General Tamil Model Question Paper 19

General Tamil Model Question Paper 19

General Tamil Model Question Paper 19: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில் உறங்கிய போது கவரி வீசிய மன்னன்

(அ) சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை

(ஆ) பாண்டியன் நெடுஞ்செழியன்

(இ) கோப்பெருஞ்சோழன்

(ஈ) முதலாம் குலோத்துங்கன்

விடை மற்றும் விளக்கம்

(அ) சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை

விளக்கம்:

மோசிகீரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரைச் சேர்ந்தவர். “கீரன்” என்பது இவரது குடிப்பெயராகும். இவருடைய பாடல்கள் அகநானூற்றில் ஒன்றும், நற்றிணையில் ஒன்றும், குறுந்தொகையில் மூன்றும் புறநானூற்றில் நான்கும் இடம் பெற்றுள்ளன.

ஒரு முறை இவர் உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் படுத்து உறங்கிவிட்டார். முரசுக் கட்டிலில் அமர்வதும் படுப்பதும் மரணத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்ட அக்காலத்தில் அம்முரசுக்கட்டிலுக்கு உரிமையுடைய “சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை’ என்ற மன்னன் புலவர் மீதும் கொண்ட பற்றினால் அவருக்கு கவரி வீசினான்.

2. பொருத்துக:

அ. கவுந்தியடிகள் – 1. ஆயர்குல மூதாட்டி

ஆ. மாதரி – 2. மாநாய்கனின் மகள்

இ. மாதவி – 3. சமணத்துறவி

ஈ. கண்ணகி – 4. ஆடலரசி

அ ஆ இ ஈ

(அ) 3 1 4 2

(ஆ) 2 4 1 3

(இ) 3 4 2 1

(ஈ) 1 3 2 4

விடை மற்றும் விளக்கம்

(அ) 3 1 4 2

3. கடிகை என்பதன் பொருள் யாது?

(அ) அணிகலன்

(ஆ) கடித்தல்

(இ) கடுகு

(ஈ) காரம்

விடை மற்றும் விளக்கம்

(அ) அணிகலன்

விளக்கம்:

கடிகை-துண்டு, ஆபரணம், தோள்வளை ஆகிய பொருள்களைக் குறிக்கும்.

4. “கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா” எனக் கூறும் நூல்

(அ) நான்மணிக்கடிகை

(ஆ) பழமொழி நானூறு

(இ) ஏலாதி

(ஈ) திரிகடுகம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) பழமொழி நானூறு

விளக்கம்:

பழமொழி நானூறு

ஆற்றவும் கற்றார் அறிவுடையார், அஃதுடையார்

நாற்றிசையும் சொல்லாத நாடில்லை – அந்நாடு

வேற்றுநா டாகா; தமவேயாம் ஆயினால்

“ஆற்றுணா வேண்டுவ தில்”

– 40வது பாடல்.

ஆசிரியர்-முன்றுறை அரையனார்.

பொருள்: கற்கவேண்டிய நூல்களை முழுமையாகக் கற்றவர் அறிவுடையோர் ஆவர். அவருடைய புகழ் நான்கு திசைகளிலும் பரவியிருக்கும். அவருடைய புகழ் பரவாத நாடு ஏதும் இல்லை. வேற்று நாடுகளும் அவரின் நாடுகளேயாகும். எனவே அந்நாடுகளுக்குச் செல்லும்போது வழி நடை உணவை அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

ஆற்றுணா-வழிநடை உணவு. இக்காலத்தில் “கட்டுச்சோறு” என்றும் குறிப்பிடுவர்.

5. “வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார்

உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து”

– எனத் திருக்குறளை பாரட்டியவர்.

(அ) பரிமேலழகர்

(ஆ) கபிலர்

(இ) மாங்குடி மருதனார்

(ஈ) பரணர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) பரணர்

விளக்கம்:

திருவள்ளுவமாலை.

மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்

ஞால முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்

வள்ளுவரும் தம் குறள் வெண் பாவடியால் வையத்தார்

உள்ளுவதெல் லாமளந்தார் ஓர்ந்து

– பரணர்.

பொருள்:இப்பாடலில் வள்ளுவப் பெருமானைக் காக்கும் கடவுளாகிய திருமால் எனக் கூறுகிறார் பரணர். திருமால், வாமன அவதாரத்தில் குறனாய்த் (குள்ளனாய்) தோன்றி தன் இரண்டு அடிகளால் உலகத்தை அளந்தார். அதுபோல வள்ளுவரும் தன்னுடைய மெய்யறிவினால் தம் குறள் வெண்பா அடிகள் இரண்டைக் கொண்டு இந்த உலகத்தாரால் நினைக்கப்பட்டவற்றை எல்லாம் ஆராய்ந்து அளந்தார்.

6.பொருத்துக:

நூலாசிரியர் நூல்

1. ஜெயங்கொண்டார் – 1. சடகோபரந்தாதி

2. காரியாசான் – 2. புறநானூறு

3. கம்பர் – 3. கலிங்கத்துப்பரணி

4. கண்ணகனார் – 4. சிறுபஞ்சமூலம்

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 1 2 4 3

இ. 2 1 3 4

ஈ. 3 2 4 1

விடை மற்றும் விளக்கம்

அ. 3 4 1 2

7. “என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்”

– என்ற வரிகளைப் பாடியவர்

(அ) திருப்பாணாழ்வார்

(ஆ) குலசேகராழ்வார்

(இ) பேயாழ்வார்

(ஈ) ஆண்டாள்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) குலசேகராழ்வார்

விளக்கம்:

“மீன்நோக்கும்நீள்வயல் சூழ்வித்துவக் கோட் டம்மாளன்

பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்

தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்

கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே”

– குலசேகர ஆழ்வார்.

பொருள்: மீன்கள் நீந்துகின்ற வயல்கள் சூழ்ந்த வித்துவக்கோட்டில் உள்ள பெருமானே! நீ எனக்கு திருவருள் புரியவில்லை என்றாலும், உன்னையே அடைக்கலமாகப் புகுவேனேயன்றி, எனக்கு வேறு ஒரு பற்றில்லை. மன்னவன் ஒருவன் செங்கோல் முறை தவறித் துன்புறுத்தினாலும், அவனுடைய ஆட்சியையே எதிர்நோக்கி வாழ்கின்ற குடிமக்களைப் போல, நான் உன் திருவடிகளையே எண்ணிக் கொண்டிருக்கிறேன.

மேற்கண்ட பாடல் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழியின் முதலாயிரத்தில் உள்ளது.

8. “செறு” என்பதன் பொருள்

(அ) செருக்க

(ஆ) சேறு

(இ) சோறு

(ஈ) வயல்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) வயல்

விளக்கம்:

நற்றிணை 210-வது பாடல்.

அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்

மறுகால் உழுத ஈரச் செறுவின்

வித்தொடு சென்ற வட்டி பற்பல

மீனோடு பெயரும் யாணர் ஊர.

– மிளைகிழான் நல்வேட்டனார்.

பொருள்: உழவர், நெற்கதிர்களை அறுவடை செய்த பின்னர், அகன்ற அழகிய வயலை மறுபடியும் பயிர் செய்ய உழுதனர். பனையோலைப் பொட்டியில் விதை கொண்டு சென்று ஈரமுள்ள அந்நிலத்தில் விதைத்தனர். பின்னர், அவர்கள் அங்குள்ள நீர்;நிலைகளில் பல்வகை மீன்களைப் பிடித்து அப்பெட்டியில் கொண்டு வருகின்ற புது வருவாயினை உடைய மருதநிலத் தலைவனே!

9. திருக்குறளில் “ஏழு என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?

(அ) 11

(ஆ) 09

(இ) 08

(ஈ) 10

விடை மற்றும் விளக்கம்

(இ) 08

விளக்கம்:

திருக்குறளில் “ஏழு” என்னும் எண்ணுப் பெயர் எட்டு குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

10. கீழ்க்கண்ட நூல்களில் “தமிழ் மூவாயிரம்” என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?

(அ) திரிகடுகம்

(ஆ) திருவள்ளுவமாலை

(இ) திருமந்திரம்

(ஈ) திருக்குறள்

விடை மற்றும் விளக்கம்

(இ) திருமந்திரம்

விளக்கம்:

திருமூலர் அருளிய திருமந்திரம் “தமிழ் மூவாயிரம்” என்று அழைக்கப்படுகிறது.

“தந்திரம் ஒன்பது சார்வு

மூவாயிரம் சுந்தரன் ஆகமச் சொன்மொழிந்தானே”

என்ற சிறப்புப் பாயிரப் பகுதி இதனை உறுதி செய்கிறது. இந்நூல் 3,000 பாடல்களைக் கொண்டுள்ளது.

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

11. “தொண்டர்சீர் பரவுவார்” என்று போற்றப்படுபவர் யார்?

