Tnpsc

குப்தர்கள் Notes 11th History

11th History Lesson 3 Notes in Tamil

3. குப்தர்கள்

அறிமுகம்

ஏறத்தாழ பொ.ஆ. 300 முதல் 700 வரையிலான காலகட்டம் அரசு அமைப்பில் ஒரு செவ்வியல் முறை தோன்றி பல பகுதிகளில் பேரரசர் ஆட்சி உருவாக வழிவகுத்த காலமாக இருந்தது. மௌரியப் பேரரசிற்குப் பின்னர், பல சிறு அரசுகள் தோன்றியவாறும் வீழ்ந்தவாறும் இருந்தன. குப்தர் அரசுதான் ஒரு பெரும் சக்தியாக உருவாகி, துணைக்கண்டத்தின் பெரிய பகுதியை அரசியல்ரீதியாக ஒன்றிணைத்தது. மத்தியில் ஒரு வலுவான அரசாக வலுப்பெற்றதால், பல அரசுகள் அதன் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. இக்காலகட்டத்தில் நிலப்பிரபுத்துவம் ஒரு நிறுவனமாக வேரூன்றத் தொடங்கியது. செயல்திறன்மிக்க வணிகக் குழு முறை, கடல்கடந்த வாணிபம் ஆகியவற்றுடன் அதன் பொருளாதாரம் எழுச்சி கண்டது. இக்காலகட்டத்தில் சமஸ்கிருதத்தில் பல பெரிய படைப்புகள் தோன்றின. நுண்கலை, சிற்பம், கட்டிடக்கலை ஆகியவற்றில் பண்பாட்டு முதிர்ச்சி காணப்பட்டது.

உயர் வர்க்கத்தினரின் வாழ்க்கை முறை உச்சத்தில் இருந்தது. கல்வி, கலை, அறிவியல் ஆகியவை சிறந்தோங்கி இருந்தாலும்கூட, இக்காலகட்ட ஆட்சியின் நிலப்பிரத்துவ குணம் காரணமாக மக்கள் துன்புற்றார்கள். ‘குப்தர் காலம் பொற்காலம்’ என்று சொல்லப்படுவது ஏகாதிபத்திய வரலாற்றாளர்களின் கருத்துகளுக்கான தேசிய வரலாற்றாளர்களின் எதிர்வினை என்பதாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். எனினும், இக்காலகட்டம் பண்பாட்டு மலர்ச்சியின் காலம். செவ்வியல் கலைகளின் காலம் என்பதைப் பல அறிஞர்களும் ஏற்கவே செய்கிறார்கள்.

வரலாற்றுச் சான்றுகள்

குப்தர் காலத்து வரலாற்றை மீள் உருவாக்கம் செய்ய மூன்று வகையான சான்றுகள் உள்ளன.

  1. இலக்கியச் சான்றுகள்
  • நாரதர், விஷ்ணு, பிருகஸ்பதி, காத்யாயனர் ஸ்மிருதிகள்
  • அரசருக்குக் கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள காமந்தகாரின் நீதிசாரம் என்ற தரும சாத்திரம் (பொ.ஆ. 400)
  • விசாகதத்தரின் தேவிசந்திரகுப்தம், முத்ராராட்சசம் ஆகியவை குப்தரின் எழுச்சி குறித்த விவரங்களை அளிக்கின்றன.
  • புத்த, சமண இலக்கியங்கள்
  • காளிதாசர் படைப்புகள்
  • இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த சீனப் பயணி பாஹியான் குறிப்புகள்.
  1. கல்வெட்டுச் சான்றுகள்
  • மெஹ்ரோலி இரும்புத்தூண் கல்வெட்டு – முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கிறது.
  • அலகாபாத் தூண் கல்வெட்டு: சமுத்திரகுப்தரின் ஆட்சி, அவரது ஆளுமை, சாதனைகள் ஆகியவற்றை இது விளக்குகிறது. இதனைப் பொறித்தவர் ஹரிசேனர். இது 33 வரிகளில் நாகரி வரிவடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.

  1. நாணய ஆதாரங்கள்
  • குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தத் தங்க நாணயங்கள் குப்த அரசர்களின் பட்டங்கள் குறித்தும் அவர்கள் நடத்திய சடங்குகள் குறித்தும் தெரிவிக்கின்றன.

குப்தர் வம்சத்தின் தோற்றம்

  • குப்தர் வம்சத்தின் தோற்றம் குறித்த சான்றுகள் மிகவும் குறைவுதான். குப்த அரசர்கள் எளிய குடும்பத்திலிருந்துதான் உருவாகியிருக்க வேண்டும்.
  • குப்த வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளரான முதலாம் சந்திர குப்தர் குமாரதேவி என்ற லிச்சாவி இளவரசியை மண்ந்தார். இத்தகவலை அவரது பரம்பரையினர் மிகவும் பெருமையோடு பதிவு செய்திருப்பது இந்த அரச குடும்பத்துடனான தொடர்பு குப்தர்களின் எழுச்சிக்குக் காரணமாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.
  • லிச்சாவி என்பது வடக்கு பிகாரில் இருந்த பழமையான கணசங்கமாகும். அது கங்கைக்கும் நேபாள தெராய்க்கும் இடைப்பட்ட பகுதியாகும். சந்திர குப்தரின் ஒப்பற்ற புதல்வரான சமுத்திரகுப்தரின் பிரயாகை (இன்றைய அலகாபாத்) தூண் கல்வெட்டின்படி, அவர் பிரயாகைக்கு மேற்கே மதுரா வரையுள்ள செழிப்பாக நிலங்கள் முழுவதையும் கைப்பற்றினார்.
  • கலிங்கம் வழியாகத் தெற்கே, பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரம் வரை வெற்றிகரமான படையெடுப்பை நடத்தினார். மகதம், அலகாபாத், அவுத் ஆகியவற்றை குப்தர்களின் பகுதிகளாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

முதலாம் சந்திரகுப்தரும், பேரரசு உருவாகுதலும்

  • குப்த வம்சத்தின் முதல் அரசர் ஸ்ரீகுப்தர் (பொ.ஆ. 240 – 280). இவரைத் தொடர்ந்து இவரது புதல்வர் கடோத்கஜர் (பொ.ஆ. 280 – 319) ஆட்சிக்கு வந்தார்.
  • கல்வெட்டுகளில் ஸ்ரீகுப்தர், கடோத்கஜர் ஆகிய இருவரும் மகாராஜா என்று குறிக்கப்படுகிறார்கள். கடோத்கஜரின் புதல்வரான முதலாம் சந்திரகுப்தர் பொ.ஆ. 319 முதல் 335 வரை ஆட்சிபுரிந்தார்.
  • இவர் குப்தப் பேரரசின் முதல் பேரரசராகக் கருதப்படுகிறார். சந்திரகுப்தர் மகாராஜா – அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றார். மற்றவர்களின் ஆவணங்களிலிருந்து இவரது பேரரசர் நிலை நமக்குப் புலப்படுகிறது. இவரது ஆட்சிக் காலத்தின் கல்வெட்டோ, நாணயமோ நமக்குக் கிடைக்கவில்லை.

சமுத்திரகுப்தர்

  • பொ.ஆ. 335இல் முதலாம் சந்திரகுப்தர் தனது புதல்வர் சமுத்திரகுப்தரைத் தனது வாரிசாக நியமித்தார். அசோகர் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்ட இவர் குறித்த நீண்ட புகழுரை அவர் மௌரிய பரம்பரையில் வந்ததாகச் சொல்கிறது.
  • இந்தக் கல்வெட்டு சமுத்திரகுப்தர் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்றபோது அவருக்கு அடிபணிந்த அரசர்கள், ஆட்சிப் பகுதிகள் ஆகியன குறித்த மிகப் பெரும் பட்டியலைத் தருகிறது.
  • முக்கியமாக தில்லி மற்றும் மெஏற்கு உத்தரப்பிரதேசத்தின் நான்கு அரசர்களையும் அவர் வென்றுள்ளார். தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி அரசர்கள் அடிபணிந்து கப்பம் செலுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  • கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்க்கும்போது, சமுத்திரகுப்தரின் படையெடுப்பு கிழக்குக் கடற்கரையோரம் காஞ்சிபுரம் வரை நீண்டதாகத் தெரிகிறது. கங்கைச் சமவெளியின் மேற்குப் பகுதியில் ஒன்பது அரசர்களைப் படை பலத்தால் வென்றார். காட்டு ராஜாக்களும் (மத்திய இந்தியா மற்றும் தக்காணத்தின் பழங்குடியினத் தலைவர்கள்), அஸ்ஸாம், வங்கம் போன்ற கிழக்குப் பகுதிகளின் அரசர்களும், நேபாளம், பஞ்சாப் போன்ற பகுதிகளிம் சிற்றரசர்களும் கப்பம் கட்டக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  • மாளவர்கள், யூதேயர்கள் உள்ளிட்ட இராஜஸ்தான் பகுதியின் ஒன்பது குடியரசுகள் குப்தர்களின் ஏகாதிபத்தியத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டன. இதோடு, தெய்வபுத்திர சகானுசாகி (ஒரு குஷாண பட்டம்), சாகர் அரசு, இலங்கை அரசு போன்ற வெளிநாட்டு அரசுகளும் கப்பம் கட்டியதாக அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
  • வரலாற்றறிஞர்கள் சமுத்திரகுப்தரை இந்திய நெப்போலியன் என அழைக்கின்றனர். இந்த செய்தி, மறுக்கமுடியாதது. தென்பகுதி அரசர்கள் கப்பம் கட்டியது, வடஇந்திய அரசுகள் குப்தப் பேரரசோடு இணைக்கப்பட்டது ஆகியனவற்றை மறுக்க முடியாது.

