Samacheer NotesTnpsc

தமிழ்நாட்டுப் பொருளாதாரம் Notes 11th Economics

11th Economics Lesson 5 Notes in Tamil

5. தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

‘வேலையின் தன்மைக்கேற்ப சரியாக ஊக்குவித்து செயல்படுத்தினால் அதே அளவிற்கு உடலுக்குத் தேவையான உணவை கிடைக்கச் செய்யும்’

  • ஜே.சி.குமரப்பா.

அறிமுகம்

  • இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சமூக மற்றும் பொருளாதார நிலைகள் ஒரே மாதிரியானவையல்ல, மண்டலங்களிடையே பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் ஏனைய பகுதிகளை விட சிறப்பாக உள்ளன.
  • பூகோள ரீதியாக தமிழ்நாடு 11-வது பெரிய மாநிலமாகும். மக்கள்தொகை அடிப்படையில் 6-வது பெரிய மாநிலமாகும்.
  • தமிழ்நாடு பல்வேறு சாதனைகளுடன் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்லது. மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பில் இரண்டாவது இடத்திலும், தலா வருமான முதலீடு, நேரடி அந்நிய முதலீடு மற்றும் தொழிற்துறை உற்பத்தி ஆகியவற்றில் 3-வது இடத்திலும் உள்ளது. தொழில் செய்ய உகந்த மாநிலங்களில் வரிசையிலும் உள்ளது.
  • சமூக மற்றும் நலத்துறைகளில் ஏனைய மாநிலங்களை விட சிறப்பான நிலையில் உள்ளது. உடல் நலம், உயர் கல்வி, குழந்தை இறப்பு விகிதம் (IMR) , மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) ஆகியவற்றில் தமிழ்நாட்டின் செயல்பாடு தேசிய சராசரியைவிட சிறப்பாக உள்ளது.

தமிழ்நாட்டின் சிறப்பு

  • 2005ஆம் ஆண்டிலிருந்து இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சியானது விரைவாக உள்ளது.
  • தமிழ்நாடு வறுமை ஒழிப்பு செயல்பாடுகளில் மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக உள்ளது.
  • இந்திய அளவில் ஏழைகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் ஏழை மக்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைவாக உள்ளது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • மனித வளர்ச்சி குறியீட்டில் மூன்றாவது இடம் வகிக்கிறது.
  • மூலதன முதலீட்டிலும் (2.92 இலட்சம் கோடி) மொத்த தொழில் துறை உற்பத்தியிலும் (6.19 இலட்சம் கோடி) மூன்றாவது இடம் வகிக்கிறது.
  • தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் 17% பங்களிப்புடன் (37000 அலகுகள்) முதலிடம் வகிக்கிறது. மேலும் தொழில் துறையில் உள்ள வேலை வாய்ப்பில் 16% பங்களிப்பு உள்ளது.
  • நிதி ஆயோக் அறிக்கையின்படி சுகாதாரக் குறியீட்டில் மூன்றாவது இடம் வகிக்கிறது.
  • உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் அதிகம் உள்ள மாநிலமாக உள்ளது.
  • மிக அதிக எண்ணிக்கையிலான பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஒரு முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது.
  • வணிக வங்கிகளிலும் கூட்டுறவு வங்கிகளிலும் உள்ள கடன் வைப்பு விகிதம் மிகச் சிறப்பாக உள்ளது.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSMEs) முதலீட்டுத் திட்டங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

தமிழகத்தின் செயல்பாடு

  • மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் சில பொருளாதாரக் குறியீடுகளில் சிறந்து விளங்குகிறது. கேரளா கல்வியறிவு, குழந்தை இறப்பு விகிதம், மகப்பேறு இறப்பு விகிதம் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது. ஆனால் தமிழ்நாடானது சுகாதாரம், உயர்கல்வி, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வேலையின்மை ஒழிப்பு போன்றவற்றில் மிகச் சிறப்பாகவும் பிற மாநிலங்களைவிட மேலானதாகவும் உள்ளது.
  • பெரும்பான்மையான மக்களுக்கான சமூக நலக் கொள்கைகளைக் கொண்டிருப்பதே தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்குக் காரணமாகும். எடுத்துக்காட்டாக பெரும்பான்மை மக்களுக்குப் பரவலாக்கப்பட்டுள்ள பொது விநியோகத்திட்டம், மதிய உணவுத் திட்டம், பொது சுகாதாரக் கட்டமைப்பு போன்றவற்றின் மூலம் நலத்தை மேம்படுத்துவதை இங்கு குறிப்பிடலாம்.

மூன்றாம் இடத்தில் தமிழ்நாட்டின் சுகாதாரக் குறியீடு

தமிழ்நாட்டின் சுகாதாரக் குறியீடானது கேரளம் பஞ்சாப் மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் பச்சிளங் குழந்தை இறப்பு வீதம் 14 ஆகும். இது பிற மாநிலங்களைக் காட்டிலும் மிகக் குறைவு. மேலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு வீதம் 2014-ல் 21 ஆகவும், 2015-ல் 20 ஆகவும் குறைந்துள்ளது.

(ஆதாரம்: சுகாதார மாநிலம் – முற்போக்கு இந்திய அறிக்கை – 2018 – நிதி ஆயோக்)

இயற்கை வளம்

நீர் வளம்

  • பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் இயற்கை வளம் குறைவாகும். இந்திய மாநிலங்களுக்கிடையில் மக்கள் தொகையில் 6-சதவீதமாக இருந்த போதிலும், நீர் வளத்தில் 3-சதவீதமும், நில பரப்பளவில் 4-சதமீதமும் உள்ளது.
  • தென்மேற்கு பருவக் காற்றைத் தொடர்ந்து வரும், வட கிழக்குப் பருவக்காற்று மழைப் பொழிவுக்கான மிகப்பெரிய ஆதாரமாகும். தமிழ்நாட்டில் 17 ஆறுகள் உள்ளன.
  • பாலாறு, செய்யாறு, பெண்ணையாறு, காவேரி, பவானி, வைகை, சித்தாறு, தாமிரபரணி, நெய்தல், வைப்பார், குண்டாறு போன்றவை முக்கிய ஆறுகள் ஆகும். தமிழகத்தில் கிணற்றுப்பாசனம் அதிக அளவில் உள்ளது. (56%).

