Tnpsc

இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி Notes 8th Social Science Lesson 12 Notes in Tamil

8th Social Science Lesson 12 Notes in Tamil

12. இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

அறிமுகம்

  • இந்திய தொழில்களின் வரலாறு மனிதகுல வரலாற்றிலிருந்தே தொடங்குகிறது.
  • விவசாயமும் கைவினைப் பொருட்கள் கலந்த கலவையாகவே இந்திய பாரம்பரிய பொருளாதாரம் காணப்பட்டது.
  • எட்வர்ட் பெயின்ஸ் என்பவர் “பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும் அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கி இருந்தது” என்றும் குறிப்பிடுகிறார்.
  • முகலாய பேரரசர் ஷாஜஹான் ஆட்சியின்போது இந்தியாவிற்கு வருகை தந்த பெர்னியர், இந்தியாவில் நம்பமுடியாத எண்ணிக்கையில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டதைக் கண்டு வியப்படைந்தார்.
  • பிரெஞ்சு நாட்டு பயணி டவேர்னியர் இந்தியாவில் உள்ள மயிலாசனம், பட்டு மற்றும் தங்கத்தினாலான தரைவிரிப்புகள், சிறிய அளவிலான சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு வியப்படைந்தார்.

இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்களின்

  • இந்தியாவின் கைவினைப் பொருட்கள் ஒரு சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளன.
  • கைவினைப் பொருட்கள் இந்திய மக்களின் வாழ்க்கையில் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருந்தன.
  • இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைகள் வருவதற்கு முன்னர், இந்திய கிராமங்களில் விவசாயத்திற்கு அடுத்த நிலையில் கைவினைத் தொழில் பெரிய வேலை வாய்ப்பாக இருந்தது.
  • நெசவு, மரவேலை, தந்தவேலை, மதிப்புமிக்க கற்களை வெட்டுதல், தோல், வாசனை மரங்களில் வேலைபாடுகள் செய்தல், உலோக வேலை மற்றும் நகைகள் செய்தல் ஆகிய பாரம்பரிய தொழில்களில் இந்தியா மிகவும் புகழ்பெற்று விளங்கியது.
  • கிராமப்புற கைவினைஞர்களான பானைத் தயாரிப்பாளர்கள், நெசவாளர்கள், உலோக வேலை செய்வோர் ஆகியோர் வீட்டுப் பயன்பாட்டிற்கான பொருட்களையும் பாத்திரங்களையும் உற்பத்தி செய்தனர். ஆனால் சில சிறப்பு வாய்ந்த பொருட்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்காக உற்பத்தி செய்யப்பட்டன.
  • அவைகள் பருத்தித் துணிகள், மஸ்லின் துணிகள், கம்பளி, பட்டு மற்றும் உலோகப் பொருட்கள் ஆகியனவாகும்.
  • பருத்தி மற்றும் பட்டு ஆடைகளின் சிறந்த தரத்திற்கு இந்தியா பிரபலமானது.
  • நெசவாளர்கள், தையல்காரர்கள் மற்றும் சாய தொழிலாளர்கள் ஆகியோரைப் பற்றி பல அறிவார்ந்த படைப்புகளில் குறிப்புகள் காணப்படுகின்றன.
  • குறிப்பிட்ட சில உலோகத் தொழிற்சாலைகளுக்கான மையங்கள் நன்கு பிரபலமானவை. உதாரணமாக மணி தயாரிக்கப் பயன்படும் உலோகமான வெண்கலத்துக்கு சௌராஷ்டிரா பெயர் பெற்றது.
  • தகர தொழிற்சாலைக்கு வங்காளம் புகழ்பெற்றது. மஸ்லின் ஆடைகளுக்கு டாக்கா புகழ்பெற்றது.

