உள்ளாட்சி அரசாங்கங்கள் Notes 11th Political Science
11th Political Science Lesson 12 Notes in Tamil
உள்ளாட்சி அரசாங்கங்கள்
உள்ளாட்சி அரசாங்கத்தின் பொருள், தன்மை மற்றும் முக்கியத்துவம்
உள்ளாட்சி அரசாங்கம் என்பது, நம்முடைய கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் மக்களுக்கான சேவைகள் மற்றும் வசதிகளை அளிப்பதற்கும், உள்ளூர் பிரச்சனைகளை நிர்வகிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும். உள்ளாட்சி அரசாங்கங்கள் கிராமம், நகரம், பெருநகரங்கள் மற்றும் மாநகரங்கள் என ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் செயல்படுபவை ஆகும். ஒரு கிராமம் அல்லது நகரத்தில் உள்ள மக்களையும் அரசாங்கத்தையும் இணைக்கும் விதமாக உள்ளாட்சி அரசாங்கங்கள் செயல்படுகின்றன. மக்களுக்கு சாலை பழுது, சாலையில் நீர் தேங்கியிருத்தல், தெரு விளக்குகள் எரியாமை போன்ற அடிப்படை பிரச்சனைகளின்போதும் , குளங்களை உருவாக்குகல், பூங்காக்களை அமைத்தல் போன்ற அடிப்படை தேவைகளின்போதும் உள்ளாட்சி அரசாங்கங்கள் அவற்றை மேற்கொள்கின்றன. அவசர காலங்களின் போதும், உள்ளூரில் பிறப்பு மற்றும் இறப்பு நிகழும்போதும் அவற்றை கையாளும் பொறுப்பும் உள்ளாட்சி அரசாங்களுக்கு உண்டு. ஒரு பகுதியில் இருப்பிட சான்றிதழ் மற்றும் பிறப்பு, இறப்பு, வருமான சான்றிதழ்களை வழங்கும் ஓர் அமைப்பாகவும் உள்ளாட்சி அரசாங்கங்கள் செயல்படுகின்றன.
மக்களின் அன்றாட தேவைகளை கையாளும் பொறுப்புடைய ஒரு முழுமையான அமைப்பாக உள்ளாட்சி அரசாங்கங்கள் உள்ளன. நம் அரசாங்க நிர்வாக கட்டமைப்பில் இறுதி நிலை அலகாக உள்ளாட்சி அரசாங்கங்கள் உள்ளன. உள்ளாட்சி அரசாங்கமானது ஒரு சபையை கொண்டுள்ளது. அதில் உள்ள உறுப்பினர்கள் அதன் கிராமம் அல்லது நகரத்தின் மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர் ஆவர். அவர்கள் மக்களின் பிரச்சனைகளை மக்கள் சார்பாக சபையில் விவாதித்து தீர்வுகளை காண வேண்டிய பொறுப்புடையவர்கள் ஆவர். அந்த சபையின் உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகள் அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அந்தந்த நாட்டு சட்டப்படி, மக்களால் தேர்தெடுக்கப்படுகின்றனர்.
உள்ளாட்சி அரசாங்கங்கள் என்பவை பிரதிநிதித்துவ அமைப்புகள், அவை சபையில் மக்களை பிரதிநிதிப்படுத்துகின்றன. உள்ளாட்சி அரசாங்கங்கள் அவைகளின் பகுதிக்குட்பட்ட மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கவும், அவற்றிற்கான தீர்வுகளை காணவும், மேலும் அப்பிரச்சனைகளை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் சட்டப்படியான உரிமை பெற்ற அமைப்புகளாகும். உள்ளாட்சி அரசாங்கங்கள் மக்களாட்சி நடைமுறையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், சபையில் கொண்டு வரப்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் விவாதம், பேச்சுவார்த்தை மூலமே அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தீர்வு எட்டப்பட வேண்டும். சபை உறுப்பினர்கள் இந்தியாவின் அரசமைப்பிற்கு உட்பட்டு விவாதிக்கவும் முடிவெடுக்கவும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சி அரசாங்கங்களின் முக்கியத்துவமே, அது கையாளுகின்ற பிரச்சனைகளின் தன்மையில் உள்ளது. இப்பிரச்சனைகள் அனைத்துமே உள்ளூர் பிரச்சனைகளாகும். உள்ளாட்சி அரசாங்கங்கள் கையாளுகின்ற பிரச்சனைகளின் உள்ளூர் தன்மையும், அவற்றின் பல்வேறு வகைகளும் மத்திய, மாநில அரசாங்கங்களினால் கையாள முடியாதவை ஆகும். ஏனெனில் உள்ளூர் பிரச்சனைகள் முழுமையாக, அப்பகுதிக்கேயுரிய தனித்தன்மையுடன் இருக்கும். அவற்றை உள்ளூர் மக்களை கொண்ட அமைப்பின் மூலமே சிறப்பாக கையாண்டு பொருத்தமான தீர்வை எட்டமுடியும். அவ்வாறு இல்லாமல் பொருத்தமற்ற தீர்வு எட்டப்படுமானால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு, அது மக்களின் சுமையை மீண்டும் அதிகரிக்கும்.
எனவே, உள்ளாட்சி அரசாங்கங்கள் என்பவை மக்களின் உள்ளூர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும். உள்ளாட்சி அரசாங்கங்கள் பொதுவாக , தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்டுள்ளன. அவர்கள் உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் உள்ளூர் பிரச்சனைகளை சபையில் விவாதித்து அதற்கு தீர்வு காண்கின்றனர். உள்ளாட்சி அரசாங்கங்கள், அரசின் திட்டங்களும் வளங்களும் அடித்தட்டு மக்களை சென்றடைய முக்கிய வழிகளாக விளக்குகின்றன. இன்று எந்தவொரு நாடும் உள்ளாட்சி அரசாங்கங்களை புறக்கணிக்க முடியாது, ஏனெனில் உள்ளூர் பிரச்சனைகளே இப்போது சர்வதேச பிரச்சனைகளாக மாறுகின்றன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்டது.
உள்ளாட்சி அரசாங்கங்களின் வகைகள்
உள்ளாட்சி அரசாங்கங்கள் கிராமங்கள் மற்றும் நகரங்கள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகைப்பாடானது அப்பகுதி மக்களின் தொழில் (விவசாயம் சார்ந்த அல்லது விவசாயம் சாராத) அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த தொழிலை அடிப்படையாகக் கொண்ட பகுதி என்பது, அப்பகுதியின் பெரும்பான்மை மக்களோ அல்லது அனைத்து மக்களுமோ விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களான கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை போன்ற தொழில்களை செய்வர். ஆனால் நகரப் பகுதிகளில் மக்கள் வர்த்தகம் மற்றும் அதுசார்ந்த தொழில்களில் ஈடுபடுவர். நகரப் பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரமானது வர்த்தகம் மற்றும் அது சார்ந்த நிறுவனங்களையும் தனியார் மற்றும் அரசாங்கத்தின் நிர்வாக அலுவலங்களில் உள்ள வேலைவாய்ப்பையும் அடிப்படையாக கொண்டுள்ளது. நகரப் பகுதிகள் என்பவை வெளிஉலகத்திற்கும் கிராமப்பகுதிகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகின்றன. கிராமப்பகுதிகளில் ஏற்படுத்தப்படும் அரசாங்கங்கள் ஊரக உள்ளாட்சி அரசாங்கங்கள் என்றும் நகர பகுதிகளில் உருவாக்கப்படும் அரசாங்கங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்தியாவில், கிராம உள்ளாட்சி அரசாங்கங்கள் ‘பஞ்சாயத்து ராஜ்’ என்ற பொது பெயரில் அழைக்கப்படுகின்றன. அரசாங்கங்கள் பஞ்சாயத்து செய்கிற (ஆழ்ந்து விவாதித்தல் மற்றும் பேச்சு வார்த்தை நடத்துதல்) இடமாக கருத்தப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்கள் அவைகளின் பொருளாதார மற்றும் அரசியல் அடிப்படையை கொண்டு நகராட்சிகள், மாநகராட்சிகள், நகரியம், பாளையவாரியம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய நகரங்கள் நகராட்சிகளாகவும் பெரு நகரங்கள் மாநகராட்சிகள் எனவும், தொழில் நகரங்கள் நகரியங்கள் எனவும் , ராணுவ அமைப்புகள் உள்ள இடங்கள் பாளைய வாரியங்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சிகள் என்பவை, பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட, சேவைகளையும் , வசதிகளையும் வழங்க விரிவான நிர்வாக அமைப்பு தேவைப்படுகிற பெரு நகரங்களில் ஏற்படுத்தப்படுகின்றன.
கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் இருந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் மக்களின் இடப்பெயர்ச்சி ஒரு நகரத்தை, ஒரு பெருநகரமாக மாற்றுகிறது.
