற்றில் ஒன்று நாளந்தா. அங்கு சீனயாத்ரிகர் யுவான்-சுவாங் பல ஆண்டுகள் தங்கி கல்வி பயின்றார்.
சமணமும்-பௌத்தமும்-ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்
ஒற்றுமைகள் வேற்றுமைகள்
சமண மதம் பௌத்த மதம்
  • மகாவீரர், புத்தர் இருவருமே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருந்த போதிலும் அவர்கள் அரச குடும்ப உரிமைகளை நிராகரித்து, துறவு வாழ்க்கையைத் தேர்வு செய்தனர்.
  • வேதங்களின் ஆதிக்கத்தை மறுத்தனர்.
  • மக்கள் பேசிய மொழிகளில் போதித்தனர்.
  • அனைத்து சாதியினரையும், பெண்களையும், சீடர்களாக ஏற்றுக் கொண்டனர்.
  • இரத்த பலிகளை எதிர்த்தனர்.
  • “கர்மா” என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர்.
  • மதச் சடங்குகளை நடத்துவதன் மூலம் முக்தி அடைய முடியும் என்பதற்கு மாறாக சரியான நடத்தையும் சரியான அறிவுமே முக்திக்கான வழி எனக் கூறினர்.
  • சமணம் தீவிரமான துறவறத்தைப் பின்பற்றியது.
  • இந்தியாவில் மட்டுமே இருந்தது.
  • கடவுள் இருப்பதாக சமணம் நம்பவில்லை. ஆனால் ஒவ்வொருயிரிலும் ஜீவன் இருப்பதை நம்பியது
  • பௌத்தம் இடைப்பட்ட வழியைப் பின்பற்றியது.
  • உலகத்தின் பல பகுதிகளிலும் பரவியது.
  • அனாத்மா (எல்லையற்ற ஆன்மா) அனித்யா (நிலையாமை) ஆகிய கருத்துகளுக்கு அழுத்தம் வழங்கியது.

தமிழ்நாட்டில் பௌத்தத்தின் செல்வாக்கு:

  • சமணத்திற்கு மிகவும் பிற்பட்டே தமிழகத்தில் பௌத்தம் பரவியது.
  • சங்க காலத்திற்குப் பின்னர் இயற்றப்பட்ட இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பௌத்த இலக்கியமாகும்.
  • மணிமேகலையில் காஞ்சிபுரம் விரிவாகச் விவரிக்கப்பட்டுள்ளது.
  • காஞ்சிபுரம் புகழ் பெற்ற ஒரு பௌத்த மையமாகும். பௌத்த தர்க்கவியல் அறிஞரான தின்னகர் மற்றும் நாளந்தா பல்கலைக் கழகத்தின் மிகப்பெரும் அறிஞர் தர்மபாலர் இவ்வூரைச் சேர்ந்தவர் ஆவார். கி.பி.(பொ.ஆ) ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். அங்கு அசோகரால் கட்டப்பட்ட 100 அடி உயரமுள்ள ஸ்தூபியை அவர் பார்த்தாய்க் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் அந்நாளில் கி.மு.(பொ.ஆ.மு) 6ம் நூற்றாண்டு

மீள்பார்வை:

  • இந்தியாவில் கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு அறிவு மலர்ச்சியும் ஆன்மீக வளர்ச்சியும் ஏற்பட்ட காலமாகும்.
  • சமணம் 24 தீர்த்தங்கர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கோட்பாடு ஆகும்.
  • மகாவீரர் மூன்று நெறிகளை வற்புறுத்திக் கூறுகிறார். அவை நன்னம்பிக்கை, நல்லறிவு மற்றும் நற்செயல்.
  • பௌத்தத்தை நிறுவியவர் கௌதம புத்தர்.
  • புத்தரின் போதனைகள் தம்மா (தர்மம்) என்று குறிப்பிடப்படுகின்றன.
  • பௌத்தம் இந்திய எல்லைகளைத் தாண்டியது. ஆனால் சமணம் இந்தியாவுக்குள்ளாகவே இருந்தது.
  • சமணம் மற்றும் பௌத்தத்தின் அடிப்படைக் கொள்கை அகிம்சை ஆகும்.

அருஞ்சொல் விளக்கம்:

மூட நம்பிக்கைகள் – Superstitious Beliefs.

ஆசான் – Preceptor.

கோட்பாடு – Doctrine.

நல்லொழுக்கம் – Virtuous.

புனித நூல் – Sacred Book.

ஈரமான சுவரின் மேல் வண்ணக் கலவைகள் கொண்டு வரையப்படும் ஓவியங்கள் – Frescoes.

சடலம் – Corpse.

துன்பம் மற்றும் பிறப்பிலிருந்து விடுதலை (நிர்வாண நிலை) – Nirvana.

உங்களுக்குத் தெரியுமா?

சமணம் (Jain) என்னும் சொல் ஜினா (Jina) என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அதன் பொருள் தன்னையும், வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும்.

இயற்பெயர் – வர்த்தமானர்.

பிறப்பு – வைசாலிக்கு அருகேயுள்ள குந்தகிராமம், பீகார்.

பெற்றோர் – சித்தார்த்தர், திரிசலா.

இறப்பு – பவபுரி-பீகார்.

கர்மா அல்லது கர்மவினை என்றால் என்ன?

இப்பிறவியில் ஒருவர் செய்யும் செயல்களே அவருடைய/அவளுடைய இப்பிறவியின் பிற்பகுதி வாழ்க்கையையும், அடுத்த பிறவியில் அவர் வாழப்போகும் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது என்ற நம்பிக்கை ஆகும்.

மகாவீரரின் தலைமைச் சீடரான கௌதம சுவாமி, மகாவீரரரின் போதனைகளைத் தொகுத்தார். அதன் பெயர் ஆகம சித்தாந்தம் எனப்படும்.

மோட்சம் என்பது பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியின் இருந்து விடுதலை பெறுதல் ஆகும்.

இயற்பெயர் – சித்தார்த்தா.

பிறப்பு – லும்பினி தோட்டம் நேபாளம்.

பெற்றோர் – சுத்தோதனா, மாயாதேவி.

இறப்பு – குசி நகரம், உபி.

சைத்தியம் – ஒரு பௌத்தக் கோவில் அல்லது தியானக் கூடம்.

விகாரைகள் – மடாலயங்கள்/துறவிகள் வாழும் இடங்கள்.

ஸ்தூபி – புத்தருடைய உடல் உறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டடம் இவை கலைத்திறமை வாய்ந்த நினைவுச் சின்னங்கள் ஆகும்.

சுவரோவியங்கள்: மகாராஷ்டிர மாநிலம் ஓளரங்காபாத்தில் உள்ள அஜந்தா குகைகளின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதக கதைகளை சித்தரிக்கின்றன.

இடை வழி: (நடுவு நிலை வழி): உலக சுகங்களின் மீது தீவிரமான பற்றும் இல்லாமல், அதே சமய கடுமையான தவ வாழ்வையும் மேற்கொள்ளாமல் இருப்பதைக் குறிக்கிறது.

பௌத்த மாநாடுகள் – இடம்

முதலாவது – இராஜகிருகம்

இரண்டாவது – வைசாலி

மூன்றாவது – பாடலிபுத்திரம்

நான்காவது – காஷ்மீர்

ஜாதகக் கதைகள்: ஜாதகக் கதைகள் புகழ் பெற்றவை. புத்தர் முந்தைய பிறவிகளில் மனிதராகவும், விலங்காகவும் இருந்ததைக் குறித்த கதைகளாகும். இவை அறநெறிகளைக் கூறுவன ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!