Samacheer NotesTnpsc

இந்தியாவில் கூட்டாட்சி Notes 12th Political Science Lesson 5 Notes in Tamil

12th Political Science Lesson 5 Notes in Tamil

இந்தியாவில் கூட்டாட்சி

கூட்டாட்சியின் பொருள்

ஒரு மத்திய அரசாங்கத்திற்கும் பல மாநில அரசாங்களுக்கும் இடையில் அரசமைப்பால் வழங்கப்பட்டுள்ள, பாதுகாக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வை உடைய அரசியல் முறையை கூட்டாட்சி என்று அழைக்கிறோம். மாநில அரசாங்கங்கள் அரசமைப்பால் தோற்றுவிக்கப்பட்டால் மட்டுமே நாம் ஒரு அமைப்பை கூட்டாட்சி முறை என்று கூறலாம். ஒரு நாட்டின் பகுதிகள் இனம், மொழி, மதம் போன்ற காரணங்களால் பல வகை மக்களை பெற்றிருந்தால் கூட்டாட்சி முறை அரசாங்கம் பின்பற்றப்பட வேண்டும். “வேற்றுமையில் ஒற்றுமை” உருவாக்குவதற்கு கூட்டாட்சி முறை மக்களாட்சி நாடுகளில் பின்பற்றப்படுகிறது.

கூட்டாட்சி முறையின் பொருள்

கூட்டாட்சியின் பரிணாமம்

  • உலக வரலாற்றில் முதல் கூட்டாட்சி அரசமைப்பாக அமெரிக்கா தோன்றியது. பின்னர் ஆஸ்திரேலியா, கனடா ஆகிய ஆங்கிலேய காலனிகளும் கூட்டாட்சி முறையை அமைத்துக்கொண்டன. மூன்று மொழிகளை பின்பற்றும் சுவிட்சர்லாந்து கூட்டாட்சி முறையை கொண்டு வந்தது. தற்போது உள்ள ஐரோப்பிய யூனியன் விருப்பத்தின் அடிப்படையில் அமைந்த கூட்டாட்சி முறைக்கு எடுத்துக்காட்டாகும்.

இந்திய கூட்டாட்சி முறையும், வளர்ச்சியும்

  • இந்தியாவில் ஒழுங்குமுறைச் சட்டம் 1773 கூட்டாட்சி முறையின் தோற்றத்தை உருவாக்கியது. இந்திய தேசிய இயக்கம் இந்தியாவின் பன்முகத் தன்மையை உணர்ந்து கூட்டாட்சி முறையை ஆதரித்தது. இந்திய அரசாங்கச் சட்டம் 1919 இரட்டை ஆட்சியை அறிமுகம் செய்தது.
  • 1935 இந்திய அரசாங்கச் சட்டம் மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்கியது. நேரு குழுவின் அறிக்கையும் (1928) ஜவஹர்லால் நேருவின் கருத்துக்களும் கூட்டாட்சி அமைப்பை இந்தியாவிற்கு வலியுறுத்தின.
  • அரசமைப்பின் ஏழாவது அட்டவணை மூன்று பட்டியல்களை உருவாக்கி அதிகாரப்பகிர்வை மத்திய மாநில அரசாங்கங்களுக்கு வழங்குகின்றன.

இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி தன்மைகள்

இந்திய அரசமைப்பு கீழ்க்கண்ட கூட்டாட்சி தன்மைகளைப் பெற்றுள்ளது.

  1. எழுதப்பட்ட அரசமைப்பு

கூட்டாட்சி முறைக்கு எழுதப்பட்ட அரசமைப்பு இன்றியமையாததாகும். பல மாநில மத்திய அரசாங்கங்கள் கூட்டாட்சி மூறையில் செயல்படுவதால் அவைகளின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு இருக்க வேண்டும். தற்போது இந்தியாவில் ஒரு மத்திய அரசும், 28 மாநில அரசாங்கங்களும் உள்ளன. இவைகளின் அதிகாரங்களும் உள்ளன. இவைகளின் அதிகாரங்களையும் பணிகளிஅயும் அரசமைப்பு தெளிவாக வரையறுக்கின்றது.

2. அரசமைப்பின் உயர்ந்த தன்மை

அரசமைப்பு நாட்டின் மிக உயர்ந்த சட்ட ஆவணமாகும். எல்லா அரசாங்கங்களும் அரசமைப்பின் நடைமுறை விதிகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். எந்த ஒரு அரசாங்கமும், அரசமைப்பை மீறிச் செயல்படக் கூடாது.

3. அதிகாரப் பகிர்வு

மத்திய மாநில அரசாங்களுக்கிடையேயான அதிகாரப் பகிர்வு கூட்டாட்சி மூறையின் அடிப்படைத் தன்மையாகும். இந்திய அரசமைப்பு மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையே அதிகாரப் பகிர்வை விரிவாக வழங்குகிறது. நமது நாட்டில் மூன்று பட்டியல் மூலமாக அதிகாரப் பகிர்வு வழங்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் கூட்டாட்சி முறையில் ஒரு பட்டியல் மூலமாகத்தான் அதிகாரப் பகிர்வு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

4. ஈரவை நாடாளுமன்றம்

கூட்டாட்சி முறையில் ஈரவை நாடாளுமன்றம் காணப்படுகிறது. நாடாளுமன்றத்திற்கு இரண்டு அவைகள் உள்ளன. இந்தியாவில் நாடாளுமண்றத்தில் மேலவை மாநிலங்களவை என அழைக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் கீழ் அவை மக்களவை என அழைக்கப்படுகிறது. மாநிலங்களவை மாநில பிரதிநிதிகளை கொண்டுள்ளது. மாநில உரிமைகளின் பாதுகாவலனாக அது கருதப்படுகீறது. உலகம் முழுவதும் நாடாளுமன்றத்தின் மேலவை மாநில உரிமைகளின், நலன்களின் பாதுகாவலனாகச் செயல்படுகிறது.

5. நெகிழா அரசமைப்பு

அரசமைப்பின் கருத்துகளை மாற்றுவதற்கு அரசியல் சாசன திருத்தச்சட்ட முறையோ அல்லது தனி அமைப்போ உள்ள அரசமைப்புகளுக்கு நெகிழா அரசமைப்பு முறை என்பது பெயராகும். சாதாரண சட்டம் இயற்றும் முறை மூலமாக அரசமைப்பில் மாற்றங்களை செய்ய இயலாது. இங்கு மாற்றங்களை கொண்டு வருவதற்கு அறுதி பெரும்பான்மையுடன் அரசமைப்பு திருத்தச்சட்டத்தை கொண்டு வர வேண்டும். நமது அரசமைப்பின் இருபதாவது பகுதியின் 368 உறுப்பில் அரசமைப்பை மாற்றுவதற்கான சிறப்பு திருத்தச்சட்ட முறைகள் வழங்கப்பட்டுள்ளதால் அது நெகிழா அரசமைப்பு என அழைக்கப்படுகிறது.

6. உச்ச நீதிமன்றம்

இந்திய உச்ச நீதிமன்றம் கூட்டாட்சி முறையின் நடுவணாகவும், அரசமைப்பின் பாதுகாவலனாகவும் விளங்குகின்றது. அரசமைப்பை விளக்கும் உரிமையை இது பெற்றுள்ளது. மத்திய மாநில உரிமைகளுக்கிடையே முரண்பாடுகள் அல்லது சிக்கல்கள் இருந்தால் உச்ச நீதிமன்றம் தீர்த்து வைக்கின்றது. உச்ச நீதிமன்றத்திடம் தனிபட்ட அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றம் மட்டும்தான் கூட்டாட்சி வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது. மத்திய அரசாங்கத்திற்கும் , மாநில அரசாங்கங்களுக்கிடையிலும் அல்லது வெவ்வேறு மாநில அரசாங்கங்களுக்கிடையிலும் சிக்கல்கள் இருந்தால் உச்ச நீதிமன்றம் மட்டுமே தீர்த்து வைக்கும்.

அதாவது, தமிழ் நாட்டிற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் அல்லது வேறு மாநில அரசாங்கத்திற்கும் இடையே பிரச்சனை தோன்றினால் அதனை தீர்த்து வைக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் மட்டுமே உள்ளது.

மேற்கண்ட காரணிகளின் அடிப்படையில் இந்திய அரசமைப்பை கூட்டாட்சி அரசமைப்பு என கூறுகிறோம்.

இந்திய நிலப்பரப்பு

இந்திய ஒன்றியம் என்ற கருத்து இந்திய நிலப்பரப்பு என்பதிலிருந்து வேறுபட்டதாகும். இந்திய ஒன்றியம் என்பது கூட்டாட்சி முறையில் உள்ள 29 மாநில அரசாங்கங்களையும், மத்திய அரசாங்கத்தையும் குறிக்கும். இந்திய நிலப்பரப்பு என்பது கீழ்க்கண்டவற்றை குறிக்கும்.