  • மேற்கு இந்தியாவில் சாக அரசர்களைத் தோற்கடிக்க முடியவில்லை என்பதால், நேரடி அதிகாரம் கங்கைச் சமவெளி வரையிலும்தான் இருந்துள்ளது. இராஜஸ்தானின் பழங்குடியினர் கப்பம் கட்டினர்.
  • ஆனால் பஞ்சாப் சமுத்திரகுப்தரின் அதிகாரத்திற்கு வெளியே இருந்தது. சமுத்திரகுப்தரின் படையெடுப்பு இப்பகுதியின் பழங்குடி குடியரசுகளின் அதிகாரத்தைக் குறைத்ததால், இங்கு ஹுணர்களின் ஊடுருவல் அடிக்கடி நிகழ்ந்தது.
  • குஷாணர்களுடனான உறவு குறித்து உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் இலங்கையைப் பொருத்தவரி, இலங்கை அரசர் மேகவர்மன் பரிசுகளை அனுப்பி, கயாவில் ஒரு பௌத்த மடம் கட்ட அனுமதி கோரியுள்ளார்.
  • சமுத்திரகுப்தரின் ஆட்சிக்காலம் நாற்பதாண்டுகள் நீடித்ததால், இது போன்ற படையெடுப்புகளைத் திட்டமிட்டு நடத்த அவருக்குப் போதுமான கால அவகாசம் இருந்தது. தனது ராணுவ வெற்றிகளைப் பிரகடனம் செய்ய அவர் அசுவமேத யாகம் நடத்தினார்.
  • சமுத்திரகுப்தர் அறிஞர்களையும், ஹரிசேனர் போன்ற கவிஞர்களையும் ஆதரித்தார். இதன் மூலம் சமஸ்கிருத இலக்கியத்தை வளர்ப்பதில் பங்காற்றினார்.
  • வைணவத்தை அவர் தீவிரமாகப் பின்பற்றினார் என்றாலும் வசுபந்து என்ற மாபெரும் பௌத்த அறிஞரையும் ஆதரித்தார். கவிதை, இசைப் பிரியரான இவருக்குக் கவிராஜா என்ற பட்டம் வழங்கப்பட்டது. குப்தர் நாணயங்களில் அவர் வீணை வாசிப்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் சந்திரகுப்தர்

  • தனது தாத்தா பெயரையே சூடிய இரண்டாம் சந்திரகுப்தர் மிகத் திறமையான அரசர். அவர் பொ.ஆ. 375 முதல் 415 வரை 40 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.
  • தனது சகோதரரான ராமகுப்தருடன் (370 – 375) வாரிசுரிமைக்குப் போராடி ஆட்சிக்கு வந்தார். விக்ரமாதித்யன் என்றும் அழைக்கப்பட்டார்.
  • பாடலிபுத்திரத்தைத் தலைநகரமாகக் கொண்ட இரண்டாம் சந்திரகுப்தர் தனது அரசின் எல்லைகளை போர்கள், திருமண உறவுகள் ஆகியனவற்றின் மூலம் விரிவுபடுத்தினார். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தக்காணப் பகுதியை ஆண்ட வாகடக இளவரசருக்குத் தன் மகள் பிரபாவதியைத் திருமணம் செய்து கொடுத்தார்.
  • இவரது மேற்கு இந்திய அரசுகள் மீதான படையெடுப்பின்போது, இத்திருமண உறவுகள் மிகவும் கூடுதல் பலம் அளித்தன. மேற்கு மாளவம், குஜராத் ஆகிய பகுதிகளை 400 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சாக அரசர்களை இப்படையெடுப்பின் மூலம் இரண்டாம் சந்திரகுப்தர் வென்றார்.
  • ரோமானியப் பேரரசுடனான வணிகத்தால் அரசின் வளம் பெருகியது. கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவை வென்ற பின்னர், இரண்டாம் சந்திரகுப்தர் ஹுணர், காம்போஜர், கிராதர் போன்ற வட நாட்டு அரசுகளை வென்றார்.
  • அவர் மிகப் பெரிய வெற்றிவீரராக மட்டுமின்றி, சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார். விக்ரமன், தேவகுப்தன் , தேவராஜன், சிம்ஹவிக்ரமன், விக்ரமாதித்யன், சகாரி ஆகியன இவரது வேறு பெயர்களாகும். (இவை நாணயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.)
  • கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளின் சிறந்து விளங்கிய நவரத்தினங்கள் எனப்பட்ட ஒன்பது அறிஞர்கள் இவரது அவையில் இருந்தனர். இவர்களில் மாபெரும் சமஸ்கிருத கவிஞர் காளிதாசர், சமஸ்கிருதப் புலவர் ஹரிசேனர், அகராதியை உருவக்கிய அமரசிம்மர், மருத்துவர் தன்வந்திரி ஆகியோர் அடங்குவர்.
  • இவரது ஆட்சிக்காலத்தில்தான் பாஹியான் என்ற பௌத்த அறிஞர் சீனாவிலிருந்து இந்தியா வந்தார். இவர் குப்தப் பேரரசின் வளம் குறித்து பதிவு செய்திருக்கிறார்.
  • வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் இரண்டாம் சந்திரகுப்தரே. இவரது ஆட்சிக்காலத்தில்தான் பேரரசின் விரிவாக்கம் உச்சத்தை எட்டியது.
  • இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பின்னர் அவரது புலவர் முதலாம் குமாரகுப்தர் பொ.ஆ. 455 வரை ஆட்சி செய்தார். முதலாம் குமாரகுப்தர் நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர். இவர் சக்ராதித்யர் என்றும் அழைக்கப்பட்டார்.
  • குப்த வம்சத்தின் கடைசிப் பேரரசரான ஸ்கந்தகுப்தர் முதலாம் குமாரகுப்தரின் புதல்வராவார். இவர் ஹுணரின் படையெடுப்பைத் தடுத்தார். ஆனால் ஹுணர் மீண்டும் மீண்டும் படையெடுப்பு மேற்கொண்டதால், அரசு கருவூலம் காலியானது.
  • பொ.ஆ. 467 இல் ஸ்கந்தகுப்தரின் இறப்பிற்குப்பின்னர் குப்தப் பேரரசு வீழ்ச்சி அடைந்தது. இவருக்குப் பின்னர் பல குப்த அரசர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றனர். இவர்கள் பேரரசின் வீழ்ச்சியை விரைவுபடுத்தினார்கள்.
  • குப்த வம்சத்தின் கடைசி அரசர் விஷ்ணுகுப்தர். இவர் பொ.ஆ. 540 முதல் 550 வரை ஆட்சிபுரிந்தார்.

குப்தரின் நிர்வாக முறை

அரசர்

  • குப்தர் ஆட்சியில் அரசியல் அதிகாரப் படிநிலைகள் காணப்பட்டன. வழங்கப்பட்ட பட்டங்கள், மேலதிகாரம், கீழ்ப்படிதல் ஆகிய உறவுகளின் வழியாக அதிகாரப்படிநிலைகளை அறிய முடிகிறது.
  • அரசர்கள் மகாராஜாதிராஜ, பரம-ப்ட்டாரக, பரமேஷ்வர போன்ற பட்டங்களை ஏற்றார்கள். பரம-தைவத (கடவுளின் பரமபக்தன்), பரம –பாகவத (வாசுதேவ கிருஷ்ணனின் பரமபக்தன்) போன்ற அடைமொழிகளால் தம்மைக் கடவுளோடும் இணைத்துக் கொண்டனர்.
  • குப்த அரசர்கள் தாம் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்ற பிம்பத்தை முன்வைத்ததாகவும் சில வரலாற்றாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அலகாபாத் கல்வெட்டுகளில் சமுத்திரகுப்தர் புருஷா (அனைவருக்கும் மேலானவர்) என்ற கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார். அரசருக்கு, ஒரு தெய்வீகத் தகுதி நிலையை நிறுவும் முயற்சிகளாக இவற்றைக் கருதலாம்.

