Tnpsc

தென்னிந்திய அரசுகள் Notes 6th Social Science

6th Social Science Lesson 18 Notes in Tamil

18] தென்னிந்திய அரசுகள்

தென்னிந்திய அரசுகள்

ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடக்கே ஹர்ஷருடைய ஆட்சியின் சமகாலத்தில் தொலைதூரத் தென்பகுதிகள் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவ அரசர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தன. அவர்களின் ஆட்சிப்பகுதி சோழ, பாண்டிய அரசுகளின் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. சோழர்களும், பாண்டியர்களும் அப்போது தங்கள் பகுதிசார் ஆற்றுச் சமவெளிப் பகுதிகளில் ஆட்சி செய்யும் அரச வம்சங்களாக உருவாகிக்கொண்டிருந்தனர். மத்திய மற்றும் கிழக்குத் தக்காணத்தின் பெரும்பகுதி வாதாபிச் (பாதாமி) சாளுக்கியர்களின் கீழிருந்தன. சாளுக்கியர்கள் பின்னர் ராஷ்டிரகூடர்களால் அங்கிருந்து புறம்தள்ளப்பட்டனர். பிராந்திய அதிகார மையங்களின் தோற்றமே இடைக்கால இந்தியாவின் பண்பம்சமாக இருந்தது. இந்தியாவின் பெரும்பான்மைப் பகுதிகளை அடக்கி ஆளக் கூடிய, மௌரியர் அல்லது குப்தர்களைப் போன்ற தனிப் பேரரசு சக்தி ஏதும் அப்போது இல்லை.

பல்லவர்கள்

  • பல்லவ அரசர்கள் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில் முக்கிய வணிக மையமாகத் திகழ்ந்த காஞ்சிபுரத்தையும், அதன் வளம் நிறைந்த வேளாண்பகுதிகளையும் ஆண்டனர். சீன, ரோமாபுரி வணிகர்கள் காஞ்சிபுரத்தை நன்கு அறிந்திருந்தனர்.
  • வளம் கொழித்த வணிக மையமான காஞ்சிபுரத்திலிருந்து பிற்காலப் பல்லவர்கள் தங்கள் அரசாட்சியை ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் தமிழகம் முழுவதும் விரிவடையச் செய்தனர். ஆனாலும் தொண்டை மண்டலமே பல்லவ அரசின் மையப்பகுதியாக இருந்தது. இப்பெரிய அரசியல் பிராந்தியம் (வட்டாரம்) தமிழ்நாட்டின் வட பகுதிகளையும், அருகே அமைந்திருந்த ஆந்திர மாவட்டங்களையும் கொண்டிருந்தது.

சான்றுகள்

கல்வெட்டுகள் மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு
செப்பேடுகள் காசக்குடிச் செப்பேடுகள்
இலக்கியங்கள் மத்தவிலாசப் பிரகசனம், அவந்தி சுந்தரி கதை, கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம், நந்திக் கலம்பகம்.
அயலவர் குறிப்புகள் யுவான் சுவாங்கின் குறிப்புகள்

பல்லவ வம்சாவளி (முக்கிய அரசர்கள்)