  • 28 மாநிலங்கள்
  • 9 மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள்
  • பெறப்பட்ட பகுதிகள் (சுதந்திரத்திற்குப்பின் இந்திய அரசாங்கத்தினால் முயன்று பெறப்பட்ட பகுதிகள் பாண்டிச்சேரி, டாமன் டையூ பகுதிகள் இந்திய அரசால் முயன்று பெறப்பட்டன. அவைகள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் ஆவதற்கு முன்னால் பெறப்பட்ட பகுதிகள் என அழைக்கப்பட்டன)

இந்திய அரசமைப்பின் ஒற்றையாட்சி தன்மைகள்

அமெரிக்காவில் உள்ள பாரம்பரிய கூட்டாட்சி முறையிலிருந்து இந்தியக் கூட்டாட்சி முறை மிகவும் வேறுபடுகிறது.

  1. ஒற்றை அரசமைப்பு

மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு ஒரே ஒரு அரசமைப்பு தான் உள்ளது. தேசிய அரசமைப்பே மாநிலங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. மாநிலங்களுக்கென்றி தனி அரசமைப்பு கிடையாது. ஆனால் பாரம்பரிய கூட்டாட்சி நாடான அமெரிக்காவில் மாநிலங்கள் தங்களுக்கான அரசமைப்பை பெற்றுள்ளன.

2. ஒற்றைக் குடியுரிமை

நமது நாட்டில் இந்தியக் குடியுரிமை மட்டுமே உள்ளது. மாநிலங்களுக்கென்று தனி குடியுரிமை கிடையாது. ஆனால் அமெரிக்காவில் தேசியக் குடியுரிமை மட்டுமல்லாது மாநில குடியுரிமையும் காணப்படுகிறது.

3. நெகிழும் அரசமைப்பு

சாதாரண சட்டம் இயற்றும் முறை மூலமாக அரசமைப்பின் பகுதிகளை மாற்ற முடிந்தால் அந்த அரசமைப்பிற்கு நெகிழும் அரசமைப்பு என்பது பெயராகும். இங்கு அரசமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு சிறப்பு அரசமைப்பு திருத்தச்சட்டங்கள் தேவையில்லை.

4. மாநிலங்களுக்கு வாழ்வுரிமை இல்லை

நமது அரசமைப்பு மாநிலங்களுக்கு பெயர் உரிமை மற்றும் வாழ்வுரிமையை வழங்கவில்லை. நாடாளுமன்றம் சாதாரண சட்டங்கள் மூலமாக மாநிலங்களின் பெயர்களையும் நிலப்பரப்புகளையும் மாற்றி அமைக்க முடியும். அரசமைப்பின் 3-வது மற்றும் 4-வது உறுப்புகள் மாநிலங்களை மாற்றவும் புதிய மாநிலங்களை உருவாக்கவும் வழி முறையை வழங்குகின்றன. குடியரசுத்தலைவர் சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு தகவலை அனுப்புவார். அந்த மாநில சட்டமன்றத்தின் கருத்தை அனுப்புமாறு கூறுவார். ஆனால் மாநில சட்டமன்றத்தின் கருத்து அவரைக் கட்டுப்படுத்தாது.

ஒரு சாதாரண சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தின் மக்களவையிலோ, மாநிலங்களவையிலோ குடியரசுத்தலைவரின் பரிந்துரையின்படி அறிமுகப்படுத்தப்படும். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பின் அந்த சட்ட முன்வர்சிவு சாதாரண்ச் சட்டமாக அறுதிப் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படும். இவ்வாறு மாநிலங்களின் பெயர், நிலப்பரப்பு ஆகியவை மாற்றப்படுகின்றன.

5. கூட்டாட்சிக்கு எதிரான மாநிலங்களவை

  • பொதுவாக நாடாளுமன்றத்தின் மேலவை மாநில உரிமைகளின் பாதுகாவலனாக பணியாற்றுகின்றது. இந்தியாவில் ராஜ்ய சபா என்றால் தமிழில் மாநிலங்களவை என்பது பொருளாகும். மாநிலங்களவை மாநிலங்களின் பிரதிநிதிகளா உருவாக்கப்படுகிறது. மாநில உரிமைகளின் பாதுகாவலனாக பணிபுரிகிறது. ஆனால் மூன்று முக்கிய தளங்களில் மாநில உரிமைகளுக்கு எதிராக மாநிலங்களவை செயல்படுகிறது.
  • மாநிலங்களவையின் அமைப்பு முறையில் சமத்துவம் பின்பற்றப்படவில்லை. இடங்கள் மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வழங்கப்பட்டிருக்கின்றன. மிகப்பெரிய மாநிலமாகிய உத்ரபிரதேசத்திற்கு 31 இடங்கள் மாநிலங்களவையில் உள்ளன. ஆனால் நாகாலாந்து போன்ற சிறிய மாநிலங்களுக்கு ஓரிடம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கூட்டாட்சி நாடாகிய அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரு இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. சிறிய மாநிலங்கள் பெரிய மாநிலங்கள் என்ற வேறுபாடு கிடையாது.
  • அரசமைப்பின் 249-வது உறுப்பின் படி ஒரு அதிகாரத்தை மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு மாநிலங்களவையால் மாற்ற முடியும். தேசிய நலன் கருதி மாநிலங்களவை இம்மாற்றத்தை செய்யலாம்.
  • வருகை தந்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு முறையின்படி மாநிலங்களவை ஒரு தீர்மானத்தை இயற்றினால் மாநில அதிகாரத்தை மத்தியப் பட்டியலுக்கு ஒரு வருட காலத்திற்கு மாற்றலாம். தேவைப்பட்டால் மீண்டும் மீண்டும் மாற்றத்தை நீட்டிக்கலாம்.
  • அரசமைப்பின் 312-வது உறுப்பின் கீழ் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் மொத்த உறுப்பினர்களின் அறுதிப் பெரும்பான்மை ஆதரவுடன் புதிய அனைத்து இந்தியப் பணிகளை உருவாக்கும் அதிகாரத்தை மாநிலங்களவை பெற்றிருக்கின்றது. அனைத்து இந்தியப் பணிகள் மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கத்தை உருவாக்குகின்றன என்று மாநிலங்கள் குற்றம்சாட்டுகின்றன.
  • இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS), இந்திய வனப் பணி (IFS) ஆகியவை முக்கிய அனைத்து இந்தியப் பணிகளாகும்.
  • மாநில உரிமைகளை பாதிக்க கூடிய அனைத்து இந்தியப் பணிகளை உருவாக்கும் அதிகாரத்தை மாநிலங்களவை பெற்றிருப்பதை பல மாநிலங்கள் எதிர்க்கின்றன.

6. சமமற்ற அதிகாரப் பகிர்வு

  • நமது அரசமைப்பு சமமற்ற அதிகாரப் பகிர்வை உருவாக்கியுள்ளது என மாநிலங்கள் குற்றம் சுமத்துகின்றன. மத்திய அரசிற்கு சாதகமாகவும், மாநிலங்களுக்கு எதிராகவும் அதிகாரப் பகிர்வு உள்ளதாக பல மாநிலங்கள் கூறுகின்றன. மத்திய அரசாங்கம் மாநிலங்களை விட எண்ணிக்கையில் அதிக அதிகாரங்களை பெற்றுள்ளது.
  • முக்கியமான அதிகாரங்களும் மத்திய அரசிடமே உள்ளன. அதிக வருமானத்தை ஈட்டித் தரும் அதிகாரங்களும் மத்திய அரசிடமே உள்ளன.
  • எண்ணிக்கை, முக்கியத்துவம் , வருமானம் ஆகிய காரணிகளில் மாநிலங்கள் பலவீனமான நிலையில் உள்ளன. நிதி ஆதாரத்திற்கு மத்திய அரசையே மாநிலங்கள் சார்ந்துள்ளன. பொதுப் பட்டியல் அதிகாரங்களில் மத்திய அரசு சொல்வதை மாநில அரசாங்கங்கள் கேட்கவேண்டிய நிலை உள்ளது. பட்டியலில் இல்லாத இதர அதிகாரங்கள் நமது அரசமைப்பில் மத்திய அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பாரம்பரிய கூட்டாட்சி நாடான அமெரிக்காவில் இதர அதிகாரங்கள் மாநிலங்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

7. அவசர காலங்கள்

  • நமது அரசமைப்பின் 18-ஆவது பகுதியில் உறுப்புகள் 352 முதல் 360 வரை மூன்று விதமான அவசர காலங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. உறுப்பு 352-ன் படி போர், அந்நிய ஆக்கிரமிப்பு, ஆயுதமேந்திய கிளர்ச்சி போன்றவைகள் இந்தியாவின் ஒற்றுமையை பாதித்தால் குடியரசுத்தலைவர் தேசிய அவசர காலத்தை பிறப்பிக்கலாம்.
  • உறுப்பு 356-ன் படி எந்த ஒரு மாநிலத்திலும் அரசியல் சாசன அமைப்பு முறை பாழ்படுத்தப்பட்டால் குடியரசுத்தலைவர் மாநில அரசை நீக்கிவிட்டு அவசர காலத்தை கொண்டு வரலாம்.
  • உறுப்பு 360-ன்படி நாட்டின் நிதி நிலைமை மோசமடைந்தால் குடியரசுத்தலைவர் நிதி அவசர காலத்தை பிறப்பிக்கலாம். அவசர காலங்கள் அமலில் இருந்தால் கூட்டாட்சி முறை ரத்து செய்யப்பட்டு ஒற்றை ஆட்சி முறை பின்பற்றப்படும். மாநில உரிமைகள் பாதிக்கப்படும்.

