பணவியல் பொருளியல் Notes 12th Economics Lesson 5 Notes in Tamil
12th Economics Lesson 5 Notes in Tamil
5. பணவியல் பொருளியல்
பண வீக்கம் சட்டபூர்வமற்ற வரிவிதிப்பு
– மில்டன் பிரெடுமேன்
அறிமுகம்
பொருளியலின் ஒரு பகுதியாக பணவியல் பொருளியல் பாடம் அமைந்துள்ளது. இதில் பணம், அவற்றின் பணிகளான பரிவர்த்தனை, மதிப்புகளின் இருப்பு வைத்தல், மதிப்பீட்டு அலகு ஆகியவற்றினை பகுப்பாய்வு செய்வதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தி தருகின்றது. மேலும், இது பணம் மற்றும் பணத்தை நிர்வகிக்கும் நிறுவனங்களை உள்ளடக்கிய பண அமைப்பு முறையின் செயல் விளைவுகளையும் ஆராய்கிறது.
பணம்
பொருள்
- பொருட்கள் மற்றும் பணிகளை வாங்குவதற்கும், கடன்களை திரும்பச் செலுத்துவதற்கும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டு கருவியே பணம் ஆகும். பொது இடையீட்டுக் கருவி என்பது மேற்கண்ட பரிமாணங்களில் அனைவராலும் தயக்கமின்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்று ஆகும்.
- உலகநாடுகளில் அண்மைக்காலமாக கடனின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. காசோலைகள், மாற்றுச் சீட்டுகள் போன்ற கடன்கருவிகள் அதற்காக பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், பணமே அனைத்து கடன்களுக்கான அடிப்படை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
இலக்கணங்கள்
பணத்திற்கு பல பொருளியல் அறிஞர்கள் இலக்கணம் வகுத்துள்ளனர் அவைகளில் வாக்கர் மற்றும் கிரௌதர் ஆகிய இரு அறிஞர்களின் இலக்கணம் கீழே தரப்பட்டுள்ளது.
“பணம் எதைச் செய்கிறதோ, அதுவே பணம்” (Money is what money does”)
வாக்கர்
“பரிவர்த்தனைகளில் பொது ஏற்புத்தன்மை கொண்ட ஒரு இடையீட்டுக் கருவியாகவும், மதிப்பளவை மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல் ஆகியவற்றினைச் செய்யும் ஒன்றாகவும் இருப்பது பணம் ஆகும்”.
– கிரௌதர்.
பணத்தின் பரிணாம வளர்ச்சி (Evaluation of Money)
பண்டமாற்று முறை (Barter System)
- பணத்தினை ஒரு பரிமாற்றக் கருவியாக அறிமுகப்படுத்தியது மனிதகுலத்தின் கண்டுபிடிப்புகளில் உயரிய ஒன்றாகும். பணம் அறிமுகமாவதற்கு முன் பண்டங்கள் மற்றும் பணிகளை நேரடியாக பரிமாறிக்கொள்ளும் பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்து வந்தது.
- பிறரிடம் உள்ள தங்களுக்கு தேவையான பொருட்களை அல்லது பணிகளை பெறும்பொருட்டு, தங்களிடம் உள்ள பொருட்களை அல்லது பணிகளை மாற்றாக வழங்குவது பண்டமாற்று மூறையாகும்.
- ஆனால், காலப்போக்கில் பண்டமாற்று முறையில் பொருட்களை வாங்குபவர்களும் விற்பவர்களும் நிறைய சிக்கல்களை சந்தித்து வந்தனர். பண்டமாற்று முறையின் தோல்விக்குப்பின், தேவைபோக உபரியாக இருந்த பொருட்களை பரிமாறிக்கொள்ள பணம் என்ற இடையீட்டுக் கருவி தேவைப்பட்டது.
- அந்நிலையில் பொது இடையீட்டுக் கருவிகளாக விலங்கின் தோல், உரோமம், உப்பு, அரிசி, கோதுமை, பாத்திரங்கள், ஆயுதங்கள் போன்ற பொருட்கள் பணமாக பயன்படுத்தப்பட்டு வந்தன. இவ்வாறு பொருட்களை பொருட்களுக்கு மாற்றிக் கொள்ளும் முறையே பண்டமாற்று முறை என அழைக்கப்பட்டது.
பண்டமாற்று முறையின் வரலாறு 6000 BCயில் துவங்கியது.
- மெசபடோமியா பழங்குடியினரால் பண்டமாற்று முறை பயன்படுத்தப்பட்டது.
- ஃபோனீஷியர்களால் (Phoenicians) கடல் கடந்து பல்வேறு நகரங்களில் இம்முறை பயன்படுத்தப்பட்டது.
- பாபிலோனியர்கள் பொருட்களுக்குப் பொருட்களை மாற்றும் பண்டமாற்று முறையை பயன்படுத்தினர்.
உலோகத் திட்டம் (Metalic Standard)
- பண்டமாற்று முறை மற்றும் பண்டப் பணமுறைக்குப் பின் நவீன பண முறைகள் தோன்ற ஆரம்பித்தது. அதில் முதன்மையானது உலோகப் பணத்திட்டம் ஆகும். உலோகத்திட்டத்தில் தங்கம், வெள்ளி போன்ற ஏதாவது ஒரு உலோகம் பணத்தின் திட்ட மதிப்பினை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்பட்டது.
- உலோகத் திட்டத்தின் கீழ் உலோக நாணயங்கள் பணமாக உருவாக்கப்பட்டன. இந்த நாணயங்கள் முழு மதிப்பு பணமாக அல்லது முழு நிறையுடைய சட்டமுறை பணமாக இருந்து வந்தன. அதாவது அந்நாணயங்களில் முக மதிப்பு மற்றும் உள்ளடக்க மதிப்பு ஆகிய இரண்டும் சமமாக இருந்தன.
பொன் திட்டம் (Gold Standard)
பொன்திட்ட்த்தின் கீழ் ஒரு பணத்தின் அலகு ஒரு குறிப்பிட்ட எடையிலான பொன் அளவினால் வரையறுக்கப்பட்டிருந்தது. ஒரு பண அலகின் வாங்குதிறன் அப்பொன் பணத்தின் எடை அளவுக்கு சமமாக நிர்வகிக்கப்பட்டு வந்தது.
வெள்ளித் திட்டம் (Silver Standard)
வெள்ளித் திட்டத்தில் ஒரு பணத்தின் அலகு குறிப்பிட்ட அளவிலான வெள்ளி உலோகத்தின் மதிப்பிற்கு ஈடானதாக இருந்தது. இம்முறையில் ஒரு நாட்டின் அரசு அதன் பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் வெள்ளியாக மாற்றிக்கொள்ளும் அனுமதியினை வழங்கியிருந்தது.
காகிதப் பணத் திட்டம் (Currency Standard)
- காகிதப் பணத்திட்டம் என்பது நாட்டின் கருவூலமோ, மைய வங்கியோ அல்லது இரண்டுமோ வரையறையற்ற சட்டமுறை பணமாக காகித பணத்தினை புழக்கத்திற்கு வழங்கும் ஓர் பண மூறையாகும்.
- காகித பண முறையில், பணத்திற்கு ஈடான மதிப்பினை உலோகமாக மாற்ற முடியாது. காகிதப்பண மதிப்பு நிர்ணயம் பொன் மற்றும் வெள்ளி போன்ற உலோக மதிப்புகளை சார்ந்து இருப்பதில்லை. காகிதப் பணத்திட்டம் நிர்வகிக்கப்படும் காகிதப் பணத்திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
- விலைவாசியை நிலைப்படுத்தும் நோக்கில் புழக்கத்திலுள்ள பண அளவினை நாட்டின் உச்ச நிலை அதிகார அமைப்பான மையவங்கி கட்டுப்படுத்துகிறது. பண மதிப்பிற்கான அரசின் கட்டளையைத் தாங்கி வருவதால் காகிதப் பணத்திட்டம் கட்டளைப் பணத்திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
நெகிழிப் பணம் (Plastic Money)
- அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பணம் நெகிழிப் பணமாகும். இது நிதிப் பொருட்களின் வரிசையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தோற்றமாகும். நெகிழிப் பணம் நடைமுறையிலுள்ள காகிதப் பணத்திற்கு ஒரு மாற்றாகும்.