பாசனத்திற்கான ஆதாரங்கள்

பாசன விவரங்கள் எண்ணிக்கை
அணைக்கட்டுகள் 81
கால்வாய்கள் 2239
குளங்கள் 41262
குழாய் கிணறுகள் 3,20,707
திறந்தவெளி கிணறுகள் 14,92,359

Source: TamilNadu Government Season & Crop Report 2012 -13

கனிம வளங்கள்

  • டைட்டானியம், லிக்னைட், மேக்னசைட், கிராபைட், லைம்ஸ்டோன், கிரானைட், பாக்சைட் போன்ற சுரங்கத் திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் முன்னோடித் திட்டமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தை குறிப்பிடலாம் (NLC). இதன் வளர்ச்சியினால் அனல் மின்நிலையம், உரத் தொழிற்சாலை, கார்பன் சார்ந்த தொழில்கள் வளர்ந்து வருகின்றன.
  • இதே போல் சேலத்தில் மாங்கனிசு சுரங்கமும், ஏற்காட்டில் பாக்சைட் சுரங்கமும், கஞ்சமலையில் இரும்புத்தாது சுரங்கமும் அமைந்துள்ளன மாலிப்டினம் எனும் இரசாயமானது இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்தில் உள்ள கரடிக்குட்டம் என்னும் ஊரில் மட்டுமே கிடைக்கிறது.

கனிம வளங்கள்

கனிமம் இருப்பு (டன்களில் நாட்டின் இருப்பில் தமிழகத்தின் பங்கு
லிக்னைட் 30,275,000 87%
வேர்மிகுலைர் 2,000,000 66%
கார்னெட் 23,000,000 42%
ஜேர்கான் 8,000,000 38%
கிராபைட் 2,000,000 33%
லெமனைட் 98,000,000 28%
ரூட்டைல் 5,000,000 27%
மோனசைட் 2,000,000 25%
மேக்னசைட் 73,000,000 17%

(ஆதாரம் : நிலவியல் மற்றும் சுரங்கத்துறை)

மக்கள் தொகை

  • 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவிலுள்ள 121 கோடி மக்கள் தொகையில் 7.21 கோடி மக்கள் தொகையுடன் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது.
  • ஐக்கிய நாடுக அறிக்கையின்படி தனித்த தேசிய இனமாக இயங்க கூடிய நாடுகளின் மக்கள் தொகையை விட தமிழ்நாட்டின் மக்கள் தொகை கூடுதலாக உள்ளது.

மக்கள் தொகை

மாநிலம் / நாடு மக்கள் தொகை (கோடியில்)
தமிழ்நாடு 7.2
இங்கிலாந்து 6.5
பிரான்ஸ் 6.5
இத்தாலி 5.9
தென் ஆப்பிரிக்கா 5.6
ஸ்பெயின் 4.7
இலங்கை 2.1

(ஆதாரம் : 2017-ல் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு வெளியிட்ட உலக மக்கள்தொகை பட்டியல்)

மக்கள் அடர்த்தி

மக்கள் தொகை அடர்த்தியானது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 2001-ல் 480 ஆகவும், 2011-ல் 555 ஆகவும் உள்ளது. இந்திய மாநிலங்களில் மக்கள் தொகை அடர்த்தியில் தமிழ்நாடு 12-வது இடத்தில் உள்ளது. மக்கள் தொகை அடர்த்தியில் தேசிய சராசரி 382 ஆகும்.

நகரமயமாதல்

இந்திய அளவில் நகரமயமாதலின் சராசரி அளவு 32.5% ஆக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 48.4% ஆக உள்ளது. இந்திய அளவில் மொத்த மக்கள் தொகையில் 6-சதவீதத்தைக் கொண்டுள்ள தமிழகம், நகரமக்கள் மொத்த மக்கள் தொகையில் 9.61-சதவீதமாக உள்ளது.

பாலின விகிதம் (1000 ஆண்களுக்கான பெண்களின் எண்ணிக்கை)

சமச்சீர் பாலினவிகிதம் என்பது பெண்களின் வாழ்வியல் மேம்பாடு அடைந்திருப்பதைக் குறிக்கிறது. தமிழ்நாட்டின் பாலின விகிதம் 995 ஆகும். பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போதும் இந்திய அளவிலும் இந்த விகிதம் மிக அதிகமாகும். பாலின விகிதத்தில் கேரளம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.

சுகாதாரம் மற்றும் சமூகக் குறியீடுகள்

வ.எண் குறியீடு தமிழ்நாடு இந்தியா
1 IMR 17 34
2 MMR 79 159
3 வாழ்நாள் எதிர்பார்ப்பு (மொத்தம்) ஆண்கள்

பெண்கள்

70.6

68.6

72.7

67.9

66.4

69.6

4 கல்வியறிவு வீதம் (மொத்தம்)

ஆண்கள்

பெண்கள்

80.33%

86.81%

73.86%

74.04%

82.14%

65.46%

5 பாலின விகிதம் 995 940

குழந்தை இறப்பு விகிதம் (1 வயதுக்குள்)

தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு வீதம் மற்ற மாநிலங்களைவிட குறைவாகவுள்ளது. நிதி ஆயோக் அறிக்கையின்படி 2016-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் 17ஆகும். இது தேசிய சராசரி 34-ல் பாதி அளவாகும்.

மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) (1 லட்சம் மகப்பேறில்)

நிதி ஆயோக் அறிக்கையின்படி மகப்பேறு காலத்தில் தாயின் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழ்நாடு 79 எண்ணிக்கையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது தேசிய சராசரியான 159-ல் சரிபாதி அளவாகும். மகப்பேறு இறப்பு விகிதத்தில் கேரளம் 61 (முதலிடம்), மகாராஷ்டிரா 67-ஆகவும் (இரண்டாம் இடம்) உள்ளது.

வாழ்நாள் எதிர்பார்ப்பு காலம்

சராசரியாக ஒரு நபரின் எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் அளவே ஆயுட்காலம் என்று அழைக்கப்படுகிறது. வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும் போது இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் குறைவு. இந்தியாவின் சராசரி ஆயுட்காலம் 67.9 ஆண்டுகள் (ஆண் – 66.4 ஆண்டுகள் பெண் – 69.6 ஆண்டுகள்) ஆகும். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் ஆயுட்காலம் 70.6 ஆண்டுகளாக (ஆண் – 68.6 ஆண்டுகள், பெண் – 72.7 ஆண்டுகள்) ஆக உள்ளது.

எழுத்தறிவு நிலை

தமிழ்நாட்டின் எழுத்தறிவு நிலையில் மற்ற இந்திய மாநிலங்களோடு ஒப்பிடும் போது முன்னேறிய நிலையில் உள்ளது.