8. ஒருங்கிணைந்த நீதித்துறை

  • இந்திய நீதித்துறை ஒருங்கிணைந்த துறையாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் கீழ் உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் இயங்குகின்றன ஒருங்கிணைந்த, படிநிலை அமைப்பு அடிப்படையில் நீதித்துறை உள்ளது. ஆனால் அமெரிக்காவில் நீதித்துறையிலும் கூட்டாட்சி முறை பின்பற்றப்படுகிறது.

9. தேர்தல் ஆணையம்

  • தேசிய தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற தேர்தலையும், மாநிலச் சட்டமன்றத் தேர்தலையும் நடத்துக்கின்றது. மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல்களை நடத்துவதற்கு தனி தேர்தல் ஆணையம் கிடையாது. தேர்தல் முதன்மை அதிகாரி தேசிய தேர்தல் ஆணையம் தலைமையின் கீழ் செயல்படுவார். பாரம்பரிய கூட்டாட்சி நாடுகளில் மத்திய தேர்தலை, தேசிய தேர்தல் ஆணையம் நடத்துகின்றது. ஆனால் நமது அரசமைப்பு ஒருங்கிணைந்த தேர்தல் ஆணையத்தை உருவாக்கியுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம்

சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் கூட்டாட்சி முறையின் அங்கம் இல்லை. அவ்வாணையம், 73-வது , 74-வது அரசியல் சாசன திருத்தச்சட்டங்கள் அடிப்படையில் சுயாட்சி அமைப்புகளுக்கு (பஞ்சாயத்து, நகராட்சி அமைப்புகள்) தேர்தலை நடத்துகின்றது.

10. ஒருங்கிணைந்த தணிக்கை

  • இந்திய அரசமைப்பு மத்திய-மாநில அரசாங்கங்களுக்கு ஒருங்கிணைந்த தணிக்கை முறையையும், அமைப்பையும் உருவாக்கி உள்ளது. சி.ஏ.ஜி எனப்படும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அரசமைப்பின் 148-வது உறுப்பின்படி தேசிய மற்றும் மாநில அளவிலான தணிக்கை அதிகாரத்தை பெற்றுள்ளார். இந்தியக் கூட்டாட்சி முறையில் மாநிலங்களுக்கென்று தனியான தணிக்கை அமைப்பு இல்லை.

மத்திய-மாநில அதிகாரப் பகிர்வு

அதிகாரப் பகிர்வு மத்திய மாநில உறவுகளின் அச்சாணியாக உள்ளது. மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையே அதிகாரப் பகிர்வு மூன்று தளங்களில் காணப்படுகிறது.

அ) சட்டமன்ற அதிகாரப் பகிர்வு

ஆ) ஆட்சித்துறை அதிகாரப் பகிர்வு

இ) நிதி அதிகாரப் பகிர்வு

சட்டமன்ற அதிகாரப் பகிர்வு

மத்திய மாநில உறவுகளில் சட்டமன்ற அதிகாரப் பகிர்வு இரண்டு தளங்களில் வழங்கப்பட்டுள்ளது.

அ) அதிகாரப் பகிர்வின் எல்லை

ஆ) அதிகாரங்கள் பகிர்வு

அ) அதிகாரப் பகிர்வின் எல்லை

  • மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் தேசத்தின் எல்லை முழுவதும் காணப்படுகின்றது. மாநில அரசாங்கங்களின் அதிகாரம் மாநில எல்லை மீது காணப்படுகிறது.
  • மேலும் மத்திய அரசு எல்லைகளை தாண்டிய அதிகாரத்தையும் பெற்றிருக்கின்றது. அதாவது மத்திய அரசு இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியிலும் வசிக்கு இந்தியக் குடிமகன்கள் மற்றும் அவர்கள் சொத்துக்கள் மீதும் அதிகாரம் செலுத்துகின்றது.
  • ஆனால் மாநில அரசாங்கங்கள் அந்தந்த மாநில எல்லைக்குள் மட்டுமே அதிகாடம் செலுத்துகின்றன. இருந்தபோதிலும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் பட்டியல் பகுதிகள் மீது பயன்படுத்தும் போது அரசமைப்பே சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.

ஆ) அதிகாரங்கள் பகிர்வு

மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையே அரசமைப்பு அதிகாரத்தை மூன்று பட்டியல்கள் மூலம் பகிர்ந்து அளிக்கின்றது.

I பட்டியல் (ஒன்றியப் பட்டியல்)

இங்கு ஒன்றிய அரசு முழு அதிகாரத்தை பெற்றிருக்கும். பாதுகாப்பு, வங்கித்துறை, நாணயம், வெளியுறவுத்துறை உள்ளிட்ட நூறு அதிகாரங்கள் இப்பட்டியலில் உள்ளன.

II பட்டியல் (மாநிலப் பட்டியல்)

இப்பட்டியலில் உள்ள துறைகளில் மாநில அரசாங்கங்கள் முழு அதிகாரத்தை பெற்றிருக்கும். இங்கு 59 அதிகாரங்கள் உள்ளன. சட்டம், ஒழுங்கு, பொது சுகாதாரம், சுயாட்சி அமைப்புகள், விவசாயம், வனங்கள் போன்றவைகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

III பட்டியல் (பொதுப்பட்டியல்)

  • இப்பட்டியலில் 52 அதிகாரங்கள் உள்ளன. கல்வி, திருமணம், குடிமைச்சட்டம் போன்றவைகள் இங்கு இடம்பெற்றுள்ளன. மத்திய மாநில அரசாங்கங்கள் இரண்டுமே இப்பட்டியலில் அதிகாரம் செலுத்துவதால் இப்பட்டியலுக்கு பொதுப் பட்டியல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உள்ள அதிகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்பட்டால் மத்திய அரசாங்கத்தின் சட்டமே செல்லுபடியாகும்.
  • இம்மூன்று பட்டியல்கள் தவிர இதர அதிகாரங்கள் என்ற வகையும் உள்ளது. இம்மூன்று பட்டியல்களில் இடம்பெற்ற அதிகாரங்கள் எல்லாம் மத்திய அரசாங்கத்தின் ஆளுமையின் கீழ் வருகின்றன. மேற்கண்ட அதிகாரப்பகிர்வை வழங்குவதில் நமது அரசமைப்பு இந்திய அரசாங்கச் சட்டம் 1935-யை பின்பற்றுகின்றது.

விதிவிலக்குகள்

மேற்கண்ட அதிகாரப் பகிர்வு சில சிறப்பு சமயங்களில் நிறுத்தி வைக்கப்படும். இச்சமயங்களில் மாநில அரசாங்கங்களின் அதிகாரங்கள் நீக்கப்பட்டு மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் அதிகரிக்கப்படும்.

அ) தேசிய அவசர காலம்

குடியரசுத்தலைவர் தேசிய அவசரகால சட்டத்தை போர் , அந்நிய ஆக்கிரமிப்பு, ஆயுதமேந்திய கிளர்ச்சி போன்ற காரணங்கள் அடிப்படையில் குடியரசுத்தலைவர் தேசிய அவசர சட்டத்தை பிரகடனம் செய்வார். நாட்டிற்கு எதிரான சவால்களை சமாளிப்பதற்கு நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மாநில பட்டியலிலும் செலுத்தப்படும்.

ஆ) மாநிலங்களுக்கிடையேயான ஒப்பந்தம்

இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்கள் தங்களின் நன்மை கருதி ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தில் மத்திய அரசு தங்களுக்கான பொதுச் சட்டத்தை நிறைவேற்ற கோரினால் நாடாளுமன்றம் அச்சட்டத்தை நிறைவேற்றித் தரும்.