(அ) அப்பூதியடிகள்

(ஆ) திருநாவுக்கரசர்

(இ) சேக்கிழார்

(ஈ) திருஞானசம்பந்தர்

விடை மற்றும் விளக்கம்

(இ) சேக்கிழார்

விளக்கம்:

செயற்கரிய செயல்களைச் செய்து பெருமை பெற்ற சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் நூலான பெரியபுராணத்தை இயற்றியமையால் சேக்கிழார் தொண்டர்சீர் பரவுவார் எனப் போற்றப்பட்டார்.

12. யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?

(அ) கவுந்தியடிகள்

(ஆ) மாதவி

(இ) அறவணவடிகள்

(ஈ) கண்ணகி

விடை மற்றும் விளக்கம்

சரியான விடை: காயசண்டிகையின் அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை பிச்சையேற்றாள். “காயசண்டிகை” என்ற விடை கொள்குறிகளில் கொடுக்கப்படவில்லை.

விளக்கம்:

மணிமேகலை-பாத்திரங்கொண்டு பிச்சை புக்க காதை

பாடல்-8.

மணமனை மறுகின், மாதவி ஈன்ற

அணிமலர்ப் பூங்கொம்பு, “அகமலி உவகையிற்,

பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம்

பிச்சை ஏற்றல் பெருந்தக வுடைத்து”

பொருள்: மணங்கொண்ட மனையிடத்தாக மாதவியாள் கோவலனோடு வாழ்ந்து பெற்றெடுத்த, அழகிய மலர்களையுடைய பூங்கொம்பு போன்றவளாகிய மணிமேகலை, தன் உள்ளத்தே பெருகும் மகிழ்ச்சியினைக் கொண்டவளாக, “பத்தினிப் பெண்கள் பண்புடனே இடுகின்ற பிச்சையினை முதற்கண் அவ்விடத்தே ஏற்றல் பெரிதும் பெருமையுடயதாகும்” என்றாள்.

பாடல்-9

“குளனணி தாமரைக் கொழுமலர் நாப்பண்

ஒருதனி ஓங்கிய திருமலர் போன்று,

வான்தரு கற்பின் மனையுறை மகளிரில்-

தான்தனி யோங்கிய தகைமையள் அன்றோ

ஆதிரை நல்லாள்! அவள்மனை யிம்மனை;

நீ புகல் வேண்டும், நேரிழை! என்றனள்.

பொருள்: அதனைக் கேட்டதும், அங்கே நின்றிருந்த காயசண்டிகை, குளத்திற்கு அழகுடன் திகழ்கின்ற தாமரையின் கொழுமையான மலர்கள் பலவற்றிற்கும் நடுவிலே, ஒப்பற்ற தனிச் சிறப்புடையதாக உயரமுடன் விளங்கும் ஓர் அழகிய மலரினைப் போன்று மழைவளம் தரும் கற்புச் செல்வியரான இல்லுறை மகளிருள், தான் தனித்த புகழுடைய தன்மையன் ஆதிரையாள் அல்லவோ! அவள் இருக்கும் மனை இதுவேயாகும். நேரிழையே நீ இதன்கண் புகுவாய்” என்றனள்.

ஆதிரை பிச்சையிட்ட காதை பாடல்-24.

“ஆங்ஙனம் ஆகிய ஆதிரை கையால்,

பூங்கொடி நல்லாய்! பிச்சை பெறு’கென,

மனையகம் புகுந்து மணிமே கலைதான்

புனையா ஓவியம் போல நிற்றலும் –

பொருள்: “அப்படிப்பட்டவளாகிய ஆதிரையின் கையினாலே, பூங்கொடி போன்ற நல்லவளே, நீ பிச்சை பெறுவாயாக” என்றனள் காயசண்டிகை. மணிமேகலையும், ஆதிரையின் இல்லத்தே புகுந்து, எழுதாத ஓவியம் போல நின்றனள்.

சரியான விடை: காயசண்டிகையின் அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை பிச்சையேற்றாள். “காயசண்டிகை” என்ற விடை கொள்குறிகளில் கொடுக்கப்படவில்லை.

13. ‘தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்”

என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்.

(அ) கம்பர்

(ஆ) இளங்கோவடிகள்

(இ) திருத்தக்க தேவர்

(ஈ) காரியாசான்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) இளங்கோவடிகள்

விளக்கம்:

“தண்டமிழ் ஆசான்”, “சாத்தான் நன்னூற்புலவன்” என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர் இளங்கோவடிகள்.

14. கம்பரைப் புரந்தவர் யார்?

(அ) ஒட்டக்கூத்தர்

(ஆ) சடையப்பவள்ளல்

(இ) சீதக்காதி

(ஈ) சந்திரன் சுவர்க்கி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) சடையப்பவள்ளல்

விளக்கம்:

கம்பரைப் புரந்தவர் திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல் ஆவார். கம்பர் தம்மை ஆதிரித்த வள்ளல் சடையப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் கம்பராமாயணத்தில் பாடியுள்ளார்.

15. ஜி.யூ.போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழி பெயர்த்தார்?

(அ) பிரெஞ்சு

(ஆ) கிரேக்கம்

(இ) ஆங்கிலம்

(ஈ) ஜெர்மன்

விடை மற்றும் விளக்கம்

(இ) ஆங்கிலம்

விளக்கம்:

ஜியார்ஜ் யூக்ளோ போப் (ஜி.யூ.போப்) திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்

ஜி.யூ.போப் தமது 80-வது அகவையில் கி.பி.1900-ஆம் ஆண்டில் திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார்

16. நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு

(அ) 2004

(ஆ) 2003

(இ) 2005

(ஈ) 2002

விடை மற்றும் விளக்கம்

(அ) 2004

விளக்கம்:

தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டி, கி.பி.1901-ல் தொடங்கி எடுத்த முயற்சிகள் கி.பி.2004 வரை தொடர்ந்தன. அதன் பயனாக கி.பி.2004-இல் நடுவணரசு கமிழைச் செம்மொழியாக அறிவித்தது.

17. குரூக், மால்தோ, பிராகுயி என்பன

(அ) தென்திராவிட மொழிகள்

(ஆ) நடுத்திராவிட மொழிகள்

(இ) வடதிராவிட மொழிகள்

(ஈ) மேலைநாட்டு மொழிகள்

விடை மற்றும் விளக்கம்

(இ) வடதிராவிட மொழிகள்

விளக்கம்:

தென்திராவிட மொழிகள்: தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா.

நடுத்திராவிட மொழிகள்: தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூலி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கு, பெங்கோ, முண்டா.

வடதிராவிட மொழிகள்: குரூக், மால்தோ, பிராகுயி. இவற்றுள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் “திராவிட பெருமொழிகள்” எனப்படும்.

18. “ஓர் இலட்சிய சமூகம் – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது” என்றவர்.

(அ) பெரியார்

(ஆ) அண்ணல் அம்பேத்கர்

(இ) காந்தியடிகள்

(ஈ) திரு.வி.க.

விடை மற்றும் விளக்கம்

(ஆ) அண்ணல் அம்பேத்கர்

19. திரு.வி.கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது?

(அ) முருகன் அல்லது அழகு

(ஆ) சித்திரக்கவி

(இ) உரிமை வேட்டல்

(ஈ) தமிழ்ச்சோலை

விடை மற்றும் விளக்கம்

(ஆ) சித்திரக்கவி

விளக்கம்:

சித்திரக்கவி என்ற நூலின் ஆசிரியர் பரிதிமாற்கலைஞர்

20. பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக

(அ) சூசையப்பர் தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர்

(ஆ) திருமந்திரம் சைவத்திருமுறைகளில் பத்தாவது திருமுறை

(இ) சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத் தலைமையாசிரியர்

(ஈ) மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்

விளக்கம்:

“மதங்க சூளாமணி” என்பது ஒரு நாடகத்தமிழ் நூலாகும். இந்நூலை இயற்றியவர் விபுலானந்த சுவாமிகள். இந்நூல் 3 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

உறுப்பியல்: சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையினால் பெறப்பட்ட அழிந்துபோன நாடகத் தமிழ் நூல் சூத்திரங்கள் சிலவற்றை ஆதூரமாகக் கொண்டு தமிழ்நாடாக இலக்கியத்தை உரைக்கிறார்.

எடுத்துக்காட்டியல்: ஷேக்ஸ்பியரின் 12 நாடகங்களை ஆய்வு செய்து விளக்கியுள்ளார்.

ஒழிபியல்: தனஞ்சயனார் வடமொழியில் இயற்றிய நாடக இலக்கண நூலான தசரூபத்தின் முடிவுகளைத் தொகுத்துக் கூறியுள்ளார்.

21. தமிழக அரசு, கவிஞர் சாலை.இளந்திரையனுக்கு வழங்கிய விருது

(அ) பாவேந்தர் விருது

(ஆ) பாரதியார் விருது

(இ) கலைமாமணி விருது

(ஈ) கவிச்செம்மல் விருது

விடை மற்றும் விளக்கம்

(அ) பாவேந்தர் விருது

விளக்கம்:

கவிஞர் சாலை.இளந்திரையன்.

பெற்றோர்-இராமையா-அன்னலட்சுமி.