டாக்காவின் மஸ்லின் ஆடைகள்

  • கி.மு. (பொ.ஆ.மு) 2000ஆம் ஆண்டுகள் பழமையான எகிப்திய கல்லறைகளில் உள்ள மம்மிகள் மிகச் சிறந்த தரம் வாய்ந்த இந்திய மஸ்லின் ஆடைகள் கொண்டு சுற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • 50 மீட்டர் அளவு கொண்ட மெல்லிய இந்த மஸ்லின் துணியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம்.

இந்தியத் தொழிலகங்களின் வீழ்ச்சி

அ) ஆட்சியாளர்களின் ஆதரவின்மை

  • இந்தியாவில் பிரிட்டிஷாரின் வெற்றியானது சுயச்சார்புடன் இருந்த இந்திய பொருளாதாரத்தை காலனித்துவ பொருளாதாரமாக மாற்றியது.
  • பிரிட்டிஷார் இந்திய நிலப்பகுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக வெற்றி கொண்டதால், பூர்வீக ஆட்சியாளர்கள், உயர்குடியினர் மற்றும் நிலக்கிழார்கள் ஆகியோர் தங்கள் அதிகாரத்தையும் செல்வவளத்தையும் இழந்தனர்.
  • அரசவையில் நுண்ணிய வேலைப்பாடுகளைக் கொண்ட பொருட்களை காட்சிப்படுத்துவதும் பிற சடங்கு சம்பிரதாயங்களும் மறைந்தன. இதன் விளைவாக பூர்வீக ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்ட கைவினைஞர்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்து ஏழைகளாயினர்.
  • பல தலைமுறைகளாக தங்கள் கைவினைத் தொழிலை மட்டுமே மேற்கொண்ட இந்திய கைவினைஞர்கள் மற்ற தொழில்களுக்கான திறமைகளை கொண்டிருக்கவில்லை. எனவே அவர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வயல்வெளிகளில் தொழிலாளர்களாக வேலை செய்ய வேண்டியதாயிற்று.
  • இந்த மாற்றம் விவசாயத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியது மற்றும் தகுதிக்கேற்ற வேலையின்மை அதிக அளவில் விவசாயத் தொழிலில் ஏற்பட்டது.
  • விவசாயமும் வணிக பயிர்களுக்கு மாறியதால், இந்திய வேளாண் சார்ந்த தொழிலகங்கள் அழிவை நோக்கிச் சென்றன.
  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல் செல்வாக்கு பரவியதால் உள்நாட்டு கைத்தொழில்களின் சிறப்பான காலம் முடிவுக்கு வந்தது எனலாம்.

ஆ) உற்பத்தியாளர், மூலப்பொருட்களின் ஏற்றுமதியாளராக மாறுதல்

  • நாட்டை புகழ்பெறச் செய்த இந்திய கைவினைப் பொருள்கள் காலனித்துவ ஆட்சியின் கீழ் சரிவைச் சந்தித்தன.
  • பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டியே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
  • பிரிட்டிஷ் ஆட்சியானது, இந்தியாவை தங்கள் தொழில்களுக்கான மூலப்பொருள்களின் உற்பத்தியாளராகவும், தங்களால் தயாரித்து முடிக்கப்பட்ட பொருட்களுக்கான சந்தையாகவும் மாற்றியது.
  • மேலும் பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்ட ரயில்வே மற்றும் சாலைகளானது முடிவுற்ற பொருட்களை இந்தியாவின் தொலைதூர பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் பல்வேறு பகுதிகளிலிருந்து மூலப்பொருட்களை கொள்முதல் செய்யவும் வாய்ப்பை ஏற்படுத்தியது.