இ) சர்வதேச ஒப்பந்தம்

சர்வதேச ஒப்பந்தங்களை அமல்படுத்துவதற்காக நாடாளுமன்றம் மாநில பட்டியலில் உள்ள அதிகாரத்தில் சட்டங்களை இயற்றலாம்.

ஈ) உறுப்பு 356 அவசர காலம்

அரசமைப்பின் 356 உறுப்பின்படி அவசர காலத்தை ஒரு மாநிலத்தில் பிறப்பித்தால் குடியரசுத்தலைவர் அந்த மாநிலத்திற்கான சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றலாம் என அதிகாரம் வழங்குவார்.

ஆட்சித்துறை அதிகாரப் பகிர்வு

  • நமது அரசமைப்பு மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே நிர்வாக அதிகாரங்களை பகர்கின்றது. ஏற்கனவே விவரிக்கப்பட்ட சட்டமன்ற அதிகாரப்பகிர்வை பிரதிபலிக்கும் வகையில் ஆட்சித்துறை அதிகார பகிர்வு அமைந்துள்ளது. மத்திய அரசாங்கம் முதலாவது பட்டியலிள்ள விஷயங்கள் மீது ஆட்சித்துறை அதிகாரத்தை பெற்றிருக்கின்றது.
  • இரண்டாவது பட்டியலில் உள்ள விஷயங்கள் மீது மாநில அரசாங்கங்கள் அதிகாரத்தை பெற்றுள்ளன.
  • மூன்றாவது பட்டியலான பொதுப் பட்டியலின், நிர்வாக அதிகாரத்தை மாநிலங்கள் பெற்றிருக்கும். ஆனால் தேவைப்பட்டால் மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு கட்டளைகளைப் பிறப்பிக்கும். மாநில அரசாங்கங்கள் மத்திய அரசாங்கம் வழங்கும் கட்டளைகளை கண்டிப்பாக இங்கு நிறைவேற்ற வேண்டும்.
  • நமது கூட்டாட்சி முறையில் மத்திய, மாநில அரசாங்கங்கள் இடையே பணி ஒப்படைப்பு முறை காணப்படுகின்றது. மத்திய அரசாங்கம் மாநில ஆளுநரின் இசைவுடன் தனது நிர்வாகப் பணிகளை நிறைவேற்றுமாறு மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம்.
  • மாநில அரசாங்கம் குடியரசுத்தலைவரின் ஆதரவுடன் தனது நிர்வாகப் பணிகளை மத்திய அரசிடம் ஒப்படைக்கலாம். மத்திய அரசு மாநில ஆளுநரின் இசைவு இல்லாமல், நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் தனது நிர்வாகக் கடமைகளை நிறைவேற்றுமாறு மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம்.

நிதி அதிகாரப் பகிர்வு

கூட்டாட்சி முறையின் வெற்றிக்கு நிதி அதிகார பகிர்வு மிகவும் முக்கியமானதாகும். இந்திய அரசமைப்பு மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே நிதி அதிகாரப் பகிர்வை விரிவாக வழங்குகின்றது. இப்பகிர்வானது இந்திய அரசாங்கச் சட்டம் 1935-யை பெரிய அளவில் பிரதிபலிக்கின்றது. இரண்டு வகையான வருமானங்கள் நிதிப் பகிர்வில் காணப்படுகின்றன.

அ) வரி வருமானப் பகிர்வு

ஆ) இதர வருமானப் பகிர்வு

அ) வரி வருமானப் பகிர்வு

மத்திய மாநில நிதிப் பகிர்வில் வரி வருமானப் பகிர்வு ஐந்து வகைகளில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  1. சுங்கவரி போன்றவைகள் முற்றிலும் மத்திய அரசாங்கத்தீற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
  2. விற்பனை வரி போன்ற வரிகள் முற்றிலும் மாநில அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
  3. சில வரிகளை மத்திய அரசாங்கம் விதிக்கின்றது. மாநில அரசாங்கங்கள் அவ்வரிகளை வசூலித்து பயன்படுத்திக் கொள்கின்றன (எ.கா) முத்திரை வரி, கலால் வரி கூறலாம்.
  4. சில வரிகளை மத்திய அரசாங்கம் விதித்து வசூலிக்கிறது. ஆனால் அந்த வருமானம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் மீதான வரி.
  5. சில வரிகள் மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக விவசாய வருமானம் தவிர்த்த பிற வருமானங்கள் மீதான வரி.

ஆ) இதர வருமானப் பகிர்வு

வரி தவிர இதர வருமான வழிகள் மத்திய மாநிலங்களுக்கு அரசமைப்பால் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசாங்கம் தனக்கான வணிக மற்றும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருமானத்தை ஈட்டலாம். எடுத்துக்காட்டாக தொழில் நிதி நிறுவனம், ரயில்வே துறை, ஒளிபரப்பு, அஞ்சல்துறை போன்றவற்றை நாம் கூறலாம்.

மாநில அரசாங்கங்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வணிக, தொழில் நிறுவனங்கள் மூலமாக வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம். மின்சாரம், நீர்ப்பாசனம், வனங்கள், தரைவழி போக்குவரத்து போன்ற துறைகளில் மாநில அரசாங்கங்கள் வருமானத்தை ஈட்டலாம்.

நிதிக்குழு

  • ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் குடியரசுத்தலைவர் ஒரு நிதிக் குழுவை அமைப்பார். அரசமைப்பின் 280-வது உறுப்பு குழுவின் அமைப்பை விவரிக்கின்றது. நிதிக் குழு ஒரு தலைவரையும் நான்கு உறுப்பினர்களையும் பெற்றிருக்கும். நிதிக் குழுவின் தலைவர் பொது விவகாரங்களில் அனுபவம் பெற்றவராக இருப்பார். நிதிக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் நிதி நிர்வாகம், பொருளாதாரம், பொதுக் கணக்குகள் மற்றும் அரசு நிதி துறை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள். நிதிக் குழுவின் நான்காவது உறுப்பினர் உயர் நீதிமன்ற நீதிபதியாக தகுதிப் பெற்றவர்.

நிதிக் குழு அரசிற்கு பரிந்துரைகளை கீழ்க்கண்டவாறு வழங்கும்.

  1. வருமானத்தை மத்திய மாநில அரசுகளுக்கிடையே பகிர்தல்.
  2. உதவி மானியம் வழங்கப்படும் வழிமுறைகள்.
  3. பஞ்சாயத்து அமைப்புகளின் நிதி ஆதாரங்களை வலுப்படுத்தும் நோக்குடன் இந்தியாவின் தொகுப்பு நிதி அதிகரிப்பதற்கான பரிந்துரைகள்.
  4. நகராட்சி அமைப்புகளின் நிதி ஆதாரங்களை வலுப்படுத்தும் நோக்குடன் இந்தியாவின் தொகுப்பு நிதி அதிகரிப்பதற்கான பரிந்துரைகள்.
  5. குடியரசுத்தலைவரால் நிதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் கோரப்படும் பரிந்துரைகள்.

இதுவரை 14 நிதிக் குழுக்கள் இந்தியாவில் குடியரசுத்தலைவரால் அமைக்கப்பட்டுள்ளன.

கூட்டுறவுக் கூட்டாட்சி

  • அமெரிக்காவின் புகழ்பெற்ற அரசமைப்பு நிபுணரான கிரான்வில் ஆஸ்டின் இந்திய கூட்டாட்சியை கூட்டுறவுக் கூட்டாட்சி என வர்ணித்தார். மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே பரஸ்பர ஒத்துழைப்பை உருவாக்கும் நோக்கத்தில் இந்திய கூட்டாட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்கா போன்ற கூட்டாட்சி நாடுகளில் கூட்டுறவு கொள்கை அமல்படுத்தப்படுகிறது. அரையளவு கூட்டாட்சி கொள்கை கொண்ட நமது அரசமைப்பில் மாநிலங்கள் மத்திய அரசிற்கு ஒத்துழைப்பை நல்க வேண்டும். குடியரசுத்தலைவர் பெற்றிருக்கும் அவசர கால அதிகாரங்களும் அரசமைப்பின் சில பகுதிகளும் மாநில அரசாங்கங்கள் மத்திய அரசுடன் கூட்டுறவு உணர்வுடன் செயல்பட வைக்கின்றன.

இந்திய அரசியலில் பல்வேறு பகுதிகள் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கூட்டுறவுக் கூட்டாட்சியின் விழுதுகளாக உள்ளன. அவைகளை மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம்.

