Tnpsc

மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி Notes 7th Social Science Lesson 11 Notes in Tamil

7th Social Science Lesson 11 Notes in Tamil

11] மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

அறிமுகம்:

தென்மேற்கே எழுச்சி பெற்ற மராத்தியரின் அதிகாரம் முகலாயப் பேரரசிற்கு உண்மையான ஆபத்தை முன் நிறுத்தியது. ஷாஜகானின் ஆட்சிக் காலத்திலேயே சிவாஜியின் தந்தையும் அகமது நகர், பீஜப்பூர் ஆகிய அரசுகளில் அதிகாரியாகப் பணியாற்றியவருமான ஷாஜிபான்ஸ்லே பல இடையூறுகளைச் செய்தார். ஆனால், அவருடைய மகனான சிவாஜியே மராத்தியத்தியருக்குப் புகழ் சேர்த்தார். முகலாயரை அச்சமடைய வைத்தார். அவர் வீரம் செறிந்த போர் வீரராகவும் மிகச்சிறந்த தளபதியும், கொரில்லாப் போர்முறைகளுக்கு (மறைந்திருந்து தாக்குதல்) தலைவராகவும் இருந்தார். மனஉறுதி மிக்க மலைவாழ் மக்கள் அணியொன்றை உருவாக்கினார். அவ்வணி அவருக்கு விசுவாசமாக இருந்தது. அவர்களின் உதவியுடன் சிவாஜி பல கோட்டைகளைக் கைப்பற்றினார். ஒளரங்கசீப்பின் தளபதிகளுக்குக் கடும்போட்டியாக விளங்கினார். மராத்தியர்களின் வலிமை பெருகியபோது முகலாயப் பேரரசு வலிமை குன்றியது தக்காணம் முழுவதிலும் மராத்தியர்கள் சௌத், சர்தேஷ்முகி ஆகிய வரிகளை வசூலிக்கும் உரிமையை முகலாயர்கள் அங்கீகரிக்க வேண்டியதாயிற்று. போர்கள் திறமை மிக்க தளபதிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை தந்தன. அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மராத்திய அதிகாரத்தின் விறுவிறுப்பான விரிவாக்கத்திற்குப் பங்களிப்பு செய்தனர். பேஷ்வாக்கள் என்றழைக்கப்பட்ட மராத்திய அரசர்களின் பிரதம அமைச்சர்கள் ஷாகுவின் காலம் முதல் உண்மையான அதிகாரம் உடையவர்களாயினர். அவர்களின் ஆதரவில் 1761 வரை மராத்தியர் தங்கள் மேலாதிக்கத்தைத் தொடர்ந்தனர்.

மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள்:

புவியியல் கூறுகள்:

மராத்திய நாட்டின் புவியியல் கூறுகள் மராத்தியர்களிடையே சில தனித்தன்மை வாய்ந்த பண்புகளை வளர்த்திருந்தன. அவை, மராத்திய மக்களை இந்தியாவின் ஏனைய மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டின. பதினாராம் நூற்றாண்டில் பீஜப்பூர், அகமது நகர் சுல்தான்கள் மராத்தியர்களைத் தங்கள் குதிரைப் படையில் பணியமர்த்தினர். இச்சுல்தான்களின் படைகளில் மராத்தியர்களைப் பணியமர்த்திய செயல், இஸ்லாமிய வீரர்களின் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்ற ஆசையைச் சமன் செய்ய உதவியது. பாறைகளும், குன்றுகளும் அடங்கிய நிலப்பகுதி, அந்நிய படையெடுப்பாளர்களிடமிருந்து மராத்தியருக்குப் பாதுகாப்பளித்தது. மேலும், கொரில்லாப் போர் (மறைந்திருந்து தாக்குதல்) முறைக்கு உகந்ததாய் விளங்கியது.

பக்தி இயக்கமும் மராத்தியரும்:

மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது. மேலும், மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாகச் சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது. மராத்தியப் பகுதியைச் சேர்ந்த சமயத் தலைவர்கள் பல்வேறு சமூகக் குழுக்களிலிருந்து வந்தவராவர். பக்தி இயக்கத்தைச் சேர்ந்த பெரியோர்களில் ஏக்நாத், துக்காராம், ராம்தாஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கோர் ஆவர், துக்காராம், ராம்தாஸ் ஆகியோர் சிவாஜியின் வாழ்வின் மீது கணிசமான செல்வாக்கு செலுத்தினார்.

