இந்திய அரசமைப்புச் சட்டம் Notes 6th Social Science

6th Social Science Lesson 14 Notes in Tamil

14] இந்திய அரசமைப்புச் சட்டம்

நுழையுமுன்:

இப்பாடம் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவானதை விளக்குகிறது. இந்திய அரசு நிர்வகத்திற்கு வழிகாட்டும் மற்றும் இந்திய குடிமக்களின் உரிமைகளையும் கடமைகளையும் உறுதிப்படுத்தியும் பாதுகாத்தும் வருகின்றன இந்திய அரசமைப்புச் சட்டதை விளக்குகிறது.

வீட்டை நிர்வகிப்பதற்கே சட்டங்களும் ஒழுங்குமுறைகளும் தேவைப்படுகிறது. இத்தனை பெரிய இந்தத் தேசத்தைக் கட்டுக்கோப்பாக நிர்வகிப்பதற்கு எத்தனை சட்டங்களும் நெறிகளும் தேவைப்படும்.

தேசம் ஒரு கடல். பல மதங்கள், பல மொழிகள், பல இனங்கள், பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழும் ஒரு நாட்டில் அனைவரையும் சமத்துவமாக நிர்வகிப்பதற்கு வலுவான, தெளிவான சட்டங்களும் வழிமுறைகளும் தேவை. அதைத்தான் அரசமைப்புச் சட்டம் என்கிறோம்.

குடியரசு தினம்:

நமது அரசமைப்புச் சட்டம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. அதைத்தான் நாம் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். அந்த நாளில் நம்முடைய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததற்கு வேறு பல காரணங்கள் உண்டு. முக்கியமாக 1929-ஆம் ஆண்டு லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழு சுயராஜ்யத்தை (PURNA SWARAJ) அடைவது என்ற முழக்கம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து 1930, ஜனவரி 26 அன்று முழு சுதந்திர நாளாகக் (Purna Swaraj Day) கொண்டாடப்பட்டது. பின்னாளில் அதுவே நமது குடியரசு தினமாக ஆனது.

அரசமைப்புச் சட்டம்:

பொது இடத்தில் நாம் சில விதிகளைப் பின்பற்ற வேண்டியதிருப்பது அவசியம். அரசமைப்புச் சட்டம் ஒரு நாட்டிற்குத் தேவையான சில அடிப்படை விதிகள், கொள்கைகளை உருவாக்கி ஆவணப்படுத்துவதோடு, தனது குடிமக்களின் உரிமைகள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை வரையறுக்கிறது. பிறகு அச்சட்டத்தின் துணையோடுதான் அந்நாடு ஆளப்படும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளவை:

இந்திய அரசமைப்புச் சட்டம்தான் நமது நாட்டின் உயர்ந்த பட்ச சட்டமாக விளங்குகிறது. அது அடிப்படை அரசியல் கொள்கைகளை வரையறுப்பது, கட்டமைப்புகள், வழிமுறைகள், அதிகாரம் ஆகியவற்றை விளக்குவது, அரச நிறுவனங்களின் கடமைகளைப் பட்டியலிடுவது, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளை நிர்ணயம் செய்வது, வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவது ஆகியவற்றின் வழியே ஓர் ஒட்டுமொத்தக் கட்டமைப்பை நமக்குத் தருகிறது.

ஆரம்ப கட்டப் பணிகள்:

அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 389 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் என்ற அமைப்பு 1946-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக முனைவர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமைப்பில் இடம் பெற்றிருந்தவர்கள்:

ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், மௌலானா ஆஸாத், எஸ்.ராதாகிருஷ்ணன், விஜயலட்சுமி பண்டிட், சரோஜினி நாயுடு உட்படப் பலர் இந்த அமைப்பில் இடம் பெற்றிருந்தனர்.

இந்த அமைப்பில் மொத்தம் 15 பெண் உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இடம் பெற்றிருந்தனர். எட்டு பேர் கொண்ட அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இதற்கான ஆலோசகராக பி.என்.ராவ். நியமிக்கப்பட்டார். இக்குழுவின் முதல் கூட்டம் 1946-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற்றது. அன்றே அரசமைப்புச் சட்டத்தை எழுதும் வேலைகள் தொடங்கிவிட்டன.

இக்குழுவினர் ஐக்கிய இராச்சியம் (United Kingdom), அமெரிக்கா, அன்றைய சோவியத் ரஷ்யா, ஃப்ரான்ஸ், சுவிட்சர்லாந்து உட்பட 60 நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களை வாசித்து, அவற்றில் இருந்த சிறப்பான பகுதிகளை முன் மாதிரியாகக் கொண்டு நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினர்.

அரசமைப்புச் சட்டம் இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் சுமார் இரண்டாயிரம் திருத்தங்கள் (Amendments) அதில் மேற்கொள்ளப்பட்டன. 2 ஆண்டுகள், 11 மாதம், 17 நாட்கள் கடந்த நிலையில் 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் முழுமையான அரசமைப்புச் சட்டம தயாரானது.

இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் நமது அரசமைப்புச் சட்டத்தை அன்றுதான் ஏற்றுக்கொண்டது. ஆகையினால்தான் அந்த நாளை அரசமைப்புச் சட்ட நாளாக ஆண்டுதோறும் நாம் கொண்டாடுகிறோம். 64 லட்சம் ரூபாய் இதற்கென செலவிடப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம்:

நமது அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை ஒவ்வோர் இந்தியருக்குமான நீதி, தன்செயலுரிமை, சமத்துவத்தை உறுதி செய்வதோடு சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது.

முகப்புரை:

அரசமைப்பு சட்டத்தின் முன்னுரைதான் முகப்புரை என்று அழைக்கப்படுகிறது. அது இந்தியாவை இறையாண்மை, சமத்துவம், மதச் சார்பின்மை, மக்களாட்சிக் குடியரசு என்று வரையறை செய்கிறது.

அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்கு முழுஅதிகாரத்தை வழங்கியுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களிடம் நிறைவேற்று அதிகாரம் இருக்கிறது. இப்படியாக ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரத்தையே இறையாண்மை என்கிறோம்.

மதச் சார்பின்மை:

மக்கள் தங்கள் விருப்பப்படி வெவ்வேறு இறை, மத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க அனுமதிக்கும் சட்டம், அவர்களுக்கு ஒரே விதமான பாகுபாடற்ற உரிமைகளை வழங்குகிறது. அரசிற்கான மதம் என்று ஒன்று கிடையாது என்பதால் அரசு அனைத்து மதங்களையும் ஒரே தளத்தில் வைத்தே பார்க்கிறது. இந்திய அரசு சட்டமன்றத்தின் (நாடாளுமன்றத்தின்) வழியேதான் ஆளப்படுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டமானது மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் சட்டமன்ற ஆட்சிமுறையைப் (Parliamentary form of government) பின்பற்றி ஆட்சி செய்ய வழிவகை செய்துள்ளது. இந்த அமைப்பின்படி, நிறைவேற்று அதிகாரம் சட்டமன்றத்தின் (நாடாளுமன்றத்தின்) கூட்டுப்பொறுப்பாக இருக்கும். அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ஆட்சியமைக்கும்.

அடிப்படை உரிமை:

ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகத் தேவையான உரிமைகளே அடிப்படை உரிமைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை சம உரிமை, சுதந்திரமாகச் செயல்படும் உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சுதந்திர சமய உரிமை, கலாச்சார மற்றும் கல்வி பெறும் உரிமை, சட்டத்தீர்வு பெறும் உரிமை

ஆகியவை இன்றியமையாத உரிமைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

வழிகாட்டு நெறிமுறை:

அரசுகள் சட்டமியற்றும்போதும், ஆட்சி செய்யும் போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில வழிகாட்டல்களை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. இவை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை அல்ல என்றாலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

ஓட்டுரிமை:

பதினெட்டு வயது பூர்த்தியான இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் ஓட்டளிக்கும் உரிமயைப் பெறுகிறார்கள். இந்த உரிமையை அவர்கள் பெறுவதற்கு ஜாதி, மதம், பாலினம், பொருளாதார அடுக்கு உட்பட எதுவும் தடையாக இருக்க முடியாது.

உரிமைகளைப் போலவே ஒவ்வொரு குடிமகனுக்குமான கடமைகளும் இருக்கின்றன. தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடப்பது, எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை மதித்து பேணுவது, சுதந்திரத்திற்காகப் போராடிய நமது தலைவர்களைப் பின்பற்றி நடப்பது, நாட்டைப் பாதுகாப்பது, நாட்டுக்காகத் தேவைப்படும் போது சேவை செய்ய தயாராக இருப்பது, சாதி, மத, மொழி, இன, எல்லை கடந்து அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் இருப்பது, நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காப்பது, காடுகள், நதிகள், ஏரிகள் உள்ளிட்ட இயற்கையையும் வன விலங்குகளையும் பாதுகாப்பது, அறிவியல், மனிதாபிமானம், சீர்திருத்த உணர்வுகளை வளர்ப்பது, வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துக்களை பாதுகாப்பது, குழந்தைகளின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ, தமது குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை 6-14 வயதுக்குள் தருவது ஆகியவற்றை அரசியல் சட்டம் நமது கடமைகளாக அறிவித்துள்ளது.

கலைச்சொற்கள்:

மக்களாட்சி – மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்.

வரைவுக்குழு – அரசமைப்புச் சட்ட வரைவை உருவாக்க அமைக்கப்பட்ட குழு.

முகப்புரை – இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கான அறிமுகம்.

மதச்சார்பின்மை – அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களையும் சமமாக நடத்துதல்.

சமத்துவம் – அனைத்து மக்களுக்கும் சமத்துவ பொருளாதார நிலை சமத்துவ வாய்ப்பு அளித்தல்.

இறையாண்மை – அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முழு அதிகாரம்.

மீள்பார்வை:

உங்களுக்குத் தெரியுமா?

அண்ணல் அம்பேத்கர் “இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை” என அழைக்கப்படுகிறார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உண்மைப் பிரதிகள் (இந்தி, ஆங்கிலம்) நாடாளுமன்ற நூலகத்தில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version