அமைச்சர்கள், அதிகாரிகள்

  • முத்திரைகள், கல்வெட்டுகள் போன்றவற்றில் பதிவிடப்பட்டுள்ளவை அதிகாரிகளின் படிநிலைகளையும் அவர்களது பதவிகளையும் குறிப்பிட்டாலும், அவற்றின் தெளிவான பொருளைப் பல நேரங்களில் அறிய முடியவில்லை.
  • குமாரமாத்யா என்ற சொல் ஆறு வைசாலி முத்திரைகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பதவி தனக்கெனத் தனியாக அலுவலகம் உள்ள ஒரு உயரதிகாரியைக் குறிப்பிடுவது போல் உள்ளது.
  • அமாத்யா என்ற சொல் பல முத்திரைகளில் காணப்படுகிறது. குமாரமாத்தியா என்பது அமாத்யாக்களில் மிக முக்கியமான பதவியாக , அரசகுல இளவரசர்களின் தகுதிக்குச் சமமானதாக இருக்கும்போல் தெரிகிறது.,
  • குமாரமாத்யாக்கள் அரசர், பட்டத்து இளவரசர், வருவாய்த்துறை அல்லது ஒரு மாகாணம் என்று பலவற்றோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். ஒரு லிச்சாவி முத்திரை லிச்சாவியர்களின் பட்டமேற்பு விழாவிற்கான புனித குளத்திற்குப் பொறுப்பான ஒரு குமாரமாத்யா பற்றிக் குறிப்பிடுகிறது.
  • குமாரமாத்யா பொறுப்பில் உள்ளவர்கள் சில சமயங்களில் கூடுதல் பொறுப்புகளையும் பதவிப் பெயர்களையும் கொண்டிருந்தனர். இந்தப் பொறுப்புகள் வாரிசு அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கலாம்.
  • எடுத்துக்காட்டாக, அலகாபாத் பிரசஸ்தியை (மெய்க்கீர்த்தி அல்லது புகழுரைக் கல்வெட்டு) எழுதிய ஹரிசேனர் ஒரு குமாரமாத்யா, சந்திவிக்ரஹிகா, மஹாதண்டநாயகா துருவபூதியின் புதல்வர் ஆவார்.

மதுரா பாடலிபுத்திரம் குறித்து பாஹியான்

மதுராவில் மக்கள்தொகை அதிகம். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்கள் தமது குடும்பத்தைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை …. அரசருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்தவர்கள் மட்டும்தான் தானியத்தில் ஒரு பகுதியை அரசருக்குத் தரவேண்டும். …. சூழலைப் பொறுத்து குற்றவாளிகளுக்கு மிதமாகவோ, கடுமையாகவோ அபராதம் விதிக்கப்பட்டது…….

மீண்டும் மீண்டும் கலகம் செய்தால், குற்றமிழைத்தால், வலது கை துண்டிக்கப்படும் …. நாடு முழுவதும் மக்கள் எந்த உயிரினத்தையும் கொல்வதில்லை. எந்த மதுபானத்தையும் அருந்துவதில்லை …. பாடலிபுத்திரத்தில் வசிப்பவர்கள் நல்ல பணக்காரர்கள்; வசதியானவர்கள்; ஈகைக் குணத்தில் ஒருவரோடொருவர் போட்டி போடுபவர்கள் ……..

நகரங்களில் வைசியக் குடும்பத்தினர் தர்மம் செய்வதற்கும் மருத்துவதற்கும் சத்திரங்களைக் கட்டியிருக்கிறார்கள். அனைத்து ஏழைகள், ஆதரவற்றோர், அனாதைகள், விதவைகள், குழந்தையில்லாதவர்கள், அங்கவீனர்கள், ஊனமுற்றவர்கள் என அனைவருக்கும் அனைத்துவிதமான உதவிகளும் செய்யப்படுகின்றன.

  • ஹுனர்களின் தோற்றம் குறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை. ரோமானிய வரலாற்றாளர் டாசிடஸின் கூற்றுப்படி, அவர்கள் காஸ்பியன் கடல் அருகில் வாழ்ந்த பழங்குடி இனக்குழுக்கள். ரோமாபுரிப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்கள். அட்டில்லாவின் தலைமையில் திரண்ட இவர்கள் ஐரோப்பாவில் கொடுகோண்மைக்குப் பெயர் பெற்றவர்கள். வெள்ளை ஹுணர்கள் என்று அழைக்கப்பட்ட ஹுணர்களின் ஒரு பிரிவு மத்திய ஆசியாவிலிருந்து இந்தியா நோக்கி நகர்ந்தது. இவர்களது படையெடுப்பு குஷாணர்கள் காலத்திற்கு நூறு ஆண்டுகளுக்குப் பின் ஆரம்பமானது.

அமைச்சர் குழு

  • குப்த அரசர்களுக்கு ஒரு அமைச்சர் குழு உதவி புரிந்தது. அலகாபாத் கல்வெட்டு சபா என்ற ஒரு குழு குறித்துக் கூறுகிறது. இது அமைச்சர் குழுவாக இருக்கலாம்.
  • மஹாசந்திவிக்ரஹா என்பவர் அமைச்சர்களில் உயர் நிலையில் இருந்துள்ளார். இவர் அமைதி மற்றும் போருக்கான அமைச்சர். இவர்தான் போர் தொடுத்தல், உடன்பாடு காணுதல், ஒப்பந்தங்கள் மேற்கொள்ளுதல் என்று பிற நாடுகளுடனான தொடர்புகளுக்குப் பொறுப்பானவர்.
  • நீதித்துறை, ராணுவம் ஆகியவற்றின் பொறுப்பு வகித்தவர் தண்டநாயகா அல்லது மஹாதண்டநாயகா என்றழைக்கப்பட்டுள்ளார். ஒரு முத்திரை அக்கினிகுப்தர் என்ற மஹாதண்டநாயகா குறித்துப் பேசுகிறது.
  • அலகாபாத் கல்வெட்டு மூன்று மஹாதண்டநாயகாக்களைக் குறித்து கூறுகிறது. இவையனைத்தும் இந்தப் பதவிகள் எல்லாம் வாரிசுரிமையாக வருபவை என்பதைக் காட்டுகின்றன. மற்றொருவருக்கு மஹாஅஸ்வபதி (குதிரைப்படைத் தலைவர்) என்ற பதவி இருந்துள்ளது.

பேரரசின் பிரிவுகள்

  • குப்தர்களின் பேரரசு ‘தேசம்’ அல்லது ‘புக்தி’ எனப்படும் மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. உபாரிகா என்றழைக்கப்பட்ட ஆளுநர்களால் இவை நிர்வகிக்கப்பட்டன.
  • உபாரிகாக்கள் அரசரால் நேரடியாக நியமிக்கப்பட்டனர். உபாரிகாக்கள் மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரிகளையும் வாரிய அதிகாரிகளையும் நியமித்தனர். உபாரிகாக்கள் நிர்வாக அதிகாரத்தோடு, யானைகள், குதிரைகள், வீரர்கள் என்று ராணுவ நிர்வாகத்தையும் கையில் வைத்திருந்தனர்.
  • தாமோதர்பூர் செப்பேடுகளில் மூன்று உபாரிகாக்களுக்கு மகாராஜா என்ற பட்டம் இருந்ததாகக் குறிப்பிடப்படுவதன் மூலம் நிர்வாகத்தில் இவர்களுக்கு இருந்த உயர்நிலை தெரிகிறது.
  • குப்த ஆண்டு 165 என்று தேதியிடப்பட்டுள்ள புத்தகுப்தரின் ஈரன் தூண் கல்வெட்டு காளிந்தி மற்றும் நர்மதை நதிகளுக்கிடையிலான நிலங்களை ஆட்சிசெய்த லோகபாலா என்று மகாராஜ சுரஷ்மிசந்திரா என்பவரைக் குறிப்பிடுகிறது. இங்கு லோகபாலா என்பது மாநில ஆளுநரைக் குறிப்பிடுவதாகலாம்.
  • குப்தப்பேரரசின் மாநிலங்கள் விஷ்யபதி என்ற அதிகாரியின் கீழ் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. இவை விஷ்யா என அழைக்கப்பட்டன விஷ்யபதிகள் பொதுவாக மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
  • சிலசமயங்களில் அரசரே நேரடியாக விஷ்யபதிகளை நியமித்தார். விஷ்யபதியின் நிர்வாகக் கடமைகளுக்கு நகரத்தின் சில முக்கியமான மனிதர்கள் உதவிபுரிந்தார்கள்.

மாவட்ட மட்டத்திற்குக் கீழே இருந்த நிர்வாக அலகுகள்

  • மாவட்ட மட்டத்திற்குக் கீழ் விதி, பூமி, பதகா, பீடா என்று பல்வேறு விதமான நிர்வாக அலகுகள் இருந்தன.
  • ஆயுக்தகா, விதி- மஹாதரா எனப்படும் அதிகாரிகள் குறித்த குறிப்புகளும் காணப்படுகின்றன. கிராம மட்டத்தில் கிராமிகா, கிராம் அத்யக்ஷா போன்ற அதிகாரிகள் இருந்துள்ளனர்.
  • இவர்களை கிராம மக்களே தேர்ந்தெடுத்தனர். புத்தகுப்தர் காலத்து தாமோதர்பூர் செப்பேடு, மஹாதாரா என்பவர் தலைமையிலான அஷ்டகுல –அதிகாரனா (எட்டு உறுப்பினர் கொண்ட குடு) குறித்து குறிப்பிடுகிறது.
  • மஹாதாரா என்பதற்கு கிராமப் பெரியவர், கிராமத் தலைவர், குடும்பத்தலைவர் என்று பல பொருள் உண்டு. இரண்டாம் சந்திரகுப்தர் காலத்து சாஞ்சி கல்வெட்டு பஞ்சமண்டலி என்பதைக் குறிப்பிடுகிறது. இது ஒரு குழும நிறுவனமாக இருக்கலாம்.