துக்காராம் ராம்தாஸ்

மராத்தியரின் மொழியும், இலக்கியமும்:

மராத்தியரிடையே ஒற்றுமையை வளர்ப்பதில் மராத்திய மொழியும் இலக்கியமும் உதவி செய்தன. பக்தி இயக்கப் பெரியோர்கள், மராத்திய மொழியில் இயற்றிய பாடல்களைத் தொகுத்தனர். அப்பாடல்கள் அனைத்துச் சாதிகளையும், வர்க்கங்களையும் சேர்ந்த மக்களால் பாடப்பட்டிருந்தன.

சிவாஜி:

1627 இல் பிறந்த சிவாஜி, தன் தாயார் ஜீஜாபாயின் பாதுகாப்பில் வளர்ந்தார். இராமாயணம், மகாபாரதக் கதைகளைக் கூறி, சிவாஜிக்கு அவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார். சிவாஜியின் ஆசிரியரும் குருவுமான தாதாஜி கொண்டதேவ் குதிரையேற்றம், போர்க்கலை, அரசு நிர்வாகம் ஆகியவற்றில் சிவாஜிக்குப் பயிற்சியளித்தார். தனது பதினெட்டாவது வயதில் (1645) இராணுவப் பணியில் முதலடி எடுத்து வைத்த நேரத்தில், புனேக்கு அருகேயிருந்த கோண்டுவானா கோட்டையைக் கைப்பற்றுவதில் சிவாஜி வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் தோர்னா கோட்டையைக் கைப்பற்றினார். தொடர்ந்து ரெய்கார் கோட்டையைக் கைப்பற்றி அதனைப் புனரமைத்தார்.

சிவாஜி

பிஜப்பூர் சுல்தானோடு போரிடுதல்:

சிவாஜியின் பாதுவாவலரான தாதாஜி கொண்டதேவ் 1649இல் இயற்கை எய்தியதால் சிவாஜி முழுமையான சுதந்திரம் பெற்றவரானார். தம் தந்தையாருக்குச் சொந்தமான கொண்ட தேவால் நிர்வகிக்கப்பட்ட ஜாகீரையும் சிவாஜி பெற்றார். மாவலி காலாட்படை வீரர்களே, அவருடைய படையின் வலிமையாகத் திகழ்ந்தனர். அவர்களின் உதவியுடன் சிவாஜி புனேவுக்கு அருகேயிருந்த பல கோட்டைகளைக் கைப்பற்றினார். முகலாயர் வசமிருந்த புரந்தர் கோட்டையையும் சிவாஜி கைப்பற்றினார். சிவாஜியின் இராணுவ நடவடிக்கைகள், பீஜப்பூர் சுல்தானைச் சினங்கொள்ளச் செய்தன. அவர் சிவாஜியின் தந்தையைச் சிறை வைத்தார். தமது இராணுவ நடவடிக்கைகளைச் சிவாஜி கைவிடுவதாக உறுதியளித்த பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார். தானளித்த வாக்குறுதியைக் காப்பாற்றும் விதமாக தந்தையார் ஷாஜி போன்ஸ்லே இயற்கை எய்தும்வரை சிவாஜி பீஜப்பூருடன் அமைதியை மேற்கொண்டார். இக்காலக் கட்டத்தில், அவர் தமது நிர்வாகத்தை மேம்படுத்தினார்.

மராத்தியர் ஆதிக்கத்தை நிலைநாட்டுதல்:

தந்தையாரின் மறைவுக்குப் பின்னர், தமது இராணுவத் திடீர் தாக்குதல்களை மீண்டும் தொடங்கிய சிவாஜி, மராத்தியத் தலைவர் சந்திர ராவ் மோர் என்பாரிடமிருந்து ஜாவலியைக் (1656) கைப்பற்றினார். பூனேவைச் சுற்றியிருந்த சிறிய அளவிலான மராத்தியத் தலைவர்களை அடக்கித் தமக்குக் கீழ்ப்பணியச் செய்தார். தான் கைப்பற்றிய மலைக் கோட்டைகளிலிருந்த பீஜப்பூர் வீரர்களைத் துரத்தியடித்த சிவாஜி அவர்களுக்குப் பதிலாகத் தம் தளபதிகளை அங்கே நியமித்தார். சிவாஜியின் இந்நடவடிக்கைகளும், அவரைத் தண்டிப்பதற்காக அனுப்பட்ட பீஜப்பூர் படைகளை அவர் தோற்கடித்ததும் முகலாய அதிகாரிகளை எச்சரிக்கை அடையச் செய்தது. அவரைத் தண்டிக்கும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட முகலாயப் படையெடுப்பையும் அவர் தைரியத்துடன் எதிர் கொண்டார். 1659இல் பீஜப்பூரின் குறிப்பிடத்தகுந்த தளபதியான அப்சல்கானைக் கொன்றார். 1663இல் ஒளரங்கசீப்பின் மாமனாரும் முகலாயத் தளபதியுமான ஷெஜ்டகானை சிவாஜி காயப்படுத்தித் துரத்தியடித்தார். இதற்கும் மேலாக அவர் 1664இல், அரபிக் கடற்கரையில் அமைந்திருந்த முகலாயரின் முக்கியத் துறைமுகமான சூரத் நகரைச் சூறையாடத் தமது படைகளை அனுப்பி வைத்தார்.