இ) இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி

  • இந்தியாவின் பழமையான தொழில் நெசவுத் தொழிலாகும்.
  • இந்திய நெசவாளர்களின் மிகவும் சிரப்பு வாய்ந்த திறன்கள் மற்றும் குறைந்த உற்பத்தி செலவு ஆகியவை ஐரோப்பிய உற்பத்தியாளர்களுக்கு கடுமையான போட்டியை அளித்தன.
  • இப்போட்டி இங்கிலாந்தில் காட்டன் ஜின், பறக்கும் எறிநாடா, நூற்கும் ஜென்னி மற்றும் நீராவி இயந்திரம் ஆகியவை கண்டுபிடிப்பதற்கும், அவை நெசவு உற்பத்தியை பெரிய அளவில் உருவாக்கவும் உதவியது.
  • பிரிட்டனில் உற்பத்தியான பொருட்களின் சந்தையாக இந்தியா மாறியது. இதன் விளைவாக பகுதிநேர வேலையாக நூற்பு மற்றும் நெசவு மூலம் தங்கள் வருமானத்தை ஈடுசெய்த விவசாயிகள் தற்போது பயிரிடுவதை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. அதனால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
  • மேலும் பழமையான தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட இந்தியப் பொருட்கள் இங்கிலாந்தில் இயந்திரங்களால் முடிக்கப்பட்ட பொருட்களுடன் போட்டியிட முடியவில்லை.

தாதாபாய் நௌரோஜியின் செல்வச் சுரண்டல் கோட்பாடு

ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதுமே இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் என்பதை முதலில் ஏற்றுக் கொண்டவர் தாதாபாய் நௌரோஜி ஆவார்.

ஈ) ஆங்கிலேயர்களின் வர்த்தகக் கொள்கை

  • இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட அனைத்து கொள்கைகளும் இந்திய உள்நாட்டு தொழில்களின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
  • கிழக்கிந்திய கம்பெனியால் பின்பற்றப்பட்ட தடையில்லா வாணிபக் கொள்கை, இந்திய வர்த்தகர்கள் தங்கள் கொள்கை, இந்திய வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை சந்தை விலைக்கு குறைவாக விற்க கட்டாயப்படுத்தியது.
  • இது பல கைவினைஞர்கள் தங்கள் மூதாதையர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட கைவினைத் திறமைகளை கைவிடவும் கட்டாயப்படுத்துயது.
  • கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கமானது மலிவான விலையில் இந்திய தயாரிப்பு பொருட்களை பெருமளவிற்கு வாங்கி மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் லாபத்திற்கு விற்க வேண்டும் என்பதாகும். இது இந்தியப் பாரம்பரிய தொழில்களை வெகுவாக பாதித்தது.
  • இந்தியாவின் வர்த்தக நலன்களுக்கெதிரான பாதுகாப்பு கட்டணங்களின் கொள்கையை ஆங்கிலேயர்கள் பின்பற்றினர்.
  • பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்பட்டன. அதே நேரத்தில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ஆங்கிலேயபொருட்களுக்கு பெயரளவில் மட்டுமே வரி விதிக்கப்பட்டன.

உ) தொழில்மயமழிதல்

  • 19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் மேற்கத்திய நாடுகள் தொழில்மயமாக்களை அனுபவித்து வந்த அதே வேளையில் இந்தியத் தொழிற்துறையானது வீழ்ச்சியின் காலத்தைச் சந்தித்தது.
  • பாரம்பரிய இந்திய கைவினை தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடு மற்றும் தேசிய வருமானத்தின் வீழ்ச்சி ஆகியன தொழில்மயமழிதல் என குறிப்பிடப்படுகிறது.
  • ஒரு சக்திவாய்ந்த தொழிற்துறை அமைப்பு, மிகப்பெரிய இயந்திரங்கள், பெரிய அளவிலான உற்பத்தி ஆகியவற்றை பின்புலமாகக் கொண்ட வெளிநாடு தொழிலகங்களுடன் இந்திய உள்நாட்டு தொழிலகங்கள் போட்டியிட முடியவில்லை.
  • சூயஸ் கால்வாய் கட்டுமானத்திற்கு பின்பு இந்தியத் தொழிற்துறை மேலும் சிக்கலைச் சந்தித்தது. ஏனென்றால் இது போக்குவரத்து செலவினை குறைத்ததுடன் இந்தியாவில் பிரிட்டிஷ் பொருட்களை மலிவானதாக மாற்றியது.
  • நவீன தொழிற்சாலையின் அதிகமான வேலைவாய்ப்புகளும் வருமானம் ஈட்டும் விளைவுகளும் கைவினைத் தொழில் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நவீன தொழிலகங்களின் தொடக்கம்

