Samacheer NotesTnpsc

மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? Notes 8th Social Science Lesson 8 Notes in Tamil

8th Social Science Lesson 8 Notes in Tamil

8. மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

அறிமுகம்

  • நமது நாட்டில் மத்திய அரசு, மாநில அரசு என்ற இரண்டு வகை அரசாங்கங்கள் நடைமுறையில் உள்ளன.
  • இந்தியாவில் 28 மாநில அரசாங்கங்கள் செயல்படுகின்றன.
  • ஒவ்வொரு மாநிலமும் தனது நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள தனக்கென ஒரு அரசைக் கொண்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலமும் நிர்வாகம், சட்டமன்றம மற்றும் நீதித்துறையை கொண்டுள்ளது.
  • மாநில நிர்வாகம் மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையால் மேற்கொள்ளப்படுகிறது.
  • மாநில ஆளுநர் சட்டமன்றத்தின் ஒரு அங்கமாகத் திகழ்கிறார்.

மாநில நிர்வாகம்

ஆளுநர்

  • மாநில அரசின் தலைவராக மாநில ஆளுநர் இருப்பார் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது.
  • இந்தியக் குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார். இவர் மாநில நிர்வாகத்தின் தலைவராக இருக்கிறார்.
  • அவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். எனினும் பதவிக்காலம் முடியும் முன்பாகவே அவரை அப்பதவியிலிருந்து குடியரசுத் தலைவர் நீக்கலாம் அல்லது தானாகவே தனது பதவியை ஆளுநர் ராஜினாமா செய்யலாம்.
  • ஆளுநரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் அல்லது வேறு மாநிலத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்படலாம். ஆனால் மாநில அரசாங்கம் ஆளுநரை பதவியிலிருந்து நீக்க இயலாது.
  • மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
  • 35 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும்.
  • மேலும் அவர் பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. இது தவிர ஆதாயம் தரும் எந்த ஒரு பதவியையும் அவர் வகித்தல் கூடாது.
  • குடியரசுத் தலைவர் ஆளுநரை நியமிக்கும்போது மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுகிறார். மேலும் தொடர்புடைய மாநில அரசையும் கலந்தாலோசிக்கிறார். பொதுவாக ஒருவர் ஆளுநராக அவரது சொந்த மாநிலத்தில் நியமிக்கப்படுவது இல்லை.

அதிகாரம் மற்றும் பணிகள்

  • ஆளுநர் ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். மாநில அரசின் நிர்வாக அதிகாரங்கள் ஆளுநரிடம் உள்ளன. மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாக செயல்களும் ஆளுநரின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்றன. ஆளுநர் முதலமைச்சரையும் அவரது ஆலோசனையின் பேரில் ஏனைய அமைச்சர்களையும் நியமிக்கிறார்.
  • மாநில அரசின் தலைமை வழக்கறிஞர், மாநில அரசு பணியாளர் தேர்வணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வதோடு சில இதர நியமனங்களையும் மேற்கொள்கிறார்.
  • ஆளுநரின் அறிக்கையின் படி குடியரசு தலைவர் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார். மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார்.
  • மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் அதிகாரம் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் சட்டமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார்.
  • ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்னரே பண மசோதாவைச் சட்டமன்றத்தில் கொண்டுவர முடியும். சட்டமன்ற கூட்டம் நடைபெறாத போது ஆளுநர் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கிறார்.
  • சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினரை அவர்கள் போதிய அளவு பிரதிநிதித்துவம் பெறாதபோது நியமனம் செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார். மாநில சட்ட மேலவைக்கு அறிவியல், இலக்கியம், கலை, சமூக சேவை, கூடுறவு இயக்கம் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பங்காற்றிய அறிஞர்களில், ஆறில் ஒரு பங்கு அளவிற்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமிக்கிறார்.
  • மாநில அரசாங்கத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பண மசோதா உள்ளிட்ட அனைத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறார். மாநில அரசின் எதிர்பாரா செலவின நிதி ஆளுநரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும்.

ஆளுநரின் நிலை

  • மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரைப் போன்று மாநிலத்தில் பெயரளவு நிர்வாகத் தலைவராக உள்ளார். எனினும் மாநில ஆளுநர் எப்போதும் பெயரளவு தலைவராக இருப்பது இல்லை.
  • அவர் தனது அதிகாரங்களை குறிப்பிட்ட சில நேர்வுகளில் செயல்படுத்துகிறார்.
  • அவர் மத்திய அரசின் ஒரு முகவராக மாநிலத்தில் செயல்படுகிறார். எனவே இவர் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவற்றிற்கிடையேயான உறவுகளைப் பராமரிப்பதற்குப் பொறுப்பு வாய்ந்தவர் ஆவார்.
  • ஆளுநர் முக்கியமான தருணங்களில் அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்குகிறார்.
  • மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான ஆளுநரின் அறிக்கையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மாநிலத்தில் நெருக்கடி நிலையை அறிவிக்கிறார்.
  • ஆளுநர் விருப்புரிமை அதிகாரத்தை செயல்படுத்தும் போது தன்னிச்சையான முடிவுகளை எடுக்கிறார்.
  • அவர் அமைச்சரவையிடமிருந்து அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைக் கோரிப் பெறலாம்.