சிவாஜியும் ஒளரங்கசீப்பும்:

சிவாஜி சூரத்தைக் கொள்ளையடித்த பின்னர், ஒளரங்கசீப் எதிர் நடவடிக்கைளில் இறங்கினார். சிவாஜியை அழித்தொழிக்கவும், பீஜப்பூரை இணைக்கவும் ராஜா ஜெய்சிங் எனும் ராஜபுத்திரத் தளபதியின் தலைமையின் கீழ் முகலாயப் படையொன்று அனுப்பி வைக்கப்பட்டது. இறுதியில், சிவாஜி அமைதியை நாடினார். தாம் கைப்பற்றிய கோட்டைகளைக் கொடுத்துவிடவும், முகலாய அரசின் மான்சப்தாராகப் பொறுப்பேற்றுப் பீஜப்பூரைக் கைப்பற்றவும் சம்மதித்தார். ராஜா ஜெய்சிங்கின் வழிகாட்டுதலின்படி ஆக்ராவின் முகலாய அரசவைக்குச் செல்லவும் ஒத்துக் கொண்டார். அவ்வாறு சென்ற போது அவமானப்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, அங்கிருந்து பழக்கூடையில் ஒளிந்து தப்பித்தார்.

தக்காண அரசுகளுக்கு எதிரான தமது படையெடுப்புகளில் மராத்தியர்கள் தலையிடுவதைத் தவிர்ப்பதில் ஒளரங்கசீப் உறுதியாய் இருந்தார். சிவாஜியுடன் உறவைச் சரி செய்து கொள்ள முயற்சிகள் மேற்கொண்டார். அம்முயற்சிகள் தோல்வியுற்றன. 1670இல் சிவாஜி இரண்டாவது முறையாகச் சூரத் நகரைக் கொள்ளையடித்த போது முகலாயப் படைகளால் தடுக்க இயலவில்லை. 1674இல் சிவாஜி சத்ரபதி என்னும் பட்டத்துடன் மணிமுடி சூடிக்கொண்டார். சிவாஜியின் முடி சூட்டுவிழா ரெய்கார் கோட்டையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. தம்மகனின் முடி சூட்டு விழாவைக் காண்பதற்காக உயிருடனிருந்த சிவாஜியின் வயது முதிர்ந்த தாயார் ஜீஜாபாய், தம் வாழ்க்கை நிறைவுற்றதால் முடிசூட்டுவிழா முடிந்த சில நாட்களில் இயற்கை எய்தினார். சிவாஜி தமது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளைத் தம் மகன் சாம்பாஜியிடம் செலவிட்டார். தம்மைப் போலவே ஆட்சி புரிய அவருக்கு உதவினார். இறுதியில் நோய்வாய்ப்பட்டு வயிற்றுப் போக்கினாலும், காய்ச்சலினாலும் பாதிப்புற்ற 1680இல் இயற்கை எய்தினார்.

சிவாஜியின் கீழ் மராத்தியர் நிர்வாகம்:

சிவாஜியின் அரசியல் முறை மூன்று வட்டங்களைக் கொண்டிருந்தது. சிவாஜி அவற்றின் மையமாக விளங்கினார். முதல் வட்டத்தில் மக்களின் மீது அக்கறை கொண்ட அவர் எந்த வகையிலும் மக்கள் துன்புறுத்தப்படுவதை அனுமதிக்கவில்லை. இரண்டாவது வட்டத்தில் அவர் மேலாதிக்கம் செலுத்தினாலும் நேரடி நிர்வாகத்தை மேற்கொள்ளவில்லை. கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களைக் காப்பாற்றினார். அதற்காக அம்மக்கள் சௌத் (மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு (1/4), பாதுகாப்புக் கட்டணமாக) சர்தேஷ்முகி (பத்தில் ஒரு பங்கு (1/10) அரசருக்கான கட்டணமாக) ஆகிய வரிகளைச் செலுத்த வேண்டும். மூன்றாவது வட்டத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக இருந்தது.