  • தொடக்ககாலப் பல்லவ அரசர்கள் சாதவாகனர்களின் கீழ் சிற்றசர்களாக இருந்தனர். இரண்டாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு (கி.பி. (பொ.ஆ.மு) 550 வாக்கில்) களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கினார்.
  • சோழர்கள், பாண்டியர்கள் உள்ளிட்ட பல தென்னக அரசர்களை அவர் வெற்றிக் கொண்டார். அவருடைய மகன் முதலாம் மகேந்திரவர்மன் மிகத் திறமை வாய்ந்த அரசராக விளங்கினார். அவருக்குப் பின் அவருடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
  • இரண்டாம் நரசிம்மன் அதாவது ராஜசிம்மன், இரண்டாம் நந்திவர்மன் ஆகியோர் ஏனைய முக்கிய அரசர்கள் ஆவர். கடைசிப் பல்லவ மன்னர் அபராஜிதன் ஆவார்.
  • மகேந்திரவர்மன் (ஏறத்தாழ கி.பி. 600 – 630) பல்லவ ஆட்சியின் சிறப்புக்குப் பங்களிப்புச் செய்தார். தொடக்ககாலத்தில் அவர் சமண சமயத்தைப் பின்பற்றினார். பின்னர் சைவத் துறவி அப்பரால் (திருநாவுக்கரசர்) சைவத்தைத் தழுவினார்.
  • கலை மற்றும் கட்டடக்கலைக்கு அவர் பேராதரவு அளித்தார். திராவிடக் கட்டடக்கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தார். அது ‘மகேந்திரபாணி’ எனக் குறிப்பிடப்படுகின்றது.
  • மத்தவிலாசப்பிரகசனம் (குடிகாரர்களின் மகிழ்ச்சி) உட்பட சில நாடகங்களைச் சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார். இந்நாடகம் பௌத்தத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.
  • மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலத்தில் வாதாபியைத் தலைநகராகக் கொண்ட மேலைச் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியோடு தொடர்ந்து போர்கள் மேற்கொள்ளப்பட்டன. இப்போர்களுள் ஒன்றில் இரண்டாம் புலிகேசி மகேந்திரவர்மனை வெற்றி கொண்டு நாட்டின் வடக்கில் பெரும் பகுதியை (வெங்கி) கைப்பற்றியதாகத் தெரிகிறது.
  • அவருடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் (ஏறத்தாழ 630 – 668) இத்தோல்விக்குப் பழிவாங்கும் வகையில் சாளுக்கியரின் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றினார். வாதாபி தீக்கிரையாக்கப்பட்டது. இரண்டாம் புலிகேசியும் கொல்லப்பட்டார்.
  • நரசிம்மவர்மன் (ஏறத்தாழ 695 – 722) ராஜசிம்மன் எனவும் அழைக்கப்பட்டார். அவர் மாபெரும் வீரர் ஆவார். சீன அரசுக்கு தூதுக்குழுக்களை அனுப்பினார். சீனநாட்டின் தூதுக் குழுக்களை வரவேற்றார். ஒப்பீட்டளவில் அவரது காலத்தில் அரசியல் பிரச்சனைகள் அதிகம் இல்லாததால் அவரால் கோவில்களைக் கட்டுவதில் கவனம் செலுத்த முடிந்தது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலைக் கட்டியது அவரே.
அரசர்களின் பெயர்கள் பட்டங்கள்
சிம்ம விஷ்ணு அவனிசிம்மர்
முதலாம் மகேந்திரவர்மன் சங்கீரணஜதி, மத்தவிலாசன், குணபாரன், சித்திரகாரப் புலி, விசித்திர சித்தன்
முதலாம் நரசிம்மவர்மன் மாமல்லன், வாதாபி கொண்டான்

கட்டடக் கலைக்குப் பல்லவர்களின் பங்களிப்பு

பல்லவர் காலம் கட்டடக்கலைச் சிறப்புகளுக்குப் பெயர் பெற்ற காலமாகும். மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட கடற்கரைக் கோவிலும், ஏனைய கோவில்களும், வராகர் குகையும் (ஏழாம் நூற்றாண்டு) பல்லவக் கட்டடக் கலையின் ஈடு இணையற்ற அழகிற்கு எடுத்துக்காட்டுகளாகும். 1984ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது.