அ) அரசமைப்பு நிறுவனங்கள்

ஆ) சட்ட அமைப்புகள்

இ) அரசமைப்புகள்

அ) அரசமைப்பு பகுதிகள்

அரசமைப்பே பல்வேறு அமைப்புகளை உருவாக்கி கூட்டுறவுக் கூட்டாட்சி முறையை ஆதரிக்கின்றது.

  1. மாநிலங்களுக்கிடையேயான குழு

அரசமைப்பில் 263 உறுப்பு குடியரசுத்தலைவர் பொது நலனுக்காக மாநிலங்களுக்கிடையேயான குழுவை உருவாக்கலாம் என்று கூறுகின்றது.

மூன்று பணிகளை இக்குழு பெற்றிருக்கின்றது.

  • மாநிலங்களுக்கிடையேயான சிக்கல்களை ஆராய்ந்து ஆலோசனை வழங்குவது.
  • மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையிலான பொதுவான விஷயங்களை விவாதிப்பது.
  • ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு பரிந்துரைகளை வழங்குதல்.
  • மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு பல குழுக்கள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. (எ.கா) மத்திய சுகாதாரக் குழு, போக்குவரத்து வளர்ச்சி மன்றம், தல சுயாட்சி மத்தியக் குழு போன்றவைகள் எடுத்துக்காட்டுகளாகும்.
  • சர்க்காரியா குழுவின் பரித்துரைப்படி 1990-களில் கூட்டாட்சி முறையில் உள்ள அரசாங்கங்கள் இடையே எல்லா துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக மாநிலங்களுக்கிடையேயான குழு தோற்றுவிக்கப்பட்டது. பிரதமர் இக்குழுவின் தலைவராக இருக்கின்றார்.
  • எல்லா மாநிலங்களின் முதல்வர்களும், ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட முதல்வர்களும், ஆறு ஒன்றிய அமைச்சரவை குழுக்களும், ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் நிர்வாகத் தலைவர்களும், குடியரசுத்தலைவர் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் ஆளுநர்களும் இக்குழுவில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். மாநிலங்கள் இடையில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஒரு நிலைக்குழுவும் உருவாக்கப்பட்டது. இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் தவிர ஐந்து மத்திய அமைச்சர்கள் குழு, ஒன்பது மாநில முதல்வர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

ஆ) சட்ட அமைப்புகள்

நாடாளுமன்றத்தின் சட்டங்களால் உருவாக்கப்பட்ட பல அமைப்புகளும் கூட்டுறவுக் கூட்டாட்சியை வலுப்படுத்துகின்றன.

  1. மண்டலக் குழுக்கள்
  • மண்டலக் குழுக்கள் மாநிலங்கள் மறுசீரமைப்புக் குழு 1956 சட்டத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்டன. மொழிவாரியான மாநிலங்கள் உருவானபோது மண்டலக் குழுக்களும் உருவாயின. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மண்டலக் குழுக்களின் நோக்கம் கூட்டுறவுக் கூட்டாட்சி வழக்கத்தை வளர்ப்பது என்றார்.
  • ஆரம்பத்தில் ஐந்து மண்டலக் குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டன. 1971 ஆம் ஆண்டு வட கிழக்கு மாநிலங்களுக்காக சிறப்பு மண்டலக் குழு உருவாக்கப்பட்டது. தற்பொழுது ஆறு மண்டலக் குழுக்கள் இயக்குகின்றன.
  1. வடக்கு மண்டலக் குழு
  2. தெற்கு மண்டலக் குழு
  3. கிழக்கு மண்டலக் குழு
  4. மேற்கு மண்டலக் குழு
  5. மத்திய மண்டலக் குழு
  6. வட கிழக்கு மண்டலக் குழு
  • மத்திய உள்துறை அமைச்சர் எல்லா மண்டலக் குழுக்களின் பொதுத் தலைவராக உள்ளார். மேலும் ஒவ்வொரு மண்டலக் குழுவிலும் ஒவ்வொரு மாநிலத்தின் முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர்களும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதியில் நிர்வாகத் தலைவரும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
  • மண்டலங்களில் உள்ள மாநிலங்களுக்கிடையே எவ்வாறு ஒத்துழைப்பை உருவாக்கி வளர்ப்பது என்று மண்டலக் குழுக்கள் பரிந்துரை வழங்கும்.
  • பொருளாதார, சமூகத் திட்டமிடல், எல்லை பிரச்சனைகள், போக்குவரத்து போன்ற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வழங்க மண்டலக் குழுக்கள் செயல்படும்.

2. நதி ஆணையம்

நதி ஆணையங்கள் சட்டம் 1956 மாநிலங்களுக்கிடையேயான நதிகளை மேலாண்மை செய்வதற்கு மாநிலங்களுக்கு பரிந்துரைகள் வழங்குவதற்கு நதி ஆணையத்தை உருவாக்கியது.

3. நதிநீர்த் தீர்ப்பாயம்

மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் சிக்கல் சட்டம் 1956 அரசமைப்பின் உறுப்பு 262இன் படி உருவாக்கப்பட்டது. சமவெளி மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் குறைகளை ஒழுங்குபடுத்துவது இச்சட்டத்தின் நோக்கமாகும். இவ்வகையான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தீர்ப்பாயங்களை இச்சட்டம் உருவாக்குகின்றது.

நிதி ஆயோக் (NITIAAYOG)

  • மத்திய அரசாங்கம் ஜனவரி 1, 2015-ஆம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பை தோற்றுவித்தது. இந்தியாவின் மாற்றத்திற்கான தேசிய குழு என்பது இதன் பொருள் ஆகும். 65 ஆண்டுகள் பழமைவாய்ந்த திட்டக் குழு நீக்கப்பட்டப் பிறகு இப்புதியக் குழு தோற்றுவிக்கப்பட்டது. பிரதமர் இக்குழுவின் தலைவராக இருப்பார்.
  • மாநிலங்களின் முதல்வர்கள், ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் முதல்வர்கள் (புதுச்சேரி, புதுதில்லி), அந்தமான் நிக்கோபர் தீவுகளின் துணை ஆளுநர் ஆகியோர் இக்குழுவின் நிரந்தர உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
  • மாநிலங்களுக்கிடையேயான அமைப்பு ரீதியின் தொடர்ச்சியாக கூட்டுறவுக் கூட்டாட்சியை வளர்ப்பது இக்குழுவின் நோக்கமாகும். உறுதியான மாநிலங்கள் உறுதியான தேசத்தை உருவாக்குவது இக்குழுவின் எண்ணமாகும். வருமான ஆதாரங்கள் இல்லாததாலும் அரசமைப்பு சக்தி இல்லாததாலும் மாநிலங்கள் மத்திய அரசை சார்ந்து இயங்குகின்றன.
  • இயற்கை பேரழிவுகளை சமாளிப்பதற்கு கூட மத்திய அரசை சார்ந்து இருக்கின்றன. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பது நிதி ஆயோக்கின் நோக்கமாகும்.

மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் பிரச்சனை

  • இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி முறையை மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் சிக்கல்கள் பெரிய அளவில் பாதிக்கின்றன. பல்வேறு நதிநீர் சிக்கல்கள் நமது நாட்டில் காணப்படுகின்றன.
  • தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகியவை காவிரி பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ளன. ஆண்டாண்டு காலமாக நதிநீர் பிரச்சனையில் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் சம்பந்தப்பட்டுள்ளன.
  • சட்லெஜ் ஆறு பிரச்சனையில் பஞ்சாப், அரியானா சம்பந்தப்பட்டுள்ளன. கோவா, மஹாராஷ்டிரா, கர்நாடகம் ஆகியவை மகாதயி ஆற்றுப் பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ளன.
  • மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்திய அரசியலில் கீழ்க்கண்ட அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.
  1. அரசமைப்பும் மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் சிக்கல்களும்
  • அரசமைப்பின் 262இல் உறுப்பு மாநிலங்களுக்கிடையேயான நதி நீர்ப் பிரச்சனைகள் தீர்ப்பதற்கு வழிமுறையை வழங்குகின்றது. இவ்வகையான பிரச்சனைகளில் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் இருந்து நாடாளுமன்றம் விலக்கி வைக்கலாம்.
  • நாடாளுமன்றம் நதி நீர்ப் பிரச்சனைகள் சம்பந்தமாக ஒரு சட்டத்தை இயற்றலாம். நதி நீர் பிரச்சனை பல இலட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றது. நீதிமன்றங்கள் தீர்ப்பை வழங்கினால் மக்களிடையே கசப்புணர்வும் பிளவும் அதிகரிக்கலாம். ஆகவே சுமூகமான பேச்சு வார்த்தை மூலமாக நதிநீர்ப் பிரச்சனைகளை நாம் தீர்க்கவேண்டும் என்பது அரசமைப்பின் உறுப்பு 262இன் நோக்கமாகும்.

2. மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் சிக்கல்கள் சட்டம் 1956

  • மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் சிக்கல்கள் சட்டம் 1956 நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது. நதி நீர்ப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மத்திய அரசாங்கம் தீர்ப்பாயங்களை அமைக்கலாம் என்று இச்சட்டம் வழிவகுக்கின்றது. நதி நீர்ப் பிரச்சனைகள் பேச்சு வார்த்தைகள் மூலமாக தீர்க்கப்பட வேண்டும். பேச்சு வார்த்தை முயற்சிகள் தோல்வி அடைந்தால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மத்திய அரசாங்கத்தை நாடலாம். மத்திய அரசாங்கம் குறிப்பிட்ட நதிநீர்ப் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒரு தீர்ப்பாயத்தை அமைக்கும்.
  • உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அந்த தீர்ப்பாயத்திற்கான தலைவரை நியமிப்பார். ஆரம்பத்தில் தீர்ப்பாயம் அல்லது நடுவர் மன்றம் ஒரே ஒரு உறுப்பினரைத் தான் கொண்டிருந்தன. பின்னர் நடுவர் மன்றங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை பெறுவதற்கு சட்டம் மாற்றப்பட்டது.
  • நடுவர் மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிப்பார். நடுவர் மன்றத்தின் தீர்ப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சமமானதாகும்.
  • நடுவர் மன்றம் விசாரிக்கும் நதிநீர் பிரச்சனையில் வேறு எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது. மேலும் நதிநீர் ஆணையம் சட்டம் 1956இன் கீழ் வரும் நதிகளில் மீது நடுவர் நீதிமன்றங்களை அமைக்க முடியாது.
  • சுருக்கமாக கூறவேண்டுமென்றால் நமது நாட்டில் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் சிக்கல்கள் அணுகுமுறையில் இரண்டு தன்மைகள் காணப்படுகின்றன.
  • பேச்சுவார்த்தைகள் மூலமாக இப்பிரச்சனைகள் தீர்க்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் நடுவர் நீதிமன்றம் அமைத்து தீர்வைக் காண வேண்டும்.

காவிரி நதி நீர்ப் பிரச்சனை

காவிரி நதி நீர் சிக்கல் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆளுகைக்குட்பட்ட பகுதி ஆகிய நான்கு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனையாகும்.

வரலாற்றுப் பின்னணி

இப்பிரச்சனை நீண்ட வரலாற்றுப் பின்னணி உடையதாகும். மெட்ராஸ் மாகாணமும், மைசூர் அரசும் 1924 ஆம் ஆண்டு காவிரி நதி நீரை பயன்படுத்த ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டன. ஐம்பது ஆண்டுகள் கழித்து 1974 ஆம் ஆண்டு இவ்வொப்பந்தம் காலாவதியானது.

சம்பந்தப்பட்ட மாநிலங்கள் 1974ஆம் ஆண்டிற்குப் பின் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தின. ஆனால், எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. நாம் ஏற்கனவே படித்ததுபோல நதி நீர் சிக்கல்கள் சட்டம் 1956இன் படி காவிரி நதி நீர் நடுவர் மன்றம் 1991ஆம் ஆண்டு மத்திய அரசால் அமைக்கப்பட்டது.

தீர்ப்பின் முக்கிய தன்மைகள்:

நடுவர் மன்றம் தீர்ப்பை 2007-ஆம் ஆண்டு வழங்கிவிட்டது. மாதந்தோரும் கர்நாடகம் பிலிகுண்டுலு என்ற எல்லை பகுதியில் தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்ட அளவு நீரை வழங்க வேண்டும். காவிரி நதியில் இருந்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தண்ணீரை குறிப்பிட்ட அளவில் நடுவர் மன்றம் பங்கீடு செய்தது. மழை இல்லா வருடங்களில், துன்பக் காலங்களில் எவ்வாறு நீர் பங்கீடு இருக்க வேண்டும் என்பதையும் நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் விவரித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் என்றால் என்ன?

காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பை அமல்படுத்துவதற்கு காவிரி மேலாண்மை வாரியத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளதா?

பல ஆண்டுகள் வழக்கு நடந்த பிறகு உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வெளியிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி தமிழ்நாடு 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து எல்லைப் பகுதியில் பெறும். மொத்த காவிரி நீரில் தமிழ்நாடு 404.25 டி.எம்.சி., கர்நாடகம் 284.25 டி.எம்.சி, கேரளா 30 டி.எம்.சி, புதுச்சேரி 7 டி.எம்.சி. என்று உச்ச நீதிமன்றம் நீர்ப் பங்கீடு செய்துள்ளது.

இந்தியக் கூட்டாட்சியில் பிரச்சனைகளும் தேவைகளும்

கூட்டாட்சி முறையில் காணப்படும் பல்வேறு சிக்கல்கள் மத்திய-மாநில உறவுகள் பாதிக்கின்றன.

ஆளுநரின் நியமனம் மற்றும் பணி

  • மத்திய அரசாங்கத்தின் முகவராக ஆளுநர் மாநிலத்தில் செயல்படுவதை மாநில அரசாங்கங்கள் எதிர்க்கின்றன. ராஜமன்னார் குழு மாநில ஆளுநர்கள் கூட்டாட்சி முறைக்கு எதிராக இருப்பதாக விமர்சித்தது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்கள் காலத்தில் இருந்து ஆளுநர்களின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
  • மாநில கட்சி அரசியலில் தீவிரமாக இயங்கும் தலைவர்களை மாநில ஆளுநராக நியமிக்க கூடாது என கூறுகின்றன. ஆளுநர்களின் நியமனத்தில் மாநில அரசாங்கங்களையும் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்று மாநில கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட, மிகச்சிறந்த அறிஞர்களை, சேவையாளர்களை, ஆளுநர்களாக நியமிக்க வேண்டுமென கோரப்படுகிறது.
  • எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அதிருப்தியை உருவாக்கியுள்ளன. மாநிலங்களில் ஆளும் கட்சி உடைந்து போனாலோ, அல்லது தொங்கு சட்டமன்றம் உருவானாலோ ஆளுநர்களின் முடிவுகள் சர்ச்சைகள் உருவாக்குகின்றன.

கல்வி

  • ஆரம்ப காலத்தில் கல்வி இரண்டாவது பட்டியலான மாநிலப் பட்டியலில் தான் இடம்பெற்றிருந்தது. 1976ஆம் ஆண்டு நாடாளுமன்றம் 42 வது அரசியல் சாசன திருத்தச்சட்டத்தின் மூலம் கல்வியை மூன்றாவது பட்டியலான பொதுப் பட்டியலுக்கு மாற்றியது.
  • மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரம் மத்திய மாநில அரசாங்கங்களுக்கு பொதுவானதாக மாற்றப்பட்டது. பொதுப் பட்டியலில் தற்போது கல்வி இருப்பதால் மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையே முரண்பாடுகள் தோன்றினால் மத்திய அரசின் அதிகாரமே செல்லுபடி ஆகும். ஆகவே தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என கூறுகின்றன.

மாநில சட்ட முன்வரைவுகளை குடியரசுத்தலைவரின் கவனத்திற்கு தேக்கி வைத்தல்

  • மாநிலங்கள் நிறைவேற்றும் சட்ட முன்வரைவுகளை ஆளுநர்கள் குடியரசுத்தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். மாநிலத்தின் நிதி சட்ட முன்வரைவுகளை ஆளுநர்கள் தேக்கி வைத்தால் குடியரசுத்தலைவர் அவைகளை நிராகரிக்கலாம் அல்லது அவைகளுக்கு தனது இசைவைத் தெரிவித்து அவைகளை சட்டமாக்கலாம்.
  • மாநிலத்தின் சாதாரண சட்ட முன்வரைவுகள் ஆளுநர்களால் தேக்கி வைக்கப்பட்டால் குடியரசுத்தலைவர் அந்த முன்வரைவுகளை திரும்பவும் விவாதிக்குமாறு மாநில சட்டமன்றத்திற்கே அனுப்பி வைக்கலாம்.
  • மறுபரிசீலனை செய்து மீண்டும் அந்த முன்வரைவுகளை மாநில சட்டமன்றம் அனுப்பினாலும் குடியரசுத்தலைவர் முன்வரைவை நிராகரிக்கலாம். நமது நாட்டின் ஒற்றுமையை காப்பதற்காக அரசமைப்பு இவ்வழிமுறைகளை உருவாக்கியுள்ளது.
  • ஆனால் பல மாநில அரசாங்கங்கள் இவ்வழிமுறை மீது அதிருப்தி தெரிவித்துள்ளன. அரசியல் காரணத்திற்காக ஆளுநர்கள் இப்பிரிவை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சுமத்துகிண்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசாங்கங்களுக்கு எதிராக ஆளுநர்கள் இவ்விவகாரத்தை பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்.