- தினந்தோறும் பயன்படுத்தும் வகையில் நெகிழி அட்டையால் (Plastic Money) உருவாக்கப்பட்டிருப்பதால் இது வெகிழி பணம் என்றழைக்கப்படுகீறது.
- ரொக்க அட்டை, கடன் அட்டை, பற்று அட்டை, முன்கூட்டியீ பணம் செலுத்தப்பட்ட அட்டை, வணிக நிறுவன அட்டை (Store Card), அந்நிய செலாவணி அட்டை (Forex Card) மற்றும் சூட்டிகை அட்டை (Smart Card) என்று நெகிழிப் பணம் பல்வேறு வடிவங்களில் வந்துகொண்டிருக்கிறது. பரிவர்ந்தனைக்காக ரொக்கப் பணம் கையில்கொண்டு வருவதை தவிர்ப்பதுதான் இவ்வகைப் பணத்தின் நோக்கம் ஆகும்.
மெய்நிகர் பணம் (Crypto Currency)
மைய வங்கியைச் சாராமல் பண பெருக்கத்தை நீர் செய்தல் மற்றும் நிதி மாற்றத்தை சரிபார்த்தல் போன்ற சுதந்திரம் கொண்ட டிஜிட்டல் நாணயங்கள் மெய்நிகர் பணமாகும்.
- பிட்காயின் (Bitcoin) போன்ற பரவலாக்கப்பட்ட பணம் தனிநபர் சொத்துக்கள் கட்டுபாட்டுக்குள்ளும் கையகப்படுத்துதலுக்குள்ளும் உட்படாமல் இருக்க ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகின்றது.
பணத்தின் பணிகள் (Functions of Money)
பணத்தின் முக்கிய பணிகள் நான்கு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன:
- முதன்மை பணிகள்
i) பணம் ஓர் பரிவர்த்தனை கருவியாக: இது பணத்தின் அடிப்படை பணியாகும். பணம் பொது ஏற்புத் தன்மையைக் கொண்டது. மேலும், இது அனைத்து பரிவர்த்தனைகளிலும் தவறாது இடம்பெறுகிறது. பணத்தை பயன்படுத்தி செய்யும் பரிவர்த்தனைகளை இரு பகுதிகளாக பார்க்கலாம். முதலில் மற்றொருவருக்கு பொருட்களை வழங்கும்பொழுது பணம் பெறப்படுகிறது. இந்த செயல் விற்பனை எனப்படுகிறது. இரண்டாவதாக, பொருட்களை நாம் வாங்கும்பொழுது பணம் செலுத்தப்படுகிறது. இது கொள்முதல் எனப்படுகிறது. ஆகவே, நவீன பரிவர்த்தனைகளில் பணம் ஒரு இடையீட்டு கருவியாக செயல்பட்டு வருகிறது.
ii) பணம் ஓர் மதிப்பின் அளவுகோலாக: பொருட்கள் மற்றும் பணிகளை மதிப்பளவை செய்வது பணத்தின் இரண்டாவது முக்கிய பணியாகும். பொருட்கள் மற்றும் பணிகளின் மதிப்புகளை பண அலகில் விலைகளாக வெளிப்படுத்தப்படுகிறது. ஆகவே, பணம் ஒரு பொது அளவுகோலாக பார்க்கப்படுகிறது. இதனால் சமுதாயத்திலுள்ள பல்வேறு பொருட்களுக்கான பரிவர்த்தனை விகிதங்களை எளிதாக தீர்மானிக்க உதவுகிறது.
2. இரண்டாம் நிலை பணிகள்
i) பணம் ஒரு மதிப்பு நிலைக்கலனாக:
பொருட்களை சேமிப்பாக வைத்திருந்தால் அது நிலைத்திருக்காது. ஆனால் பணம் கண்டுபிடிக்கப்பட்டபின் பொருள் மற்றும் பணியினை சேமித்து வைப்பதில் உள்ள சிக்கல்கள் மறைந்துவிட்டன. பணம் நீர்மைத் தன்மையைக் கொண்டிருப்பதனால், அதை எப்பொழுது வேண்டுமானாலும் நிலம், இயந்திரம் மற்றும் தளவாடம் என எளிதாக சந்தைப்படுத்தப்படும் சொத்துக்களாக மாற்ரிக்கொள்ளலாம். அவ்வகை சொத்துக்களை மீண்டும் பணமாகவும் மாற்றிக் கொள்ள இயலும். ஆகவே, பணம் மிக சிறந்த மதிப்பின் நிலைக்கலனாக செயல்படுகிறது. அதேசமயம் , பணத்தின் மதிப்பு ஓரளவுக்கு நிலைத்தன்மை கொண்டதாக இருந்தால் தான் இவ்வகையில் தனது பணியை சிறப்பாக செய்யமுடியும்.
ii) பணம் வருங்கால செலுத்துதல்களுக்கான ஓர் அடிப்படை:
பண்டமாற்று முறையில் கடன் வாங்குவதிலும் திருப்பிச் செலுத்துவதிலும் சிக்கல் நிறைந்திருந்தது. கடனுக்குப் பெறப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளை திருப்பிச் செலுத்தும்பொழுது மதிப்பு மாற்றத்தினால் எந்த அளவு பொருட்களை, பணிகளை திருப்பிச் செலுத்துவது என்ற சிக்கல் இருந்தது. ஆனால், இன்றைய நவீன பொருளாதாரத்தில் கடன்களை பெறுவதையும், திரும்பச் செலுத்துவதையும் பணம் எளிதாக்குகிறது. அதாவது பணம் வருங்கால செலுத்துதல்களுக்கு இடையீட்டுக் கருவியாக செயல்படுகின்றது.
iii) பணம் வாங்குதிறனை மாற்றிக்கொள்ளும் ஒரு கருவியாக:
பொருளாதார வளர்ச்சியினை ஒட்டி பரிவர்த்தனை விரிவடைந்து செல்கிறது. தூரப்பகுதிகளுக்கு இடையிலும், எல்லை கடந்தும் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. இதனால், ஓரிடத்திலிருக்கும் வாங்குதிறன் மற்றொரு இடத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பணம் என்ற கருவி இந்த பணியினை எளிதாகவும் விரைவாகவும் செய்கிறது.
3. துணைப்பணிகள்
i) கடனுக்கான அடிப்படை:
கடன்முறைக்கு அடிப்படையாக பணம் அமைந்துள்ளது. வணிக பரிவர்த்தனைகள் ரொக்கத்திலோ அல்லது கடனிலோ நடைபெறுகிறது. உதாரணத்திற்கு, வங்கி வைப்பினை வைத்திருக்கும் ஒருவர் அவர் கணக்கில் போதிய அளவு ரொக்க பண இருப்பு இருக்கும்பொழுது மட்டுமே காசோலைகளை பயன்படுத்துவார். வணிக வங்கிகள் வாடிக்கையாளர் கணக்குகளிலுள்ள ரொக்க இருப்பின் அளவை பொறுத்தே கடன்களை உருவாக்கின்றன. ஆகவே, ரொக்க இருப்பின் அளவை பொறுத்தே கடன்களை உருவாக்குகின்றன. ஆகவே, ரொக்க பணமே கடனுக்கான அடிப்படையாக அமைகிறது.
ii) பணம் தேசிய வருவாய் பங்கீட்டிற்கு உதவுகிறது: பண்டமாற்று மூறையில் தேசிய வருவாய் பங்கீடானது மிகச்சிக்கலான ஒன்றாகும். ஆனால், பணம் என்ற கருவி கண்டறியப்பட்ட பின் வாரம், கூலி, வட்டி மற்றும் இலாபம் என காரணிகளுக்கான வருமானத்தை, அதாவது தேசியவருவாயை எளிதாக பகிர்ந்தளிக்க முடிகிறது.
