Tnpsc Current Affairs in Tamil – 24th January 2024

1. 19ஆவது அணிசேரா இயக்க உச்சிமாநாடு நடைபெற்ற இடம் எது?

அ. பிரேசில்

ஆ. தில்லி

இ. கம்பாலா

ஈ. கானா

2. எந்த அமைச்சகத்தின் கீழ், காவல்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணியகம் செயல்படுகிறது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. நிதி அமைச்சகம்

ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

3. பின்வருவனவற்றில் ஆரவல்லி மலைத்தொடரின் மிகவுயரமான சிகரம் எது?

அ. குருசிகார்

ஆ. ஜரோல்

இ. அச்சல்கர்

ஈ. கோகுண்டா

4. அரிச்சல்முனை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஒடிஸா

இ. சத்தீஸ்கர்

ஈ. பஞ்சாப்

5. இந்தியா மற்றும் கியூபா இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் என்ன?

அ. பயிர் மேம்பாட்டிற்கான விவசாய கூட்டிணைவு

ஆ. பொதுவான டிஜிட்டல் உட்கட்டமைப்பு

இ. பரஸ்பர புரிதலுக்கான கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சிகள்

ஈ. காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதில் கூட்டு முயற்சிகள்

6. கேரளத்தின் கூக்கனத்தில் வாழும் எந்தச் சமூகத்தினர், ‘மாதிகா’ மொழியைப் பேசுகின்றனர்?

அ. சக்கலியர்

ஆ. கோரகர்

இ. குரும்பர்

ஈ. செஞ்சு

7. பாலைவனத்திருவிழா என அழைக்கப்படும், ‘மரு மகோத்சவம்’ கொண்டாடப்படுகிற இடம் எது?

அ. ஜெய்ப்பூர்

ஆ. ஜெய்சால்மர்

இ. கட்ச்

ஈ. பிகானேர்

8. 2024 – ஆடவர் ஒற்றையர் இந்திய ஓபன் பட்டத்தை வென்ற வீரர் யார்?

அ. ஷி யு கி

ஆ. லீ செயுக் யியூ

இ. சிராக் ஷெட்டி

ஈ. சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி

9. நலவாழ்வில், பெரிய பன்-முகட்டு மாதிரிகளின் (Large Multi-Modal Models) நெறிமுறை அடிப்படையிலான பயன்பாடு குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்ட அமைப்பு எது?

அ. WHO

ஆ. UNICEF

இ. UNESCO

ஈ. உலகளாவிய நலவாழ்வுக் குழுமம்

10. அயோத்தி இராமர் திருக்கோவிலின் தலைமை கட்டடக் கலைஞர் யார்?

அ. பிரமுக் சுவாமி மகாரா

ஆ. அருண் யோகிராஜ்

இ. சுபாஷ் பாய்ட்

ஈ. சந்திரகாந்த் சோம்புரா

11. ‘கோலே மேளா’ கொண்டாடப்படுகிற மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?

அ. ஜம்மு & காஷ்மீர்

ஆ ஹரியானா

இ. ஹிமாச்சல பிரதேசம்

ஈ. பஞ்சாப்

12. இந்தியாவின் எந்த நகரத்தில் வில்லிங்டன் தீவு அமைந்துள்ளது?

அ. பம்பாய்

ஆ. கொச்சி

இ. கட்ச்

ஈ. சென்னை

13. NASAஇன், ‘இன்ஜெஞூட்டி’ என்ற செவ்வாய்க்கோளுக்கான ஹெலிகாப்டரின் முதன்மை நோக்கம் என்ன?

அ. செவ்வாய்க்கோளில் புவியியல் ஆய்வுகளை நடத்துதல்

ஆ. செவ்வாய்க்கோளில் பறப்புச் சோதனைகளை மேற்கொள்வது

இ. பகுப்பாய்விற்காக மண் மாதிரிகளைச் சேகரித்தல்

ஈ. செவ்வாய்க்கோளில் பழங்கால வாழ்வின் அடையாளங்களைத் தேடுவது

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வாங்கல் இரயில் நிலையம் மூடல்.

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம்-கரூர் இடையிலான வழித்தடத்தில் மோகனூர்-கரூர் இடையில் உள்ள வாங்கல் இரயில் நிலையம் ஜன.25 முதல் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் இடையே போதிய வரவேற்பில்லாமை இதற்குக் காராணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. குனோ தேசியப்பூங்காவில் பிறந்த மூன்று சிவிங்கிப்புலிக் குட்டிகள்.

மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசியப்பூங்காவில் பராமரிக்கப்படும், ‘ஜுவாலா’ என்னும் பெண் சிவிங்கிப்புலி 3 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்தப்பூங்காவில் உள்ள மற்றொரு பெண் சிவிங்கிப்புலியான ‘ஆஷா’, அண்மையில் 3 மூன்று குட்டிகளை ஈன்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப்புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் பிரதமரின் லட்சியத்திட்டத்தின்கீழ், நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப்புலிகள் (5 பெண், 3 ஆண்) கடந்த 2022 செப்டம்பர் மாதமும், தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப்புலிகள் (7 ஆண், 5 பெண்) கடந்த ஆண்டு பிப்ரவரியிலும் கொண்டுவரப்பட்டு, குனோ தேசியப்பூங்காவில் விடப்பட்டன.

3. ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் இந்திய தந்தையின் கதை, ‘டூ கில் எ டைகர்’.

நடப்பாண்டு ஆஸ்கர் விருதின் சிறந்த ஆவணப்பட பிரிவுக்கான பரிந்துரைப்பட்டியலில், இந்திய கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மகளுக்காக தந்தையின் நீதிப்போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட, ‘டூ கில் எ டைகர்’ ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு (2023) சிறந்த ஆவணப்பட பிரிவில், தமிழ்நாட்டின் முதுமலையைச் சேர்ந்த பொம்மன்-பெள்ளி யானைக்காப்பாளர் தம்பதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட, ‘தி எலிஃபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆஸ்கர் விருதுவென்றது.

ஓபன்ஹெய்மர் 13 பிரிவுகளில் தேர்வு:

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், ‘அணுகுண்டுகளின் தந்தை’ என்றழைக்கப்படும் ஜெ இராபர்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றுப்படமான, ‘ஓபன்ஹெய்மர்’, சிறந்த படம், சிறந்த இயக்குநர் உட்பட 13 பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரைப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

தமிழ்நாட்டில் சூரியவொளி மூலம் 7372 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

4. 30 வயதைக்கடந்த 5.1% பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அறிகுறி!

தமிழ்நாட்டின் நான்கு (ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி) மாவட்டங்களில் 30 வயதைக்கடந்த பெண்களுக்கு பொது சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 5.1 சதவீதம் பேருக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

5. 300 திருநங்கைகளுக்கு திறன் பயிற்சி திட்டம் தொடக்கம்.

சென்னையில் 300 திருநங்கைகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டு திறன்பயிற்சி திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தொடங்கியது. சகோதரன் அமைப்பு மற்றும் CGI அமைப்பு சார்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் திருநங்கைகளுக்கு தகவல்-தொழில்நுட்பம், கணினிசார் திறன் பயிற்சிகள், தொழில்முனைவதற்கான வழிகாட்டுதல்கள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.

6. மூன்று தமிழறிஞர்களுக்கு சிலை – மணிமண்டபம்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

‘தமிழ் அகராதியின் தந்தை’ எனப்போற்றப்படும் வீரமாமுனிவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் `1 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், திருக்குறளுக்கு உரை, பாடல்கள், கவிதைகள் என எழுதி தமிழர்களை வீறுகொண்டு எழச்செய்த நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் நினைவாக நாமக்கல் நகரிலேயே `20 இலட்சம் மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உலகந்தழுவி நேசம்பாராட்டிய புலவர் கணியன் பூங்குன்றனாருக்கு, சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டியில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய இம்மூன்றையும் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டுதல்: சுதந்திரப் போராட்டத்தில் தீரத்துடன் ஈடுபட்ட, ‘வீரத்தாய்’ குயிலிக்கு சிவகங்கை மாவட்டம் இராகினிப்பட்டியில் சிலையும், சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலத்துக்கு சிவகங்கை நகரம்பட்டியில் சிலையும், மற்றொரு சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடிக்கு தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் கிராமத்தில் சிலையும் அமைக்கப்படவுள்ளது. இத்துடன், அண்ணல் காந்தியடிகள், பொதுவுடைமை சிந்தனையாளர் ஜீவா ஆகியோர் சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில் சந்தித்துப்பேசினர். அந்தச்சந்திப்பின் நினைவாக, `3 கோடியில் அரங்கம் அமைக்கப்படவுள்ளது. இவற்றுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்தே காணொலி வழியாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

7. பிகார் மாநில முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்குருக்கு இந்திய மாமணி (பாரத இரத்னா).

மறைந்த பிகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் பொதுவுடைமைவாத தலைவருமான கர்பூரி தாக்குருக்கு பாரத இரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக குடியரசுத்தலைவர் மாளிகை அறிவித்தது.

காங்கிரஸ் அல்லாத முதல் பொதுவுடைமைவாத தலைவராக அறியப்படுபவரும் மக்கள் தலைவர் (ஜனநாயக்) எனப் போற்றப்படுபவருமான கர்பூரி தாக்குர் 1924 ஜன.24இல் பிறந்தார். 1942 முதல் 1945 வரை நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவர் சிறையிலடைக்கப்பட்டார். 1970 டிசம்பர் முதல் 1971 ஜூன் வரையிலும் 1977 டிசம்பர் முதல் 1979 ஏப்ரல் வரையிலும் பிகார் மாநில முதலமைச்சராகப் பதவி வகித்த இவர், பிகார் மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட முங்கேரி லால் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தினார். 1988 பிப்.17ஆம் தேதி கர்பூரி தாக்குர் காலமானார்.

Exit mobile version