பயணங்கள் என பொருள்படும் - ரிக்ளா என்பது யாருடைய பயணநூல் ஆகும்? அரேபியாவில் பிறந்த மொராக்கோ நாட்டு அறிஞரான இபன் பதூதா கிபி 14ஆம் நூற்றாண்டில் மொராக்கோவிலிருந்து புறப்பட்டு, எகிப்தைக் கடந்து மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்தடைந்தார். அவருடைய பயணநூல் - ரிக்ளா - அவர் பயணம் செய்த நாடுகளையும் மக்களையும் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது. அவருடைய கருத்தின்படி எகிப்தே செல்வம் கொழித்த நாடாகும். ஏனெனில் மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் வணிகம் முழுவதும் எகிப்தின் வழியாகவே நடைபெற்றது. இந்தியாவின் சாதி குறித்தும், சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் பற்றியும் இபன் பதூதா தன்னுடைய பயண நூலில் கூறியுள்ளார். வெளிநாட்டுத் துறைமுகங்களில் இந்திய வணிகர்களின் விறுவிறுப்பான வணிக நடவடிக்கைகள் குறித்தும் கடலில் காணப்பட்ட இந்தியக் கப்பல்கள் பற்றியும் நாம் அவரிடமிருந்து தெரிந்து கொள்கிறோம். டெல்லி ஒரு பரந்து விரிந்த, நேர்த்தியான நகரமென்று அவர் விவரிக்கின்றார். இந்நாட்களில்தான் சுல்தான் முகமது பின் துக்ளக் தலைநகரை டெல்லியிலிருந்து தெற்கேயிருந்த தேவகிரி தற்போதைய தௌலதாபாத்துக்கு மாற்றி டெல்லியைப் பொட்டல் காடாக்கினார் என சொல்லப்படுகிறது.