iii) இறுதிநிலைப் பயன்பாடுகளை ஒப்பிடவும், இறுதிநிலை உற்பத்தி திறன்களை ஒப்பிடவும் பணம் பயன்படுகிறது. நுகர்வோர் தனது மொத்த பயன்பாட்டினை உச்சநிலைப்படுத்தும் நோக்கில் தான் நுகரும் பல்வேறு பொருட்களின் இறுதிநிலைப் பயன்பாடுகளை பணத்தின் துணையுடன் சமப்படுத்த வேண்டியதாகிறது. ஏனெனில், பொருட்களின் விலை பணத்தில் உள்ள நிலையில் இறுதிநிலைப் பயன்பாடுகள் பணத்தின் அலகுகளில் வெளிப்படுத்தும்பொழுதுதான் அவைகளை ஒப்பிட்டு பயன்பாட்டினை உச்சநிலைப்படுத்த முடியும். அதேபோல், உற்பத்தியாளர் தனது இலாபத்தினை உச்சநிலைப்படுத்த பல்வேறு காரணிகளின் இறுதிநிலை உற்பத்தி திறனை பண அளவுகளில் ஒப்பிட வேண்டியுள்ளது.
iv) பணம் மூலதனத்தின் உற்பத்தி திறனை உயர்த்துகிறது: மூலதனம் பல்வகை வடிவங்களில் காணப்படுகிறது. பணம் நீர்மைத்தன்மை கொண்ட ஒரு மூலதனமாகும். அதாவது, பணம் மூலதனத்தை எளிய முறையில் பிறவகை மூலதனமாக மாற்றலாம். பிறவகை மூலதனங்களை பணமாகவும் மாற்றலாம். ஆகவே, உற்பத்தியில் குறைந்த இறுதிநிலை உற்பத்தி திறன் கொண்ட ஒரு மூலதனத்தை மாற்றி, அந்த இடத்தில் அதிக இறுதிநிலை உற்பத்தித் திறன் கொண்ட மற்றொரு மூலதனத்தை கொணர பணம் துணை செய்கின்றது.
4. இதர பணிகள்
i) திரும்பச் செலுத்தும் திறனை தக்கவைக்க பணம் உதவுகிறது: பணம் பொது ஏற்புத்தன்மை கொண்ட ஒரு சாதனமாகும். நிறுவனங்கள் தங்களின் செலுத்துதல்கஆளிஅ மேற்கொள்ள எப்பொழுதும் குறிப்பிட்ட அளவு ரொக்க பணத்தை தயார் நிலையில் வைத்திருக்கும். இதேபோல், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களும்கூட தங்களது திரும்பச் செலுத்தும் திறனை தக்கவைத்துக்கொள்ள பணத்தை தயார் நிலையில் வைத்திருக்கும்.
ii) பணம் பொதுமையப்படுத்தப்பட்ட வாங்கு திறனை குறிக்கிறது: பணம் என்ற வாங்குதிறன் கொண்ட சாதனத்தைக்கொண்டு எதை வாங்குவதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக அந்த பணம் என்ற வாங்குதிறன் சேமித்து வைக்கப்பட்டதோ, அதை மட்டுமே வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
iii) பணம் மூலதனத்திற்கு நீர்மைத் தன்மையை தருகிறது. பணம் என்பது நீர்மைத் தன்மை கொண்ட ஒரு மூலதனமாகும். இதன் துணையுடன் அனைத்து இடுபொருட்களை வாங்குவதன் மூலம் எந்த ஒரு செய்பொருளையும் உற்பத்தி செய்ய இயலும்.
பண அளிப்பு
ஒரு பொருளாதாரத்தில் உள்ள மொத்தப் பண அளவே பணஅளிப்பு ஆகும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாட்டில் புழக்கத்தில் உள்ள பண அளவைக் குறிப்பதே பண அளிப்பாகும். வட்டிவிகிதம், விலைவாசி போன்றவற்ரை நிர்ணயிப்பதில் பணஅளிப்பு முக்கியப்பங்காற்றுகின்றது. குறிப்பிட்ட காலத்தில் பண அளிப்பு நிலைக் (stock) கருத்தாகவும் ஒரு கால இடைவெளியில் ஓட்டக் (flow) கருத்தாகவும் உள்ளது.
பண அளிப்பின் பொருள்
இந்தியாவில் காகிதப் பணங்கள் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவாலும் நாணயங்கள் மத்திய அரசின் நிதித்துறையாலும் வெளியிடப்படுகின்றது. இது தவிர பொது மக்களால் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு வித கணக்குகளில் உள்ள இருப்புத் தொகைகளும் பணமாக கருதப்படுகின்றது. காகிதபணங்கள் அதிகாரம் பெற்ற சட்ட பூர்வமான செலாவணியாகும்.
இந்திய ரிசவ் வங்கி பண அளிப்பில் M1, M2, M3 மற்றும் M4 என நான்கு வகையிலான அளவீடுகளை செய்கின்றது:
M1 = காகிதப்பணம், நாணயங்கள் மற்றும் கேட்பு வைப்புகள்
M2 = M1+ அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள்
M3 = M2+அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளிலுள்ள கால வைப்புகள்
M4 = M3 + அஞ்சலகத்திலுள்ள அனைத்து வைப்புகள்.
இதில் M1 மற்றும் M2 குறுகிய பணம் என்றழைக்கப்படுகிறது. மேலும் M3 மற்றும் M4 பரந்தநிலை பணம் என்றழைக்கப்படுகிறது.
மேற்கூறிய M1 மற்றும் M2 வரையிலான வகைப்பாட்டு வரிசையில் பணத்தின் நீர்மைத்தன்மை தொடர்ச்சியாக குறைந்து வருவதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்
பணக் குறியீடு ₹
இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) மும்பையில் முதுகலைப் பட்டம் பெற்ற திரு.D.உதயகுமாரால் வடிவமைக்கப்பட்ட புதிய பணக் குறியீடு ஜூலை 15, 2010ம் ஆண்டில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேவநாகரி எழுத்து ‘ரா’வும் ரோமன் எழுத்து ‘R’ இல் செங்குத்துக்கோடு இல்லாமலும் உள்ள வடிவமைப்பாகும். அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஐரோப்பா நாடுகளுக்குப்பின் இந்தியா தனிப் பணக் குறியீடு கொண்ட நாடாக விளங்குகின்றது.
பண அளிப்பினை தீர்மானிக்கும் காரணிகள்
- ரொக்க வைப்பு விகிதம் (Cash Deposit Ratio – CDR). இது பொது மக்கள் கையில் வைத்திருக்கும் பணம்/வங்கி வைப்புகளில் உள்ள பணம் என்ற விகிதத்தை குறிக்கும்.
- ரொக்க இருப்பு வைப்பு விகிதம் (Reserve Deposit Ratio – RDR). “வங்கி தனது பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருக்கும் இருப்பு மற்றும் மைய வகியில் வைத்திருக்கும் ரொக்க வைப்பு/மொத்த வைப்புகள்” என்ற விகிதம்.
- ரொக்க இருப்பு விகிதம் (Cash Reserve Ratio – CRR). “வங்கியில் வைப்புகளில் குறைந்தபட்சமாக மையவங்கியில் வைக்க வேண்டிய அளவு /வங்கிகளில் செலுத்தப்பட்ட மொத்த வைப்புக்கள்” என்ற விகிதம்.
- சட்டபூர்வ நீர்மை விகிதம் (Statutory Liquidity Ratio – SLR). “வணிக வங்கிகள் வைத்திருக்கும் நீர்மை தன்மையிலான சொத்துக்கள்/வணிக வங்கிகளில் இருக்கும் மொத்த கேட்பு மற்றும் கால வைப்புகள்” என்ற விகிதம்.
பண அளவு கோட்பாடுகள்
- பண அளவுக் கோட்பாடுகள் பணத்தின் அளவிற்கும், பணத்தின் மதிப்பிற்கும் இடையேயான தொடர்பினை எடுத்துரைப்பதாகும். இங்கு, பிஷரின் பண அளவுக் கோட்பாடு மற்றும் கேம்பிரிட்ஜ் ரொக்க இருப்பு அணுகுமுறை கோட்பாடு ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன.
அ) ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு
பண அளவுக் கோட்பாடு என்பது மிக பழமையான கோட்பாடு ஆகும். இது 1588-ஆம் ஆண்டு டாவன்ஷட்டி என்ற இத்தாலிய பொருளியல் அறிஞரால் முன்மொழியப்பட்டது. ஆனால், நவீன வடிவிலான இக்கோட்பாட்டினை உருவாக்கிய புகழ் முழுவதும் “பணத்தின் வாங்கும் சக்தி” (1911) என்ற நூலை எழுதிய அமெரிக்க பொருளியலறிஞரான இர்விங் ஃபிஷரைச் சாரும். இவர் தனது கோட்பாட்டினை “பரிவர்த்தனைக்கான சமன்பாடு” என்று கனித சமன்பாட்டின் வாயிலாக வழங்கியுள்ளார்.