முதலமைச்சர்

  • ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவரை மாநில முதலமைச்சராக நியமிக்கிறார்.
  • முதலமைச்சர் அமைச்சரவையின் தலைவர் ஆவார்.
  • முதலமைச்சரின் பதவிக்காலம் நிலையான ஒன்று அல்ல. அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளவரை முதலமைச்சர் பதவியில் நீடிக்கலாம்.
  • சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை இழக்கும்போது அவர் பதவி விலகுதல் வேண்டும்.
  • முதலமைச்சர் பதவி விலகுதல் என்பது ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகுதலைக் குறிக்கும்.
  • முதலமைச்சர் மாநில சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
  • முதலமைச்சராக இல்லாவிட்டால் 6 மாதத்திற்குள் சட்டமன்றத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.

முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்

  • முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். மாநில அரசாங்கத்தின் பல்வேறு முக்கிய முடிவுகள் அவரது தலைமையின் கீழ் எடுக்கப்படுகின்றன.
  • மாநில முதலமைச்சர், அமைச்சரவையை, உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். முதலமைச்சரின் ஆலோசனையின் பெயரில் அமைச்சர்களை ஆளுநர் நியமிக்கிறார்.
  • பல்வேறு துறைகளை கண்காணித்து ஆலோசனை வழங்குகிறார். மேலும் அவர் பல்வேறு துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
  • முதலமைச்சர் மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவர் மாநில அரசின் கொள்கைகள் மக்களின் நலனுக்கு எதிராக இல்லாததை உறுதி செய்கிறார். மாநில அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் அவரது முடிவே இறுதியாக இருக்கும்.
  • மாநில அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் செய்யும் முக்கிய அதிகாரத்தைக் கொண்டுள்ளார். முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின்படியே ஆளுநர் பல்வேறு உயர் அதிகாரிகளை நியமிக்கிறார்.

மாநில சட்டமன்றம்

  • இந்தியாவில் மாநில சட்டமன்றம் என்பது ஆளுநரையும் ஒன்று அல்லது இரண்டு அவைகளையும் கொண்டிருக்கும்.
  • மேலவை என்பது சட்டமன்ற மேலவை எனவும் கீழவை என்பது சட்டமன்ற பேரவை எனவும் அழைக்கப்படுகிறது.

சட்டமன்ற மேலவை

ஒரு மாநிலத்தின் சட்ட மன்ற மேலவையானது 40 உறுப்பினர்களுக்குக் குறையாமலும், அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது. இதன் உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

  • மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் நகராட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • மேலும் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • 12 இல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • மற்றொரு 12ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் இடைநிலை பள்ளி ஆசிரியர்கள், இடைநிலை பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • 6ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.

சட்டமன்ற மேலவை ஒரு நிலையான அக்காலிப் பணியிடங்களுக்கு தேர்தல் நடைபெறும்.

  • உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
  • உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒருவர் இந்தியக் குடிமகனாகவும், 30 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும்.
  • இவர் மாநில சட்டமன்றத்திலும் அல்லது பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது.
  • தலைமை அலுவலராக அவைத்தலைவர் இருப்பார்.
  • அவைத்தலைவர் இல்லாதபோது துணைத் தலைவர் அவையை நடத்தும் பொறுப்பினை கொண்டிருப்பார்.
  • சட்டமன்ற மேலவையின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை அவையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

சட்டமன்றப் பேரவை

  • மாநில அரசாங்கத்தின் சட்டங்களை உருவாக்குபவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என அழைக்கப்படுகின்றனர் (MLA).
  • இவர்கள் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • சட்டமன்ற தேர்தலுக்காக, மாநிலம் பல்வேறு தொகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை சட்டமன்ற தொகுதிகள் என அழைக்கப்படுகின்றன.
  • ஒரு சட்டமன்ற தொகுதி ஒரு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலிருந்தும் ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