பல்லவர் கட்டடக் கலையை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்:

  1. பாறைக் குடைவரைக் கோவில்கள் – மகேந்திரவர்மன் பாணி
  2. ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் – மாமல்லன் பாணி
  3. கட்டுமானக் கோவில்கள் – ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி

மகேந்திரவர்மன் பாணி

மகேந்திரவர்மன் பாணியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்களுக்கு மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், தளவானூர் , திருச்சிராப்பள்ளி, வல்லம், திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் ஆகிய இடங்களிலுள்ள குகைக் கோவில்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

மாமல்லன் பாணி

மாமல்லபுரத்திலுள்ள பஞ்சபாண்டவர் ரதங்கள் எனப் பிரபலமாக அழைக்கப்படும் ஐந்து ரதங்கள் ஐந்து வகையான கோவில்கட்டட பாணியை உணர்த்துகின்றன. ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு தனிக் கல்லிலிருந்து செதுக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவை ஒற்றைக்கல் ரதங்கள் என அழைக்கப்படுகின்றன. மகிஷாசுரமர்த்தினி மண்டபம், திருமூர்த்தி மண்டபம், வராகர் மண்டபம் ஆகியவை அவர் கட்டியுள்ள பிரபலமான மண்டபங்களாகும்.

மாமல்லனின் கட்டடக்கலைப் பாணியில் அமைந்துள்ளவற்றில் மிகவும் முக்கியமானது மகாபலிபுரத்திலுள்ள திறந்தவெளிக் கலையரங்கம் ஆகும். பெரும்பாறையொன்றின் சுவற்றில், பேன் பார்க்கும் குரங்கு, பெரிய வடிவிலான யானைகள், தவமிருக்கும் பூனை ஆகிய நுண்ணிய சிற்பங்கள் மிகவும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. சிவபெருமானின் தலையிலிருந்து அருவியெனக் கொட்டும் கங்கை நதி, அர்ச்சுனன் தபசு ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. பெருந்தவ வடிவச் சிற்ப வேலைப்பாடு உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளிச் சிற்பங்களில் மிகப்பெரியதாகும்.

ராஜசிம்மன் பாணி

ராஜசிம்மன் எனவும் அறியப்பட்ட இரண்டாம் நரசிம்மவர்மன் பெருங்கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டினார். காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் கட்டுமானக் கோவில் கலைப் பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இக்கோவில்கள் மிருதுவான மணற் கற்களால் கட்டப்பட்டவையாகும். கைலாசநாதர் கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.

நந்திவர்மன் பாணி

பல்லவ கோவில் கட்டடக்கலையின் இறுதிக் கட்டம். பிற்காலப் பல்லவர்களால் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்களால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றன. காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப்பெருமாள் கோவில் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சமூகமும் பண்பாடும்

  • பல்லவ அரசர்கள் பௌத்த, சமண சமயங்களையும் வேத சமயத்தையும் ஆதரித்தனர். அவர்கள் இசை, ஓவியன், இலக்கியம் ஆகியவற்றின் புரவலர்களாய்த் திகழ்ந்தனர். பக்தி மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆழ்வார்களும் நாயன்மார்களும் புதிய வடிவிலான சைவம், வைணவம் ஆகியவற்றைப் போதித்தனர்.
  • அவர்களைச் சில பல்லவ அரசர்கள் ஆதரித்தனர். அப்பரும், மாணிக்கவாசகரும் சைவ அடியார்களாகவும், நம்மாழ்வரும், ஆண்டாளும் வைணவ அடியார்களாகவும் விளங்கினர். பக்தி மார்க்கத்தைப் போதிப்பதை நோக்கமாகக் கொண்ட இவ்வியக்கம் சமஸ்கிருதத்தை விடவும் தமிழுக்கு முன்னுரிமை வழங்கியது.
  • சமயக் கூட்டங்களில் பங்கேற்க பெண்கள் ஊக்குவிக்கப்பட்டனர். தமிழ் பக்தி வழிபாடு பௌத்த, சமண சமயங்களுடன் போட்டிபோட்டது. இதன் விளைவாகப் பௌத்தமும் சமணமும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து படிப்படியாக வீழ்ச்சியுற்றன.