பிறந்த ஊர்-திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாலை நயினார் பள்ளிவாசல்.

காலம்-06.09.1930 – 04.10.1998.

பணி-தில்லிப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை விரிவுரையாளராகிப் பின் தமிழ்த் துறை தலைவரானார்.

சிறப்பு-உலகத் தமிழ் ஆராய்ச்சிக்கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமானவர்.

விருதுகள்-1991-இல் தமிழக அரசின் பாவேந்தர் விருதினைப் பெற்றார். இவரின் “புரட்சி முழக்கம், உரைவீச்சு” ஆகிய நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகளைப் பெற்றுள்ளன.

22. ஜி.யூ.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு

(அ) 1786

(ஆ) 1806

(இ) 1856

(ஈ) 1886

விடை மற்றும் விளக்கம்

(ஈ) 1886

விளக்கம்:

ஜி.யூ.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886-ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

23. “மணநூல்” என அழைக்கப்பெறும் நூல்

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) மணிமேகலை

(இ) சீவகசிந்தாமணி

(ஈ) குண்டலகேசி

விடை மற்றும் விளக்கம்

(இ) சீவகசிந்தாமணி

விளக்கம்:

சீவகசிந்தாமணியில், சீவகன் எட்டுப் பெண்களை மணந்து இன்புற்று வாழ்ந்த மண நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளதால் இது “மணநூல்” எனவும் வழங்கப்பெறும்.

24. பொருத்துக:

அ. சிந்தை – 1.நீர்

ஆ.நவ்வி – 2.மேகம்

இ. முகில் – 3.எண்ணம்

ஈ. புனல் – 4. மான்

அ ஆ இ ஈ

அ. 2 1 3 4

ஆ. 1 3 4 2

இ. 3 4 2 1

ஈ. 4 3 1 2

விடை மற்றும் விளக்கம்

இ. 3 4 2 1

25. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

அ. Writs – 1.வாரிசுரிமைச் சட்டம்

ஆ. Substantive law – 2. உரிமைச் சட்டங்கள்

இ. Substantive law – 3. சான்றுச் சட்டம்

ஈ. Evidence Act – 4. சட்ட ஆவணங்கள்

அ ஆ இ ஈ

அ. 1 3 4 2

ஆ. 4 1 2 3

இ. 2 4 3 1

ஈ. 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

ஆ. 4 1 2 3

26. “யாழ் கேட்டு மகிழ்ந்தாள்” – இவ்வாக்கியத்தில் யாழ் என்பது

(அ) சொல்லாகு பெயர்

(ஆ) கருத்தாகு பெயர்

(இ) காரியவாகு பெயர்

(ஈ) கருவியாகு பெயர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) கருவியாகு பெயர்

விளக்கம்:

“யாழ் கேட்டு மகிழ்ந்தாள்” என்பது யாழிலிருந்து உண்டாகும் இசையினைக் கேட்டு மகிழ்ந்தாள் என்பதனைக் குறிப்பதால் இது கருவியாகு பெயராகும்.

27. வாரணம், பௌவம், பரவை, புணரி என்பது ———ஐக் குறிக்கும்.

(அ) சிங்கம்

(ஆ) கடல்

(இ) மாலை

(ஈ) சந்தனம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) கடல்

விளக்கம்:

கடலைக்குறிக்கும் தமிழ்ச் சொற்கள்: ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி.

28. “எயிறு” என்னும் சொல் – சொல்லின் எவ்வகை?

(அ) திரிசொல்

(ஆ) இயற்சொல்

(இ) வினைத்திரிசொல்

(ஈ) பெயர்த் திரிசொல்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) பெயர்த் திரிசொல்

விளக்கம்:

கற்றவர் மட்டுமே உணரக்கூடிய சொற்கள் திரிசொற்கள் ஆகும். இவை பெயர்த்திரிசொல், வினைத்திரிசொல் என இரு வகைப்படும்.

பெயர்த்திரிசொற்கள்-எயிறு(பல்), வேய் (மூங்கில்), மடி (சோம்பல்), நல்குரவு (வறுமை), பீலி (மயிற்தோகை), உகிர் (நகம்), ஆழி (கடல்).

வினைத்திரிசொற்கள்: வினவினான் (கேட்டான்), விளித்தான் (அழைத்தான்), நோக்கினார் (பார்த்தார்), சூடினர் (அணிந்தனர்).

29. “அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்”

கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?

(அ) எதுகை மட்டும் வந்துள்ளது

(ஆ) எதுகையும், மோனையும் வந்துள்ளன

(இ) எதுகை, மோனை, அந்தாதி வந்துள்ளன

(ஈ) மோனை மட்டும் வந்துள்ளது

விடை மற்றும் விளக்கம்

(ஈ) மோனை மட்டும் வந்துள்ளது

விளக்கம்:

முதற்சீரில் வந்த முதல் எழுத்தே அடுத்து வரும் சீர்களில் வந்தால் அது மோனைத் தொடராகும்.

ரியதாம் உவப்ப எள்ளதன்பினால்

மைந்த காதல் எனவே இது மோனைத் தொடை வகையாகும்.

30. பெயரெச்சதை எடுத்து எழுதுக:

(அ) படித்து

(ஆ) எழுதி

(இ) வந்த

(ஈ) நின்றான்

விடை மற்றும் விளக்கம்

(இ) வந்த

விளக்கம்:

படித்து-வினையெச்சம்.

எழுதி-வினையெச்சம்.

வந்த-பெயரெச்சம்.

நின்றான்-ஆண்பால் வினைமுற்று.

ஒரு வினைச்சொல் முற்றிலும் பொருள் தருவதற்காகப் பெயர்ச்சொல்லைத் தழுவி நிற்பது பெயரெச்சம் ஆகும்.

 

31. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. அறுவை வீதி – 1. அந்தணர் வீதி

ஆ. கூல வீதி-  2. பொற்கடை வீதி

இ. பொன் வீதி – 3. ஆடைகள் விற்கும் வீதி

ஈ. மறையவர் வீதி – 4. தானியக்கடை வீதி

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 3 4 2 1

இ. 1 3 2 4

ஈ. 2 1 3 4

விடை மற்றும் விளக்கம்

ஆ. 3 4 2 1

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை சங்ககால மதுரை வீதிகளின் பெயர்களாகும்.

32. துணி கலையரசியால் தைக்கப்பட்டது – இதற்குரிய செய்வினைத் தொடரைத் தேர்ந்தெடு

(அ) கலையரசி துணி தைத்தாள்

(ஆ) கலையரசி தைத்தாள் துணி

(இ) கலையரசி என்ன தைத்தாள்?

(ஈ) கலையரசி துணியைத் தைத்தாள்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) கலையரசி துணியைத் தைத்தாள்

விளக்கம்:

செய்வினை: எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைந்து, செயப்படுபொருளோடு இரண்டாம் வேற்றுமை உருபு(ஐ) வெளிப்பட்டு வருவதாகும். கலையரசி-எழுவாய் செயப்படுபொருள்-துணி(ஐ) பயனிலை-தைத்தாள்.

33. “ஒறுத்தாரை ஒன்றாக வையாரே” – இத்தொடரில் “ஒறுத்தார்” என்பதன் இலக்கணக்குறிப்பு

(அ) முற்றெச்சம்

(ஆ) தொழிற்பெயர்

(இ) வினையாலணையும் பெயர்

(ஈ) வினையெச்சம்

விடை மற்றும் விளக்கம்

(இ) வினையாலணையும் பெயர்

விளக்கம்:

ஒரு வினைமுற்று, வினைசெய்த கருத்தாவைக் குறிக்குமானால், அது வினையாலணையும் பெயராகும்.

“ஒறுத்தல்” என்ற செயலைச் செய்த கருத்தாவைக் குறித்ததால் இது வினையாலணையும் பெயராகும்.

34. வா-என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் கூறு.

(அ) வந்தான்

(ஆ) வந்து

(இ) வருதல்

(ஈ) வந்த

விடை மற்றும் விளக்கம்

(ஆ) வந்து

விளக்கம்:

வந்தான்-வினைமுற்று.

வந்து-வினையெச்சம்.

வருதல்-தொழிற்பெயர்.

வந்த-பெயரெச்சம்

35. “உவமைத்தொகை” இலக்கணக்குறிப்பிற்கு பொருந்தாத சொல்லைக் காண்க

(அ) கயல்விழி

(ஆ) மலர் முகம்

(இ) வெண்ணிலவு

(ஈ) தாமரைக் கண்கள்

விடை மற்றும் விளக்கம்

(இ) வெண்ணிலவு

விளக்கம்:

உவமை, உவமேயம் இரண்டிற்குமிடையே போல, போன்ற, அன்ன என்கிற உவம உருபுகள் வருவது உவமைத்தொகையாகும்.

கயல்விழி-கயல் போன்ற விழி.

மலர்முகம்-மலர் போன்ற முகம்.

தாமரைக் கண்கள்-தாமரை போன்ற கண்கள்.

வெண்ணிலவு-பண்புத்தொகை.