நகரட்சிகள் என்பவை மக்கள் தொகை பத்து லட்சத்திற்கு குறைவாக உள்ள சிறு நகரப்பகுதிகளில் ஏற்படுத்தப்படுகின்றன. நகராட்சிகளும் வகை -1, வகை -2 என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகைப்பாடானது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆய்வு செய்யப்பட்டு கால இடைவெளிகளில் ஆய்வு கால இடைவெளிகளில் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் நகராட்சிகளின் தர நிர்ணய, செய்யப்படுகின்றது.
புதிய தொழிற்சாலைகள் அமைகின்ற இடங்களில் நகரியங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அங்குள்ள குடிமக்கள் விவசாயம் சார்ந்த தொழில்களிலிருந்து விவசாயம் சாரா தொழில்களுக்கு மாறுகின்றனர். இராணுவ, பயிற்சி மையங்கள் அமைந்திருக்க கூடிய இடங்களில், இராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் இடங்களொல் பாளைய வாரியங்கள் ஏற்படுத்தப்படுகின்றா. கிராமப்புற உள்ளாட்சி அரசாங்கங்களும், நகர்ப்புற அரசாங்கங்களும் , அரசாங்க படிநிலையில் இறுதி நிலையில் உள்ளவை ஆகும்.
உலகின் பல்வேறு நாடுகளில் ஊரக மற்றும் நகர்ப்புற அரசாங்கங்கள் வெவ்வேறு விதங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் உள்ளாட்சி அரசாங்கங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் எல்லா நாடுகளிலும் ஒன்றே. உள்ளாட்சி அரசாங்கங்கள் என்பவை உள்ளூர் மக்களுக்காக, உள்ளூரிலிருந்து கிடைக்கும் வருவாயையே பிரதானமாக கொண்டு ஏற்படுத்தப்பட்டவை.
அரசாங்க படி நிலையில், மேல் நிலையில் உள்ள அரசாங்கம் உள்ளாட்சி அமைப்புகளை கண்காணித்தல் மற்றும் மேற்பார்வையிடுதல் பணியை மேற்கொள்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வகைகள்
- மாநகராட்சிகள்
- நகராட்சிகள்
- நகரியங்கள்
- பேரூராட்சிகள்
- பாளைய வாரியங்கள்
முழுமையான சுகாதாரத்தை நோக்கி
- ஒன்றிணைந்த குறைந்த செலவினத்திலான சுகாதார திட்டத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மூலம் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை 2010-ம் ஆண்டுகளுக்குள் நீக்கும் நோக்கத்தில் உலர் கழிவறைகளை அமைக்க மானியங்களை உயர்த்தி வழங்குதல்
- ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் அனைத்து குடிசைப்பகுதிகளுக்கும் அடிப்படை தேவைகளை (குடிநீர், துப்புரவு, கழிவு நீரகற்றல், மின்சாரம், ஆரோக்கியம், சமூகப்பாதுகாப்பு மற்றும் வீடு வழங்குதல்). (நகர்ப்புற ஏழைமக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குதல் மேலும் ஒருங்கிணைந்த வீட்டுவசதி மற்றும் வளர்ச்சி திட்டம்) மேலும் ‘ராஜீவ் ஆவாஸ் யோஜனா’ திட்டம் மூலம் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்குதல்.
- ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் வடிகால் , சுகாதாரம் மற்றும் உலர் கழிவு மேலாண்மை வசதிகளை மேம்படுத்துதல் (சிறு மற்றும் நடுத்தர நகரங்களுக்கான கட்டமைப்பு, ஆளுகை மற்றும் நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சி திட்டம்).
- முழுமையான சுகாதார கொள்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
பல்வேறு நாடுகளில் உள்ளாட்சி அரசாங்கங்கள்
உள்ளாட்சி அரசாங்கங்கள் மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து காணப்படும் பழமையான ஒன்றாகும். பல்வேறு உலக நாடுகளில் அவர்களின் நவீன அரசுகளே உள்ளாட்சி அரசாங்கங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள உள்ளாட்சி அரசாங்கங்கள் தொடர்பாக அறிய தொடங்கினால், அனைத்து நாடுகளிலும், அவை சிறிய நாடோ அல்லது பெரிய நாடோ , வளர்ச்சியடைந்த நாடோ அல்லது வளர்ச்சியுறா நாடோ ஏதோ ஒரு வகையில் உள்ளாட்சி அரசாங்கங்கள் செயல்படுவதும் அதன் மூலம் பொது சேவைகள் மற்றும் வசதிகள் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைவதையும் காணலாம்.
ஆனால் கட்டமைப்பு, அதிகாரம், பணி வரம்பு, நிதி ஆதாரங்கள் போன்றவற்றில் அவை பெருமளவு வேறுபடுகின்றன. பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களே தங்களில் முயற்சியால் மையப்படுத்தப்பட்டு இருந்த அதிகாரத்தை பரவலாக்கம் செய்கின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளில் நிதி பகிர்வு, காவல் பணி வரம்பு, போக்குவரத்து, மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகம் போன்றவை இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சனைகளாகவே உள்ளன. ஆனால் வளரும் நாடுகளில் மத்திய அரசாங்கங்கள் அதிகாரத்தையும், நிதி ஆதாரங்களையும் மையப்படுத்தும் முயற்சியை மேற்கொள்கின்றன. இந்தியாவில், மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களுக்கு நிர்வாக மற்றும் நிதி தொடர்பான அதிகாரங்களை மேலும் பகிர்ந்தளிக்க மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் எப்போதுமே இருந்து வருகிறது.
இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி
இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கங்களின் தோற்றத்தை பற்றி ஆராய்ந்தால், அவை கிறித்து பிறப்பதற்கு முன்பே (பொ.ஆ.மு.) இருந்ததை அறியலாம். கி.மு. (பொ.ஆ.மு) 600 முதல் கி.பி. (பொ.ஆ.) 600 வரை உலகில் பல குடியரசுகள் தோன்றுவதும் மறைவதுமாக இருந்தன. இந்த காலத்தில் தான் ஜைன மதத்தை தோற்றுவுத்த மகாவீரர், புத்த மதத்தை தோற்றுவித்த கௌதம புத்தர் போன்றோர் தோன்றினர். புத்த மற்றும் ஜைன இலக்கியங்களில் கிராமங்கள் அளவு மற்றும் வாழும் முறையால் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
புத்தர் மற்றும் மகாவீரர் ஏற்படுத்திய மத அமைப்புகளில் மக்களாட்சி நடைமுறையில் முடிவுகள் எடுக்கப்பட்டன. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் அப்போதைய கிராம நிர்வாகம் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மௌரியர்களின் ஆட்சி காலத்துல் கிராமமும், மாவட்டமுமே நிர்வாக அலகுகளாக இருந்தன.
தென்னிந்திய தீபகற்பத்தில் கிறித்துவின் காலத்திற்கு முன்பே உள்ளாட்சி அரசாங்கங்கள் செயல்பட்டு வந்துள்ளன. இந்த வரலாற்று காலம் முந்தைய சோழர் காலம், களப்பிரர்கள் காலம் மற்றும் பிந்தைய சோழர் காலம், விஜய நகர பேரரசின் தோற்றம், இஸ்லாமியர்கள், மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயரின் வருகை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய சோழர் காலத்திலும், களப்பிரர்கள் காலத்திலும் இருந்த உள்ளாட்சி அரசாங்கங்கள் பற்றி சிறிதளவே ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆனால், தென்னிந்தியாவின் கடைக்கோடியில் ஆட்சி புரிந்த பாண்டியர்கள் காலத்திலும், தென் மத்திய இந்தியாவில் ஆட்சி புரிந்த பல்லவர் காலத்திலும் உள்ளாட்சி அரசாங்கங்கள் செயல்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் சோழர்கள் காலத்தில் உள்ளாட்சி அரசாங்கங்கள் நன்கு மேம்பட்ட நிலையில் செயல்பட்டு வந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட்ட, முதலாம் பராந்தக சோழன் கால கல்வெட்டுகள் (கி.பி. (பொ.ஆ.) 919 – கி.பி. (பொ.ஆ) 922) உள்ளாட்சி அரசாங்கங்கள் பற்றி விரிவாக விளக்குகின்றன. ஒவ்வோர் ஊரிலும் ஒரு சபை இருந்ததாகவும், அதில் அவ்வூரின் அனைத்து ஆண்களும் உறுப்பினராக இருந்ததையும், அவர்கள் அனைத்து பொதுப்பிரச்சனைகளிலும் முடிவெடுத்ததையும் இக்கல்வெட்டுகள் மூலமாக அறிய முடிகீறது. இந்த சபைகள் “ஊர்” மற்றும் “மகா சபை” என்று இரண்டு விதங்களாக அழைக்கப்பட்டன. மேலும் மூன்றாவது வகையாக நகரம் என்று வியாபார மையங்களும், நான்காவது நாடு என்றும் அழைக்கப்பட்டன. இவற்றில் நாடு என்பது கிராமங்கள் மற்றும் மற்ற பகுதிகளை உள்ளடக்கிய அமைப்பாகவும், நகரம் என்பது நகரப்பகுதிகளை உள்ளடக்கிய ஓர் அமைப்பாகவும் இருந்தன. பொதுவாக பார்த்தோமேயானால் , 9-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலங்களில் உள்ளாட்சி அரசாங்கங்கள் செயல்பட்டமைக்கான சான்றுகள் குறைவாகவே கிடைத்துள்ளன. “நாடு” மற்றும் “நகரம்” என்ற இரு அமைப்புகளுமே, நிலங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள், கோவில்கள் மற்றும் நீர்ப்பாசனங்களை நிர்வகித்தல், வரி வசூலித்தல், பெரிய மூலதனம் தேவைப்படுகின்ற பணிகளுக்கு கடன் வழங்குதல் மற்றும் தொண்டு நிறுவனங்களை நிர்வகித்தல் போன்ற பணிகளை செய்கின்றன. “ஊர்” மற்றும் “மகாசபை” என்ற இரு அமைப்புகளும் அரசனின் கட்டளைகளை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு துணைபுரிந்தன.