இச்சமன்பாட்டின் பொது வடிவம் ஆகும். இங்கு
MV = PT
M = மொத்த (காகித) பண அளவு
V = பணத்தின் சுழற்சி வேகம்;
P = பொது விலை மட்டம்
T = வாணிபத்தின் அளவு
ஃபிஷர் ஒரு நாட்டில் குறிப்பிட்ட கால அளவில் மொத்த பண அளிப்பு (MV) என்பது நாட்டில் வாங்க-விற்கப்படும் பொருட்கள் மற்றும் பணிகளின் அளவின் பன மதிப்பிற்கு (அதாவது மொத்த பணத்தேவைக்கு) (PT) சமமாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றார்.
MV = PT
பண அளிப்பு = பணத்தேவை
இச்சமன்பாடு “ரொக்க பரிவர்த்தனை சமன்பாடு” என்றும் அழைக்கப்படுகிறது.
மேற்சொன்ன சமன்பாட்டினை P = MVT என்று மாற்றியமைக்கும்பொழுது, பண சுழற்சி வேகமும், வாணிபத்தின் அளவும் மாறாதிருக்கும் சூழ்நிலையில் பணத்தின் அள்வௌ எவ்வகையில் பொது விலைமட்டத்தையும், பணத்தின் மதிப்பினையும் நிர்ணயிக்கிறது என்பதை விளங்குகின்றது. இங்கு பண அளவு மாறுதல் நேரடியாக விலைமட்டத்தை பாதிக்கிறது.
மேற்சொன்ன சமன்பாடு காகிதப் பணத்தை மட்டுமே கணக்கில்
கொண்டுள்ளது. ஆனால், நவீன வாணிப பொருளாதாரத்தில் காகிதப் பணத்துடன் வங்கியிலிருக்கும் கேட்பு வைப்புகள், கடன் பணம் மற்றும் அவைகளின் சுழற்சி வேகம் ஆகிய அனைத்தும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகவே, ஃபிஷர் தனது சமன்பாட்டினை கீழ்க்கண்டவாறு விரிவாக்கினார்.
PT = MV + M1V1
P =
மேற்கண்ட விரிவாக்கப்பட்ட சமன்பாட்டில், பொது விலைமட்டமானது (P) காகிதப் பண அளவு (M), பணத்தின் சுழற்சி வேகம் (V), வங்கி கடன் பணத்தின் அளவு (M1) வங்கிக் கடன் பணத்தின் சுழற்சி வேகம் (V1) மற்றும் மொத்த வாணிபத்தின் அளவு (T) ஆகிய காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது.
வரைபட விளக்கம்
வரைபடம் (A) மொத்த பண அளவில் ஏற்படுத்தப்படும் மாறுதல் விலைமட்டத்தில் எவ்வாறு மாற்றத்தினை ஏற்படுத்துகிறது என்பதனை உணர்த்துகிறது. பண அளவு OM ஆக இருக்கும்பொழுது விலைமட்டம் OPயாக உள்ளது. பிறகு பண அளவினை OM2 என இரட்டிப்பாக்கும் பொழுது விலைமட்டமும் OP2 என இரட்டிப்பாகிறது. மேலும், பண அளவு OM4 என நான்கு மடங்காகிறது. விலைமட்டச் சார்பு OP = f(M)க்கான நேர்கோடு வரைபடத்தின் தோற்றுவாயிலிருந்து 450 அமையும்பொழுது பணத்தின் அளவிற்கும் விலைமட்டத்திற்கும் உள்ள நேரடி சமவிகித உறவு விளங்குகிறது.
வரைபடம் (B) பணத்தின் அளவிற்கும், பணத்தின் மதிப்பிற்கும் உள்ள தலைகீழ் உறவினை விளக்குகிறது. வரைபடத்தின் செங்குத்து அச்சில் பண மதிப்பும் (O1/P) படுகிடை அச்சில் பண அளவும் (M)குறிக்கப்பட்டுள்ளன. பண அளவும் OM ஆக உள்ளபொழுது, பணமதிப்பு O1/P-ஆக உள்ளது. பின்னர் பண அளவினை OM2 என இரட்டிப்பாக்கும் பொழுது பண மதிப்பு O1/P2 என பாதியாக குறைகிறது. தொடர்ந்து பண அளவினை OM4 என நான்கு மடங்காக்கும்பொழுது பணமதிப்பு O1/P4 என நான்கில் ஒரு பகுதியாக குறைகிறது. பண மதிப்புச் சார்பு O1/P = f(M) க்கான வளைகோடு மேலிருந்து கீழ்நோக்கி சார்ந்து பண அளவிற்கும் பண மதிப்பிற்கும் உள்ள எதிர்மறையான மற்றும் சமவிகித தொடர்பினை சுட்டிக்காட்டுகிறது.
ஆ) கேம்பிரிட்ஜ் அணுகுமுறை (ரொக்க இருப்பு அணுகுமுறை)
- மார்ஷலின் சமன்பாடு
மார்ஷலின் சமன்பாடு பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
M = KPY
இங்கு,
M – பணத்தின் அளவு
Y – சமுதாயத்தின் மொத்த உண்மை வருமானம்
P – பொது விலைமட்டம்
K – மக்கள் தங்கள் கையில் ரொக்கமாக வைத்திருக்க விரும்பும் சமுதாயத்தின் மொத்த உண்மை வருமானத்தின் ஒரு பகுதி.
மேற்கண்ட சமன்பாட்டினை மாற்று எழுதும்பொழுது, P = M/KY என்று பொதுவிலை மட்டத்தினை (P) காண உதவுகிறது. மேலும் அதனை தலைகீழியாக மாற்றி எழுதும் பொழுது நமக்கு 1/P = KY/M என பணத்தின் வாங்கும் சக்தி, அதாவது பண மதிப்பினை கண்டறிய முடிகிறது.
இறுதியாக கூறப்பட்ட 1/P = KY/M என்ற சமன்பாட்டினை மேலும் சற்று விளக்கமாக கூற வேண்டுமெனில், மக்கள் தங்கள் கையில் வைத்திருக்க விரும்பும் உண்மை வருமானத்தை (KY = மொத்த பணத்தேவையின் அளவு) பண அளிப்பினால் (M) வகுத்தால் பணத்தின் மதிப்பினை கண்டறியலாம்.
மார்ஷல் கூற்றுப்படி, பண அளவு (M) என்ற காரணியைவிட மக்கள் தங்கள் கையில் ரொக்கமாக வைத்திருக்க விரும்பும் உண்மை வருமானத்தின் பகுதி (K என்ற கெழு) பணமதிப்பினை தீர்மானிப்பதில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது.
- கீன்ஸின் சமன்பாடு
கீன்ஸின் முதல் சமன்பாடு பின்வரும் வைகையில் அமைகின்றது.
n = pk (or) p = n/k
இங்கு,
N = மொத்த பண அளிப்பு
p = நுகர்ச்சிப் பொருட்களின் விலை மட்டம்
k = மக்கள் தங்கள் கையில் வைத்திருக்க விரும்பும் வருமானத்தின் ஒரு பகுதி – நுகர்ச்சிப் பொருட்களின் அலகுகளில்
கீன்ஸ் k என்பதனை உண்மை இருப்பு (Real Balance) என்று குறிப்பிடுகிறார்; ஏனெனில் மக்களின் ரொக்க கையிருப்பு இங்கு நுகர்ச்சிப் பொருட்களின் அளவுகளில் கணக்கிடப்படுகிறது.
கீன்ஸின் கூற்றுப்படி, மக்களின் ரொக்க விருப்பத்தினை (k) பணவியல் அமைப்புகள் மாற்று இயலாது, ஆகவே, பணத்தின் அளவை (n) நெறிப்படுத்துவதன் மூலம் விலைவாசியை கட்டுப்படுத்தலாம், பணத்தின் மதிப்பினை நிலைப்படுத்தலாம் என்கிறார்.