இராணுவம்

  • முத்திரைகள், கல்வெட்டுகள் ஆஅகியன பாலாதிகிருத்யா, மஹாபாலாதிகிருத்யா (காலாட்படை மற்றும் குதிரைப்படை தளபதி) போன்ற ராணுவப் பதவிகளைக் குறிப்பிடுகின்றன. வழக்கமாகப் பயன்படுத்தப்படும் சேனாபதி என்ற சொல் குப்தர் கல்ப்வெட்டுகளில் காணப்படவில்லை.
  • ஆனால் சில வாகடக கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. ஒரு வைசாலி முத்திரை ராணுவக்கிடங்கின் அலுவலகமான ரணபந்தகர் அதிகாரனாவைக் குறிப்பிடுகிறது. மற்றொரு வைசாலி முத்திரை, தண்டபாஷிகா என்ற அதிகாரியின் அலுவலகத்தைக் குறிப்பிடுகிறது. இது மாவட்ட அளவிலான காவல்தூறை அலுவலகமாக இருக்கலாம்.
  • மஹாபிரதிஹரா (அரண்மனைக் காவலர்கள் தலைவர்) , கத்யதபகிதா (அரச சமையலறைக் கண்காணிப்பாளர்) போன்ற அரண்மனையுடன் நேரடியாகத் தொடர்பு கோண்டிருந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
  • ஒரு வைசாலி முத்திரை மஹாபிரதிகராவாகவும் தாராவராகவும் இருந்த ஒருவரைக் குறித்து குறிப்பிடுகிறது. நிர்வாக அமைப்பின் மேல்மட்டத்தில் அமாத்தியா, சச்சிவா ஆகியோர் இருந்தார்கள். இவர்கள் பல்வேறு துறைகளுக்குப் பொறுப்பாக இருந்த நிர்வாக அதிகாரிகளாவர்.
  • துடகா என்றழைக்கப்பட்ட ஒற்றர்கள் கொண்ட உளவு அமைப்பும் இருந்தது. ஆயுக்தகா என்பது மற்றொரு உயர்மட்ட அதிகாரப் பதவியாகும்.

பொருளாதார நிலைகள்

  • குப்தர் காலத்தில் காமாந்தகா எழுதியது நீதிசாரா என்ற நூல் ஆகும். இந்நூல் அரச கருவூலத்தின் முக்கிய வருவாய்க்கான பல்வேறு மூலவளங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது.
  • சமுத்திரகுப்தர் மேற்கொண்ட படையெடுப்புகளுக்கான நிதி இதுபோன்ற வருவாய்களின் உபரிநிதியிலிருந்துதான் கிடைத்திருக்க வேண்டும். குப்தர் கல்வெட்டுகள் வருவாய்த் துறை குறித்து சில விவரங்களைத் தருகின்றன.
  • அரசு ஆவணங்களை அக்ஷபதலதிக்கிருதா என்ற அதிகாரி பராமரித்தார். குப்தர் கல்வெட்டுகள் கிலிப்தா, பலி, உத்ரங்கா, உபரிகா, இரண்யவெஷ்தி என்றால் கட்டாய உழைப்பு என்று பொருள்.

வேளாண்மையும் வேளாண் அமைப்பும்

  • குப்தர் ஆட்சிக் காலத்தில் அரசு சார்பில் ஏராளமான பாசனப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக வேளாண்மை மேம்பாடு அடைந்தது.
  • அரசு, தனிநபர்கள் ஆகியோர் நீங்கலாகவும், பிராமணர்கள், புத்த , சமண சங்கங்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட தரிசு நிலங்களிலும் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகள் தமது பயிர்களை முறையாகப் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டார்கள்.
  • பயிர்களை நாசம் செய்வோருக்கு தண்டனை வழங்கபட்டது. மேலும், பயிர்களைச் சுற்றியும் வேளாண் நிலங்களைச் சுற்றியும் வேலி அமைக்கப்பட்டிருந்தது.
  • குப்தர் காலத்தில் நெல், கோதுமை, பார்லி, கடலை, தானியம், பயறு, கரும்பு, எண்ணெய்வித்துகள் ஆகியவை பயிரிடப்பட்டன.
  • காளிதாசர் மூலம் தென்பகுதியானது மிளகு, ஏலம் ஆகியவற்றிற்குப் புகழ்பெற்றிருந்தது தெரியவருகிறது. பழ மரங்கள் வளர்ப்பது குறித்து வராகமிகிரர் விரிவான அறிவுரைகளைத் தந்துள்ளார்.
  • பஹார்பூர் செப்பேடு அரசர்தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் என்று காட்டுகிறது. நில மானியங்கள் தரும்போதும், அதன் மீதான தனியுரிமையைத் தன்னிடமே அவர் வைத்துக் கொண்டார்.
  • தனிப்பட்ட நிலங்களின் இடமும் எல்லைகளும் ஆவணக் காப்பாளர்களாலும், அப்பகுதியின் செல்வாக்கு மிக்கவர்களாலும் அளது குறித்து வைக்கப்பட்டன. பஹார்பூர் செப்பேடுகளின்படி உஸ்தபாலா என்ற அதிகாரி மாவட்டத்தின் நிலப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்தார்.
  • கிராமத்தில் நிலங்கள் தொடர்பான ஆவணங்களை கிராம கணக்கர் பராமரித்தார். குப்தர் காலத்தில் நிலம் கீழ்வருமாறு வகைப்படுத்தப்பட்டிருந்தன.
க்ஷேத்ரா பயிரிடக்கூடிய நிலம்
கிலா தரிசு நிலம்
அப்ரஹதா காடு அல்லது தரிசு நிலம்
வாஸ்தி குடியிருக்கத் தகுந்த நிலம்
கபடசஹாரா மேய்ச்சல் நிலம்

பல்வேறு விதமான நிலகுத்தகை முறை

நிலகுத்தகை வகை உரிமையின் தன்மை
நிவி தர்மா அறக்கட்டளை போன்ற அமைப்பின் மூலம் நில மானியம் – இம்முறை வடக்கு, மத்திய இந்தியா மற்றும் வங்கத்தில் நிலவியது.
நிவி தர்மா அக்சயனா நிரந்தரமான அறக்கட்டளை –பெற்றவர் அதிலிருந்து வரும் வருவாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம்
அப்ரதா தர்மா வருவாயைப் பயன்படுத்தலாம். ஆனால் அதை பிறருக்குத் தானம் செய்யமுடியாது. நிர்வாக உரிமையும் இல்லை.
பூமிசித்ராயனா தரிசு நிலத்தை முதன் முதலாகச் சாகுபடி நிலமாக மாற்றுபவருக்குத் தரப்படும் உரிமை. இந்த நிலத்திற்குக் குத்தகையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

ஏனைய நிலக்கொடைகள்

அக்ரஹார மானியம் பிராமணர்களுக்குத் தரப்படுவது. இது நிரந்தரமானது. பரம்பரையாக வரக்கூடியது. வரி கிடையாது.
தேவக்கிரஹார மானியம் கோயில் மராமத்து, வழிபாடு ஆகிய பணிகளுக்காகப் பிராமணர்கள், வணிகர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படும் நில மானியம்.
சமயச் சார்பற்ற மானியம் குப்தர்களுக்குக் கீழிருந்த நிலப்பிரபுக்களுக்குத் தரப்பட்ட மானியம்.

பாசனம்

  • மிகத் தொன்மையான காலத்திலேயே நீர்ப்பாசனத்தின் முக்கியத்துவத்தை இந்தியாவில் உணர்ந்திருக்கிறார்கள். நாரதஸ்மிருதி என்ற நூலில், வயல்களை வெள்ளங்களிலிருந்து பாதுகாத்த பந்தியா, பாசனத்திற்கு உதவிய கரா என்ற இருவகை அணைக்கரைகள் குறிப்பிடப்படுகின்றன.
  • தண்ணீர் தேங்குவதைத் தடுக்க ஜலநிர்கமா என்ற வடிகால்கள் இருந்ததாக அமரசிம்மர் குறிப்பிடுகிறார். நதிகளிலிருந்து மட்டுமல்லாமல், ஏரிகளிலிருந்தும் குளங்களிலிருந்தும் வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. குஜராத்தின் கிர்னார் மலையின் அடிவாரத்தில் இருந்த சுதர்சனா ஏரி மிகவும் புகழ்பெற்றதாகும்.