கிராமங்கள் தேஷ்முக் என்பவர்களால் நிர்வகிக்கப்பட்டது. இருபது முதல் நூறு எண்ணிக்கை வரையிலான கிராமங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தன. ஒவ்வொரு கிராமத்திலும் அதிகாரம் மிக்க ஒரு கிராமத் தலைவர் (பட்டீல்) இருந்தார். அவருக்கு உதவியாக ஒரு கணக்கரும் குல்கர்னி என்ற பெயரில் ஆவணக் காப்பாளர் ஒருவரும் பணியாற்றினார். மைய அரசு என்ற ஒன்று இல்லாத நேரத்தில் உள்ளுர் சமுதாய அளவிலான இந்த அதிகாரிகளே உண்மையான அரசாகச் செயல்பட்டனர்.

இராணுவம்:

இராணுவம் மீதும், இராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதிலும் சிவாஜி மிகப்பெரும் கவனம் செலுத்தினார். தொடக்கத்தில் காலாட்படையே அவரது இராணுவத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்தது. ஆனால் சிவாஜியின் படையெடுப்புகள் சமவெளிகளை நோக்கி நீட்சி பெற்ற போது குதிரைப் படைகள் எண்ணிக்கையில் பெருகி முக்கியத்துவமும் பெற்றன. ஒவ்வொரு படை வீரனும் சிவாஜியால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்கள் ஏற்கெனவே படையில் பணியாற்றும் ஒரு வீரனின் பிணையில் பணியமர்த்தப்பட்டனர். தம்முடைய கோட்டைகளின் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் சிவாஜி மிக முக்கிய கவனம் செலுத்தினார். பணிநிறைவு பெற்ற மிகவும் போற்றப்பட்ட படைத்தளபதிகளின் பொறுப்பில் கோட்டைகள் விடப்பட்டன.

அஷ்டபிரதான்:

சிவாஜி எட்டு அமைச்சர்களைக் கொண்ட குழுவிற்கு அஷ்டபிரதான் எனப் பெயரிட்டார். ஒவ்வொருவரும் ஒரு முக்கிய துறையைக் கொண்டிருந்தனர். மராத்தியப் பேரரசில் பேஷ்வா என்பவர் நவீனகால பிரதமருக்கு இணையானவர். உண்மையில் இவர்கள் சத்திரபதிகளுக்குத் துணையதிகாரிகளாய் இருந்தவர்களாவர். ஆனால் காலப்போக்கில், குறிப்பாக, ஷாகு மகாராஜவின் காலத்திலிருந்து பேஷ்வாக்கள் உண்மையான மராத்திய அரசர்களாயினர் சத்திரபதிகள் பெயரளவிற்கான அரசர்கள் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

முகலாயரின் நிர்வாகமுறை சிவாஜியின் மீது செல்வாக்குச் செலுத்தியிருந்தது. நிலவரியானது உண்மையான விளைச்சலின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது. ஐந்தில் மூன்று பங்கு (3/5) விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டு ஐந்தில் இரண்டு பங்கு (2/5) அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதித்துறையில் சிவில் வழக்குகள் பஞ்சாயத்து எனப்படும் கிராமக் குழுக்களால் தீர்த்து வைக்கப்பட்டன. குற்றவியல் வழக்குகள் சாஸ்திரங்கள் எனப்பட்ட இந்து சட்ட நூல்களின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டன.

அஷ்டபிரதானின் பொறுப்புகள்:

பந்த்பீரதான்/பேஷ்வா பிரதம அமைச்சர்
அமத்தியா/மஜீம்தார் நிதியமைச்சர்
சுர்நாவிஸ்/சச்சீவ் செயலர்
வாக்கிய-நாவிஸ் உள்துறை அமைச்சர்
சர்-இ-நௌபத்/சேனாபதி தலைமைத் தளபதி
சுமந்த்/துபிர் வெளியுறவுத்துறை அமைச்சர்
நியாயதிஸ் தலைமை நீதிபதி
பண்டிட்ராவ் தலைமை அர்ச்சகர்

சாம்பாஜி:

