Tnpsc General Tamil Previous Question Paper 17

Tnpsc General Tamil Previous Question Paper 17

Tnpsc General Tamil Previous Question Paper 17: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. “உலகம்” என்னும் தமிழ்ச்சொல் எச்சொல்லின் அடியாய்ப் பிறந்தது?

(அ) உலகு

(ஆ) உலவு

(இ) உலக

(ஈ) உல

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) உலவு

“உலகம்” என்னும் தமிழ்சொல் “உலவு” என்ற சொல்லின் அடியாய்ப் பிறந்தது. உலவு என்ற சொல் “சுற்றுதல்” என்ற பொருளில் வருவதால், தன்னையும் ஞாயிற்றையும் சுற்றுகின்ற உலகத்திற்கு அப்பெயரை தமிழர்கள் அறிவியல் நோக்கில் வைத்தனர்.

2. ஒழுக்கம் விழுப்பத் தரலான், ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

இக்குறில் வரும் ஒழுக்கம் என்னும் சொல்லிற்கு சரியான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக.

(அ) தொழிற்பெயர்

(ஆ) முதனிலை திரிந்த தொழிற்பெயர்

(இ) பண்புத்தொகை

(ஈ) வினைத்தொகை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) தொழிற்பெயர்

ஒரு தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும். இது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது.

3. விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

“தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்”

(அ) நம் இளைஞர்களிடையே எந்த எண்ணம் வளரக்கூடாது?

(ஆ) நம் இளைஞர்களிடையே எந்த எண்ண வளர வேண்டும்?

(இ) பெரியோர்களிடம் எந்த எண்ணம் வளர வேண்டும்?

(ஈ) பெரியோர்களிடம் எந்த எண்ணம் வளரக்கூடாது?

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) நம் இளைஞர்களிடையே எந்த எண்ண வளர வேண்டும்?

General Tamil Study Materials

General Tamil Previous Questions Pdf

4. ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது

(அ) சொல் பின்வரு நிலையணி

(ஆ) பொருள் பின்வரு நிலையணி

(இ) சொற்பொருள் பின்வரு நிலையணி

(ஈ) பிறிதுமொழிதலணி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) பொருள் பின்வரு நிலையணி

செய்யுளில் முன்னர் வந்த சொல்லே, பொருளோ, மீண்டும் மீண்டும் வந்து அழகு சேர்க்கும், அதற்கு பின்வரு நிலையணி என்று பெயராகும்.

இது மூன்று வகைப்படும். பின்வரு நிலையணி: சொல் பின்வரு நிலையணி. பொருள் பின்வரு நிலையணி, சொற்பொருள் பின்வரு நிலையணி.

சொல் பின்வரு நிலையணி: செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவதாகும்.

எ.கா. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

மேற்கண்ட குறட்பாவில் “துப்பு” என்னும் ஒரே சொல் உண்பவர், உணவு, உண்ணும் பொருள் எனப் பல்வேறு பொருள்களில் வந்துள்ளது.

பொருள் பின்வரு நிலையணி: செய்யுளில் ஒரே பொருளைத் தரும் பல சொற்கள் வருவதாகும்.

எ.கா: “அவிழ்ந்தன தோன்றி, அலர்ந்தன காயா,

நெகிழ்ந்தன நேர்முகை முல்லை”

மேற்கண்ட பாடலில் “மலர்தல்” என்னும் ஒரு பொருளில் அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல் ஆகிய சொற்கள் வந்துள்ளன.

சொற்பொருள் பின்வரு நிலையணி: செய்யுளில் முன்னர் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவதாகும்.

எ.கா: “தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்”

மேற்கண்ட குறளில் “தீய” என்னும் சொல் தீமை என்ற ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது.

பிறிதுமொழிதலணி: உவமையைக் கூறிப் பொருளைப் பெற வைப்பது பிறிது மொழிதலணி ஆகும்.

எ.கா: “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்”

மென்மையான மயில்தோகையே ஆயினும், அதனை அளவுக்கு விஞ்சி வண்டியிலோற்றின் அச்சு ஒடிந்து விடும் என்பது உவமை.

பகைவர்கள் தனித்தனியே நோக்கும் போது மிக எளியோராயினும் ஒன்றுகூடின், தனிப்பட்ட மன்னன் எவ்வளவு வலிமையுடையவன் ஆயினும் அவனை எளிதில் வென்றுவிடுவர் என்பது பொருளாகும்.

5. ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது

(அ) தனிநிலைத் தொடர்

(ஆ) கலவைத் தொடர்

(இ) உணர்ச்சித் தொடர்

(ஈ) செய்தித் தொடர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) தனிநிலைத் தொடர்

ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரே பயனிலையைக் கொண்டு முடிவது தனிநிலைத் தொடராகும்.

எ.கா: கண்ணன் படித்தான் – ஓர் எழுவாய், ஒரு பயனிலை

சேர,சோழ, பாண்டியர் தமிழை வளர்த்தனர் – பல எழுவாய்கள், ஒரு பயனிலை.

6. பொருந்தாத இணையைக் கண்டறிக:

(அ) ஈண்டு-இவ்விடம்

(ஆ) காண்டகு-காணத்தக்க

(இ) இருப்பாணி-இரும்பு ஆணி

(ஈ) கீண்டு-அடித்து

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) கீண்டு-அடித்து

“கீண்டு” – என்பதன் பொருள் தோண்டி, பிளந்து என்பனவாகும்.

7. பிழையற்ற தொடரை எழுதுக:

(அ) புத்தகப் படிப்பு தேவை அத்தோடு பட்டறிவைச் சேர்த்து கொள்ளல் வேண்டும்

(ஆ) புத்தகப் படிப்புத் தேவை அத்தோடு பட்டறிவைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்

(இ) புத்தக படிப்பு தேவை அத்தோடு பட்டறிவை சேர்த்துக் கொள்ளல் வேண்டும்

(ஈ) புத்தக படிப்பு தேவை அத்தோடு பட்டறிவைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) புத்தகப் படிப்புத் தேவை அத்தோடு பட்டறிவைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்

8. பொருந்தாத வினை மரபினை எழுதுக

(அ) சுவர் கட்டினான்

(ஆ) அம்பு எய்தான்

(இ) பால் பருகினான்

(ஈ) ஆடை நெய்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) சுவர் கட்டினான்

“சுவர் எழுப்பினான்” என்பது சரியான வினைமரபாகும்.

9. அகர வரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக

(அ) அங்கை, அஞ்சு, அந்தி, அல்லல், அள்ளள்

(ஆ) அஞ்சு, அல்லல், அந்தி, அங்கை, அள்ளள்

(இ) அந்தி, அஞ்சு, அங்கை, அள்ளள், அல்லல்

(ஈ) அல்லல், அள்ளள், அந்தி, அங்கை, அஞ்சு

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) அங்கை, அஞ்சு, அந்தி, அல்லல், அள்ளள்

10. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

சுவைப்பண்பு

(அ) காரம்

(ஆ) சதுரம்

(இ) புளிப்பு

(ஈ) இனிப்பு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) சதுரம்

அறுசுவை – இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, காரம்.

சதுரம் என்பது வடிவமாகும்.

11. உரிய பொருளைக்கண்டறிக:

“ஆ” உணர்த்தும் பொருள் யாது?

(அ) அருள்

(ஆ) பசு

(இ) நெருப்பு

(ஈ) வனப்பு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) பசு

ஓரெழுத்து ஒரு மொழியில்.

ஆ-பசு, கோ-பசு, தே-அருள், தீ-நெருப்பு, பா-அழகு அல்லது வனப்பு.

12. பிறமொழிக் கலப்பற்றத் தொடரை எழுதுக:

(அ) நமஸ்காரம் என்று சாஷ்டாங்கமாக விழுந்தவனை வாழ்த்தினேன்.

(ஆ) நமஸ்காரம் என்று சாஷ்டாங்கமாக விழுந்தவனை ஆசிர்வதித்தேன்.