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP)

  • மொத்த உள்நாட்டு உற்பத்தியை போன்றதே மாநில உள்நாட்டு உற்பத்தியாகும்.. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு மாநிலத்தின், ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பாகும்.
  • தமிழ்நாடு பொருளாதார மற்றும் புள்ளியியல் இயக்கத்தின் ஆய்வின் படி, நம் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDSP) 2016-17 நிதியாண்டில் 207.8 பில்லியன் டாலராக உள்ளது.
  • நம் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியானது உலக அளவில் குவைத் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகவும், வாங்கும் சக்தியின் அடிப்படையில் ஐக்கிய அரசு எமிரேட் நாடுகளின் (UAE) மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் சமமாக உள்ளது.
  • பிறநாடுகளுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகமாக உள்ளது.

உலக நாடுகளுடன் தமிழ்நாடு GSDP – ஓர் ஒப்பீடு

மாநிலம் / தேசம் மொத்த உள்நாட்டு உற்பத்தி
தமிழ்நாடு (GSDP) $207.8
ஈராக் (GDP) $171
நியுசிலாந்து (GDP) $184
இலங்கை (GDP) $81

(ஆதாரம் : IMF அவுட்லுக் ஏப்ரல் 2017)

துறை வாரியாகப் பங்களிப்பு

  • தமிழ்நாட்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) சேவைத் துறையானது 63.70% பங்களிப்புடன் முதலிடத்திலும், தொழில் துறை 28.5% பங்களிப்புடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
  • வேலை வாய்ப்பைப் பொருத்த மட்டில் வேளாண்மை முக்கியப் பங்கு வகித்தாலும் அதனுடைய மாநில உளநாட்டு உற்பத்தியில் பங்களிப்பானது 7.76% ஆக குறைந்துள்ளது.
  • சேவைத்துறை மற்றும் தொழில்துறை வேகமாக வளர்கிறது. இந்திய அளவிலும், தமிழ்நாட்டளவிலும், வேளாண்மை பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்பு மற்றும் உணவும் வழங்குகிறது. ஆனால் குறைந்த வேகத்திலேயே அதன் வளர்ச்சி உள்ளது. இந்த நிலையினால் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்பைக் குறைவாக உள்ளது.

தனிநபர் வருமானம்

  • தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 2200 டாலர்களுடன், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களைக் காட்டிலும் உயர்வாக உள்ளது.
  • தமிழ்நாட்டின் தலாவருமானம், 2018-ல் உள்ள புள்ளிவிபரங்களின்படி இந்திய சராசரி அளவை விட 1.75 மடங்கு அதிகமாக உள்ளது. அதே போல் பல நாடுகளுடன் ஒப்பிடும் போது அந்நாடுகளை விட அதிகமாகவும் உள்ளது.
  • ரூபாயின் அடிப்படையில் 2010-11 ல் தமிழ்நாட்டின் தலாவருமானம் ரூபாய் 1,03,492-ஆக உயர்ந்துள்ளது (வரவு செலவு அறிக்கையின்படி)

தமிழக தலாவருமானம் பிற நாடுகளுடன் ஒப்பீடு

மாநிலம் / தேசம் தனிநபர் வருமானம் (டாலர்களில்)
தமிழ்நாடு 2200
இந்தியா 1670
நைஜீரியா 2175
நிகரகுவா 2151
பாகிஸ்தான் 1443
வங்காளதேசம் 1358
ஜிம்பாப்வே 1029
நேபாளம் 729

(ஆதாரம்: உலக வங்கியின் தேசிய கணக்குகள் OECD தேசிய கணக்குகள்)

தமிழ்நாட்டின் தலா வருமானம் மற்ற தென்மாநிலங்களுடன் கீழ் உள்ளவாறு ஒப்பீடு செய்யப்படுகிறது.

தலா வருமானம் (ரூபாயில்) (2015-16) பிற மாநிலங்களுடன் ஒப்பீடு

மாநிலம் தனிநபர் வருமானம் (ரூபாயில்)
தமிழ்நாடு 1,57,116
கேரளா 1,55,516
கர்நாடகா 1,46,416
தெலுங்கானா 1,58,360
ஆந்திரப்பிரதேசம் 1,37,000

(ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி நியூடெல்லி 17 பிப்ரவரி 2017)

வேளாண்மை

  • வரலாற்று ரீதியாக தமிழகம் ஒரு வேளாண் மாநிலமாகும். தற்போது தமிழகத்தில் ஏழு வேளாண் காலநிலை மண்டலம் (Agro Climatic Zones) உள்ளது. இங்கு பல்வேறு வகையான மண் வளம் இருப்பதால் பழங்கள், காய்கறிகள், மசாலா பொருட்கள், தோட்டக்கலைப்பயிர், மலர்கள் மற்றும் மருத்துவத் தாவரங்கள் போன்றவை பயிரிட ஏதுவாக உள்ளது.
  • தமிழகம் நாட்டளவில் உதிரி பூக்கள் மற்றும் பழங்கள் உற்பத்தியில் மூன்றாமிடத்தில் உள்ளது. தமிழகத்தில் வேளாண்மையானது மிக அதிக அளவில் ஆற்றுநீர் மற்றும் பருவமழையை நம்பியுள்ளது.
  • தற்போது இந்தியாவின் நெல் உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக மேற்கு வங்கத்திற்கு அடுத்ததாக உள்ளது. மிகப்பெரிய அளவில் மஞ்சள் உற்பத்தி செய்யும் மாநிலமாகவும் உள்ளது.
  • கம்பு சோளம் நிலக்கடலை எண்ணெய் வித்துகள் கரும்பு போன்றவை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது. தோட்டக்கலைப் பயிர் வாழை, தேங்காய் உற்பத்தியில் முதலிடத்திலும், இரப்பர் உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், மிளகு உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், கரும்பு உற்பத்தியில் நான்காவது இடத்திலும் உள்ளது.

  • அனைத்து வகைப் பயிர்களுக்கான மொத்த உற்பத்திப் பரப்பு 2013-14 –ல் 58.97 இலட்சம் ஹெக்டேர்களாக உள்ளது. உணவு தானிய உற்பத்திப் பரப்பு 72.9% ஆகவும் பிற பயிர்களுக்கான உற்பத்திப் பரப்பு 27.1% ஆகவும் உள்ளது. உணவுப் பயிர்களில் நெல் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிற பயிர்களில் கடலை மற்றும் தேங்காய் முக்கியப்பங்கு வகிக்கிறது.

உணவு தானிய உற்பத்தி

  • உணவு தானிய உற்பத்தியில் நெல் உற்பத்தி 79.49 இலட்சம் டன் (2014 – 15) உற்பத்தியோடு முதலிடம் பெற்றுள்ளது. சிறு தானியங்கள் 40.79 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • பருப்பு உற்பத்தியில் 2011-12 –ல் 3.59 இலட்சம் டன்னிலிருந்து 2014-15-ல் 7.67 இலட்சம் டன்னாக குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. 2015-16-ல் பருவ மழை பொய்த்ததால் உற்பத்தி சிறிதளவு குறைந்தது.