வெண்மை+நிலவு-வெண்ணிலவு

36. “கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையும் உலகு”

– இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை.

(அ) இன்னிசை அளபெடை

(ஆ) செய்யுளிசை அளபெடை

(இ) சொல்லிசை அளபெடை

(ஈ) ஒற்றளபெடை

விடை மற்றும் விளக்கம்

(ஆ) செய்யுளிசை அளபெடை

விளக்கம்:

செய்யுளிசை அளபெடை: இவ்வளபெடை அமைந்துள்ள சீரைப் பிரித்தால் பெரும்பாலும் இரண்டு அசைகளாகவே இருக்கும்.

“இ” என்னும் எழுத்தில் முடியாது. இதன் மற்றொரு பெயர் இசைநிறை அளபெடையாகும்.

கெடா அ, விடா அர்.

37. இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக் கொள்ளப்படும் வழுவைக் கண்டுபிடி.

(அ) வழுவமைதி

(ஆ) வினாவழு

(இ) காலவழு

(ஈ) வழாநிலை

விடை மற்றும் விளக்கம்

(அ) வழுவமைதி

விளக்கம்:

இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதியாகும்.

வகைகள்: திணை வழுவமைதி, பால் வழுவமைதி, கால வழுவமைதி.

38. “யவனர்” எனப் பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர்

(அ) ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசரியர்

(ஆ) கிரேக்கர், உரோமானியர்

(இ) பிரெஞ்சுக்காரர், அமெரிக்கர்

(ஈ) சீனர், மலேசியர்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) கிரேக்கர், உரோமானியர்

39. தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருட்களை சரியாக காண்க:

(அ) ஏலமும், இலவங்கமும்

(ஆ) இஞ்சியும், மிளகும்

(இ) பட்டும், சரக்கரையும்

(ஈ) முத்தும், பவளமும்

விடை மற்றும் விளக்கம்

(இ) பட்டும், சரக்கரையும்

40. இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு “இந்திய மாமணி” என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு எது?

(அ) 1991

(ஆ) 1990

(இ) 1993

(ஈ) 1992

விடை மற்றும் விளக்கம்

(ஆ) 1990

41. “ஞானபோதினி” என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?

(அ) முடியரசன்

(ஆ) மு.சி.பூர்ணலிங்கம்

(இ) நாமக்கல்லார்

(ஈ) சுரதா

விடை மற்றும் விளக்கம்

(ஆ) மு.சி.பூர்ணலிங்கம்

விளக்கம்:

“ஞானபோதினி” என்னும் இதழை மு.சி.பூர்ணலிங்கமும் அவரது நண்பரான பரிதிமாற்கலைஞரும் இணைந்து 1897-ஆம் ஆண்டு துவங்கினார். 1904 வரை இந்த இதழ் வெளிவந்தது

42. பரிதிமாற்கலைஞர் பிறந்த ஆண்டு

(அ) 1860

(ஆ) 1870

(இ) 1880

(ஈ) 1890

விடை மற்றும் விளக்கம்

(ஆ) 1870

விளக்கம்:

பரிதிமாற்கலைஞர், மதுரையை அடுத்த விளாச்சேரி என்ற ஊரில் 1870-ஆம் ஆண்டு ஜீலைத் திங்கள் 6-ஆம் நாள் கோவிந்த சிவனார்-இலட்சுமி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்

43. காரைக்குடி மீ.சு.உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்

(அ) சுரதா

(ஆ) கண்ணதாசன்

(இ) முடியரசன்

(ஈ) நா.காமராசன்

விடை மற்றும் விளக்கம்

(இ) முடியரசன்

விளக்கம்:

காரைக்குடியில் உள்ள மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் கவிஞர் முடியரசன் ஆவார். அவரது இயற்பெயர் துரைராசு. “பூங்கொடி” என்னும் காவியத்திற்காக 1966-இல் தமிழக அரசின் பரிசைப் பெற்றவர். இவரது காலம் 1920-1988.

44. வள்ளலார் பதிப்பித்த நூல்

(அ) ஜீவகாருண்ய ஒழுக்கம்

(ஆ) சின்மய தீபிகை

(இ) இந்திர தேசம்

(ஈ) வீரசோழியம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) சின்மய தீபிகை

விளக்கம்:

வள்ளலார் பதிப்பித்த நூல்கள்: சின்மய தீபிகை, ஒழிவிலொடுக்கம், தொண்டைமண்டல சதகம்.

45. கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்

(அ) ஒளிப்பறவை

(ஆ) சிரித்த முத்துக்கள்

(இ) ஒரு கிராமத்து நதி

(ஈ) நிலவுப் பூ

விடை மற்றும் விளக்கம்

(இ) ஒரு கிராமத்து நதி

விளக்கம்:

கவிஞர் சிற்பியின் “ஒரு கிராமத்து நதி” என்ற நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது 2002-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

46. அகழாய்வில் “முதுமக்கள் தாழிகள்” கண்டுபிடிக்கப்பட்ட ஊர்

(அ) தச்சநல்லூர்

(ஆ) ஆதிச்சநல்லூர்

(இ) பெரவல்லூர்

(ஈ) பெரணமல்லூர்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) ஆதிச்சநல்லூர்

விளக்கம்:

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

47. பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர்

(அ) முடியரசன்

(ஆ) வாணிதாசன்

(இ) சுரதா

(ஈ) மோகனரங்கன்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) வாணிதாசன்

விளக்கம்:

கவிஞர் வாணிதாசன், பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர். பாவேந்தர் விருது பெற்றவர். தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த், பாவலரேறு என்றெல்லாம் சிறப்பிக்கப்பட்டவர்.

48. “விடிவெள்ளி” என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர்

(அ) ஈரோடு தமிழன்பன்

(ஆ) மு.மேத்தா

(இ) சாலை. இளந்திரையன்

(ஈ) சுரதா

விடை மற்றும் விளக்கம்

(அ) ஈரோடு தமிழன்பன்

விளக்கம்:

ஈரோடு தமிழன்பன்:

இயற்பெயர்-ஜெகதீசன்.

பெற்றோர்-நடராஜன்-வள்ளியம்மாள்.

ஊர்-சென்னிமலை (கோவை மாவட்டம்).

புனைப்பெயர்-விடிவெள்ளி.

49. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல்

(அ) துறைமுகம்

(ஆ) சுவரும் சுண்ணாம்பும்

(இ) தேன்மழை

(ஈ) இது எங்கள கிழக்கு

விடை மற்றும் விளக்கம்

(இ) தேன்மழை

விளக்கம்:

கவிஞர் சுரதா:

இயற்பெயர்-தி.இராசகோபாலன்.

சிறப்புப்பெயர்-உவமைக் கவிஞர்.

பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட பற்று காரணமாகத் தம் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். அதன் சுருக்கமே “சுரதா” ஆயிற்று. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நூலுக்கானப் பரிசை இவரின் “தேன்மழை” என்ற நூல் பெற்றது. இந்நூல் “இயற்கையெழில்” முதலாக “ஆராய்ச்சி” ஈறாக 16 பகுதிகளாக அமைந்துள்ளது

50. எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு

– எனக் கூறியவர்

(அ) பாவாணர்

(ஆ) காந்தி

(இ) தெ.பொ.மீ

(ஈ) அயோத்திதாசப் பண்டிதர்

விடை மற்றும் விளக்கம்

(அ) பாவாணர்

விளக்கம்:

“மொழி ஞாயிறு” என்றழைக்கப்பட்டவர் தேவநேயப் பாவாணர். இவரது காலம் 07.02.1902 முதல் 15.01.1981 வரை ஆகும். ஒருமுறை தாம் பணியாற்றிய கல்வி நிறுவனத்தில் அவருக்கு மனவேறுபாடு ஏற்பட்டதும் “எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு” என்று மன உறுதியுடன் கூறி வெளியேறினார்

51. பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார்?

(அ) விதுரன்

(ஆ) துரியோதனன்

(இ) தர்மன்

(ஈ) சகுனி

விடை மற்றும் விளக்கம்

(அ) விதுரன்

விளக்கம்:

திருதராட்டினன் தான் அமைத்த மண்டபத்தினைக் காண, பாண்டவரை அழைத்துவருமாறு தம்பி விதுரனைத் தூது விட்டான். தமையனின் ஆணைப்படி விதுரன் பாண்டவர்களிடம் தூது சென்றார்

52. நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர்

(அ) பூரிக்கோ

(ஆ) பாண்டியன் உக்கிர பெருவழுதி

(இ) பன்னாடு தந்த மாறன் வழுதி

(ஈ) உருத்திரசன்மார்

விடை மற்றும் விளக்கம்

(இ) பன்னாடு தந்த மாறன் வழுதி

விளக்கம்:

நற்றிணை:

நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படுவதும், “நல்” என்னும் அடைமொழி பெற்று போற்றப்படுவதுமாகும்.

பாடல்கள்-400.