  • 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியாவில் தொழில்மயமாக்கலின் செயல்பாடு தொடங்கியது.
  • நவீனத் தொழிற்துறையின் தொடக்கமானது முக்கியமாக சணல், பருத்தி மற்றும் எஃகு தொழில்களின் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டவுடன் தொழில்மயமாக்கல் தொடங்கியது. இந்த வளர்ச்சி நாட்டு மக்களின் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது.
  • இரசாயனம், இரும்பு மற்றும் எஃகு, சர்க்கரை, சிமெண்ட், கண்ணாடி மற்றும் மற்ற நுகர்வோர் பொருட்கள் போன்ற தொழில்களின் வளர்ச்சிக்கு இரண்டு உலகப் போர்களும் ஒரு உத்வேகத்தை அளித்தன.
  • பெரும்பாலான ஆலைகள் பணக்கார இந்திய வணிகர்களால் அமைக்கப்பட்டன.
  • தொடக்கத்தில் இந்த வளர்ச்சி பருத்தி மற்றும் சணல் ஆலைகள் அமைப்பதில் மட்டுமே இருந்தது.

அ) தோட்டத் தொழில்கள்

  • தோட்டத்தொழில் முதன் முதலில் ஐரோப்பியர்களை ஈர்த்தது. பெருந்தோட்டத் தொழில் பெரிய அளவில் வேலைகளை வழங்க முடிந்ததென்றாலும், உண்மையில் இது பிரிட்டிஷ் சமுதாயத்தால் அதிகரித்து வரும் தேநீர், காபி மற்றும் கருநீலச்சாயம் (இண்டிகோ) ஆகியவற்றிற்கான தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது. எனவே தான் தோட்டத் தொழில் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டது.
  • அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் 1839ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதே நேரத்தில் காபி தோட்டமும் தொடங்கப்பட்டது
  • .தேயிலைத் தோட்டம் கிழக்கிந்திய பகுதிகளில் மிக முக்கியமான தொழிலாக இருந்தது போலவே காபி தோட்டமும் தென்னிந்தியாவின் நடவடிக்கைகளின் மையமாக மாறியது.
  • மூன்றாவது முக்கிய தோட்டத் தொழிலான சணல் பல தொழிற்சாலைகள் உருவாக வழிவகுத்தது. இந்த தொழில்கள் அனைத்தும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் பலரால் கட்டுப்படுத்தப்பட்டன.

ஆ) இயந்திர அடிப்படையிலான தொழில்கள்

  • இந்தியாவில் 1854ஆம் ஆண்டு பம்பாயில் பருத்தி நூற்பு ஆலை நிறுவியதுடன் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட வடிவிலான நவீன தொழிற்துறைப் பிரிவு தொடங்கப்பட்டது.
  • 1855ஆம் ஆண்டு கல்கத்தாவிற்கு அருகில் ரிஷ்ரா என்ற இடத்தில் ஹுக்ளி பள்ளத்தாக்கில் சணல் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
  • 1870ஆம் ஆண்டு முதல் காகித ஆலை கல்கத்தாவுக்கு அருகில் பாலிகஞ் என்ற இடத்தில் துவங்கப்பட்டது.
  • பருத்தி ஆலைகள் இந்திய நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டன மற்றும் சணல் ஆலைகள் பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு சொந்தமானவையாக இருந்தன.
  • பம்பாய் மற்றும் அகமதாபாத்தில் பருத்தி ஆலைகள் ஏற்படுத்தப்பட்டன மற்றும் ஹுக்ளி ஆற்றங்கரையில் சணல் ஆலைகள் பல்கிப் பெருகின.
  • கான்பூரில் கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் முக்கியத்துவம் பெற்றன.