(இ) வணக்கம் என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்தவனை வாழ்த்தினேன்

(ஈ) வணக்கம் என்று நெஞ்சாண்கிடையாக விழுந்தவனை ஆசிர்வதித்தேன்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) வணக்கம் என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்தவனை வாழ்த்தினேன்

நமஸ்காரம்-வணக்கம்.

சாஷ்டாங்கம்-நெடுஞ்சாண்கிடை.

13. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

(அ) நுனித்து – நுனி+த்+உ

(ஆ) நுனித்து – நுனி+த்+த்+உ

(இ) நுனித்து – நுனித்து+உ

(ஈ) நுனித்து – நுனித்+த்+உ

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) நுனித்து – நுனி+த்+த்+உ

நுனித்து – நுனி+த்+த்உ.

நுனி – பகுதி: த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி

14. கீழ்க்காணும் தொடர்களில் பிழையான தொடரைக் கண்டறிக:

(அ) பேருந்து நிறுத்துமிடத்தில் பள்ளிக்கூடம் இருக்கிறது

(ஆ) இன்றும் நம் நாட்டில் பெருவாரியான மக்கள் உள்ளார்களே.

(இ) ஆளமரத்தின் விளுதினைப் பாம்பென்று குறங்கு அஞ்சியது

(ஈ) ஏரிகளில் மழைநீர் சேமித்தால் கிணறுகளில் நீர் வற்றாது.

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) ஆளமரத்தின் விளுதினைப் பாம்பென்று குறங்கு அஞ்சியது

ஆலமரத்தின் விழுதினைப் பாம்பென்று குரங்கு அஞ்சியது.

15. பொருந்தாததைக் கண்டறிக:

(அ) தான்+இன் – தன்னின்

(ஆ) நீ+இன் – உன்னின்

(இ) யான்+இன் – என்னின்

(ஈ) நாம்+இன் – எங்களின்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) நாம்+இன் – எங்களின்

நாம்+இன் – நம்மின்

16. ஓடு – என்பதன் வினையெச்சச் சொல்லைக் கண்டறிக:

(அ) ஓடி

(ஆ) ஓடிய

(இ) ஓடினான்

(ஈ) ஓடுதல்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) ஓடி

ஓடு – வேர்ச்சொல்; ஓடி – வினையெச்சம், ஓடிய – பெயரெச்சம், ஓடினான் – வினைமுற்று, ஓடுதல் – தொழிற்பெயர்.

ஓர் எச்சச் சொல்லை அடுத்து வினைச்சொல் வருமாயின் அது வினையெச்சம் ஆகும்.

எ.கா: ஓடி வந்தான், ஓடிப் போனான், ஓடிச் சென்றான். ஓர் எச்சச் சொல்லை அடுத்து பெயர்ச்சொல் வருமாயின் அது பெயரெச்சம் ஆகும். ஒடிய குதிரை, ஓடிய பையன், ஓடிய மக்கள்.

17. தொடர்நிலைச் செய்யுளும், தூய காப்பியங்களும் இயற்றுபவர்

(அ) ஆசுகவி

(ஆ) வித்தாரக் கவி

(இ) மதுர கவி

(ஈ) சித்திரக்கவி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) வித்தாரக் கவி

ஆசுகவி – “பாடு” எனக் கூறியவுடன் பாடுபவர்.

மதுரகவி – செவிக்கினிய ஓசை நலம் சிறக்கப் பாடுபவர்.

சித்திரக்கவி – சொல்லணி அமைத்துச் சுவை வளம் செழிக்கப் பாடுபவர்.

வித்தாரக்கவி – தொடர்நிலைச் செய்யுளும் தூய காப்பியங்களும் இயற்றுபவர்.

18. கம்பரது காலம்

(அ) கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு

(ஆ) கி.பி.ஓன்பதாம் நூற்றாண்டு

(இ) கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு

(ஈ) கி.பி. எட்டாம் நூற்றாண்டு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு

கம்பரது காலம் 12-ஆம் நூற்றாண்டாகும். இவரது சமகாலப் புலவர்கள் ஒட்டக்கூத்தர், ஜெயங்கொண்டார் மற்றும் புகழேந்தி ஆவர். கம்பர் இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் அவைப் புலவராக விளங்கினார். அதனால் காலத்தை தெளிவாக அறிய முடிகிறது

19. சொல்லிற்கு ஏற்ற பொருளைப் பொருத்தி எழுதுக:

அ. ஆய காலை – 1. திரட்சி

ஆ. திரள் – 2. வேடர்

இ. எயினர் – 3. படகு

ஈ. நாவாய் – 4. அந்த நேரத்தில்

அ ஆ இ ஈ

அ. 4 2 1 3

ஆ. 4 1 2 3

இ. 2 4 1 3

ஈ. 3 2 1 4

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 4 1 2 3

20. “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” – என வழங்கப்படும் நூல்

(அ) கம்பராமாயணம்

(ஆ) சிலப்பதிகாரம்

(இ) பெரியபுராணம்

(ஈ) மணிமேகலை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தில் பாடல்களின் இடையிடையே உரைநடையும் அமைந்திருப்பதால், “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” என வழங்கப் பெற்றது.

21. “தத்தும் பாய்புனல் முத்தம் அடைக்கும்

சாலை வாய்க்கன்னல் ஆலை உடைக்கும்”

இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள இலக்கியம்

(அ) கலிங்கத்துப்பரணி

(ஆ) தமிழ்விடுதூது

(இ) குற்றாலக்குறவஞ்சி

(ஈ) முக்கூடற்பள்ளு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) முக்கூடற்பள்ளு

“தத்தும் பாய்புனல் முத்தம் அடைக்கும்

சாலை வாய்க்கன்னல் ஆலை உடைக்கும்

கத்தும் பேரிகைச் சத்தம் புடைக்கும்”

– முக்கூடற்பள்ளு.

பொருள்: மருதூரில் வாய்க்கால்களில் தத்திச் செல்லும் நீரானது முத்துகளால் இடைமறித்து அடைக்கப்படும். சாலை வழியாகக் கொணர்ந்த கருப்பங்கழிகளைக் கரும்பாலைகளில் சாறு பிழிந்து கொண்டிருக்கும் பேரிரைச்சல் சத்தமோ காதுகளைச் செவிடாக்கும்”.

“முக்கூடற்பள்ளு” என்ற நூலை இயற்றியவர் யாரென இதுவரை அறியப்படவில்லை.

22. “முற் பிறப்பினை உணர்ந்தவளாகக் “ குறிப்பிடப்படுபவள்

(அ) கண்ணகி

(ஆ) மணிமேகலை

(இ) மாதவி

(ஈ) மாதரி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) மணிமேகலை

மணிமேகலை காப்பியத்தின் நாயகி மணிமேகலை, மணிபல்லவத் தீவில் தன் முற்பிறப்பினை மணிமேகலா தெய்வம் மூலம் உணர்கிறாள். ஆபுத்திரன் நாடு அடைந்த காதையில் அறவண அடிகளின் “மறு பிறப்புணர்ந்த மணிமேகலை நீ” என்ற கூற்றின் மூலம் இதனை அறியலாம்

23. உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம்

(அ) சீறாப்புராணம்

(ஆ) பெரியபுராணம்

(இ) கம்பராமாயணம்

(ஈ) சிவபுராணம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) பெரியபுராணம்

“உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரியபுராணம்” – என்று இந்நூலை திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள் பாராட்டியுள்ளார்.

24. “நந்திக்கலம்பகம்” – நூலின் ஆசிரியர் யார்?

(அ) கணிமேதாவியார்

(ஆ) ஜெயங்கொண்டார்

(இ) மூன்றாம் நந்திவர்மன்

(ஈ) அறியப்படவில்லை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) அறியப்படவில்லை

பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற நந்தி கலம்பகத்தின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. இந்நூல் சிற்றிலக்கியங்களில் கலம்பக வகையில் இயற்றப்பட்ட முதல் நூலாகும்.