பாடிய புலவர்கள்-275 பேர். அடி எல்லை-9-12. பாவகை-ஆசிரியப்பா. தொகுத்தவர்-அறியப்படவில்லை. தொகுப்பித்தவர்-பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. கடவுள் வாழ்த்துப் பாடியவர்-பாரதம் பாடிய பெருந்தேவனார்

53. “———-நெடுநீர்வாய்க்

கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்” – இவ்வடிகள் இடம்பெற்ற நூல்

(அ) பெரியபுராணம்

(ஆ) மணிமேகலை

(இ) கம்பராமாயணம்

(ஈ) சீவகசிந்தாமணி

விடை மற்றும் விளக்கம்

(இ) கம்பராமாயணம்

விளக்கம்:

கம்பராமாயணம்-அயோத்தியா காண்டம்-குகப்படலம்.

விடுநனி கடிதென்றான் மெய்உயிர் அனையானும்

முடுகினன் நெடுநாவாய் முரிதிரை நெடுநீர்வாய்க்

கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்

இடர்உற மறையோடும் எரியுறு மெழுகானார்.

பொருள்: விரைந்து படகினைச் செலுத்துமாறு குகனுக்கு இராமன் கட்டளையிட்டான். உயிரின் ஏவலுக்கு மெய் செயல்படுவது போலக் குகனும் படகினை விரைவாகச் செலுத்தினான். மடங்கி விழும் அலைகளையுடைய கங்கையாற்றில் இளம் அன்னம் விரைந்து செல்வதனைப் போல் படகு சென்றது. அவர்களின் பிரிவால் அனல்பட்ட மெழுகுபோல் துன்பமுற்று அந்தணர்கள் மனமுருகி நின்றார்கள்.

54. “புலனழுக்கற்ற அந்தணாளன்” – எனப் பாராட்டப்படுபவர்

(அ) ஓதலாந்தையார்

(ஆ) நக்கீரர்

(இ) பரணர்

(ஈ) கபிலர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) கபிலர்

விளக்கம்:

“புலனழுக்கற்ற அந்தணாளன்” என்று புகழப்பட்டவர் கபிலர் ஆவார். வள்ளல் பாரியின் அவைக்களப் புலவராக விளங்கியவர். “குறிஞ்சிக்கோர் கபிலர்” என்று பாராட்டப்பட்டவர்.

குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறுநூற்றில் குறிஞ்சித்திணைப் பாடல்கள் நூறு, பதிற்றுப்பத்தில் ஏழாம்பத்து, கலித்தொகையில் குறிஞ்சிக் கலியிலுள்ள 29 பாக்கள் முதலியன இவர் இயற்றியவையாகும். இவரது பாட்டு வன்மைக்குப் பழைய இலக்கண உரைகளில் உதாரணமாகக் காட்டப்படும் “கபிலரது பாட்டு” என்னும் தொடரே சான்றாகும்.

“வாய்மொழிக் கபிலன்” என்று நக்கீரரும், “நல்லிசைக் கபிலன்” என்றுபெருங்குன்றூர் கிழாரும். “வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்” என்று பொருந்தில் இளங்கீரனரும், “புலனழுக்கற்ற அந்தணாளன்” என்று மாறோகத்து நப்பசலையாரும் புகழ்ந்துள்ளனர்.

55. பொருந்தாத நூலை எடுத்து எழுதுக

(அ) நான்மணிக்கடிகை

(ஆ) நாலடியார்

(இ) புறநானூறு

(ஈ) இனியவை நாற்பது

விடை மற்றும் விளக்கம்

(இ) புறநானூறு

விளக்கம்:

புறநானூறு- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.

ஏனைய மூன்றும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகும்.

56. அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது?

(அ) மலையைப் போன்றது

(ஆ) கடலைப் போன்றது

(இ) வளர்பிறையைப் போன்றது

(ஈ) தேய்பிறையைப் போன்றது

விடை மற்றும் விளக்கம்

(இ) வளர்பிறையைப் போன்றது

விளக்கம்:

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்நீர பேதையார் நட்பு.

  • குறள் எண்-782.

பொருள்: அறிவுடையவரின் நட்பு, திங்களின் வளர்பிறை போல் நாள்தோறும் வளரும் தன்மையுடையது. அறிவில்லாதவரின் நட்பு தேய்பிறை போல் நாள்தோறும் தேய்ந்து போகும் தன்மையுடையது

57. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. ஒழுக்கத்தின் எய்துவர் – 1. செல்வம் நிலைக்காது

ஆ. இழுக்கத்தின் எய்துவர் – 2. மேன்மை

இ. பொறமை உடையவரிடம் – 3. உயர்வு இருக்காது

ஈ. ஒழுக்கமில்லாதவரிடம் – 4. எய்தாப்பழி

அ ஆ இ ஈ

அ. 2 4 1 3

ஆ. 2 3 1 4

இ. 1 4 2 3

ஈ. 3 4 1 2

விடை மற்றும் விளக்கம்

அ. 2 4 1 3

விளக்கம்:

திருக்குறள்:

14-வது அதிகாரம் ஒழுக்கமுடைமை-குறள் எண்:135.

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு.

பொருள்: பொறமையுள்ளவனிடம் செல்வம் இல்லாதது போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையிலும் உயர்வு இருக்காது.

குறள் எண்:137.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.

பொருள்: ஒழுக்கத்தால் அனைவரும் மேன்மை அடைவர். ஒழுக்கக் கேட்டால் அடையக்கூடாத பழியை அடைவர்.

58. வாய்மை எனப்படுவது

(அ) குற்றமோடு பேசுதல்

(ஆ) மற்றவர் வருந்த பேசுதல்

(இ) கடும் சொற்களைப் பேசுதல்

(ஈ) தீங்கு தராத சொற்களைப் பேசுதல்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) தீங்கு தராத சொற்களைப் பேசுதல்

விளக்கம்:

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

– குறள் எண் 291.

பொருள்: வாய்மை எனக் கூறப்பெறுவது எது என்றால் அது பிறருக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல் ஆகும்.

59. “கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்”

(அ) சுந்தரகாண்டம்

(ஆ) அயோத்திய காண்டம்

(இ) ஆரண்ய காண்டம்

(ஈ) யுத்த காண்டம்

விடை மற்றும் விளக்கம்

(அ) சுந்தரகாண்டம்

விளக்கம்:

கம்பராமாயணத்தில் ஐந்தாம் காண்டமாக விளங்குவது சுந்தரகாண்டம் இக்காண்டமே காப்பியத்தின் மணிமுடியாக விளங்குகிறது என்பர். இப்பகுதி முழுவதும் சிறிய திருவடியாகிய அனுமனின் செயல்களே சொல்லப்படுகின்றன. அனுமனுக்குச் “சுந்தரன்” என்னும் பெயரும் உண்டு என்பதால் அனுமனின் தலைமைப் பண்புகள் வீறு பெற்று விளங்கும் இக்காண்டம் சுந்தர காண்டம் எனலாயிற்று.

60. “நூறாசிரியம்” என்னும் கவிதை நூலின் ஆசிரியர்

(அ) கவிஞர் மீரா

(ஆ) கவிஞர் சுரதா

(இ) கவிஞர் பெருஞ்சித்திரனார்

(ஈ) மு.மேத்தா

விடை மற்றும் விளக்கம்

(இ) கவிஞர் பெருஞ்சித்திரனார்

விளக்கம்:

“நூறாசிரியம்” என்ற கவிதை நூலின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார். இவரது இயற்பெயர் துரை.மாணிக்கம். இவர் இயற்றிய பிற நூல்களாவன, கொய்யாக்கனி, ஐயை, பாவியக் கொத்து, எண்சுவை எண்பது, மகபுகு வஞ்சி, அறுபருவத்திருக்கூத்து, கனிச்சாறு, கற்பனை ஊற்று, உலகியல், பள்ளிப்பறவைகள்.

61. “மடங்கல்” என்னும் சொல்லின் பொருள்

(அ) மடக்குதல்

(ஆ) புலி

(இ) மடங்குதல்

(ஈ) சிங்கம்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) சிங்கம்

விளக்கம்:

சீறாப்புராணம்-விலாதத்துக் காண்டம்-புலி வசனித்த படலம்.

நிரம்பும் வள்ளுகிர் மடங்கலின் இனங்களில் நிணமுண்

டிரும்ப னைக்கைமும் மதகரிக் கோட்டினை யீழ்த்திட்

டுரம்பி ளந்துதி ரங்களை மாந்திநின் றுறங்கா

தரும்பெ ருங்கிரி பிதிர்ந்திட வுருமினும் அலறும்.

பொருள்: அப்புலியானது, கூர்மையான நகங்களையுடைய சிங்கக் கூட்டங்களன்றி, மற்ற விலங்குகளின் இறைச்சியை உண்ணும். பெரிய பனைபோலும் தும்பிக்கையினையும் மூன்று மதங்களையுமுடைய யானைகளின் கொம்புகளைப் பிடித்து இழுத்து, அவற்றின் மார்பினைக் கீறி குருதியனைக் குடித்து உறங்காது நின்று, பெரிய அரிய மலைகளும் அதிருமாறு இடியைக் காட்டிலும் அதிகமாக முழங்கும்.