சாம்பாஜி

சிவாஜியைத் தொடர்ந்து, அனாஜி தத்தோவுடனான சச்சரவிற்குப் பின்னர், சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார். ஆகவே, குடும்பச் சண்டைகள் மராத்திய அரசில் சிராய்ப்புகளை ஏற்படுத்தின. மார்வார் ராத்தோர் குடும்பத்தைச் சேர்ந்த துர்காதாஸ் ஒளரங்கசீப்பிற்கு எதிராகக் கலகம் செய்த அவரது மகன் அக்பர் ஆகியோர் மகாராஷ்ட்டிராவிற்கு வந்தனர். அவர்கள் சாம்பாஜியின் அரசவையில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டனர். இதை மிகப் பெரிதாக எடுத்துக்கொண்ட ஒளரங்கசீப், சாம்பாஜியை ஒழித்துக்கட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். சாம்பாஜியின் தலைமையிலான மராத்தியர்கள் முகலாயரை எதிர்க்கும் நிலையில் இல்லை. 1861இல் ஒளரங்கசீப் தானே தக்காணத்தை வந்தடைந்தார். பீஜப்பூரையும் கோல்கொண்டாவையும் கைப்பற்றி இணைப்பதே ஒளரங்கசீப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது. 1687 அவ்விரு சுல்தானியங்களும் ஒளரங்கசீப்பிடம் வீழ்ந்தன. ஒரு வருடத்திற்கும் சற்றே அதிகமான காலப்பகுதியில் சாம்பாஜி கைப்பற்றப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

ஷாகு மகாராஜா:

சிவாஜிக்குப் பின்னர், அவருடைய பேரன் ஷாகு 1708 முதல் 1749 வரை ஆட்சி புரிந்தார். ஷாகு என்றால் நேர்மையானவர் என்று பொருள். சிவாஜியிடமிருந்து இவரின் குணநலன்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இப்பெயர் ஒளரசங்கசீப்பால் வைக்கப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் முதல் பாதிப் பகுதியில் அரசு அதிகாரம் ஒருங்கிணைக்கப்பட்டது. ஷாகுவிடம் பணி செய்தோர்க்கு அதிகார பூர்வமான உரிமைகள் வழங்கப்பட்டதன் மூலம் இவ்வதிகார ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது.

மகாராஜா

ஷாகு மகாராஜாவின் நாற்பதாண்டுக்கால ஆட்சியின் போது மராத்தியரின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதிகள் அதிகரித்தன. அவற்றிலிருந்து முறையாகக் கப்பம் வசூலிக்கப்பட்டது. மிகவும் மையப்படுத்தப்பட்ட, வலுவான அரசுக் கட்டமைப்பு உருப்பெறத் தொடங்கியது. நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த குடும்பங்கள் உட்பட ஒவ்வொரு குடும்பமும் அரசுப் பணியின் மூலம் ஆதாயம் பெற்றது.

பேஷ்வாக்கள்: பாலாஜி விஸ்வநாத் (1713-1720):

ஒரு சாதாரண வருவாய்த்துறை அலுவலராகத் தமது பணியைத் தொடங்கிய பாலாஜி விஸ்வநாத் 1713இல் பேஷ்வா ஆனார். தனக்கு நெருக்கமானவர்களின் ஆலோசனைகளுக்கு எதிராக ஷாகு, பாலாஜி விஸ்வநாத்தின் மூத்த மகனான இருபது வயதே நிரம்பிய பாஜிராவை அடுத்த பேஷ்வாகப் பணியமர்த்தினார்.

பாஜிராவ் (1720-1740):

முகலாயர்களுக்கு எதிராகவும் ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராகவும் மிகப்பெரும் மராத்திய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள பாஜிராவ் விரும்பினார். இராணுவத் தலைமை தளபதிக்கான அதிகாரங்களையும் தமதாக்கிக் கொண்டார். பாரம்பரியமாகச் செல்வாக்கு பெற்றிருந்த குழுக்களான தேஷ்முக்குகளைச் சார்ந்திருக்க அவர் விரும்பவில்லை. மாறாகப் பேரரசர் ஷாகுவிற்கும், தமது தந்தையார் பாலாஜி விஸ்வநாத்திற்கும், தமக்கு விசுவாசமாக இருந்த கெய்க்வாட், ஹோல்கார், சிந்தியா ஆகிய குடும்பங்களுக்கு அதிகாரங்களை வழங்கினார்.