விவசாயிகளின் நிலை

  • விவசாயிகளின் நிலைமை கீழ் நிலையில் இருந்தது. சாதிப்பிரிவுகள் காரணமாகவும், நிலங்களும் உரிமைகளும் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதாலும் மானியங்கள் வழங்கப்பட்டதன் காரணமாகவும் அவர்கள் கொத்தடிமைகளின் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
  • அப்போதிருந்த குத்தகை முறைப்படி குத்தகைதாரர்கள் நிலையான குத்தகைதாரர்கள் அல்ல. மாறாக, எப்போது வேண்டுமானாலும் குத்தகையை விட்டு வெளியேற்றப்படும் நிலையில் இருந்தார்கள். விவசாயிகள் பலவிதமான வரிகளையும் கட்டவேண்டியிருந்தது.
வரி அதன் தன்மை
பாகா விளைச்சலில் அரசன் பெறும் வழக்கமான ஆறில் ஒரு பங்காகும்.
போகா அரசருக்கு கிராமங்கள் அவ்வப்போது வழங்க வேண்டிய பழங்கள், விறகு, பூக்கள் போன்றவை
கரா கிராமத்தினர் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் விதிக்கப்படும் ஒரு வரி (இது வருடாந்திர நிலவரியின் ஒரு பகுதியல்ல)
பலி ஆரம்பத்தில் விருப்பப்பட்டு வழங்கப்பட்ட வரியாக இருந்து பின்னர் கட்டாய வரியாக மாற்றப்பட்டது. இது ஒரு ஒடுக்குமுறை வரி.
உதியங்கா காவல் நிலையங்களின் பராமரிப்பிற்காக விதிக்கப்பட்ட காவல் வரியாக இருக்கலாம் அல்லது நீர் வரியாகவும் இருக்கலாம் . எனினும் , இது ஒரு கூடுதல் வரிதான்.
உபரிகரா இதுவும் ஒரு கூடுதல் வரிதான். இது எதற்காக வசூலிக்கப்பட்டது என்பது குறித்து அறிஞர்கள் மாறுபட்ட விளக்கங்களைத் தருகின்றனர்
ஹிரண்யா தங்க நாணயங்கள் மீது விதிக்கப்படும் வரி என்பது நேரடிப் பொருள். நடைமுறையில் இது சில குறிப்பிட்ட தானியங்களின் விளைச்சலில் ஒரு பங்கினை, அரசின் பங்காகப் பொருளாகவே அளிப்பதாகும்.
வாத –பூதா காற்றுக்கும் ஆவிகளுக்கும் செய்ய வேண்டிய சடங்குகளுக்காக விதிக்கப்பட்ட பல்வேறு வரிகள்
ஹலிவகரா கலப்பை வைத்திருக்கும் ஒவ்வொரு உழவரும் கட்டவேண்டிய கலப்பை வரி
சுல்கா வர்த்தகர்கள் நகரத்திற்கோ தூறைமுகத்திற்கோ கொண்டுவரும் வணிகச் சரக்குகளில் அரசருக்கான பங்கு. இதைச் சுங்க, நுழைவு வரிகளுக்கு ஒப்பிடலாம்.
கிளிப்தா; உலகிளிப்தா நிலப்பதிவின் போது விதிக்கப்படும் விற்பனை வரி

சுரங்கமும் உலோகவியலும்

  • குப்தர் காலத்தில் மிகவும் செழித்த தொழில்கள் சுரங்கத் தொழில், உலோகவியல் ஆகியன ஆகும். சுரங்கள்கள் இருந்தது குறித்து அமரசிம்மர், வராஹமிகிரர், காளிதாசர் ஆகியோர் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள்.
  • இக்காலகட்டத்தில் பீகாரிலிருந்து இரும்புப் படிவுகள், இராஜஸ்தானிலிருந்து செம்புப் படிவுகள் ஆகியன பெருமளவில் தோண்டி எடுக்கப்பட்டன.
  • இரும்போடு தங்கம், செம்பு, தகரம், ஈயம், பித்தளை, வெண்கலம், மைக்கா, மாங்கனீஸ், அஞ்சனக்கல், சுண்ணாம்புக்கல், சிவப்பு ஆர்சனிக் ஆகியவற்றையும் பயன்படுத்தினர்.
  • விவசாயிகளுக்கு அடுத்தபடியான முக்கியத்துவம் உலோக வேலை செய்பவர்களுக்கு இருந்தது. பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள், பாத்திரங்கள், ஆயுதங்கள் தயாரிக்க உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன.
  • இரும்பின் கண்டுபிடிப்பிற்குப் பின்னர், கொழுமுனை மேமடுத்தப்பட்டு, ஆழமான உழவிற்கு உதவியதால் இக்காலகட்டத்தில் வேளாண்மை அதிகரித்தது.
  • இக்காலகட்டத்தில் , உலோகவியல் நுட்பங்கள் உச்சத்தில் இருந்தன என்பதை நிறுவுவதற்கு, இன்று தில்லி குதுப்மினார் வளாகத்தில் காணப்படும் மெஹ்ரோலி இரும்புத்தூண் சான்றாகக் காட்டப்படுகிறது. இது இரண்டாம் சந்திரகுப்தருடன் அடையாளம் காணப்படுகிறது. இந்த இரும்புத்தூண் பல நூற்றாண்டுகளாகத் துருப்பிடிக்காமல் அப்படியே இருக்கிறது.
  • இது குப்தர் காலத்து உலோகவியல் கைவினைஞர்களின் திறனுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. நாணயங்களை வடித்தல், உலோகச் செதுக்கு வேலைப்பாடு , பானை வனைதல், சுடுமண் சிற்பங்கள், மர செதுக்கு வேலைப்பாடு ஆகியவை வேறு சில கைவினைத் தொழில்களாகும்.
  • முத்திரை தயாரித்தல், புத்தர் மற்றும் பிற கடவுளரின் சிலை வடித்தல் ஆகியவை இக்காலகட்டத்தில் உலோகவியலில் ஏற்பட்ட ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றமாகும்.
  • இரும்பு, தங்கம், வெள்ளி, செம்பு, தகரம், ஈயம் ஆகியவற்றை உருக்கிப் பிரித்தெடுப்பதில் ஏற்படும் இழப்பிற்கும் (சேதாரம்) சேர்த்து மக்கள் பணம் தரவேண்டியிருந்தது என்று சொல்லப்படுகிறது. நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை குறித்து காளிதாசர் விளக்கியுள்ளார்.