கல்வியும் இலக்கியமும்

  • காஞ்சியிலிருந்த கடிகை (மடாலயம் அல்லது கல்வி மையம்) பல்லவர் காலத்தில் புகழ்பெற்று விளங்கியது. அது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்களைத் தன்பால் ஈர்த்தது. நியாய பாஷ்யா எனும் நூலை எழுதிய வாத்ஸ்யாயர் காஞ்சிக் கடிகையில் ஆசிரியராக இருந்தார்.
  • தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வேடான தட்சிண சித்திரம் முதலாம் மகேந்திரவர்மனின் ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டது.
  • மாபெரும் சமஸ்கிருத அறிஞரான தண்டின் முதலாம் நரசிம்மவர்மனின் அவையை அலங்கரித்தார். அவர் தசகுமார சரிதம் எனும் நூலை எழுதினார்.
  • மற்றொரு சமஸ்கிருத அறிஞரான பாரவி சிம்மவிஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்தார். அவர் கிராதார்ஜுனியம் என்னும் வடமொழிக் காப்பியத்தை வடித்தார்.
  • தமிழ் இலக்கியமும் வளர்ச்சி பெற்றிருந்தது. நாயன்மார்களால் இயற்றப்பட்ட தேவாரமும் ஆழ்வார்களால் படைக்கப்பட்ட நாலாயிரதிவ்விய பிரபந்தமும் பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியங்களாகும். இரண்டாம் நந்திவர்மனால் ஆதரிக்கப்பட்ட பெருந்தேவனார் மகாபாரதத்தை, பாரதவெண்பா எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார்.

பல்லவர்காலக் கலை

பல்லவ அரசர்கள் கவின்கலைகளையும் ஆதரித்தனர். குடுமியான்மலை, திருமயம் ஆகிய இடங்களிலுள்ள கோவில்களில் காணப்படும் இசை கூறித்த கல்வெட்டுக்கள் இசையில் பல்லவர் கொண்டிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன. புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியர் முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தில் வாழ்ந்தவர். இக்காலப்பகுதியைச் சேர்ந்த பல சிற்பங்கள் நடனமாடும் வகையில் வடிக்கப்பட்டுள்ளன.

சாளுக்கியர்

சாளுக்கியர் தென்னிந்தியாவின் மத்தியிலும் மேற்கிலும் மராத்திய நாட்டை உள்ளடக்கிய பெரும்பகுதியை ஆண்டனர். அவர்களின் தலைநகர் வாதாபி (பதாமி). சாளுக்கியர்களில் மூன்று வெவ்வேறு ஆனால் நெருங்கிய தொடர்புடைய, சுதந்திர அரசமரபுகள் இருந்தன. அவை

  1. வாதாபிச் சாளுக்கியர்கள்
  2. வெங்கிச் சாளுக்கியர்கள் (கீழைச் சாளுக்கியர்கள்)
  3. கல்யாணிச் சாளுக்கியர்கள் (மேலைச் சாளுக்கியர்கள்)

வடக்கே ஹர்ஷரின் பேரரசும், தெற்கே பல்லவ நாடும், கிழக்கே கலிங்கமும் (ஒடிசா) சாளுக்கியர்களின் எல்லைகளாக இருந்தன.

சான்றுகள்

கல்வெட்டுகள் மங்களேசனின் வாதாபி குகைக் கல்வெட்டு, காஞ்சி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு, பட்டடக்கல் விருப்பாக்ஷா கோவில் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு.
அயலவர் குறிப்புகள் யுவான் சுவாங்கின் குறிப்புகள்