சட்டமன்ற பேரவைக்கான தேர்தல்

  • சட்டமன்ற பேரவைக்கான தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகள் ஒவ்வொரு தொகுதிக்கும் தமது வேட்பாளர்களை நியமிக்கின்றன.
  • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மக்களிடம் தமக்கு வாக்களிக்குமாறு கோருகிறார்.
  • சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
  • ஒருவர் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடலாம். அவ்வாறு போட்டியிடும் வேட்பாளர் சுயேட்சை வேட்பாளர் என அழைக்கப்படுகிறார்.
  • ஒவ்வொரு கட்சியும் தனக்கென ஒரு சின்னத்தை கொண்டிருக்கும். சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் வழங்கப்படும்.
  • சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • ஒரு சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 18 வயது நிரம்பிய அனைவரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கலாம்.
  • அரசியலமைப்பின்படி, ஒரு மாநில சட்டமன்றத்தில் 500 உறுப்பினர்களுக்கு மேலாகவும் 60 உறுப்பினர்களுக்கு குறைவாகவும் இருத்தல் கூடாது.
  • அட்டவணைப் பிரிவினர், பழங்குடியினருக்கு சட்டமன்றத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மாநில ஆளுநர் சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினரை நியமனம் செய்கிறார்.
  • சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால் மாநில ஆளுநர், சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அதனை கலைத்து புதிதாக தேர்தல் நடத்த அழைப்பு விடுக்கலாம்.
  • சட்டமன்ற கூட்டத்திற்கு சபாநாயகர் தலைமை ஏற்கிறார். இவர் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • சபாநாயகர் இல்லாத நேர்வுகளில் துணை சபாநாயகர் சட்டமன்ற கூட்டத்திற்கு தலைமை ஏற்கிறார்.

மாநில அமைச்சரவை

  • தேர்தலில் பெரும்பான்மை பெரும் கட்சியின் தலைவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 118க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி ஆளுநரால் ஆட்சி அமைக்க அழைக்கப்படுகிறது.
  • முதலமைச்சர் (இருவரும் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருத்தல் வேண்டும்) அவரது கட்சி உறுப்பினர்களிலிருந்து, அமைச்சர்களை தேர்வு செய்கிறார். இவ்வாறு முதலமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான பல்வேறு துறை அமைச்சர்களும் கொண்ட அமைப்பு மாநில அரசாங்கம் என அழைக்கப்படுகிறது. ஆகவே தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும் எனக் கூறலாம்.

மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகள்

  • சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அதன் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் வேண்டும்.
  • சட்டமன்றம் ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை கூடும்.
  • மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றுவது சட்டமன்றத்தின் முக்கிய பணி ஆகும்,
  • சட்டமன்றம் மாநிலப் பட்டியல் மற்றும் மத்தியப் பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பாக சட்டத்தை இயற்றலாம். எனினும் நெருக்கடி நிலை நடைமுறையில் உள்ளபோது சட்டமன்றம் தனது சட்டமியற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்த இயலாது.
  • மாநில சட்டமன்றம் அமைச்சரவையின் மீது கட்டுப்பாட்டினை செலுத்துகிறது. மாநில அமைச்சரவை சட்டமன்றத்திற்கு பொறுப்புள்ளதாகவும் மற்றும் பதில் அளிக்கவும் கடமைப்பட்டுள்ளது.
  • அமைச்சரவையின் செயல்பாடுகளில் திருப்தி ஏற்படாவிட்டால் மாநில சட்டமன்றத்தில் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இயற்றி அமைச்சரவையை நீக்கம் செய்திடலாம்.
  • மாநில சட்டமன்றம் ஆனது மாநிலத்தின் நிதியைக் கட்டுப்படுத்துகிறது.
  • நிதி மசோதாவை சட்டமன்றத்தில் மட்டுமே கொண்டுவர இயலும்.
  • சட்டமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநில அரசாங்கம் வரியினை விதிக்கவோ, அதிகரிக்கவோ, குறைக்கவோ, விலகிக் கொள்ளவோ இயலாது
  • .சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கேற்கின்றனர்.
  • மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் சட்டமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு கொள்கின்றனர்.
  • அரசியலமைப்புத் திருத்தம் சில நேர்வுகளில் சட்டமன்றம் பங்கு வகிக்கிறது. எனவே அரசாங்கமானது சட்டத்தை உருவாக்குதல், சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், நீதியை உறுதி செய்தல் ஆகிய மூன்று அடிப்படை பணிகளைக் கொண்டுள்ளது.

மாநில அரசாங்கத்தில் சட்டங்கள் எவ்வாறு இயற்றப்படுகின்றன?

