புத்தக வாசிப்பு – மன அழுத்தம் இல்லாமல் அதிகமாக புரிந்து படிப்பது எப்படி?
இந்த புத்தம் புதிய ஆண்டில் அனைவரும் தங்கள் கனவு வேலையைப் பெற அனைவருக்கும், விண்மீனின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். தினம் ஒரு சிறிய வாசிப்பு உங்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை விதைக்கும்.
ஒரு புத்தகத்தை தொட்டால் நாமே நினைத்தாலும் வைக்காமல் மனம் அதை நோக்கி இழுத்துச் செல்லவேண்டும். மைசூர் போர் என்று சமச்சீர் புத்தகத்தில் படித்தால், எந்தப் போர் எந்த ஆண்டு என்றே மறந்து விடுகிறது. அதுவே திரு மருதன் எழுதிய திப்பு சுல்தான் புத்தகத்தை கிண்டிலில் 10, 15 நாட்களில் சிறுது சிறிதாக வாசித்தேன். ஒரு புத்தகம் 15 நாள் – மொத்த திப்பு சுல்தான் வரலாற்றையும் நம் கண்முன்னே கொண்டுவந்துவிட்டது – நிகழ்வுகளோடு படித்ததால் மறக்கவும் இல்லை.
செங்கிஸ்கான் இந்திய வரலாற்றில் எதோ கொடுங்கோலர் போலவே சொல்லியிருப்பார்கள். உண்மையில் அவர் அப்படிப்பட்டவர் இல்லை, சூழ்நிலையால் அவ்வாறு மாற்றப்பட்டு வெகுண்டெழுந்தார். இவரைப் பற்றி 2 பத்திகளுக்கு மேல் சமச்சீர் புத்தகங்களில் இருக்காது. திரு முகில் எழுதிய, செங்கிஸ்கான் புத்தகத்தினைப் படித்தால், நமக்கு தெரியாத புற்கள் நிறைந்த சமவெளிகளில் வாழும் மங்கோலிய குழுக்களைப் பற்றி அறியலாம். இதுவும் கிண்டிலில் உள்ளது. புத்தகமாக வாங்கியும் படிக்கலாம்.
புத்தகம் என்பது உங்கள் இதயத்தை தொடவேண்டும், அதை ஆராய்ந்து எழுதிய பல புத்தகங்களை நாம் தேட வேண்டும். பொருளாதாரம் பற்றி கதை வடிவில் வாழ்க்கை நிகழ்வுகளுடன் கூடிய விளக்கங்களுடன் சோ வள்ளியப்பன் பல புத்தகங்கள் எழுதியிருப்பார். அவர் போட்டித்தேர்வுக்காக எழுதவில்லை. மாறாக நாம் நமக்கு தேவையானவற்றை போட்டித்தேர்வு நோக்கில் எடுத்துக்கொள்ளலாம். இன்னும் பலபேர் ஆராய்ந்து எழுதியிருப்பார்கள் – நமக்கு தெரிவதில்லை.
போட்டித்தேர்வுக்கு படிக்கவேண்டும் என்றவுடனே நமக்கு ஒருவித மன அழுத்தம் மிகவும் சீரியசாக படிக்கவேண்டும் என்று உருவாகிறது. மேல் சொன்ன புத்தகங்களை நான் மனப்பாடம் செய்ய வாசிக்கவில்லை. அது ஒருபக்க வாசிப்புக்குப் பின் தானாக நம்மை இழுத்துச்சென்றது. அவ்வாறான பல புத்தகங்கள் உள்ளது – இந்த போட்டி உலகில் நாம் இன்னும் நேரம் செலவிட்டு, நம்மை வருத்தி எங்கேனும் தேடி அறிவைப் பெறாவிட்டால் போட்டித்தேர்வில் வெல்வது கடினம் தான்.
எப்போதுமே உடலுக்கு வேலை கொடுக்க கொடுக்க, அது பலமாகும். அது போலவே மனதுக்கு, மூளைக்கு பயிற்சி புத்தக வாசிப்பு மட்டுமே. என்னைப் பொறுத்தவரை அதிகாலை நேரங்களில் மற்றும் மாலை நேரங்களில் நம்மால் ஈடுபாட்டோடு முழுமனதோடு படிக்க முடிகிறது. சில புத்தகங்களில் வரிகளை படிக்கும்போது புல்லரிக்கவும் செய்கிறது. அவ்வாறு நாம் உணரும்போது மனதளவில் மிகவும் வலிமையாகவும் நேர்மறை சிந்தனைகளையும் பெறுகிறோம்.
இத்தகைய புத்தகங்களை படித்து உணர்ந்து குறிப்பு எழுதி, கதைவடிவில் உங்களுக்கு கொண்டு சேர்க்க இந்த ஆண்டில் நாமும் முயல்வோம் – நீங்களும் கண்டிப்பாக முயலுங்கள் – நீங்கள் படித்த அத்தகைய புத்தகங்களைப் பற்றி நம்மிடம் தெரியப்படுத்துங்கள்.