25. பொருள் விளங்குமாறு பிரித்து எழுதுக:

(அ) நீயடாவெதிர் நிற்பதோ

(ஆ) நீய டாவெதிர் நிற்பதோ

(இ) நீயடா வெதிர் நிற்பதோ

(ஈ) நீ யடா வெதிர் நிற்பதோ

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) நீய டாவெதிர் நிற்பதோ

தேம்பாவணி – வளன் செனித்தபடலம்

“நீய டாவெதிர் நிற்பதோ மதம்மொழி கரிமேல்

நாய டாவினை நடத்துமோ கதங்கொடு நானே”

– வீரமாமுனிவர்.

பொருள்: “அடா சிறுவனாகிய நீயா என்னை எதிர்த்து நிற்பது? மதயானையை எதிர்த்து நாய் போர் புரிவதுண்டோ” என கோலியாத்து தாவீதை நோக்கிக் கேட்டான்.

26. “அழகர் கிள்ளை விடு தூது” என்னும் சிற்றிலக்கியம் எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய நூல்?

(அ) 251 ஆண்டுகளுக்கு முந்தைய நூல்

(ஆ) 245 ஆண்டுகளுக்கு முந்தைய நூல்

(இ) 250 ஆண்டுகளுக்கு முந்தைய நூல்

(ஈ) 252 ஆண்டுகளுக்கு முந்தைய நூல்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) 250 ஆண்டுகளுக்கு முந்தைய நூல்

அழகர் கிள்ளை விடு தூது: இந்நூலின் ஆசிரியர் பலபட்டடைச் சொக்கநாதப் பிள்ளை. இவருடைய காலம் கி.பி.1680 முதல் 1746 வரை. “இந்நூல் ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முந்தையதாகும்” என்று சமச்சீர் கல்வியில் கொடுக்கப்பட்டுள்ளதால் அதையே விடையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆசிரியரின் காலத்தைக் கணக்கில் கொண்டால் 272 ஆண்டுகளுக்கு முந்தையதாகும்.

27. “செரு அடுதோள்” என்ற அடைமொழி பெற்றவர்

(அ) விளம்பிநாகனார்

(ஆ) கபிலர்

(இ) நல்லாதனார்

(ஈ) பூதஞ்சேந்தனார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) நல்லாதனார்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான “திரிகடுகம்” என்ற நூலின் ஆசிரியர் நல்லாதனார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த “திருத்து” என்னும் ஊரினர் என்பவர். வைணவ மதத்தைச் சேர்ந்தவர். இவரை, “செரு அடுதோள் நல்லாதன்” என்று பாயிரம் குறிப்பிடுவதனால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது

28. “கற்றவர்க்கு எல்லா நாடுகளும் தம்முடைய நாடுகளே” – என்ற கருத்தமைந்த பாடலைப் பாடிய சங்கப்புலவர்

(அ) கணியன் பூங்குன்றனார்

(ஆ) முன்றுறை அரையனார்

(இ) கணிமேதாவியார்

(ஈ) திருவள்ளுவர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) முன்றுறை அரையனார்

பழமொழி நானூறு

“ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு

வேற்றுநாடு ஆகா; தமவேயாம் ஆயினால்

ஆற்றுணா வேண்டுவது இல்”

– முன்றுறை அரையனார்.

பொருள்: கற்க வேண்டிய நூல்களை நிறைவாகக் கற்றவர் அறிவுடையவர் ஆவார். அவருடைய புகழ் நான்கு திசைகளிலும் பரவும். அவருடைய புகழ் பரவாத நாடுகள் இல்லை. அந்த நாடுகள் எல்லாம் வேற்று நாடுகள் இல்லை தம்முடைய நாடுகளே. எனவே அந்நாடுகளுக்குச் செல்லும் போது வழிநடை உணவை அவர் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

29. “நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே”

– இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்.

(அ) புறநானூறு

(ஆ) நற்றிணை

(இ) ஏலாதி

(ஈ) கலித்தொகை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) நற்றிணை

நற்றிணை:

“நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின்

மென்கண் செல்வம் செல்வமென் பதுவே”

– மிளைகிழான் நல்வேட்டனார்.

பொருள்: அரசரால் சிறப்புச் செய்யப் பெறுதலும், யானை, தேர், குதிரை முதலிய ஊர்திகளில் அவ்வரசர் முன்னிலையில் விரைந்து செல்லுதலும் செல்வச் சிறப்பன்று. அஃது அவரவர்தம் முன்வினைப் பயனே. தன்பால் புகலிடம் தேடி வந்த எளியோரைக் கைவிடாமல் காக்கும் மென்மையான பண்பே செல்வமெனச் சான்றோர் கூறுவர்.

30. “கார்முகத் தசனி கூசக் கடுத்தவவ் வரக்கன் வென்ற சீர்முகத் திளவல் பின்னர்த் திறந்ததன் னாம வேலாற்” என்ற வரிகளை எழுதியவர் யார்?

(அ) பாரதிதாசன்

(ஆ) பாரதியார்

(இ) வீரமாமுனிவர்

(ஈ) ஓட்டக்கூத்தர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) வீரமாமுனிவர்

தேம்பாவணி:

வளன்செனித்த படலம்

“கார்முகத் தசனி கூசக் கடுத்தவவ் வரக்கன் வென்ற

சீர் முகத் திளவல் பின்னர் திறந்ததன் னாம வேலாற்

போர்முகத் தெதிர் ஒன்றில்லான் பொழிமறை பழித்தயாரும்

பார்முகத் ததற்கு எஞ்ஞான்றும் பரிந்திட வகை செய்தான்”

– வீரமாமுனிவர்.

பொருள்: அழகிய முகத்தை உடைய இளைஞனாகிய தாவீதன், கரிய மேகத்தில் தோன்றும் இடியும் கூசுமாறு சினந்து கடுமொழி கூறிய அரக்கனாகிய கோலியாத்தை வென்றான். பின்பு, அவன் தன் புகழ்பெற்ற வேலினால் போர்க்களத்தில் தன்னை எதிர்த்துப் போர் புரிவோர் எவரும் இல்லாதவனாய் அவர்களை வென்று அடக்கினான். நன்மை மொழியும் சத்திய வேதத்தைப் பழித்த அவர்கள் யாவரும் உலகில் அதற்குச் சார்பாய் எப்போதும் பரிந்து பேச வகை செய்தான்.

31. தவறான தொடரைத் தேர்ந்தெடு

அ. சூலை நோயால் ஆட்கொள்ளப் பெற்றவர் அப்பர்

ஆ. மணக்கோலத்தில் ஆட்கொள்ளப் பெற்றவர் சுந்தரர்

இ. திருவெண்ணைய் நல்லூரில் ஆட்கொள்ளப்பெற்றவர் சம்பந்தர்

ஈ. திருப்பெருந்துறையில் ஆட்கொள்ளப்பெற்றவர் மாணிக்கவாசகர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

இ. திருவெண்ணைய் நல்லூரில் ஆட்கொள்ளப்பெற்றவர் சம்பந்தர்

திருவெண்ணெய் நல்லூரில் ஆட்கொள்ளப் பெற்றவர் சுந்தரர்

32. “இரவினீர்ங் குழலும் அற்றோ என அஃதும் என்னா

வெருவிலான் சலமே முற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்” – இப்பாடல் வரிகளை இயற்றிய ஆசிரியர்

(அ) பாரதியார்

(ஆ) பரஞ்சோதி முனிவர்

(இ) பெருஞ்சித்திரனார்

(ஈ) காரியாசான்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) பரஞ்சோதி முனிவர்

திருவிளையாடற்புராணம்

திருவாலவாய்க் காண்டம் – தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்.

“பரவிநீ வழிபட்டு ஏத்தும் பரஞ்சுடர் திருக்களத்தி

அரவுநீர்ச் சடையார் பாகத்து அமர்ந்தஞா னப்பூங்கோதை

இரவினீர்ங் குழலும் அற்றோ என அஃதும் அற்றே என்னா

வெரவிலான் சலமே முற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்”

– பரஞ்சோதி முனிவர்.