உறுப்பு 356 தவறாக பயன்படுத்தப்பட்டால்

  • அரசமைப்பின் 18-வது பகுதியில் 356 உறுப்பு ஒரு மாநிலத்தில் அரசமைப்பு ஆட்சி முறை சீர்குலைந்து விட்டால் குடியரசுத்தலைவர் அவசர காலத்தை அமல்படுத்தலாம் என்று கூறுகின்றது. ஆளுநரின் அறிக்கையின் அடிப்படையிலோ அல்லது ஆளுநரின் அறிக்கை இல்லாமலோ குடியரசுத்தலைவர் உறுப்பு 356-ஐ அமல்படுத்தலாம். நமது நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதற்காக இப்பிரிவை அரசமைப்பு உருவாக்கியுள்ளது.
  • எதிர்க்கட்சிகள் ஆளும் பல்வேறு மாநிலங்கள் உறுப்பு 356 மத்திய அரசாங்கத்தினால் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று விமர்சித்துள்ளனர்.
  • மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு எதிராக இவ்வுறுப்பை தவறாக பயன்படுத்தியுள்ளதாக பல மாநிலங்கள் தெரிவித்துள்ளன. கட்சி அரசியல் காரணங்களுக்காக இவ்வுறுப்பு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே பல மாநில கட்சிகள் அரசமைப்பின் உறுப்பு 356-ஐ அகற்ற வேண்டும் என கோருகின்றன.

அனைத்து இந்தியப் பணிகள்

  • அரசமைப்பின் உறுப்பு 312 வழியாக அனைத்து இந்தியப் பணிகள் உருவாக்கப்படுகின்றன. இப்பணிகளின் அதிகாரிகள் மத்திய அரசாங்கத்தினால் தேர்வு செய்யப்படுகின்ரனர். மாநிலங்களுக்கு மத்திய அரசினால் இவ்வதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
  • மாநில அரசாங்கங்கள் அனைத்து இந்தியப் பணி அதிகாரிகளை இடமாற்றம் செய்யலாம். ஆனால் மத்திய அரசாங்கம் மட்டுமே அனைத்து இந்தியப் பணி அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்க முடியும். ஆகவே இவ்வதிகாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். மாநில அரசாங்கங்களின் மீது மத்திய அரசு இவ்வதிகாரிகள் மூலம் ஆதிக்கம் செலுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. தமிழ்நாடு அரசாங்கம் அமைத்த இராஜமன்னார் குழு அனைத்து இந்தியப் பணிகள் அகற்ற வேண்டும் என பரிந்துரைத்தது.
  • மத்திய மாநில உறவுகளை பற்றி இது வரையில் பல்வேறு குழுக்கள் பரிந்துரைகளை வழங்கியுள்ளன.

நிர்வாகச் சீர்திருத்தங்கள் குழு

  • நமது நாட்டின் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்காக இரண்டு நிர்வாகச் சீர்திருத்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நிர்வாகச் சீர்திருத்தக் குழு 1966-ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலும் பின்னர் கே.அனுமந்தையா தலைமையிலும் உருவாக்கப்பட்டது. இக்குழு 20 அறிக்கைகளை வழங்கியது. அவைகளில் ஒரு அறிக்கை மத்திய மாநில உறவுகளை பற்றி பரிந்துரைகளை வழங்கியது.
  • இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தங்கள் குழு 2005ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் வீரப்ப மௌலியும் பின்னர் வி.இராமச்சந்திரனும் தலைவர்களாக இருந்தனர்.

இராஜமன்னார் குழு

  • தமிழ்நாடு அரசாங்கம் நமது அரசமைப்பின் மத்திய மாநில உறவுகளை ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்குவதற்கு இராஜமன்னார் குழுவை அமைத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.இராஜமன்னார், சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ஏ.இலட்சுமணசுவாமி, ஆந்திர உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முனைவர் பி. சந்திர ரெட்டி ஆகியோர் இக்குழுவில் இருந்தனர்.
  • தங்களது பரிந்துரைகளை இக்குழு அரசாங்கத்திற்கு 1971 ஆம் ஆண்டு வழங்கியது. மாநில சுயாட்சி வரலாற்றில் மிகவும் முக்கிய மைல்கல்லாக இக்குழுவின் அறிக்கை உள்ளது.

இக்குழுவின் முக்கிய பரிந்துரைகள் கீழ்க்கண்டவைகள் ஆகும்.

  1. அரசமைப்பின் 263 உறுப்பு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். மாநிலங்களுக்கிடையேயான குழு உருவாக்கப்பட வேண்டும். இக்குழுவின் தலைவராக பிரதமர் பணிபுரிய வேண்டும். மாநில முதல்வர்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் உறுப்பினர்களாக பணியாற்ற வேண்டும். மாநிலங்களுக்கிடையேயான குழுவிடம் அதிக அதிகாரங்கள் இருக்கவேண்டும். மத்திய அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளையும், நாடாளுமன்றத்தின் சட்டங்களையும் இக்குழுவில் ஆலோசிக்க வேண்டும். தேசத்தின் பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய இரண்டு அதிகாரங்கள் தவிர, இதர எல்லா அதிகாரங்களையும், பயன்படுத்தும் முன் மத்திய அரசு மாநிலங்களுக்கிடையேயான குழுவை ஆலோசிக்க வேண்டும்.
  2. அரசமைப்பின் உறுப்புகள் 256, 257, 339 (2) ஆகியவைகளை நீக்க வேண்டும். இந்த உறுப்புகள் மாநில உரிமைகளை பாதிப்பதால் அவைகளை நீக்கி மாநில உரிமைகளை வலுப்படுத்த வேண்டும் என இராஜமன்னார் குழு பரிந்துரைத்தது.
  3. மூன்று பட்டியல்களில் இல்லாத இதர அதிகாரங்கள் மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு மாற்றப்பட வேண்டும். வரி விதிக்கும் அதிகாரமும் மாநில அரசுகளுக்கு மாற்றப்பட வேண்டும்.
  4. அரசமைப்பின் XVIII பகுதியில் உள்ள உறுப்பு 356 மத்திய அரசால் கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும். மாநிலத்தில் அரசியல் சாசன அமைப்பு முற்றிலும் சீர்குலைந்தால் மட்டுமே, கடைசி ஆயுதமாக மத்திய அரசு இவ்வுறுப்பை பயன்படுத்த வேண்டும். சாதாரண சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு இவ்வுறுப்பை மாநிலங்களில் மத்திய அரசு பயன்படுத்தக்கூடாது.
  5. இராஜமன்னார் குழு அனைத்து இந்தியப் பணிகளில் பெரிய அளவில் மாற்றங்களை பரிந்துரைத்தது. மத்திர அரசுக்கு சாதகமான, மாநில அரசுகளுக்கு எதிரான அனைத்து இந்தியப் பணிகள் தேவையில்லை. கூட்டாட்சி மூறைக்கு எதிராக இருப்பதால் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) உள்ளிட்ட அனைத்து இந்தியப் பணிகளை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு இராஜமன்னார் குழு பரிந்துரைத்தது.
  6. நிதி ஆதாரங்களை மத்திய அரசாங்கத்திடம் இருந்து மாநில அரசாங்கத்திற்கு அதிக அளவில் மாற்றித்தரவேண்டும் என இக்குழு கூறியது. மாநிலங்களின் நிதி சக்தியை அதிகரிப்பதற்கு தொழில் நிறுவனங்கள் வரி, ஏற்றுமதி வரி, சுங்க வரி போன்றவற்றை மத்திய அரசாங்கத்திடம் இருந்து மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும். நிதி ஆற்றல் தான் மாநில உரிமைகளின் அச்சாணி என்று இக்குழு கருதியது. ஆகவே அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில் திருத்தங்கள் பெரிய அளவில் செய்ய வேண்டும். மத்தியப் பட்டியலில், பொதுப் பட்டியல் ஆகியவற்றிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு அதிக அதிகாரங்களை மாற்றவேண்டும். நிதிக்குழு ஒரு நிரந்தர, பாகுபாடு இல்லாத அமைப்பாக மாற வேண்டும் என இராஜமன்னார் குழு பரிந்துரைத்தது.

