நவீனத்தை நோக்கி Notes 11th History
11th History Lesson 14 Notes in Tamil
14. நவீனத்தை நோக்கி
அறிமுகம்
இந்தியா பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் காலப்பகுதியில் ஆங்கில நிர்வாகத்துடனும் ஆங்கில வர்த்தகத்துடனும் நெருக்கமான தொடர்புடைய ஆங்கிலக் கல்வி பயின்ற சிறிய அறிவுஜீவிகளின் கூட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தது. கிறித்தவ சமயப் பரப்பாளர்களின் பணிகளும் சிந்தனைகளும் ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தன. ஆங்கிலேயச் செல்வாக்கின் தாக்கத்திற்கு ஆட்பட்ட முதல் மாகாணம் வங்காளமாகும். அதனால் பல சீர்திருத்தக் கருத்துக்கள் அங்கிருந்தே உருவாயின. ஆங்கில நிர்வாகம், ஆங்கிலக் கல்வி, ஐரோப்பிய இலக்கியங்கள் ஆகியவை புதிய சிந்தனை அலைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தன. அவை மரபு சார்ந்த அறிவுக்குச் சவால் விடுத்தன. பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட நன்னெறிச் சிந்தனைகள் மனித இனத்தின் பரிணாமம், வளர்ச்சி குறித்த சிந்தனைகள், அறிவொளியோடு தொடர்புடைய இயற்கை உரிமைகள் கோட்பாடு ஆகிய சிந்தனைகள் இந்திய மறுமலர்ச்சிக்கு வித்திட்டன. அச்சுத் தொழில்நுட்பம், சிந்தனைகள் பரவுவதில் முக்கியப் பங்கை வகித்தது.
சீர்திருத்த இயக்கங்களின் எழுச்சி
- பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியச் சமூகம் மூடநம்பிக்கை, சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு எனும் நச்சுச் சூழலில் சிக்கியுள்ளது என ஆங்கிலேயர் விளக்கினர்/. அவர்களின் கண்ணோட்டத்தில் உருவ வழிபாடும், பல கடவுள் வழிபாடும் வைதீகத்திற்கு வலுவேற்றி, அதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற மக்களைத் தூண்டியவை ஆகும். அதற்கு இணையாகச் சமூகச் சூழலும் உயிரோட்டமில்லாமல் தாழ்ந்த நிலையில் இருந்தது.
- மேலும் பெண்களில் நிலையும் இரங்கத்தக்க நிலையில் இருந்தது. உடன்கட்டை (சதி) ஏறும் பழக்கம் மிகவும் கண்டனத்திற்கு உள்ளானது. பிறப்பின் அடிப்படையிலான சமூகப் பிரிவுகளும் அதன் விளைவான சாதி மூறையும் விமர்சனம் செய்யப்பட்டது. மிக முக்கியமாக ஆங்கிலேயர், தங்களின் தலையீடு இல்லாமல் இத்தகைய தீமைகளிலிருந்து இந்தியர் விடுபட வாய்ப்பில்லை என வாதிட்டனர். இது ஆங்கில ஆட்சியை நியாயப்படுத்துவதற்காகக் கிறித்துவ மதப் பரப்பாளர்களும் பயனெறி முறை பண்பாட்டாளர்களும் முன்வைத்த கருத்தென்பதைச் சொல்லத் தேவையில்லை.
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா மிகப்பெரிய, மிகவும் சிக்கலான பல்வகைப்பட்ட தன்மைகளைக் கொண்ட நாடாக இருந்தது. இடத்திற்கு இடம் நிலைமை மிகவும் மாறுபட்டிருந்தன.
- காலந்தோறும் சமூகப் பண்பாட்டுத் தீமைகளுக்கு எதிராக இந்தியச் சீர்திருத்தவாதிகள் போராடியிருந்தனர். ஆனால் ஆங்கிலேயரின் அறிவொளிச் சிந்தனைகளுடன் கூடிய வரவு சந்தேகத்திற்கிடமின்றிப் புதிய சவாலை முன்வைத்தது இப்பாடப்பகுதி எவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீர்திருத்த இயக்கங்கள் உதயமாயின என்பதை விவரிக்கின்றது.
- மேற்கத்தியப் பண்பாடு, சிந்தனைகள் ஆகியவற்றின் வளர்ச்சி பத்தொன்பதாம் நூற்றாண்டில் மரபுசார்ந்த நிறுவனங்கள் தங்களை உயிர்த்துடிப்புள்ளனவாக மாற்றிக் கொள்ளக் கட்டாயப்படுத்தின. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் எதிர்ப்புகளின் வெளிப்பாடுகளும், மாற்றத்திற்கான வேட்கையும் பல்வகைப்பட்ட சீர்திருத்த இயக்கங்களின் மூலம் வெளிப்பட்டன.
- இவ்வியக்கங்கள் இந்திய மக்களின் மதக் கண்ணோட்டத்தையும் சமூக நிறுவனங்களையும் சீர்திருத்துவதையும் ஜனநாயகப்படுத்துவதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தன. புதிய பொருளாதார சக்திகளின் தோற்றம், கல்வியின் பரவல், தேசிய மனப்பான்மையின் வளர்ச்சி, நவீன மேற்கத்திய சிந்தனைகள் –தத்துவங்கள் – பண்பாட்டின் செல்வாக்கு, ஐரோப்பாவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு போன்றவை சீர்திருத்தங்களின் அவசியத்திற்கு வலுசேர்த்தன.
- இச்சீர்திருத்த இயக்கங்களுக்குக் கருத்தொற்றுமை வழங்கியது பகுத்தறிவு, மனிதநேயம், உலகளாவிய மத உணர்வு ஆகியனவாகும். இக்கண்ணோட்டம் மரபு சார்ந்தவற்றைப் பகுத்தறிவோடு அணுகவும் சமகால சமூக-சமய நடைமுறைகளைச் சமூகப் பயன்பாடு எனும் பரிமாணத்தில் பார்க்கவும் உதவுன.
- எடுத்துக்காட்டாக பிரம்ம சமாஜத்தில் ராஜா ராம்மோகன் ராய் வேதங்களில் தவறே இருக்க முடியாது எனும் கருத்தைப் புறக்கணித்தார். அலிகர் இயக்கத்தின்போது சையது அகமதுகான் மதம் சார்ந்த சிந்தனைகள் மாற்றப்பட முடியாதவை என்பதை மறுத்தார். “எங்களுடைய நிலை அனைத்து மதங்களிலும் உண்மைகள் இருந்தாக வேண்டும் என்பதல்ல, ஆனால் உலகத்தில் நிறுவப்பட்ட அனைத்து மதங்களும் உண்மையானவையே” எனக் கேசவ் சந்திர சென் கூறினார்.
- இந்தியச் சமூகத்தின் ஒட்டுமொத்தப் பண்பாட்டு நீரோட்டத்தை உள்வாங்கிக் கொண்ட இவ்வியக்கங்கள் மொழி, மதம், கலை, தத்துவம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தின. விரிந்த கண்ணோட்டத்தில் இச்சீர்திருத்த இயக்கங்களை இரண்டாக வகைப்படுத்தலாம்.
- சீர்திருத்த இயக்கங்கள்
- மீட்பியக்கங்கள்.
- இவ்விருவகைப்பட்ட இயக்கங்களும் தாங்கள் மீட்டெடுக்கவுள்ள மதம் இழந்துவிட்ட தூய்மையைப்பற்றி மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டிருந்தன. ஒரு சீர்திருத்த இயக்கத்திற்கும் மற்றொன்றுக்குமான வேறுபாடு, இவை ஒவ்வொன்றும் எந்த அளவிற்கு மரபுகளைச் சார்ந்திருந்தன என்பதைப் பொறுத்தே அமைந்தது.
- அடிப்படையில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் மதச்சீர்திருத்தங்களோடு ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகவே இருந்தது. ஏனெனில் சமூகத் தீமைகளான சாதியும், ஆண் பெண் சமத்துவமின்மையும் தங்களின் இருப்பிற்கான நியாயத்தை மதங்களிடமிருந்தே பெற்றன.
- தொடக்கத்தில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஒரு குறுகலான சமூக அடித்தளத்தைக் கொண்டிருந்தன. சமூகத்தின் மேல்தட்டு மற்றும் இடைத்தட்டை சேர்ந்த இவ்வியக்கங்கள் தங்களின் நவீன சிந்தனைகள் நிலவிவரும் சமூக எதார்த்தங்களோடு இணைந்து செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டன.