62. அகநாநூற்றின் கடைசி 100 பாடல்கள் அடங்கிய பகுதி

(அ) களிற்றுயானை நிரை

(ஆ) மணிமிடைப்பவளம்

(இ) நித்திலக் கோவை

(ஈ) வெண்பாமாலை

விடை மற்றும் விளக்கம்

(இ) நித்திலக் கோவை

விளக்கம்:

அகநானூறு:

முதல் 120 பாடல்கள்-களிற்றியானை நிரை.

அடுத்த 180 பாடல்கள்-மணிமிடைபவளம்.

கடைசி 100 பாடல்கள்-நித்திலக்கோவை

63. குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர்

(அ) பூரிக்கோ

(ஆ) நல்லாதனார்

(இ) கணிமேதாவியார்

(ஈ) கார்மேகப்புலவர்

விடை மற்றும் விளக்கம்

(அ) பூரிக்கோ

விளக்கம்:

குறுந்தொகை:

தொகுத்தவர்-பூரிக்கோ.

தொகுப்பித்தவர்-அறியப்படவில்லை.

கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்-பாரதம் பாடிய பெருந்தேவனார்.

64. “உத்தர வேதம்” என்று அழைக்கப்படும் நூல்

(அ) நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்

(ஆ) நாலடியார்

(இ) திருக்குறள்

(ஈ) இன்னாநாற்பது

விடை மற்றும் விளக்கம்

(இ) திருக்குறள்

விளக்கம்:

திருக்குறளின் வேறு பெயர்கள்:

முப்பால், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், பொருளுரை, முதுமொழி

65. பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க

(அ) ஏலாதி

(ஆ) ஆசாரக்கோவை

(இ) திரிகடுகம்

(ஈ) சிறுபஞ்சமூலம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) ஆசாரக்கோவை

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள நான்கும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகும். ஆசாரக்கோவையைத் தவிர, ஏனைய மூன்று நூல்களும் மருந்தின் பெயர்களால் வழங்கப்படுபவை ஆகும்.

66. “திரைக்கவித் திலகம்” என்ற சிறப்புக்குரியவர்

(அ) வாலி

(ஆ) உடுமலை நாராயண கவி

(இ) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

(ஈ) மருதகாசி

விடை மற்றும் விளக்கம்

(ஈ) மருதகாசி

விளக்கம்:

ஏறத்தாழ நாலாயிரம் திரையிசைப் பாடல்களை கவிஞர் மருதகாசி எழுதியுள்ளார். மெட்டுக்கு விரைந்து பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர். “திரைக்கவித் திலகம்” என்ற சிறப்புக்குரியவர்.

67. “சதகம்” என்பது —– பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.

(அ) 10

(ஆ) 100

(இ) 400

(ஈ) 1000

விடை மற்றும் விளக்கம்

(ஆ) 100

விளக்கம்:

சதகம்-பெயர்ச்சொல்.

நூறு பாட்டுகள் கொண்ட ஒரு நூல்வகை. இது சிற்றிலக்கிய வகையாகும். நமக்குக் கிடைத்துள்ள சகதங்களில் மிகப் பழமையானது திருச்சதகம் ஆகும். இதன் ஆசிரியர் மாணிக்கவாசகர்.

68. பொருத்துக

அ. வசனநடை கை வந்த வல்லாளர் 1. இராமலிங்க அடிகள

ஆ. புதுநெறி கண்ட புலவர் 2. நாமக்கல் கவிஞர்

இ. தைரியநாதர் 3. ஆறுமுக நாவலர்

ஈ. காந்தியக் கவிஞர் 4. வீரமாமுனிவர்

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ. 3 4 2 1

இ. 2 1 3 4

ஈ. 1 4 2 3

விடை மற்றும் விளக்கம்

அ. 3 1 4 2

விளக்கம்:

தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றிய ஆறுமுக நாவலரை “வசனநடை கைவந்த வல்லாளர்” எனப் பரிதிமாற் கலைஞர் பாராட்டினார். இராமலிங்க அடிகளார் உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்றச் செய்தார். எனவே பாரதியார், இவரைப் “புதுநெறிகண்ட புலவர்” எனப் போற்றினார்.

கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த வீரமாமுனிவர் தமிழ் மொழியைக் கற்று புலமை பெற்றார். தன் பெயரினை முதலில் “தைரியநாதன்” என்று மாற்றியிருந்த அவர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் க்ற்தாலும் தனது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் “வீரமாமுனிவர்” என்று மாற்றிக் கொண்டார்.

“நாமக்கல் கவிஞர்” என அழைக்கப்பட்ட வெ.இராமலிங்கனார், மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப்போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தார். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் “காந்தியக் கவிஞர்” எனப் போற்றப்பட்டார்.

“நாமக்கல் கவிஞருடைய பாடல்களில் உணர்ச்சியின் ஆழமும் வேகமும் காண்பதற்கில்லை. பண்பாட்டின் அமைதியைக் காணலாம். அது காந்தியத்திற்கு ஒத்து வருவதாக உள்ளது” – டாக்டர் மு.வ.

69. உ.வே.சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்

(அ) ரா.பி.சேதுப்பிள்ளை

(ஆ) கடிகை முத்துப்புலவர்

(இ) சி.இலக்குவனார்

(ஈ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

விளக்கம்:

உ.வே.சா.அவர்கள் தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் தனது சொந்த ஊரான உத்தமதானபுரத்திலேயே கற்றார். பின்னர் தன்னுடைய 17-வது வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்ததுக் கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திருச்சிரப்பள்ளி மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார். உ.வே.சா. அவர்களின் இயற்பெயர் வேங்கடரத்தினம். அவருடைய ஆசிரியரான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவருக்கு சாமிநாதன் என்று பெயர் வைத்தார். உத்தமானபுரம் வேங்கடசுப்புவின் மகன் சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா ஆகும்.

70. பொருத்துக:

அ. சிறுமலை, பூம்பாறை – 1.முல்லை நில ஊர்கள்

ஆ. ஆற்காடு, பனையபுரம் – 2. நெய்தல் நில ஊர்கள்

இ. ஆத்தூர், கடம்பூர் – 3. குறிஞ்சி நில ஊர்கள்

ஈ. கீழக்கரை, நீலாங்கரை – 4. மருத நில ஊர்கள்

அ ஆ இ ஈ

அ. 2 1 3 4

ஆ. 3 4 2 1

இ. 3 1 4 2

ஈ. 4 2 1 3

விடை மற்றும் விளக்கம்

இ. 3 1 4 2

விளக்கம்:

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். ஓங்கியுயர்ந்த பகுதி மலை மலையை விட சற்று உயரம் குறைந்த பகுதி குன்று. குன்றை விட சற்று உயரம் குறைந்த பகுதி கரடு அல்லது பாறை. மலையின் அருகேயுள்ள ஊர்கள் நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமைல எனப்பட்டன.

குன்றை அடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றக்குடி, குன்றத்தூர் எனப்பட்டன. குன்றை விட குறைந்த நிலப்பகுதியிலுள்ள ஊர்கள் பூம்பாறை, சிப்பிப்பாறை சஞ்சீவிராயன்காடு, வால்பாறை, மட்டப்பாறை எனப்பட்டன. காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலப்பகுதியாகும். முல்லைநில மக்கள் மரங்களின் பெயர்களையே ஊர்ப் பெயர்களாகச் சூட்டினர்.

அத்தி(ஆர்) மரங்கள் சூழந்த ஊர் ஆர்க்காடு அல்லது ஆற்காடு.

பனைமரங்கள் நிறைந்த பகுதிய பனையபுரம்.

வயலும் வயல்சார்ந்த இடமும் மருதநிலப்பகுதி. மருதநில மக்கள் ஆற்றின் பெயரையும் ஆற்றங்கரையிலிருந்த மரங்களின் பெயரையும் ஊர்ப்பெயர்களாக வழங்கி வந்தனர்.

“ஆற்றூர்” என்பது மருவி “ஆத்தூர்” எனப்பட்டது. கடம்ப மரங்கள் சூழ்ந்த பகுதி கடம்பூர் எனப்பட்டது.

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலப்பகுதியாகும். பரதவர்கள் வாழ்ந்த ஊர்கள் கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை எனப்பட்டன.

71. இதில் “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது யாருடைய மொழி?

(அ) கணியன் பூங்குன்றனார்

(ஆ) பாரதியார்

(இ) ஒளவையார்

(ஈ) கம்பர்

விடை மற்றும் விளக்கம்

(இ) ஒளவையார்

72. “இறந்தும் இறவாது வாழும் தமிழ மாணவர்! அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார், என்றும் வாழ்வார்” – யார்?