இந்திய அளவில் உற்பத்தித்திறனில் தமிழகத்தின் நிலை

  • தமிழக அரசு வேளாண் விளை பொருள் உற்பத்திக்கும், உற்பத்தித் திறனுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் காரணமாக தமிழகம் உணவு தானியங்கள் மற்றும் பிற தானியங்களின் உற்பத்தித் திறனில் முதன்மை மாநிலமாக உள்ளது.
  • மக்காச்சோளம், கம்பு, நிலக்கடலை, எண்ணெய் வித்துக்கள், பருத்தி ஆகியவற்றில் உற்பத்தியில் முதலிடத்திலும் நெய், தேங்காய் ஆகியவற்றில் இரண்டாவது இடத்திலும் , கரும்பு, சூரியகாந்தி, சோளம் ஆகியவற்றில் மூன்றாவது இடத்திலும் மிளிர்கிறது.

தேசிய அளவில் தமிழ்நாட்டின் உற்பத்தித்திறன் நிலை

தானிய வகை தேசிய அளவில் தமிழக நிலை
மக்காச்சோளம் 1
கம்பு 1
கடலை 1
எண்ணெய் வித்துக்கள் 1
பருத்தி 1
தேங்காய் 2
நெல் 2
கரும்பு (மெட்ரிக் டன்) 3
சூரியகாந்தி 3
சோளம் 3
திடமான தானியங்கள் 4
மொத்த தானியங்கள் 8

(ஆதாரம் : தமிழக அரசின் வேளாண்மைத் துறை கொள்கை விளக்க குறிப்பு 2017-18)

தொழில்துறை

சென்னை, இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் எனவும், வங்கித் தலைநகரம் எனவும் அழைக்கப்படுகிறது. இது உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது ஆசியாவின் டெட்ராய்ட் (Detroit of Asia) எனவும் அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் தொழில் கொத்து

  • தமிழ்நாட்டில் ஏறக்குறைய 110 தொழிற் பூங்காக்கள் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளோடு செயல்பட்டு வருகின்றன. மேலும் தமிழக அரசு இரப்பர் பூங்கா, ஆயத்த ஆடைகள் பூங்கா, சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் வேளாண் ஏற்றுமதிப் பூங்கா போன்ற பல துறைகளையும் முன்னேறியுள்ளது.
  • மாநிலத்தின் பெரிய அளவிலான பொறியியல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மையமிட்டுள்ளன. சென்னை பன்னாட்டு அளவில் கார் உற்பத்தி ஜாம்பவான்களின் நகரமாக உள்ளது.
  • பேருந்து கட்டுமானத் தொழிலுக்குப் பெயர் பெற்ற கரூர், தென்னிந்திய பேருந்து கட்டுமானத் தொழிலுக்கான பங்களிப்பில் 80%மாக உள்ளது.
  • கரூரில் உள்ள தமிழ்நாடு காகித உற்பத்தி நிறுவனம் ஆசியாவிலேயே மிகப்பெரிய சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத காகித நிறுவனங்களுள் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. ‘எஃகு நகரம்’ என்றழைக்கப்படும் சேலத்தில் பல பெரிய ஜவ்வரிசி தயாரிப்பு நிறுவனங்களும் கனிமச் செல்வங்களும் உள்ளன.
  • சிவகாசியில் அச்சுத் தொழில், பட்டாசு நிறுவனங்கள், தீப்பெட்டித் தயாரிப்பில் முன்னோடியாக உள்ளது. இந்தியாவின் மொத்தத் தீப்பெட்டி உற்பத்தியில் 90% பங்கும் சிவகாசியில் உற்பத்தியாகிறது.
  • ‘தமிழகத்தின் நுழைவாயில்’ தூத்துக்குடி ஆகும். சென்னைக்கு அடுத்தபடியாக வேதிப்பொருட்கள் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஜவுளித்துறை

  • தமிழ்நாடு இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி உற்பத்தி மையமாகும். தமிழ்நாடு இந்தியாவின் ‘நூல் கிண்ணம்’ என அழைக்கப்படுகிறது.
  • இந்திய அளவில் மொத்த உற்பத்தியில் 41 சதவீத நூல் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவின் பொருளாதாரத்தில் ஜவுளித்துறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • 35 மில்லியன் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% பங்களிப்பையும், மொத்த ஏற்றுமதி வருவாயில் 35% ஜவுளித் துறையிலிருந்து கிடைக்கிறது. உற்பத்தித்துறையில் 14% பங்களிப்பு ஜவுளித்துறை மூலமாக கிடைக்கப் பெறுகிறது.
  • நூல் நூற்பிலிருந்து ஆடைத் தயாரிப்பு ஜவுளிகளுக்கான உற்பத்தித் தொடர்புடைய அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளன.
  • தமிழ்நாட்டின் மேற்குப் பகுதிகளான கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் கரூர் போன்ற மாவட்டங்களில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா நூற்பாலைகளில் பயன்படுத்தப்படும் பருத்தி பாலியஸ்டர் கலப்பு நூல் (Blended Yarn), பட்டு நூல் உற்பத்தி செய்யும் ஆலைகள் பெருமளவில் அமைந்துள்ளன. இங்கிருந்து சீனா வங்கதேசம் போன்ற பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • ‘பின்னலாடைகளின் நகர்ம்’ என அழைக்கப்படும் திருப்பூர் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பளவில் பின்னலாடைகளை ஏற்றுமதி செய்கிறது. திரைசீலைகள், படுக்கை விரிப்புகள், சமையலறை விரிப்புகள், கழிவறை விரிப்புகள், மேஜை விரிப்புகள், சுவர் அலங்காரங்கள் போன்ற உள்நாட்டுத் தயாரிப்புகள் மற்றும் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. ஈரோடு மாவட்டம் தென்னிந்தியாவின் மொத்த மற்றும் சில்லறை ஆயத்த ஆடைகளுக்கான முக்கிய ஜவுளி சந்தையாக உள்ளது.

தோல்பொருட்கள்

  • இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 30% -யும், தோல் பொருட்கள் தயாரிப்பில் 70 சதவீதத்தையும் தமிழகம் கொண்டுள்ளது. நூற்றுக்கணக்கான தோல் பொருட்கள் மற்றும் பதனிடும் தொழிற்சாலைகள் வேலூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அமைந்துள்ளன.
  • ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு தோல் பொருட்கள் கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது.