சர்க்காரியா குழு

  • மத்திய அரசாங்கம் 1983 ஆம் ஆண்டு நீதியரசர் ஆர்.எச், சர்க்காரியா தலைமையில் ஒரு குழுவை உருவாக்கியது. இக்குழுவில் பி.சிவராமன், முனைவர் ஆர்.எஸ்.எஸ். சென் ஆகிய நிபுணர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். இக்குழு 247 பரிந்துரைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கையை ஐந்து வருடங்கள் கழித்து மத்திய அரசிற்கு சமர்ப்பித்தது.
  1. மாநிலங்களுக்கிடையேயான குழு:

அரசமைப்பின் உறுப்பு 263(பி) மற்றும் (சி) பணிகளை செய்யும் அதிகாரம் இக்குழுவிடம் வழங்கப்பட வேண்டும். மாநிலங்களின் பொதுவான நலன் கருதி மாநிலங்களுக்கிடையேயான குழு பரிந்துரைகளை வழங்க வேண்டும். ஆனால் அரசமைப்பின் உறுப்பு 263(அ)-யின் அதிகாரம் இக்குழுவிற்கு வழங்கப்படக்கூடாது. அதாவது மாநிலங்கள் இடையில் எழும் சிக்கல்களில் தலையிடும் அதிகாரம் மாநிலங்களுக்கிடையேயான குழுவிற்கு வழங்கக் கூடாது. மேலும் ஒரு நிரந்தர, சுயாட்சி பெற்ற செயலகத்தை மாநிலங்களுக்கிடையேயான குழுவிற்கு உருவாக்கித்தர வேண்டும்.

  1. அரசமைப்பின் உறுப்பு 356

இந்த உறுப்பு மிகவும் கவனமாக, மிகவும் கூறைவாகவே பயன்படுத்தப்பட வேண்டும். கடைசி ஆயுதமாக இவ்வுறுப்பு பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு மாநிலத்தில் அரசமைப்பு ஆட்சி முறை முற்றிலும் சீர்குலைந்தால் மட்டுமே இவ்வுறுப்பை பயன்படுத்த வேண்டும். உறுப்பு 356 அமல்படுத்துவதற்கு முன் எல்லா மாற்று உத்திகளையும் பயன்படுத்த வேண்டும்.

  1. ஆளுநர்:

ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும். ஆளுநரை நியமிக்கும் முன் சம்பந்தப்பட்ட மாநில அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என்ற சில அரசியல் கட்சிகளின் கருத்துக்களை சர்க்காரியா குழு நிராகரித்தது. கூட்டாட்சி முறை நன்கு செயல்படுவதற்கு அரசியல் தலைவர்களை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது என்று இக்குழு பரிந்துரைத்தது. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட பெருமை மிக்க இந்தியக் குடிமகன்களை ஆளுநர்களாக நியமிக்க வேண்டும். வெவ்வேறு கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் பொழுது, மத்தியில் ஆளும் கட்சியின் தலைவர்களை மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கக்கூடாது.

  1. மொழி:

மும்மொழிக்கொள்கையை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று சர்க்காரிய குழு பரிந்துரைத்தது. மும்மொழிக் கொள்கை தேசிய ஒற்றுமையை வளர்க்கும் என்று இக்குழு கூறியது.

புன்ச்சி குழு

  • மத்திய அரசாங்கம் 2007ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தலைமை நீதிபதி மதன் மோகன் புன்ச்சி தலைமையில் ஒரு புதிய குழுவை அமைத்தது. இக்குழுவில் மூன்று நிபுணர்களும் ஒரு செயலரும் இருந்தார். இக்குழு 2010 ஆம் ஆண்டு தனது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியது.
  • மாநில ஆளுநர்கள் குறிப்பிட்ட பதவிக்காலத்திற்கு நியமிக்கப்படவேண்டும். குடியரசுத்தலைவரை பதவி நீக்கம் செய்யும் முறை போல மாநில ஆளுநர்களும் நாடாளுமன்றத்தின் பதவி நீக்கம் செய்யும் முறை போல மாநில் ஆளுநர்களும் நாடாளுமன்றத்தின் பதவி நீக்க தீர்மானம் மூலம் மட்டுமே பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
  • ஒரு மாநிலத்தில் கிளர்ச்சியில் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் அல்லது பகுதிகளில் மட்டுமே குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம். மாநிலம் முழுவதும் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை.
  • இதற்காக அரசமைப்பின் உறுப்புகள் 355, 356 ஆகியவற்றில் மாற்றம் செய்ய வேண்டும். மதக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசாங்கத்தின் ஒப்புதல் பெறாமலே மத்திய அரசு தனது காவல் படைகளை அனுப்பி அமைதியை நிலைநாட்டலாம்.

எஸ்.ஆர்.பொம்மை வழக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு

சோமப்ப ராயப்ப பொம்மை (6 ஜூன் 1924 முதல் 10 அக்டோபர் 2007 வரை) கர்நாடக மாநிலத்தின் பதினோராவது முதல்வராக பணியாற்றினார். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் 1996 முதல் 1998 வரை மனிதவள முன்னேற்ற அமைச்சராகவும் இருந்தார். எச்.டி.தேவகவுடா, ஐ.கே.குஜரால் ஆகிய இரண்டு புரதமர்களின் அமைச்சரவையில் அவர் பணியாற்றியுள்ளார்.

எஸ்.ஆர்.பொம்மை அவர்கள் முதல்வராக இருந்த கர்நாடாக அரசாங்கம் மத்திய அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் 1994 ஆம் ஆண்டு புகழ்பெற்ற பொம்மை வழக்குத் தீர்ப்பை வழங்கியது. மத்திய மாநில உறவுகளில், மாநில உரிமைகளை காப்பதில் பொம்மை வழக்குத் தீர்ப்பு மிக முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.

மத்திய அரசாங்கம் தன்னிச்சையான முறையில், அரசமைப்பிற்கு எதிராக மாநில அரசாங்கங்களை பதவி நீக்கம் செய்யக்கூடாது என்பது இத்தீர்ப்பின் மையக் கருத்தாகும். அரசியலமைப்பின் 356-வது உறுப்பை கவனத்துடன், கடைசி ஆயுதமாக மத்திய அரசாங்கம் பயன்படுத்த வேண்டும். அரசியல் சாசன ஆட்சி சீரழிந்தால் மட்டுமே இவ்வுறுப்பை மத்திய அரசு பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் எந்த ஒரு கட்சிக்கும் கூட்டணிக்கும் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை. மத்திய அரசாங்கத்தின் கட்டளைகளை மாநில அரசாங்கம் மதிக்கவில்லை போன்ற காரணங்களுக்கு மாநில அரசாங்கத்தை மத்திய அரசு பதவி நீக்கம் செய்யலாம்.

சாதாரண காரணங்களுக்காக மத்திய அரசு 356-வது உறுப்பை பயன்படுத்தக்கூடாது. எடுத்துக்காட்டாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலத்தில் ஆளும் கட்சி தோற்றுவிட்டது.

மாநிலத்தில் அரசியல் சாசன ஆட்சிமுறை சீரழிந்துவிட்டது என்ற ஆளுநரின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மாநிலத்தில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை ஆளுநரின் அறிக்கை தெளிவாக விவரிக்க வேண்டும். மாநிலத்தின் சட்டப்பேரவை கலைக்கப்படுவதற்கு முன் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

நீதிமன்றம் உறுப்பு 356 கீழ் மாநில அரசை மத்திய அரசாங்கம் பதவி நீக்கம் செய்தது சரியா, தவறா என ஆராயும் அதிகாரத்தை பெற்று இருக்கின்றது. உறுப்பு 356 தவறாக மத்திய அரசால் பயன்படுத்தப்பட்டால் உச்ச நீதிமன்றம் நீதி சீராய்வு அதிகாரத்தை பயன்படுத்தும். பதவி நீக்கம் அரசமைப்பிற்கு எதிராக இருந்தால் உச்ச நீதிமன்றம் பதவி நீக்கப்பட்ட மாநில அரசாங்கத்தை மீண்டும் பதவியில் அமர்த்தும்.

பொம்மை வழக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு மத்திய அரசின் தன்னிச்சையான பதவி நீக்க நடவடிக்கைகயில் இருந்து மாநில அரசாங்கங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

அண்ணல் அம்பேத்கர் அரசமைப்பின் உறுப்பு 356-யை (தேவையற்ற வார்த்தை) என்று வர்ணித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு எதிராக இவ்வுறுப்பு உள்ளதை அவர் கசப்புடன் ஏற்றுக்கொண்டார்.

வெங்கடசெல்லையா குழு

பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய மக்களாட்சிக் கூட்டணி அரசாங்கம் 2000-ஆம் ஆண்டு நீதியரசர் நாராயணராவ் வெங்கடசெல்லையா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இந்திய அரசமைப்பு மதிப்பாய்வு தேசிய குழு (NCRWC) அரசமைப்பில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் எனக் கூறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!