பொருள்: நக்கீரனை நோக்கி, “நீ வழிபடும் பரஞ்சோதியாகிய இறைவன், திருக்களாத்தியில் கோயில் கொண்டவன். பாம்பையும் கங்கையையும் அணிந்த சடையை உடையவன். அவனது இடப்பாகத்தில் எழுந்தருளிய உமையம்மையின் குளிர்ந்த கருங்கூந்தலுக்கும் இதே தன்மை தானோ?” என இறைவன் வினவினார். அதற்கு நக்கீரன், எதிர்வருவதனை எண்ணிச் சிறிதும் அஞ்சாமல் “அக்கூந்தலும் அத்தன்மையுடையதே” எனப் பதிலுறுத்தான்.

33. குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழி எந்த ஆயிரத்தில் உள்ளது?

(அ) முதலாம்

(ஆ) இரண்டாம்

(இ) மூன்றாம்

(ஈ) ஐந்தாம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) முதலாம்

நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்

முதலாயிரத்தில் பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணழ்வார், மதுரகவி ஆழ்வார் ஆகியோரின் பாசுரங்கள் அமைந்துள்ளன.

இரண்டாம் ஆயிரத்தில் திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்கள் மட்டும் அமைந்துள்ளன.

மூன்றாவது ஆயிரத்தில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருவரங்கத்தமுதனார் ஆகியோரின் பாசுரங்கள் மட்டும் அமைந்துள்ளன.

நான்கவாது ஆயிரத்தில் நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டும் அமைந்துள்ளது.

34. “திருவேங்கடத்தந்தாதி” – என்னும் நூலின் ஆசிரியர்

(அ) கம்பர்

(ஆ) குமரகுருபரர்

(இ) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

(ஈ) ஒட்டக்கூத்தர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

திருவேங்கடத்தந்தாதி என்னும் நூலின் ஆசிரியர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஆவார். இவரின் வேறுபெயர் அழகிய மணவாளதாசர் ஆகும். இவர் சோழ நாட்டிலுள்ள திருமங்கை என்ற ஊரைச் சேர்ந்தவர். காலம் கி.பி. 17ம் நூற்றாண்டு. மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரிடம் அரசு அலுவலராய்ப் பணியாற்றி வந்தார். பின்னர் தன்இறுதிகாலத்தில் திருவரங்கத்தில் இறைத் தொண்டு புரிந்து வந்தார். இவர் பாடிய “அஷ்டப் பிரபந்தம்” என்னும் எட்டு நூல்களுள் “திருவேங்கடத்தந்தாதி” ஒன்றாகும்.

35. “எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்”

இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள இலக்கியத்தின் பெயர்.

(அ) மணிமேகலை

(ஆ) வளையாபதி

(இ) சிலப்பதிகாரம்

(ஈ) குண்டலகேசி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) சிலப்பதிகாரம்

மதுரைக்காண்டம் – (வழக்குரை காதை)

“எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுடத் தான்தன்

அரும்பெறல் பதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகாரென் பதியே”

கண்ணகியின் கூற்றாக இளங்கோவடிகள் இயற்றியது.

பொருள்: “புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும், தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டு பசுவின் துயரை அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரதிலிட்டு கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த பெரும் புகழுடைய புகார் நகரமே யான் பிறந்த ஊர்”

36. “வேலை தெரியாத தொழிலாளி, தன் கருவின் மீது சீற்றம் கொண்டானாம்” என்ற பழமொழி எம்மொழியைச் சார்ந்தது?

(அ) தமிழ்மொழி

(ஆ) பிரெஞ்ச் மொழி

(இ) ஆங்கில மொழி

(ஈ) குஜராத்திய மொழி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) ஆங்கில மொழி

தாய்மொழி வழிக்கல்வி பற்றி காந்தியடிகள் எழுதிய கடிதம் ஒன்றில் “வேலை தெரியாத தொழிலாளி, தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம்” என ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு. மொழி, நிறைவு பெற்றதாக இல்லை எனக் குறை சொல்பவர்கள் இந்தத் தொழிலாளியைப் போன்றவர்களே. குறைபாடு மொழியைப் பயன்படுத்துபவர்களிடம் தான் இருக்கிறதே அன்றி மொழியில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

37.. “திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த சான்றோர்” யார்?

(அ) வீரமாமுனிவர்

(ஆ) குணங்குடி மஸ்தான்

(இ) பாரதியார்

(ஈ) ஜி.யூ.போப்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) ஜி.யூ.போப்

ஜி.யூ.போப் அவர்கள் திருக்குறள் மற்றும் திருவாசகம் போன்ற தமிழ் நூல்களை மிக விருப்பமுடன் படித்தார். 1886-இல் திருக்குறளையும் 1900-இல். திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும்போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தை உடன் வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரின் விருப்பம் நிறைவேற்றப்பட்டது.

38. பொருத்தமான தொடரைத் தேர்வு செய்க:

வேலுநாச்சியார் என்பவர்.

(அ) சொக்கநாத நாயக்கரின் மனைவி

(ஆ) ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழகப் பெண்

(இ) தென்னாட்டின் ஜான்சி ராணி

(ஈ) தமது பதினாறாம் வயதில் மரணமடைந்தார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழகப் பெண்

கி.பி.1722-ல் ஆங்கிலேயர் சிவகங்கையின் மீது படையெடுத்தனர். அப்போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டார். தம் கணவர் மரணமடைந்தாலும் வேலுநாச்சியார் மனம் தளராமல் மைசூர் மன்னர் ஹைதர் அலி கொடுத்து உதவிய 5000 படைவிரர்களுடனும் மருது சகோதரர்களுடனும் படைக்குத் தலைமையேற்றுச் சென்று, ஆங்கிலேயருடன் போர் புரிந்தார். அப்போரில் கணவரைக் கொன்றவர்களை வென்று 1780-ல் சிவகங்கையை மீட்டார்.

சொக்கநாத நாயக்கரின் மனைவி இராணி மீனாட்சி ஆவார் “தென்னாட்டின் ஜான்சி ராணி” எனப் புகழப்பட்டவர் சுதந்திரப்போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் ஆவார். தனது 16-ஆம் அகவையில் மரணமடைந்தவர் தில்லையாடி வள்ளியம்மை ஆவார்.

39. “புளிய மரங்கள் அடர்ந்த பகுதி” – என்ற அடிப்படையில் பெயரிடப்படாத ஊர் எது?

(அ) புளியங்குடி

(ஆ) புளியஞ்சோலை

(இ) புளிப்பேரி

(ஈ) புளியம்பட்டி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) புளிப்பேரி

வயலும் வயல் சார்ந்த இடங்களுமான மருதநிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆற்றின் கரையிலிருந்த மரங்களின் பெயரையும் ஊர்ப் பெயர்களாக வழங்கி வந்தனர்.

கடம்பமரங்கள் சூழந்த பகுதி கடம்பூர் எனவும் தென்னை மரங்கள் சூழந்த பகுதி தெங்கூர் எனவும் புளியமரங்கள் சூழ்ந்த பகுதி புளியங்குடி, புளியங்குளம், புளியஞ்சோலை, புளியம்பட்டி எனவும் வழங்கப்பட்டன. ஏரிகள் சூழ்ந்த பகுதி வேப்பேரி, சீவலப்பேரி என வழங்கப்பட்டன. எனவே “புளிப்பேரி” தவறானதாகும்

40. “உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்றுகூறியவர்

(அ) திருமூலர்

(ஆ) இராமலிங்கர்

(இ) திரு.விக.

(ஈ) திருவள்ளுவர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) இராமலிங்கர்

“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவு வேண்டும்”

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்”

– இராமலிங்க அடிகளார்

41. கல்வெட்டுகளில் காணப்படும் மதிரை இன்று —————ஆக மாறியுள்ளது.