- அதன் பின்னர் சமூக சீர்திருத்த இயக்கங்கள் சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை மறுகட்டமைப்பு செய்வதென்பது சமூகத்தின் கீழ் அடுக்குகளுக்குள்ளும் கசியத் துவங்கின. பொது விவாதங்கள், ஆய்வுக் கட்டுரைகள், பத்திரைக்கள் ஆகிய வடிவங்களில் அறிவுஜீவிகளிடஒயே நடைபெற்ற அனல் பறக்கும் விவாதங்கள், புதிய சிந்தனைகளை மக்களிடையே கொண்டு செல்வதிலும் பழைய சிந்தனைகளைப் புதிய வடிவத்தில் மீட்டுருவாக்கம் செய்வதிலும் பெரும்பங்கு வகித்தன.
- தொடக்கத்தில் சமூகப்பேரவை, இந்தியப் பணியாளர்கள் போண்ற அமஒப்புகளும், கிறித்தவ சமயப் பரப்பு நிறுவனங்களுமே சமூகச் சீர்திருத்த இயக்கங்களை துரிதப்படுத்தக் காரணங்களாய் இருந்தன. அதற்குத் தெளிவான அறிவுத்திறன் கொண்ட பல தனி நபர்களும் துணை நின்றனர். அவர்களைப் பற்றி வர இருக்கிற பக்கங்களில் நாம் பார்க்கவுள்ளோம். பின் வந்த வருடங்களில், குறிப்பாக இருபதாம் நூற்றாண்டில் இந்திய தேசிய இயக்கம் சமூக சீர்திருத்தத்திற்கான தலைமையும் அமைப்பையும் வழங்கியது.
- பயனெறிமுறை (Utilitarianism) : மிக அதிக எண்ணிக்கையிலானவர்களின் அதிகப்பட்ட மகிழ்ச்சியைக் கோரிய நவீனச் சிந்தனையாளர்கள்.
பிரம்ம சமாஜம் (1828)
- ராஜா ராம்மோகன் ராய் பல்துறை புலமை பெற்றவராவார். அவர்1828இல் பிரம்ம சமாஜத்தை நிறுவினார். “எங்கும் நிறைந்துள்ள, கண்டறிய முடியாத, மாற்றமுடியாத, இவ்வுலகத்தை உருவாக்கி பாதுகாக்கும் சக்தியை வணங்கி வழிபடுவதில் பிரம்ம சமாஜம் உறுதியாயிருந்தது.
- இந்து மதத்தைத் தூய்மைப்படுத்தல், ஒரு கடவுள் வழிபாட்டைப் போதித்தல், மனித கண்ணியத்திற்கு முக்கியத்துவம் தருதல், உருவ வழிபாட்டை எதிர்த்தல், சமூகத் தீமையான உடன்கட்டை ஏறுதலை ஒழித்தல் ஆகியன அவருடைய நீண்டகாலத் திட்டங்களாகும்.
- ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் பாரசீகம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் உரையாடக் கூடியவர். அவருடைய சிந்தனைகளும் செயல்பாடுகளும் சமூக சீர்திருத்தங்களின் வழியாக மக்களை அரசியல் ரீதியாக உயர்வடையச் செய்வதை இலக்காகக் கொண்டிருந்தன.
- அவர் மனித நேயமற்ற சமூகப்பழக்கமான உடன்கட்டை ஏறுதலுக்கு எதிரான மனவுறுதிமிக்க போராளியாவார். 1818 இல் அவர் எழுதிய “கைம்பெண்களை உயிரோடு எரிக்கும் பழக்கத்தை ஆதரிப்போருக்கும் எதிர்ப்போருக்குமிடையே நடைபெற்ற விவாதம்” எனத் தலைப்பிடப்பட்ட கட்டுரையில் எந்த மதமும் கைம்பெண்களை உயிரோடு எரிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை புனித நூல்களைச் சுட்டிக்காட்டி நிரூபித்தார்.
- கம்பெனி 1829இல் ஒரு சட்டத்தை இயற்றி அதன்மூலம் உடன்கட்டை ஏறுதல் குற்றம் என அறிவித்ததன் மூலம் அவருடைய முயற்சிகள் வென்றன.
பிரம்ம சமாஜத்தின் ஒட்டுமொத்தப் பங்களிப்பைக் கீழ்க்கண்டவாறு சுருக்கிக் கூறலாம்.
- பலதெய்வ வழிபாடு , உருவ வழிபாடு , தெய்வ அவதாரங்கள் மீதான நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படையாகக் கண்டனம் செய்தது.
- சாதிமுறை, மூடநம்பிக்கைகள் ஆகியவற்றைக் கண்டனம் செய்தது.
- குழந்தைத் திருமணம், பர்தா முறை, உடன்கட்டை ஏறுதல் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும் எனக் கோரியது.
- கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தது.
- பிரெஞ்சுப் புரட்சியின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு ஐரோப்பா சென்ற ராஜா ராம்மோகன் ராய் பிரிஸ்டல் நகரில் மரணத்தைத் தழுவினார். தக்க சமயத்தில் தேவேந்திரநாத் தாகூர் (ரவீந்திரநாத் தாகூரின் தந்தையார்) புத்துயிர் ஊட்டாமல் இருந்திருந்தால் இவ்வியக்கம் விரைவாக வீழ்ந்திருக்கும்.
- அவருக்குப்பின் 1857 முதல் கேசவ் சந்திர சென் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார். இவ்வமைப்பின் வலுவை 1865இல் அது பெற்றிருந்த 54 கிளைகளின் எண்ணிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். (வங்காளத்தில் 50 கிளைகள், வடமேற்கு மாகாணத்தில் 2, பாஞ்சாப்பில் 1, தமிழ்நாட்டில் – 1 என மொத்தம் 54 கிளைகள்) காலப்போக்கில் பிரம்ம சமாஜம் இரண்டாகப் பிரிந்தது. அவை தேவேந்திரநாத் தாகூரின் தலைமையில் இயங்கிய ‘இந்திய பிரம்ம சமாஜம்’, கேசம் சந்திர சென்னுடைய ‘சதாரன் பிரம்ம சமாஜ்’ என்பனவாகும்.
- தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாஅரான சைதை காடி விஸ்வநாத முதலியார் சமாஜத்தின் கருத்துகளை விளக்க ‘பிரம்ம சமாஜ நாடகம்’ எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதினார். கைம்பெண் மறுமணத்திற்க்கு ஆதரவாக ஒரு ஆய்வுக் கட்டுரையும் எழுதினார். 1864இல் அதே நோக்கத்திற்காகத் ‘தத்துவபோதினி’ எனும் தமிழ் இதழ் தொடங்கப்பட்டது.
- பிரம்ம சமாஜம் வங்காள சமூகத்தின் வைதீகப் பிரிவினரிடமிருந்தும், இந்து தர்மசபை போன்ற அமைப்புகளிடமிருந்தும் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. இருந்தபோதிலும் ஈஸ்வரசந்திர வித்யாசாகர் போன்ற சீர்திருத்தவாதிகளும் இருந்தனர்; ஆனால் அவர் இந்து நூல்களைத் தமக்கு ஆதாரமாக கொண்டார்.
- பிரம்ம சமாஜம் பெருமளவிலான மக்களை ஈர்க்கவில்லை எனினும் , அது அறிவு ஜீவிகளின் மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் முற்போக்குக் கருத்துகளால் கவரப்பட்ட பல இளைஞர்கள் ஆர்வத்தோடு அவற்றைப் பரப்பினர்.
- தாகூரின் குடும்பம் ஒரு பிரம்ம சமாஜக் குடும்பம், அதன் செல்வாக்கை தாகூருடைய கருத்துக்களிலும் எழுத்துக்களிலும் காணலாம்.
பிரார்த்தனை சமாஜம் (1867)
- பிரம்ம சமாஜத்தின் கிளை அமைப்பான பிரார்த்தனை சமாஜம் 1867இல் பம்பாயில் ஆத்மராம் பாண்டுரங் என்பவரால் நிறுவப்பட்டது. எம்.ஜி.ரானடே, ஆர்.ஜி.பண்டார்க்கர் ஆகியோர் இவ்வமைப்பில் சேர்ந்து அமைப்புக்கு வலிமை சேர்த்தனர்.
- பிரார்த்தனை சமாஜம் ஓர் அமைப்பு என்ற அளவில் பெரும் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. ஆனால் அவ்வமைப்பின் உறுப்பினர்களான ரானடே, பண்டார்க்கர், கே.டி. தெலங் நூற்றாண்டைச் சேர்ந்த மாபெரும் தலைவர்களாவர். பின்வந்த ஆண்டுகளில் அவர்கள் சமூக சீர்திருத்த இயக்கங்களை நிறுவினர்.