மின்னணு சாதனங்கள்

மின்னணு சாதனங்கள் உற்பத்தியானது தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக உள்ளது. பல பன்னாட்டு நிறுவனங்கள், தெற்காசியாவின் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையமாக சென்னையைத் தேர்ந்தெடுத்துள்ளன.

வாகன உற்பத்தி

‘ஆசியாவின் டெட்ராய்ட்’ என்றழைக்கப்படும் சென்னை மிகப்பெரிய அளவிலான வாகன உதிரி பாகங்கள் தயாரிப்புக்கான இடமாக விளங்குகிறது. தமிழ்நாடு, இந்திய அளவில் வாகன மற்றும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் 28 சதவீதமும், லாரிகளுக்கான உற்பத்தியில் 19 சதவீதமும், பயணியர் கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியில் 18 சதவீதமும் கொண்டுள்ளது.

சிமெண்ட் தொழிற்சாலை

சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாடு இந்திய அளவில் 3 இடத்தில் உள்ளது (ஆந்திர பிரதேசம் – முதலிடம், ராஜஸ்தான் – இரண்டாமிடம்). 2018-ல் இந்தியாவில் உள்ள 10 மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த ராம்கோ சிமெண்ட் மற்றும் இந்தியா சிமெண்ட் ஆகிய நிறுவனங்களை இடம் பெற்றுள்ளன. மொத்த சிமெண்ட் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் 21 அலகுகளுடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும், 35 அலகுடன் ஆந்திர பிரதேசம் முதலிடத்திலும் உள்ளது.

பட்டாசுப் பொருட்கள்

சிவகாசி நகரம் அச்சுத் தொழில், பட்டாசுப் பொருட்கள் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியில் தலைமையாகச் செயல்படுகிறது. ஜவஹர்லால் நேரு அவர்களால் ‘குட்டி ஜப்பான்’ என்று சிவகாசி அழைக்கப்பட்டது. இந்திய பட்டாசு உற்பத்தியில் 80% சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் அச்சுத் துறைத் தீர்வுகளில் 60% சிவகாசியிலிருந்தே பெறப்படுகிறது.

பிற தொழிற்சாலைகள்

  • உலக அளவில் மின்பொருட்கள் தயாரிப்பில் மிகப்பெரிய ஒன்றான BHEL நிறுவனம் திருச்சி மற்றும் ராணிப்பேட்டையில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. கரூரில் அமைந்துள்ல தமிழக அரசின் தமிழ்நாடு காகிதத் தயாரிப்பு நிறுவனம் உலகின் மிகப் பெரிய காகித் தயாரிப்பு நிறுவனமாகும்.
  • இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தியில் அரியலூர், விருதுநகர், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் தயாரிப்பு நிறுவனங்களைக் கொண்டு தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. சேலத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் செழிப்பான கனிமவளம் கொண்டுள்ளன.
  • இந்தியாவின் மிகப்பெரிய எஃகு உருக்காலை நிறுவனமான SAIL தனது எஃகு ஆலையை சேலத்தில் நிறுவியுள்ளது.
  • இந்தியாவின் மோட்டார் மற்றும் பம்புகளுக்கான தேவையில் மூன்றில் இரண்டு பங்கினை வழங்குவதால் கோயம்புத்தூர் ‘காற்றழுத்த விசைக் குழாய் நகரம்’ (Pump city) என்றழைக்கப்படுகிறது.
  • தங்க ஆபரணங்கள், மாவு அரைப்பான் இயந்திரம் மற்றும் வாகன உதிரிப்பாகம் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிப்பதால் “கோயம்புத்தூர் மாவு அரைப்பான் இயந்திரத்திற்கான” புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.
  • தூத்துக்குசி தமிழ்நாட்டின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படுகிறது. மாநிலத்தில் வேதிப்பொருள் உற்பத்தியில் தூத்துக்குடி முதலிடம் வகிக்கிறது. இந்திய உப்பு உற்பத்தியில் தூத்துக்குடி முதலிடம் வகிக்கிறது.
  • இந்திய உப்பு உற்பத்தியில் 30 சதவீதமும், மாநிலத்தின் உப்பு உற்பத்தியில் 70 சதவீதமும் தூத்துக்குடியில் உற்பத்தியாகிறது.

குறு சிறு நடுத்தர நிறுவனங்கள்

  • MSMED – 2006 சட்டத்தின்படி, குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
  • குறு , சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை, கட்டமைப்பு மற்றும் தளவாடப் பொருட்கள் மீதான முதலீட்டின் அடிப்படையில் (நிலம் மற்றும் கட்டிடம் நீங்கலாக) உற்பத்தி நிறுவனம் , பணிகள் நிறுவனம் என வகைப்படுத்தப்படுகின்றன.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், தமிழ்நாடு 15.07 சதவீதத்துடன் தேசியளவில் முதலிடத்தில் உள்ளது. 6.89 இலட்சம் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இவை 8000, வகையான பொருட்களை 32,008 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தி செய்கின்றன.
  • இவை அனைத்து துறைகளைச் சார்ந்த பெருன்பாலான பொருட்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றுள் முக்கியமானவை பொறியியல் பொருட்கள் , மின் சாதன பொருட்கள், வேதிப் பொருட்கள், இரும்பு, காகிதம், தீப்பெட்டி, நெசவு மற்றும் ஆடைகள் போன்றவையாகும்.
  • ரூபாய் 1,68,331 கோடி முதலீட்டில், பதிவு செய்யப்பட்ட 15.61 இலட்சம் தொழிலமுனைவோருடன் 99.7 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்குகிறது.

(ஆதாரம் – MSMEs திட்ட குறிப்பு 2017-18)

ஆற்றல்

பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல மின்னாற்றலை உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு பிற தென் மாநிலங்களைவிட முன்னணியில் உள்ளது.

தென் மாநிலங்களில் நிறுவப்பட்ட மின்பயன்பாட்டுத் திறன்

மாநிலம் அலகுகள் தரம்
தமிழ்நாடு 26,865 MW I
கர்நாடகா 18,641 MW II
ஆந்திரா 17,289 MW III
தெலுங்கானா 12,691 MW IV
கேரளா 4,141 MW V
மொத்தம் 79,627 MW

(Souce : Central Electricity Authority, Ministry of Power, Government of India. Retrieved Jan.2017.)