முதலாம் ராஜராஜ சோழன், வீர நாராயண சதுர்வேதி மங்கலம் என்ற ஊரின் மகாசபைக்கு நட்டுக்கு துரோகமிழைத்த துரோகிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதை அறிய முடிகிறது. சர் சார்லஸ் மெட்கேப், சர் ஜார்ஜ் பேர்டு வுட் மற்றும் இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கங்கள் வளைமையுடன் செயல்பட்டு வந்ததை குறிப்பிடுகின்றனர். ஆனால் மிக விரிவான முறையில் அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வந்தது என்பதில் சில வரலாற்றாசிரியர்களுக்கு சந்தேகம் உள்ளது.
மொகலாயர்கள் காலத்தில் (கி.பி. (பொ.ஆ) 1500 முதல் கி.பி, (பொ.ஆ.) 1777) அரசுகள் மாறினாலும், மத்திய அரசுக்கும் உள்ளூர் நிர்வாகத்துக்குமிடையேயான உறவில் அடிப்படை விதிகள் மாறவில்லை, மொகலாய பேரரசு அதன் உச்சத்தில் இருந்தபோது, அது பல மாகாணங்களாக (பராக்னாஸ்0 பிரிக்கப்பட்டிருந்தது, மாகாணங்களில் உட்பிரிவுகள் (சர்க்கார்) ஏற்படுத்தப்பட்டிருந்தன. சர்க்கார்கள் பல கிராமங்களை கொண்ட தொகுதிகளாக (பராக்காஸ்) பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு படிநிலையிலும் அரசாங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதற்கென அதிகாரிகள் பேரரசால் நியமிக்கப்பட்டிருந்தனர். கிராமப்பகுதிகளில் மொகலாய பேரரசின் இறுதிக் காலங்களில், உள்ளாட்சி அமைப்புகள் வீழ்ச்சியடையத் தொடங்கின. ஆனால் அவை பற்பல தாக்குதல்களை கண்டாலும், தொடர்ந்து இயங்கின. பிளாசிப்போருக்கு பின் (கி.பி. (பொ.ஆ) 1757), ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, வங்காள நவாபிடமிருந்து நில வரி வசூல் உரிமைகளை பெற்றது. இதுவே, இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வழிகோலியது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாகாண தலை நகரங்களான கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை தவிர மற்ற கிராம மற்றும் நகர வியாபார மையங்கள் எந்த ஒரு கட்டுப்பாட்டின் கீழும், மேற்பார்வையின் கீழும் இயங்கவில்லை. மாவட்ட நிர்வாகமானது மாவட்ட ஆட்சியரின் கீழ் இயங்கியது. ஆங்கிலேயர் ஆட்சியில் மாவட்ட நிர்வாகம் முக்கியமானதொரு நிர்வாக அமைப்பாகவும், நாட்டிம் ஊரக பகுதிகள் அனைத்தும் அதன் கட்டுப்பாட்டிலும் இருந்தன.
கல்கத்தா (கொல்கத்தா) பம்பாய் (மும்பை) மற்றும் மெட்ராஸ் (சென்னை) நகரங்களில், மாநகராட்சி நிர்வாகத்தை ஏற்படுத்தியது ஆங்கிலேயர் ஆட்சியின் ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. 1882-ஆம் ஆண்டு ரிப்பன் பிரபு ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தவும் அதை மேற்பார்வையிட மாவட்ட அளவில் வரையங்களை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார்.
ரிப்பன் பிரபுவின் தீர்மானம், உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலும் அதிகாரிகளல்லாதோரை கொண்டிருக்க வேண்டும் எனவும், அவர்கள் முடிந்தவரை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் கூறியது. ஏறத்தாழ 500 உள்ளாட்சி அமைப்புகள் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரிகளல்லாதோரை கொண்டு தொடங்கப்பட்டன. அவர்களின் பெயர்களை மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்தார். மாவட்ட வாரியங்களின் பணிகள் 1909-ஆம் ஆண்டு வரை காவல், கல்வி மற்றும் கிராம துப்புரவு முதலியவையாக மட்டுமே இருந்தன.
ரிப்பன் பிரபுவால் ஏற்படுத்தப்பட்ட உள்ளாட்சி அரசாங்கங்கள் பலரால் விமர்சிக்கப்பட்டன. ஆங்கிலேய அரசாங்கம் 1907-ஆம் ஆண்டு மத்திய அரசிற்கும், மாகாண மற்றும் அதன் கீழ் உள்ள அமைப்புகளுக்குமிடையே நிர்வாக மற்றும் நிதி உறவுகளைப் பற்றி விசாரிப்பதற்கு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது. அப்போதைய நிர்வாக அமைப்பை நிர்வாக பகிர்வின் மூலம் மேம்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் இந்திய அரசாங்க சட்டம் 1919-ன் படி மாகாண அரசாங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் எனும் அம்சம் அரசின் இரட்டை ஆட்சி முறையின் கீழ் ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் கிராம உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை 1926-ஆம் ஆண்டில் 1417 ஆகவும் அதிகரித்தது. இங்கு மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. அவை மாவட்ட வட்டார மற்றும் கிராம அளவில் உள்ளன. மாவட்ட மற்றும் வட்டார அமைப்புகளில் 1923-ம் ஆண்டு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. மாகாணங்களின் இருந்த அலுவலரல்லாத தலைவர்கள் மாற்றப்பட்டு அலுவலர்கள் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்ட நிர்வாக அமைப்புகளில் நீதிக்கட்சியின் உறுப்பினர்கள் 1927ஆம் ஆண்டில் 545 பேர்கள் நியமிக்கப்பட்டனர். 1937-ல் முத 1947 ஆம் ஆண்டு வரை தேச சுதந்திர பிரச்சனை உட்பட பல பிரச்சனைகளை உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்தனர்.
இந்தியா 1947-ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த பின்பு, உள்ளாட்சி அரசாங்களுக்கு புத்துயிரூட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் பரவலாக்கப்பட்ட அதிகார அமைப்பு இருத்தல் வேண்டும். கிராமப்புற பஞ்சாயத்துக்கு ஆளுகையில் பொறுப்புகள் அளிக்கப்பட வேண்டும் (தன்னிறைவு பெற்ற கிராம சுயராஜ்ஜியம்) என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார்.
ஷர்மா நாராயணன் என்பவர் சுதந்திர இந்தியாவுக்கான காந்திய அரசியலமைப்பு தொடர்பான ஒரு திட்ட வரைபடத்தை தயாரித்தார். அதில் குடிமக்களின் சமூக, பொருளாதார அரசியல் நடவடிக்கைகளுக்கான அடிப்படை அமைப்பாக பஞ்சாயத்துகள் இருக்கும்படி அமைத்தார்.
கிராம பஞ்சாயத்துகள் குடிமை, அரசியல் மற்றும் நிர்வாகப்பணிகளைப் போல் உற்பத்தியை ஒருங்கிணைத்தல் மற்றும் வளங்களின் விநியோகம் தொடரொஆன பொருளாதார பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த பொருளாதார நடவடிக்கையின் மூலமே கிராம சமூகங்கள் தன்னிறைவு அடைவதுடன் தங்களது அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து கோள்ள முடியும்.