பின்னர், கீன்ஸ் தனது சமன்பாட்டினை பின்வருமாறு விரிவாக்குகிறார்.
n = மொத்த பண அளிப்பு
p = நுகர்ச்சிப் பொருட்கள் (தொகுப்பின்) விலை மட்டம்
k = மக்கள் தங்கள் கையில் வைத்திருக்க விரும்பும் வருமானத்தின் ஒரு பகுதி – நுகர்ச்சிப் பொருட்களின் எண்ணிக்கையில் (பல பொருட்களின் தொகுப்பு).
r = வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம்
k’ = வங்கி வைப்புகளாக சமுதாயம் வைத்திருக்கும் பணத்தின் அளவு – நுகர்ச்சிப் பொருட்களின் எண்ணிக்கையில்.
இவ்விரிவாக்கச் சமன்பாட்டிலும், கீன்ஸ் k, k’ மற்றும் r ஆகியவைகள் மாறாதிருக்கும் என்கிறார். அச்சூழ்நிலையில், பண அளவை (n) மாற்றும் பொழுது விலைமட்டம் (P) நேரடியாகவும், சமவிகிதத்திலும் மாறும் என்கிறார்.
பணவீக்கம்
பொருளாதாரத்தில் பணவீக்கம், பண வாட்டம் ஆகியன இரு பெரும் பொருளாதார சிக்கல்கள் ஆகும். ஆகவே, இவைகளை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
பணவீக்கம் என்பதன் பொருள்
பணவீக்கம் என்பது தொடர்ச்சியான மற்றும் குறிப்பிடும்படியான பொது விலைமட்ட அதிகரிப்பு ஆகும். சற்று விளக்கமாக கூறினால், பணவீக்கம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளில் பொதுவிலைமட்ட அதிகரிப்பு விகிதத்தையும், அதன் விளைவாக பணத்தின் வாங்கும் சக்தி குறைவதையும் காட்டுகிறது.
இலக்கணங்கள்
“குறைந்த அளவு பண்டங்களை அதிக அளவு பணம் துரத்தும் நிலை”
- கோல்பர்ன்
“வாங்கும் சக்திக்கான அளவின் அசாதாரண குறைவு நிலையாகும்”
- கிரிகெரி
பணவீக்கத்தின் வகைகள் பணவீக்க வேகத்தின் அடிப்படையில்
பணவீக்கம் வேகத்தின் அடிப்படையில் தவழும் பணவீக்கம் (Creeping Inflation), நடக்கும் பணவீக்கம் (Walking Inflation), ஓடும் பணவீக்கம் (Running Inflation), தாவும் பணவீக்கம் (Galloping Inflation) அல்லது உயர் பணவீக்கம் (Hyper Inflation) என நான்காக வரைபட்த்தில் குறிக்கப்பட்டுள்ளது.
i) தவழும் பணவீக்கம்
தவழும் பணவீக்கம் மிக குறைவான மற்றும் எளிமையான விகிதத்தில் பணவீக்க விகிதம் இருப்பதாகும். நீண்ட காலத்தில் விலைவாசி உயர்வதை மக்கள் எளிதாக உணர முடியாத அளவில் இருக்கும் பணவீக்கமே தவழும் பணவீக்கம் எனப்படுகிறது. இது மிதமான பணவீக்கம் (Mild Inflation) எனப்படுகிறது.
ii) நடக்கும் பணவீக்கம்
பணவீக்கம் மிதமான வேகத்தில் ஒற்றை இலக்கத்தில், அதாவது 3 முதல் 9 சதவிகிதத்தில், இருந்தால் அது நடக்கும் பணவீக்கம் அல்லது நகரும் பணவீக்கம் (Trolling Inflation) என்றழைக்கப்படுகிறது.
iii) ஓடும் பணவீக்கம்
ஆண்டு பணவீக்க விகிதம் 10 முதல் 20 சதவிகிதத்திற்குள் இருந்தால் அது ஓடும் பணவீக்கம் எனப்படுகிறது. வேகமான விலைவாசி அதிகரிப்பை ஓட்டத்துடன் உவமைப்படுத்தி சொல்வதால் அது ஓடும் பணவீக்கம் எனப்படுகிறது.
iv) தாவும் பணவீக்கம்
தாவும் பணவீக்கம் அல்லது உயர் பணவீக்கம் என்பது சமாளிக்க முடியாத அளவிற்கு இரண்டு அல்லது மூன்று இலக்க சதவிகிதத்தில் உள்ள பணவீக்கம் ஆகும். மிக அதிகமான உயர் பணவீக்கம் இருக்கும்பொழுது ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஆண்டிற்கு 20 முதல் 100 வரை சதவிகிதமாக இருக்கும். கீன்ஸ் இதனை உண்மையான பணவீக்கம் என குறிப்பிடுகின்றார்.
21ஆம் நூற்றாண்டின் முதல் உயர் பணவீக்கம் முன்னெப்பொழுதும் இல்லாத அளவாக ஜிம்பாப்வே நாட்டில் ஆண்டிற்கு 3714 சதவிகிதமாக ஏப்ரல் 2007 இறுதியில் உயர்ந்தது.
தேவை இழுப்பு எதிர் செலவு உந்து பணவீக்கம்
i) தேவை – இழுப்பு பணவீக்கம்
எப்பொழுதுமே தேவை மற்றும் அளிப்பு ஆகியன பணவீக்கத்தை தீர்மானிப்பதில் நிலையாக உள்ள நிலையில், பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் பொழுது விலைவாசி உயருகின்றது. இது தேவை-இழுப்பு பணவீக்கம் என்றழைக்கப்படுகிறது.
ii) செலவு- உந்து பணவீக்கம்
உற்பத்தியில் மூலப்பொருட்கள் மற்றும் இதர இடுபொருட்களுக்கான செலவு உயருகின்றது பொழுது உற்பத்தி செலவு கூடி பொருட்களுக்கான விலை அதிகரிக்கின்றது. இவ்வகை பணவீக்கம் செலவு-உந்து பணவீக்கம் எனப்படுகிறது.
கூலி-விலை சுழல்
கூலி-விலை சுழல் மூலம் கூலி உயர்வுக்கும் பணவீக்கத்திற்கும் இடையேயான காரண –விளைவு உறவு விளக்கப்படுகிறது. கூலி உயரும் பொழுது செலவிடத்தகுந்த வருவாய் உயருகிறது; இதனால் பொருட்களுக்கான தேவை உயருகின்றது; தொடர்ந்து பொருட்களுக்கான விலையும் உயருகின்றது; இதன் விளைவாக பணவீக்கம் ஏற்படுகிறது; விலைவாசி உயர்வின் காரணமாக தொழிலாளர்கள் கூலி உயர்வினை கோருவார்கள்; இது உற்பத்திச் செலவினை மீண்டும் உயர்த்தி பொருட்களின் விலையை மீண்டும் மேல்நோக்கி உயர்த்த தூண்டும் ஒரு சூழலை ஏற்படுத்துகிறது.
இதர காரணிகள் (தூண்டும் அடிப்படையில்)
i) காகிதப்பண பணவீக்கம் (Currency Inflation)
அளவுக்கு அதிகமான காகிதப் பணத்தை மையவங்கி பயன்பாட்டிற்கு விடுவிக்கும்பொழுது ஏற்படும் விலைவாசி உயர்வு காகிதப் பணவீக்கம் எனப்படுகிறது.
ii) கடன்பண பணவீக்கம் (Credit Inflation)
வணிக வங்கிகள் தாராளமாக கடனை அளிக்கும்பொழுது ஏற்படும் விலைவாசி உயர்வினை கடன்பண பணவீக்கம் ஆகும்.
iii) வரவு –செலவு பற்றாக்குறை தூண்டல் பணவீக்கம் (Deficit Induced Inflation)
வரவு-செலவுத் திட்டத்தினால் ஏற்படும் பற்றாக்குறையை (Budget Deficit) சரிசெய்யும் நிதியாக்க முறைகளில் ஒன்றாக, மையவங்கி மூலம் கூடுதல் காகிதப்பணத்தினை அச்சிட்டு பயன்பாட்டிற்கு விடப்படுகிறது. இக்கூடுதல் பணத்தினால் ஏற்படும் விலைவாசி உயர்வினை வரவு-செலவு பற்றாக்குறை தூண்டல் பணவீக்கம் என்கிறோம்.
iv) இலாபத் தூண்டல் பணவீக்கம் (Profit Induced Inflation)
அதிக இலாபத்தினை பெறும் நொக்கில் பொருட்களின் விலையில் உயர் இலாப விகிதத்தை சேர்ப்பதால் பொருட்களின் விலை அதிகரிக்கின்றது. இதுவே இலாபத் தூண்டல் பணவீக்கம் ஆகும்.