  • நிறுவப்பட்ட திறன் அளவில் தமிழ்நாடு பிற மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது. முப்பந்தல் காற்றாலை மையம், கிராம மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் ஒரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரமாக உள்ளது.
  • கோயம்புத்தூர், பொள்ளாச்சி, தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை போன்ற இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகள் தவிர நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிதாக காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • இது இந்தியாவின் 2% மின் தேவைகளை நிறைவு செய்கிறது. இது இந்தியாவின் காற்றாலை உற்பத்தியில் பாதியளவு ஆகும். (2000 மெகாவாட்கள்).

அணுமின் ஆற்றல்

  • கல்பாக்கம், கூடங்குளம் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணுமின் நிலையங்களாகும்.

அணுமின் ஆற்றல்

அலகு ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள திறன் அளவு
கூடங்குளம் 1834 MW ( 2 X 917)
கல்பாக்கம் 470 MW ( 2 X 235)

(ஆதாரம் : மத்திய மின் துறை அமைச்சகம் – ஜனவரி – 2017 அறிக்கை)

வெப்ப ஆற்றல்

  • தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் வெப்ப ஆற்றலில் அதிக அளவு அத்திப்பட்டு (வட சென்னை), எண்ணூர், மேட்டூர், நெய்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களிலிருந்து பெறப்படுகிறது.
  • டீசலை அடிப்படையாகக் கொண்ட அனல்மின் உற்பத்தியில் , தமிழ்நாடு தேசிய உற்பத்தியில் 34% க்கும் மேலாக உற்பத்தி செய்து முதலிடம் வகிக்கிறது.

பல்வேறு முறைகளில் தயாரிக்கப்படும் ஆற்றல் அளவுகள் கீழேயுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வெப்ப ஆற்றல்

ஆதாரம் மில்லியன் அலகுகள் சதவீதம்
அனல் 13304 49.52
புனல் 2203 8.20
அணு 986 3.67
பிற (காற்று சூரிய ஒளி) 10372 38.61
மொத்தம் 26385 100.00

(ஆதாரம்: மத்திய மின் துறை அமைச்சகம் –ஜனவரி – 2017 அறிக்கை)

புனல் மின்சாரம்

  • தமிழ்நாட்டில் 20-க்கு மேற்பட்ட புனல் மின் நிலையங்கள் உள்ளது. அவற்றுள் முக்கியமானவையாக குந்தா, மேட்டூர், மரவகண்டி, பார்சன் வேலி ஆகியன முக்கியமானவையாகும்.

சூரிய சக்தி மின்சாரம்

கீழ்க்கண்ட அட்டவணையிலுள்ளபடி தமிழ்நாடு சூரிய மின் உற்பத்தியில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.

சூரிய சக்தி மின்சாரம்

தர வரிசை மாநிலம் மொத்த திறன் 31 ஜனவரி 2017 (மெகா வாட்)
1 தமிழ்நாடு 1590.97
2 ராஜஸ்தான் 1317.64
3 குஜராத் 1159.76
4 தெலுங்கானா 1073.41
5 ஆந்திரா 979.65

(ஆதாரம் : MNRE லிருந்து பெறப்பட்ட விபரம்)

தென்தமிழகம் சூரிய மின்சக்தி திட்டங்களைச் செயல்படுத்த உகந்த மண்டலமாகக் கருதப்படுகிறது.

காற்றாலை மின்சாரம்

  • இந்திய அளவில் தமிழ்நாடு அதிகளவு காற்று வழி மின்சாரம் தயாரிக்கும் கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாக உள்ளது. மேலும் கடற்கரை காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்க ஏதுவான இடமாக திருநெல்வேலி, தூத்துக்குடியின் தெற்குப்பகுதி மற்றும் இராமேஸ்வரம் ஆகிய இடங்கள் உள்ளன.

பணிகள் துறை

வங்கியியல், காப்பீடு, சக்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை முதன்மைத் துறையான பணிகள் துறையாகும்.

வங்கியியல்

  • தமிழ்நாட்டில் உள்ள மொத்த வங்கிச் சேவையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 52 சதவீத பங்குகளுடன் (5337 கிளைகள்) பணியாற்றுகின்றன. தனியார் வணிக வங்கிகள் 30% (3060 கிளைகள்), பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்கள் 13% (1364 கிளைகள்) வட்டார கிராமிய வங்கிகள் 5% (537 கிளைகள்) மற்றும் 2 அயல்நாட்டு வங்கிக் கிளைகளும் சேவையில் உள்ளன.
  • தமிழ்நாட்டு வங்கிகளின் மொத்த வைப்பு நிதியானது ஒவ்வொரு ஆண்டும் 14.32% உயர்வுடன் மார்ச் 2017-ல் 6,65,068.59 கோடியை எட்டியுள்ளது. கடன் தொகை ஒவ்வொரு ஆண்டும் 13.5% அதிகரித்து மார்ச் -2017-ல் ரூ. 6,95,500.31 கோடியாக எட்டியுள்ளது.
  • முதன்மைத் துறைகளுக்கான கடன் தொகையானது 45.5 சதவீதமும் (தேசிய சராசரி 40%) வேளாண்மைத் துறைகளுக்கான கடன் வழங்கல் அளவ் மார்ச்-2017-ல் 19.81% (தேசிய சராசரி 18%) உள்ளது.
  • தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் இந்தியாவிலேயே அதிக கடன் வைப்பு வீதமாக 119.15 விழுக்காட்டைக் கொண்டுள்ளது. இந்திய அளவில் இதன் வீதம் 77.5 விழுக்காடு மட்டுமே உள்ளது.

கல்வி

அ) பள்ளிக் கல்வி

நிகர மாணவர் சேர்க்கை வீதம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. நிதிஆயோக் அறிக்கையின்படி 2015-16-ல் துவக்க நிலையளவில் நிகர மாணவர் சேர்க்கை வீதம் தமிழ்நாடு (89.24- சதவீதம்) கேரளாவை (79.94- சதவீதம்) மற்றும் தேசிய சராசரியைவிட (74.74-சதவீதம்) இது உலக அளவில் 59 சதவீதமாகவும் உள்ளது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி புள்ளிவிபரம் 2014-15

பள்ளிகளின் எண்ணிக்கை துவக்கப் பள்ளிகள் 35,414
நடுநிலைப் பள்ளிகள் 9,708
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 12,911

(ஆதாரம்: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் 2016-17)

  • தொடக்கப் பள்ளிக்கான மொத்த மாணவர் சேர்க்கை வீதம் 118.8% (வகுப்பு 1-5) ஆகவும், நடுநிலைப் பள்ளிகளுக்கான மொத்த மாணவர் சேர்க்கை வீதம் 112.3% (வகுப்பு 6-8) ஆகவும், உயர்நிலைப் பள்ளிகளுக்கான மொத்த மாணவர் சேர்க்கை வீதம் 62.7% (வகுப்பு 9-10) ஆகவும், மேல்நிலை பள்ளிகளுக்கான மொத்த மாணவர் சேர்க்கை வீதம் 49.26% (வகுப்பு 11-12) ஆகவும் உள்ளது.