இதனால் நவம்பர் 26, 1949-ஆம் நாள் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசமைப்பின் பகுதி நான்கில் அமைந்துள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் , விதி 40 ஏற்படுத்தப்பட்டது. “அரசு கிராம பஞ்சாயத்துகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவைகள் சுய ஆட்சியின் அலகுகளாக பணிபுரிய தேவையான அதிகாரங்களையும், திறனையும் வழங்கவேண்டும்” என அரசியலமைப்பு பிரிவு 40 கூறுகிறது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் விதிகளின் படி செயல்படுவதற்காக 1952-ஆம் ஆண்டு பேரார்வத்துடன் சமூக மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கமாக மக்களின் கூட்டு முயற்சியின் மூலம் கிராமங்களின் சமூக பொருளாதார மாற்றத்தை உறுதி செய்வதாகும். இதற்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பையும், நிதி பங்களிப்பையும் அரசு செய்யும். இந்த திட்டமானது, தேசிய விரிவாக்க பணியாக பல்வேறு ஊரக பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறிவை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் ஊரக கைவினை தொழில்களில் புகுத்துவது இதன் நோக்கமாக இருந்தது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலமான 19560-ல் (1956 – 61) கிராம பஞ்சாயத்துகள் அமைப்பு ரீதியாக உயர்நிலைகளில் உள்ள மக்கள் நிர்வாக அமைப்புகளிடன் இணைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. 1957-ஆம் ஆண்டு , திட்ட வடிவமைப்பு குழு ஒன்றை, பல்வந்த்ராய் மேத்தா தலைமையில் மத்திய அரசாங்கம் அமைத்தது. மேத்தா குழு முக்கியமான இரண்டு பரிந்துரைகளை கூறியது அவை: நிர்வாக பரவலாக்கப்பட வேண்டும் மற்றும் நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இரண்டாவதாக, ஊரக வளர்ச்சி வட்டங்கள் மக்களாட்சி நிர்வாக அலகுகளாக மாற்றப்பட வேண்டும். அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கோண்ட ஊராட்சி ஒன்றியம் மூலம் அப்பகுதியில் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மேலும் மாவட்ட அளவில் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அளவிலான சுகாதாரம் , விவசாயம், கால்நடை, கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரை உறுப்பினர்களாக கொண்ட மாவட்ட மேம்பாட்டு குழு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இக்குழு பரிந்துரைத்தது. இந்த மாவட்ட அமைப்பு ஒரு ஆலோசனை வழங்கும் அமைப்பாக மட்டுமே செயல்படும். மேத்தா குழுவின் பரிந்துரைகள் பெரும்பாலும் அனைவராலும் வரவேற்கப்பட்டன. பல்வேறு மாநிலங்களில் பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள் இயற்றப்பட்டன. ஏறத்தாழ 90 சதவீத இந்திய மக்கள் 1960 வாக்கில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டனர்.
பஞ்சாயத்து அமைப்புகளின் செயல்பாடுகளை பற்றி ஆராயவும், அதனை செம்மைப்படுத்தவும் இந்திய அரசாங்கம், 1977-ஆம் ஆண்டு அசோக் மேத்தா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழு, பஞ்சாயத் ராஜ் அமைப்பு மக்களாட்சி பண்புகளைக் கொண்ட ஒரு உள்ளாட்சி அமைப்பாக மாறவேண்டும், மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மேலும், அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றது. எனவே, இது தனது முதல் பரிந்துரையாக மாவட்ட பஞ்சாயத்து நேரிடையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும் என்றது. ஒரு தற்கால தீர்வாக, வட்டார அளவில் பஞ்சாயத்து ஒன்றியம் நீடிக்க பரிந்துரைத்தது. இது உள்ளாட்சி அரசாங்கத்தின் ஒரு அலகாக இல்லாமல், மாவட்ட பஞ்சாயத்திற்கு ஒரு இடைநிலை ஆதரவு கரமாக செயல்பட வேண்டும் என்றது. அசோக் மேத்தா குழு, 1978-ஆம் ஆண்டு தனது பரிந்துரையை சமர்பித்தது. இதன் எதிரொலியாக கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநில பஞ்சாயத்து சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வந்தன.
உள்ளாட்சி அரசாங்கங்களௌ வலுப்படுத்த 1978 முதல் 1986 வரை , சி.எச்.அனுமந்த்ராவ் குழு, ஜி.வி.கே. ராவ் குழு மற்றும் எல்.எம்.சிங்வி குழு போன்ற பல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவையாவுமே அசோக் மேத்தா குழுவின் பரிந்துரைகளில் சிறுசிறு மாற்றங்களையே பரிந்துரைத்தன. ராஜீவ் காந்தி அரசாங்கத்தால் 1989-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 64-வது மற்றும் 65-வது சட்ட திருத்தம் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். ஆனால், இது மாநிலங்களைவில் நிறைவேற்றப்படவில்லை.
பின்பு, பல்வேறு முயற்சிகளின் விளைவாக 1992-ஆம் ஆண்டு , முந்தைய பல முயற்சிகளின் சிறப்பம்சங்களையும் உள்ளடக்கி, அரசாங்கம் 73வது மற்றும் 74வது சட்டத்திருத்த மசோதாவை 1992-ல் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி இறுதியில் அது 1993-ஆம் ஆண்டு இரு அவைகளிலும் நிறைவேற்றியது.
இந்த 73-வது சட்ட திருத்தமும் 74-வது சட்ட திருத்தமும் இந்திய அரசமைப்பில் பகுதி IX மற்றும் IX(A) என்ற இரு பகுதிகளை இணைத்தது. அதில் அரசியல் சட்ட பிரிவுகள் 243 முதல் 243(ZG) வரை உள்ளது.
- இரட்டை ஆட்சி முறை மூலமாக நிர்வாக துறைகள் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட தூறைகள் எனவும், மாகாண அரசுகளுக்கு மாற்றி தரப்பட்ட துறைகள் எனவும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. காவல், சட்டம் ஒழுங்கு, நிதி போன்ற துறைகள் ஒதுக்கப்பட்ட தூறைகள் எனப்படும். அவை ஆளுநரின் வசம் இருக்கும். கல்வி மற்றும் பிற துறைகள் மாற்றித் தரப்பட்ட துறைகளாகும். அவை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் இருக்கும்.
73வது அரசமைப்புச் சட்ட திருத்தம் – அமலாக்கம் மற்றும் அதன் விளைவுகள்
மக்கள்தொகை இருபது லட்சத்துக்கும் மிகாமல் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கிராமம், ஒன்றியம் மற்றும் மாவட்டத்தைக் கொண்ட மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என 73-வது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட சட்ட பிரிவு 243(B) கூறுகிறது. மாவட்டம் என்பது சாதாரணமாக வழக்கில் உள்ள ஒரு மாநிலத்தின் மாவட்டத்தை குறித்தாலும், கிராம மற்றும் ஒன்றிய பஞ்சாயத்துகளின் எல்லை பற்றி இந்த சட்டம் திருத்தம் குறிப்பிடவில்லை. ஒரு கிராம பஞ்சாயத்தின் எல்லையை மாநில ஆளுநர் ஒரு அறிக்கை மூலமாக தீர்மானிக்கலாம். அது ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். இதைப் போலவே இடைநிலையில் உள்ள பஞ்சாயத்தான ஒன்றிய பஞ்சாயத்தையும் ஆளுநர் தன் அறிக்கை மூலம் தீர்மானிக்கிறார். இது மாநில அரசுக்கு பஞ்சாயத்துகளை அமைப்பதிலும், பஞ்சாயத்து ஒன்றியங்களை அமைப்பதிலும் முழு சுதந்திரத்தை வழங்குகிறது.
அரசமைப்பில் ஒரு புதிய அட்டவணையாக 11-வது அட்டவணை சேர்க்கப்பட்டது. அது கட்டாய பணிகள் மற்றும் விருப்ப பணிகளை பஞ்சாயத்தின் மூன்றடுக்குகளுக்கும் தருகிறது.
அ) கிராம அளவில் கிராம பஞ்சாயத்து உள்ளது.
ஆ) மாவட்ட அளவில் மாவட்ட பஞ்சாயத்து உள்ளது.
இ) 20 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்களில் கிராம மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு இடைப்பட்ட அளவில் இடைநிலை பஞ்சாயத்துக்கள் உள்ளன.
ஒரு பஞ்சாயத்தில் உள்ள அனைத்து இடங்களும், தொகுதி மக்களின் நேரிடையான தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டும். ஒரு கிராம பஞ்சாயத்தின் வாக்காளர்களை கொண்ட அமைப்பு “கிராம சபை” என்று அழைக்கப்படுகிறது. ஒரு கிராம பஞ்சாயத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் கிராம சபை உறுப்பினர்கள் ஆவர்.
ஒவ்வொரு பஞ்சாயத்திலும், பஞ்சாயத்து தலைவர் அம்மாநில சட்டப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த சட்டப்படியே கிராம பஞ்சாயத்தின் தலைவருக்கும், ஒண்றிய பஞ்சாயத்தின் தலைவருக்கும் மாவட்ட பஞ்சாயத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. அது போலவே சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிராம பஞ்சாயத்துக்கு மேல் உள்ள பஞ்சாயத்துகளில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சட்ட திருத்தம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்றிய பஞ்சாயத்திலும், மாவட்ட பஞ்சாயத்திலும் பங்கு பெறுகிற வாய்ப்பை வழங்குகிறது. மேலும் , பஞ்சாயத்தின் மூன்றடுக்குகளிலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கிறது. மேலும் , பெண்களுக்கு மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பஞ்சாயத்துகளின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட என்ன தகுதிகள் தேவையோ, அதே தகுதிகள் தான் ஒருவர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தேவைப்படும் தகுதிகள் ஆகும். பஞ்சாயத்தின் பொறுப்புகள் எவை என்று தெளிவாகவும் விரிவாகவும் அரசமைப்பின் பதினோராவது அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய நிதிக்குழு போலவே, மாநில நிதிக்குழு ஒன்று உள்ளாட்சி அரசாங்கங்களுக்கு மாநில நிதியை பகிர்ந்து கொடுப்பதற்கும், அதில் பரிந்துரைகளை கொடுப்பதற்கும் அரசமைப்பு சட்டத் திருத்தத்தினால் ஏற்படுத்தப்பட்டது.