(அ) கோவை

(ஆ) புதுவை

(இ) மதுரை

(ஈ) தில்லை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) மதுரை

மருத மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்தமையால் “மருதை” என வழங்கப்பட்டு காலப்போக்கில் “மதுரை” என்றானது என்கின்றனர். கல்வெட்டுகளில் “மதிரை” என்று காணப்படுகிறது.

42. “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” என்று கூறியவர்

(அ) சேக்கிழார்

(ஆ) திருவள்ளுவர்

(இ) கம்பர்

(ஈ) ஒளவை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) ஒளவை

“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகழ்டிக்

குறுகத் தரித்த குறள்” என்று ஒளவையார் திருக்குறளைப் பாராட்டி திருவள்ளுவமாலையில் (பாடல் எண்:55) பாடியுள்ளார்

43. “அரை நிர்வாணப் பக்கிரி” என காந்தியடிகளை ஏளனம் செய்தவர்

(அ) தால்சுதாய்

(ஆ) ஸ்மர்ட்ஸ்

(இ) சர்ச்சில்

(ஈ) அபுல்காசிம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) சர்ச்சில்

காந்தியடிகள் தமிழகத் வந்தபோது, ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியதைக் கண்டார். தாமும் அன்று முதல் மேலாடை அணிவதை நிறுத்திக் கொண்டார். அரையாடையுடன் இங்கிலாந்தில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற போது, அப்போதைய இங்கிலாந்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் காந்தியடிகளை “அரை நிர்வாணப்பக்கிரி” என்று ஏளனம் செய்தார்.

44. “ஒருவருக்கொருநாட்டுக் குரிய தான

ஓட்டைச் சாண் நினைப்புடையவர் அல்லர்” – யார்?

(அ) கவிமணி

(ஆ) கண்ணதாசன்

(இ) பாரதிதாசன்

(ஈ) பாரதியார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) பாரதிதாசன்

மகாகவி

“பாரதியார் உலககவி! அகத்தில் அன்பும்

பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்

ஒரூருக் ககொருநாட்டுக்குரிய தான

ஓட்டைச் சாண் நினைப்புடையர் அல்லர்”

என்று பாரதியாரைப் புகழ்ந்து “மகாகவி” என்ற தலைப்பில் பாரதிதாசன் எழுதிய பாடலாகும்.

45. தமிழர்கள் ——— நாட்டுடன் கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

(அ) ஆஸ்திரியா

(ஆ) கனடா

(இ) போர்ச்சுக்கல்

(ஈ) சாவக நாடு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) சாவக நாடு

தமிழர்கள் சாவக நாட்டுடன் கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். மேலும் கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

46. “கீழார் வெளி” – கடல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட கட்டட இடிபாடுகள் ——— நூற்றாண்டைச் சார்ந்தவை.

(அ) கி.மு.முதல் நூற்றாண்டு

(ஆ) கி.மு.இரண்டாம் நூற்றாண்டு

(இ) கி.மு.மூன்றாம் நூற்றாண்டு

(ஈ) கி.மு.நான்காம் நூற்றாண்டு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) கி.மு.மூன்றாம் நூற்றாண்டு

1963-ம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை, பூம்புகார் அருகிலுள்ள கீழார் வெளி என்ற இடத்தில் மேற்கொண்ட கடல் அகழ்வாய்வின் போது கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டட இடிபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த ஆய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிஹாரம், வெண்கலத்தலான புத்தர் பாதம் முதலிய எச்சங்கள் கிடைத்தன.

47. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கள் மூலம் உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்டவர் யார்?

(அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

(ஆ) ஆலந்தூர் மோகனரங்கன்

(இ) ஈரோடு தமிழன்பன்

(ஈ) அப்துல் ரகுமான்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை மாணிக்கம். இவரது காலம் 1933 முதல் 1995 வரை ஆகும். தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கள் மூலம் உலகத் தமிழரிடையே தமிழுணர்வை வளர்த்தவர். இவர் பாரதிதாசனின் தலை மாணாக்கர். இவர் இயற்றிய நூல்கள் கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியர் முதலியனவாகும்.

48. பொருத்துக:

அ. தேங்காய்த் துண்டுகள் -1.நீல.பத்மநாபன்

ஆ. மண்ணின் மகன் – 2. சுந்தர ராமசாமி

இ. செங்கமலமும் ஒரு சோப்பும் – 3. சிவசங்கரி

ஈ. விழிப்பு – 4. டாக்டர்.மு.வ.

அ ஆ இ ஈ

அ. 4 1 2 3

ஆ. 2 4 3 1

இ. 3 1 4 2

ஈ. 1 3 2 4

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 4 1 2 3

49. ஓவியருக்கு, “நோக்கினார் கண்ணிடத்தே

தம் தொழில் நிறுத்துவோர்” என இலக்கணம் வகுத்தவர்

(அ) நச்சினார்க்கினியர்

(ஆ) இளம்பூரணார்

(இ) சேனாவரையர்

(ஈ) பரிமேலழகர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) நச்சினார்க்கினியர்

நச்சினார்க்கினியர் தம் உரைநூலில் ஓவியருக்கான இலக்கணமாக “நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்” என்று கூறியுள்ளார்.

50. சி.வை.தாமோதரனார் பரிதிமாற் கலைஞருக்கு வழங்கிய சிறப்புப்பட்டம் யாது?

(அ) சித்திரக்கவி

(ஆ) ஞானபோதினி

(இ) திராவிட சாஸ்திரி

(ஈ) ரூபாவதி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) திராவிட சாஸ்திரி

பரிதிமாற் கலைஞரின் தமிழ்ப்புலமையையும் கவிபாடும் திறமையையும் கண்டு யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் “திராவிட சாஸ்திரி” என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.

51. சரியான பகுதியைக் கண்டறிக:

“கேட்டான்”

(அ) கேட்டு

(ஆ) கேள்

(இ) கேடு

(ஈ) கே

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) கேள்

கேட்டான்-கேள்(ட்)+ட்+ஆன்; கேள்-பகுதி, “ள்””ட்” ஆனது விகாரம், ட்-இறந்தகால இடைநிலை, ஆன்-ஆண்பால் வினைமுற்று விகுதி.

52. அடவி மலையாறு – இச்சொல்லில் உள்ள இலக்கணக் குறிப்பு யாது?

(அ) பண்புத்தொகை

(ஆ) உவமைத்தொகை

(இ) உம்மைத்தொகை

(ஈ) வினைத்தொகை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) உம்மைத்தொகை

“அடவி மலையாறு” – உம்மைத்தொகை.

“அடவியும் மலையாறும்” என்ற தொடரில் அமைந்துள்ள “உம்” விகுதி மறைந்து வந்துள்ளதால் உம்மைத்தொகை. “அடவியும் மலையாறும்” என “உம்” விகுதி வெளிப்பட்டு வந்தால் அது எண்ணும்மை ஆகும்.

53. சரியான பொருளைக் கண்டறிக.

“பருவரல்”

(அ) குகை

(ஆ) துன்பம்

(இ) தூக்கம்

(ஈ) இன்பம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) துன்பம்

54. வழுவற்ற தொடரைத் தேர்வு செய்க:

(அ) வெற்றிலைத் தோப்புக்குச் சென்று வெற்றிலை பறித்து வா

(ஆ) ஆந்தை கத்தியது

(இ) வயலில் ஆட்டுக்குட்டி மேய்கிறது

(ஈ) பெருமழை பெய்தமையால் மரங்கள் வீழ்ந்தது

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) வயலில் ஆட்டுக்குட்டி மேய்கிறது

வெற்றிலைத் தோட்டம். ஆந்தை அலறியது. பெருமழை பெய்தமையால் மரங்கள் வீழ்ந்தன

55. “தன்னொற்று இரட்டல்” எனும் விதிப்படி புணர்ந்த சொல் எது?

(அ) கற்றாழை

(ஆ) சிற்றோடை

(இ) சேதாம்பல்

(ஈ) பொற்றாளம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) சிற்றோடை

தன்னொற்று இரட்டல்: சிற்றோடை-சிறுமை+ஓடை.