ஆ) உயர்கல்வி

உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு தொடர்ந்து பிற மாநிலங்களைக் காட்டிலும் முதன்மை பெற்று முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை வீதமான (GER) 46.9% அனைத்து மாநிலங்களின் தேசிய சராசரியை விட அதிகமாகவுள்ளது.

உயர்கல்வியில் மொத்த சேர்க்கை வீதம்

மாநிலம் 2015 – 16 2016 – 17
தமிழ்நாடு 44.3 46.9
மகாராஷ்டிரா 29.9 30.2
உத்திரப்பிரதேசம் 24.5 24.9
ஒடிசா 19.6 21.0
பீகார் 14.3 14.4
மொத்த இந்தியா 24.5 25.2

(ஆதாரம் : அனைத்து இந்திய உயர் கல்விக்கான விவபரம் – மனிதவள மேம்பாட்டு மந்திரிசபையின் ஜனவரி – 2018 அறிக்கை)

  • தமிழ்நாட்டில் 59 பல்கலைக் கழகங்களும், 40 மருத்துவக் கல்லூரிகளும், 517 பொறியியல் கல்லூரிகளும், 2260 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும்., 447 பல் தொழில்நுட்ப கல்லூரிகளும், 20 பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து 4 இலட்சம் பொறியியல் மற்றும் பல் தொழில்நுட்பம் பயின்ற மாணவர்கள் வெளியேறுகின்றனர், இது இந்திய அளவில் உச்சபட்ச அளவாகும்.

கல்விக் கடன்கள்

  • 2013-14 லிருந்து 2015-16 வரை பொதுத்துறை வங்கிகள் முக்கியத் துறைகளுக்கு வழங்கும் கடன்களின் அளவுகளில் 20.8 சதவீதத்தை கல்விக் கடனாக வழங்கியுள்ளது.
  • ஆந்திர பிரதேசம் 11.2 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், 10.2 சதவீதத்துடன் மகாராஷ்டிரா மூன்றாமிடத்திலும் உள்ளது.
  • 18 மாநிலங்களில் மொத்த கடன்களில் 1 சதவீத கடனையே கல்விக்கு அளித்துள்ளது. தமிழ்நாட்டில் தான் இந்திய அளவில் அதிக பயனாளிகள் உள்ளனர்.
  • இதே காலகட்டத்தில் தனியார் வங்கிக: கேரளாவில் 37.8 சதவீதமும், தமிழ்நாட்டில் 24.8 சதவீதமும் வழங்கியுள்ளது. மொத்த தனியார் வங்கி வழங்கியுள்ள கல்வி கடன்களில் கர்நாடகம் மற்றும் கேரளா 60 சதவீத அளவிற்கு வழங்கியுள்ளது.
  • நாடு முழுமைக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ள தனியார் வங்கிகள் மொத்த கல்விக் கடனில் 1 சதவீத அளவே வழங்கியுள்ளது.

உடல்நலம்

தமிழ்நாடு மூன்றடுக்கு உடல்நல அடிப்படைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. அவை மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக நல மையங்கள் ஆகியனவாகும். மார்ச் 2015-ல் தமிழகத்தில் 34 மாவட்ட மருத்துவமனைகளும், 229 துணை மருத்துவமனைகளும், 1254 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 7555 துணை நிலையங்களும், 313 சமூக நல மையங்களும் உள்ளன.

தொலைதொடர்பு

  • இந்தியாவில் இணையத்தின் பயன்பாட்டின் மகாராஷ்டிரா மாநில முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 29.47 பில்லியன் இணையத்தில் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் உள்ளன.
  • மார்ச் 2016ம் ஆண்டு அரசு புள்ளி விவரப்படி இந்தியாவில் மொத்தம் 342.65 மில்லியன் இணையதள சந்தாதாரர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 28.01 மில்லியன் சந்தாதாரர்களும் அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 24.87 மில்லியன், கர்நாடகாவில் 22.63 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.

போக்குவரத்து

தமிழ்நாடு மிகச்சிறந்த மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதி கொண்டது. அதன் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கிறது. நாட்டிலுள்ள நகரங்கள் கிராமப்புறங்கள் மற்றும் வேளாண் அங்காடிப் பகுதிகளை இணைக்கக்கூடியத் தரமான விரிவுபடுத்தப்பட்ட சாலைப் போக்குவரத்தைக் கொண்டுள்ளது. மாநில முதலீட்டுற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

அ) சாலை வசதி

  • மாநிலத்தில் 28 தேசிய நெடுஞ்சாலைகள் 5036 கி.மீ தொலைவினை இணைக்கின்றன. தங்க நாற்கரத் திட்டம் முனையமாக நமது மாநிலம் உள்ளது.
  • சென்னையிலுள்ள கோயம்பேடு மற்றும் ஈரோடு மத்தியப் பேருந்து நிலையங்கள் நம் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய மற்றும் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையங்களாகும்.
  • தமிழ்நாட்டின் மொத்த சாலை நீளம் 1,67,000 கி.மீ. ஆகும்,
  • இதில் 60,628 கி.மீ. தொலைவு தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகிறது. பொது மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் 20% திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாலை போக்குவரத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஆ. இரயில் போக்குவரத்து

தமிழ்நாடு நன்கு மேம்படுத்தப்பட்ட இருப்புப் பாதை அமைப்பைக் கொண்டுள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தென்னக இரயில்வே தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆந்திராவின் சில பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் 6693 கி.மீ. ஆகும். 690 இரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இதன் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கின்றது. சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகியவை முக்கிய தொடர் வண்டி நிலையங்களாகும். சென்னையில் மேம்படுத்தப்பட்ட அதி விரைவு மெட்ரோ இரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான முயற்சி மே 2017 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இ. வான்வழிப் போக்குவரத்து

தமிழ்நாட்டில் நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. மும்பை மற்றும் தில்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய சர்வதேச விமான நிலையமாக சென்னை சிறந்து விளங்குகிறது. கோயம்புத்தூர் மதுரை , திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களிலும் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. தூத்துக்குடி, சேலம் மற்றும் மதுரை ஆகிய இடங்களிலுள்ள உள்நாட்டு விமான நிலையங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளோடு இணைக்கப்பட்டுள்ளன. இத்துறையின் தொடர் நடவடிக்கையின் மூலம் பயணிகள் போக்குவரத்தும், சரக்கு போக்குவரத்தும் உன்னத வளர்ச்சி அடைந்து உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 18% வளர்கிறது.