73-வது சட்டத்திருத்தத்தின் விளைவாக உச்ச நீதிமன்றம் அனைத்து உள்ளாட்சி அதிகாரிகளும் அரசாகவோ அல்லது அரசாங்கமாகவோ தான் கருதப்பட்டு அவ்வாறே நடத்தப்பட வேண்டும் என்று கூறியது. இதன் விளைவாக பஞ்சாயத்துகள் சட்டப்பூர்வ தன்மை பெறுகின்றன. அவை அரசின் கருவியாக அங்கீகரிக்கப்பட்டு மக்களின் பங்களிப்பு அமைப்புகளை கீழ்நிலைகளில் உருவாக்குகின்றன. அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகளான மாநில தேர்தல் ஆணையம், மாநில நிதிக்குழு போன்றவை பஞ்சாயத்துகளுக்கு நிலைத்தன்மையையும், நிரந்தர தன்மையையும் அளிக்கின்றன. அடிப்படை சேவைகளான குடிநீர், ஊரக துப்புரவு, சுகாதாரம், தொடக்க கல்வி போன்றவை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதான பணியாக இருந்த போதிலும் பெரும்பாலான பஞ்சாயத்துகள், மாநில அரசின் திட்டங்களை அமல்படுத்தும் நிறுவனங்களாகவே நடத்தப்படுகின்றன.
மாவட்ட ஆட்சியரின் கீழ் செயல்படும் மாவட்ட நிர்வாகமானது, உத்தரவுகளை நிறைவேற்றும் நிர்வாக அமைப்பாக உள்ளது. இதில் கிடைமட்ட ஒருங்கிணைப்பு கீழ்நிலையில் இல்லாமல் இயங்கும் படியாக நம்முடைய மக்காளாட்சி கட்டமைப்பு ஊள்ளது.
உள்ளாட்சி நிர்வாகமானது மேலும் பொறுப்புடனும், வெளிப்படை தன்மையுடனும் மற்றும் மக்களுக்கு பதிலளிக்கும் கடமை உணர்வுடனும் செயல்பட மத்திய மற்றும் மாநில அரசுகளில் மட்டுமல்லாது மாவட்ட மற்றும் கிராம அளவிலும் பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அவைகளுக்குள் நியாயமான வகையில் பணிகள் பிரிக்கப்பட்டிக்க வேண்டும்.
பதினோராவது அட்டவணை (பிரிவு 243G)
- விவசாயம் மற்றும் விவசாய விரிவாக்க பணிகள்
- நில மேம்பாடு, நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்துதல், நிலங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் பேணுதல்
- சிறிய நீர் பாசனங்களை நிர்வகித்தல், நீர் ஆதாரங்களை மேம்படுத்துதல்
- கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் பால் பண்ணை
- மீன் வளம்
- சமூக காடுகள் மற்றும் பண்ணை காடுகள்
- சிறு காடுகளின் மூலமான உற்பத்தி
- சிறு தொழில்கள், உணவு பதப்படுத்தும் தொழில்கள் உட்பட.
- காதி, கிராமம் மற்றும் குடிசைத் தொழில்கள்
- ஊரக வீட்டு வசதி
- குடிநீர்
- எரிபொருள் மற்றும் கால்நடை தீவனம்
- சாலைகள், சிறுபாலங்கள், பெரிய பாலங்கள், படகு, நீர்வழிகள்.
- ஊரக மின்மயமாக்கல் மற்றும் மின் விநியோகம்
- மரபு சாரா எரிசக்தி ஆதாரங்கள்
- வறுமை ஒழிப்பு திட்டங்கள்
- தொடக்க கல்வி மற்றும் மேல் நிலைக் கல்வி
- தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழில் கல்வி
- நூலகங்கள்
- கலாச்சார நடவடிக்கைகள்
- சுகாதாரம் மற்றும் துப்புரவு ; மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட
- குடும்ப நலன்
- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
- சமூக நலம்; மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன நலம் குன்றியோர் நலம் உட்பட
- நலிவடைந்த பிரிவினரின் நலம் குறிப்பாக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்.
- பொது விநியோக முறை
- சமுதாய சொத்துக்களை நிர்வகித்தல்
- இந்தியாவின் 2011-அம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 2,50,000 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
- பஞ்சாயத்து ராஜ் (1959 – 2009)
பொன் விழா ஆண்டு –அக்டோபர் 02, 1959 ஆம் நாள் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் நகவுரில் பஞ்சாயத்து ராஜ்-க்கு அடிக்கல் நாட்டினர். ஊரக இந்தியாவை ஆளவதில் இது ஒரு புரட்சிகரமான படியாகும். கிராமங்களுன் முழுமையான வளர்ச்சி மற்றும் மக்களின் கைகளில் அதிகாரத்தை அளித்தல் என்ற நோக்குடனான இந்த பயணம் அன்று தொடங்கியது.
73-வது அரசமைப்பு சட்ட திருத்தத்தினால் (1991) ஏற்படுத்தப்பட்ட மூன்றடுக்கு பஞ்சாயத் ராஜ் அமைப்பு
- மாவட்ட பஞ்சாயத்துகள் (தேர்ந்தெடுக்கப்பட்டோர் மற்றும் நியமிக்கப்பட்டோர்)
- ஊராட்சி ஒன்றிய குழு (தேர்ந்தெடுக்கப்பட்டோர்)
- கிராம பஞ்சாயத்து (தேர்ந்தெடுக்கப்பட்டோர்)
- கிராம சபை (ஒரு கிராமத்தின் அனைத்து வாக்காளர்களும்) (ஆலோசனை அமைப்பு)
74-வது அரசமைப்புச் சட்ட திருத்தம் – அமலாக்கம் மற்றும் அதன் விளைவுகள்
74-வது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் படி நகர பகுதிகள் என்பவை வெவ்வேறு விதமான அளவுகள், குணம் மற்றும் முக்கியத்துவம் கொண்ட நகரங்களையும் பெரு நகரங்களையும் உள்ளடக்கியவை. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் , நகரியங்கள் மற்றும் பாளைய வாரியங்கள் என்பவை பொதுவான நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்க வகைகளாக உள்ளன. இதில் முதல் நான்கு வகைகளும் மாநில நகராட்சி சட்டங்களின் அடிப்படையிலும், பாளைய வாரியம் மட்டும் மத்திய சட்டமான, பாளைய வாரியங்கள் சட்டம், 1924-ன் அடிப்படையிலும் செயல்படுகின்றன.
அரசமைப்பின் 74-வது அரசமைப்பு சட்ட திருத்தம் 1922-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, ஜூன் 1993-ஆம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. இட்ந்ஹ 1992ஆம் ஆண்டு சட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் ஓர் ஆண்டுகாலம் கால அவகாசம் வழங்கியது. அதற்குள் ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் தங்கள் சட்டங்களை தேவையான அளவி திருத்துவதன் மூலமோ மாற்றுவதன் மூலமே மத்திய சட்டத்தின் விதிகளை தங்கள் சட்டங்களில் ஏற்படுத்தி அதன் மூலம் நகர உள்ளாட்சி அரசாங்கங்களை அமைத்திட வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது. உதாரணமாக பஞ்சாப் நகராட்சிகள் சட்டம் 1911 மாற்றப்பட்டு பஞ்சாப் நகராட்சிகள் மசோதா 1998 கோண்டு வரப்பட்டதை கூறலாம்.
74-வது அரசமைப்பு சட்ட திருத்தத்தில் நகர உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றடுக்கு முறை பரிந்திரைக்கப்பட்டது. அவை பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள். இவற்றைப் பற்றி விரிவாக காணலாம்.
- கிராம சபை கூட்டங்கள் ஆண்டிற்கு நான்கு முறை ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 உழைப்பாளர் தினம் , ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் நடத்தப்படுகிறது.