- பிரார்த்தனை சமாஜம் பிரம்ம சமாஜத்தைப் போன்றதே என்றாலும் அது மகாராஷ்டிராவைச் சேர்ந்த துறவிகளின் பக்தி மரபுகளோடு உளப்பூர்வமான தொடர்பைக் கொண்டிருந்தது.
- பிரார்த்தனை சமாஜம், சமூகத்தின் கடைநிலையிலுள்ள பெண்கள், தொழிலாளர் ஆகியோருக்குக் கல்வி வழங்குவதன் மூலம் தனது பணியைத் தொடர்ந்தது. சமபந்தி விருந்து. சாதி மறுப்புத் திருமணம், விதவை மறுமணம், பெண்லள் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் மேம்பாடு ஆகிய சமூக சீர்திருத்தப் பணிகளில் ஆழ்ந்த கவனம் செலுத்தியது.
- ரானடேயின் (1852 – 1901) முயற்சியால் உருவாக்கப்பட்ட தேசிய சமூக மாநாடு என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாடு நடைபெற்று முடிந்தவுடன் கூடும்.
- ஆழமான அறிவும் கூர்மைத்திறனும் கொண்ட நீதியரசர் ரானடேயின் வழிகாட்டுதலில் பிரார்த்தனை சமாஜம் மேற்கிந்தியப் பகுதியில் சமூக சீர்திருத்தத்தின் செயலூக்கமிக்க மையமானது.
- விதவை மறுமணச் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கியவர்களில் அவரும் ஒருவர். மேலும் தக்காணக் கல்விக் கழகம் என்னும் புகழ்பெற்ற அமைப்பைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றார்.
- நாட்டுக்குத் தன்னலமற்றச் சேவை செய்வதற்கு எத்தகைய கல்வி அவசியமோ அக்கல்வியை இளைஞர்களுக்கு வழங்குவதை இவ்வமைப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது. ரானடே 1901இல் இயற்கை எய்திய போது சந்தரவர்க்கர் தலைமைப் பொறுப்பேற்றார்.
ஆரிய சமாஜம் (1875)
- ஆரிய சமாஜத்தை உருவாக்கியவர் தயானந்த சரஸ்வதி (1824 – 1883) ஆவார். குஜராத்தை சேர்ந்த அவர் துறவியாகும் எண்ணத்தால் இளமையிலேயே வீட்டைவிட்டு வெளியேறினார்.
- பதினேழு ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றியலைந்தார். 1863இல் பல ஊர்களுக்குச் சென்று தனது கருத்துக்களைப் போதித்தார். ஐந்தாண்டுகளைக்குப் பின்னர் சில கல்வி நிலையங்களையும் நிறுவினார்.
- 1872இல் கல்கத்தாவில் பிரம்மசமாஜ உறுப்பினர்களைச் சந்தித்தார். 1875இல் ‘சத்யார்த்த பிரகாஷ்’ எனும் தனது முக்கிய நூலை வெளியிட்டார். அவருடைய கருத்தின்படி சமகாலத்து இந்து மதம் சீர்கேடு அடைந்துவிட்டது. ஆகவே அவர் புராணங்கள், பல கடவுள் வழிபாடு, உருவ வழிபாடு , பிராமண அர்ச்சகர்களின் நடவடிக்கைகள், புனித யாத்திரைகள் ஆகியவற்றை நிராகரித்தார்.
- விதவைத் திருமணத்திற்கான தடையை எதிர்த்தார். சமஸ்கிருத மொழியில் சிறந்த புலமை பெற்றிருந்த அவர் “வேதங்களை நோக்கித் திரும்புக” என அழைப்பு விடுத்தார். வேதங்களை அடிப்படையாக கொண்டு சமூகத்தை வடிவமைக்க விரும்பிய அவர் அதே சமயம் புராணங்களைப் புறக்கணித்தார். ஏனைய சீர்திருத்தவாதிகளைப் போலவே பெண் கல்வி, கைம்பெண் திருமணம் ஆகியவற்றை ஊக்குவித்தார்.
- சுவாமி தயானந்த சரஸ்வதி பஞ்சாப் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தார். அங்கிருந்த ‘கத்ரி’ எனப்படும் வணிகச் சமூகம் காலனிய காலத்தில் மகத்தான வளர்ச்சியைப் பெற்றிருந்தது.
- ஆனால் பஞ்சாபில் இந்து, முஸ்லீம், சீக்கியரிடையே பெருமளவில் வகுப்புவாத மோதல் நடைபெற்று வந்தது. தயானந்தரின் ‘சுத்தி’ இயக்கம் இந்துக்கள் அல்லாதவர்களை இந்துக்களாக மாற்ற முயன்று பெரும் எதிர்ப்புகளை குறிப்பாக அகமதியா இயக்கத்தின் எதிர்ப்புகளை சந்தித்தது.
- ஆரிய சமாஜம் ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகக் கருதப்படுகிறது. தயானந்தா ஆங்கிலோ வேதப் பள்ளிகளும் (DAV) கல்லூரிகளும் நிறுவப்பட்டதின் மூலம் தயானந்தரின் செல்வாக்கு இருபதாம் நூற்றாண்டில் தொடர்ந்தது.
இராமகிருஷ்ண இயக்கம்
- சமூக சமயச் சீர்திருத்த இயக்கங்கள் தோன்றியதையும் அதில் வங்காளம் தீவிரமாகப் பங்கேற்று நாட்டின் மற்ற பகுதிகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்ததையும் நாம் முன்னரே கண்டோம்.
- அதன் தொடர்ச்சியாக வங்காளத்தில் இராமகிருஷ்ண பரம்ஹம்சரின் நினைவாக இராமகிருஷ்ண மிஷன் உதயமானது. இராமகிருஷ்ண பரமஹம்சர் கல்கத்தாவின் அருகேயுள்ள தட்சினேஸ்வர் எனும் ஊரிலுள்ள கோவிலின் ஏழைப் பூசாரி ஆவார். அவர் முறையான கல்வி கற்றவரில்லை.
- ஆனால் தீவிர ஆன்மீக வாழ்வை மேற்கொண்டவர். அனைத்து மதங்களிலும் இயல்பாக உள்ள உண்மைகள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். பல்வேறு மதங்களின் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு சமயப் பணிகளை மேற்கொண்டு அம்மதங்கள் சார்ந்த நம்பிக்கைகளைச் சோதித்துப் பார்த்தார்.
- அவரைப் பொருத்த அளவில் “அனைத்து மதக் கருத்துக்களும் ஒரே இலக்கைச் சென்றடையும் பல்வேறு பாதைகள்” என்பதாகும்.
- இராமகிருஷ்ணருடைய பரந்த பார்வையும், இறைநிலை சார்ந்த உள்ளுணர்வும், ஆன்மீகப் பெருவிருப்பமும் பெருவாரியான மக்களைக் கவர்ந்தன. தன் கருத்துகளை கதைகள் மற்றும் வியக்கத்தக்க உவமைகள் மூலமாக விளக்கினார். அவர்மேல் வியப்பூற்ற ஒருவர் இவையனைத்தையும் ‘இராமகிருஷ்ண காதாமிர்தா’ எனும் தலைப்பில் தொகுத்தளித்துள்ளார்.
- அவருடைய சீடர்களுள் மிகவும் புகழ் பெற்றவர், கல்கத்தா பல்கழைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருந்த இளைஞர் நரேந்திரநாத் தத்தா என்பவராவார். இவரே சுவாமி விவேகானந்தர் (1863 – 1902) எனப் புகழடைந்தார்.
- அவர் தன் குருவின் கருத்துகளை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கொண்டு சென்றார். அவருடைய கல்வியறிவும் பேச்சாற்றலும், ஆன்மீக தோற்றமும், அவருடைய வியத்தகு ஆளுமையும் அவருக்கு நாடு முழுவதும் சீடர்களை உருவாக்கியது. அவர்களில் பலர் தேசிய இயக்கத்திலும் இணைந்தனர்.
- விவேகானந்தர் 1893இல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற உலகச்சமய மாநாட்டில் பங்கேற்று அங்கு கூடியிருந்தோர் மேல் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார்.
- இவ்வியக்கம் பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர்க்கான இல்லகள் ஆகியவற்றையும் நிறுவியது. இயற்கை பேரழிவுகளாலும் மனிதர்களால் ஏற்பட்ட பேரழிவுகளாலும் மக்கள் துயருற்றபோது அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது.