(அ) உ.வே.சாமிநாத ஐயர்

(ஆ) ஜி.யூ.போப்

(இ) கால்டுவெல்

(ஈ) வீரமாமுனிவர்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) ஜி.யூ.போப்

விளக்கம்:

தமிழின் பெருமையைத் தரணி முழுவதும் பரப்பிய போப், 11.02.1908 அன்று தம் இன்னுயிரை நீத்தார். அவரது கல்லறையில் அவரின் விருப்பப்படி, “இங்கே தமிழ் மாணவன் ஒருவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று எழுதப்பட்டுள்ளது

73. “இந்திய நூலகத் தந்தை” எனப் போற்றப்படுபவர்

(அ) சி.இராமநாதன்

(ஆ) சி.இரா.அரங்கநாதன்

(இ) ப.கமலநாதன்

(ஈ) ம.இளந்திரையன்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) சி.இரா.அரங்கநாதன்

விளக்கம்:

நூலகப் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கித் தந்த சீர்காழி சி.இரா.அரங்கநாதன் “இந்திய நூலகத் தந்தை” எனப் போற்றப்படுகிறார்.

74. “வினையே ஆடவர்க்குயிர்” எனக் கூறும் நூல்

(அ) குறுந்தொகை

(ஆ) கலித்தொகை

(இ) புறநானூறு

(ஈ) பரிபாடல்

விடை மற்றும் விளக்கம்

(அ) குறுந்தொகை

விளக்கம்:

குறுந்தொகை-135-வது பாடல்.

“வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல்

மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” என,

நமக்கு உரைத்தோரும் தாமே,

அழாஅல்-தோழி! அழங்குவர் செலவே

– பாலை பாடிய பெருங்கடுங்கோ

பொருள்: வினை செய்தல் ஆடவர்க்கு உயிர் போன்றது. ஒளி பொருந்திய நெற்றியையுடைய, இல்லின்கண் உறையும் மகளிர்க்கு அவர்தம் கணவர் உயிர் போன்றவர் என நமக்குக் கூறியவர் நம் தலைவரே ஆவார். அதனால் அழுதலை ஒழிவாயாக. அவர் நின்னைப் பிரிந்து செல்லுதலைத் தவிர்வர்.

75. “மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே” – இக்கூற்றை கூறியவர்.

(அ) கணியன் பூங்ககுன்றனார்

(ஆ) கம்பர்

(இ) உமறுப்புலவர்

(ஈ) வள்ளலார்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) வள்ளலார்

விளக்கம்:

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்:

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.

குருவை வணங்கக் கூசி நிற்காதே.

வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே.

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்யாதே.

பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே.

ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே……. போன்றவை.

76. பொங்கலை “அறுவடைத் திருவிழாவாகக்” கொண்டாடும் மேலை நாடுகள்

(அ) இலங்கை, மலேசியா

(ஆ) ஜப்பான், ஜாவா

(இ) மொரீஷியஸ், சிங்கப்பூர்

(ஈ) இங்கிலாந்து, அமெரிக்கா

விடை மற்றும் விளக்கம்

(ஆ) ஜப்பான், ஜாவா

77. இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்

(அ) பொன்மனம்

(ஆ) ஆர்த்து

(இ) உற்றார்

(ஈ) சார்பு

விடை மற்றும் விளக்கம்

(இ) உற்றார்

விளக்கம்:

தமிழில் சில எழுத்துகள் தன் எழுத்துடன் மட்டும் சேர்ந்து வரும். அது உடனிலை மெய்மயக்கம் எனப்படும்.

எ.கா:பக்கம், அச்சம், மொத்தம், அப்பம், உற்றார்.

78. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. இரண்டு சீர்களான அடி 1.நெடிலடி

ஆ. நான்கு சீர்களான அடி 2. கழிநெடிலடி

இ. ஐந்து சீர்களான அடி 3. குறளடி

ஈ. ஐந்துக்கும் அதிக சீரடி 4. அளவடி

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 2 1 3 4

இ. 1 2 3 4

ஈ. 3 4 1 2

விடை மற்றும் விளக்கம்

ஈ. 3 4 1 2

விளக்கம்:

அடிதோறும் இரண்டு சீர்களைப் பெற்று வருவது குறளடி.

அடிதோறும் மூன்று சீர்களைப் பெற்று வருவது சிந்தடி.

அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது அளவடி.

அடிதோறும் ஐந்து சீர்களைப் பெற்று வருவது நெடிலடி.

அடிதோறும் ஆறு அல்லது அதற்கு மேற்கண்ட பல சீர்களைப் பெற்று வருவது கழிநெடிலடி

கழிநெடிலடி

அறுசீர் எழுசீர் எண்சீர்

79. “அங்காப்பு” என்பதன் பொருள்

(அ) சலிப்படைதல்

(ஆ) வாயைத் திறத்தல்

(இ) அலட்டிக் கொள்ளுதல்

(ஈ) வளைகாப்பு

விடை மற்றும் விளக்கம்

(ஆ) வாயைத் திறத்தல்

விளக்கம்:

எழுத்துகளின் பிறப்பை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இருவகையாகப் பிரிக்கலாம்.

முதலெழுத்துகளின் முயற்சிப் பிறப்பு.

முயற்சியுள் அஆ அங்காப்புடைய-நன்னூல் 76.

அ, ஆ ஆகிய இவ்விரண்டு உயிர்களும் வாயைத் திறந்து ஒலிப்பதனால் பிறக்கின்றன.

அங்காப்பு-வாயைத்திறத்தல்.

80. “கார்குலாம்” எனும் சொல் எவ்வேற்றுமைத் தொகையைக் குறிக்கும்?

(அ) ஐந்தாம் வேற்றுமைத்தொகை

(ஆ)மூன்றாம் வேற்றுமைத்தொகை

(இ) ஆறாம் வேற்றுமைத்தொகை

(ஈ) நான்காம் வேற்றுமைத்தொகை

விடை மற்றும் விளக்கம்

(இ) ஆறாம் வேற்றுமைத்தொகை

விளக்கம்:

இரண்டு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபுகள் மறைந்து வருவது வேற்றுமைத் தொகையாகும். ஆறாம் வேற்றுமை உருபு “அது”

கார்குலாம்-காரது குலாம். எனவே இச்சொல் ஆறாம் வேற்றுமைத் தொகையாகும்.

81. பொருத்துக

பட்டியல் I பட்டியல் II

அ. திணைமாலை நூற்றைம்பது – 1. உ.வே.சாமிநாத ஐயர்

ஆ. திரிகடுகம் – 2. கணிமேதாவியர்

இ. திணைமொழி ஐம்பது – 3. நல்லாதனார்

ஈ. புறப்பொருள் வெண்பாமாலை – 4. கண்ணஞ்சேந்தனார்

அ ஆ இ ஈ

அ. 3 1 2 4

ஆ. 1 4 2 3

இ. 2 3 4 1

ஈ. 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

“பொருத்துக” என்ற வினாவில் நூல்களின் பெயர்களும் ஆசிரியர்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட்டுள்ள வினாவில் ஆசிரியரின் பெயர் தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

திணைமாலை நூற்றைம்பது-கணிமேதாவியார்.

திரிகடுகம்-நல்லாதனார்.

திணைமொழி ஐம்பது-கண்ணஞ்சேந்தனார்.

புறப்பொருள் வெண்பாமாலை-ஐயனாரிதனார்.

ஆனால் வினாவில் உ.வே.சாமிநாதய்யர் என்று தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

புறப்பொருள் வெண்பாமாலை புறப்பொருள் இலக்கணம் பற்றிக் கூற எழுந்த நூலாகும். காலம் கி.பி 9-ம் நூற்றாண்டு ஆகும். தொல்காப்பியத்திற்குப் பின் புறப்பொருள் இலக்கணம் பற்றி எழுதப்பட்ட ஒரே நூல் இதுவெனக் கூறப்படுகிறது. இதன் மேற்கோள் பாடல்களில் பெரும்பான்மை வெண்பாக்கள். எனவே இதனை வெண்பா மாலை என்கிறோம். இந்நூலின் ஆசிரியர் ஐயனாரிதனார். இவர் சேரர் குல அரச மரபினர். இந்நூல், மறைந்துபோன தமிழ் நூலான பன்னிரு படலத்தின் வழி நூலாகும்.