வாதாபிச் சாளுக்கியர்

  • முதலாம் புலிகேசி, பீஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லில் ஒரு குறுநில மன்னராக இருந்தார். கி.பி. (பொ.ஆ) 543 இல் வாதாபி மலைக்கோட்டையைக் கைப்பற்றி அதனைச் சுற்றி மதில் சுவர் எழுப்பினார். விரைவில் கிருஷ்ணா, துங்கபத்ரா ஆகிய நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியையும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளையும் கைப்பற்றினார்.
  • இவருடைய மகன் முதலாம் கீர்த்திவர்மன் (ஆட்சிக்காலம் கி.பி. (பொ.ஆ) 566 – 597) கொங்கணக் கடற்கரைப் பகுதியைச் சாளுக்கியரின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். இரண்டாம் புலிகேசி (ஆட்சிக்காலம் கி.பி. 610 – 642) இவ்வம்சத்தின் மிகவும் வலிமை பெற்ற அரசராவார்.
  • பாரசீக (ஈரான்) அரசர் இரண்டாம் குஸ்ரூ இரண்டாம் புலிகேசியின் அவைக்குத் தூதுக்குழு ஒன்றை அனுப்பிவைத்தார்.
  • குஜராத், மாளவம் ஆகியவற்றின் சில பகுதிகளைக் கைப்பற்றுவதிலும் புலிகேசி வெற்றி பெற்றார். இவர் வட இந்திய அரசர் ஹர்ஷருக்கு அடிபணிய மறுத்தார். இருவரும் ஒப்புக் கொண்டபுரிதலின்படி இருவருக்கும் இடையிலான எல்லையாக நர்மதை நதி வரையறை செய்யப்பட்டது. கி.பி.(பொ.ஆ) 624 காலப்பகுதியில் வெங்கி அரசைக் கைப்பற்றிய இரண்டாம் புலிகேசி அதைத் தன்னுடைய சகோதரர் விஷ்ணுவர்த்தனருக்கு வழங்கினார். விஷ்ணுவர்த்தனர் முதல் கீழைச் சாளுக்கிய அரசரானார்.
  • கி.பி.(பொ.ஆ) 641 – 647 காலப்பகுதியில் பல்லவர்கள் தக்காணத்தைச் சூறையாடி வாதாபியைக் கைப்பற்றினர். ஆனால் கி.பி. 655இல் சாளுக்கியர் அதனை மீட்டனர். முதலாம் விக்கிரமாதித்தனும் (ஆட்சிக்காலம் கி.பி. (பொ.ஆ) 655 – 680) அவருக்குப் பின்வந்த இரண்டாம் விக்கிரமாதித்னும் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றினர். ஆனால் நகரைச் சேதப்படுத்தவில்லை.
  • இவருக்குப் பின்னர் அரச பதவியேற்ற இரண்டாம் கீர்த்திவர்மனை ராஷ்டிரகூட வம்ச அரசை நிருவிய தந்திதுர்க்கர் போரில் தோற்கடித்தார்.

அய்கோல் கல்வெட்டு :

இக்கல்வெட்டு அய்கோலிலுள்ள (பாகல்கோட் மாவட்டம், கர்நாடகா) மேகுதி கோவிலில் உள்ளது. இது சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவரான ரவிகீர்த்தி என்பவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது. இக்கல்வெட்டு ஹர்ஷவர்த்தனர் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது.

கல்யாணி மேலைச் சாளுக்கியர்

  • இவர்கள் வாதாபிச் சாளுக்கியரின் வழித்தோன்றல்கள் ஆவர். கல்யாணியைத் (தற்போதைய பசவ கல்யாண்) தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தனர். இரண்டாம் தைலப்பர் என்பவர் ராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக பீஜப்பூர் பகுதியை ஆண்டுவந்தார். இவர் கி.பி. (பொ.ஆ) 973இல் மாளவ அரசர் பரமாரரைத் தோற்கடித்து கல்யாணியைக் கைப்பற்றினார். இவருடைய வம்சம் முதலாம் சோமேஸ்வரனின் ஆட்சியின்போது பேரரசாக வேகமாக வளர்ச்சி பெற்றது. முதலாம் சோமேஸ்வரர் தலைநகரை மன்யகேட்டாவிலிருந்து கல்யாணிக்கு மாற்றினார்.
  • ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தென்னிந்தியாவிலிருந்த இரண்டு பேரரசுகளான மேலைச் சாளுக்கியர்களும் தஞ்சாவூர்ச் சோழர்களும் வளம் நிறைந்த வெங்கியைக் கைப்பற்றுவதற்காகக் கடுமையாகப் போரிட்டுக்கொண்டனர்.
  • பதினேராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆறாம் விக்கிரமாதித்யரின் காலத்தில் வடக்கே நர்மதை ஆற்றுக்கும், தெற்கே காவேரி ஆற்றுக்கும் இடைப்பட்ட பெரும்பகுதி சாளுக்கியரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