முக்கிய மராத்தியக் குடும்பங்கள்:

  • கெய்க்வாட்-பரோடா.
  • பான்ஸ்லே-நாக்பூர்.
  • ஹோல்கார்-இந்தூர்.
  • சிந்தி அல்லது சிந்தியா-குவாலியர்.
  • பேஷ்வா-புனே.

மாளவத்திற்கும், குஜராத்திற்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்த பாஜிராவ் அவற்றை முகலாயரின் மேலாதிக்கதிலிருந்து விடுவித்தார். முகலாயர் சார்பாக இதில் தலையிட்ட முகலாயப்படைகளும் ஹைதராபாத் நிஜாமின் படைகளும் தோற்கடிக்கப்பட்டன. தம்மை மகாராஷ்டிரத்தின் அரசன் எனவும் ஏனைய தக்காணப் பகுதிகளுக்குத் தலைவன் எனவும் பேரரசர் ஷாகுவை அங்கீகரிக்க வைப்பதில் பாஜிராவ் வெற்றி பெற்றார். அதன் மூலம் அப்பகுதிகளிலிருந்து சௌத், சர்தேஷ்முகி ஆகிய கப்பத் தொகைகளை மராத்திய அதிகாரிகள் சட்டபூர்வமாக வசூலிக்க முடிந்தது. நிதி நிர்வாகச் செயல்பாடுகளைப் பாஜிராவ் பூனேவில் மையப்படுத்தினார். இதனால் தக்காணப் பகுதிகளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் கப்பங்களை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ள முடிந்தது.

மராத்தியர்களின் படை 5000க்கும் குறைவான குதிரை வீரர்களைக் கொண்டிருந்தது. பீரங்கிப் படைப்பிரிவைக் கொண்டிருக்கவில்லை. இவ்வெண்ணிக்கை 1720இல் இருமடங்கானது. இருந்தபோதிலும் இப்படைகள் முகலாய, நிஜாம் படைகளுக்கு நிகரானதல்ல. முகலாயருக்கு எதிரான மராத்தியரின் வெற்றிக்கு முகலாயப் படைகளின் திறமையின்மையே காரணமாகும். தக்காணத்தின் மீதான மராத்தியரின் மேலாதிக்கத்திற்கு ஷாகு, பேஷ்வாக்கள் ஆகியோரின் கீழ்வளர்ந்த மராத்திய அதிகாரிகள், படைத்தளபதிகள் ஆகியோரின் குண இயல்புகளும் காரணமெனக் கூறலாம்.

பாலாஜி பாஜிராவ் (1740-1761):

பாலாஜி பாஜிராவ் பேஷ்வா பொறுப்பில் இருந்தபோது, பேரரசு ஷாகு 1749இல் இயற்கை எய்தினார். அரச குடும்பத்தில் ஏற்பட இருந்து வாரிசுரிமைப் போட்டி சரியான நேரத்தில் பாலாஜி பாஜிராவின் தலையீட்டால் தவிர்க்கப்பட்டது. பதவிக்குப் போட்டியிட்ட அனைத்துப் பிரிவினரையும் அழைத்துப் பேசி, தமது நிபந்தனைகளை ஒத்துக்கொள்ளச் செய்தார். இனிமேற்கொண்டு, பூனே நகரமே தலைநகர் என்றும் சத்தாரா அன்று என்றும் முடிவு செய்தார். அனைத்து அதிகாரங்களும் பேஷ்வாவின் கரங்களில் குவிக்கப்பட்டன. மராத்திய விவசாயப் போர் வீரர்களின் காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஊதியம் வழங்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படைக்குத் தற்போது பாலாஜி பாஜிராவ் தலைமையேற்றார். மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், போர்க்களத்திற்கு எளிதில் சென்று வருவதற்கு தங்கள் வசிப்பிடத்திற்குச் சென்று வர கோட்டைகளிலோ நகரங்களிலோ வாழ வழிவகை செய்தார். காலாட்படை, குதிரைப்படை வீரர்களுக்கான பயிற்சி அவர்களுக்கு வழங்கப்பட்டது. பெரிய பீரங்கிகள் மராத்திய அதிகரிகளின் கீழிருந்தன. ஆனாலும், அவற்றை இயக்குவது பராமரிப்பது ஆகிய பணிகளில் பெரும்பாலும் போர்த்துகீசியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோர் அமர்த்தப்பட்டிருந்தனர்.