வணிகமும் வர்த்தகமும்

  • குப்தர் பொருளாதாரத்தின் வலிமைக்கு வணிகர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். சிரேஷ்டி, சார்த்தவஹா என்ற இருவேறுபட்ட வகைகளைச் சேர்ந்த வணிகர்கள் இருந்தனர்.
  • சிரேஷ்டி என்பவர் பொதுவாக ஒரே இடத்தில் தங்கியிருப்பவர். தனது செல்வம் மற்றும் வணிகத்திலும், வணிகமையத்தை நிர்வகிப்பதன் மூலமும் பெற்ற வளத்தால் மரியாதைக்குரிய நிலையில் இருந்தவர். சார்த்தவஹா என்பவர் இலாபத்திற்காக ஊர் ஊராகச் சென்று வணிகம் செய்தவர்.
  • அன்றாடம் பயன்படுத்தத் தேவையான பொருள்களிலிருந்து விலையுயர்ந்த, ஆடம்பரப் பொருள்கள் வரை வியாபாரம் செய்யப்பட்டன.
  • மிளகு, சந்தனக்கட்டை, யானை, தந்தம், குதிரை, தங்கம், செம்பு, இரும்பு, மைக்கா ஆகியவை விதிக்கப்பட்டன. கைவினைக் கலைஞர்கள், வணிகர்கள், பெரு வணிக குழுக்கள் ஆகியன பற்றிக் குறிப்பிடும் செப்பேடுகள், முத்திரைகள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
  • இதன் மூலம் இக்காகட்டத்தில் கைவினைத் தொழில்களும் வணிகமும் செழித்திருந்ததைக் காணமுடிகிறது. வணிகக் குழுக்களில் கைவினை கலைஞர்கள், வணிகர்கள் இருந்தது பற்றியக் குறிப்புகள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
  • பொருள்களின் உற்பத்தி, அதிகரிப்பு, வணிக விரிவாக்கம் ஆகியவற்றில் வணிகக் குழுக்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருந்துள்ளது. தமது அமைப்புகளின் உள் நிர்வாகங்களைப் பொருத்தவரை இவை ஏறத்தாழ தன்னாட்சி அதிகாரம் பெற்றவைகளாக இருந்துள்ளன.
  • இவர்களது சட்டதிட்டங்களை அரசும் மதித்தது. தனிப்பட்ட வணிகக் குழுக்கள் அனைத்தையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழுமத்தினால் இந்த சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • நாரத ஸ்மிருதி, பிருகஸ்பதி ஸ்மிருதி ஆகியவை வணிகக் குழுக்களின் அமைப்பு, செயல்பாடு குறித்து விவரிக்கின்றன. ஒரு குழுவில் குழுத்தலைவர், இரண்டு, மூன்று அல்லது ஐந்து நிர்வாக அதிகாரிகள் இருந்ததாக இவை குறிப்பிடுகின்றன.
  • குழுச் சட்டங்கள் எழுத்துப்பூர்வமாக ஆவணங்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும். தமது குழு உறுப்பினர்களின் தகராறுகளின் மீது தீர்ப்பு வழங்கியது குறித்து பிருகஸ்பதி ஸ்மிருதி கூறுகிறது.
  • குழுவின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அரசு ஒப்புதல் அளித்தே தீரவேண்டும். குழுமங்களின் தலைவர்கள் மாவட்ட அளவில் நிர்வாக அமைப்புகளில் முக்கியமான பங்கு வகித்ததாகச் செப்பேடுகள் கூறுகின்றன.
  • வணிகக் குழுக்களில் கைவினைஞர்களுக்கான குழுக்கள், வங்கியாளர்களுக்கான குழுக்கள், வணிகர்களுக்கான குழுக்கள் எனப் பல வித குழுக்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழும அமைப்புகள் இயங்கியதாகக் குறிப்புகள் உள்ளன.
  • பயணிகளின் நலன்களுக்காக நிழல் குடை, விடுதிகள் , சத்திரங்கள், கோயில்கள், தோட்டங்கள், மண்டபங்கள் ஏற்படுத்தித் தரும் கொடை நடவடிக்கைகளிலும் வணிகக்குழுக்களும் குழுமங்களும் ஈடுபட்டு வந்ததாகவும் குறிப்புகள் காணப்பௌட்கின்றன.
  • மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்புகளில் வணிகக் குழுக்களின் தலைவர்கள் முக்கியப் பங்காற்றி வந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. வணிக வங்கிகள், கவிதை வண்டி வணிகக்குழுக்கள், கைவிஞர்கள் குழுக்களின் குழுமங்கள் அமைப்புகள் இயங்கியதாகவும் குறிப்புகள் உள்ளன. (மண்டசோர் கல்வெட்டுச் சான்றின் படி) வணிகக்குழுக்கள் வங்கிகளின் பங்கினை ஆற்றியதாகவும் அறிய முடிகிறது. இதற்கான கொடையாளர்களின் பெயர்கள் இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.
  • நிதியுடன் தொடர்புடைய மற்றொரு அம்சம் கந்துவட்டி. (அதிக வட்டிக்குக் கடன் தருதல் கந்துவட்டி ஆகும்) வணிகத்தில் அதிக இலாபம் ஈட்டுவதற்காகப் பணம் கடனாகப் பெறப்பட்டு வட்டிக்கு விடப்பட்டதற்கான குறிப்புகள் இக்காலகட்டச் சான்றுகளில் காணப்படுகின்றன.
  • குப்தர் காலத்தில் மேற்குக் கரையில் கல்யாண், கால்-போர்ட் ஆகிய வணிகத் துறைமுகங்களும், மலபார் , மங்களூர் சலோபடானா, நயோபடான, பந்தேபடானா ஆகிய வணிகச் சந்தைகளும் இயங்கியுள்ளன.
  • வங்கத்தின் தாமிரலிப்தி கிழக்குக் கரற்கரையின் முக்கியமான வணிக மையம் என்று பாஹியான் குறிப்பிடுகிறார். இந்த வணிகத் துறைமுகங்களும் நகரங்களும் ஒருபுறம் பாரசீகம், அரபியா, பைசாண்டியம் போன்ற நாடு நகரங்களோடும் துறைமுகங்களோடும், மறுபுறம் இலங்கை, சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகளோடும் இணைக்கப்பட்டிருந்தன.
  • இந்தியா, சீனா இடையிலான கடல் பயணத்தில் எதிர் கொள்ள நேரும் இடர்கள் குறித்து பாஹியான் குறிப்பிடுகிறார். அபூர்வமான ரத்தினக் கற்கள், மெல்லிய துணிவகைகள், வாசனைத் திரவியங்கள் ஆகியவை இந்தியாவிலிருந்து விற்கப்பட்டன. சீனாவிலிருந்து பட்டும், இதர பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்டன.
  • குப்தர்கள் அதிக எண்ணிக்கையில் தங்க நாணயங்களையும், ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையில் வெள்ளி, செம்பு நாணயங்களையும் வெளியிட்டனர். எனினும் குப்தர் காலத்திற்குப் பின்னர் தங்க நாணயங்களின் புழக்கம் குறைந்துபோனது.

பண்பாட்டு மலர்ச்சி

கலையும் கட்டடக் கலையும்

குப்தர் காலத்தில் நகரம், திராவிடம் பாணியிலான கலைகள் வளர்ந்தன. இந்திய கட்டடக்கலை வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க, படைப்பாக்கம் கொண்ட காலமாகும். பிற்காலத்தில் கலைகள் மேம்பாடு காண்பதற்கான ஊற்றுக் கண்கள் இக்காலத்தில் தோன்றின.

குடைவரை, கட்டுமானக் கோயில்கள்

  • பாறைகளைக் குடைந்து கட்டப்படும் குடைவரைக் கோயில்கள் பெரும்பாலும் பழைய அமைப்புகளையேத் தொடர்ந்தன. எனினும் முகப்புப் பகுதியின் அலங்காரத்திலும், உள்பக்க தூண்களின் வடிவமைப்பிலும் விரிவான புதிய மாற்றங்களைக் கொண்டுவந்ததன் மூலம் புதுமை செய்தன.
  • மிகவும் குறிப்பிடத்தகுந்த குடைவரைக் கோயில்கள் அஜந்தா, எல்லோரா (மஹாராஷ்சிரம்) மற்றும் பாக் (மத்தியப் பிரதேசம்) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. உதயகிரி குகைகளும் (ஒடிசா) இவ்வகையைச் சேர்ந்தவைதான்.
  • கட்டுமானக் கோயில்களில் பின்வரும் அம்சங்கள் காணப்படுகின்றன:
  1. தட்டையான கூரை கொண்ட சதுரக் கோயில்கள்
  2. விமானத்துடன் (இரண்டாவது மாடி) கூடிய தட்டையான கூரை கொண்ட சதுரக் கோயில்கள்
  3. வளைகோட்டு கோபுரம் (சிகரம்) கொண்ட கோயில்கள்
  4. செவ்வகக் கோயில்கள்
  5. வட்டவடிவக் கோயில்கள்
  • இரண்டாவது குழுவைச் சேர்ந்த கோயில்கள் திராவிட முறையின் பல கூறுகளைக் கொண்டவையாக உள்ளன. கருவறைக்கு மேலே சிகரம் ஆகும். அது நகர பாணியின் முக்கிய அம்சமாகும்.

ஸ்தூபிகள்

இவை ஏராளமான எண்ணிக்கையில் கட்டப்பட்டன. மிகச் சிறந்த ஸ்தூபிகள் சமத் (உத்தரப்பிரதேசம்), ரத்தினகிரி (ஒடிசா), மிர்பூர்கான் (சிந்து) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

சிற்பங்கள் – கல் சிற்பங்கள்

கல் சிற்பக் கலைக்குச் சிறந்த சான்று சாரநாத்தில் காணப்படும் நிற்கும் நிலையிலுள்ள புத்தர் சிலை. புராணச் சிற்பங்களில் மிக அழகானது உதயகிரி குகையின் நுழைவாயிலில் இருக்கும் வராஹ அவதாரச் சிலை.

உலோகச் சிற்பங்கள்

பெரிய அளவில் உலோகச் சிற்பங்களை வார்க்கும் கலையை குப்தர் காலத்து கைவினைக் கலைஞர்கள் மிகவும் கலைநுணுக்கத்தோடு செய்தார்கள். பீகாரின் நாளந்தாவில் உள்ள புத்தரின் பதினெட்டடி செம்புச் சிலை, சுல்தான்கஞ்சில் உள்ள ஏழரையடி புத்தர் சிலை ஆகிய இரண்டும் குப்தர் காலத்து உலோகச் சிற்பங்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

ஓவியங்கள்

பொதுவாகவே குப்தர் காலத்தில் சிற்பக் கலையைவிட ஓவியக் கலையில் பலரும் ஈடுபட்டு, பேரும் புகழும் பெற்றது தெரிகிறது. குப்தரின் சுவரோவியங்கள் அஜந்தா, பாக், பாதாமி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

  • நுட்பம் என்ற அளவில், இந்த ஓவியங்கள் வரையப்பட்ட பரப்புகள் மிக எளிய முறையில் தயார் செய்யப்பட்டன. அஜந்தாவின் சுவர் ஓவியங்கள் ஃபிரெஸ்கோ எனப்படும் சுவரோவிய வகையைச் சேர்ந்தவையல்ல.
  • ஏனெனில் ஃபிரெஸ்கோ ஓவியங்கள் சுவரின் பூச்சு ஈரமாக இருக்கும்போதே வரையப்படுபவை. ஆனால் அஜந்தாவின் சுவரோவியங்கள் பூச்சு காய்ந்தபின் வரையப்பட்டவை.
  • ஆனால் அஜந்தாவின் சுவரோவியங்கள் பூச்சு காய்ந்தபின் வரையப்பட்டவை. அஜந்தா மற்றும் பாக்கில் காணப்படும் ஓவியங்கள் மத்தியதேச ஓவியப் பள்ளி முறையின் தலைசிறந்த ஓவியங்களாகும்.