இ) கனரக தொழில்கள்

  • கனரக தொழில்களில் இரும்பு மற்றும் எஃகு தொழில் அடங்கும். 1874 ஆம் ஆண்டு குல்டி என்ற இடத்தில் முதன்முறையாக நவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்டது.
  • 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரும்பு மற்றும் எஃகு தொழில்கள் இந்திய மண்ணில் வேரூன்ற தொடங்கின. இருப்பினும் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான எகு உற்பத்தியை மேம்படுத்திய பெருமை ஜாம்ஷெட்ஜி டாடா என்பவரையே சாரும்.
  • 1907 ஆம் ஆண்டு ஜாம்ஜெட்பூர் என்ற இடத்தில் டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) அமைக்கப்பட்டது. இந்நிறுவனம் 1911ஆம் ஆண்டு தேனிரும்பு மற்றும் 1912ஆம் ஆண்டு உலோக வார்ப்பு கட்டிகளையும் உற்பத்தி செய்தது.

நவீன தொழிலகங்களின் வளர்ச்சி

  • 1861ஆம் ஆண்டு 2573 கிலோ மீட்டர் ஆக இருந்த ரயில்வேயின் நீளம் 1914ஆம் ஆண்டு 55,773 கிலோ மீட்டர்களாக அதிகரித்தது.
  • சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான தூரத்தை சுமார் 4,830 கிலோ மீட்டர் தூரமாக குறைத்தது.
  • இந்த குறைக்கப்பட்ட தூரம் இந்தியாவின் தொழில்மயமாக்கலுக்கு மேலும் உதவியது.
  • சுதேசி இயக்கத்தின் விளைவாக பருத்தி ஆலைகள் 194லிருந்து 273 ஆகவும் சணல் ஆலைகள் 36 லிருந்து 64 ஆகவும் அதிகரித்தன
  • ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அதிகாரத்தை பலப்படுத்தி அதன் மூலம் ஏராளமான வெளிநாட்டு தொழில் முனைவோர்களையும் வெளிநாட்டு மூலதனத்தையும் குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து ஈர்த்தனர்.
  • அதிக லாபம் ஈட்டும் இந்திய தொழிற்துறைகள் வெளிநாட்டு முதலாளிகளை மிகவும் கவர்ந்திழுத்தது. ஏனென்றால் வேலையாட்களும் மூலப்பொருட்களும் மிகவும் மலிவாகக் கிடைத்தன. மேலும் இந்தியாவின் அதன் அண்டை நாடுகளும் ஒரு சந்தையை வழங்க தயாராக இருந்தன.

இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII)

CII – Confederation of Indian Industry

  • இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு என்பது இந்தியாவில் உள்ள ஒரு வணிக சங்கம் ஆகும். இது ஒரு அரசு சாரா, இலாப நோக்கமற்ற, தொழிற்துறை வழிநடத்துதல் மற்றும் தொழிற்துறையை நிர்வகிக்கும் ஒரு அமைப்பாகும். இது1985 இல் நிறுவப்பட்டது.
  • தனியார் மற்றும் பொதுத் துறைகளை உள்ளடக்கிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (SME) இருந்தும் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் (MNC) இருந்தும் 9,000 உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.

இந்தியாவில் தொழிலக வளர்ச்சி

  • தொழிலக வளர்ச்சியின் கனவை நனவாக்கும் விதமாக இந்திய அரசு சில தொழிற்துறை கொள்கைகளையும், ஐந்தாண்டு திட்டங்களையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
  • சுதந்திரத்திற்கு பிறகு தொழிற்துறையில் ஏற்பட்ட மிக முக்கியமான புதுமைகளுள் ஒன்று ஐந்தாண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.
  • மேலும் 1948ஆம் ஆண்டு தொழிற்துறை கொள்கை தீர்மானத்தினால் அரசாங்கம் தொழிற்துறையில் நேரடியாக பங்களிப்பினை வெளிப்படுத்துகிறது.
  • இந்த தீர்மானம் தொழிற்துறை வளர்ச்சியில் ஒரு தொழில் முனைவோராகவும் அதிகார மையமாகவும் அரசின் பங்கினை வரையறுத்தது.
  • 1956ஆம் ஆண்டு தொழிற்துறை கொள்கை தீர்மானத்தின்படி தொழிற்துறைவானது மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அட்டவணை 1

இவ்வகையான தொழிற்துறைகளை அரசாங்கம் மட்டுமே நிர்வகிக்கும். அவற்றுள் சில அணுசக்தி , மின்னணு, இரும்பு மற்றும் எஃகு ஆகியவை அடங்கும்.