82. “இல்லை” என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக

(அ) தெரிநிலை வினைமுற்று

(ஆ) எதிர்மறைப் பெயரெச்சம்

(இ) குறிப்பு வினைமுற்று

(ஈ) வியங்கோள் வினைமுற்று

விடை மற்றும் விளக்கம்

(இ) குறிப்பு வினைமுற்று

விளக்கம்:

கருத்தா ஒன்றனை மட்டும் தெரிவித்துக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினைமுற்று “குறிப்பு வினைமுற்று” எனப்படும்

83. “Might is Right” இதன் தமிழாக்கம்

(அ) “கடமையே உரிமை”

(ஆ) “வல்லான் வகுத்ததே வாய்க்கால்”

(இ) “வலிமையே சரியான வழி

(ஈ) “ஒற்றுமையே வலிமை”

விடை மற்றும் விளக்கம்

(ஆ) “வல்லான் வகுத்ததே வாய்க்கால்”

84. பொருத்துக:

அ. குமரன், தென்னை – 1. இடப்பெயர்

ஆ, காடு, மலை – 2. காலப்பெயர்

இ. பூ, காய் – 3. பொருட்பெயர்

ஈ. திங்கள், வாரம் – 4. சினைப்பெயர்

அ ஆ இ ஈ

அ. 4 1 3 2

ஆ. 3 1 4 2

இ. 3 4 2 1

ஈ. 2 3 1 4

விடை மற்றும் விளக்கம்

ஆ. 3 1 4 2

85. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:

(அ) நைதல் நாடு நொச்சி நுங்கு

(ஆ) நுங்கு நொச்சி நாடு நைதல்

(இ) நொச்சி நுங்கு நைதல் நாடு

(ஈ) நாடு நுங்கு நைதல் நொச்சி

விடை மற்றும் விளக்கம்

(ஈ) நாடு நுங்கு நைதல் நொச்சி

86. பொருத்துக

பிறமொழிச்சொல் தமிழ்ச்சொல்

அ. ஐதீகம் – 1. விருந்தோம்பல்

ஆ. இருதயம் – 2. சொத்து

இ. ஆஸ்தி – 3. உலக வழக்கு

ஈ. உபசரித்தல் – 4. நெஞ்சகம்

அ ஆ இ ஈ

அ. 2 3 1 4

ஆ. 3 4 2 1

இ. 4 1 2 3

ஈ. 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

ஆ. 3 4 2 1

87. பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக

(அ) சினிமா தியேட்டர் அருகாமையில் உள்ளது

(ஆ) திருநெல்வேலி சமஸ்தானம் பெரியது

(இ) விழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர்

(ஈ) வானூர்தி ஓர் அறிவியல் ஆக்கம்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) வானூர்தி ஓர் அறிவியல் ஆக்கம்

88. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. உரிச்சொற்றொடர் – 1. சூழ்கழல்

ஆ. வினைத்தொகை – 2. தழீஇய

இ. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் – 3. தடக்கை

ஈ. சொல்லிசை அளபெடை – 4. கூவா

அ ஆ இ ஈ

அ. 2 1 3 4

ஆ. 3 1 4 2

இ. 1 3 2 4

ஈ. 4 1 2 3

விடை மற்றும் விளக்கம்

ஆ. 3 1 4 2

89. ஜி.யூ.போப் தொகுத்த நூலின் பெயர்

(அ) கலம்பகம்

(ஆ) காவலூர்க் கலம்பகம்

(இ) கதம்பமாலை

(ஈ) தமிழ்ச்செய்யுட் கலம்பகம்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) தமிழ்ச்செய்யுட் கலம்பகம்

விளக்கம்:

ஜி.யூ.போப் அவர்கள், உயர்ந்த பண்பாடுகளை விளக்கும் 600 செய்யுள்களை நீதிநூல்களில் இருந்து ஆய்ந்தெடுத்து “தமிழ் செய்யுட் கலம்பகம்” என்னும் நூலாகத் தொகுத்ததுடன் அந்தப் பாக்களுக்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.

90. கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்

(அ) மாங்கனி

(ஆ) ஆயிரம் தீவு

(இ) அங்கயற்கண்ணி

(ஈ) இராச தண்டனை

விடை மற்றும் விளக்கம்

(ஈ) இராச தண்டனை

விளக்கம்:

இராச தண்டனை: இது, கம்பர்-அம்பிகாபதி வரலாற்றை விளக்கிக் கூறும் நாடக நூலாகும். இந்நூலின் ஆசிரியர் கண்ணதாசன் ஆவார்.

91. வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில் கூறினார்?

(அ) இந்தியன் ஓப்பினியன்

(ஆ) டிஸ்கவரி ஆப் இந்தியா

(இ) தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்

(ஈ) யங் இந்தியா

விடை மற்றும் விளக்கம்

(இ) தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்

92. “நான் தனியாக வாழவில்லை

தமிழோடு வாழ்கிறேன்”

– இக்கூற்றுக்குரியவர் தமிழ் மூச்சை விட்டுச் சென்ற நாள்

(அ) 1973-செப்டம்பர்-17

(ஆ) 1943-செப்டம்பர்-17

(இ) 1953-செப்டம்பர்-17

(ஈ) 1963-செப்டம்பர்-17

விடை மற்றும் விளக்கம்

(இ) 1953-செப்டம்பர்-17

விளக்கம்:

“நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன்” என்று கூறியவர். திரு.வி.கல்யாணசுந்தரனார். இவரது காலம் 1883-ஆகஸ்ட் 26 முதல் 1953-செப்டம்பர் 17 வரையாகும்.

93. “சட்டை” என்ற சிறுகதையை எழுதியவர்

(அ) பார்த்தசாரதி

(ஆ) ஜெயகாந்தன்

(இ) மீரா

(ஈ) புதுமைப்பித்தன்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) ஜெயகாந்தன்

94. “கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” – என போற்றப்படும் நூல்

(அ) இரட்சண்ய மனோகரம்

(ஆ) இரட்சண்ய யாத்ரீகம்

(இ) போற்றி திருவகல்

(ஈ) தேம்பாவணி

விடை மற்றும் விளக்கம்

(ஈ) தேம்பாவணி

விளக்கம்:

“கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” எனப் போற்றப்படும் நூல் தேம்பாவணி ஆகும். இந்நூலை வீரமாமுனிவர் இயற்றியுள்ளார். இந்நூல் இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையான சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டது.

95. “மருமக்கள் வழி மான்மியம்” என்ற நூலை எழுதியவர்

(அ) கவிமணி

(ஆ) சிவதாமு

(இ) பாரதிதாசன்

(ஈ) புதுமைப்பித்தன்

விடை மற்றும் விளக்கம்

(அ) கவிமணி

விளக்கம்:

“நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்” என்பதே நூலின் முழுமையான பெயராகும். இந்நூலை எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆவார். இது ஒரு “அங்கதக் கவிதை” நூலாகும். நாஞ்சில் நாட்டில் நிலவி வந்த “மருமக்கள் வழி” சொத்துரிமை முறையின் தீங்குகளை, அந்த முறையினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சொல்வது போல பாடப்பட்டிருக்கின்றது

96. “தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவர்

(அ) பெரியார்

(ஆ) அம்பேத்கர்

(இ) அயோத்திதாசப் பண்டிதர்

(ஈ) இராமலிங்க அடிகளார்

விடை மற்றும் விளக்கம்

(இ) அயோத்திதாசப் பண்டிதர்

விளக்கம்:

அயோத்திதாசப் பண்டிதர்.

காலம்-20.05.1845 முதல் 05.05.1914 வரை.

தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகப் போராடியவர் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில், “பிரம்ம ஞானசபை ஆல்காட்” உதவியுடன் சென்னையில் ஐந்துஇடங்களில் “ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள்” எனத் தலித்துகளுக்கு இலவசப் பள்ளிகளை நிறுவினார். “தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை” என போற்றப்பட்டார்.

97. பம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை

(அ) சுகுணவிலாச சபை

(ஆ) மாடர்ன் தியேட்டர்

(இ) பாய்ஸ் கம்பெனி

(ஈ) கூத்துப்பட்டறை

விடை மற்றும் விளக்கம்

(அ) சுகுணவிலாச சபை

விளக்கம்:

1891-இல் தமது 18-வது வயதில் பம்மல் சம்மந்தனார் துவங்கிய சபை சுகுணவிலாச சபை. இவரின் காலம் 1875-1964. இவர் எழுதிய நாடகங்கள் 94. “தமிழ் நாடகத் தந்தை” என இவர் போற்றப்படுகிறார்.

98. “இந்திய அரசியலில் சாணக்கியர்” என்று போற்றப்படுபவர்

(அ) காந்தியடிகள்

(ஆ) பாலகங்காதர திலகர்

(இ) இராஜகோபாலாச்சரியார்

(ஈ) சர்தார் வல்லபாய் படேல்

விடை மற்றும் விளக்கம்

(இ) இராஜகோபாலாச்சரியார்

99. பூக்களில் சிறந்த பூ “பருத்திப் பூ” எனக் கூறியவர்

(அ) சோமசுந்தரபாரதியார்

(ஆ) திரு.வி.கல்யாண சுந்தரனார்

(இ) பாரதிதாசன்

(ஈ) தாரா பாரதி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) திரு.வி.கல்யாண சுந்தரனார்

விளக்கம்:

திரு.வி.க.கல்யாண சுந்தரனார் அவர்களின் கூற்று

மற்ற பூக்கள் எல்லாம் பூத்துக் காயாகி கனிந்து விடும். ஆனால் பருத்திப் பூ மட்டுமே காய்த்து வெடித்துப் பஞ்சாகும். பஞ்சிலிருந்து ஆடையாகி நம் மானத்தைக் காக்கும். எனவே பூக்களில் சிறந்த பூ “பருத்திப் பூ” ஆகும்

100. “குயில்” என்ற இதழை நடத்தியவர்

(அ) சுரதா

(ஆ) வாணிதாசன்

(இ) பாரதியார்

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) பாரதிதாசன்

Exit mobile version