சுடுமண் சிற்பங்களும் மட்பாண்டக் கலையும்

  • களிமண்ணால் செய்த சிறு உருவங்கள் மதம் சார்ந்த, மதம் சாராத நோக்கங்களுக்காகப் பயன்பட்டன. விஷ்ணு, கார்த்திகேயர், துர்கை, நாகர் மற்றும் பல ஆண், பெண் கடவுளர்களின் சிறு களிமண் உருவங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
  • அச்சிசத்திரா, ராய்கார், ஹஸ்தினாபூர், பஷார் ஆகிய இடங்களில் கிடைத்துள்ள குப்தர் காலத்து மட்பாண்டங்கள் மட்பாண்டக் கலையின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. இக்காலகட்டத்து மட்பாண்டங்களின் தனிப்பட்ட சிறப்பம்சம் “சிவப்பு மட்பாண்டங்கள்” ஆகும்.

சமஸ்கிருத இலக்கியம்

குப்தர் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கினார்கள். அவர்களின் அனைத்து கல்வெட்டுகளும் பட்டயங்களும் அம்மொழியில் எழுதப்பட்டன. இக்காலகட்டம்தான் சமஸ்கிருத இலக்கியத்தின் உச்சகட்டமாகும்.

  • பண்டைய காலத்தில் உருவான ஸ்மிருதிகள் நல்லொழுக்கம், அரசியல், கலை மற்றும் பண்பாடு என்று பல்வேறு கருப்பொருள்கள் குறித்துப் பேசிய சமய நூல்களாகும். தர்மசாஸ்திரங்களும் புராணங்களும் இந்த இலக்கியக் கட்டமைப்பின் மையப்பொருளை வடிவமைத்தன.

சமஸ்கிருத இலக்கணம்

பாணினி எழுதிய அஷ்டத்யாயி, பதஞ்சலியால் எழுதப்பட்ட மஹாபாஷ்யா ஆகிய படைப்புகளின் அடிப்படையில் குப்தர் காலத்தில் சமஸ்கிருத இலக்கணத்தின் வளர்ச்சி புலப்படுகிறது. இக்காலகட்டம் குறிப்பாக அமரசிம்மரால் அமரகோசம் என்ற சமஸ்கிருத சொற்களஞ்சியம் தொகுக்கப்பட்டதாக அறியப்படுகிறது. வங்கத்தைச் சேர்ந்த பௌத்த அறிஞர் சந்திரகோமியர் சந்திரவியாகரணம் என்ற இலக்கண நூலைப் படைத்தார்.

புராணங்களும் இதிகாசங்களும்

இன்றுநாம் அறிந்திருக்கும் வடிவில் புராணங்கள் இந்தக் காலத்தில்தான் இயற்றப்பட்டன. இவை பிராமணர்களால் பதிவுசெய்யப்பட்ட தொன்மக் கதைகளாக இருந்தன. உண்மையில், இவை தொடக்கத்தில் பாணர்களால் பாடப்பட்டவை. பிராமணர்களின் கைகளுக்கு வந்ததும், இவை செவ்வியல் சமஸ்கிருதத்தில் மீண்டும் இயற்றப்பட்டன. இவற்றை இந்துக்களின் புனித பனுவல்களாக மாற்றும் முயற்சியாக இந்துப் பிரிவுகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள் அனைத்தும் விரிவான முறையில் சேர்க்கப்பட்டன. அரச வாரிசுகள் யூகத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டன. காலம் காலமாக மக்களின் நினைவுகளின் ஊடாக நிலைத்து வந்த படைப்புகள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு, மீண்டும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டன. இவ்வாறாக மக்களின் கடந்த காலம் பிராமணிய விளக்கங்களுடன் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது. மகாபாரதம் , இராமாயணம் ஆகிய இதிகாசங்கள் மெருகேறிச் செம்மையடைந்து தமது இறுதி வடிவினைப் பெற்றன.

  • பதினெட்டு முக்கிய புராணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவைகளில் பிரம்ம புராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம், ஸ்கந்த புராணம், சிவமகா புராணம், மார்கண்டேய புராணம், அக்னி புராணம், பவிஷ்ய புராணம், மத்ஸ்ய புராணம், ஸ்ரீமத்பகவத் புராணம் ஆகியன நன்கு அறியப்பட்டவையாகும்.

பௌத்த இலக்கியம்

தொடக்க கால பௌத்த இலக்கியங்கள் மக்கள் மொழியான பாலி மொழியில் இருந்தன. பின்னர் சமஸ்கிருதக் கலப்புடன் கவிதையும் வசனமுமாக மீண்டும் எழுதப்பட்டன. ஆர்ய தேவர், ஆர்ய அசங்கர் ஆகியோர் குப்தர் காலத்தின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள் ஆவர். தர்க்க அறிவியல் சார்ந்த முதலாவது முழுமையான பௌத்த நூல் வசுபந்துவால் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டது. வசுபந்துவின் சீடரான திக்நாகரும் பல அரிய நூல்களை எழுதினர்.

சமண இலக்கியம்

சமணர்களின் மதநூல்களும் தொடக்கத்தில் பிராகிருத மொழியிலேயே எழுதப்பட்டன. பின்னர்தான் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. குறுகிய காலத்திலேயே சமண மதம் பல பெரிய அறிஞர்களை உருவாக்கிவிட்டது. இவர்களது முயற்சியால் சமணமதக் கோட்பாடுகளைப் பரப்பப் பல இந்து புராணங்களும், இதிகாசங்களும் சமண மதக் கண்ணோட்டத்தில் மாற்றி எழுதப்பட்டன. விமலா சமண இராமாயணத்தை எழுதினார். சித்தசேன திவாகரா சமணர்களிடையே தர்க்க சாஸ்திரத்திற்கு அடித்தளமிட்டார்.

சமயம் சாரா இலக்கியம்

சமுத்திரகுப்தர் கவிராஜா என்று புகழ்பெற்றவராவார். காளிதாசர், அமரசிம்மர், விசாகதத்தர், தன்வந்திரி போன்ற நவரத்தினங்கள் அவரது அவையை அலங்கரித்ததாகப் பரவலாக நம்பப்படுகிறது. காளிதாசர் இயற்கையை, அழகை எழுதிய கவிஞர். சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்ரமோர்வசியம் ஆகியவை இவரது புகழ்பெற்ற நாடகங்கள், சூத்ரகர் (மிருச்சகடிகம்), விசாகதத்தர் (முத்ராராட்சசம், தேவிசந்திரகுப்தம்) ஆகியோர் படைப்புகள் வெளியாகின. அதேசமயம் அதிகம் புகழ்பெறாத நாடக ஆசிரியர்கள், கவிஞர்களின் படைப்புகளும் இலக்கிய, சமூக மதிப்பீடுகளுக்கு பங்காற்றின. இக்கால கட்டத்து நாடகங்களின் ஒரு சுவையான அம்சம் என்னவென்றால், நாடகத்தின் மேட்டுக்குடி கதாபாத்திரங்கள் சமஸ்கிருதத்தில் பேச, எளிய கதாபாத்திரங்கள் பிராகிருதத்தில் பேசுகின்றன.

பிராகிருத மொழியும் இலக்கியமும்

பிராகிருதத்திற்கு அரசவைக்கு வெளியே ஆதரவு இருந்தது. குப்தர் காலத்தில் பிராகிருத மொழியின் பல்வேறு வடிவங்கள் உருவாகின. மதுரா பகுதியில் சூரசேனி என்ற வடிவமும், அவுத், பண்டேல்கண்ட் பகுதிகளில் அர்த மகதி வடிவமும், நவீன பீகார் பகுதியில் அர்த மகதி வடிவமும், நவீன பீகார் பகுதியில் மகதி வடிவமும் வழக்கத்தில் இருந்தன.