“ஈறுபோதல்” விதிப்படி “மை” விகுதி கெட்டு சிறு+ஓடை ஆனது.

“ஈற்றயல் உயிர் கெடல்” விதிப்படி சிற்+ஓடை என்றானது.

“தன்னொற்று இரட்டல்” விதிப்படி சிற்ற்+ஓடை என்றானது.

“உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி சிற்றோடை என்றானது.

56. ஆகு பெயர்களைப் பொருத்துக:

அ. கருவியாகு பெயர் – 1. கம்பரைப் படித்தேன்

ஆ. காரியவாகு பெயர் – 2. காளை வந்தான்

இ. கருத்தாவாகு பெயர் – 3. திருக்குறள் கற்கிறேன்

ஈ. உவமையாகு பெயர் – 4. வானொலி கேட்டு மகிழ்ந்தேன்

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 4 2 3 1

இ. 3 1 2 4

ஈ. 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 4 3 1 2

57. பொருத்துக:

அ. நெடுமதில் – 1. ஆறாம் வேற்றுமைத்தொகை

ஆ. வாங்குவில் – 2. வினைத்தொகை

இ. இலைவேல் – 3. பண்புத்தொகை

ஈ. மாறன் களிறு – 4. உவமைத்தொகை

அ ஆ இ ஈ

அ. 3 2 4 1

ஆ. 3 1 2 4

இ. 2 3 4 1

ஈ. 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 3 2 4 1

58. மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக:

(அ) ஆற்றுவார் பணிதல் அது சான்றோல் ஆற்றல்

(ஆ) ஆற்றுவார் அது சான்றோர் பணிதல் ஆற்றல்

(இ) ஆற்றுவார் ஆற்றல் அது சான்றோர் பணிதல்

(ஈ) ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்

59. பொன்னும் துகிரும் முத்தும் – இலக்கணக்குறிப்பு யாது?

(அ) எண்ணும்மை

(ஆ) உம்மைத்தொகை

(இ) வினைத்தொகை

(ஈ) உவமைத்தொகை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) எண்ணும்மை

”பொன்னும் துகிரும் முத்தும்” என்ற தொடரில் “உம்” விகுதி வெளிப்பட்டு வந்ததால் இஃது எண்ணும்மை ஆகும்.

60. “அந்தமான்” என்ற சொல் அந்த+மான் எனப் பிரிந்து நின்று எப்பொருளைத் தருகிறது

(அ) விலங்கு

(ஆ) நாடு

(இ) அழகு

(ஈ) உலகு

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) விலங்கு

61. “பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்” என்பதில் “பொறை” என்ற சொல் குறிப்பிடும் பண்பு

(அ) கோபம்

(ஆ) அன்பு

(இ) மகிழ்ச்சி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) பொறுமை

62. “நீண்ட வால்நிலம் புடைத்திடக்கிடந்துடல் நிமிர்ந்து” – இதில் நிமிர்ந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.

(அ) உயர்ந்து

(ஆ) குனிந்து

(இ) பறந்து

(ஈ) வளர்ந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) குனிந்து

63. பொருத்துக:

அ. பொங்குகடல் – 1. உருவகம்

ஆ. அடைந்து – 2. இடவாகுபெயர்

இ. கரகமலம் – 3. வினைத்தொகை

ஈ. தேசம் – 4. வினையெச்சம்

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 3 1 4 2

இ. 2 1 4 3

ஈ. 4 2 1 3

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 3 4 1 2

64. “தேன் போன்ற மொழி” இத்தொடரில் வரும் உவமை வகை

(அ) தொகையுவமை

(ஆ) விரியுவமை

(இ) வகையுவமை

(ஈ) அழகுவமை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) விரியுவமை

உவமை, உவமேயம் ஆகிய இரண்டையும் பொருத்துகின்ற உவம உருபு வெளிப்படையாக வருவது விரியுவமையாகும்.

எ.கா:தேன் போன்ற மொழி. “போன்ற” என்ற உவம உருபு வெளிப்பட வந்துள்ளதால் இது விரியுவமையாகும்.

65. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப் பாடியவர் யார்?

(அ) பாரதியார்

(ஆ) சுரதா

(இ) பாரதிதாசன்

(ஈ) கண்ணதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) பாரதிதாசன்

வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்தவற்றுள்

பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்

சொல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்

இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே

– பாரதிதாசன்

66. “கதம்” என்ற சொல்லின் பொருள்

(அ) சினம்

(ஆ) சீதனம்

(இ) இசை

(ஈ) அளவு

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) சினம்

67. “வதுவை” என்ற சொல்லின் பொருள்

(அ) திருமணம்

(ஆ) மறுமணம்

(இ) நறுமணம்

(ஈ) மணம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) திருமணம்

68. “கவரி வீசிய சேர மன்னன்”

(அ) சேரன் கணைக்கால் இரும்பொறை

(ஆ) பெருஞ்சேரலாதன்

(இ) சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை

(ஈ) ஆடுகோட்பாட்டு சேரலாதன்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை

தென்பாண்டி நாட்டிலுள்ள “மோசி” என்னும் ஊரில் வாழ்ந்தவர். “கீரன்” என்னும் புலவராவர். இவர் மோசிகீரனார் என அழைக்கப்பட்டார். இவரின் பாடல்கள் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை முதலிய சங்கத் தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.

ஒருமுறை இவர் சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்டு பாடிப் பரிசுகள் பெறச் சென்றார். பயணக் களைப்பில் அவர் அங்கிருந்த முரசுக்கட்டிலில் படுத்து உறங்கிவிட்டார். அதைக்கண்டு சிறிதும் கோபம் கொள்ளாது சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை புலவருக்கு கவரி வீசினார்

69. இரட்சணிய யாத்திரிகம் – என்பதன் பொருள்

(அ) இறைவனின் பயணம்

(ஆ) இறைவனை நோக்கிச் செல்லும் பயணம்

(இ) அடியார்களின் பயணம்

(ஈ) சிறிஸ்துவத்தை நோக்கிய பயணம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) இறைவனை நோக்கிச் செல்லும் பயணம்

இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள் உயிர் தன்னை காக்க வேண்டி, இறைவனை நோக்கிச் செல்லும் பயணம் என்பதாகும்.

70. பொருந்தாதது எது?

(இ) அயோத்தியா காண்டம்

(ஆ) ஹிஜ்ரத்துக்காண்டம்

(இ) பால காண்டம்

(ஈ) கிட்கிந்தா காண்டம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) ஹிஜ்ரத்துக்காண்டம்

அயோத்தியா காண்டம், பால காண்டம், கிட்கிந்தா காண்டம் ஆகிய மூன்றும் கம்பராமாயணத்தின் பெரும் பிரிவுகளாகும்.

71. “வருகைப்பருவம்” என்பது பிள்ளைத்தமிழின் எத்தனையாவது பருவம்?

(அ) முதல் பருவம்

(ஆ) ஐந்தாம் பருவம்

(இ) ஆறாவது பருவம்

(ஈ) மூன்றாம் பருவம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) ஆறாவது பருவம்

பிள்ளைத் தமிழின் பருவங்கள்:

இருபாலருக்கும் பொதுவானவை: 1.காப்பு, 2.செங்கீரை. 3.தால், 4.சப்பாணி, 5.முத்தம், 6.வருகை, 7.அம்புலி.

ஆண்பால்: 8.சிற்றில், 9.சிறுபறை, 10.சிறுதேர்.

பெண்பால்: 8.அம்மானை, 9.கழங்கு, 10.ஊசல்

72. குமரகுருபரர் எழுதாத நூல் எது?

(அ) கந்தர்கலி வெண்பா

(ஆ) குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்

(இ) மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்

(ஈ) முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்

குலோத்துங்கள் பிள்ளைத் தமிழ் என்ற நூலை இயற்றியவர் ஒட்டக்கூத்தர் ஆவார்.