- சுவாமி விவேகானந்தர் இளமை, தைரியம் ஆகியவற்றின் மறுவடிவமாவார். நவீன இந்தியாவின் விடிவெள்ளி எனக் குறிப்பிடுகின்றார். வாலன்டைன் சிரோல் என்பாரின் வார்த்தைகளில்
“தனது ஆளுமைத் திறனால் வெளிநாடுகளில் இந்தாவின் பாரம்பரியமிக்க நாகரிகத்திற்கும் அதனுடைய புதிதாகப் பிறப்பெடுத்துள்ள தேசம் எனும் உரிமைக் கோரிக்கைக்கும் கண்கூடான அங்கீகாரத்தைப் பெற்று தந்த முதல் இந்தியர்” ஆவார்.
பிரம்மஞான சபை
- இந்திய அறிவுஜீவிகள், தாங்கள் மேற்கத்திய அறிவொளி மற்றும் பகுத்தறிவு இயக்கங்களால் விழிப்புணர்வு அடைந்ததாக உணர்ந்த நேரத்தில் மேலை நாடுகளின் சிந்தனையில் ஒரு சோர்வு நாடுகளை அணுகியது. இச்சிந்தனைப் போக்கிலிருந்தே பிரம்ம ஞான சபை உதயமானது.
- இவ்வமைப்பு 1875இல் பிளாவட்ஸ்கி அம்மையார், கர்னல் ஆல்காட் ஆகியோரால் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. 1879இல் இந்தியா வந்த அவர்கள் 1886இல் அமைப்பின் தலைமையிடத்தைச் சென்னை அடையாரில் அமைத்தனர். 1893இல் இந்தியாவிற்கு வந்த அன்னிபெசண்ட் அம்மையாரின் தலைமையில் பிரம்மஞானசபை வலுப்பெற்று குறிப்பாகப் பல தென்னிந்திய ஆதரவாளர்களைப் பெற்றது.
- இந்துப் பாரம்பரியத்தை மேற்கத்திய அறிவுஜீவுகள் ஒத்துக்கொண்டதில் அவர்கள் பெருமை கொண்டனர். தென்னிந்தியாவின் பல பகுதிகளில் பிரம்மஞான சபையின் கிளைகள் உருவாயின. பல ,முரண்பாடுகளுக்கு உள்ளானாலும் இவ்வமைப்பு இந்தியாவில் பௌத்தம் மீண்டும் உயிர் பெற்றதில் முக்கியப் பங்கு வகித்தது.
- முற்போக்குச் சிந்தனையாளரான அயோத்திதாச பண்டிதர், ஹென்றி ஆல்காட்டுடன் கொண்ட தொடர்பின் காரணமாக நவீன பௌத்தத்திற்கு அறிமுகமானார். ஆல்காட் அயோத்திதாசரை இலங்கைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் புகழ்பெற்ற மீட்பு வாதிகளான அனகரிகா தர்மபாலா, ஆச்சாரிய சுமங்களா உட்பட பல பௌத்த பிட்சுக்களைச் சந்தித்தார்.
சத்யசோதக் சமாஜம் (1873)
- இதுவரை விவாதிக்கப்பட்ட இயக்கங்கள் பெரும்பாலும் மேல்சாதியாகக் கருதப்பட்ட சமூகங்களின் மேல் அதிக கவனம் செலுத்தின. ஆனால் சில குறிப்பிட்ட இயக்கங்கள் ஒடுக்கப்பட்ட சமூகங்களை அணிதிரட்டி அவர்களிடம் தங்கள் கொள்கைகளை விளக்கின. அவற்றுள் மிக முக்கியமான இயக்கம் ஜோதிபா பூலேயின் சத்ய சோதக் சமாஜமாகும்.
- 1827இல் பிறந்த ஜோதிபா பூலே மாலி (தோட்ட வேலை செய்வோர்) சமூகத்தைச் சேர்ந்தவராவார். தொடக்கக் கல்வியைக் கிறித்தவ சமய நிறுவனப் பள்ளியில் கற்ற அவர் இடையில் கல்வியைத் தொடர முடியாமல் நின்றுவிட்டார்.
- ஜோதிபா பூலே மேல் சாதியினரின் அடக்குமுறைக்கு எதிராக வாழ்நாள் முழுவதுமான நீண்ட போராட்டத்தை மேற்கொண்டார். உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமென்ற தாகத்தினால் வேதங்கள், மனுசங்கிதை, புராணகள், புத்தர, தீர்த்தங்கரர் ஆகியோரின் கருத்துகள், இடைக்கால பக்தி இயக்கத்தைச் சேர்ந்த சமயப் பெரியோர்கள் என மிக விரிவான வாசிப்பை மேற்கொண்டார்.
- மேற்கத்திய சிந்தனைகளோடும் கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களோடும் தன்னை பரிச்சயப்படுத்திக் கொண்டார். ஒட்டுமொத்தப் பண்பாட்டையும் மரபுகளையும், பகுத்தறிவு மற்றும் சமத்துவம் ஆகிய இரண்டு அளவுகோல்களைக் கொண்டு சீர் தூக்கிப் பார்த்தார்.
- சமத்துவம் எனும் கொள்கை சாதிய முறையையும் அதிகாரமிக்க குடும்ப அமைப்பையும் பெண்களின் கீழான நிலையினையும் ஒட்டுமொத்தமாக மறுக்க கோரியது. பகுத்தறிவுஎனும் கொள்கை மூட நம்பிக்கைகளும் சடங்குகளும் நீக்கப்பட வேண்டுமெனக் கோரியது.
- அரசியல், சமூகம், பொருளாதாரம், மதம் ஆகியவை தொடர்பான பிரச்சனைகளில் அவர் முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருந்தார். சாதி முறையானது பிராமணர் அல்லாதோரின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி., பல நூற்றாண்டு காலமாக நிலவி வரும் சமத்துவமின்மை, சமூகத் தாழ்வு நிலை ஆகியவற்றுக்கு எதிராக அவர்களைப் புரட்சி செய்ய ஒருங்கிணைந்து போராட்டங்களை மேற்கொள்ளச் செய்தார்.
- இந்த லட்சியங்களை அடைவதற்காக சத்ய சோதக் சமாஜம் (உண்மை தேடும் சங்கம்) என்ற அமைப்பை 1873இல் நிறுவினார். மக்களின் கல்வியே விடுதலைக்கான புரட்சிகரமான காரணியாக இருக்கும் என்று கூறினார். இவர் எழுதிய முக்கிய நூல் ‘குலாம்கிரி’ (அடிமைத்தனம்) என்பதாகும்.
- சமூகத்தில் பெண்களும் வறுமையில் உழல்வோரும் நசுக்கப்பட்டோருமே மிகவும் பாதுக்கப்பட்டவர்கள். பெண்களின் விடுதலை என்பது சமூகத்தின் ஏனைய வர்க்கங்களின் விடுதலையோடு இணைந்துள்ளது என்று வாதிட்டார்.
- வர்க்கங்களுக்கிடையேயான சமத்துவம் மற்றும் ஆண் பெண் சமத்துவத்தை முன்வைத்தார். திருமணத்தின் போது மணப்பெண்ணின் கல்வி உரிமையை ஏற்றுக்கொள்வதாக மணமகனை உறுதியளிக்கும்படி கூறினார்.
- பூலே தன்னுடைய கருத்துக்களை உண்மையான போராட்டங்களாக மாற்ற விரும்பினார். மக்களுக்குக் கட்டாய தொடக்கக் கல்வியை விவசாய வர்க்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்குமாறு ஆங்கில அரசாங்கத்தைப் பூலே வற்புறுத்தினார்.
- அவர் 1851இல் புனேயில் பெண்களுக்கென்று ஒரு பள்ளியையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு பள்ளியையும் தனது துணைவியார் சாவித்ரியின் உதவியோடு தொடங்கினார்.
- தீண்டத்தகாதவர்களுக்காக ஒரு பள்ளியையும் கைம்பெண்களின் குழந்தைகளுக்காக ஒரு இல்லத்தையும் நிறுவினார். பிற்காலத்தில் மகாராஷ்டிராவில் பிராமணரல்லாதோர் இயக்கம் இவருடைய பணிகளால் தோன்றியது.
பண்டித ரமாபாய் (1858 – 1922)
- பண்டித ரமாபாய் (1858 – 1922) இந்தியாவில் பெண் விடுதலைக்காகப் போராடிய முன்னணித் தலைவர்களில் ஒருவராவார். சிறந்த கல்விப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். சமஸ்கிருத மொழியில் ஆழமான புலமை பெற்றிருந்ததால் அவருக்கு ‘பண்டித்;, ‘சரஸ்வத்’ எனும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
- பெற்றோரின் மரணத்திற்குப் பின்னர் ரமாபாயும் அவருடைய சகோதரரும் நாட்டின் பல பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டனர். 1878இல் அவர்கள் கல்கத்தா சென்றனர். இரண்டாண்டிற்குப் பின்னர் அவருடைய சகோதரரும் காலமானார். 1880இல் சமூகத்தின் கீழ்மட்டக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வங்காளியைத் திருமணம் செய்து கொண்டார்.