கலை மற்றும் கட்டடக்கலைக்குச் சாளுக்கியரின் பங்களிப்பு

  • சாளுக்கியர்கள் சைவம், வைணவம் ஆகியவற்றின் ஆதரவாளர்களாகக் கலை மற்றும் கட்டடக்கலைத் துறைகளுக்குச் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.
  • வெசாரா பாணியிலான கோவில் விமானங்களைக் கட்டும் முறை வளர்ச்சி பெற்றது. இது தென் இந்திய (திராவிட) மற்றும் வட இந்திய (நகரா) கட்டடப் பாணிகளின் கலப்பு ஆகும்.
  • சாந்து இல்லாமல் கற்களை மட்டுமே கொண்டு கட்டடங்களைக் கட்டும் தொழில்நுட்பத்தை அவர்கள் மேம்படுத்தினர். அவர்கள் கட்டுமானத்திற்கு மிருதுவான மணற்கற்களைப் பயன்படுத்தினர்.
  • சாளுக்கியர்கள் பெரும் எண்ணிக்கையிலான குடைவரைக் குகைக் கோவில்களையும், கட்டுமானக் கோவில்களையும் கட்டி சிவன், விஷ்ணு , பிரம்மா ஆகிய கடவுளர்களுக்கு அர்ப்பணித்தனர்.
  • சாளுக்கியர்களின் கட்டுமானக் கோவில்கள் அய்கோல், வாதாபி, பட்டடக்கல் ஆகிய இடங்களில் உள்ளன. வாதாபி மற்றும் அய்கோலிலுள்ள விஷ்ணு கோவில்கள், பீஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லிலுள்ள விருப்பாக்‌ஷா கோவில் ஆகியன கற்களால் கட்டப்பட்ட கோவில்களாகும்.
  • வாதாபியிலுள்ள விஷ்ணு கோவில் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த மங்களேசனால் கட்டப்பட்டது. இரண்டாம் விக்கிரமாதித்தனுடைய அய்கோல் கல்வெட்டு அங்குள்ளது. அவர்களின் குகைக்கோவில்கள் அஜந்தா, எல்லோரா, நாசிக் ஆகிய இடங்களில் உள்ளன.

  • வாதாபியிலுள்ள குகைக் கோவில்களில் சேஷநாகர் மீது சாய்ந்திருக்கும் விஷ்ணு, விஷ்ணுவின் வராக, நரசிம்ம, (பாதி சிங்கம் – பாதி மனிதன்) வாமன (குள்ள) அவதாரங்கள் நேர்த்திமிக்க சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
  • லக்கண்டியிலுள்ள காசி விஸ்வேஸ்வரர் கோவில். குருவட்டியிலுள்ள மல்லிகார்ஜுனா கோவில், பகலி என்னுமிடத்திலுள்ள கள்ளேஸ்வரர் கோவில், இட்டகியிலுள்ள மகாதேவர் கோவில் ஆகியவை கல்யாணி மேலைச் சாளுக்கியரின் கட்டிடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
  • ஓவியங்களில் சாளுக்கியர் வாகடகர் பாணியைப் பின்பற்றினர். அஜந்தா குகைகளில் காணப்படும் சில சுவரோவியங்கள் சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்தவை, பாரசீகத் தூதுக்குழுவை இரண்டாம் புலிகேசி வரவேற்பது போன்றதொரு காட்சி அஜந்தா ஓவியமொன்றில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