  • நாட்டு மக்களுக்காக பல்வேறு வகையான விதிகள் மற்றும் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக நீங்கள் ஒரு துப்பாக்கியை உரிமம் இல்லாமல் வைத்துக்கொள்ள இயலாது அல்லது சட்டப்படி ஒரு பெண் 18 வயதிற்கு முன்பாகவும் அல்லது ஒரு ஆண் 21 வயதிற்கு முன்பாகவும் திருமணம் செய்து கொள்ள இயலாது. இத்தகைய விதிகளும் சட்டங்களும் சாதாரணமாக இயற்றப்பட்டவை அல்ல.
  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இதுபோன்ற சட்டங்களை உருவாக்குவதற்கு முன்பாகக் கவனமாக சிந்தித்து உள்ளது. இவை போன்ற பல்வேறு சட்டங்கள் மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தால் இயற்றப்படுகின்றன.
  • சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளான பொதுப்பணிகள், கல்வி, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவை பற்றி விவாதிக்கின்றனர்.
  • சட்டமன்ற உறுப்பினர்களுக்கான துறைகளின் செயல்பாடுகளை தெரிந்துகொள்ள கேள்விகளை எழுப்பலாம் இதற்கு அந்தத்துறை சார்ந்த அமைச்சர் விடையளிக்க வேண்டும்.
  • சில நிகழ்வுகள் குறித்து சட்டமன்றம் சட்டங்களை இயற்றுகிறது. சட்டம் இயற்றும் முறை பின்வருமாறு:

சட்டங்களை நடைமுறைப்படுத்துதல்

  • சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மாநில அமைச்சரவையின் பணியாகும்.
  • தமிழ்நாடு சட்டமன்றம் சென்னையில் அமைந்துள்ளது.
  • ஒரு மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் அமைச்சரவை பொதுவாக எங்கு செயல்படுகிறதோ அதுவே மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.
  • சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், காவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் என பல லட்சக்கணக்கான பணியாளர்கள் ,மாநில அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
  • அவ்வகையான அலுவலர்களுக்கு மாநில அரசாங்கம் ஊதியம் வழங்குகிறது. இவர்கள் மாநில அரசின் ஆணைகளைப் பின்பற்றி நடத்தல் வேண்டும்.
  • மாநில சட்டமன்றமும் சாதாரண அல்லது பண மசோதாக்களை நிறைவேற்றுவதில் பாராளுமன்றம் பின்பற்றும் நடைமுறைகளையே பின்பற்றுகிறது. சட்டமன்றபேரவை சட்டமன்ற மேலவையைக் காட்டிலும் அதிக அதிகாரம் கொண்டதாகும்.

மாநிலத்தின் நீதித்துறை

உயர் நீதிமன்றம்

  • மாநிலத்தில் உயரிய நீதி அமைப்பாக உயர் நீதிமன்றம் விளங்குகிறது. அரசியலமைப்பின்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர் நீதிமன்றம் இருக்கும். எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவான ஒரு உயர்நீதிமன்றமும் இருக்கலாம்.
  • மாநில உயர்நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும், குடியரசுத் தலைவர் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது நியமனம் செய்யும் இதர நீதிபதிகளையும் கொண்டிருக்கும்.
  • உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை.
  • குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும், மாநில ஆளுநரையும் கலந்தாலோசித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார்.
  • உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பின்வரும் தகுதிகளை கட்டாயம் கொண்டிருத்தல் வேண்டும்.
  • இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • இந்தியாவில் பத்தாண்டு காலம் நீதித்துறை அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும்.
  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
  • உயர் நீதிமன்ற நீதிபதி 62 வயது வரை அப்பதவியில் இருப்பார்.
  • உயர்நீதிமன்ற நீதிபதி நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை மற்றும் திறமை இன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது போன்று நீக்கப்படலாம்.

உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் பணிகள்

  • அடிப்படை உரிமைகள் மற்றும் இதர நோக்கங்களை வலியுறுத்த உயர்நீதிமன்றம் ஆட்கொணர்வு நீதிப் பேராணை, தகுதி முறை வினவும் நீதிப்பேராணை, தடை உறுத்தும் நீதிப்பேராணை , கட்டளையிடும் நீதிப்பேராணை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வலியுறுத்தும் நீதிப்பேராணை ஆகியவற்றைப் பிறப்பிக்கின்றன.
  • ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் தனது அதிகார எல்லைக்குள் உள்ள ராணுவ நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் நீங்கலாக அனைத்து சார் நிலை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களை கண்காணிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
  • சார் நிலை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள ஒரு வழக்கில் அதில சட்ட முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்றம் திருப்தியுறும் போது இவ்வழக்கினை எடுத்து தானே முடிவு செய்யலாம்.
  • உயர் நீதிமன்றம் மாநிலத்தில் உள்ள அனைத்து சார் நிலை நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.
  • உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தைப் போலவே வழக்குகள் பற்றிய பதிவேடுகளின் ஆதாரச் சான்றாக உள்ள பதிவுரு நீதிமன்றமாக விளங்குகிறது.
  • நீதி நிர்வாகத்திற்காக ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டமும் மாவட்ட நீதிமன்றத்தின் எல்லைக்குள் அமைந்திருக்கும். மாவட்ட நீதிபதிகள் ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றனர். மேலே தெரிவித்த அதிகாரங்களை தனது எல்லைக்குள் செயல்படுத்தும் போது நீதிமன்றம் முழு அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் கொண்டுள்ளது. அரசியலமைப்பின் பாதுகாப்பு என்பது நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!