- அக்காலத்திலேயே வேற்று சாதியைச் சேர்ந்த வேற்று மொழி பேசக்கூடிய ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் நெஞ்சுரம் அவருக்கிருந்தது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர் கணவரும் இயற்கை எய்தவே, புனே திரும்பிய அவர் ரானடே, பண்டார்க்கர் ஆகிய தலைவர்களின் உதவியுடன் ஆரிய மகிளா சமாஜ் எனும் அமைப்பை நிறுவினார். 1882இல் 300 பெண்கள் இவ்வமைப்பில் கல்வி கற்றனர்.
- ரானடே, பண்டார்க்கர் ஆகியோரின் உதவியோடு கைவிடப்பட்ட விதவைகளுக்காக ‘சாரதா சதன்’ (வீடற்றவர்களுக்கான இல்லம்) எனும் அமைப்பைத் தொடங்கினார். வெகு விரைவிலேயே இந்து பெண்களைக் கிறித்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்கிறார் என்ற குற்றம் சாட்டப்பட்டதால் தனது செயல்பாடுகளைப் புனேவுக்கு அருகேயுள்ள கேத்கான் எனும் இடத்திற்கு மாற்றினார்.
- அங்கு ‘முக்தி சதன்’ (சுதந்திர இல்லம்) எனும் அமைப்பை நிறுவினார். அந்நிறுவனத்தில் 2000 பெண்களும் குழந்தைகளும் தங்கியிருந்தனர். அவர்களை சுயசார்புடையவர்களாக மாற்றுவதற்காக தொழிற்பயிற்சி வழங்கப்பட்டது.
ஸ்ரீ நாராயண குரு
- கேரளத்தை மையமாகக் கொண்ட இந்த, ஸ்ரீ நாரயண குரு தர்ம பரிபாலன யோகம் உயர் சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தாருக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடுகளிலிருந்து தோன்றியது.
- இவ்வியக்கத்தை தோற்றுவித்த ஸ்ரீ நாராயணகுரு, கள் இறக்குவதைத் தொழிலாகக் கொண்ட கேரளத்து ஈழவ சமூக இயக்கத்தின் ஈட்டி முனையாக விளங்கினார். ஈழவர்கள் 26 விழுக்காடு உள்ளனர். ஸ்ரீநாராயண குரு 1902இல் “ஸ்ரீநாராயண குரு தர்மபரிபாலன யோகம்” (Sri Narayanaguru Dharma Paripalana Yogam (SNDP)) எனும் அமைப்பை நிறுவினார்.
இவ்வமைப்பு
- பொதுப்பள்ளிகளில் சேர்வதற்கான உரிமை
- அரசுப் பணிகளில் அமர்த்தப்படுதல்
- சாலைகளைப் பயன்படுத்துவதற்கான, கோவில்களுக்குள் செல்வதற்கான உரிமை,
- அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற பிரச்சனைகளைக் கைகளில் எடுத்தது.
- இவ்வியக்கம் சமூகத்தில் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு மாறுதல், பாரம்பரியமான அதிகார விநியோக முறையில் மாற்றம், பிற்படுத்தப்பட்ட வர்க்கங்களின் கூட்டமைப்புகளை ஒருங்கிணைத்துப் பெருவடிவிலான சம்மேளமாக மாற்றுதல் போன்ற கூட்டமைப்பு மாற்றங்களைக் கொணர்ந்தது.
- கோவில்களுக்குள் ஈழவர்கள் நுழைவதற்கிருந்த தடைகளுக்கு எதிராக ஸ்ரீநாராண குரு புதிய கோவில்களை நிறுவியதோடு ஈழவ சமூகம் தன்னைத்தானே நவீனப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு சக்தி கொண்டதாக மாற்றினார்.
- கவிஞர் குமரன் ஆசான் டாக்டர் பல்பு, சகோதரன் ஐயப்பன் போன்ற மகத்தான ஆளுமைகள் இவ்வியக்கத்திலிருந்து தோன்றி, கேரளச் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தினார்.
- வைக்கம் சத்யாகிரகத்தில் நேரடியாகப் பங்கு பெறாவிட்டாலும் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஈழவர்கள் நுழைவதற்கான தடைகளுக்கு எதிராகப் போராட்டங்களை ஏற்பாடு செய்தார். அவை எதிர்கால கோவில் நுழைவு இயக்கங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தன.
இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்கள்
- 1857 பெருங்கிளர்ச்சியும், அது ஆங்கிலேயரால் கொடூரமாக அடக்கப்பட்டதும் தெற்காசிய முஸ்லிம்களின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தின. 1857 எழுச்சிக்கு மூஸ்லீம்களே காரணம் என்று ஆங்கிலேயர் சந்தேகித்த நிலையில், முஸ்லீம்களும் காலனிய நவீனத்துவம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல் வீடுகளுக்குள்ளேயே சுருங்கியிருந்தனர்.
- இதன் விளைவாக முஸ்லீம்கள் கல்வியிலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் பின்தங்கியிருந்தனர். இச்சூழலில் ஒரு சில பதிற்றாண்டுகளுக்குப் பின்னர் முஸ்லீம்களுக்கிடையே சில சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின.
அலிகர் இயக்கம் (1875)
- அலிகார் இயக்கம் 1875இல் சையது அகமது கானால் தொடங்கப்பட்டது. மேற்கத்திய அறிவியல் கல்விக்கும் குரானின் போதனைகளுக்குமிடையே ஒத்திசைவை ஏற்படுத்த அவர் விரும்பினார்.
- அவருடைய முற்போக்கான சமூகக் கருத்துக்கள் அவருடைய பத்திரிக்கையான தத்கிப்-ஒல்-அக்லுக் (பழக்க வழக்கங்களையும் ஒழுக்க நெறிகளையும் மேம்படுத்துதல்) மூலம் பரப்பப்பட்டது.
அலிகர் இயக்கத்தின் கொள்கைகள்
- முஸ்லீம்கள் இஸ்லாமின் மேல் கொண்டிருக்கும் பற்றினைப் பலவீனப்படுத்தாமல் நவீனக் கல்வியை அவர்களிடையே பரப்புதல்.
- பர்தா முறை, பலதார மணம், கைம்பெண் மறுமணம், விவாகரத்து போன்றவற்றோடு தொடர்புடைய சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்வது போன்ற கொள்கைகளைக் கொண்டிருந்தது.
- சையது அகமத் கானின் கல்வி குறித்த திட்டம் தொடக்கத்திலிருந்தே ஆங்கில வழிக் கல்வியின் சாதக அம்சங்களை வலியுறுத்திக் கூறியது. இயற்பியல் அறிவியல் நூல்களை உருது மொழியில் மொழியாக்கம் செய்வதன் மூலமும் இருமொழிப் பத்திரிகை ஒன்றை நடத்துவதன் மூலமும் மேற்கத்திய அறிவியலை அறிமுகம் செய்வதற்காக 1864இல் அவர் அறிவியல் கழகம் எனும் அமைப்பை ஏற்படுத்தினார்.
- அதே ஆண்டில் காஜிப்பூரில் நவீனப் பள்ளியொன்றை நிறுவினார். 1868இல் முஸ்லீம் மக்களிடையே நவீனக் கல்வியைத் தொடங்குவதற்காகப் பல மாவட்டங்களில் கல்விக் குழுக்கள் அமைக்கப்படுவதை ஊக்கப்படுத்தினார்.
- 1869-1870இல் அவர் ஐரோப்பா சென்றபோது இந்திய முஸ்லீம்களுக்காக ஒரு மாபெரும் கல்வி நிறுவனம் என்ற தனது வாழ்நாள் பணிக்கான திட்டத்தை உருவாக்கினார்.
- முஸ்லீம்களிடையே ஆங்கிலக் கல்வியைப் பரப்புவதற்காக 1875இல் அலிகரில் ஒரு நவீன முகமதியப் பள்ளியை தொடங்கினார். இதுவே 1877இல் முகமதியன் ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியாக வளர்ச்சிபெற்றது. அவருடைய மறைவிற்குப் பின்னர் இக்கல்லூரி ஒரு பல்கலைக்கழகமாக வளர்ந்தது.
- அவருடைய மறைவிற்குப் பின்னர் இக்கல்லூரி ஒரு பல்கலைக்கழகமாக வளர்ந்தது. இதுவே முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் அறிவுஜீவிகளையும் உருவாக்கும் மையமாகத் திகழ்ந்தது.
