Tnpsc Current Affairs in Tamil – 1st & 2nd January 2024

1. மனித வரலாற்றிலேயே முதன்முறையாக பூமியின் மேலோட்டை ஊடுருவி கவசத்தை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சீனாவின் அதிநவீன பெருங்கடல் துளையிடும் கப்பலின் பெயர் என்ன?

அ. Mengxiang

ஆ. Tianqi

இ. Shuijing

ஈ. Yueliang

2. மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் (CISF) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் யார்?

அ. சுப்ரா சிங்

ஆ. நினா சிங்

இ. பினிதா தாக்கூர்

ஈ. ரோலி சிங்

3. அண்மையில் அறிவிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரிகளின் தோள்கச்சையில் அணியும் சின்னங்களுக்கு ஈர்ப்பாக அமைந்தவர் யார்?

அ. மகாராணா பிரதாப்

ஆ. சிவாஜி

இ. மகாராஜா ரஞ்சித் சிங்

ஈ. சந்திரகுப்த மௌரியா

4. மத்திய இளையோர் நலத்துறை மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால், மகாராஷ்டிராவில் உள்ள எந்த நகரம், 2024 – தேசிய இளையோர் விழா நடத்தும் இடமாக தேர்வுசெய்யப்பட்டுள்ளது?

அ. நாக்பூர்

ஆ. மும்பை

இ நாசிக்

ஈ. புனே

5. சர்வதேச ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற டேவிட் வார்னர் சார்ந்த நாடு எது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. நியூசிலாந்து

இ. இங்கிலாந்து

ஈ. தென்னாப்பிரிக்கா

6. அண்மையில், ‘WESAT’ எனப்படும் நானோ செயற்கைக்கோளை அறிமுகப்படுத்தி செய்திகளில் இடம்பிடித்த லால் பகதூர் சாஸ்திரி பெண்களுக்கான தொழில்நுட்ப நிறுவனம் (LBSITW) அமைந்துள்ள நகரம் எது?

அ. பெங்களூரு

ஆ. புனே

இ. திருவனந்தபுரம்

ஈ. மங்களூரு

7. மேற்கு வங்காள மாநிலத்தின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்ட, “பங்களார் மாட்டி பங்களா ஜல்” பாடலை இயற்றியவர் யார்?

அ. இரவீந்திரநாத் தாகூர்

ஆ. நஸ்ருல் இஸ்லாம்

இ. நவகோபால் மித்ரா

ஈ. சரோஜினி நாயுடு

8. பூமியில் காணப்படும் வழக்கமான பகல்-இரவு சுழற்சியுடன் ஒப்பிடுகையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் அனுபவிக்கும் பகல் நேரம் மட்டும் எவ்வளவு?

அ. 12 மணி நேரம்

ஆ. 45 நிமிடங்கள்

இ. 1 மணி நேரம்

ஈ. 3 மணி நேரம்

9. 2024 ஜனவரி.01, முதல் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) நிர்ணயித்த UPI பரிவர்த்தனைகளுக்கான தினசரி கட்டண வரம்பு எவ்வளவு?

அ. ரூ. 10,000

ஆ. ரூ. 50,000

இ. ரூ. 1 இலட்சம்

ஈ. ரூ. 5 இலட்சம்

10. அண்மையில் அரியணையை துறப்பதாக அறிவித்த 2ஆம் மார்கிரேத், கீழ்க்காணும் எந்த நாட்டின் அரசியாவார்?

அ. சுவீடன்

ஆ. நார்வே

இ. டென்மார்க்

ஈ. நெதர்லாந்து

11. அண்மையில் பெயர்மாற்றம் செய்யப்பட்ட மா மணிகேஸ்வரி பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மேற்கு வங்காளம்

இ. ஒடிஸா

ஈ. கர்நாடகா

12. ISROஆல் அண்மையில் ஏவப்பட்ட, XPoSat (X-ரே போலரிமீட்டர் செயற்கைக்கோள்), கீழ்காணும் எவற்றை முதன்மையாக ஆய்வுசெய்யும்?

அ. புறக்கோள்கள்

ஆ. நியூட்ரான் விண்மீன்கள் மற்றும் கருந்துளைகள்

இ. தொலைதூர விண்மீன்கள் மற்றும் சூரிய குடும்பம்

ஈ. சிறுகோள்கள்

13. அண்மைச் செய்திகளின் இடம்பெற்ற இந்தியாவின் மிகநீளமான கடல் பாலம், கீழ்காணும் எந்த இரு இடங்களை இணைக்கின்றது?

அ. பாந்த்ரா மற்றும் வோர்லி

ஆ. செவ்ரி மற்றும் சிர்லே

இ. தானே மற்றும் விரார்

ஈ. வல்லார்பாதம் மற்றும் கொச்சி

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 16ஆவது நிதி ஆணையத் தலைவராக டாக்டர். அரவிந்த் பனகாரியா நியமனம்.

16ஆவது நிதி ஆணையத்தை இந்திய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக டாக்டர் அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த ஆணையம் அடிக்கடி ஏற்படும் வெள்ளம், வறட்சிபோன்ற பேரிடர் மேலாண்மைக்கான நிதி ஒதுக்கீடுகளை மறுஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள Dr அரவிந்த் பனகாரியா இந்திய-அமெரிக்க பொருளாதார நிபுணர். இவர் மத்திய அரசின் NITI ஆயோக் துணைத்தலைவராக 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர்.