அட்டவணை 2

இவைகள் சாலைகள் மற்றும் கடல் போக்குவரத்து, இயந்திரக் கருவிகள், அலுமினியம், நெகிழி மற்றும் உரங்கள் உள்ளிட ரசாயனங்கள், இரும்பு கலவை மற்றும் குறிப்பிட்ட வகையான சுரங்கங்கள் ஆகியவை அடங்கும்.

அட்டவணை 3

இந்த வகையின் கீழ் மீதமுள்ள தொழில்கள் மற்றும் தனியாருக்கு விடப்பட்ட துறைகள் ஆகியவை அடங்கும்.

தொழிலக வகைபாடு

  • மூலப்பொருட்களின் அடிப்படையில் தொழில்களை வேளாண் அடிப்படையிலானவை மற்றும் கனிம அடிப்படையிலானவை என வகைப்படுத்தலாம்.
  • தொழிலகங்கள் அவைகளின் பங்களிப்பின்படி அடிப்படை தொழில்கள் மற்றும் முக்கிய தொழில்கள் எனவும் வகைப்படுத்தலாம்.
  • தொழில் உரிமத்தின் அடிப்படையில் பொதுத்துறை, தனியார் துறை மற்றும் கூட்டுறவுத் துறை என தொழிலகங்களை வகைப்படுத்தலாம்.

இந்தியாவில் தொழிற்துறை வளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள்

அ. தொழிற்துறை வளர்ச்சி (1950 – 1965)

  • இந்த காலகட்டத்தில் பெரும்பான்மையான நுகர்வோர் பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டன.
  • தொழிற்துறை பலவீனமான உள்கட்டமைப்புடன் வளர்ச்சியடையாமல் இருந்தது. தொழில்நுட்ப திறன்கள் குறைந்த அளவிலேயே கிடைத்தன.
  • முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் மிகவும் முக்கியமானவை ஏனெனில் அவைகளின் நோக்கம் சுதந்திர இந்தியாவில் ஒரு வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குவதே ஆகும்.
  • இந்த ஐந்தாண்டுத்திட்டங்கள் பெரும்பாலும் மூலதனப் பொருட்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தின. இதன் விளைவாக இக்கால கட்டத்தில் உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஒரு துரிதமான வளர்ச்சியைக் கண்டது.

ஆ) தொழிற்துறை வளர்ச்சி (1965 – 1980)

  • முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் பெரும்பாலும் மூலதனப் பொருட்கள் துறையின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியதால், நுகர்வோர் பொருட்களின் துறை புறக்கணிக்கப்பட்டது.
  • நுகர்வோர் பொருட்களின் துறையே கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். இதன் விளைவாக தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி அடைந்தது. எனவே இந்த காலகட்டம் பின்னடைவு காலமாக கருதப்படுகிறது.

இ. தொழிற்துறை வளர்ச்சி (1980 – 1991)

  • 1980களின் காலகட்டத்தை தொழிற்துறையின் மீட்பு காலமாகக் கருதலாம். ஏனெனில் இந்தக் காலத்தில் தொழிற்துறை மிகவும் வளமான வளர்ச்சியைக் கண்டது.