பட்டடக்கல்

யுனெஸ்கோ உலகப்பாரம்பரியச் சின்னம். பட்டடக்கல் கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். அங்கு 10 கோவில்கள் உள்ளன. அவற்றில் நான்கு வடஇந்தியபாணியான நகரா பாணியிலும் மற்றுமுள்ள ஆறு தென்னிந்திய திராவிட பாணியிலும் கட்டப்பட்டுள்ளன. விருப்பாக்‌ஷா கோவிலும் சங்கமேஸ்வரா கோவிலும் திராவிடப் பாணியிலும் பாப்பநாதர் கோவில் நகரா பாணியிலும் அமைந்துள்ளன. விருப்பாக்‌ஷா கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கட்டுமானப் பணியில் காஞ்சிபுரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

ராஷ்டிரகூடர்கள்

ராஷ்டிரகூடர்கள் தக்காணத்தை மட்டுமல்லாது, தூரத் தெற்குப் பகுதிகளையும் கங்கை சமவெளிப்பகுதிகளையும் எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தனர். அவர்களின் பிறப்பால் கன்னடர்களாவர். அவர்களின் தாய்மொழி கன்னடம். தந்திதுர்க்கர் ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் ஆவார். அவர் வாதாபிச் சாளுக்கியரிடம் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர். முதலாம் கிருஷ்ணர் தந்திதுர்க்கரை அடுத்துப் பதவி ஏற்றார். அவர் ராஷ்டிரகூடர் ஆட்சியை ஒருங்கிணைத்து விரிவுபடுத்தினார். அவர் கலை மற்றும் கட்டிடக்கலையின் பெரும் ஆதரவாளர் ஆவார். எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் இவர் கட்டியதாகும்.

ராஷ்டிரகூட அரசர்கள்

  • ராஷ்டிரகூட அரசர்களில் தலைசிறந்த அரசர் அமோகவர்ஷர், அவர் மான்யக்கேட்டாவில் (தற்போது கர்நாடகாவில் உள்ள மால்கெட்) புதிய தலைநகரை உருவாக்கினார்.
  • புரோச், அவர்களின் துறைமுகமானது. அமோகவர்ஷர் கி.பி.(பொ.ஆ) 814 – 878) ஜினசேனர் எனும் சமணத் துறவியால் சமணத்தை தழுவினார்.
  • அமோகவர்ஷருக்குப் பின்னர் அவரது மகன் இரண்டாம் கிருஷ்ணர் அரசரானார். கி.பி. (பொ.ஆ) 916இல் அவர் பராந்தகச் சோழனால் வல்லம் (தற்போதைய திருவல்லம், வேலூர் மாவட்டம்) போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டார்.
  • மூன்றாம் கிருஷ்ணர் ராஷ்டிரகூட வம்சத்தின் திறமை வாய்ந்த கடைசி அரசனாவார். இவர் சோழர்களைத் தக்கோலம் (தற்போதைய வேலூர் மாவட்டத்தில் உள்ளது) போர்க்களத்தில் தோற்கடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார்.
  • மூன்றாம் கிருஷ்ணரின் கீழ் சாளுக்கியர் கன்னோசியைக் கைப்பற்றுவதற்காக ஏனைய வட இந்திய அரசர்களோடு போட்டியிட்டனர். அவர் இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரர் கோவிலைக் கட்டினார். நாட்டைச் சரியான முறையில் வைத்திருந்த கடைசி அரசர் மூன்றாம் கோவிந்தனாவார். அவருக்குப் பின் ராஷ்டிரகூடரின் அதிகாரம் வீழ்ந்தது.