- இந்திய முஸ்லீம்களிடையே தாராளவாதக் கருத்துக்களைப் பரப்புவதற்காக 1886இல் சையது அகமது கான் ஆங்கிலேய கீழை தேயவிய கல்வி மாநாட்டை (Anglo –oriental Eductational Conference) தொடங்கினார்.
- சமயச் சட்டங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை அவர் எதிர்த்தார். மாறிவரும் காலச் சூழலுக்கேற்றவாறு பகுத்தறிவுச் சிந்தனையின் வெளிச்சத்தில் குரானில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்குப் புதிய விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றார்.
- இந்திய முஸ்லீம் மதத்தை தாராளமாக்கி, புதிய சிந்தனைகளுக்கும் விளக்கங்களுக்கும் ஏற்புடையதாய் மாற்றும் முயற்சியை மேற்கொண்டார். இம்முயற்சியில் வைதீக இறையியலாளர்களின் தீவிரத் தாக்குதல்களை அவருடனடியாக எதிர்கொள்ள நேர்ந்தது.
அகமதியா இயக்கம் (1889)
- 1889 இல் மிர்சா குலாம் அகமது (1835 – 1908) என்பரால் உருவாக்கப்பட்ட இவ்வியக்கம் ஒரு மாறுபட்ட போக்கை ஏற்படுத்தியது. குரானில் சொல்லப்பட்டுள்ள உண்மையான கொள்கைகளுக்கு திரும்ப வேண்டும் என்று கூறிய அவர் தன்னை ஒரு தீர்க்கதரிசி எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
- அவரது கூற்று மதத்திற்கு எதிரானது என மைய நீரோட்ட இஸ்லாமியர் கருதினர். ஆனாலும் பலர் அவருடைய கொள்கைக்கு மாறினர். அவருடைய முக்கியப் பணி ஆரிய சமாஜமும், கிறுத்தவ சமயப் பரப்பாளர்களும் இஸ்லாமுக்கு எதிராக வைத்த விவாதங்களை எதிர்கொண்டு மறுத்ததாகும்.
- சமூக நெறிமூறைகளில் அகமதியா இயக்கம் பழமைவாதக் கண்ணோட்டதுடனே பலதாரமணம் , பெண்கள் முகத்திரை அணிவது போன்றவற்றையும், விவாகரத்தைப் பொறுத்தமட்டில் பழமையான விதிகளையும் பின்பற்றினர்.
தியோபந்த் இயக்கம் (1866)
- தியோபந்த் இயக்கம் முஸ்லீம் கல்வியாளர்களில் வைதீகப் பிரிவைச் சார்ந்தவர்களால் மீட்டெடுப்பு இயக்கமாக இரு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது. ஒன்று குரானின் தூய்மையான கருத்துகளையும் ஹதீஸ் எனப்படும் மரபுகளையும் பரப்புரை செய்தல்.
- மற்றொன்று அந்நிய ஆட்சியாளர்களுக்கெதிராக ஜிகாத் (புனிதப்போர்) எனும் உத்வேகத்தை உயிரோட்டமுடையதாக வைத்திருப்பது. இவ்வியக்கம் நிறுவன வடிவம் பெற்று சரண்பூருக்கு அருகேயுள்ள தியோபந்த் என்னுமிடத்தில் முகமது காசிம் நாநோதவி (1833 – 1877) , ரஷித் அகமத் கங்கோரி (1828 – 1905) ஆகியோரால் முஸ்லீம் சமூகத்திற்கான சமயத் தலைவர்களுக்கு பயிற்சி வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.
- அலிகர் இயக்கத்தின் நோக்கங்களான மேலைக் கல்வியின் மூலம் ஆங்கிலேய ஆட்சியை ஆதரித்தல் ஆகியவற்றிற்கு எதிராக இஸ்லாமிய சமூகத்தாரிடையே சமயப் புத்துயிர்ப்பை ஏற்படுத்தல் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தியோபந்தில் கொடுக்கப்பட்ட குறிப்பாணைகள் செவ்வியல் இஸ்லாமிய மரபுகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே.
- வாலி அல்லா சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த இறையியலாளர்களால் 1867இல் தியோபந்த்தில் இறையியல் கல்லூரி ஒன்று நிறுவப்பட்டது. அவர்களுள் மிக முக்கியமானவர் முகமது காசிம் நாநோதவி ஆவார்.
- கிறித்தவ சமயப் பரப்பு நிறுவனங்களுக்கும் ஆரிய சமாஜமும் முன்வைத்த வாதங்களுக்கு எதிர் வாதங்கள் வைப்பதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். இவ்விறையியல் கல்லூரியின் மிக முக்கியமான நோக்கம் பழமைவாதிகளுக்கு இடைத்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கும் இறையியலாளர்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவது, சமய, இறையியலை மீள்வாசிப்பு செய்ய வைப்பது என்பனவாகும்.
- ஒரு சமயப் பல்கலைக்கழகமாக தியோபந்த் , முஸ்லீம் இந்தியாவில் மட்டுமல்லாமல் முஸ்லீம் உலகத்திற்கே பெருமதிப்புமிக்க நிறுவனமாயிற்று.
நட்வத் –அல்-உலாமா
- தியோபந்த்தைக் காட்டிலும் குறைந்த அளவு பழமைவாதப் போக்குடைய அதே சமயம் நவீனகாலத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுத்த இவ்வியக்கம் 1894இல் லக்னோவில் சிப்லி நுமானி எனும் வரலாற்று ஆசிரியராலும் வேறுசில அறிஞர்களாளும் உருவாக்கப்பட்டது.
- நவீன மேற்கத்தியக் கல்வியின் வருகையைத் தொடர்ந்துவந்த இறைமறுப்புக் கொள்கை, லோகாயதவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ள அறிவார்ந்த முறையில் சமயத்திற்கு விளக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
பிரங்கி மஹால்
மூன்றாவதாகப் புகழ்பெற்ற ஆனால் மற்றவற்றைக் காட்டிலும் காலத்தால் மூத்த இச்சிந்தனைப் பள்ளி லக்னோவிலுள்ள பிரங்கிமஹாலில் உருவானது. மற்ற இரண்டைப் போலல்லாமல் பிரங்கிமஹால் பள்ளி சூபியிஸத்தை மதிப்பு வாய்ந்த அனுபவமாகவும் அறிந்து கொள்வதற்கான களமாகவும் ஏற்றுக்கொண்டது. மற்றொரு மரபுசார்ந்த இயக்கம் அல்-இ-ஹதித் அல்லது நபிகள் நாயகம் கூறியவற்றை அப்படியே பின்பற்றுபவர்களாவர்.
பார்சி சீர்திருத்த இயக்கங்கள்
- தங்கள் தாயகமான பாரசீகத்தில் அடக்குமுறைக்கு உள்ளானதால் ஜொராஸ்டிரியர்கள் பத்தாம் நூற்றாண்டில் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் குடியேறினார். ஒரு வணிக சமூகமாக அவர்கள் நூற்றாண்டுகளின் போக்கில் செல்வச் செழிப்படைந்தனர்.
- நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட அச்சமூகத்தையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சீர்திருத்தக் காற்று தழுவத் தவறவில்லை.
- 1851இல் கல்வி பயின்ற பார்சிகள் அடங்கிய குழுவானது “ரக்னுமய் மத்யஸ்னன் சபா” (Rahnumai Madyasnam Sabha, சமய சீர்திருத்த சங்கம்) எனும் அமைப்பைப் பார்சிகளின் சமூக நிலைகளை மேம்படுத்தவும் ஜொராஸ்டிரிய மதத்தின் தூய்மையை மீட்டெடுக்கும் நோக்கங்களுடனும் உருவாக்கியது. இவ்வியக்கம் நௌரோஜி பர்தோன்ஜி, தாதாபாய் நௌரோஜி , காமா, பெங்காலி ஆகியோரைத் தலைவர்களாகக் கொண்டிருந்தது.
- சீர்திருத்தம் பற்றிய செய்திகளை பரப்புவதற்காக ராஸ்ட்-கோப்தார்(உண்மை விளம்பி) எனும் செய்தித்தாளும் வெளியிடப்பட்டது. பார்சிகளின் மத நடவடிக்களும் சடங்குகளும் சீர்திருத்தப்பட்டன. பார்சி மதத்திற்கு மறு விளக்கமும் தரப்பட்டது.