v) பொருள் பற்றாக்குறை தூண்டல் பணவீக்கம் (Scarcity Induced Inflation)
விவசாயம் போன்ற தூறைகளில் இயற்கை இடர்ப்பாடுகள் மற்றும் இதர காரணங்களால் உற்பத்தி பாதிக்கப்படும்பொழுது பொருள் பற்றாக்குறை ஏற்படும். மேலும், பதுக்கல் நடவடிக்கையினாலும் கருப்புச் சந்தையினாலும் பொருள் பற்றாக்குறை ஏற்படும். இப்பற்றாக்குறைகளினால் ஏற்படும் விலைவாசி உயர்வினை பொருள் பற்றாக்குறை தூண்டல் பணவீக்கம் என்கிறோம்.
vi) வரி தூண்டல் பணவீக்கம் (Tax Induced Inflation)
மறைமுக வரிகளான கலால்வரி, சுங்கவரி மற்றும் விற்பனைவரி ஆகியவற்றில் ஏற்படும் உயர்வு காரணமாக விலைவாசி உயர்ந்து செல்வது வரி தூண்டல் பணவீக்கம் எனப்படுகிறது. உதாரணத்திற்கு பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் மீதான வரி உயர்வு பணவீக்கத்தை தூண்டுகிறது. இவ்வகையான பணவீக்கத்தை வரிவீக்கம் (Taxflation)எனவும் அழைக்கிறோம்.
பணவீக்கத்திற்கான காரணங்கள்
இந்தியாவில் பல்வேறு காரணங்களால் பணவீக்கம் ஏற்படுகிறது. அது ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன:
i) பண அளிப்பு உயர்வு
காகித பண அளிப்பு உயர்வினால் மொத்த தேவை அதிகரித்து பணவீக்கம் ஏற்படுகிறது. பெயரளவு பண அளிப்பு (nominal money supply) உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்கின்றது.
ii) செலவிடத் தகுந்த வருவாயில் (Disposable Income) உயர்வு
மக்களின் செலவிடத் தகுந்த வருவாய் அதிகரிக்கும்பொழுது அவை பொருட்கள் மற்றும் பணிகளுக்கான தேவையை தூண்டுகின்றன. செலவிடத் தகுந்த வருவாய் உயர்வு, தேசிய வருவாய் அதிகரிப்பினாலோ அல்லது வரிவிகித குறைப்பினாலோ ஏற்படும். இதன் காரணமாக பணவீக்கம் ஏற்படும்.
iii) உயர்ந்து வரும் பொதுச் செலவுகள்
வளர்ச்சி மற்றும் சமுதாய நலத் திட்டங்களை அமல்படுத்துதல் போன்றவற்றில் அரசின் செயல்பாடுகள் விரிவடைந்து வருவதால் பொதுச் செலவுகளின் அளவு கூடி வருகிறது. இதன் காரணமாகவும் பணவீக்கம் ஏற்படுகிறது.
iv) நுகர்வோர் செலவு அதிகரித்தல்
தவணை கொள்முதல் போன்ற கடன் கொள்முதல் முறைகள் அமல்படுத்தப்படுவதால் நுகர்ச்சிப் பொருட்கள் மற்றும் பணிகளுக்கான தேவை அதிகரித்து அதன் காரணமாக விலைவாசி அதிகமாகி பணவீக்கம் ஏற்படுகிறது.
v) மலிவு பணக் கொள்கை (Cheap Money Policy)
மைய வங்கியின் மலிவுப் பணக்கொள்கை பொருளாதாரத்தில் கடன் அளவை அதிகப்படுத்தும். இக்கடன் அதிகரிப்பு, பொருட்கள் மற்றும் பணிகளுக்கான தேவையை உயர்த்துவதால் ஏற்படும் விலைவாசி உயர்வு பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது.
vi) பற்றாக்குறை நிதியாக்கம்
தொடர்ந்து பொதுச் செலவுகள் கூடிவருவதால், அரசின் வரவு-செலவு திட்டத்தில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இப்பாற்றாக்குறையை ஈடு செய்ய கடன் வாங்குதல், புதிய காகிதப் பணம் அச்சடித்தல் என பற்றாக்குறை நிதியாக்க முறைகளில் அரசு ஈடுபடுகிறது. இதன் விளைவாக தொகு தேவையின் அளவு அதிகரித்து, விலைவாசி உயர்ந்து பணவீக்கம் ஏற்படுகிறது.
vii) கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் நடவடிக்கைகள் மற்றும் கறுப்புப் பணம்
இலஞ்சம் மற்றும் வரிஏய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கறுப்புப் பணம் மற்றும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் உருவாகின்றன. மேற்கண்ட நடவடிக்கையில் ஈடுபடுவோர் பகட்டாக செலவு செய்வதால் தொகு தேவை அதிகரிக்கின்றது. அதே சமயம் கருப்புச் சந்தையும், பதுக்கலும் தொகு அளிப்பினை குறைக்கின்றது. இவைகளின் காரணமாக விலைவாசி உயர்ந்து பணவீக்கம் ஏற்படுகிறது.
viii) பொதுக்கடனை மீளச் செலுத்துதல்
உள்நாட்டில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பொதுக்கடனை அரசு திரும்பச் செலுத்தும்பொழுது மொத்த பண அளிப்பில் அதிகரிப்பு ஏற்படுகிறது. இது தொகு தேவையினை அதிகரித்து பணவீக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
ix) ஏற்றுமதி உயர்வு
ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் பொழுது உள்நாட்டில் பொருள் அளிப்பு குறைந்து, விலைவாசி உயர்வு ஏற்படுகிறது. இதன் காரணமாக பணவீக்கம் ஏற்படுகிறது.
பணவீக்கத்தின் விளைவுகள்
பணவீக்கத்தின் விளைவுகள் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.
- உற்பத்தியின் மீதான விளைவு.
- பகிர்வின் மீதான விளைவு
- உற்பத்தியின் மீதான விளைவு
மிதமான பணவீக்கம் உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு இரு ஊக்கக் காரணியாக செயல்படும். மிதமான விலைவாசி உயர்வினால் ஏற்படும் இலாபத்தினால் தூண்டப்பட்டு உற்பத்தி மற்றும் வணிகத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். தொடர்ந்து வேலைவாய்ப்பும் வருமானமும் அதிகரிக்கும். ஆனால், மேற்சொன்ன கூற்றுகள் உற்பத்திக் காரணிகள் முழுவேலைவாய்ப்பை எய்தாத நிலையில் மட்டுமே சரியாக இருக்கும்.
- அதேசமயம் உயர் பணவீக்கம் பணத்தின் மதிப்பினை குறைப்பதன் மூலம், மக்களின் சேமிப்பை குறைக்கும்.
- பணவீக்கத்தின் காரணமாக பணத்தின் மதிப்பு குறிப்பிடத் தகுந்த அளவு குறைவதால் நாட்டில் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும் வெளிநாட்டு மூலதனங்கள் திரும்பிச் செல்லும்.
- மேற்கண்ட நடவடிக்கையின் காரணமாக மூலதன திரட்சி குறையும். இது புதிய முதலீட்டில் பின்னடைவை ஏற்படுத்தி நாட்டின் உற்பத்தியின்மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். தொழில் முனைவோர் மற்றும் வணிகர்களின் இடர் ஏற்றல் பணியினை ஊக்கமிழக்கச் செய்வதாக அமையும்.
- பதுக்கல்காரர்களும் நுகர்வோரும் பொருட்களை பதுக்கி வைக்க பணவீக்கம் காரணமாக அமைகிறது. இது தொடர்ந்து, உயர் பணவீக்கத்திற்கு வழிவகுக்கிறது.
- பணவீக்கமானது பொருள் உற்பத்தியை அதிகரிப்பதைவிட, ஊக வாணிப செயல்பாடுகளை அதிகரிக்கின்றது. ஊக வாணிபம் என்பது இலாப நோக்கில் பங்குகள் அல்லது பொருட்கள் விலை குறையும் என காத்திருந்து, அது குறையும்பொழுது வாங்கி விலை அதிகரிக்கும்பொழுது விற்பனை செய்வது ஆகும். இதனால் நிகர உற்பத்தியோ , நிகர வேலைவாய்ப்போ அதிகரிப்பதில்லை.