73. “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” எனச் சேக்கிழாரைப் புகழ்ந்துரைத்தவர்

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) திரு.வி.க

(ஈ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

பெரியபுராணத்தை இயற்றியவர் சேக்கிழார். அவரை “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” என மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாராட்டியுள்ளார்

74. “நற்றிணையைத்” தொகுப்பித்தவர்

(அ) உக்கிரப் பெருவழுதி

(ஆ) இளம்பெருவழுதி

(இ) பன்னாடு தந்த மாறன் வழுதி

(ஈ) மிளைகிழான் நல்வேட்டனார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) பன்னாடு தந்த மாறன் வழுதி

நற்றிணை, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இந்நூலில் 275 புலவர்கள் பாடிய 400 செய்யுள்கள் உள்ளன. இந்நூலைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி ஆவார்.

75. தமிழுக்குக் “கதி” என்று பெரியோரால் போற்றப்படும் இரு நூல்கள்

(அ) திருக்குறள், நாலடியார்

(ஆ) திருக்குறள், கம்பராமாயணம்

(இ) திருக்குறள், நான்மணிக்கடிகை

(ஈ) திருக்குறள், சிலப்பதிகாரம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) திருக்குறள், கம்பராமாயணம்

“தமிழுக்குக் கதி”என்று போற்றப்படும் இரண்டு நூல்கள் கம்பராமாயணம் மற்றும் திருக்குறள் ஆகும் என்று கூறியவர் செல்வ கேசவராய முதலியார் ஆவார்.

76. தலைவி தன் தலைவனோடு கொண்ட நட்பு, நிலத்தைவிடப் பெரியது” – என்று கூறும் நூல்

(அ) நற்றிணை

(ஆ) குறுந்தொகை

(இ) கலித்தொகை

(ஈ) அகநானூறு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) குறுந்தொகை

குறுந்தொகை

“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரல்

கடுங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே”

– தேவகுலத்தார்.

பொருள்: மலைப் பகுதியிலுள்ள குறிஞ்சியின் கரிய கொம்புகளில் குறிஞ்சிப் பூக்கள் பூத்திருக்கின்றன. அப்பூக்களிலிருந்து வண்டுகள் தேனைத் திரட்டுவதற்கு இடமாகிய நாட்டை உடைய தலைவனோடு “யான் கொண்ட நட்பானது நிலத்தை விடப் பெரியது; வானத்தை விட உயர்ந்தது; கடலை விட ஆழமானது” என்று தலைவி கூறுகிறாள்.

77. கம்பரால் “பண்ணவன்” எனக் குறிப்பிடப்படுபவர் யார்?

(அ) இராமன்

(ஆ) இலக்குவன்

(இ) குகன்

(ஈ) பரதன்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) இலக்குவன்

கம்பராமாயணம்-அயோத்தியாக் காண்டம் – குகப்படலம்

“அண்ணலும் விரும்பி எம்பால் அழைத்திநீ அவனை என்றான்

பண்ணவன் வருக என்னப் பரிவினன் விரைவில் புக்கான்”

– கம்பர்.

பொருள்: இராமன் விருப்பத்துடன் “அன்னவனை என்னிடம் அழைத்து வருவாய்” என்றான்.

இலக்குவன் குகனை “வருக” என்றவுடன் குகன் விரைந்து வந்து இராமனைத் தன் கண்களால் கண்டு களித்தான்.

78. பெருமாள் திருமொழியில் உள்ள பாசுரங்களின் எண்ணிக்கை எத்தனை?

(அ) 205

(ஆ) 305

(இ) 105

(ஈ) 405

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) 105

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் குலசேகர ஆழ்வார். இவர் அருளிய பெருமாள் திருமொழி” நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதலாயிரத்தில் அமைந்துள்ளது. இந்நூலில் 105 பாசுரங்கள் உள்ளன.

79. “மதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர் வானகம் ஆள்வாரே” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

(அ) நற்றிணை

(ஆ) அகநானூறு

(இ) புறநானூறு

(ஈ) நந்திக்கலம்பகம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) நந்திக்கலம்பகம்

நந்திக்கலம்பகம்

“நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை யுடை நந்தி

மதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர் வானகம் ஆள்வாரே”

பொருள்: சல்வத்தைத் தருகின்ற குடையும், நிலமகள் உரிமையும் ஆகியவற்றை உடைய நந்தி மன்னனே! அறிவில்லாதவரான அரசர், உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை வணங்காதவராகித் தேவர் உலகத்தை ஆள்பவராவார்.

கருத்து: “நந்தி மன்னனின் காலடிகளை வணங்காத அரசர்கள் வானுலகத்திற்குச் சென்றுவிடுவர்” என்பதாகும்.

80. கம்பராமாயணம் – அயோத்தியா காண்டத்திலுள்ள படலங்கள்

(அ) 14

(ஆ) 10

(இ) 11

(ஈ) 13

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) 13

கம்பராமாயணம்:

பாலகாண்டம்-24 படலங்கள்.

அயோத்தியா காண்டம்-13 படலங்கள்.

ஆரண்ய காண்டம்-13 படலங்கள்.

கிட்கிந்தா காண்டம்-17 படலங்கள்.

சுந்தர காண்டம்-14 படலங்கள்.

யுத்த காண்டம்-42 படலங்கள்.

81. இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்

(அ) அகத்தியர்

(ஆ) நக்கீரர்

(இ) தொல்காப்பியம்

(ஈ) பூதஞ்சேந்தனார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) பூதஞ்சேந்தனார்

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவார். இவர் இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர். பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப் படை மற்றும் நெடுநல்வாடை ஆகியவற்றை இயற்றியவர். சங்கத்தொகை நூல்களுள் இவர் இயற்றியவை அகநானூறு-17 பாடல்கள், குறுந்தொகை-7 பாடல்கள், நற்றிணை-7 பாடல்கள். புறநானூறு-3 பாடல்கள்

82. “செம்புலப் பெயல் நீர் போல” இவ்வரி இடம்பெறும் நூல்

(அ) பரிபாடல்

(ஆ) கலித்தொகை

(இ) குறுந்தொகை

(ஈ) அகநானூறு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) குறுந்தொகை

பண்டைத் தமிழரின் மண்ணியல் அறிவு: பண்டைத் தமிழர் நிறத்தின் அடிப்படையில் “செம்மண் நிலம்” என்றும் சுவையின் அடிப்படையில் “உவர்நிலம்” என்றும், தன்மையின் அடிப்படையில் “களர்நிலம்” என்றும் வகைப்படுத்தினர்.

எ.கா: செம்மண்நிலம் “செம்புலப் பெயல் நீர் போல்”- குறுந்தொகை.

உவர்நிலம்: “உறுமிடத் துதவா உவர் நிலம்”-புறநானூறு.

களர்நிலம்-“பயவாக் களரனையர் கல்லாதவர்”-திருக்குறள்.

83. சொல்லையும் பொருளையும் பொருத்துக:

அ. வன்மை – 1.கொடை

ஆ. வண்மை – 2. வலிமை

இ. தண்மை – 3. இடப்பெயர்

ஈ. தன்மை – 4. குளிர்ச்சி

அ ஆ இ ஈ

அ. 2 1 4 3

ஆ. 2 1 3 4

இ. 2 3 1 4

ஈ. 3 2 1 4

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 2 1 4 3

84. பழியில்லா மன்னன், யார்/எது போற்றும்படி வாழ்வான்?

(அ) மக்கள்

(ஆ) அமைச்சர்

(இ) பிறநாட்டரசர்

(ஈ) நூல்கள்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) நூல்கள்

ஏலாதி

வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு

நுணங்கிநூல் நோக்கி நுழையா – இணங்கிய

பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்

நூல்நோக்கி வாழ்வான் நுனித்து”

– கணிதோவியார்.