ஈ. துறைமுகங்கள்

சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களாகும். நாகப்பட்டினம் நடுத்தர துறைமுகமாகும். மேலும் 23 சிறு துறைமுகங்களும் உள்ளன. இவை தற்போது ஆண்டுதோறும் 73 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாளக் கூடிய திறன் கொண்டவை. (இந்திய அளவில் 24 சதவீதம்). அனைத்து சிறிய துறைமுகங்களும், தமிழ்நாடு கடல்சார் மையத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகம் கன்டெயினர்களைக் கையாளும் திறன் கொண்ட இந்தியாவின் இரண்டாவது முக்கிய செயற்கைத் துறைமுகமாகும். இது 4,00,000 வாகனங்களைக் கையாளக்கூடிய அர்ப்பணிப்பு முனையமாக தற்போது மேம்படுத்தப்பட்டு அனைத்து விதமான நிலக்கரி மற்றும் கனிமப் போக்குவரத்துகளைக் கையாள்கிறது.

சுற்றுலா

முற்காலத்திலிருந்தே தமிழ்நாடு ஒரு சிறந்த சுற்றுலா மையமாகத் திகழ்ந்து வருகிறது. நவீன காலங்களில் நமது மாநிலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் முதன்மைப் புகலிடமாக விளங்குகிறது. தமிழ்நாடு அரசு மேற்பார்வையில் இயங்கும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுத்துறை (TTDC) தமிழ்நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்துகிறது. இந்திய மாநிலங்களில் 25-கோடி சுற்றுலாப் பயணிகளுடன் (2013) தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இத்துறையின் ஆண்டு சராசரி வளர்ச்சி 16 சதவீதமாக உள்ளது. தோராயமாக 28 இலட்சம் வெளிநாட்டுப்பயணிகள் மற்றும் 11 கோடி உள்நாட்டுப் பயணிகள் தமிழகத்திற்கு வருகை புரிகின்றனர்.

வறுமை மற்றும் வேலையின்மை

தேசிய அளவில் வேலைவாய்ப்பின்மை அளவின் சராசரி 50 (1000-ம் பேருக்கு) ஆக உள்ளது. தமிழ்நாட்டில் 1000-க்கு 42 பேர் வேலையில்லாமல் உள்ளனர். தேசிய அளவில் 22வது இடத்திலுள்ளது. பலவகையான வேலையின்மை பொருளாதார நிலைக்கேற்ப உள்ளது. அவற்றை முழுமையான அறிவதன் மூலமே வேலைவாய்ப்பைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாடு இந்தியாவின் வளமான மாநிலங்களில் ஒன்றாகும். 1994 லிருந்து நமது மாநிலம் வறுமையில் நிலையான சரிவை சந்தித்து வருகிறது. பல மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் வறுமையின் அளவு குறைவாக உள்ளது. சேவைத்துறை வளர்ச்சியின் விளைவாக 2005க்குப் பிறகு இந்தியாவின் மிக வேகமாக வளரும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது.

தொகுப்புரை

தமிழக பொருளாதாரம் வளமான இயற்கை வளங்களைக் கொண்ட மாநிலமாக இல்லாத போதும் வேளாண் துறை வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பான முன்னேற்றத்தைக் கொண்டுள்ளது. வங்கி, கல்வி, போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறைகளில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு நலக் குறியீடு, கல்வி மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளது. வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குதலில் நல்ல முன்னேற்றம் கொண்டுள்ளது. இருப்பினும் இந்தியா முழுமைக்கும் தமிழ்நாடு உட்பட சில பணிகளை இன்னும் செய்யவேண்டியுள்ளது. பெண் சிசு கொலை, குடிசைப் பகுதியில் வாழும் மக்கள், சாலையோரம் படுத்திருப்போர், யாசகம் கேட்போர், சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் போன்றவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். மேற்கண்டவற்றை சரிசெய்யாமல் முன்னேற்றம் என்பது அர்த்தமற்றதாகி விடும்.

பிற்சேர்க்கை

தமிழ்நாட்டு மக்கள் தொகை வளர்ச்சி (2011 கணக்கெடுப்பின்படி)
மொத்த மக்கள் தொகை 72138958
ஆண்கள் 36158871
பெண்கள் 35980087
தோராய பிறப்பு விகிதம் (ஆயிரத்துக்கு) 15.7
தோராய பிறப்பு விகிதம் (ஆயிரத்துக்கு) 7.4
வளர்ச்சி விகிதம் (ஆயிரத்துக்கு) 8.3
அதிக மக்கள் தொகையுடைய மாவட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவாரூர்
குறைவான மக்கள் தொகையுடைய மாவட்டங்கள் பெரம்பலூர், நீலகிரி, அரியலூர், தேனி
மக்கள் தொகை அடர்த்தி (சதுர கிலோ மீட்டருக்கு) 555 (2011) – 480 (2001)
மிக அதிக அடர்த்தி சென்னை (26903), கன்னியாகுமரி (1106)
குறைவான அடர்த்தி உள்ள மாவட்டம் நீலகரி (288), திருச்சிராப்பள்ளி (602)
பாலின விகிதம் (1000 ஆண்டுகளுக்கு) 995 பெண்கள் (2011), 987 பெண்கள் (2011)
அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டங்கள் நீலகிரி (1041 பெண்கள்)

கன்னியாகுமரி (1031 பெண்கள்)

நாகப்பட்டினம் (1025 பெண்கள்)

குறைவான பாலின விகிதம் உடைய மாவட்டங்கள் தேனி (900 பெண்கள்), தர்மபுரி (946 பெண்கள்)
குழந்தை பாலின விகிதம் (0-6 வயதுக்குட்பட்ட) 946 பெண் குழந்தைகள் (2011)

942 பெண் குழந்தைகள் (2001)

அதிக குழந்தை பாலின விகிதம் கொண்ட மாவட்டங்கள் நீலகிரி (985), கன்னியாகுமரி (964)
குறைவான குழந்தை பாலின விகிதம் கொண்ட மாவட்டங்கள் கடலூர் (896), அரியலூர் (897)
எழுத்தறிவு விகிதம் 80.33% – 73.45%
ஆண் எழுத்தறிவு விகிதம் 86.81% – 82.33%
பெண் எழுத்தறிவி விகிதம் 73.86% -64.55%
அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டங்கள் கன்னியாகுமரி (92.14%) சென்னை (90.33%)
அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டங்கள் தருமபுரி (64.71%), அரியலூர் (71.99%)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!