ஈ) 1991ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு பின்னர் தொழிற்துறை வளர்ச்சி

  • 1991ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது.
  • தொழிற்துறையின் செயல்திறனை மேம்படுத்த இந்தியா ஒரு முக்கியமான முடிவை எடுத்தது.
  • பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் தொழிற்துறை உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தைக் கண்டன.
  • தொழிற்துறை உரிமத்தை ஒழித்தல், விலைக் கட்டுப்பாடுகளை நீக்குதல், சிறு தொழில்களுக்கான கொள்கைகளை நீர்த்து போகச் செய்தல் மற்றும் ஏகபோக சட்டத்தின் மாயயை ஒழித்தல் ஆகியவை இந்தியத் தொழிற்துறௌ செழிக்க உதவியது. புதிய பொருளாதார கொள்கை வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கிறது.

நவீனமயமாக்கல்

  • இந்தியா தற்போது பல்வேறு வகையான இயல்பினைக் கொண்ட பொருட்களை உற்பத்தி செய்வதே அதிக அளவு நவீனமயமாக்கலைக் காட்டுகிறது.
  • சில நவீன தொழில்கள் உண்மையில் வளர்ச்சி அடைந்து வெளி உலகத்துடன் திறம்பட போட்டியிடுகின்றன. இது வெளிநாட்டு வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளார்களை சார்ந்து இருப்பதை பெரிதும் குறைத்துள்ளது. மாறாக, ஒப்பீட்டளவில் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு பயிற்சி பெற்ற பணியாளர்களை இந்தியா அனுப்புகிறது.
  • தகவல் தொழில்நுட்பம் என்ற சொல் மென்பொருளுடன் கணினி மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கியது ஆகும்.
  • முதல்நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைத் தொழில்களுடன் நான்காம் தொழிற்துறையாக தகவல் தொடர்பான தொழில்கள் உருவாகியுள்ளது.
  • அறிவு சார்ந்த பொருளாதாரமானது இயந்திரமயமான உழைப்பாளரின் தீவிர உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகள், சுகாதாரம், தொலைதூர கல்வி, மென்பொருள் உற்பத்தி மற்றும் பல்லூடகம் (மல்டிமீடியா), பொழுதுபோக்கு ஆகியவை புதிய சேவை தொழில்களின் வளர்ச்சியை சித்தரிக்கின்றன.

தற்சார்புடைமை

  • தற்சார்பு இலக்கை அடைந்திருப்பது தொழிற்துறை வளர்ச்சியின் மற்றொரு சாதகமான அம்சமாகும்.
  • இயந்திரங்கள், ஆலைகள் மற்றும் இதர தளவாடங்கள் உற்பத்தியில் நாம் தற்சார்பினை அடைந்துள்ளோம்
  • .தற்போதும் தொழிற்துறை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தேவையான தளவாடங்களின் பெரும்பகுதி இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
  • இந்தியாவின் சாலைப் போக்குவரத்தானது உலகின் மிகப்பெரிய போக்குவரத்துகளுள் ஒன்றாகும்.
  • அரசாங்கத்தின் முயற்சிகளானது, தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட நெடுஞ்சாலைகளின் அமைப்பினை விரிவாக்க வழிவகுத்தன. இது தொழிற்துறை வளர்ச்சிக்கு நேரடியான பங்களிப்பை அளித்தது.
  • இந்தியாவிற்கு அதன் வளர்ச்சி இயந்திரத்தை இயக்க சக்தி தேவைப்படுவதால் ஆற்றல் கிடைப்பதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை தூண்டிவிட்டுள்ளது.
  • சுதந்திரத்திற்கு பின்னர் ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மின்சார உற்பத்தியில் ஆசியநாடுகளில் மூன்றாவது மிகப் பெரிய நாடாக உருவாகியுள்ளது.

முடிவுரை

தொழில்மயமாக்கல் என்பது பொருளாதார வளர்ச்சியின் ஒரு முக்கிய அங்கமாகும். திட்ட காலத்தில் இந்தியாவின் தொழிற்துறை விரிவாக்கமானது கலப்புப் பொருளாதாரம் ஏற்பட வழிவகை செய்தது. சுதந்திரத்திற்கு முன் இருந்த தொழிற்துறை வளர்ச்சியைக் காட்டிலும் ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் தொழில் வளர்ச்சி தனித்துவம் பெற்று விளங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!