பேரூராட்சிகள்
ஒருபகுதி, ஊரக பகுதியிலிருந்து நகர பகுதியாக உயரக்கூடிய நிலையில் இருந்தால், அப்பகுதி பேரூராட்சி என அழைக்கப்படும். இது நகராட்சிக்கும், ஊராட்சிக்கும் இடைப்பட்ட ஓர் நிலையாகும். இதன் மக்கள் தொகை 5,000-க்கு மேலும் 15,000-க்கு மிகாமலும் இருக்கும். அதன் வருவாய் ஈட்டலும் வருவாய் ஆதரங்களும் ஊராட்சிக்கென்று அரசு நிர்ணயித்துள்ள வரம்பை விட அதிகரித்து இருக்கும். ஒரு பேரூராட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 3க்கு குறையாமலும் அதே சமயத்தில் 15-ஐ விட மிகாமலும் அம்மாநில சட்டம் கூறும் எண்ணிக்கையில் இருக்கும். இந்த பேரூராட்சி எந்த சட்டமன்ற தொகுதியின் எல்லைக்குள் வருகிறதோ அந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில அரசால் நியமிக்கப்படும் நகராட்சி நிர்வாகத்தில் அனுபவம் பெற்ற அல்லது சிறப்பு நிபுணத்துவமுடைய இரண்டு உறுப்பினர்கள் பேரூராட்சியின் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர்களாக இருப்பர். இந்த நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பேரூராட்சி கூட்டங்களில் கலந்து கொண்டாலும் வாக்களிக்கும் உரிமை கிடையாது. ஒரு பேரூராட்சியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கும்.
இஎத பேரூராட்சியின் பகுதிகள் பல சிறு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு ,அவை வார்டுகள் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வார்டும் ஒரு வார்டு உறுப்பினரை தேர்ந்தெடுக்கும், அந்த பேரூராட்சியின் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் எண்ணிக்கைக்கும் ஒட்டு மொத்த மக்கள் தொகை எண்ணிக்கைக்கும் உள்ள விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பட்டியலினத்தவருக்கும் பழங்குடியினருக்கும் வார்டுகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்படுகீறது. மேலும் ஒட்டு மொத்த வார்டுகள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது,.
பேரூராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒருவரை தலைவராகவும், மற்றொருவரை துணைத்தலைவராகவும் பேரூராட்சியின் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த கூட்டத்தை துணை ஆணையர் கூட்டுகிறார். ஒவ்வொரு பேரூராட்சிக்கும் கட்டாயம் செய்ய வேண்டிய பணிகளாக குடிநீர் வழங்கல், வடிகால், தூய்மை போன்றவை உள்ளன. ஒவ்வொரு பேரூராட்சிகளுக்கும் அரசு ஒரு செயல் அதிகாரியை நியமிக்கிறது.
நகராட்சி
மக்கள் தொகை 15,000-க்கு மேலும் மூன்று இலட்சத்திற்கு கீழும் உள்ள சிறு நகரப் பகுதிகளில் நகராட்சிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதேபோல் அதன் வரி வருவாய், மற்ற வருவாய்கள் அரசு நிர்ணயித்த அளவுக்குள் இருத்தல் வேண்டும். இதை அவ்வப்போது அந்தந்த மாநிலங்கள் தீர்மானிக்கும்.
நகராட்சி நிலை | மக்கள் தொகை |
வகையினம் அ | ஒரு லட்சமும் அதற்கு மேலும் |
வகையினம் ஆ | 50,000 முதல் 1 லட்சம் வரை |
வகையினம் இ | 50,000 க்கு கீழ் |
நகராட்சியின் வகையினம் அ-ல் 20 எண்ணிக்கைக்கும் குறையாமலும், 50 எண்ணிக்கைக்கு மிகாமலும் தேர்ந்தெடிக்கப்பட்ட உறுப்பினர்கள் இருப்பர். அதேபோல் வகையினம் ஆ-ல் 15 முதல் 30 வரை, வகையினம் இ-ல் 10 முதல் 15 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் இருப்பர். சட்ட மன்ற தொகுதி எல்லைக்குள் வருகின்ற நகராட்சிகளில், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவி வழி உறுப்பினராக நகராட்சியில் இருப்பார். மூன்று உறுப்பினர்கள் வரை அரசாங்கம் நகர சபைக்கு நியமிக்கலாம். தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கு பெற்று வாக்களிக்க முடியாது. நகராட்சி உறுப்பினர்கள் மக்களால் ரகசிய வாக்கெடுப்பு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஒட்டுமொத்த நகராட்சி பகுதியும், எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமோ அத்தனை வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் நகராட்சி எல்லைக்குள் உள்ளவர்களே பொதுவாக நகராட்சியின் வாக்காளர்களாக எடுத்துக் கொள்ளப்படுவர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அக்கட்சியின் வேட்பாளருக்கு வழங்கப்படும்.
தேர்தல் முடிவுகள் வெளியான 14 நாட்களுக்குள் துணை ஆணையர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க வகை செய்ய வேண்டும். நகர பஞ்சாயத்துகளைப் பொறுத்தவரையிலும் ஓர் நகரப் பகுதியில் உள்ள பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் அடிப்படையிலே தனி தொகுதிகள் நகர பஞ்சாயத்துகளில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மேலும் கூடுதலாக பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினப் பெண்கள் உட்பட மொத்த இடங்களில் 30 சதவிகிதம் பெண்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகை மூன்று லட்சத்திற்கு குறைவாக உள்ள நகராட்சிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வார்டுகளை இணைத்து வார்டு குழுக்கள் ஏற்படுத்தப்படும். அந்தந்த வார்டுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வார்டு குழு உறுப்பினர்களாக இருப்பர். ஒவ்வொரு நகராட்சியிலும் நிலைக்குழுக்கள் ஏற்படுத்தப்படும். இதில் நகராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர், மேலும் வகையினம் அ-வாக இருந்தால் நான்கு உறுப்பினர்களையும் வகையினம் ஆ-வாக இருந்தால் இரண்டு உறுப்பினர்களையும் நகராட்சி உறுப்பினர்கள் தங்களுக்குள் தேர்ந்தெடுப்பர். இந்த நிலைக்குழுவின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகளாகும். நகராட்சியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள். தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி, சட்டப்படி செயல்படாதபோது , அது பதவியிலிருந்து அகற்றப்படலாம்.
நகர சபை ஆண்டுக்கு ஒரு முறையாவது கூட வேண்டும். அக்கூட்டத்திற்கு நகர சபை தலைவர், அவர் இல்லையெனில் நகர சபை துணைத் தலைவர் தலைமை ஏற்பர். நகர சபைதன் பணிகளை செய்ய பல்வேறு துணை குழுக்களை அமைக்கிறது. இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்களாக இருப்பர். அவர்கள் பிரச்சனைகளை ஆராய்ந்து, தீர்வுக்கான பரிந்துரைகளை அளிப்பர். இந்த குழுக்கள் இரண்டு வகைப்படும். அவை சட்ட பூர்வ குழுக்கள், சட்டப் பூர்வமற்ற குழுக்கள் என இரு வகைப்படும். சிறப்பு தேவைகளுக்காக நகராட்சி அமைப்புகள் சில துணைக் குழுக்களை ஏற்படுத்தலாம்.
நகர்மன்றம்
நகர்மன்ற சட்டத்தின்படி தேர்வு செய்யப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்களில் ஒருவர் நகர்மன்றத் தலைவராக ஒரு மாதத்திற்குள் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்றம் தேர்தல் முடிந்தவுடன் உருவாக்கப்படுகின்றது. இந்த நகர்மன்ற தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. நகர்மன்றம் ஒன்று அல்லது இரண்டு துணை தலைவரையும் தேர்வு செய்கின்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள நகர்மன்றத் தலைவர்கள் பயணப்படி மற்றும் மாத ஊதியம் பெறுகின்றனர்.
நகர்மன்ற கூட்டங்களை கூட்டுவதும், அதற்கு தலைமை வகிப்பதும் நகர் மன்றத்தலைவரின் பணியாகும். மேலும் தவறு செய்யும் நகர்மன்ற உறுப்பினர் மேல் ஒழுங்கு நடவடிக்கையையும் எடுக்கிறார். நகர் மன்றத்தின் முதன்மை பேச்சாளர் நகர்மன்றத் தலைவர் ஆவர், அரசுடன் தகவல் தொடர்பும் மற்றும் அரசு விழாக்களில் பங்கு கொள்வதும் இவருடைய பணியாகும்.
ஒவ்வொரு நகர்மன்றத்திற்கும் ஒரு நிர்வாக அலுவலர் உள்ளார். அவரை மாநில நிர்வாகம் நியமனம் செய்கின்றது. நகர்மன்ற அலுவலர்கள் அந்த நிர்வாக அலுவரின் கீழ் பணிபுரிபவர்களாக உள்ளனர்.
நகர்மன்றத்தை ஆளுகின்ற அமைப்பு நகர்மன்ற குழு ஆகும். இது நகர நிர்வாகத்திற்கு பொறுப்புள்ளது. மேலும் சட்டம் இயற்றுவது, நகர்மன்ற கூட்டத்தின் நேரம், கூட்டத்தை நடத்துவது போன்ற முடிவுகளை நிர்வாக அலுவர் மேற்கோள்கிறார்.
நகர்மன்ற உறுப்பினர்கள் குடிமக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும், பொதுமக்களுடன் தொடர்பில் இருத்தல், நகராட்சி அலுவலர்கள் மீதான பொதுமக்களின் புகார்களை உரிய நிர்வாக தலைமையிடம் முறையிடல், நகர்மன்ற கூட்டத்தொடரில் மக்களின் குறைகளை எடுத்துரைப்பதும் இவர்களின் பணியாகும்.