- சமூகத் தளத்தில் பார்சி பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்காகக் கல்வி கற்பித்தல், பர்தா முறையை நீக்குவது, திருமண வயது வரம்பை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. படிப்படியாகப் பார்சிகள் இந்திய சமூகத்திலேயே அதிக அளவு மேற்கத்தியமயப்பட்ட பிரிவினராக மாறினர்.
- தேசிய இயக்கத்திலும் இந்தியாவைத் தொழில்மயம் ஆக்கியதிலும் அவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.
சீக்கிய சீர்திருத்த இயக்கம்
- பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேலுழும்பிய பகுத்தறிவு முற்போக்கு அலைகள் சீக்கியரையும் தொட்டுத் தழுவின. 1873இல் சிங் சபா இயக்கம் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக உருவானது.
- நவீன மேற்கத்தியக் கல்வியை சீக்கியருக்குக் கிடைக்கச் செய்தல்
- கிறித்தவச் சமயப்பரப்பாளர்களின் மதமாற்ற நடவடிக்கைகள், இந்து மீட்டெடுப்பு ஆகியவற்றை எதிர்கொள்வது.
- அகாலி இயக்கம் சிங் சபா இயக்கத்தின் கீளை இயக்கமே. அகாலி இயக்கம் சீக்கிய குருத்வாராவை ஊழல் மிகுந்த உதாசி மகந்த் என்றறியப்பட்ட மத குருமார்களின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டது.
- 1922 இல் சீக்கியர் குருத்துவாரா சட்டத்தை (1925 திருத்தப்பட்டது) இயற்றியது. அதன்படி சீக்கிய குருத்துவாரா, சிரோன்மணி குருத்துவாரா பிரபந்தக் கமிட்டி எனும் அமைப்பின் கீழ் வந்தது.
தமிழ்நாட்டில் சீர்திருத்த இயக்கங்கள்
நாம் முன்னர் பார்த்தபடி வட இந்திய சீர்திருத்த இயக்கங்கள் தமிழகத்தின் மீது தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தின. பிரம்ம சமாஜமும் ஆரிய சமாஜமும் தமிழகத்தில் கிளைகளைப் பெற்றிருந்தன. கேசவ சந்திர சென் சென்னைக்கு வருகை தந்து உரையாற்றினார். ஆனால் தமிழகம் தனக்கே உரித்தான சீர்திருத்த இயக்கங்களைச் சந்தித்தது.
வைகுண்ட சுவாமிகள் (1833 – 1851)
- ஸ்ரீவைகுண்ட சுவாமிகள் வழிபாடு இன்றும் நடைமுறையில் உள்ளது. தென்திருவிதாங்கூரில் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) சாஸ்தா கோவில்விளை (தற்போது சாமித்தோப்பு என்றழைக்கப்படுகிறது) எனும் சிறிய ஊரில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த வைகுண்ட சுவாமிகள் , தனது குழந்தைப் பருவத்தில் கிராமத்திலிருந்த திண்ணைப் பள்ளியில் மதம் மற்றும் நீதி நூல்களைக் கற்றார். ஆறு ஆண்டுகள் துறவற வாழ்வை மேற்கொண்டார். விரைவில் அவரது புகழ் அனைத்து இடங்களுக்கும் பரவியது.
- தனது போதனைகளில் திருவிதாங்கூர் சமூகத்தின் மரபு வழிப்பட்ட சாதிமுறையைம், ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து அதிக வரி வசூல் செய்யும் அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
- அரசுக்கு எதிராகப் பேசினார் என்பதற்காக அவர் திருவாங்கூர் அரசரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டபோது ஒடுக்கப்பட்ட மக்களிடையே மிகவும் பிரபலமானார்.
- அவருடைய சீடர்கள் அவரை அய்யா (தந்தை) என்று அழைக்கலாயினர். அவரைப் பின்பற்றிய நடைமுறைகள் “அய்யாவழி” என்றழைக்கப்படுகிறது. வைகுண்டசுவாமி “பூடம்” (பீடம்) வழிபாட்டு முறையை கைவிடும்படி தன்னைப் பின்பற்றுவோரிடம் கூறினார்.
- விலங்குகளைப் பலியிடும் பழக்கத்தையும் கைவிடும்படி வலியுறுத்தினார். சைவ உணவுப் பழக்கத்தைக் கைக்கொள்ள அறிவுறுத்தினார்.
- தன்னைப் பின்பற்றுவோரை எதிர்ப்பின் அடையாளமாக தலைப்பாகை அணியும்படி வற்புறுத்தினார். அக்காலத்தில் தலைப்பாகை அணியும் உரிமை உயர் சாதியினருக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருந்த்து.
- சமத்துவத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியாக வைகுண்ட சுவாமிகள் தனது சமத்துவச் சங்கத்தின் மூலம் பல சாதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்கும் சமபந்தி விருந்துகளை ஏற்பாடு செய்தார்.
- ‘நிழல் தாங்கல்’ என்றழைக்கப்பட்ட அவர் உருவாக்கிய உணவுக் கூடங்களில் சாதிக்கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டன. 1851இல் அவருடைய இறப்பிற்குப் பின்னரும், வைகுண்ட சுவாமிகள் வழிபாடானது தென் திருவாங்கூர் பகுதியில் கிறித்தவ சமயம் பரவுவதற்குப் பெரும் சவாலாக விளங்கியது.
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) (1823 – 1874)
- இராமலிங்க அடிகள் சிதம்பரத்திற்கு அருகே ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து தன் இளமைக் காலத்தில் சென்னையில் வாழ்ந்தார். முறையான கல்வியைப் பெறாத அவர் பெரும் புலமையை வெளிப்படுத்தினார். தேவார, திருவாசகப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அவர் மனம் உருகும் பாடல்களைச் சொந்தமாக இயற்றினார்.
- அவருடைய காலத்தில் சைவ சமயமானது திருவாவடுதுறை, தர்மபுரம், திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதிக்கத்தில் இருந்தது. இராமலிங்க அடிகளின் பாடல்கள் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டிருந்தன.
- அவர் மதவெறியையும் , பகுத்தறிவற்ற தன்மையையும் கண்டனம் செய்தார். உள்ளுணர்வு சார்ந்த இறைநிலைக்கு ஆட்பட்ட அவர் அவ்வனுபவங்களைத் தனது பாடல்களில் பதிவு செய்தார். இதனால் வைதீக சைவ சமயத்தினர் இவர்பால் வெறுப்புக் கொண்டனர். அவர் சத்திய தர்ம சாலை ஒன்றை வடலூரில் நிறுவி ஏழைகளுக்கு உணவளிக்கத் தொடங்கினார்.
- முக்கியமாக 1860களில் பஞ்சங்களும் கொள்ளை நோயும் ஏற்பட்ட போது சாதிமத வேறுபாடின்றி உணவளித்தார். தன்னைப் பின்பற்றுவோரை ஒருங்கிணைப்பதற்காக சத்ய ஞான சபை எனும் அமைப்பை நிறுவினார்.
- இதனால் நிறுவனபடுத்தப்பட்டிருந்த சைவ அமைப்புகளோடு அவர் மோத துவங்கியது. இவருடைய சீடர்கள் அவருடைய பாடல்களைத் திரட்டித் “திருவருட்பா” எனும் பெயரில் 1867இல் வெளியிட்டபோது மோதல் உச்சத்தை எட்டியது.
- இலங்கையைச் சேர்ந்த வைதீக சைவர்கள் சீர்திருத்தவாதி ஆறுமுக நாவலரின் தலைமையில் இதைத் தெய்வநிந்தனை எனக் கூறி இவருக்கு எதிராக கட்டுரை எழுதும் போரில் ஈடுபட்டனர்.
- ஆனால் இறுதியில் இராமலிங்க அடிகளின் பணி அங்கீகரிக்கப்பட்டது. அவருடைய எழுத்துக்கள் உலகளாவிய சிந்தனைகளைத் தூண்டி சைவ சமயத்துக்குள் இருக்கும் பிரிவினைகளை மதிப்பிழக்கச் செய்தன.
பௌத்தத்தின் மீட்டுருவாக்கமும் அயோத்திதாசப் பண்டிதரும்
- முந்தைய பாடங்களில் குறிப்பிட்டபடி பௌத்தம் தமிழ்நாட்டில் இரண்டாவது ஆயிரம் ஆண்டின் தொடக்கத்திலேயே முற்றிலுமாக துடைக்கப்பட்டுவிட்டது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பௌத்தம் புத்துயிர் பெறத் துவங்கியது.