பகிர்வின் மீதான விளைவுகள்
தேசிய வருவாய் பகிர்வில் உள்ள பல்வேறு தரப்பினரையும் பணவீக்கம் பல்வேறு வகையில் பாதிக்கின்றது. அவைகள் கீழே தரப்பட்டுள்ளன.
i) கடன் பெற்றோர் கடன் வழங்கியோர்
பணவீக்க காலத்தில் கடன் பெற்றோர் ஆதாயமும், கடன் வழங்கியோர் இழப்பையும் சந்திக்கின்றனர். எவ்வாறெனில், கடன் வாங்கியபொழுது பணமதிப்பு உயர்வாகவும், பணவீக்க காலத்தில் திருப்பிச் செலுத்தும் பொழுது பணமதிப்பு குறைவாக இருப்பதனால் கடன் வாங்கியோர் ஆதாயம் பெறுகிறார். இதே காரணத்தால் கடன் வழங்கியோர் கூடுதலான பண மதிப்பு இருக்கும்பொழுது கடன் வழங்கி, பணவீக்க காலத்தில் குறைந்த பண மதிப்பில் பணத்தை மீளப் பெறும்பொழுது இழப்பு ஏற்படுகிறது.
ii) நிலையான வருவாய் பிரிவினர்
நிலையான வருவாயை உடைய பிரிவினர் பணவீக்கத்தினால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் ஏனெனில், விலைவாசி உயர்வினார் ஏற்படும் வாழ்க்கைச் செலவு உயர்வுடன், நிலையான வருவாய் பொருந்திச் செல்வதில்லை. (உ.ம்) ஒரே மாதிரியான மாதச் சம்பளம் அல்லது கூலி பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர், வட்டி பெறுவோர், வாடகை பெறுவோர் ஆகியோர் மிகவும் பாதிக்கப்படுவர்.
iii) தொழில் முனைவோர்கள்
உற்பத்தியாளர், வணிகர் என்று தொழில் முனைவோர் போன்று எவ்வகையானவராக இருந்தாலும், அவர்களுக்கு பணவீக்கம் ஒரு வரமாகும். ஏனெனில், பணவீக்கம் அவர்களுக்கு ஒரு ஊக்க சக்தியாக விளங்குகிறது. கிடங்கில் இருக்கும் பொருள் இருப்புக்களின் விலையேற்றத்தால் அவர்களுக்கு எதிர்பாரா ஆதாயம் (Windfall gian) கிடைக்கும்.
iv) முதலீட்டாளர்கள்
கடன் பத்திரங்களில் முதலீடு செய்தோருக்கு நிலையான வட்டியை பெறுவதால் அவர்கள் பணவீக்க காலத்தில் இழப்பினை சந்திப்பார்கள். மாறாக , பங்கு முதலீட்டாளர்கள் நல்ல இலாப ஈவு மற்றும் பங்கு மதிப்பேற்றம் போன்ற ஆதாயங்களை பெறுவார்கள்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
கீன்ஸ் மற்றும் மில்டன் ப்ரீட்மேன் பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கருத்துக்களின் அடிப்படையில் மூன்றாக பிரிக்கலாம் என்கின்றனர். அவைகள்
- பணவியல் மூறைகள்’
- நிதியியல் முறைகள்; (J.M. கீன்ஸ்);
- இதர முறைகள்
பணவியல் முறைகள்
பணவியல் முறைகள் நாட்டின் மைய வங்கியினால் அமல்படுத்தப்படும் மூறையாகும். அவைகள்:
- வங்கி விகிதத்தை உயர்த்துதல்,
- வெளிச்சந்தையில் அரசு பத்திரங்களை விற்றல்,
- ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்துதல் மற்றும் சட்டபூர்வ நீர்மை விகிதத்தை உயர்த்துதல் மற்றும் சட்டப்பூர்வ நீர்மை விகிதத்தை உயர்த்துதல்,
- நுகர்வோர் கடனை கட்டுப்படுத்துதல்,
- கடன் விளிம்பு நிலையினை உயர்த்துதல்,
- மீள் வாங்கல் விகிதம் (Repo Rate) மற்றும் திருப்ப மீள் வாங்கல் விகிதம் (Reverse Repo Rate) ஆகியவற்றினை உயர்த்துதல் ஆகும்.
2. நிதியியல் நடவடிக்கைகள்
பணவீக்க சூழ்நிலையை கட்டுப்படுத்துவதில் நிதிக் கொள்கையும் அதன் கருவிகளும் முக்கிய பங்கு வகிப்பது உணரப்பட்டுள்ளது. பணவீக்கத்திற்கு எதிரான நிதியியல் நடவடிக்கைகளாவன அரசு செலவினங்களை குறைப்பது, பொதுமக்களிடமிருந்து கடன்களை பெறுவது மற்றும் வரிவிதிப்புகளை விரிவாக்குவது.
3. இதர நடவடிக்கைகள்
இதர நடவடிக்கைகள் குறுகியகால நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.
i) குறுகியகால நடவடிக்கைகள்
குறுகியகால நடவடிக்கையாக பொதுவிநியோகமுறையின்கீழ் நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பங்கீடு செய்து வழங்குதக் ஆகும். இந்தியாவில் எப்பொழுதெல்லாம் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் பொருட்களை இறக்குமதி செய்து விலையேற்றம் ஏற்படா வண்ணம் தடுக்கப்படுகிறது.
ii) நீண்டகால நடவடிக்கைகள்
நீண்டகால நடவடிக்கையாக பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவது, குறிப்பாக பொதுவிலைமட்டத்துடனும் வாழ்க்கைச் செலவுடனும் நேரடித் தொடர்பைக் கொண்டிருக்கும் கூலிப் பொருட்களின் உற்பத்தியின் வளர்ச்சியை துரிதப்படுத்துவது ஆகும். நீண்டகால பொருளாதார வளர்ச்சியை அடையும் நோக்கினில் சேமிப்பு-முதலீடுகளை மேம்படுத்தும் விதமாக நடப்பிலுள்ள சில நுகர்ச்சிகளை கட்டுப்படுத்துதலும் உள்ளடங்கும்.
பணவாட்டம், மீள்பணவீக்கம் மற்றும் தேக்கவீக்கம்
பணவாட்டம் (Deflation)
விலைவாசி கூறைதல், குறைந்த பண அளிப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியன பணவாட்டத்தின் முக்கிய இயல்புகள் ஆகும். பணவாட்டத்தின்போது விலைவாசி குறைதல் என்பது நுகர்வோருக்கு விரும்பத்தகுந்த ஒன்றாக இருந்தாலும், அக்குறைவு உற்பத்தியையும், வேலைவாய்ப்பையும் குறைக்கும் அளவுக்கு இருக்கக் கூடாது. முழுவேலைவாய்ப்புள்ள நிலையில் விலைவாசி குறைந்தால் அது வருமானம் மற்றும் வேலைவாய்ப்பில் விரும்பத்தகாத விளைவினை ஏற்படுத்தும்.
மீள்பணவீக்கம் (Disinflation)
வேலைவாய்ப்பினை பாதிக்காத வகையில் கடன்களை (வங்கிக் கடன் , தவணைமுறை கொள்முதல் முறைகளை) கட்டுப்படுத்துவதன் மூலமும் பணவீக்கத்தினை குறைத்து வருவது மீள்பணவீக்கம் ஆகும். மீள் பணவீக்கம் என்பதனை பின்வருமாறு வரையறுக்கலாம்: “வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்தாமலும், உற்பத்தி அளவுகள் குறையாமலும் பணவீக்கத்தை திருப்பும் செயல்முறையே மீள்பணவீக்கம் ஆகும்”.
தேக்கவீக்கம் (Stagflation)
தேக்கவீக்கம் என்பது பொருளாதார வளர்ச்சியில் தேக்கநிலையும், வேலைவாய்ப்பின்மையும் , அதிக அளவிலான பணவீக்கமும் ஒன்றிணைந்த சூழ்நிலை ஆகும்.