நகர்மன்றத்தின் பணிகள், பொறுப்புகள் இந்திய அரசமைப்பில் 12-வது அட்டவணையில் கூறப்பட்டுள்ளது. 74-வது அரசமைப்பு சட்டத்திருத்தம் , ஒரு மாவட்டம் முழுமைக்கும் ஒரு வளர்ச்சி திட்ட வரைவை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட திட்டகுழுவை ஏற்படுத்தியது. இதன் மூலம் மாவட்டத்திற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது. உள்ளாட்சி மற்றும் நகராட்சியில் உருவாக்கப்படும் திட்டத்தினை ஒன்று சேர்ப்பது குழுவின் பணி.
1992-ஆம் ஆண்டு சட்டத்தின் படி மாவட்ட திட்டக்குழுவில் மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் நான்கு பங்கிற்கு குறையாமல் இருத்தல் வேண்டும். இந்த உறுப்பினர்களை மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த எண்ணிக்கை அந்த மாவட்டத்தின் நகர்ப்புற மக்கள் தொகை மற்றும் கிராமப்புற மக்கள் தொகையின் விகிதாச்சார அடிப்படையில் அமைந்திருக்கும்.
நகராட்சி அமைப்புகள் தனது பணிகளை மேற்கொள்வதற்கான செலவினங்களுக்கு வரி, கட்டணம் மூலம் வருவாய் ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி அமைப்புகள் தனது நிதி ஆதாரங்களை உயர்த்திகொள்ள பல வகை வரி விதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன (உதாரணம் – நிலவரி, கட்டட வரி , விளம்பரத்தின் மீதான வரி, நெடுஞ்சாலை சுங்க வரி, சாலைவரி முதலானவை). 74-வது சட்ட திருத்தத்தின் படி, மாநில அரசுக்கள் இந்த சட்ட திருத்தத்தை தங்கள் மாநிலய சட்டத்தில் இணைத்துக் கொண்ட ஒரு வருட காலத்திற்குள், மாநில நிதிக் குழுவை அமைத்திடல் வேண்டும்.
அரசமைப்பின் 12-வது அட்டவணை:
நகராட்சியின் அதிகாரமும் –பொறுப்புகளும்
- நகரத் திட்டங்கள், நகரத்தை வடிவமைத்தல்.
- கட்டடங்களை கட்டுதல், நிலத்தை பயன்படுத்துதலை ஒழுங்குமுறைப்படுத்துதல்.
- பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு திட்டமிடல்
- சாலைகள் மற்றும் பாலங்களை பாரமரித்தல்.
- வீட்டு உபயோகத்திற்கு குடிநீர் விநியோகம் செய்தல்
- பொதுச்சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளுதல்.
- தீயணைப்பு பணிகள்.
- நகர்ப்புற காடு மற்றும் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்தல்.
- சமூகத்தில் நலிவடைந்தோர், ஊனமுற்றோர், மனநிலை குன்றியவர்கள் நலன்களை பாதுகாத்தல்.
- குடிசைப்பகுதிகளை மேம்படுத்துதல், தரத்தை உயர்த்துதல்.
- நகர்புற வறுமை ஒழிப்பு.
- பூங்காக்கள், தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற நகர்புற வசதிகளுக்கு ஏற்பாடு செய்தல்.
- கல்வி மற்றும் கலாச்சார அம்சங்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல்.
- இடுகாடு மற்றும் சுடுகாடு மைதானங்களை பராமரித்தல்.
- கால்நடைக்கான குடிநீர் குட்டைகள் அமைத்தல் மிருகவதையை தடைசெய்ர்தல்.
- பிறப்பு, இறப்பு ஆகியவற்றின் பதிவுடன் கூடிய மிக முக்கியமான புள்ளி விவரங்களைச் சேகரித்தல்.
- பேருந்து நிறுத்துமிடங்கள், கழிவறை சாலை விளக்கு போன்ற பொது வசதிகளை செய்து கொடுத்தல்.
- வதைகூடங்கள் மற்றும் தோல் பதனிடும் தொழில்களை ஒழுங்குபடுத்துதல்.
மாநில நிதிக்குழு கீழ்க்கண்டவற்றில் பரிந்துரைகளை அளிக்கலாம்.
- மாநில அரசாங்கத்திற்கும் மாநகராட்சிக்குமிடையே வரி, சுங்க சட்டங்கள் போன்றவற்றின் மூலமாக வரும் வருவாயை பகிர்ந்தளித்தல்.
- அந்த வருவாயை மாநிலத்திலுள்ள நகராட்சியின் பல நிலைகளுக்கும் ஒதுக்கீடு செய்தல்.
- நகராட்சிகளின் வரி வகைகள், சுங்க கட்டணங்கள் போன்றவற்றை நிர்ணயம் செய்தல்.
- மாநிலங்களுக்கு நிதி வழங்க உதவும் மானியங்கள்.
- நகராட்சியின் நிதி நிலைமையை மேம்படுத்த தேவைப்படும் நடவடிக்கைகள்.
ஆனால், யதார்த்தத்தில் , மாநில சட்டம் எந்தெந்த பணிகளை நகராட்சிகள் செய்யலாம் என வரையறுத்திருக்கிறதோ , அந்த பணிகளை மட்டுமே நகராட்சிகள் செய்கின்றன. மாறி வரும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் நாட்டின் தேவைகளின் வழியே காணும்போது நகராட்சியின் பணிகள் மீதான அந்த கட்டுப்பாடு சரியான ஒரு செயல்பாடாக கருத முடியவில்லை. சிறப்பு தேவை செயலாண்மைகளை ஏற்படுத்துவதன் மூலம் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ உள்ளாட்சியின் பணிகளை தனதாக்கி கொள்ளும் மாநில அரசாங்கத்தின் போக்கு அதிகரித்து வருகிறது.
மாநகராட்சி
இந்தியாவில் உள்ள நகர உள்ளாட்சி அமைப்பின் உச்ச அமைப்பு மாநகராட்சி ஆகும். பாராளுமன்ற சட்டத்தின் மூலமாகவும், மாநில சட்டமன்ற மற்றும் யூனியன் பிரதேசத்தின் சட்டம் மூலம் பெரிய நகரங்களில் மாநகராட்சிகள் நிறுவப்படுகிண்ரன. மக்கள்தொகை அடிப்படை மற்றும் வருமான அடிப்படையில் நகரங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் மாநகராட்சி அமைப்புகள் மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டன.
மாநகராட்சி அமைப்பு மக்கள்தொகையின் அளவு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியைக் கொண்டு நகரத்தை நிர்வகிக்கும் தன்மை மற்றும் வயதுவந்தோர் வாக்கு பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர் / பழங்குடியினர் (SC/ST) மக்களுக்கு இட ஒதுக்கீடுடன் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநகராட்சி அமைப்பு ஓர் சட்டப்பூர்வமான நிர்வாக அமைப்பு ஆகும்.
மாநகராட்சி மன்றம் மற்றும் நிலைக்குழுக்கள் இரண்டும் விவாதிக்கும் அமைப்பாகவும் செயலாக்க அமைப்பாகவும் உள்ளன.
நிலைக்குழுவின் பணியானது மாநகராட்சிக்கு துணையாக செயல்படுவது. நகராட்சி ஆணையின் பரிந்துரையின் அடிப்படையில் தான் அனைத்து திட்டங்களும் நகராட்சி குழுவின் நிறைவேற்றப்படுகின்றன. ஆணையர் மாநகராட்சியின் தலைமை நிர்வாகி ஆவார். மாநகராட்சி மன்றத்தால் இயற்றப்படும் கொள்கைகளை செயல்படுத்துவது அவருடைய தலையாயப் பொறுப்பாகும்.
இந்தியாவில் உள்ள மாநகராட்சி அமைப்புகள் மும்பையில் அமைந்த மாநகராட்சி அமைப்பை போன்றவை, மாநகராட்சி அமைப்பின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். 74-வது சட்டத்திருத்தம் வார்டு குழுக்களை ஏற்படுத்தியது. மாநகராட்சியின் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வார்டுகளுக்கு அவை பொறுப்பாக இருக்கும். இதன் தலைவர் ஓராண்டுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அவர் மீண்டும் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம். மாநகராட்சியில் உள்ள வார்டு உறுப்பினர்கள் கண்காணிப்பில் தான் குடிநீர் விநியோகம், துப்புரவுபணி, சாக்கடை இணைப்பு, தெருக்களில் நிறைந்துள்ள நீரை வெளியேற்றுவது மற்றும் திடக்கழிவுகள் சேமிப்பதும், அகற்றுவதும் தெருவிளக்கு அமைத்தல், பூங்காக்கள் அமைத்தலும் போன்றவை நடைபெறுகின்றன.