பேஷ்வா பாலாஜி பாஜிராவின் காலத்தில் மராத்திய அரசின் வட எல்லை மிக விரைவாக ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் ஆகியவற்றின் எல்லைகளை நெருங்கியது. ஒரு கட்டத்தில் மராத்தியரின் கப்பம் வசூலிக்கும் ஆட்சிப்பரப்பு டெல்லிக்கு ஐம்பது மைல்களுக்கு அருகேவரை விரிவடைந்தது. நாக்பூரிலிருந்து மராத்தியப் படைகள் பீகார், வங்காளம், ஒடிசா ஆகிய பகுதிகளில் கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்ட படையெடுப்புகளை நடத்தின. கர்நாடகப் பகுதிகள் குறித்து மராத்தியர்களுக்கும் ஹைதராபாத் நிஜாமுக்குமிடையே முரண்பாடுகளும் மோதல்களும் நிலவிய போதும், கன்னட, தமிழ், தெலுங்குப் பகுதிகள் மராத்தியரின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. 1745க்கும் 1751க்கும் இடைப்பட்ட காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் மராத்தியத் தளபதி ரகுஜி பான்ஸ்லேயின் தலைமையில் கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்ட படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

பேஷ்வாக்களின் கீழ் மராத்தியர் நிர்வாகம்:

பேஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் காமவிஸ்தார் என்னும் முக்கிய அதிகாரிகளைக் கொண்டிருந்தது. அவர் பேஷ்வாவால் பணியமர்த்தப்பட்டார். கப்பமோ வரியோ வசூலிக்கப்பட வேண்டிய பகுதியில் பாதுகாப்பிற்காக சில வீரர்கள் அடங்கிய படைப்பிரிவை வைத்துக்கொள்ள இவர் அதிகாரம் பெற்றிருந்தார். வருவாய்த்துறை ஆவணங்களைப் பராமரிப்பதற்காக சில எழுத்தர்களும் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இந்த ஆவணங்களைப் பேஷ்வா அலுவலகம் அங்கொன்று இங்கொன்றாகச் சரி பார்த்தது. வருவாய் வசூலுக்கான ஒப்பந்தங்கள் வருடமொருமுறை ஏலம் விடப்பட்டன. குறிப்பிட்ட ஒரு பகுதியிலிருந்து கடந்த ஆண்டு பெறப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் இந்த ஆண்டும் வசூல் செய்யப்பட வேண்டிய தொகை பேஷ்வாவின் அதிகாரிகளால் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த ஏலம் நடத்தப்பட்டது. ஏலத்தில் வெற்றி பெற்று எதிர் கால வாய்ப்பினைப் பயன்படுத்த நினைக்கும் வரி அல்லது வருவாய் வசூலிப்பாளர் சொத்துக்கள் உடையவராகவும் நேர்மையானவராகவும் இருத்தல் வேண்டும். எதிர்பார்க்கப்படும் மொத்த வசூல் தொகையில் மூன்றில் ஒரு பகுதி முதல் சரிபாதிவரை அவர் முதலில் செலுத்திட வேண்டும். தமது சொந்தப் பணத்திலிருந்து அவர் அதைச் செலுத்தலாம் அல்லது வட்டிக்குக் கடன் தருவோரிடமிருந்து பெற்றுக் கட்ட வேண்டும். செய்திப் பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும் கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்துள்ளனர் என்பது தெரிகிறது. முகலாயர்களோடு ஒப்பிடுகையில் பேஷ்வாக்களின் ஆட்சி நவீனமாக இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. முகலாயரின் வீழ்ச்சிக்கு ராணுவ ரீதியாகப் பங்களிப்புச் செய்தவர்கள் பேஷ்வாக்களாவர்.

மராத்தியர்களின் வீழ்ச்சி:

மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761இல் டெல்லிக்கு அருகேயுள்ள பானிப்பட்டில் முடிந்தது. பஞ்சாபைக் கடந்து தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவைடயச் செய்ய மராத்தியர்கள் மேற்கொண்ட முயற்சி ஆப்கானியர்களின் அரசர் அகமது ஷா அப்தாலியால் தடுக்கப்பெற்றது. அப்தாலி இறுதியாக டெல்லியின் மீது படையெடுத்து வருவதற்கு முன்னர், எட்டு முறை படையெடுத்துள்ளார். தளபதிகள் பலரின் கீழ் பிரிந்திருந்த மராத்தியப் படையினர் பலவகையான தந்திரங்களுடன் போரை அணுகினர். 1761இல் நடைபெற்ற மூன்றாம் பானிப்பட்போரைப் பீரங்கிப் படைகள் தீர்மானித்தன. ஆப்கானியர்களின் இடம்விட்டு இடம் நகர்ந்து செல்லக் கூடிய பீரங்கிப் படைகள் மராத்திய காலாட்படையினரையும் குதிரைப்படையினரையும் கொன்று குவித்தன. தகர்த்தெறியப்பட்டன. தப்பிப்பிழைத்த மராத்திய வீரர்கள் பானிப்பட்டிலிருந்து மகாராஷ்டிரா திரும்பி நடந்ததைக் கூற ஆறுமாத காலமானது. இந்நேரத்தில் துணைக் கண்டத்தின் மீதான மராத்தியர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