பொருள்: பிறர்க்குப் பணிந்தும் நல்வழியில் நடந்தும் மாண்புடைய சான்றோர் அறிவுரைகளைப் பின்பற்றியும் நுண்ணறிவு நூல்களை ஆராய்ந்தும், அவை நவிலும் வண்ணம் வாழும் பழியிலா மன்னன் நூல்களெல்லாம் போற்றும்படி வாழ்வான்.

85. மாணிக்கவாசகர் அருளியவை

(அ) தேவாரமும் திருவாசகமும்

(ஆ) தேவாரமும் திருமந்திரமும்

(இ) திருவாசகமும் திருக்கோவையாரும்

(ஈ) திருவாசகமும் திருமந்திரமும்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) திருவாசகமும் திருக்கோவையாரும்

மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் திருவாசகம், திருக்கோவையார் மற்றும் திருவெம்பாவை ஆகியனவாகும். இவற்றில் திருவாசகமும் திருக்கோவையாரும் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையில் அமைந்துள்ளன.

86. பொருத்தமில்லாத தொடரைக் கண்டறிக:

பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த தமிழர்கள்

(அ) பொருள் தேடுவது ஒன்றையே குறிக்கோளாய் கொண்டிருந்தனர்

(ஆ) அறத்தின் வழியே வாணிகம் செய்தனர்

(இ) கொள்வது மிகை கொள்ளாதவர்கள்

(ஈ) கொடுப்பதும் குறைபடாது கொடுத்தவர்கள்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) பொருள் தேடுவது ஒன்றையே குறிக்கோளாய் கொண்டிருந்தனர்

பழந்தமிழர் அறத்தின் வழியே வணிகம் செய்தார்கள். பொருள் தேடுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ளாதவர்கள். அவர்கள் கொள்வதும் மிகைக் கொளாது, கொடுப்பதும் குறைபடாது வணிகம் செய்தார்கள்.

87. கண்ணதாசனின் படைப்புகளில் “சாகித்ய அகாடமி” பரிசு பெற்ற புதினம் எது?

(அ) வேலங்குடித் திருவிழா

(ஆ) ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி

(இ) சேரமான் காதலி

(ஈ) இராச தண்டனை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) சேரமான் காதலி

1980-ல் “சேரமான் காதலி” என்ற கண்ணதாசனின் புதினத்திற்கு சாகித்ய அகாடமி பரிசு வழங்கப்பட்டது

88. “சாதி களையப்பட வேண்டிய களை” – எனக் கருதியவர்

(அ) பெரியார்

(ஆ) அம்பேத்கர்

(இ) திருவள்ளுவர்

(ஈ) காமராசர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) அம்பேத்கர்

“சாதி என்பது எல்லாம் வல்ல ஒருவன் கட்டளையால் தோன்றியதன்று. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு ஆட்பட்ட வேரூன்றிவிட்ட வளர்ச்சியாகும். “சாதி களையப்பட வேண்டிய களை” என்று அம்பேத்கர் கருதினார்

89. சரியான விடையைத் தேர்வு செய்க:

அ. நாவல் பழம் – 1.மேத்தா

ஆ. நந்தவன நாட்கள் – 2.நா.காமராசன்

இ. நிலவுப் பூ – 3. ஈரோடு தமிழன்பன்

ஈ. ஊமை வெயில் – 4. சிற்பி

அ ஆ இ ஈ

அ. 2 1 4 3

ஆ. 2 3 4 1

இ. 1 3 2 4

ஈ. 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 2 1 4 3

90. “தமிழ் மொழியின் உபநிடதம்” என சிறப்பிக்கப் பெறும் நூல்

(அ) திருக்குறள்

(ஆ) தாயாமானவர் பாடல்கள் திரட்டு

(இ) கவிமணி பாடல்கள்

(ஈ) திருமந்திரம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) தாயாமானவர் பாடல்கள் திரட்டு

தாயுமானவரின் பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்ட தொகை நூல் “தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு” என்று அழைக்கப்படுகிறது. இந்நூலில் 1452 பாடல்கள் உள்ளன. இறைநெறியை வலியுறுத்தும் இந்நூல் “தமிழ்மொழியின் உபநிடதம்” எனப் போற்றப்படுகிறது.

91. பின்வருவனவற்றுள் “கடலை”க் குறிக்காத சொல்

(அ) ஆர்கலி

(ஆ) முந்நீர்

(இ) பௌவம்

(ஈ) திமில்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) திமில்

கடலைக் குறிக்கும் சொற்கள்: ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌம், பரவை, புணரி.

கலத்தைக் குறிக்கும் சொற்கள்: கப்பல், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புனை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம்.

92. மு.மேத்தா எழுதாத நூல் எது?

(அ) கண்ணீர் பூக்கள்

(ஆ) நடந்த நாடகம்

(இ) ஊர்வலம்

(ஈ) தண்ணீர் தேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) தண்ணீர் தேசம்

“தண்ணீர் தேசம்” என்பது கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை நாவலாகும்.

93. 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் —— என்னுமிடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

(அ) திருவண்ணாமலை

(ஆ) தருமபுரி

(இ) ஆதிச்சநல்லூர்

(ஈ) கீழார் வெளி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) ஆதிச்சநல்லூர்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

94. கிழிசல்-சிறுகதை ஆசிரியர்

(அ) ஜெயகாந்தன்

(ஆ) ராஜம் கிருஷ்ணன்

(இ) வண்ணதாசன்

(ஈ) நாஞ்சில் நாடன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) நாஞ்சில் நாடன்

95. “நோய்க்கு மருந்து இலக்கியம்” எனக் கூறியவர்

(அ) உ. வே.சாமிநாதர்

(ஆ) திரு.வி.கல்யாணசுந்தரனார்

(இ) மீனாட்சி சுந்தரனார்

(ஈ) பரிதிமாற் கலைஞர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) மீனாட்சி சுந்தரனார்

96. பெற்றோரைக் குறிக்கும் “அம்மை, அப்பன்” என்னும் சொற்கள் எப்பகுதியைச் சார்ந்தது?

(அ) குட்ட நாடு

(ஆ) பன்றி நாடு

(இ) நாஞ்சில் நாடு

(ஈ) அருவா நாடு

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) நாஞ்சில் நாடு

97. “திரைக்கவித் திலகம்” என்றழைக்கப்படுபவர் யார்?

(அ) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

(ஆ) மருதகாசி

(இ) உடுமலை நாராயணகவி

(ஈ) சுரதா

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) மருதகாசி

98. “வேங்கடமகாலிங்கம்” என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் யார்?

(அ) ஞானக்கூத்தன்

(ஆ) கல்யாண்ஜி

(இ) பசுவய்யா

(ஈ) பிச்சமூர்த்தி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) பிச்சமூர்த்தி

இயற்பெயர் புனைப்பெயர்

ந.வேங்கடமகாலிங்கம் பிச்சமூர்த்தி

அரங்கநாதன் ஞானக்கூத்தன்

சி.கல்யாணசுந்தரம் கல்யாண்ஜி, வண்ணதாசன்

சுந்தர ராமசாமி பசுவய்யா

99. மகாவித்துவான் நவநீதக்கிருட்டிண பாரதியாரின் மாணவர்

(அ) பாரதிதாசன்

(ஆ) சச்சிதானந்தன்

(இ) தமிழன்பன்

(ஈ) காமராசன்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) சச்சிதானந்தன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பருத்தித் துறையைச் சேர்ந்தவர் கவிஞர் க.சச்சிதானந்தன். இவருடைய ஆசிரியரின் பெயர் மகாவித்துவான் நவநீதக் கிருட்டிண பாரதியார்

100. அம்பேத்கர் மக்கள் கழகத்தைத் தோற்றுவித்த ஆண்டு

(அ) 1948

(ஆ) 1945

(இ) 1946

(ஈ) 1940

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) 1946

அம்பேத்கர் 1946-ல் மக்கள் கல்விக்கழகத்தைத் தோற்றுவித்தார். மும்பையில் இவரது அரிய முயற்சியால் உருவான சித்தார்த்தா உயர் கல்வி நிலையத்தில் இன்றைய அறிவு வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.

Exit mobile version