வணிகச் சுழற்சி (Business Cycle)
ஒரு முதலாளித்துவ அமைப்பு முறையில் பொருளாதார நடவடிக்கைகள் ஏற்ற இறக்கங்களுடனேயே இருக்கும். சீரான கால இடைவெளியில் அமையும் இவ்வகை ஏற்ற இறக்கங்கள் வணிகச் சுழற்சி அல்லது வியாபாரச் சுழற்சி (Trade Cycle) அல்லது தொழில் ஏற்ற இறக்கங்கள் (Industrial Fluctuations) என்றழைக்கப்படுகிறது.
வணிகச் சுழற்சியின் பொருள்
வேலைவாய்ப்பு, உற்பத்தி, வருமானம் போன்றவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளில் (Aggregate economic activities) ஏற்படும் அலைவுகளே வணிகச் சுழற்சி என குறிப்பிடப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் கூறுகளில் ஏற்படும் உள்ளார்ந்த சுருக்கம் மற்றும் விரிவாக்கத்தினால் வணிகச் சுழற்சி ஏற்படுகிறது. இச்சுழற்ச்சிகளின் பண்புகளாவன: குறிப்பிட்ட கால இடைவெளியில் வருபவை, மாறுபட்ட தீவிரத் தன்மை கொண்டவை மற்றும் அதன் செயலாக்க எல்லைகள் மாறுபட்டவை.
இலக்கணம்
“உயர்கின்ற விலைகளையும், குறைந்த வேலையற்றோர் சதவிகிதத்தையும் கொண்ட நல்ல வாணிபக் காலங்களையும்; குறைகின்ற விலைகளையும், மிகுகின்ற வேலையில்லாத் திண்டாட்ட சதவிகிதத்தையும் கொண்ட கெட்ட வாணிபக் காலங்களையும் உள்ளடக்கியது வாணிபச் சூழல் ஆகும்”.
J.M.கீன்ஸ்
வாணிபச் சுழற்சியின் கட்டங்கள்
வணிகச் சுழற்சியினை உற்று நோக்கும்பொழுது அதனுடைய நான்கு கட்டங்கள் வெளிப்படும், அவைகள் முறையே
- பூரிப்பு
- பின்னிறக்கம்
- மந்தம் மற்றும்
- மீட்சி எனப்படுகின்றன. வணிகச் சுழற்சியின் பல்வேறு கட்டங்களை வரைபடம் தெளிவாகக் காட்டுகின்றது.
i) பூரிப்பு கட்டம் (Boom)
நீண்டகால இயல்பான வளர்ச்சி நிலைக்கு மேல் பொருளாதார நடவடிக்கைகள் உயர்ந்து முழு வேலைவாய்ப்பு நிலையை தாண்டுவது வணிகச் சுழலின் வளர்ச்சிக்கட்டம் எனப்படுகிறது. இக்காலகட்டத்தில் பொருள் உற்பத்தி , பணக்கூலி, லாபம், மற்றும் வட்டி விகிதங்கள் உயரும். வங்கிக்கடன் தேவைகள் உயரும். பொதுவாக அனைத்து தரப்பினரிடமும் நம்பிக்கைகள் உயரும். வளர்ச்சிக் கட்டத்தின் உச்சத்தில் பூரிப்புநிலை (Boom) தோன்றும். பூரிப்பு நிலையில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் உச்சநிலையில் இருக்கும்.
ii) பின்னிறக்கம் (Recession)
வளச்சியின் உச்சத்தின் பூரிப்பை எய்திய பொருளியல் நடவடிக்கைகள் அடுத்ததாக கீழ்நோக்கி திரும்புகின்றன. பூரிப்பில் வெடிப்பு நிலை ஏற்பட்டு நடவடிக்கைகள் பின்னோக்கி திரும்புவதை பின்னிறக்கம் என்கிறோம். இக்கட்டத்தில் உற்பத்தி, பணக் கூலி, லாபம் மற்றும் வட்டி விகிதம் ஆகியன குறையத் துவங்கும். நிறுவனங்கள் தோல்வியடைய துவங்கும் வணிகர்கள் தாங்கள் அகலக்கால் வைத்து வணிகத்தை விரிவாக்கிவிட்டதை உணர்வார்கள். நம்பிக்கைகள் இருந்த இடத்தில் அவநம்பிக்கைகள் தோன்ற ஆரம்பிக்கும். இதன் காரணமாக முதலீட்டை பெருமளவுக்கு குறைக்க ஆரம்பிப்பார்கள். தொடர்ந்து உற்பத்தி, வருமானம் ஆகிய குறைந்து வரும். பங்குச் சந்தையில் விலை வீழ்ச்சியின் காரணமாக பெரும் அச்சம் உருவாகும். வணிக நடவடிக்கைகள் சுணக்கமடையும். மக்களின் நீர்மைவிருப்பம் அதிகரித்து பணத்தை ரொக்கமாக கையில் வைத்துக்கொள்ள விரும்புவதால் பணச்சந்தை நடவடிக்கைகள் சுருங்க ஆரம்பிக்கும்.
iii) மந்தம் (Depression)
வணிகச்சுழற்சியின் மூன்றாவது கட்டமான மந்தகாலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்குக்கீழ் மிகத்தீவிரமாக குறைந்துவரும். நிறுவனங்கள் நட்டமடைவதும், மூடப்படுவதும் பொது இயல்புகளாக இருப்பதுடன் வேலைவாய்ப்பின்மையையும் ஏற்படுத்தும். வட்டி, இலாபம் மற்றும் கூலி ஆகியன மிகக் குறைந்த அளவில் இருக்கும். விவசாயிகளும், கூலிவேலை செய்வோரும் அதிக பாதிப்புக்குள்ளாவார்கள். வணிகர்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் தயக்கம் காட்டும். வணிகச் சுழற்சியின் மிகமோசமான கட்டம் மந்தம் ஆகும். ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் வாங்கும் சக்தி இல்லாததால் கிடங்குகளில் தேக்கமடைய செய்யும். மந்தத்தின் கீழ் நிலை “தொட்டி” (Trough) என்றழைக்கப்படுகிறது. எவ்வாறு ஒருவர் மிக ஆழமான தொட்டிக்குள் தவறி விழுந்துவிட்டால் பிறர் உதவியின்றி எளிதில் அவரால் மீள முடியாதோ, அதுபோல பொருளாதார நடவடிக்கைகள் மந்த நிலையின் ஆழத்தில் விழுந்துவிட்டால், வெளியார் உதவியின்றி தானே மீள இயலாத நிலையை குறிக்க “தொட்டி” என்ற கருத்து பயன்படுத்தப்படுகிறது.
iv) மீட்சி (Recovery or Revival)
மந்த நிலைக்குப்பின் மீட்சி இடம்பெறுகிறது. இது, மந்தத்திலிருந்து பொருளாதார நடவடிக்கைகள் மேல்நோக்கி திரும்பும் நிகழ்வாகும். முதலில் மூலதனபொருட்களுக்கான தேவை மீட்சி பெறுவதில் துவங்குகிறது. அரசால் செய்யப்படும் தன்னிச்சை முதலீடுகள் (Autonomous Investments) பொருளாதார நடவடிக்கைகள் மேல்நோக்கி திரும்ப ஊக்கமளிக்கின்றன. அம்முதலீடுகள் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகளினால் ஏற்படும் வருமானம் பொருட்களுக்கான தேவையை மெதுவாக உயர்த்துகிறது. கிடங்குகளில் தேக்கமடைந்த பொருட்கள் காலியாக துவங்குகிறது. இதனால், தனியார் முதலீடுகள் மெதுவாக அதிகரித்து, பொருளாதார நடவடிக்கைகளான வேலைவாய்ப்பு, உற்பத்தி, வருவாய், கூலி , லாபம் ஆகியன மீட்சி பெறுகின்றன.
தொகுப்புரை
பணம் மத்திய வங்கியாலும் நாணயங்கள் மத்திய அரசாலும் வெளியிடப்படுகின்றது. வங்கி வைப்புகள் வணிக, கூட்டுறவு வங்கிகளால் ஏற்படுத்தப்படுகின்றது. பணத்தின் தேவையானது பல்வேறு காரணிகளாகிய வருமானம், விலை மட்டம், வட்டி வீதம் போன்றவைகளால் தீர்மானிக்கப்படுகின்றது. பணத்தின் தேவையானது பல்வேறு காரணிகளாகிய வருமானம், விலை மட்டம், வட்டிவீதம் போன்றவைகளால் தீர்மானிக்கப்படுகிறது.