பாடச்சுருக்கம்:

  • மராத்தியர்களின் எழுச்சிக்கும், ஆட்சி விரிவாக்கத்திற்குமான காரணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
  • சிவாஜியின் தொடக்கக்கால வாழ்க்கையும் அவர் மீது ஏற்படுத்தப்பட்ட தாக்கங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
  • சிவாஜியின் படையெடுப்புகளும், பீஜப்பூர் சுல்தானை அவர் வெற்றி கொண்டதால் ஒளரங்கசீப் தலையிட்டதும் விவாதிக்கப்ட்டுள்ளன.
  • சிவாஜிக்கு ஒளரங்கசீப்போடு ஏற்பட்ட சச்சரவுகளும் அவற்றால் தக்காணத்தில் பின்னர், நடைபெற்ற மோதல்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
  • சிவாஜியின் காலத்து மராத்திய நிர்வாக முறை அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.
  • பேஷ்வாக்கள் உண்மையான ஆட்சியாளர்களாக மாறியதும் மராத்தியர்களின் அதிகாரம் தொடர்வதற்கு அவர்களின் பங்களிப்பும் விளக்கப்பட்டுள்ளன.
  • பேஷ்வாக்களின் கீழ் நிர்வாகம் நவீனமாக்கப்பட்டதும் மூன்றாம் பானிப்பட் போருக்குப் பின்னர் மராத்தியரின் மேலாதிக்கம் முடிவுக்கு வந்ததும் விவரிக்கப்பட்டுள்ளன.

சொற்களஞ்சியம்:

துதிபாடல்கள் /பாசுரங்கள் Hymns Poems in praise of God
துணிச்சலான Audaciously Boldly
கோட்டை /அரண் Fortresses A Strongly fortified town
மேலாதிக்கம் Suzerainty The Right of a country to rule over another country
வழங்கப்பட்ட Conferment Granting of (A title)
வரவழைக்கப்பட்ட Summoned Ordering the presence of
மனமுடைந்த Shattered (heart) Broken, Broken (glass, Upset

தெரியுமா உங்களுக்கு?

சத்ர (குடை) பதி (தலைவன் அல்லது பிரபு) எனும் சமஸ்கிருதச் சொல் அரசன் அல்லது பேரரசன் என்பதற்கு இணையானது. இச்சொல்லை மராத்தியர்கள் குறிப்பாக சிவாஜி பயன்படுத்தினார்.

சாம்பாஜி, தம்முடைய குடும்ப அர்ச்சகரான கவிகலாஷ் என்பவரின் ஒழுக்கக்கேடான செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தார். சிவாஜி ஆக்ராவிலிருந்து தப்பியபோது வாரணாசியில் கவிகலாஷ், சாம்பாஜியின் பாதுகாவலராய் இருந்தார். பின்னர், சாம்பாஜியைப் பத்திரமாக ரெய்கார்க்கு அழைத்து வந்தார். அனைத்து விடயங்களுக்கும் சாம்பாஜி அவரின் வழிகாட்டுதலை எதிர்பார்த்ததால் அரச சபையில் அவரின் முழுமையான மேலாதிக்கம் நிலவியது. கவிகலாஷ் புகழ்பெற்ற அறிஞரும் கவிஞருமாவார் ஆனால், அவர் மாந்திரீகம் செய்பவராகவுமிருந்தார். இதனால் அரசவையில் இருந்த வைதீக இந்துக்கள் அவர்மீது ஆழமான வெறுப்பைக் கொண்டிருந்தனர். முகலாயப் படைகள் சாம்பாஜியைக் கைது செய்த போது கவிகலேஷீம் உடனிருந்தார். ஆகவே, இருவரும் ஒளரங்கசீப்பின் கட்டளையின் படி அனைத்து வகைப்பட்ட சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!