நாளந்தா பல்கலைக்கழகம்

  • மகாவிஹாரா என்று பெயர் பெற்ற நாளந்தா இந்தியாவின் பண்டைய மகதப் பேரரசில் (இன்றைய பிகார்) இருந்த மிகப் பெரிய பௌத்த மடாலயமாகும். இது பாட்னாவிற்குத் தென்மேற்கே சுமார் 95 கிமீ தூரத்தில் பீகார் ஷெரீப் நகரத்திற்கு அருகே உள்ளது.
  • இது பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து 1200 வரை புகழ்பெற்ற கல்விச்சாலையாக இருந்தது. இது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படும் உலகின் தொன்மைச் சின்னமாகும்.
  • வேதக் கல்வியின் மிகவும் முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் இந்தியாவின் தொடக்ககாலப் பல்கலைக்கழகங்கள் என்று குறிப்பிடப்படும் தட்சசீலம், நாளந்தா, விக்ரமசீலா போன்ற பெரிய கல்வி நிறுவனங்கள் அமையத் தூண்டுகோலாக இருந்தன.
  • ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளில் நாளந்தா பல்கலைக்கழகம் குப்தப் பேரரசின் ஆதரவிலும், பின்னர் கன்னோசியின் பேரரசரான ஹர்ஷரின் ஆதரவிலும் செழித்தது.
  • குப்தர் காலத்திலிருந்து தொடர்ந்த பரந்த மனப்பான்மை கொண்ட வளர்ச்சியும் செழுமையும் பெற உதவியது. அதன் பின் வந்த நூற்றாண்டுகளில் படிப்படியாகச் சரிவு ஏற்பட்டது. இக்காலத்தில் வங்கத்தின் பால வம்ச அரசர்களின் ஆதரவால் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பௌத்த மதம் புகழ்பெறத் துவங்கியது.
  • தனது உச்சபட்ச வளர்ச்சிக் காலத்தில் இப்பல்கலைக்கழகம் அண்மையிலிருந்தும், வெகு தொலைவிலிருந்தும் மாணவர்களை ஈர்த்தது. திபேத், சீனா, கொரியா, மத்திய ஆசியா போன்ற இடங்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் வந்தனர்.
  • இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் இப்பல்கலைக்கழகத்திற்கு இந்தோனேஷியாவின் சைலேந்திரா வம்சத்தோடு தொடர்பு இருந்தது தெரிய வருகின்றது. இவ்வம்சத்தின் அரசர் ஒருவர் இவ்வளாகத்தில் ஒரு மடாலயத்தைக் கட்டியுள்ளார்.
  • பொ.ஆ.1200 இல் தில்லி சுல்தானிய மம்லூக் வம்சத்தின் பக்தியார் கில்ஜியின் படைகளால் நாளந்தா சூறையாடப்பட்டு, அழிக்கப்பட்டது. அதன்பின் மகாவிகாரம் சிறிது காலத்திற்கு சற்று தொலைவில் ஒரு தற்காலிக இடத்தில் தொடர்ந்து செயல்பட்டாலும், காலப்போக்கில் கைவிடப்பட்டு மறக்கப்பட்டது என்று சில தகவல்கள் கூறுகின்றன.
  • இந்தியத் தொல்லியல் துறை இப்பகுதியில் ஆய்வு நடத்தியபோது தற்செயலாக இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. முறையான அகழ்வாய்வு 1915இல் ஆரம்பித்தது. அப்போது 12 ஹெக்டேர் பரப்பில் (30 ஏக்கர்) அமைந்திருந்த பதினோரு மடாலயங்களும், ஆறு செங்கல் கோயில்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
  • அதன் பின்னர் ஏராளமான சிற்பகள், நாணயங்கள், முத்திரைகள், செப்பேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவையனைத்தும் அருகில் உள்ள நாளந்தா தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
  • நாளந்தா இன்று ஒரு மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக உள்ளது. பௌத்த சுற்றுலா வட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அண்மையில் இந்தியா மற்ற தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உதவியோடு இப்பல்கலைக்கழகத்தைப் புதுப்பித்துள்ளது.

குப்தர் கால அறிவியல்

கணிதமும், வானவியலும்

  • சுழியம் என்ற கருத்தாக்கத்தைக் கண்டுபிடித்தது, அதன்விளைவாக பதின்ம இலக்க முறை கண்டுபிடித்தது ஆகிய பெருமைகள் இக்காலகட்டத்தின் அறிவியலாளர்களையேச் சாரும். சூரிய சித்தாந்தா என்ற நூலில் ஆரியப்பட்டர் (பொ.ஆ.ஐந்தாம் நூற்றாண்டின் இறுதி முதல் ஆறாம் நூற்றாண்டின் துவக்கம் வரை) சூரிய கிரகணங்களின் உண்மையான காரணங்களை ஆராய்ந்தார்.
  • பூமியின் சுற்றளவு குறித்த கணக்கீட்டில் ஆரியப்பட்டர் கணிப்பு நவீன மதிப்பீட்டிற்கு மிக நெருக்கமாக உள்ளது. பூமி ஒரு அச்சில் தன்னைத் தானே சுற்றுகிறது என்பதைக் கண்டுபிடித்த முதல் வானவியலாளர் அவர்தான். கணிதம், கோணவியல், இயற்கணிதம் ஆகியவற்றைப் பேசும் ஆரியபட்டீயம் என்ற நூலை அவர் எழுதினார்.
  • வராகமிகிரரின் (ஆறாம் நூற்றாண்டு) பிருஹத் சம்ஹிதா என்றநூல் வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலைக்களஞ்சியமாகும்.
  • பஞ்ச சித்தாந்திகா, பிரிஹத் ஜாதகா ஆகியவை இவரது மற்ற படைப்புகளாகும். பிரம்மகுப்தர் (ஆறாம் நூற்றாண்டின் இறுதி, ஏழாம் நூற்றாண்டின் துவக்கம்) கணிதம் மற்றும் வானவியலுக்கான முக்கிய நூல்களான பிரும்மஸ்புத –சித்தாந்தா, கண்டகாத்யகா ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

மருத்துவ அறிவியல்

  • மருந்துகள் தயாரிப்பதற்கு உலோகங்களைப் பயன்படுத்துதல், பாதசரம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் பயன்பாடு குறித்து வராஹமிகிரரும் பிறரும் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது குப்தர் ஆட்சிக் காலக்கட்டத்தில் வேதியியலில் பெரும் முன்னேற்றம் நிகழ்ந்திருப்பது தெரிகிறது.
  • நவனிதகம் என்ற மருத்துவ நூல் நோய்களுக்கான மருந்துகள், மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவற்றைக் கூறுகிறது. பாலகாப்யா எழுதிய ஹஸ்த்யாயுர்வேதா என்ற நூல் விலங்குகளுக்கான மருத்துவ நூலாகும். இது குப்தர் காலத்தில் மருத்துவ அறிவியல் எந்த அளவிற்கு வளர்ந்து இருந்தது என்பதைக் காட்டுகிறது.

குப்தப் பேரரசின் வீழ்ச்சி

  • குப்த வம்சத்தின் கடைசி அரசராக அறியப்படுபவர் விஷ்ணுகுப்தர். இவர் பொ.ஆ. 540 முதல் 550 வரை ஆட்சி செய்தார். உள்நாட்டுப் பூசல்களும், அரச குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயின.
  • புத்தகுப்தர் என்ற குப்த அரசர் ஆட்சிக்காலத்தில் மேற்கு தக்காணத்தின் வாகடக அரசரான நரேந்திரசேனா மால்வா, மேகலா மற்றும் கோசலா மீது படையெடுத்தார். பின்னர் மற்றொரு வாகடக அரசரான ஹரிசேனர் மாளவத்தையும் குஜராத்தையும் குப்தர்களிடமிருந்து கைப்பற்றினார்.
  • இரண்டாம் சந்திரகுப்தரின் பேரனான ஸ்கந்தகுப்தரின் ஆட்சியின்போது ஹூணர்கள் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்தார்கள். ஸ்கந்தகுப்தர் ஹுணர்களை விரட்டுவதில் வெற்றி பெற்றாலும், அதன் விளைவுகள் பேரரசின் நிதி நிலையை நலிவுறச் செய்தது.
  • ஆறாம் நூற்றாண்டில், ஹுணர்கள் மாளவம், குஜராத், பஞ்சாப், காந்தாரா ஆகியவற்றைக் கைப்பற்றினர். ஹுணர் படையெடுப்பால் நாட்டின் மீது குப்தர்களின் பிடி தளர்ந்தது. மாளவத்தின் யசோதர்மன், உத்திரபிரதேசத்தின் முகாரிகள், சௌராஷ்டிரத்தின் மைத்ரகாக்கள் போன்றும் பல சிற்றரசர்கள் உருவாக ஆரம்பித்தனர். குப்தப்பேரரசு பெருமளவு சுருங்கி மகதத்தில் மட்டும்தான் இருந்தது.
  • பிற்காலத்திய குப்த அரசர்கள் பௌத்தத்தைக் கடைப்பிடித்ததும் இவர்கள் பேரரசை விரிவுபடுத்துவதிலோ, ராணுவப் படையெடுப்புகளிலோ கவன் செலுத்தாததும் பேரரசைப் பலவீனப்படுத்தியது.
  • அத்துடன், வெளிநாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகள், சிற்றரசர்கள் பலமாக உருவானது ஆகியன அனைத்தும் சேர்ந்து குப்தப் பேரரசு வீழக் காரணமாகின.
  • ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பேரரசு சிதைந்து பிராந்தியத் தலைவர்களால் ஆளப்பட்ட சிறுசிறு பகுதிகளானது.

நிலப்பிரபுத்துவம்

நிலப்பிரபுத்துவம் என்ற சமூக அமைப்பு இந்தியாவின் மத்தியகால சமூகத்தின் ஒரு பண்புநிலை ஆகும். வரலாற்றாளர் ஆர்.எஸ். சர்மா பின்வரும் நிலப்பிரபுத்துவ பண்புகளைப் பட்டியலிடுகிறார்: அரசர் அளிக்கும் நில மானியம் , நிதி, நீதி உரிமைகளை பயனாளிகளுக்கு மாற்றித்தருதல்; விவசாயிகள், கலைஞர்கள், வணிகர்கள் மீது நில உடைமையாளர்களுக்கு உரிமை அளித்தல்; அடிக்கடி நிகழ்ந்த கட்டாய உழைப்பு நிகழ்ச்சிகள்; உபரியை அரசு எடுத்துக்கொள்ளல்; வணிகத்திலும், நாணயம் அச்சடித்தலிலும் வீழ்ச்சி; அதிகாரிகளின் ஊதியத்தை நில வருவாய் வசூல் மூலம் பெற்றுக்கொள்ள அனுமதிப்பது; சமந்தர்கள் (நிலப்பிரப்புத்துவ துணைநிலை ஆட்சியாளர்கள்) அதிகாரங்கள் அதிகரித்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!