இந்திய அரசியல் சாசனத்தின் 280 (1) பிரிவில் கூறப்பட்டபடி மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே வருவாயை பகிர்ந்தளிக்க பரிந்துரை அளிப்பது தொடர்பாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய அரசு நிதி ஆணையத்தை அமைக்கிறது. கடைசியாக அமைக்கப்பட்ட 15ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கையின்கீழ் தற்போது மத்திய, மாநில அரசுகளுக்கிடையே வரிப்பகிர்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நடப்பு 15ஆவது ஆணையத்தின் காலம் வரும் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி, 16ஆவது நிதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டா் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு மத்திய, மாநில அரசுகள் துறைகளை நேரில் சந்தித்து ஆய்வுகளை மேற்கொண்டு தனது அறிக்கையை வரும் 2025 அக்.31-ஆம் தேதிக்குள் அளிக்கவும் இந்த ஆணையத்திற்கான விதிமுறை குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16ஆவது நிதி ஆணையம் பரிந்துரைகளை வழங்கவேண்டிய குறிப்பிடத்தக்க அம்சங்கள் வருமாறு:

அரசியல் சாசனத்தில் (அத்தியாயம்-1, பகுதி 12இன்கீழ்) பிரிக்கப்பட வேண்டிய வரிகளின் நிகர வருவாயை மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே பகிர்ந்தளிக்க நிதி ஆணையம் பரிந்துரை அளிக்க வேண்டும்.

குறிப்பாக 16ஆவது நிதி ஆணையம், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட நிதி தொடர்பாக, பேரிடர் மேலாண்மைக்காக மத்திய, மாநில அரசுகள் நிதியளிப்பதற்கான தற்போதைய ஏற்பாடுகளை மறுஆய்வுசெய்து, அவற்றில் பொருத்தமான பரிந்துரைகள் வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் 2026-27 முதல் 2030-31 நிதியாண்டிற்கானது.

கடந்த 15ஆவது நிதி ஆணையத்தின் தலைவராக NK சிங் இருந்தார். அவரது தலைமையிலான ஆணையம் மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 41 சதவீதம் வழங்க பரிந்துரைத்தது. கூடுதலாக புதிதாக அமைக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு சதவீதம் தனியாக ஒதுக்கப்பட்டது.

2. தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா: 2023இல் இந்தியாவின் சாதனைகள்

மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. உலக அளவில் 5ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்தது. இந்தியாவின் தலைமையில் ஜி-20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சந்திரயான்-3 திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ‘நாட்டு நாட்டு’ பாடல், ‘தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருதுகள் கிடைக்கப்பெற்றன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் 107 பதக்கங்களும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்களும் வென்றனர். 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான T20 உலகக்கோப்பையில் மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றி உத்வேகமளிக்கும் வகையில் இருந்தது.

புத்தாக்கக் குறியீட்டில் முன்னேற்றம்: ‘உலக புத்தாக்கக் குறியீடு’ தரவரிசையில் கடந்த 2015ஆம் ஆண்டில் 81ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது 40ஆவது இடத்தை எட்டியிருக்கிறது. இந்தியாவின் முயற்சியால், சர்வதேச சிறுதானிய ஆண்டாக 2023ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

3. ’XPoSat’ செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது PSLV C58.

விண்வெளி ஆய்வுசெயற்கைக்கோளுடன் PSLV C58 ஏவுகலம் ஆந்திர பிரதேச மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விண்வெளியிலுள்ள கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வுசெய்வதற்காக ISRO சார்பில் XPoSat (X-ரே போலாரிமீட்டர்) என்னும் அதிநவீன செயற்கைக்கோளை ISRO வடிவமைத்துள்ளது.

அந்தச் செயற்கைக்கோள் மொத்தம் 469 கிகி எடைகொண்டது. 5 ஆண்டுகள் ஆயுட்காலம்கொண்ட XPoSat, பூமியில் இருந்து சுமார் 650 கிமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. இதற்காக ‘XSPECT’ (எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோகிராபி), ‘POLIX’ (எக்ஸ்ரே போலாரிமீட்டர்) ஆகிய 2 சாதனங்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. இவை விண்வெளியில் வியாபித்துள்ள ஊடுகதிர்களின் துருவ அளவு மற்றும் கோணத்தை அளவிடுதல், நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருந்துளை வாயுக்களின் திரள் (நெபுலா) உள்பட பல்வேறு அம்சங்களை ஆராயும்.

ஏற்கெனவே விண்வெளியில் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆராய்வதற்காக ISRO அனுப்பிய ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளின் தொடர்ச்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

4. எண்ம சாதனங்களின் பாதுகாப்புக்கு, ‘சைபர் ஸ்வச்சதா கேந்திரா’

‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பின் ஒருபகுதியாக பொதுமக்களுடைய எண்ம (digital) சாதனங்களின் இணைய பாதுகாப்புக்கு, ‘சைபர் ஸ்வச்சதா கேந்திரா’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த வலைதளத்தை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இந்திய கணினி அவசரநிலை உதவிக்குழு (CERT-in) அமைப்பு நிர்வகிக்கிறது. இணையத்தில் மனித செயல்பாடுகளைப் பின்பற்றி, அதேபோன்று தானியங்கி பணிகளை கணினி உள்ளிட்ட எண்ம சாதனங்களில் மேற்கொள்வதற்கு நிரல்கள் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் அமைப்பு ‘bot-இயலி’ எனப்படுகிறது. இணையவெளியில் ‘இயலி’ அபாயத்தைக் கண்டறிந்து தடுக்கும்வகையில், அதற்கெதிரான பாதுகாப்பு அமைப்புகளை பயனர்களுக்கு அறிவித்து, பாதுகாப்பான இந்திய சைபர் தளத்தை உருவாக்க இந்த வலைதளம் உறுதிப்பூண்டுள்ளது.

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நேர்மையான இந்த இலவச இயலி-நீக்க கருவிகளை பதிவிறக்கம்செய்து, நமது கணினி/கைப்பேசிகளை அவ்வப்போது பரிசோதித்து, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

Exit mobile version