- 1867இல் சீவகசிந்தாமணி, 1898இல் மணிமேகலை ஆகிய இரண்டும் முழுமையாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட இந்த பின்னணியில் மிக முக்கியமான ஆளுமை அயோத்திதாச பண்டிதராவார். (1845 – 1914) ஒரு சுதேசி மருத்துவராகத் தொழில் செய்தாலும் அவர் பல்வேறு துறைகளில் புலமை பெற்றிருந்தார்.
- பிரம்மஞான சபையைச் சேர்ந்த ஹென்றி ஆல்காட்டின் செல்வாக்கிற்கு அவர் உள்ளானவர். 1890களில் ஆதிதிராவிடர்களிடையே இயக்கத்தைத் தொடங்கிய அவர் ஆதிதிராவிடர்களே உண்மையான பௌத்தர்கள் என்றும், வேத பிராமணியத்தை எதிர்த்ததன் விளைவாக அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர் என்றும் வாதிட்டார்.
- தனது கருத்துக்களை மெய்ப்பிப்பதற்காகத் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களையும் பிறவற்றையும் மறுவாசிப்பு செய்தார். மக்கள் பௌத்த மதத்திற்கு மாறுவதை அவர் ஊக்குவித்தார். அவர் கொள்கையை வட தமிழகப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பின்பற்றினர்.
- கோலார் தங்கவயலில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் இவரது கொள்கையைப் பின்பற்றினர். இவ்வியக்கத்தில் சிங்காரவேலரும் லட்சுமி நரசுவும் முக்கியப் பங்கு வகித்தனர்.
- அயோத்திதாச பண்டிதர் 1908 முதல் ஒரு பைசாத் தமிழன் (பின்னர் தமிழன்) என்ற பெயரில் வாராந்திரப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கி தான் இயற்கை எய்தும் காலம் வரை நடத்தினார்.
கிறித்தவ சமயப் பரப்பு நிறுவனங்கள்
- இடைக்கால இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மன்னர்களைப் போலவே ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியும் இந்திய மக்களின் மத விஷயங்களில் நடுநிலைமைக் கொள்கையைப் பின்பற்றியது.
- அதற்கான காரணம் போர்த்துகீசியரின் கட்டாய மதமாற்ற முயற்சிகளே அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமென அவர்கள் நம்பினர். அதன் விளைவாகக் கம்பெனி தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமயப் பரப்பாளர்கள் நுழைவதற்கு தடை விதித்திருந்தது.
- 1793இல் பாப்டிஸ்டுகளான வில்லியம் கேரி, ஜான் தாமஸ் ஆகிய இருவரும் சமயப்பரப்பு நிறுவனத்தைத் தொடங்கும் நோக்கில் இந்தியா வந்தனர். சமயப்பரப்பு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் டேனியர்களுக்குச் சொந்தமான கல்கத்தாவிற்கு வடக்கேயுள்ள செராம்பூரில் தங்கினர்.
- கேரி, வேறு இரு சமயப்பரப்பாளர்களான ஜேசுவா மார்ஷ்மேன், வில்லியம் வார்டு ஆகியோருடன் இணைந்து 1799இல் செராம்பூர் மிஷன் எனும் அமைப்பை ஏற்படுத்தினர்.
- செராம்பூர் மதப்பரப்பாளர்களே முதன்முதலாக இந்தியாவிற்கு வருகை தந்த நற்செய்தி மறைப் பணியாளர்கள் (Evangekical Babtist) ஆவர். இவர்களைத் தொடர்ந்து சீர்திருத்தக் கூறித்தவ சமயத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த மதப் பரப்பாளர்கள் இந்தியா வந்தனர்.
- செராம்பூர் மதப்பரப்பாளர்களின் வருகைக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே பல கிறித்தவ மதப் பரப்பு நிறுவனங்கள் போர்த்துகீசியருக்குச் சொந்தமான கோவாவிலும் , மலபார் கடற்கரைப் பகுதிகளிலும், சோழமண்டலக் கடற்கரைப் பகுதிகளிலும் செயல்பட்டனர்.
- மதமாற்றம் செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. விரிவான, பெருமளவிலான மதமாற்ற நடவடிக்கைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கின.
- மதப் பரப்புக் குழுவினர் சமூகப் பொருளாதார ரீதியாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெனப் பள்ளிகளை நிறுவினர், அரசுப் பணிகளில் அவர்களைப் பணியமர்த்துவதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முயன்றனர்.
- பொதுச் சாலைகளைப் பயன்படுத்துதல், தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடைகள் அணிந்து கொள்வது போன்ற சமூக உரிமைகளுக்காகவும் சமயப் படப்புக் குழுவினர் போராடினர்.
- அனாதைக் குழந்தைகளையும் ஆதரவற்றோரையும் தங்கள் நிறுவனங்களில் தங்க வைத்து தங்களது உறைவிடப் பள்ளிகளில் அவர்களுக்கு கல்வி வழங்கினர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அடிக்கடி ஏற்பட்ட பஞ்சங்கள் குறித்து கடந்த பாடத்தில் நாம் விவாதித்துள்ளோம்.
- பஞ்சங்களின் போது சமயப் பரப்புக் குழுவினர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தங்குமிடம் வழங்கி உதவி செய்யும்போது மக்களை மதமாற்றம் செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.
- பஞ்சக் காலங்களில் குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலப் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல கிராமங்கள் கிறித்தவ மதத்தைத் தழுவின.
- இதைப்போன்ற சூழலில் ஆந்திராவில் மாலா, மடிகா சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் எண்ணிக்கையில் மதம் மாறினர்.
- கம்பெனி அரசு இந்தியர்களுக்கு நவீன கல்வியை வழங்குவதில் சிறு முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டது. நீண்ட காலத்திற்கு உள்ளூர் மக்களுக்குக் குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் உரிமைகள் மறுக்கப்பட்ட ஏழை மக்களுக்குக் கல்வி வழங்கும் பொறுப்பைக் கிறித்தவ சமய நிறுவனங்களே தன்னார்வத்துடன் ஏற்றுக்கொண்டன.
- மருத்துவமனைகளையும் மருந்தகங்களையும் கிறித்துவ சமய நிறுவனங்கள் அமைத்துக் கொடுத்தது குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
சீர்திருத்த இயக்கங்களின் முக்கியத்துவம்
- சமூகத்தின் வைதீகப் பிரிவைச் சார்ந்தோரால், சமய-சமூக சீர்திருத்தவாதிகளின் அறிவியல் சித்தாந்த எதிர்ப்புகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் விளைவாகச் சீர்திருத்தவாகச் சீர்திருத்தவாதிகள் தூற்றப்பட்டனர், அடக்குமூறைக்கு உள்ளாக்கப்பட்டனர், அவர்களுக்கு எதிராக ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.
- பிற்போக்குவாதிகளால் கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருந்தபோதிலும், எதிர்ப்புகளை மீறி இவ்வியக்கங்கள், அச்சத்தின் காரணமாக இணங்கிச் சென்ற தனிமனிதர்களின் விடுதலைக்குப் பங்களிப்பைச் செய்தன.
- சமய நூல்கள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டமை, சமய நூல்களில் காணப்படும் கருத்துகளுக்குப் புதுவிளக்கம் அளிக்கும் உரிமை, சடங்குகள் எளிமைப்படுத்தப்பட்டமை ஆகியன இறைவழிபாட்டைத் தனிப்பட்ட அனுபவமாக மாற்றின.
- சிந்திக்கவும் பகுத்தறியவும் தெரிந்த மனித அறிவின் திறமைக்குச் சீர்திருத்தவாதிகள் முக்கியத்துவம் கொடுத்தனர். சமய நடவடிக்கைகளிலிருந்த ஊழல்களைக் களைந்து தங்கள் சமூகமும் மதமும் கீழானவை, பின்தங்கியவை என்ற குற்றச்சாட்டுக்கும் பழிப்புரைக்கும் எதிராகப் பதில்தர தங்களைப் பின்பற்றுவோர்க்கு சீர்திருத்தவாதிகள் உதவினர். உருவாகிவந்த மத்தியதர வர்க்கம் பற்றிக்கொள்வதற்கான பண்பாட்டு வேர்களை இவ்வியக்கங்கள் வழங்கின.
காலக்கோடு
செராம்பூர் சமயப்பரப்புக் குழு வருகை 1799
வைகுண்ட சாமிகளின் பிறப்பு 1809
இராமலிங்க அடிகளின் பிறப்பு 1823
பிரம்ம சமாஜம் 1828
அயோத்திதாச பண்டிதரின் பிறப்பு 1845
பிரார்த்தனை சமாஜம் 1867
ஆரிய சமாஜம் 1875
அலிகர் இயக்கம் 1875
இராமகிருஷ்ண மிஷன் 1897
சீக்கிய குருத்வாராச் சட்டம் 1922