மாநகராட்சியில் நிலைக்குழு உருவாக்கப்பட்டு அதில் மேயர், துணை மேயர், வார்டு உறுப்பினர்கள் இடம்பெறுவர். மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் தமக்குள்ளிருந்து ஒருவரை துணை மேயராக தேர்ந்தெடுக்கின்றனர். மேயர் நிலைக்குழுவின் தலைவர் ஆவார். மாநகராட்சி குடிநீர் விநியோகம் , கழிவு நீரகற்றல் போன்றவற்றிற்காகவும் குழுக்களை அமைக்கிறது. ஒவ்வொரு குழுவிலும் 3-க்கு குறையாமலும் 5-க்கு மிகாமலும் இருப்பர்.
இந்தக்குழுவின் பதவிக்காலம் ஓராண்டுகள் ஆகும். 74-வது சட்டத்தின் மூலம் நிதி ஆதாரங்கள் மாநகராட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசமைப்பின் 12-வது அட்டவணை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய 18 பணிகளை பட்டியலிட்டுள்ளது. 73-வது சட்டத்திருத்தத்தை போல 74-வது சட்டத்திருத்தத்திலும் நகர திட்டமிடலுக்கு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
நகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பெருநகர எல்லைக்குள் உள்ள பஞ்சாயத்து தலைவர்களின் மொத்த எண்ணிக்கையில் இரண்டில் மூன்று பங்கிற்கும் குறையாத எண்ணிக்கையில், தங்களுக்குள் இக்குழுவின் உறுப்பினர்களை இவர்களே தேர்ந்தெடுக்கின்றனர்.
அனைத்து மாநகராட்சியிலும் மேயர் மற்றும் துணைமேயர் இடம் பெற்றிருப்பார்கள். சில மாநிலங்களில் மேயர் மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படுவர். மாநகராட்சி மேயர் மன்ற கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். அமைதியையும், ஒழுங்கமைப்பையும் நிலை நாட்டுகிறார். மன்ற கூட்டங்களில் தவறாக நடக்கும் உறுப்பினர்களை நீக்கம் செய்யும் அதிகாரத்தையும் மேயர் பெற்றுள்ளார். மன்ற கூட்டங்களில் சமமான வாக்குகள் பெற்றிருக்கும் நிலையில் மேயர் தீர்மான வாக்கை அளிக்கமுடியும். ஆணையர் மாநகராட்சியின் தலைமை நிர்வாகி ஆவார். மாநகராட்சி ஆணையர் இந்திய நிர்வாக பணியை (IAS) சார்ந்தவர் ஆவார். மாநகராட்சி ஆணையரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருப்பது மிகுந்த சர்ச்சைக்குரிய ஒன்றாகவே உள்ளது. மாநகராட்சி ஆணையரின் பதவிக்காலம் மூன்றாண்டுகள். இந்த கால அளவை மாநில அரசாங்கம் விரும்பினால் நீடிக்கலாம். மாநகராட்சி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசின் முழு அதிகாரம் நிறைந்தவர் ஆணையர் ஆவார்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள்
73-வது மற்றும் 74-வது சட்டத்திருத்தத்தின் மூலம் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் உள்ளாட்சி அரசாங்கம் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.
73-வது சட்டத்திருத்தத்தின் மூலம் தமிழக அரசாங்கத்தின் அரசமைப்பு கடமைகளாக, அதிகாரத்துடன் கூடிய கிராம சபைகளை அனைத்து கிராமங்களிலும் உருவாக்குதல். பொதுவான மேற்பார்வை மற்றும் பஞ்சாயத்தின் வருடாந்திர திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் முதலான அதிகாரங்கள் பஞ்சாயத்து, மூன்று அடுக்குகளை கொண்ட உள்ளாட்சி அமைப்பை உருவாக்குதல் மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், கிராம பஞ்சாயத்து போன்றவை உள்ளன.
இந்த உள்ளாட்சி அமைப்பில் பெண்கள், (பட்டியலினத்தவர்/ பழங்குடியினர்) மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடும், வரி விதிக்கும் அதிகாரமும், நிதி ஆதாரம் பெறவும் வழிவகை செய்யப்பட்டன. மேலும் மாநில அரசிடமிருந்து நிதியைப் பெற்று பயன்படுத்துவதற்கு மாநில நிதி ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.
74வது சட்டத்திருத்தத்தின் மூலம் அதிகார பகிர்வு உருவாக்கப்பட்டு வரி விதிக்கும் அதிகாரம், மாநில அரசுடன் வருமான பகிர்வு, சீரான தேர்தல் நடத்துதல், பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்/ பழங்குடியினர் இடஒதுக்கீடு உருவாகின. மேலும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நகர அமைப்பு உருவாகவும் வழி செய்தன.
73-வது சட்ட திருத்தம் படி, மாற்றங்கள் கொண்டு வருவதற்காக, தமிழ்நாட்டில் ஏற்கனவே அமலில் இருந்த தமிழ்நாட்டு பஞ்சாயத்துகள் சட்டம், 1958 மாற்றப்பட்டு தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994 புதிதாக இயற்றப்பட்டது. பின்பு இது 1996-ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. இந்த திருத்தத்தின் மூலம் வளர்ச்சிக்கான திட்டங்களௌ ஏற்படுத்த, மாவட்ட திட்டக்குழு, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாநில நிதி ஆணையம் போன்றவை உருவாக்கப்பட்டன.
இந்த 1994 சட்டத்தின் படி தமிழ்நாட்டில் முதலில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக 1,17,000 பிரதிநிதிகள் பஞ்சாயத்தின் மூன்றடுக்குகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நகர உள்ளாட்சி அரசாங்கம்
74-வது சட்டத்திருத்தம் பல்வேறு மாநிலங்களில் நகர உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்க வழி செய்தது. தமிழகத்தில் நகர உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் 1996, 2001 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது.
தற்கால பிரச்சனைகள்
உள்ளாட்சி அமைப்பில் உள்ள பல பிரச்சனைகளை நிபுணர்கள் அவ்வப்போது சுட்டிக்காட்டியுள்ளார். நிபுணர்கள் சுட்டிக்காட்டிய பிரச்சனைகளை பின்வரும் பகுதிகளில் காணலாம். முதலில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு பொறுப்புகளை அதிகப்படுத்தப்பட வேண்டும். இதற்கு முன் அவை மாநில அரசின் பொறுப்புகளாக இருந்தது.
பல்வேறு நிலைகளில் உள்ள அரசாங்கங்களின் திறன் மற்றும் அவர்களின் கட்டுப்பாட்டு எல்லை போன்றவற்றை கருத்தில் கொண்டு முழு அரசு இயந்திரம் வகைப்படுத்தப்பட வேண்டும். இரண்டாவதாக, கிராம நீதிமன்றங்கள், காவல் துறையானது முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலைமையில் இது சாத்தியப்படாது. மூன்றாவதாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல விதமான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல மாநில அரசின் துறைகளோடு தொடர்புடையவை.
சுருக்கமாக, சொன்னால் 73 மற்றும் 74 வது சட்டத்திருத்தம் பல சீர்திருத்தங்களை உள்ளாட்சி அரசாங்கத்தில் கொண்டுவந்துள்ளது. ஊரக மற்றும் நகர்ப்புற உள்லாட்சி அமைப்புகள், சீர்திருத்தங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் உருவாக்கிய விதத்தில் இருந்தன. பல புதுமையான மாற்றங்கள் இந்த சட்ட திருத்தங்களினால் கொண்டு வரப்பட்டன. இந்தியாவில் இதுவரை 18 மாநிலங்களில் மட்டும் தான் தங்களது சட்டசபையில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்த இசைவு தந்துள்ளன. மேலும் சில மாநில அரசாங்கங்கள் சட்டத்திருத்தத்திற்குப் பிறகும், உள்ளாட்சி அமைப்பு உருவாக்க சட்டம் இயற்றிய பின்னும் பல பிரிவுகளை சரிவர செயல்படுத்தவில்லை. மேற்கூறிய காரணங்களால் உள்ளாட்சி அமைப்பில் உள்ள சிக்கல்கள் உள்ளன. அவை அகற்றப்படாவிட்டால் 73-வது மற்றும் 74-வது சட்டத்திருத்தத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியாது.
- தமிழ்நாட்டில் 12,564 கிராம பஞ்சாயத்தும், 388 ஊராட்சி ஒன்றியமும், 31 மாவட்ட பஞ்சாயத்தும் உள்ளது.
பஞ்சாயத்து ராஜ் (1959-2018)
தமிழ்நாடு நகர்ப்புற சட்டங்கள் (நான்காவது சட்டத்திருத்தம்) மசோதா 2018 மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் (இரண்டாவது சட்டத்திருத்தம்) மசோதா 2018 இரண்டும் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பு அதிகாரங்களின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்தது.
- 12 மாநகராட்சிகளும், 148 நகராட்சிகளும், 561 பேரூராட்சிகளும் தமிழகத்தின் நகர உள்ளாட்சி அமைப்புகளாக உள்ளன.