இலக்கியம் , கலை, கட்டடக்கலை ஆகியவற்றுக்கு ராஷ்டிரகூடர்களின் பங்களிப்பு

இலக்கியம்

  • கன்னடமொழி பெருமளவு முக்கியத்துவம் பெற்ற மொழியானது. அமோகவர்ஷரால் இயற்றப்பட்ட கவிராஜமார்க்கம் கன்னட மொஇழ்யின் முதல் கவிதை நூலாகும். அரசவைப் புலவர்கள் கன்னட மொழியில் சிறந்த நூல்களை எழுதினர். இக்காலப் பகுதியின் கன்னட இலக்கியட்தின் மூன்று ரத்தினங்கள் எனக் கருதப்படுபவர்கள் ஆதிகவி பம்பா, ஸ்ரீ பொன்னா, ரன்னா ஆகியோராவர்.
  • ஆதிகவி பம்பா அவரது நூற்களான ஆதிபுராணம், விக்கிரமார்ஜுன விஜயம் ஆகியவற்றிற்காகப் பெரும்புகழ் பெற்றவர்.
  • முதல் சமணத் தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் வாழ்க்கையை ஆதிபுராணம் சித்தரிக்கின்றது. விக்கிரமார்ஜுனவிஜயம் மஹாபாரதத்தின் மீள் தருகையாகும். இதில் தன்னை ஆதரித்த சாளுக்கிய அரிகேசரியை அர்சுனனின் பாத்திரத்தில் பொருத்தி பம்பா எழுதியுள்ளார்.

கலை மற்றும் கட்டடக்கலை

இந்தியக் கலைக்கு ராஷ்டிரகூடர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர். ராஷ்டிரகூடர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைச் சாதனைகளை எல்லோராவிலும் எலிபெண்டாவிலும் காணலாம்.

கைலாசநாதர் கோவில் – எல்லோரா (மகாராஷ்டிராவிலுள்ள ஔரங்காபாத் அருகில்)

எல்லோராவின் குன்றுப் பகுதியில் அமைந்துள்ள முப்பது குடைவரைக் கோவில்களில் கைலாசநாதர் கோவிலும் ஒன்று. முதலாம் கிருஷ்ணருடைய ஆட்சிக் காலத்தில் இக்கோவில் உருவாக்கப்பட்டது.

இக்கோவில் அதன் கட்டடக்கலை பிரமாண்டத்திற்கும் சிற்பங்களின் அற்புதங்களுக்கும் பெயர் பெற்றதாகும். இக்கோவில் 60,000 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்டுள்ளது.

இதனுடைய விமானத்தின் (கோபுரம்) உயரம் 90 அடிகளாகும். இக்கோவில் மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலின் சாயலைப் பெற்றுள்ளது. கைலாசநாதர் கோவில் திராவிடக் கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்டுள்ளது.

எலிபெண்டா தீவு

இத்தீவின் இயற்பெயர் ஸ்ரீபுரி –உள்ளூர் மக்களால் காரபுரி என்று அழைக்கப்படுகிறது. எலிபெண்டா மும்பைக்கு அருகிலுள்ள ஒரு தீவு ஆகும். இத்தீவிலுள்ள பெரிய யானையின் உருவத்தைக் கண்ணுற்ற போர்த்துகீசியர்கள், இத்தீவுக்கு எலிபெண்டா தீவு எனப் பெயரிட்டனர். எலிபெண்டா குகையிலுள்ள திரிமூர்த்தி (மூன்று முகங்கள் கொண்ட) சிவன் சிலையின் வனப்பு ஈடு இணையற்றதாகும். கோவிலின் நுழைவாயிலில் காணப்படும் துவாரபாலகர்களின் சிலைகள் நமது கண்ணையும் கருத்தையும் கவர்பவை.

பட்டடக்கல்

பட்டடக்கல் வளாகத்தில் ராஷ்டிரகூடர்கள் கோவில்களைக் கட்டியுள்ளனர். இங்குச் சமண நாராயணர் கோவிலும் காசி விஸ்வேஸ்வரர் கோவிலும் ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டுள்ளன.

மாபெரும் லேஷன் (Leshan) புத்தர் சிலை

மீட்டர் உயரம்

சீனாவின் தாங் (Tang) அரச வம்சத்தினரால் கட்டப்பட்டது.

(கி.பி. (பொ.ஆ) 713 – 803)

பாக்தாத்

இஸ்லாமியப் பேரரசின் மகத்தான நகரம்

8 ஆம் நூற்றாண்டிலிருந்து 10ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!